இந்திரஜாலம்
துாயன்

by olaichuvadi

 

ஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி, திண்ணையில் நித்ய துயிலிலிருக்கும் வெள்ளக்குட்டியைப் பார்த்தவாறே சீராக வெளிவரும் அவரது குறட்டையைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். விடிந்தால் தசரா விழா. சமஸ்தானமே கொண்டாட்டத்தை அனுபவிக்கப் போகிறது. வேட்டுச் சத்தத்தில் சிட்டுக்குத் துாக்கம் கலைந்து இறகை விரித்துக் கத்தியது. கற்பூரவள்ளியைப் பிட்டு நீட்டினான். பின்னால் அகன்று தலை மயிரெல்லாம் குத்திட்டு நிற்கக் கோபத்திற்கு மாறியது. சாம்பாஜி அமைதியானான். வெள்ளக்குட்டி இன்னும் துாக்கத்திலிருந்தார். ஆத்மாவும் ஆக்கையும் அருகருகே கட்டிக்கொண்டு உறங்குவதுபோலிருந்தது அவரது தோற்றம். சாம்பாஜிக்கு நேரம் ஆக ஆக என்ன முடிவெடுப்பதெனப் பிடிபடவில்லை. ஈரத்தில் நனைந்திருப்பது போன்று நடுக்கம். கையறு நிலை, விதானத்தை அண்ணாந்தான், விளக்கைச் சுற்றும் பூச்சிகளை வெறித்தான், சுவரில் தொங்கும் சதாசிவ பிரம்ம பக்கிரியின் படத்தைப் பார்த்தான். இப்படியே எவ்வளவு நேரம் இருப்பது? வௌவால் ஒன்று தொங்குவதும் பறப்பதுமாக அலைந்தது. சட்டென, தற்கொலைக்கு முயலலாம் என்கிற யோசனை தோன்றிற்று, ஆனால் அதற்கொரு சாகஸ தைரியம் தேவை. எல்லோருக்கும் வாய்க்காது யோக அப்பியாசிகளுக்கே சாத்தியம். அப்பியாசம் இல்லாவிட்டாலும் யோகமாவது கிட்ட வேண்டும். கடவுள்போல எங்கிருந்தோ வந்து உதித்தால் நல்லது. சாம்பாஜி கைகளைக் கூப்பி அந்த அதிர்ஷ்டத்திற்காகப் பிரார்த்தித்தான்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் காந்தியின் பெயரைவிடவும் இந்திரஜாலசாகரம் திரு. சாம்பாஜி என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் கிடையாது என்று சொல்லலாம். சாம்பாஜிக்கு முப்பத்தி ஐந்து வயதுதான் இருக்கும். அவனுடைய இந்திரஜாலவித்தை அன்றைக்கு புதுக்கோட்டை முழுக்க மகா பிரபலம். இத்தனைக்கும் மிகப்பெரிய சர்க்கஸ்களைப் போன்று பெரிய கூடாரமோ குள்ளர்களோ அந்தர சாகஸங்களோ மிருகங்களோ கவர்ச்சியான பெண்களோ எதுவுமே இல்லை. வெறும் ஆர்மோனியம் வாசிப்பவரும் கஞ்சிரா தட்டும் கிழவரும் சாம்பாஜியுடன் உதவிக்கு நிற்க நடுவயதில் ஒருத்தர் என மொத்தம் நான்கே பேர்கள். கிழவரின் விரல்களுக்கு மனதை வித்தையுடன் கட்டிவிடும் நுணுக்கம் உண்டு. ஜயதேவரின் கீத கோவிந்தம்தான் வித்தை முழுவதும் கிழவர் பாடுவார். அவ்விடத்துக்குச் சம்பந்தமில்லாத ஆராதனைதான். கிழவருக்கு அது மட்டுமே தெரியும். நடுங்கினாலும் குரல் லாகிரி சாரீரமாக இருக்கும். ஒரு நிலைக்குமேல் ராதையாகவே மாறிவிடுவார். ஏக்கத்துடன் கிருஷ்ணனை இசையால் ஆலிங்கனம் செய்வார். காமத்தின் தவிப்பும் வித்தையின் கண் கட்டுத் தந்திரங்களும் ஒருவித மனோரஞ்சிதமான சூழலை அமைக்கும்.  

சாம்பாஜி பிறந்தபோது அவனை மிகப்பெரிய கணிதசாஸ்திர நிபுணன் ஆகவோ அல்லது வானசாஸ்திரத்தில் தீபிகை ஏற்றவோதான் பிள்ளை விரும்பினார். ஆனால் இரத்தத்தில் ஊறிய அவன் தாயார் வழிக் குலத்தொழில் இது மாபெரும் பேராசை உனக்கு எனப் பிடரியில் அடித்துவிட்டது. இத்தனைக்கும் அவள் அவனை எந்த வித்தைக்கும் அழைத்துப் போனதில்லை. தான் சௌராஷ்டிராவிலிருந்து வித்தைக்காக இங்கு வந்ததும் திருமணம் முடித்ததுடன் வித்தைகளை மூட்டை கட்டி வைத்ததென எதுவும் குழந்தைக்குத் தெரியாது. ஆனால் ஆணைவிட பெண்ணின் வீரியம்தான் ஜெயித்தது. வித்தை எப்படியோ வளர்ந்து உருத்திரண்டு அவனது எட்டாவது அகவையில் பாடசாலையில் சுண்ணக்கோலை எழுதாமல் செய்ததில் வெளிப்பட்டது. பையனின் சகவாசிகளுக்கு அபரிமிதமான ஆச்சர்யம். கேள்விப்பட்டதும் பிள்ளை தலையில் அடித்துக்கொண்டு சரிந்துவிட்டார். இனி தலைவிதியை அழித்தெழுதும் பிரயத்தனத்தையும் அன்றே கைகழுவினார்.

