ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 8இதழ்கள்கதைமொழிபெயர்ப்பு

ஆகாசராஜனும் சின்னப் பறவையும்
கன்னட மூலம்: வைதேகி, ஆங்கிலத்தில்: சுகன்யா கனரல்லி, தமிழில்: தி.இரா.மீனா

by olaichuvadi November 15, 2021
November 15, 2021

 

அந்தச் சிறிய பறவைக்கு இறக்கைகள் முளைக்க மற்ற பறவைகளை விட அதிக நாளானது. இன்னும் அது வானத்தில் பறக்கவில்லை. ஏனப்படி? ஏனெனில் அந்தச் சிறிய பறவை தன்னுடைய ஆகாசராஜனை கண்டுபிடிக்கவில்லை. மற்ற எதற்கும் அந்தப் பறவை இணங்காது. அதனால் அந்த சிறகுகள் வீணாகத்தானிருந்தன.

சிறகுகளின் மடிப்பிற்குள் உஷ்ணம் தகித்தது. அந்தச் சிறகு உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது. சிறகுகளை விரித்துக் கொண்டு ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்பதுதான் அந்தச் சிறிய பறவையின் ஒரே விருப்பம்.

வைகறைப் பொழுதில், மற்ற பறவைகள் பறந்து போய்விடும். ஆனால் அந்தச் சிறிய பறவை ஏக்கத்துடன் கூட்டிற்குள்ளேயே இருக்கும். ‘எப்போது என் ஆகாசராஜன் வருவான்? எப்போது என் சிறகுகள் படபடக்கும்?’ என்று ஒரு கனவைப் பின்னியபடி இரவும் பகலும் பாடிக் கொண்டிருக்கும்.

‘என் ஆகாசராஜனே ,என்னிடம் வா ! நண்பனே இங்கே வா! நான் காத்திருப்பது உனக்குத் தெரியாதா?’

பாடிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய பறவையை மற்ற பறவைகள் கேலி செய்தன. தாமதமாக இறக்கைகள் வளரும் பறவைகளின் விதி, மற்றவைகள் பெருமை பேசிக் கொள்ளும் நிலையைக் கேட்பதுதான். சில சமயங்களில், அவைகள் பறப்பதற்கு முன்பாக அந்தச் சிறிய பறவையின் கூட்டிற்குள் எட்டிப் பார்த்து அலகால் குத்தி ‘பறவையே ,பறவையே, எங்களுடைய தினப் பயணத்திற்குப் புறப்பட்டுவிட்டோம்’ என்று பரிகாசம் செய்யும். அந்தப் பறவை தன் வாயைத் திறக்காது. பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும். அவைகள் எல்லாம் புறப்பட்டுப் போன பிறகு, சின்னப் பறவை கூட்டைப் பெருக்கி சுத்தம் செய்து, கோலம் போட்டு, கனவுகள் என்ற உடையணிந்து காத்திருக்கும். இப்படியாக அந்தச் சின்னப் பறவைக்கு வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

மாலையில், அந்தப் பறவைகள் திரும்பும் போது சின்னப் பறவையின் கூட்டருகே சிறிது நேரம் நின்று தங்களுடைய அலகின் அழகு, சிறகுகள், ஆகாயம் மற்றும் பிறவற்றைப் பற்றி விலாவாரியாக விவரிக்கும். அவை எந்த அளவிற்கு விவரிக்கின்றனவோ அந்த அளவிற்கு தங்களின் மீதும், தங்கள் வானத்தின் மீதும் காதல் கொண்டிருந்தன. சின்னப் பறவைக்கு மேலும் கேட்கவேண்டும் என்ற விருப்பமிருந்தாலும் அதற்கு எதிராக மிக இறுக்கமாகவும், சுருங்கியும் உட்கார்ந்திருக்கும். அது சோகமே உருக்கொண்டதாகிவிட்டது. விடியல் தன் கண்களைத் திறக்கும் போதும், இரவு கண் மூடும்போதும் ,அந்தப்பறவை பாடிக்கொண்டும், சுருங்கிக் கொண்டுமிருந்தது.

