அன்னாடங்காச்சி
வா.மு.கோமு

by olaichuvadi

ஓவியம்: நாகா

தாடியில் நாற்பது வெள்ளை முடிகளையும் தலையில் நாற்பது கறுநிற முடிகளை வைத்திருப்பவனுமான சின்னானுக்கு சொந்த ஊர் கருமாண்டியூர். இப்போது அவன் மனமெங்கும் காதில் கேட்ட செய்தி உண்மையா? இல்லையா? என்றே குழப்பமாய் இருந்தது. ஆள் ஆளிற்கு இந்த இரண்டு மாதங்களாகவே வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அவனுக்கு மனதில் அம்மாவின் நிலைமை தான் என்ன? என்று அமர வைத்து விளக்கம் சொல்லத்தான் ஆள் இல்லை.

கருமாண்டியூர் கடை வீதிகளில் கூட்டமாய் சனம் நின்று எதாவது விசயத்தை பேசிக்கொண்டிருந்தால் ஒட்டுக் கேட்பவன் போலவும் யாருக்கேனும் துப்புச் சொல்லப் போகிறவன் போன்றும் அங்கே ஓரமாய் ஒதுங்கி காதை தீட்டிக் கொண்டு கேட்பான். அம்மாவை அமெரிக்காவிலிருந்து டாக்டர் ஏராக்கப்பலில் வந்து ஊசி போட்டு விட்டு போனதாய் அவர்கள் பேசிக் கொள்வது அவனுக்கு சற்று தெம்பையும் நம்பிக்கையையும் தரும். ஆக அம்மா சீக்கிரமாய் தோட்டத்துக்கு சென்று விடும்.

வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் காய்ச்சலும் சளியும் ஏனோ கடந்த இருமாதங்களாக உடலோடு ஒட்டிக் கொண்டு தன்னை விட்டு அகலாமல் இருப்பது போன்றே அவனுக்கு தோன்றிக் கொண்டிருந்தது. இவனை விட இவன் மனைவி செண்பகத்துக்கு வாந்தியும் பேதியும் வீட்டில் அதிகமாகி விட்டது. தெரிந்தவர் யாரேனும் கண்ணுக்குத் தென்பட்டால் அவள் அவரிடம் பேச்சுக் கொடுத்து விசயத்தைக் கறக்க ஆரம்பித்து விட்டாள் சமீப காலமாக.

“ஏனுங், அம்மாக்கு எப்பிடி இருக்குதுங்? ஆளாளுக்கு ஒன்னு சொல்றாங்களே? அம்மா பொழைச்சுக்குமுங்கள்ளோ?” இப்படிக் கேட்பவள் பதில் சொல்பவரின் முகத்தை உற்று கவனிப்பாள். அவர் ஏதேனும் தனக்காக பொய் சொல்கிறாரோ? எப்படியிருந்தாலும் அவர் முகம் காட்டிக் கொடுத்து விடுமல்லவா!

“இல்ல சாமி! டிவிக்காரங்க சொல்றதையெல்லாம் நம்பாதே! அம்மா இட்லி சாப்டுட்டு தெம்பா இருக்காங்க!”

“போயிடுச்சுன்னே பேசிக்கறாங்கங்கொ! உசுரோட இருக்கவிங்களை ஏனுங்கொ இப்படிச் சொல்லாட்டி? இந்தச் சனங்க ஒன்னுன்னா ஒம்போதும்பாங்க! நல்லா இருக்காங்கள்ளோ?”

“நீ போயி உம்பட வேலையப் பாராயா! அடுத்த கட்டாப்பும் அம்மாதான் நம்புளுக்கு முதல்வரு!” சொன்னவர் நகர்ந்து போனதும் அடுத்த ஆள் யாரேனும் தெரிந்த முகம் தட்டுப்படுகிறதா? என்று பார்க்க ஆரம்பித்து விடுவாள். அவளது ஒரே மகன் கதிரேசன் இவளுக்கு உண்மையான தகவல் எதையும் வீட்டில் தருவதில்லை. அவன் ஓட்டுப் போட ஆரம்பித்ததே இந்த இரண்டு எலக்சனில்தான். பயல் விஜயகாந்த்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லுவான். வீட்டில் அதற்கென பயங்கர பஞ்சாயத்தே நடக்கும்.