சாம்பாஜி தன் இருபதாவது வயதில் கண்கட்டுத் தந்திரங்களை சுயமாகவே கற்றுத் தேர்ந்தான். அப்படி அறுபத்தி மூன்று ஜாலங்கள் அவனுக்குக் கை வரும். கற்பூரத்தைத் தீயின்றி எரிய வைப்பது, நாணயத்தைச் சுண்டாமல் சுற்ற வைப்பது, தண்ணீரில் விளக்கைப் பொருத்துவது, குச்சிக்கு காந்த சக்தி அளிப்பது, ஏன் எதிரிலிருப்பவனின் பெயரையே ஒரு கணம் மறக்க வைக்கவும் அவனால் முடியும். மகனின் ஜாலங்களில் ஒரு ஆதாரச் சூட்சுமமாக விஞ்ஞானம் இருப்பதைக் கண்டு பிள்ளை சற்றுச் சமாதானமடைந்தார். கூடவே அவனுடைய திறமையில் இரண்டு திருத்தங்களைச் செய்தார். ஒன்று ஒவ்வொரு முறையும் வித்தை முடிகையில் அதில் சிலவற்றை வேடிக்கை பார்த்தவர்களுக்கு ரசிகதட்சணையாக விட்டு வருவது. இது பார்க்கிறவர்களுக்கு ஆர்வத்தை அளிப்பதோடில்லாமல் அவனுக்கும் புதியதை யோசிக்கும் புத்திக் கூர்மையை ஏற்படுத்தும். இரண்டாவது, ஊர் ஜமீன் அல்லது ஊர் முக்கியஸ்தர் இவர்களின் ஜாதகத்தைக் கணித்து நடக்கப் போவதை சூசகமாக அறிவிப்பது. அதாவது, வித்தையின் ஒரு ஜாலத்தில் அவர்களின் பிறந்த தேதியைக் கூறும் நிகழ்வில் தேதியைக் கேட்டுப் பெற்று அடுத்த வருகையில் பொட்டில் அடித்தாற்போல அவர்களுக்கு உரைப்பது. முதல் திருத்தம் சாம்பாஜியின் புத்தி செழிப்புக்கென்றால் இரண்டாவது திருத்தம் பிள்ளையின் காலசாஸ்த்ர பாண்டித்தியத்தியத்தைக் காட்டுவதற்கு. இந்த இரண்டும்தான் சாம்பாஜியின் வித்தைக்குழுவையும் பிள்ளையின் பெயரையும் சமஸ்தானம் பூராவும் பிரபலம் ஆக்கியது.

காட்டுபாவா பள்ளிவாசல் சதுக்கத்தில் திரண்ட ஜனச்சந்தடிக்கு நடுவே வித்தையை முடித்து இளஞ்சாவூர் ஜமீன் பங்களாவில் விருந்துண்ணும்போது ஊருக்குக் கிளம்பச் சொல்லி ஆள் அனுப்பியிருந்தார் மாவடிப்பிள்ளை. இன்னும் எட்டு ஊர்கள் பாக்கி, நான்கைந்து ஜமீன்கள் தனிப்பட்ட வகையில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஒரு மாதத்துக்கான காலத்திட்டம் வைத்திருந்தான். விசயம் அதைவிட அவசரம், சாம்பாஜிக்கு குமாஸ்தா மகளைப் பேசி முடித்தாயிற்று. வளர்பிறைக்குள் பெண் பார்த்துவிட வேண்டும். தன் வித்தைச் சகாக்கள் மூன்று பேருக்கும் தங்குவதற்கான இடமும்- ஜமீனின் தயவில்- நாலைந்து நாட்களுக்குச் செலவுக்குக் காசும் ஏற்பாடு செய்து, சாம்பாஜி மட்டும் தனியாக ஒரு வண்டி கட்டிக்கொண்டு ஊரை அடைவதற்குள் இருட்டிற்று.  