நாட்கள் உருண்டன. ஓர் அருமையான நாளில் சூரியன் கதிர்கள் மின்னிக் கொண்டு கண் விழித்தன. அப்போது…

அதன் கூட்டைப் பொலிவான ஒளி தொட்டது! ‘என்ன ஒளி !’ என்று சின்னப் பறவை திகைப்பாய்க் கூவியது.

‘பார் ! உன் ஆகாசராஜனை! அவனுடைய ஒளி உன் கூட்டின் விளிம்பை முத்தமிடுகிறது!’

அந்தக் குரல் எங்கிருந்து வருகிறதென்று கவனிக்கக் கூட அந்தப் பறவைக்குப் பொறுமையில்லை. ‘என் ஆகாசராஜனா? அவன் எங்கே?’

‘அந்த ஒளியைக் கடந்து பார். கோட்டின் இறுதியில் அவனைப் பார்க்க முடியும் . ’

அந்தச் சின்னப் பறவை நிமிர்ந்து உட்கார்ந்தது. கழுத்தை நீட்டி இங்குமங்கும் பார்த்தது. ஒளியின் இழையோடு சேர்ந்தாடியது. கூட்டின் குறுக்கே நடைபோட்டது. தன்னிருப்பில் மகிழ்ந்தது. நின்ற இடத்திலிருந்தே உடலைச் சுழற்றியது. இது அதன் சொந்த இறக்கை! அந்த எண்ணம் அதன் மனதுக்குள்ளும், உடலுக்குள்ளும் கிளர்ச்சி அலைகளைத் தூண்டியது.

‘ஓ, என் ஆகாசராஜனே !’ ரகசியமாகச் சொன்னது.

ஆகாசராஜனிடமிருந்து பதிலில்லை.

அதன் உடலில் அடைபட்டிருந்த சிறகுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தானாகவே விரிந்தன. வயிற்றின் கீழிருந்த சிறகுப் பகுதியில் குளிர்பரவியது. கிச்சுகிச்சு மூட்டுவதாக சின்னப் பறவை உணர்ந்தது. ஆகாசராஜன் என்னைப் பார்க்க வந்து விட்டானா? அல்லது நான் அவனிடம் போயிருக்கிறேனா? இந்த இரண்டில் எது நிஜம்? இந்தக் கேள்வி அதற்குச் சிரிப்பை வரவழைத்தது. சின்னப் பறவை நடந்தது. கடைசியில் அது ஆகாசராஜனிடம் போய்விட்டது.

‘ஆகாசராஜனே !’ சின்னப் பறவை உடனே கூப்பிட்டது. ‘உன் சிறகுகளைப் பிரிக்காமல் ஏன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? எவ்வளவு காலமாக நான் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்! உனக்கு என்னை அடையாளமாவது தெரிகிறதா?’ தன் கழுத்தைக் குலுக்கியபடி கேட்டது.

இன்னும் அந்த ஆகாசராஜனிடமிருந்து எந்த பதிலுமில்லை.

‘அது என்னை ஆழமாக உற்றுப் பார்க்கிறதோ ?’ என்று அந்தப் பறவை நினைத்தது. ‘ஆகாசராஜனின் பார்வைக்குள் இந்த பூமி முழுவதுமே சுற்றி மூடப்பட்டு இருக்கிறதோ ? ’ பறவை யோசனையில் தன் இருப்பையே மறந்து போனது. ‘ஐயோ! நான் எப்போது பூமியானேன்?’ சின்னப் பறவை பரவசமானது.‘ஆகாசராஜன் என்னைத்தான் உற்றுப் பார்க்கிறானோ? அல்லது என் பின்னாலிருக்கும் யாரையாவது பார்க்கிறானோ? என்று வியப்படைந்தது. பிறகு சட்டென்று கழுத்தைத் திருப்பிப் பார்த்தது. யாரோ ஒருவரின் நிழல் பின்னால் தெரிந்தது. ‘அது யாரென்று நான் பார்க்க வேண்டுமா? அதில் அர்த்தமில்லை.எனக்கு ஆகாசராஜன் வேண்டும். இந்த ஆகாசராஜன் மட்டுமே, வேறு யாருமில்லை. எனக்கு அதுதான் முக்கியமான விஷயம்.’