சின்னான், கதிரேசன், செண்பகம் என்று மூன்று பேர் மட்டும் வாழும் வீட்டில் ஒரு எதிர்க்கட்சி அபிமானி இருப்பது குடும்பத்திற்குள் குழப்பம் வருவதற்கான ஏற்பாடுகள்தானே!

சின்னான் ஒருமணி நேரமாக கருமாண்டியூருக்கு நடையாய் நடந்து கொண்டிருந்தான். சாலையில் எந்தப் பேருந்துகளும் ஓடவில்லை. போக அங்கங்கே இவன் தாண்டி வந்த ஊர்களும் நடுச்சாமம் ஆனது போல இருண்டு கிடந்தன. மேஸ்திரி பொய் சொல்ல மாட்டார். கட்டிட வேலையில் இருந்த இவனைப் போன்ற கூலியாட்களை அவர்தான் ஐந்து மணிக்கே அவசரமாய் விசயத்தைச் சொல்லி, இன்னும் ரெண்டு நாளைக்கி இந்தப்பக்கமே வந்துடாதீங்க! என்று சொல்லி முடித்த போது அவரின் இரு சக்கர வாகனம் புகையைக் கக்கிக் கொண்டு போய் விட்டது!

இவனுக்கு தலை சுற்றியது. அடுக்கி வைத்திருந்த செங்கல் அடுக்கின் மீது அமர்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். ஏற்கனவே ரூவா நோட்டுப் பிரச்சனை இருக்கும் நாட்டில் வாழ்வது ரூவா நோட்டு அதிகம் புழங்காத அவனுக்கே துன்பமாய் இருக்கையில் இது அவனுக்கு இருதயத்தை சம்மட்டியால் சாத்தியது போலிருந்தது. “டணீர்!” “டணீர்!”

ரூவா நோட்டுப் பிரச்சனை வந்த போது எந்தக் கடையிலும் இவன் வைத்திருந்த ஒரே ஐநூறு ரூவாய்த் தாளை கை நீட்டி வாங்கவே மாட்டேன் என்றே எல்லோரும் சொன்னார்கள். சின்னானுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டது. கடைசியாக அவன் டாஸ்மாக் நோக்கி வீறு நடை போட்டுச் சென்றான். அம்மா கடையில் நம்மைப் போன்ற ஏழை பாழைகள் வருவார்கள் என்று காத்திருப்பார்கள் ரூவா நோட்டைப் பெற்றுக் கொள்ள! அம்மா ஆஸ்பத்திரில படுத்திருந்தபடி தகவல் கொடுத்திருக்கும் இந்த நேரம். “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!” முனகிக் கொண்டே டாஸ்மாக் வந்து சேர்ந்தான். கடையில் தெரிந்தவர் உள்ளாரா? ஆஹா! கொஞ்சம் செவத்தவரு! அவரேதான்!

“சாமீ! ஒரு கோட்டரு நம்முளுது குடுங்கொ!”

“சில்றெ வச்சிருக்கியா?”

“வேலக் காட்டுல இருந்து நேரு வர்றனுங் சாமி, சில்றைக்கி நானு எங்க போவேன்? நீங்கதான் கல்லாப்பொட்டி ரொம்ப சில்றெ வச்சிருப்பீங்க! சீக்கரம் தாருங்கொ!” என்ற சின்னான் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான்.

“இது ஆவாது! இங்க வாங்க மாட்டோம். சில்லரை இருந்தா நூறாக் குடு”

அப்ப அம்மா ஆர்டர் போடவில்லையாட்ட இருக்கே! பின்ன இந்தக் கருமத்தை கையில் வச்சுட்டு என்ன செய்ய? வெளிவந்தவன் அங்கே இங்கே விசாரித்து பெட்ரோல் பங்க் வந்து சேர்ந்தான். பங்க்கிலும் இவனுக்கு தெரிந்தவர்தான் நின்றிருந்தார். கறுத்த உடம்புக்காரர்.