வண்டி கவிநாடு ஏரியைத் தாண்டும்போதே வீட்டில் விளக்கு எரிவது தெரிந்தது. நடுநிசியில் இப்படி விளக்குடன் பிள்ளை அமர்ந்திருப்பவரல்லர். புதுப்பழக்கம்தான். வேலிக்கதவைத் திறந்து சாம்பாஜி உள்ளே வந்தான். பிள்ளையுடன் புதிய ஆள் ஒருவரும் இருந்தார். அருகில் கடலை ஓடுகள். பேச்சுத் துணைக்கு அவித்துச் சாப்பிட்டுருக்க வேண்டும். சாம்பாஜி புதியவரை வெளிச்சத்தில் பார்த்தான். பிள்ளை அவனை அவரிடம் அறிமுகப்படுத்தினார். நல்ல தாட்டியான உருவம். பெரிய மீசை, பிரடியில் புரளும் கத்தரித்த பெரிய சிகை, குண்டு விழிகள். மையிட்டது போன்ற துருத்திய அழகு. பித்தளைப் பானையை மடியில் வைத்திருப்பது போன்ற தொப்பை. பிரிட்டிஷரசில் ஓய்வு பெற்ற குமாஸ்தாவாக இருக்கலாம் அல்லது மணப்பெண்ணின் தகப்பனாராகக்கூட, தரகர்களுக்கும் இந்த உருவம் உண்டு சடுதியில் ஓடிய இப்படி வேடிக்கையான எண்ணங்களை ஒதுக்கிவிட்டுப் புதியவருக்குப் பணிவுடன் வணக்கம் என்றான். புதியவர் சிரித்தார். பிரிட்டிஷ் இந்தியாவின் பருத்திக் கொள்முதல் வியாபாரி பெயர் வெள்ளக்குட்டி என்றார். அருகில் கிளி கீ கீ என்றது. அப்போதுதான் கவனித்தான், கொழுந்து இலைகளைக் குவித்ததுபோன்று துாய பச்சை. அவன் நெருங்கியதும் அவரது முதுகுக்குப் பின்னால் சென்றது. குளித்து ஈர உடையில் நாணும் பெண்ணைப் போன்று தளுக்கு அதனிடத்தில்.

சாம்பாஜி வணக்கம் வைத்துவிட்டு பிள்ளையிடம் திரும்பி ஏதோ கேட்பதற்குள் வெள்ளக்குட்டி அவனிடம், ”வித்தை தொழில் எல்லாம் நல்லபடியாக போகிறதா? கூட்டம் எப்படி? மற்றவர்கள் எங்கே?” என்றார். பிள்ளை அதற்கு “அதென்ன. சகல சௌகரியங்களுடன் எங்காவது தங்க வைத்திருப்பான். கெட்டிக்காரன்” என்று பதில் கூறியதுடன் சாம்பாஜியைப் பார்த்தார், மறுபடியும் அவன் பார்வை புதியவரை சட்டை செய்யவில்லையெனக் காட்டியது. பிள்ளைக்குக் கடும் கோபம். அவன் தோளைப் பிடித்துத் திண்ணைக்கோடிவரை ரகசியம் பேசுவதுபோல இழுத்து வந்து,. ”இதுதான் பெரிய மனுஷரிடம் காட்டும் மரியாதையா?” என்றார். “ஏன் ஏதும் முக்கியஸ்தரா?”.

பிள்ளை கீழ் ஸ்தாயில் “அடே, மனுஷன் மகா புத்திவான். உலக ஞானத்தைச் சுருட்டிக் காதில் செருகியிருக்கிறார். செருப்பு தேயாத இடமில்லை. நாக்கு பல பாஷைகள் அறியும். பருத்திக் கொள்முதல் வியாபாரமெல்லாம் பெயருக்குத்தான்போல. அரசக் குடும்பங்களுடன் தொடர்பு இருக்கிறது. விருந்துண்ணாத அரண்மணை கிடையாது என்கிறார். இன்ன இடத்தில் இது கிடைக்கும் இது சரியிருக்காது என சகலமும் இவரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். ஜெய்சல்மர் மன்னருக்கு காமாலை மருந்து இங்கிருந்து அனுப்பிப் பிழைக்கச் செய்ததில்  நல்ல நெருக்கம் ஏற்பட்டு கோட்டைக்குள் சொந்தமாக சிறிய பங்களாவையே கேட்டு வாங்கிவிட்டாராம். பிக்கானர் அரசி ஏதோவொரு பெயரைச் சொன்னாரே, அவளுக்கு வரப் போக இராமேஸ்வரத்தில் இடம் வாங்க மன்னர் சேதுபதியைப் பார்க்க வந்திருக்கிறார். அப்படியே கொச்சி சமஸ்தானத்துக்கு நடப்பு ஆண்டுக்கான பருத்திக் கொள்முதலுக்கு விஜயவாடாவையும் புதுக்கோட்டையையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்போல. அதுபற்றிப் பேச திவானைச் சந்திக்க வேண்டுமாம். பாவம் திவான் மதராஸ் போனது தெரியவில்லை. தர்பார் பங்களாவிலே தங்கலாம், ஆனால் வியாபார சூட்சுமம் அப்படி அரசர் இல்லாத பொழுதில் தங்குவது வணிகத்துக்கு பங்கம். மன்னரும் நாட்டில் இல்லை. என்ன செய்வது? திவான் வரும்வரை வியாபாரத்திற்கு வந்தது தெரியாமல் மறைந்திருக்க வேண்டுமாம். சரிதான் ஒப்பந்தங்கள் இப்படித்தான் நடக்கும்போல. தங்குவது நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பு. உன் அம்மாவுக்குத்தான் ஏக கோபம். உனக்கென்ன உள்ளேயா படுக்கப் போகிறார். திண்ணையில் படுக்கட்டுமென்று அடக்கிவிட்டேன். இதுபோன்ற ஆட்களின் பழக்கம் கிடைக்காது. அவளுக்கென்ன தெரியப் போகிறது. நீ பத்து ஊர் சுற்றுபவன் உனக்கு நல்ல அனுபவம் இது. நம்மைப்போல செல்வாக்கில் சற்றும் சளைக்காதவர்.