இதற்குள் அதனுடைய இறக்கைகளின் ஒவ்வொரு மடிப்பும் பிரிந்தது.பரந்த வெளியில் பறக்க வேண்டும் என்ற வேகமான உந்துதல் அதற்குள் எழுந்தது. அங்கே ஆகாசராஜனும் இருந்தான்.‘ஆனால் நான் எப்படிப் பறப்பேன்?’ பறவை சிந்தித்தது. ‘ஏன் இன்னும் என் ஆகாசராஜன் அமைதியாக இருக்கிறான் ? ’

‘ஆகாசராஜனே, நான் இங்கே இருக்கிறேன்!’ கவலையில் தொண்டை அடைக்கச் சொன்னது.

ஆகாசராஜன் பேசினானா? இல்லை. வெறிப்பதை அவன் நிறுத்தவுமில்லை.

பகல்பொழுது மெதுவாகத் தன் வர்ணத்தை இழந்து கொண்டிருந்தது. ‘இருட்டுவதற்கு முன்னால் நான் பறந்துவிட முடியுமென்று எவ்வளவு ஆசையாய் நினைத்தேன். ஆனால் இங்கே ஆகாசராஜன் அமைதியாக இருக்கிறானே’ சின்னப் பறவை நம்பிக்கையிழந்தது.தன் சமநிலையிலிருந்து தவறி ,திடீரென அது அதிகம் பேசத்தொடங்கியது. தன்னைச் சுற்றியுள்ள பறவைகள் தன் காயத்தைக் குத்திக் கிளறியது, தான் ஏக்கத்தோடு காத்திருந்தது உள்ளிட்டவற்றைச் சொன்னது. புதிய கனவுகளைப் பின்னத் தொடங்கியிருந்த இந்த நேரத்தில் பயனின்றிப் போன தன் வீணான கடந்த காலக் கனவுகளைச் சொல்லிச் சிரித்தது. மகிழ்ச்சியோடு தன்னால் முடிந்த அளவு தான் உயரப் பறக்க நினைத்ததை, காத்திருப்பு வீணானதை விவரமாகச் சொன்னது. சொல்ல முடியாயாதவற்றை கூடச் சொல்லியது. எல்லாம் குழப்பம்தான்.

ஆகாசராஜன் பேசினானா ?

இல்லை. பேசவில்லை.பொம்மையைப் போல ஊமையாகவும், கல்லைப் போல செவிடாகவுமிருந்தான் .இறக்கைகளோடு கூடத் தன்னால் பறக்க முடியாது என்பது போல. ஏதோ பெரிய குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது போல. ஒரு முறை தன் கண்களைத் தேய்த்து, மூக்கைச் சொறிந்து கொண்டான். பிறகு பறவையின் உடலை நீவிவிட்டு, சிறகுகளைத் தடவி்னான். ‘எவ்வளவு தெய்வீகமாகத் தன் உணர்வை வெளிப்படுத்துகிறான்!’ என்று நினைத்து பறவை மெய்மறந்து போனது. ஆனால் ஒரு கணத்திற்குள், அவன் கவனம் வேறெங்கோ போய்விட்டது. பறவைக்கு தூக்கிவாரிப் போட்டது ; திக்பிரமை அடைந்தது. ’ எதைத் தொலைத்தாய்?’ என்று கேட்க நினைத்தது. ஆனால் தன் உந்துதலை அடக்கிக் கொண்டு ,அவனைப் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தது. அவனைப் பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆசை அதிகமானது.

‘நான் அதிகமாகப் பேசிவிட்டேனா? என்னால் என்ன செய்யமுடியும்?’ பறவை குழப்பமாக உணர்ந்தது. அவன் மிக அமைதியாக இருந்தான். அந்த நேரம் அர்த்தமில்லாமல் கழிந்தது. பாத்திரத்தின் அடியில் திரண்டிருந்த தூசிக் குவியலான சின்னப்பறவையின் கடும் மன உளைச்சலை அவை வெளியேற்றிவிட்டன. அதன் முடிவென்ன? பறவையால் இன்னும் பறக்க முடியவில்லை என்பதுதான்!அந்தச் சோகம் இன்னும் நீடித்தது. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வாழ தான் தயாரென்னும் நம்பிக்கையை அது அவனுக்குள் எப்படி ஏற்படுத்த முடியும்? அந்தப் பறவை தொண்டைக்குள்ளேயே முனகிக் கொண்டது. அது ஒன்றும் அழுமூஞ்சியல்ல.