“என்றா சின்னா? நனைச்சிட்டியாட்ட இருக்குது?”

“எங்கீங்கொ நனைக்கிறது? காசே பூராவும் செல்லாதுங்கறாங்க!”

“பூராக்காசும் இல்லடா. ஐநூறு ரூவாயும் ஆயிரம் ரூவாயும் தான் செல்லாது. அதப்பத்தி உனக்கு என்ன? நீ தான் நூறு ரூவாய்க்கு மேல ஒரு பைசா வச்சிருக்க மாட்டியே!”

“தேங் கேக்கறீங்க சாமி! ஐநூறு ரூவா நோட்டு ஒன்ன வச்சுட்டு நாயி மாதிரி கருமாண்டியூரை சுத்துறேன்”

“அட உங்கிட்டயும் மாட்டீடுச்சா ஒரு நோட்டு! சரி குடு நான் சில்றெ தாரேன்”

“சாமி, அப்பும் வடக்கு முகனா உக்காந்திருக்கிற மாரியாத்தாவ கும்புட்டுட்டுதான் வந்தேன். என்னை கையுடல பாருங்க ஆத்தா!” ஐநூறு ரூவாயை அவர் கையில் கொடுத்தான். அவர் நானூறு ரூவாயை இவன் கையில் திணித்தார்.

“சாமி இதென்னுங்க ஒரு நோட்டை கணக்குல உட்டடிச்சுட்டீங்கொ? நீங்க மறுக்கா ஒருவிசுக்கா எண்ணிப் பாருங்கொ!”

“நானூறு ரூவாதான் வரும்டா! செல்லாத நோட்டை நான்தான் வச்சுட்டு என்ன பண்ணுறது? கொண்டி பேங்க்ல வரிசீல நின்னு கட்டோணும் தெரியுமா! உனக்கு வேணுமா வேண்டாமா? இல்லீன்னா புடி இந்த ஐநூறு ரூவாயை!”

உலகத்தில் எல்லோரும் இவனை புதியதாக ஏய்க்கத் துவங்கி விட்டார்கள். தெரிந்தவர்கள்தான் முதலில் ஆரம்பித்திருக்கிறார்கள். இனிமேற்கொண்டு தெரியாதவர்கள் வந்து ஏய்ப்பார்கள். இவனுக்கு பயம் பிடித்துக் கொண்டதும், காய்ச்சல் அடிக்கத் துவங்கியதும் அன்றிலிருந்துதான்.

“அம்மா ஆர்டர் எதும் போடலீங்களா சாமி”

“எந்திரிச்சு வந்துதான போடுவாங்க! அவிங்களே ஆஸ்பத்திரியில இருக்காங்க! நீ போய் ஒரு கோட்டரை வாங்கி குடிச்சுட்டு ஊடு போயிச் சேரு! உம் பெண்டாட்டி சுருக்குப் பையில ஐநூறு ரூவா நோட்டு எத்தனை இருந்தாலும் தூக்கிட்டு வா நான் சில்லரை தாறேன்”

ஊட்டுக்கு ஓடி ஒளிஞ்சுக்கோ! கத்தி எடுத்தாந்து வயித்துல சொறுவீறுவாங்க எல்லோரும்! என்றே அவர் சொன்னது மாதிரிதான் இவன் காதில் விழுந்து தொலைத்தது. மனுசனுக எவனும் நிம்மதியா வாழ முடியாத ஊராக ஏன் திடீரென எல்லாம் தலைகீழாக மாறி விட்டது? அது மட்டும் அவனுக்கு புரியவில்லை அப்போது.

உள்ளாடையென கோவணமும் அழுக்கு நிறைந்த கட்டம் போட்ட லுங்கி அணிந்தவனுமான சின்னான் பத்து கிலோ மீட்டர் வரை நடந்து வந்து கருமாண்டியூர் சேர்ந்த களைப்பில் இருந்தான். ஊரில் சாலையோரத்தில் எரியும் மின் விளக்குகளும் எரியவில்லை.