எனக்கு சமஸ்தானத்தில் இருப்பதுபோல அவருக்கு இந்தத் தேசம் பூராவும். ஆனால் சுத்தமான அறிவு. சகலமும் அறிந்தவருக்கு கால சாஸ்திரம் தெரியவில்லை. என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பேசினால் இரண்டே நாளில் கரைத்துக் குடித்துவிடுவார். கற்பூரம். இத்தனைக்கும் குண்டு மணியளவும் தலைக்கனம் இல்லை ஹாஸ்யமான ஆள். திண்ணையில்தான் உறங்கினார். பாவம் வெளியே பூச்சிக்கடி, மழைக்கு ஈசல் அலைகிறது. கூதல் வேறு. இரவு முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார் எனக்கும் பொழுது போய் விடுகிறது. பகலில்தான் உறங்குவார்போல. உலக வியாபாரிகள் இப்படித்தான் இருப்பார்கள். சரி நீ போய்ப் படு காலையில் குமாஸ்தா வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். பெண் அஷ்ட லட்சணம். ஆனால் பொந்துக்கிளி. உனக்குச் சரிப்படும்.” பிள்ளை வெள்ளக்குட்டி மேலிருந்து பார்வையை விலக்கவே இல்லையென்பது புதிய சில பாவனைகள் ஒட்டிக்கொண்டதிலிருந்து தெரிந்தது.

வெள்ளக்குட்டி கிளம்புவதாகச் சொன்ன விடியற்காலைக்கு முதல்நாள் இரவு, அதாவது அவர் வந்த நான்காவது நாள், ரங்கூன்தாசர், சன்னாசி, தீட்சன்யசாஸ்திரி, ராமசாமி ஐயர் போன்ற ஊர் முக்கிய பிரமுகர்கள் அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். பொதுவாக பிள்ளையின் கால சாஸ்த்ர விசாரத்திற்குத்தான் இப்படிக் கூடுவதுண்டு (ஆனால் இரவில் இல்லை), இப்போது வெள்ளக்குட்டி தன் பக்கம் விசிறிகளை இழுத்துவிட்டாரென சாம்பாஜி நினைத்தான். திண்ணை ஓரத்தில் போடப்பட்டிருந்த பிள்ளையின் சிறிய மர பெஞ்சும் நாற்காலியும்தான் இருவருக்கும் அளவளாவும் இடமாகவும் அவ்வப்போது சாப்பாட்டு மேசையாகவும் மாறியிருந்தது.

கொள்ளு அவித்து கீரைத்தண்டுடன் வதக்கி ஆறிய சாதத்தில் புரட்டி, கொத்தமல்லி துாவிய மிளகாய்த் துவையல் தொட்டு எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின் சாம்பாஜி சாப்பிட அமர்ந்தான். காரமும் கசப்பும் கலந்த மணம். தங்கிய இரண்டு நாட்களும் வெள்ளக்குட்டிதான் சாப்பிடும் உணவை முடிவு செய்தார். அதாவது சில குறிப்புகளைச் கூறுவார், அதன்படி சாம்பாஜி செய்து கொண்டு வருவான். பிள்ளை உள்ளே எட்டி மனைவி சாப்பிட்டாளா என்று பார்த்துக்கொண்டார். வெள்ளக்குட்டி “நாளை கிளம்பும் முன் முதல் முறையாக உன் பாரியாளைப் பார்த்துச் சொல்லிவிட்டுத்தான் போவேன்” என்றார் புன்னகையுடன். சாம்பாஜிக்கு ருசி கண்ட நாவை இனி எப்படி சமாளிப்பதென்கிற கவலை. டக்ளஸ் ஹெய்க் பிரபு வைஸிராயாக நியமிக்கப் போவதாகப் பேச்சு அடிபடுவது பற்றி வெள்ளக்குட்டி பீடிகை போட்டார். யாரும் சிரத்தையுடன் கேட்பதாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களாக அவனும் பார்த்தவரையில் வெள்ளக்குட்டியின் புருவத்தை உயர்த்தி மோவாயைத் தேய்க்கும்படி யாராலும் முடியவில்லை. பிள்ளை பலதும் கூறிப் பார்த்தார் எல்லாமே அவர் கேட்டுப் புளித்தவையாக இருந்தன.

சில கணங்கள் கழித்து சாஸ்திரி, “வங்காளம் முழுக்க காலரா என்கிறார்களே உண்மையா” என ஆரம்பித்தார்.