ஆகாசராஜன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அந்தச் சின்னப் பறவையும் அவனைப் போலவே.

ஒரு மென்மையான காற்று அவர்களைக் கடந்தது. அப்போது தனது இறக்கைகளை படபடத்துக் கொண்டு காலதேவன் வந்தான். அந்தச் சின்னப் பறவை கூர்மையாக கவனித்தது. நம்பிக்கையின்மை வளர்ந்தது. ‘ஏய் ஆகாசராஜனே, காலம் நம்மைக் கடப்பதற்கு முன்னால் ஒரு தடவை என்னுடன் பேசு. இப்போது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இங்கிருந்து பறந்து போ.’

ஆகாசராஜன் என்ன சொன்னான்? ஒன்றும் சொல்லவில்லை.

அவன் வார்த்தைகளைத் தொலைத்து விட்டானா? அதிகம் பேசியவனைப் போலச் சோர்வாக இருந்தான். அந்தச் சின்னப் பறவை எழுந்து அருகே போய் அவன் முகத்தைத் துடைத்து அவன் அலகை ஆட்டியது. ‘என் அலகு உன்னைக் காயப்படுத்தியதா?’ஆதரவாகக் கேட்டது. அவனுக்கு என்னதான் வேண்டும் ?

ஆதரவின்றி, அந்தச் சின்னப்பறவை குறுக்கி உட்கார்ந்து கொண்டு ஆகாசராஜனையே வெறித்துக் கொண்டிருந்தது. அந்தச் சின்னப் பறவை இப்போது எவ்வளவு கனமாகி விட்டது! தியானத்தில் தன்னை மறந்து பூமி அடுக்கில் சூழப்பட்ட துறவி போல ஆகாசராஜனும் பாதி மூடிய கண்களுடன் உட்கார்ந்தி்ருந்தான்.

பிறகு,

‘பறவையே ..சின்னப் பறவையே..மெல்லிய பறவையே ..’

இப்போது இது யார் ? மூப்பின் எல்லையிலான காலதேவன்! ஞாபகங்களை இருமிக் கொண்டு வருபவன் !இந்த இருமல் தீரக்கூடியது என்று யார் இவனிடம் சொன்னது? பழங்காலத்தின் தஸ்தாவேஜுக்களை மாத்திரைக்குப் பின் மாத்திரையாக விழுங்கியவன். இருமல்தான் மோசமாகிப் போனது. கால்களைக் குறுக்காகப் போட்டபடி காலதேவன் தன் தேய்ந்து போன இறக்கைகளைச் சரிசெய்து கொண்டான்.

‘யாரது! காலதேவனா ?’

‘சின்னப்பறவையே, உன்னை இப்படி ஒரு சோகமான நிலையில் என்னால் எப்படிப் பார்க்கமுடியும்? அதனால்தான் வந்தேன். ஏன் உன் கண்களில் ஈரம் கசிகிறது? நீ பயங்கரமாக கலங்கிப் போயிருக்கிறாயோ?’ வாத்ஸல்யம் வெளிப்படும் தொனியில் கேட்டான்.

அந்தச் சின்னப்பறவை தன் வாயைத் திறக்கவில்லை. உடைந்து போகவுமில்லை.

‘இப்போது, கல்போல இருப்பதில் அர்த்தமில்லை. அழுதுவிடு’ பறவை அழவில்லை.

‘நான் உன் பேச்சைக் கேட்டேன். ஆகாசராஜனோடு நீ கழித்த நேரம் வீணாகி விட்டதா? என்னிடம் விட்டுவிடு .நொடியில் நான் அதைத் தணலாக்கி விடுகிறேன்.’