எல்லாக்கடைகளும் சாத்தப்பட்டுக் கிடந்தன. பெட்ரோல் பங்க்கும் இருளில் மூழ்கிக் கிடந்தது. டாஸ்மாக் பக்கமாக சென்றவனை இருளிலிருந்து, ‘டேய் சின்னா!’ என்று யாரோ கூப்பிட்டார்கள். சப்தம் வந்த பக்கமாக டிச்சுக் குழியை தாண்டிச் சென்றான். ’வாங்கனதீம் படக்குனு போயிருடா! ஒரு கோட்டரு இரநூறு ரூவா. எத்தினி வேணும்?’ இருளில் கேட்ட முகம் இவனுக்கு பழக்கப்பட்ட முகம்தான். எப்போதும் நூற்றி ஐம்பதுக்குக் கிடைக்கும். இன்று ஏனோ ஐம்பது சேர்த்திச் சொல்கிறான்.

“அம்மா போயிருச்சுங்ளா?”

“ஆமா! ரெண்டு மூனு நாளைக்கி கடை இருக்காது.”

“அப்ப ரெண்டு குடுங்க” வாங்கி டவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். இரண்டு வீதி தாண்டினால் வழுவு வந்து விடும். செண்பகத்துக்கு இந்த நேரம் விசயம் தெரிந்திருக்கும். வீட்டில் என்ன கூத்து நடக்கிறதோவென சாலையில் நடையிட்டான்.

வீட்டில் செண்பகம் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். டிவியில், அம்மா இரண்டு நாளில் வீடு திரும்புவார்! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். டிவியில்தான் சாயந்திரமே அம்மா போய் விட்டது என்று கூறியதாக மேஸ்திரி சொன்னது ஞாபகம் வந்தது. செண்பகம் இவனை வா என்று கூடச் சொல்லவில்லை. பையனும் புருசனும் ஒரே நாளில் செத்துப்போன மாதிரியான சோகத்தில் அமர்ந்திருந்தாள். அவள் கன்னமெல்லாம் வீங்கிக் கிடந்தது. ஐந்து மணியிலிருந்தே அழுதிருப்பாள் போலிருந்தது.

தண்ணீர் குடிக்க வந்தவன் போல செம்பை எடுத்துக் கொண்டு போய் குடத்திலிருந்து தண்ணீர் மோந்து கொண்டு வெளித் திண்ணைக்கு வந்தான். ‘அம்மா போயிடுச்சு!’ என்று இவனைக் கட்டிக் கொண்டு ஒரு பாட்டம் செண்பகம் அழுது முடித்திருக்கலாம்! ஆனால் டிவியில் இன்னமும் இரண்டு நாளில் வீடு சென்று விடுவார் என்பதாகச் சொல்கிறார்களே! ஒரு கோட்டரை முடித்துக் கொண்டு இன்னொன்றை வீட்டின் தாழ்வாரத்தில் செறுகினான்.

தலைவர் நாளை லாரி எடுப்பாரா சென்னைக்குச் செல்ல? என்று ஒரு வாப்பாடும் தெரியவில்லை. எம்ஜியார் செத்த போது அப்படி லாரியில் சென்னை சென்றவன்தான் சின்னான். பின்பாக லாரி போகிறது என்பதற்காக வைகோவின் எழுச்சிப் பேரணிக்கு கட்சிக்காரன் கண்ணில் படாமல் ஒரு கோட்டரைக் குடித்துக் கொண்டு ஏறிப் போய் வந்தது. வைகோ மேடையில் நின்று கையை அசைத்த போது லாரியில் நின்று இவனும் கையை அவருக்கு அசைத்தான்.

செண்பகம் இவனுக்கு குண்டானில் பழைய சோற்றைக் கரைத்து வந்து திண்ணையில் வைத்தாள். “காசி எதாச்சிம் உம்பட மேஸ்திரிகிட்ட வாங்கிட்டு வந்தியா?” என்றாள். குண்டானை இவன் எடுத்துக் கொண்டதும் பதிலே தேவையில்லை என்று அவள் வீட்டினுள் சென்றாள்.