“வங்காளம் என்ன மெட்ராஸ் மாகாணத்திற்கே வந்துவிட்டதே” வெள்ளக்குட்டி பலமாகக் கூறினார்.

“என்ன செய்வார்கள்?”

“சீதளம் போகிறவர்களை விட்டால் பரப்பி விடுவார்கள். பேதி நிற்கும்வரை தனியறையில் அடைத்து வைக்கிறார்கள்”

“எல்லோருக்கும் அத்தனை அறைகள் இருக்கின்றதா?” ரங்கூன் தாசர் கேட்டார்.

“உண்டு. பெரிய வராந்தா.” வெள்ளக்குட்டி கைகளை விரித்து அளவு சொல்வதற்காக பிள்ளையின் வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தார். “உங்களுடைய மன்னரின் குதிரைக் கொட்டாரத்தைப் பார்த்திருக்கிறீர்களா அதுபோல. ஆனால் ஓலைத்தட்டி வைத்துத் தடுத்திருப்பார்கள். ஓராள் படுக்கும் அளவு. வாசலில் உப்புக்கரைசல் பானை வைத்து கருப்பட்டி போட்டிருப்பார்கள் அதுதான் ஆகாரம். மூலையில் சின்ன பிறைவடிவில் மலக்குழி, அதற்கு வெளியே சிறிய துவாரம். அது நீண்டு சிறிய வாய்க் காலோடு சேர்கிறது. மலவாய்க்கால் அப்பால் ஒரு பெரிய கிணறில் போய் முடியும். பேதிக்கிணறு”
சாஸ்த்திரி வேட்டியால் மூக்கைச் சிந்தி ச்சீ என்று துடைத்தார். ராமசாமி ஐயர் தயக்கமாக “அங்கு என்ன செய்வார்கள்?” என்று மெல்ல விசாரித்தார். வெள்ளக்குட்டி உடல் குலுங்கச் சிரித்துக்கொண்டே “எனக்கென்ன தெரியும். காலராவில் செத்தவர்களிடம் கேட்க வேண்டும்” என்றார். “வேண்டாதவர்களைப் பிடித்துத் தள்ளுவார்களாக்கும்” தாசர் சரிதானே என்பது போல சிரித்தபடியே மாவடிப்பிள்ளை பக்கம் திரும்பினார். பிள்ளை சுவாரஸ்யமின்றி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். சம்பாஷணையைக் கவனிக்கவில்லையென்தை முகம் காட்டியது.

“தட்டியில் இருப்பவர்களுக்கு மருந்து உண்டா?” ஐயர் மறுபடியும் தயங்கினார். “உமக்கு வேண்டியவர் யாருக்கும் காலராவா?” வெள்ளக்குட்டி கேட்டார். ஐயர் பலமாக மறுத்தார். “மருந்துக்கு எங்கு போவது. வேண்டப்பட்டவர்களுக்கு உண்டு. உனக்கும் எனக்கும் கொடுத்து என்ன ஆகப்போகிறது?” சாஸ்த்திரி சரிதானே என்பதுபோல வெள்ளக்குட்டியைப் பார்த்தார்.

“பிறகு?”

“பிறகென்ன செத்ததும் தொரட்டி வைத்து வெளியே இழுத்து கலப்பையில் கட்டிக்கொண்டு போய்ப் பெரிய குழியில் புதைத்து விடுவார்கள்”

சாஸ்த்திரி திடுக்கிட்டு, “பெரிதாக இருக்குமில்லையா?”

“ஆமாம் சீதள உலகம்” வெள்ளக்குட்டி தீவிரமான முகத்துக்கு மாறினார். “அதாவது ஊருக்குள் நுழையும் குடியானவர்களுக்கு நீராகாரம் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். திடமானவர்களுக்கு ஒன்றும் செய்யாது. வியாதியஸ்தர்களென்றால் குடித்த சில நிமிடத்தில் பேதி நிச்சயம். இந்த விசயத்தில் சர்க்கார் மருத்துவர்களைக்கூட பிரிட்டிஷ் சிப்பாய்கள் நம்புவதில்லை. சீதளம் போனவர்களை அள்ளிக்கொண்டு போக மாட்டுவண்டி தயார். பொட்டல் மருத்துவமனையா, தனிச்சிறையா எனப் போகும்போதுதான் தெரியும். இதைக் கண்டதும் மற்றவர்களுக்கும் வயிறு புரட்டிவிடும்”

“நாளையே திவானைப் பார்த்து விடுவீர்களா?” பிள்ளை சம்பந்தமில்லாமல் கேட்டார். சட்டென அப்படிக் கேட்டதை மற்றவர்கள் கவனிக்கவில்லை. ”சந்தர்ப்பம் கிடைத்தால் சீமையிலிருக்கும் தொண்டைமான் மன்னரைப் பற்றி அவர் என்ன நினைக்கிறாரென்று கேட்டு பாருங்கள்” என்றார்.