அந்தக் கணம் கடந்து விட அனுமதிக்காமல், அந்தப் பறவை ஞாபகங்களுக்குள் ஒட்டிக் கொண்டது. காலதேவன் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். அவன் மீசை அந்த தாளத்திற்கேற்றது போல ஆடியது.

‘அது போகட்டும். பறவையே, உனக்கு இந்த ஆகாசராஜனின் கதை தெரியுமா?’

பறவையின் கண்கள் பிரகாசித்தன. எதுவாக இருந்தாலும், அது ஆகாயத்தின் கதை. தனக்கு அது கண்டிப்பாகத் தெரியவேண்டும். ஆனால் ஏன் அதன் இதயம் அப்படி உக்கிரமாக அடித்துக் கொள்கிறது?படபடக்கும் இதயமாவது இருக்கிறதே. அந்தப் பறவைக்கு மயிர்கூச்செறிந்தது. இருமியபடியே காலதேவன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

இதே ஆகாசராஜன் ஒரு காலத்தில், இவ்வளவு பெரிதாக அல்லது அகலமாக இருக்கவில்லை. அவனுடைய இறக்கைகள் வலிமையாக இருந்தன. தனக்கு எங்கு பறக்க விருப்பமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் இறக்கைகளைப் படபடவென அடித்தபடி சுற்றி வருவான். ஒரு நாள் அழகான நிலத்தில் ஓர் அழகிய பறவையைப் பார்த்தான். அடுத்த கணம், அந்தப் பறவையின் பின்னால் பறக்கத் தொடங்கினான்.’

அந்தப் பறவையின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது போலிருந்தது. இல்லை, இதயம் துடிக்க மறக்கவில்லை. இவ்வளவையும் அதுதான் கேட்கிறதா? ஓர் அற்புதமான காட்சியின் ஒரு பகுதியாக அது இப்போது இருக்கிறதா? அந்தப் பறவை யோசிக்க முயன்றது. ‘ஏன்? ஒரு பறவையின் பின்னால் போக ஆகாயம் முயன்றிருக்குமா?’ மென்மையாகக் கேட்டது.

‘என்னை நம்பு .நான் சொல்வது உண்மைதான்.என்னால் கூட உண்மைகளை அழித்துவிட முடியாது.’

அவர்களிருவருக்கிடையே மௌனம் நுழைந்தது. அதைத் தன் கையால் விலக்கியபடி காலதேவன் தொடர்ந்தான், ‘அந்தப் பறவையோடு ஒன்றாக சேர்ந்திருக்க வேண்டுமென்பதில் அவன் எவ்வளவு தீவிரமாக இருந்தான்! விருப்பம் என்பது அப்படி ஆழமாக இருக்க வேண்டும். அவ்வளவு அருமை! அந்த நாட்களின் ஆகாசராஜனைப் பற்றி உன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது!’

‘மேலே சொல், காலதேவனே’ என்று உயிரற்ற குரலில் பறவை சொன்னது.

‘என்ன சொல்வது? காலம் என்ற புராதன தேவனுக்கு மரணமென்பதில்லை. எல்லா துக்கங்களையும் பார்க்கிற பார்வையாளனாக நான் தொடர்ந்து கொண்டிருப்பேன். அந்தப் பறவைக்கான கூடு வேறெங்கோ இருந்தது. தான் எங்கிருந்து வந்ததோ அந்த இடத்திற்கு அது திரும்பிப் போய்விட்டது. தன் இறக்கைகள் வெட்டப்பட்டது போல ஆகாசராஜன் உணர்ந்தான்’ கேட்கும் இயல்பே இனி மறந்து போகும் என்பது போல அந்தப் பறவை இருந்தது. வெகுகாலமானது போல உணர்ந்தது. அப்படியானால்? யதேச்சையாக தான் பார்த்த அந்த நிழல் மற்ற பறவையினுடையதுதானா? அது அதை நம்ப முயற்சிக்கக் கூடாது.