“கதிரேசனை எங்கே காணோமே? நைட்டு வேலைக்கி தறி ஓட்டப் போயிட்டானா? எல்லாம் சாத்திக் கிடக்குது இவனுக்கு மட்டும் தனியா தறி நொட்டறாங்களா? ஒரு கெடையில அவன் காலு நிப்பனாங்குது! மாமன் புள்ளைய கட்டிக்கடான்னா அங்க கோணை இங்க கோணை அவுளுக்குன்றான்! ஊடு கீடு முட்டி மிதி வாங்கிட்டு வரப்போறான்டி உம்பட தங்க மகன்!” காலி செய்த குண்டானை திண்ணை ஓரத்தில் வைத்தான். செம்பிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்து புரீச்சென கொப்பளித்து துப்பினான் வாசலில்.

குடித்திருந்த சரக்கு அப்படியொன்றும் கிறுகிறுப்பை அவனுக்கு தந்து விட்டது மாதிரி தெரியவில்லை. தண்ணியக் கலந்து வித்துட்டு இருக்கானுகளோ என்னுமோ! நம்ம புத்தியை மொதல்ல செருப்பால அடிக்கணும்! அங்க ஏன் ஏறீட்டு போயி காசைத் தொலைக்கணும்?

ஒன்பது மணியைப் போலத்தான் கதிரேசன் தன் சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தான். சின்னான் திண்ணையில்தான் கிடந்தான்.

“அம்மா போயிருச்சு, இன்னிக்கி சாமத்துலதான் தகவலை டிவில சொல்லுவாங்களாம்!” என்றான் திண்ணையில் கிடந்த இவனைப் பார்த்து.

“எல்லாரும் வயசு ஆனா போயிச் சேருறவங்கதான். நானும்தான் வயசு ஆனா போயிச் சேர்ந்துருவேன். நீ எங்க போயி சாமத்துல சுத்தீட்டு வர்றே?”

“நானு எங்க போயிச் சுத்துறது தனியா? பட்டறை வரைக்கும் போயி ஓனருகிட்ட காசு வாங்கிட்டு வர்றேன். நாளைக்கி சோறாக்க ஊட்டுல தக்கோளி, கத்தரின்னு ஒன்னுமே இல்லீனுச்சு அம்மா!”

“அப்ப ரெண்டு நாளைக்கி கஞ்சிதானா நமக்கு?” ஏனோ அவனுக்கு அப்போது சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே சுடுகாடு போய் படுத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. வாழ்க்கை என்று பிறந்து ஒரே ஒரு சம்சாரம் கட்டி ஒன்னே ஒன்னு கண்ணே கண்னுன்னு ஒரு பயலையும் பெத்து கண்ணுல பாத்தாச்சு! இனி இங்கே கத்தை கட்ட வேண்டியதில்லைதான். செத்தா எப்படியும் அம்மா போன அதிர்ச்சில செத்துத் தொலைத்தான் சின்னான்! என்று பேப்பரில் படம் போடுவார்கள். கூடவே பணம் கூட அரசாங்கம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அம்மாவே போன பின்னால் பொறவுக்கே இதோ நானும் வந்து விட்டேனம்மா! என்று போய் நிற்க வேண்டும்.

அவனுக்கு நிறைய எது எதுவோ யோசனைகள் ஓடிக் கொண்டே இருந்தன. நெஞ்சாங்கூட்டு எலும்புகள் வெளித் தெரிபவனும் நடுமண்டையில் சொட்டை விழுந்தவனுமான சின்னானுக்கு அன்று இரவு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது! இந்த அக்கிரமங்களை எல்லாம் தட்டிக் கேக்க சினிமாவில்தான் சண்டை கத்துக்கிட்ட பயல்கள் வருவார்கள். நிஜத்தில் யாரும் வரப்போவதில்லை என்ற உண்மையைக் கண்டறிந்தான்.

அவன் காசை இன்று இரவு வெட்டிப் பயல் ஒருத்தன் கையைத் திருகி பிடுங்கியிருக்கிறான். அதுவும் உழைத்த காசு. இதை தட்டிக் கேட்க, இவனுக்கு உதவ இங்கே கருமாண்டியூரில் யாரும் இல்லை. இவனேதான் தட்ட வேண்டும். தட்டி லேப்ப வேண்டும்.