“மன்னர் ராஜ பைரவ தொண்டைமான் ஆஸ்த்திரேலியாவில் திருமணம் செய்து குடித்தனமாகி ஏழு வருடங்கள் இருக்கும்.  ராஜ குடும்பத்திற்கு இதில் உடன்பாடு இல்லை. இப்போது திவானாக இருப்பது அவரது சகோதரர். தர்பாரின் முக்கிய விசேஷக் காரியங்களில் திவானும் ராணியுமே முடிவெடுத்து விடுவார்கள் பின்னர் மன்னரிடம் ஒப்புக்கு அனுப்பி வைப்பதுடன் சரி. மன்னரும் கடலுக்கப்பால் இருந்துகொண்டு எவ்வளவு நாள் ஆட்சி நடத்த முடியும்.  ஆனால் ஒவ்வொரு தசராவின்போதும் தொண்டைமான் திரும்பி வருவதாகவும் ராஜ்யத்தை மறுபடியும் ஏற்றுக்கொள்வதாகவும் ஊருக்குள் பேச்சு அலையும். நாங்களும் பிள்ளையிடம் கேட்போம், கட்டத்தைப் பார்த்து அவரும் ஆமோதிப்பார். ஆனால் மன்னர் வருவதுபோலில்லை. புலி வருவதாக இன்றைக்கு நாளைக்கு என எதிர்பார்த்துச் சலித்து விட்டது. சரி அப்படியே வந்தாலும் அரச பதவி உண்டா இல்லையா என்கிற விவாதம் ஒருபுறம். பறங்கிப்பெண்ணுக்குப் பிறந்த மகனிடம் எப்படி ராஜ்யத்தை அளிப்பது?” சாஸ்த்திரி மேற்கொண்டு தொடர்வதற்குள் வெள்ளக்குட்டி குறுக்கிட்டார்,

“நாட்டை பறங்கியர்கள் ஆளும்போது சீமையில் பறங்கிப் பெண்ணை மணந்தவருக்கு சமஸ்தானத்தை ஆளக் கொடுப்பதில் என்ன சிக்கல்?” உதட்டைச் சுழித்து பதில் என்ன என்பதுபோல தலை அண்ணாந்தார். மாவடிப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“இது ஒரு சாதாரண விசயம். மணிப்பூர் சமஸ்தானத்தில் அரசரின் வாரிசு ஒருவர் வெள்ளைக்காரியைத் திருமணம் செய்திருக்கிறார். பிக்கானர் மன்னருக்கும் வைஸிராயின் மனைவிக்கும் அந்தரங்கக் காதல் இருப்பதாகப் பேச்சு உண்டு. மெட்றாஸ் சாலிஸ்பரிக்குத் தெரிந்தே அவருடைய மனைவியை நவாப்பின் கடைசி வாரிசு காதலிப்பதாகச் சொல்கிறார்கள். காதல் கடிதங்களை சாலிஸ்பரியே பிரித்து வாசித்திருக்கிறாராம். ஷேக்ஸ்பியரின் நாடகம்போல அதற்கு பலவித அர்த்தங்கள் இருந்திருக்கின்றன. விசாரித்ததில் நவாபு மகனுக்கு ஆங்கிலமே தெரியாதாம், ஒருவேளை சாலிஸ்பரியின் மனைவி கற்றுக் கொடுத்திருக்கலாம் என்கிற முடிவுக்கு வர வேண்டியிருந்தது. இது எப்போது நடந்திருக்கும்? அதுவும் கடிதம் வாயிலாக! எப்படிப் பார்த்தாலும் ஆங்கிலத்தில் காவியப் புலமை வர அதை கண்ணை மூடி பாராயாணம் செய்திருக்க வேண்டும் இல்லையா?”

“இரண்டு வருடம் தேவைப்பட்டிருக்குமா?” சாம்பாஜி தயக்கத்துடன் கேட்டான்

“சீ வாயை மூடு. அதென்ன அவ்வளவு சுலபமா.” பிள்ளை சாம்பாஜியை முறைத்தார். ”ஐந்து வருடம் ஆகலாமில்லையா?” என்றார் சந்தேகமாக.

வெள்ளக்குட்டி வேட்டியை அவிழ்த்துக் கட்டியபடி ”பன்னிரெண்டு வருடங்கள் கடிதத் தொடர்பு இருந்திருக்கிறது.” சாம்பாஜி அசந்து போனான். “ஆமாம் சிரமசாத்யம்தான். ராணி ஏற்காட்டுக்கு ஓய்வுக்குப் போகும்போது நவாபு மகனுக்கு எட்டு வயது. ஆனால் தோள்வரை நிற்கும் குதிரைக்குட்டி உயரம். நவாபு ஆசைப்பட்டாரெனக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து பத்து வருடங்கள் நீண்டிருக்கிறது கடிதத்தில். சாலிஸ்பரியும் கண்டுகொள்ளவில்லை. மேற்றிராணிக்கு அவர்மேல் துளியும் விருப்பம் கிடையாது. உயர்ரக ஒப்பந்த வாழ்க்கை. சிறுபையன் மீது சந்தேகம் வரவில்லை. நவாபு மகன் வளர்ந்து விட்டான் கல்யாணம் செய்து கொள்ள ஒற்றைக்காலில் நிற்கிறான். என்ன செய்வது? இருவரையும் பிரிக்க வழியின்றி நவாபும் சாலிஸ்பரியும் ரகசிய ஒப்பந்தத்தின் பேரில் கடைசி காலம் வரைக்கும் காதலித்துக் கொள்ளட்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டனர். கிட்டத்தட்ட இந்த சமஸ்தானத்தின் பிரச்சனையும் இதுபோலத்தான்” வெள்ளக்குட்டி எழுந்து இன்னொரு பக்கம் சரிந்து படுத்தார்.