‘நீ ஒரு சின்னப் பறவை.! உனக்குத் துக்கம் வந்தால், நீ கூட அதைப் பற்றிக் கவலைப்படுவாய், அதை உனக்குள் அடக்கிக் கொள்வாய். அடுத்து என்ன நடந்ததென்று கேள். அதிலிருந்து, இந்த ஆகாசராஜன் தன் இறக்கைகளை திரும்ப மடக்கிக் கொள்ள மறந்துவிட்டான். பறப்பதும் கூட அவனுக்கு மறந்து போனது. சிக்கி நின்றுவிட்டான். ஆனால் அவன் நீளமும், அகலமும் வளர்ந்து கொண்டே போனது.’

அந்தச் சின்னப் பறவை இப்போது அழுதது. அதன் கண்ணீர் சிறகுகளின் மடிப்புகளில் பட்டுப் பரவ, அவை உறுதியாகிப் பறப்பதற்குத் தயாரானது. அவை உடலோடு கெட்டியாக ஒட்டிக் கொண்டன’

‘சின்னப் பறவையே! பின் வாங்காதே. நீ அவ்வளவு சீக்கிரம் மனம் தளர்ந்துவிடக் கூடாது.என்னுடன் வா. வானத்தில் உனக்குப் பிடித்த இடத்தைப் பார்த்துச் சுதந்திரமாகப் பற.’

தன் பொக்கை வாயைத் திறந்து காண்பித்து காலதேவன் சிரித்தான்.

கண்ணிமைகள் படபடக்க அந்தச் சின்னப்பறவை ஆகாசராஜனை மீண்டும் பார்த்தது. அவனுடைய நீளம், அகலம், ஆழம் எல்லாம் இன்னமும் வளர்ந்திருக்கிறதா? உற்றுப் பார்க்க கண்களில் நீர்த்திரையிட்டது. பிறகு அவனுடைய இறக்கைகளின் மடிப்பிற்குள் அது புகுந்தது, இந்த உலகத்தையே மறந்தது.

காலதேவன் ஊமையாக நின்றான். அவனைக் கூடச் சட்டை செய்யாமல் அந்தச் சின்னப்பறவை வானத்தில் தனக்குப் பிடித்த பரந்தவெளியை நோக்கி நடந்தது. பின்பு அந்தக் களங்கமற்ற அமைதியில் தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு, ஒரு சின்னச் சத்தமுமின்றி பறந்து போனது.

•

ஆசிரியர் குறிப்பு

வைதேகி [ ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி ] நவீன கன்னட இலக்கியப் பெண் படைப்பாளி. ஏழு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஐந்து வாழ்க்கை வரலாற்று நூல்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பதினைந்து சிறுவர் நாடகங்கள், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல பங்களிப்புகள் உடையவர். அனுபமா விருது, மாஸ்தி விருது, எம்.கே.இந்திரா விருது, நிரஞ்சனா விருது, தனசிகாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர். ‘கிரௌஞ்ச பட்சிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். இச்சிறுகதை ‘ஆகாசராஜனும் சின்னப் பறவையும்’ [ Sky—Fella and the Little Bird ] ‘Afternoon With SHAKUNTALA and Other Stories ’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : Afternoon With SHAKUNTALA and Other Stories, Katha Bharathi Series, The Literary of Indian Classics

         more 
 
         more
கன்னட சிறுகதைதி.இரா.மீனாவைதேகி
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
தியான மையத்தில் வியாகுல மாதா
அடுத்த படைப்பு
வரலாற்றுடனான எங்களது உறவு சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது!

பிற படைப்புகள்

சடம் ஜெயமோகன்

January 1, 2022

தொற்று வா.மு.கோமு

January 1, 2022

மதவிலாசம் சுஷில் குமார்

January 1, 2022

விளிம்பு வைரவன் லெ.ரா

January 1, 2022

தேவதேவன் கவிதைகள்

November 15, 2021

சுகுமாரன் கவிதைகள்

November 15, 2021

க.மோகனரங்கன் கவிதைகள் க.மோகனரங்கன்

November 15, 2021

உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

November 15, 2021

எம்.யுவன் கவிதைகள்

November 15, 2021

லக்‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் லக்‌ஷ்மி மணிவண்ணன்

November 15, 2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top