“புறப்படடா தம்பி புறப்படடா!” வாய் விட்டே இவன் திண்ணையில் கிடந்து பாடியிருக்க வேண்டும். வீட்டினுள்ளே செண்பகத்தின் குரல் கேட்டது. “அம்மா செத்துப் போன கவலையில்லாம ஒரு குண்டான் சோத்தைக் குடிச்சுப் போட்டு உங்கொப்பனுக்கு பாட்டு பாரு சாமத்துல!”

டிக்கி வத்தினவனும், காலுக்கு கால் வேறு வேறு செருப்பு அணிபவனுமான சின்னான் வீட்டிலிருந்த சின்னக் கடப்பாறையை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கினான். அதிசயமாய் வழுவில் எப்போதும் தெருவில் கிடக்கும் நாய்களைக்கூட அன்று ஒன்றையும் காணவில்லை. எல்லாவற்றிற்கும் தகவல் தெரிந்து விட்டது போல! இந்த வீதி விளக்குகளுக்கு கூட இன்று என்ன கேடு வந்து தொலைத்தது? கருமாண்டியூரே எழவு விழுந்த ஊராக அவனுக்கு காட்சி தந்தது.

டாஸ்மாக் கடைப்பக்கமாக தன்னைப் பெயர் சொல்லி யாரேனும் அழைக்கிறார்களா? என்று நின்று கவனித்தான். இன்னமுமா நிற்பான் அந்தப் பயல்? டபுளுக்கு டபுள் பணம் அடித்து விட்டு அவனும் குண்டி வெடிக்க குடித்து விட்டு போய்ச் சேர்ந்திருப்பான். மனுசனை மனுசனா பாக்கானுகளா ஒன்னா? அவனவனுக்கு அவனவன் வயிறு ரொம்புனாச் செரியின்னுல்ல சுத்துறானுகொ! பக்கத்துல நின்னு பேசிட்டு இருக்கவனுக்கும் வயிறு இருக்குன்னு ஒரு நாளாச்சிம் நினைச்சுப் பாக்கானுகளா ஒன்னா?

டாஸ்மாக் கடையின் பின்பக்கமாக வந்தவன் ஒன்றுக்கு போவது போல சுவரருகே அமர்ந்து தெம்பக்கமாக நோட்டம் விட்டான். வீதியில ஏழெட்டு வீடுகள் இருபுறமும் எதிரெதிர்க்கே இருளில் நின்றிருந்தன. அந்த வீட்டுக்காரர்களும் பலமுறை பல இடங்களில் மனு கொடுத்துப் பார்த்து விட்டார்கள். டாஸ்மாக்கை இந்த இடத்திலிருந்து அகற்றுங்கள்! குடிகாரப்பயல்கள் சாலையெங்கும் உச்சா போகிறார்கள். அவசரத்துக்கு அங்கேயே உட்கார்ந்தும் விடுகிறார்கள். போக பப்பரப்பே என திறந்து போட்டு செத்த பிணம் போலக் கிடக்கிறார்கள். குழந்தைகள், பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லையென்று. கிணற்றில் போட்ட கற்களாக அவர்கள் மனு இன்னமும் கிடக்கின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் சலித்துப் போய் விட்டு விட்டார்கள். ஆண்டவன் விட்ட வழி!

சின்னான் கடப்பாறை குத்தொன்றை கடைச் சுவற்றில் ஹாலோப்ளாக் கல் ஓரமாய்க் குத்தினான். வெளிப்பூச்சு பூசாத சுவர் அது. பதினைந்து வருட காலமாக தொழிலில் புழங்கும் சின்னானுக்கு ஒரு ஹாலோப்ளாக் கல்லை சுவற்றிலிருந்து பெயர்த்தெடுப்பது எப்படி? என்று கற்றுத்தர வேண்டுமா என்ன?