“ஆனால் இது எப்படி இங்கு பொருந்தும்?

“பொருந்தும். அதாவது இரண்டுக்கும் பொருத்தமானது ஒன்றுதான். வெள்ளைக்காரனின் மொழி. நாக்கில் மயிற்பீலியால் தேனைத் தடவும் பாஷை. பற்களில் படாமல் அன்னத்தைத் தொடாமல் நாவுக்கு வலி கொடுக்காமல் பேசும் இலகு”.

“பாஷையைக் கற்றுக்கொண்டதுதான் பிரச்சனையா?’’

“பாஷையைக் கற்பதில் என்ன இருக்கிறது பிள்ளை. அதொன்றும் குற்றமில்லையே. அறிவுதானே. மூளையின் முதுகைச் சொறிந்து விடுவது போலத்தான். போகட்டும். நான் கேட்க வருவது பாஷையைக் கற்றுத் தருவதற்கான காரணம் எங்கு உள்ளது என்று. அதை இவர்கள் விரும்பித்தான் கற்றார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உலகத்தில் எல்லா தர்க்கத்திற்கும் பின்னால் ஒரு சூழ்ச்சி உண்டு. துரதிர்ஷ்டவசமாக எல்லா மன்னர்களின் வாழ்க்கையும் எப்போதுமே யதார்த்தத்திற்கு அப்பால் இருக்கிறது. எனக்கு இதில் நிறைய ஐயம் உண்டு. எப்படி யதார்த்தம் அங்கு மட்டும் மாயத்தன்மைக் கொண்டிருக்கிறது. அவர்களும் நம்மைப்போல உறங்கி உண்டு உறவாடுகிறார்கள். திருமணம் முடித்துக் குழந்தை பெற்று மூப்படைந்து மாண்டு போகிறார்கள். மாய மந்திரங்களும் சூழ்ச்சியும் அவர்களின் விசுவாசத்திலிருந்து வெளியேற முடியாமல் பிணைந்துவிட்டது. அது யதார்த்தத்தின்மீது கட்டப்படுகிறது. பிறகு தோற்றத்தில் மாயத்தன்மையை அளிக்கிறது. அவர்களால் அதிலிருந்து விடுபட முடியாது. மாயத்தன்மையான வாழ்க்கைதான் ராஜ குடும்பத்திற்கு அழகென நினைக்கிறேன். முடிவில் இயல்பாகவே சாபமும் சூழ்ச்சியும் ஆசையும் அல்லாத ஒரு வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் பெரும் சுயநலத்தால் உருவானதுதான் ராஜ வாழ்க்கை.

ஒவ்வொரு செயலும் யாருக்காவது சாதகமானதாக இருக்க வேண்டும். அவர்கள் அதில் ஆதாயம் அடையாமல் அது அங்கு நிகழாது. அதைத்தான் முன்னமே கூறினேன் எந்தவொன்றும் காரண காரியமின்றி அங்கு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று. காரணமில்லாமல் காரியம் நடக்காது. நவாபு மகன் கடைசி வரை அரியணையை ஏற்கவில்லை. அவனுக்கு அதில் விரும்பமில்லையென்பது காரணமாகச் சொல்லப்பட்டு சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. விருப்பமின்மைக்குப் பின்னாலுள்ள காரணத்திற்கும் அது நிகழ்ந்த காரியத்திற்கும் சம்பந்தம் உண்டு. அதாவது நவாபிற்கு இரண்டு தாரம். மூத்தவளுக்குப் பெண் பிள்ளைகள், இளையவளுக்கு இரண்டும் ஆண். வாரிசு அவர்களில் ஒருவர்தான் வர வேண்டும். நவாபின் பரம்பரைச்சாபக் கணக்கின்படி  இரண்டு ஆண் மகன்களிலிருந்தால் ராஜ்யம் நிலைக்காது. மன்னராகும் ஒருவனை மற்றொரு சகோதரனே எதிர்க்கத் துணிவான். ஆக, ஒருவனுக்கு ராஜயத்தின்மேல் வெறுப்பை உருவாக்க வேண்டும் அதற்கு அவன் விரும்பாத ஒன்றை விரும்ப வைப்பது. கனவைக் கலைப்பதற்கு அதைவிட மிகைக் கற்பனையை உருவாக்குவது. அப்படித்தான் ராஜ்ய ஆசையை அழிப்பதற்கு அவர்களுக்கு அந்நிய பாஷை தேவைப்பட்டது. அது வெறும் மொழி அல்ல இன்னொரு பண்பாட்டின் திறவுகோல்.