நினைத்ததற்கு மாறாய் அது கடினமான பணியாய்த்தான் இருந்தது சின்னானுக்கு. இருந்தும் அவன் பிறரின் வஞ்சிப்புக்குள்ளானவன். இரவில் ஒவ்வொரு கடப்பாறைக் குத்தும் நங் நங்கென ஒலி எழுப்பியது. முதல் வீட்டுக் கதவு திறக்கும் ஒலி இவனுக்குக் கேட்டது. வீட்டுக்காரன் சப்தம் கேட்டு என்னவெனப் பார்க்க வருகிறான்! ஐயகோ! சின்னான் பீஸ் போன குடிகாரன் போல கீழே சாய்ந்தான். கதவு திறந்து வந்த உருவம் சாலையை கடந்து சென்று ஓரத்தில் அமர்ந்து உச்சா போய் விட்டு நின்று இவன் கிடப்பதை உற்றுப் பார்த்து விட்டு தன் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டது.

அதன் பின் தன் காரியத்தை விரைவு படுத்தினான். குத்தின கடைசிக் குத்தில் ஹாலோப்ளாக் கல் கடையினுள்ளேயே தொப்பென விழுந்தது. மகிழ்ச்சி!

சின்னான் துவாரத்தினுள் கையை நுழைத்தான். கைக்கு ஸ்டேண்டிலிருந்த முதல் கோட்டர் பாட்டில் ஒன்று சிக்கியது. எடுத்து கீழே வைத்தான். அடுத்து கையை விட்டான். மேலும் இரண்டு பாட்டில்களை எடுத்து வைத்தான். வழுவினுள் குடிகார மாமன் மச்சான் ஞாபகம் வந்தது. இன்னம் நாலஞ்சண்ணம் எடுத்தால் அவர்களுக்கும் கொண்டு போய் கொடுக்கலாம்தான். அதற்காக இவனுக்கு நாளையும் பின்னே காசு இல்லாத சமயத்தில் வாங்கிக் கொடுப்பவர்களா அவர்கள்? குடித்ததும் வாயை துடைத்துக் கொண்டு ‘கையில பைசா இல்லடா சின்னா’ என்று சொல்லிப் போகிறவர்கள்தானே அந்தக் கூமுட்டைகள்!

எதாவது விருந்து விசேசம் என்றால் மட்டும் இவனிடம் பைசா தேறாது. கறிக்கஞ்சி சாப்பிட நாக்கு சுழட்டும்தான். துளி அல்லது நெமே நனைக்க அந்தக் கடவுள் சின்னானுக்கு ஏற்பாடு செய்யாது. பொக்கெனப் போய் இலையில் அமர்ந்து வேண்டா வெறுப்பாய் சாப்பிடுவான். இதெல்லாம் ஒரு சாபக்கேடுதான் அவனுக்கு. அன்று பார்த்து இவன் சொந்தமெல்லாம் வயிறு நிரம்ப கண்கள் வெளியே விழுந்திடுமோ? என்கிற அளவு குடித்திருக்கும். பொறுக்க மாட்டாமல் கேட்டும் தொலைத்திருக்கிறான். வெறும் பாட்டிலை கண்ணுக்கு காட்டுவார்கள். ’கொஞ்சம் முந்தி வந்திருந்தீன்னா குண்டி வெடிக்க குடிச்சிருக்கலாம்’ என்பார்கள்.

யாருக்கும் சரக்கு கிடையாது. எனக்கு கணக்கு நேராகி விட்டது. நூறு நூறு ரூவாய் இரண்டு பாட்டில்களுக்கு எச்சு வாங்கினான் அந்தப்பயல்! இரண்டு பாட்டில் எடுத்துக் கொண்டதும் கணக்கு நேராகி விட்டது. இன்னும் ஒரு பாட்டில் கல்லை பேர்த்தெடுத்த உழைப்புக்கு. இனி ஊருக்கே படியளக்க வேண்டுமானால் நானென்றும் கொடை வள்ளல் அல்லவே! அன்னாடங்காச்சி! வேணுங்கிறவன் வந்தால் அடுத்த கல்லை பெயர்த்தெடுத்து எடுத்துப் போகட்டும்! கொய்யாலே! சின்னானா கொக்கா!

சாரமேறி வேலை செய்பவனும் குறட்டை போட்டுத் தூங்குபவனுமான சின்னான் கடப்பாறையைத் தோளில் போட்டுக் கொண்டு வழுவு நோக்கி நடையிட்டான்.

பிற படைப்புகள்

Leave a Comment