ரங்கூன்தாசர் மலைத்து விட்டார். ”அடேயப்பா என்னவொரு சூழ்ச்சி” என்று சாம்பாஜியைப் பார்த்தார் அவன் பாதி உறக்கத்திலிருந்தான், ஆனால் எதற்கோ தலையாட்டினான்.

“இங்கு நடந்ததும் சூழ்ச்சி என்கிறீர்களா?” மாவடி கொலையைக் கண்டதுபோல ஆகிவிட்டிருந்தார். முகம் வியர்த்திருந்தது. வெள்ளக்குட்டி தொடர்வதற்குள் சாம்பாஜியை உலுப்பிக் குடிக்கத் தண்ணீர் இல்லை என்றார். உடனே தாசர் சொன்னார் ”ஆனால் கதை இங்குள்ளது போலவே இருக்கிறது”

”நான் வெறும் ஊகமாகக் கூறவில்லை பிள்ளை. எல்லாவற்றிற்கும் தர்க்கம் நியாயம் உண்டு. ஒன்றை மட்டும் நீங்கள் நம்பியே ஆக வேண்டும். அரச வாழ்க்கையில் யதார்த்த நிகழ்வு என்பதே கிடையாது. யதார்த்தமாக நிகழும் அத்தனைக்குப் பின்னாலும் ஏதோவொரு காரணம் இருக்கும். அது பல பேர்களின் காரியத்திற்காக இருக்கலாம் அல்லது ஓராளுக்காகவும் இருக்கலாம்.” பனியில் உறைந்துவிட்டதுபோல எல்லோரும் அமர்ந்திருந்தனர். வெள்ளக்குட்டியின் பார்வை ஒருமுறை அத்தனை விழிகளையும் தொட்டு மீண்டது. ”புரியும்படி சொல்கிறேன். இதற்கு முன்பிருந்த உங்கள் மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மகன் சிறுவயதிலேயே இறந்து போனது தெரிந்திருக்கும் உங்களுக்கு. அவர்தான் அடுத்த மன்னரின் வாரிசு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டான். மன்னர் தன் தமையன் மகனைத் தத்தெடுப்பதாகத்தான் திட்டம் இருந்தது. அதற்குள் மகள்வழிப் பேரனை அதாவது பகதுார் பிறப்பதற்குமுன்பே, கரு சிருஷ்டியாவதற்கு முன் அப்படியொரு திட்டத்தை யோசித்திருக்கிறார்கள். மகளுக்குத் திருமணமும் அவசரமாக நடத்தி நினைத்தபடி பேரன் பிறந்து பட்டத்தை ஏற்றுவிடுகிறான். பிரச்சனை இங்கிருந்துதான் துவங்குகிறது. சட்டப்படி இது சரிதான். ஆனால் ஒரு தலைமுறையையே அவர்கள் ஒதுக்கி விடுகிறார்கள். தாத்தாவிடமிருந்து பேரனுக்கு மகனின் காலத்தைத் தாண்டிச் சென்று விடுகிறது”

தாசர் இடைமறித்து ”மகன் இல்லாதபோது வேறென்ன செய்வார்கள்?” எனக் கேட்டார்.

”வாஸ்தவம்தான். ஆனால் அரசருக்கு, பேரனை நோக்கிக் கை காட்டுவதற்கு முன் பிறிதொரு வாய்ப்பும் இருந்தது. அந்த யோசனையின் பக்கமே செவி சாய்க்கவில்லை. அந்த நிகழ்வுதான் பின்னாளில் சூழ்ச்சியாக மாறுகிறது”

எல்லோருமே மௌனியாகிவிட்டதுபோல சில கணங்கள் அப்படியே அமர்ந்திருந்தனர். சாஸ்த்திரி தலையை வெளியே நீட்டி நிலவைப் பார்த்து மணி மூன்று இருக்கும் என்றார். வெள்ளக்குட்டியும் அதன்பிறகு ஏதும் பேசவில்லை, அனைவரும் வீட்டிற்குப்போய் யோசித்துப் பாருங்கள் காலையில் நான் கூறியது சரிதானெனப் புரியும் என்று முடித்தார். ஆனால் அவர் முகத்தில் துளி உறக்கமில்லை. அப்போதுதான் பேசத் தயாரானதுபோல அமர்ந்திருந்தார். சிட்டுவிடம் விசிலடித்து விளையாடினார். அது மூக்கைக் தரையில் தேய்த்துத்தேய்த்துச் செய்த சேஷ்டைகள், வெட்கத்தில் காலால் கோலம் போடுவது போலிருந்தது.

மாவடிப் பிள்ளைக்கு அன்றைக்கு முழுக்க உறக்கம் வரவில்லை பாரியாளிடம் புலம்பிக்கொண்டேயிருந்தது சாம்பாஜி காதில் விழுந்தது. காலையில் பேசிக்கொள்ளலாம் படுங்கள் என்றான். சிட்டு வெள்ளக்குட்டியுடன் விசிலடித்து விளையாடிக்கொண்டிருந்தது. இடையில் சிறுநீர் கழிக்க எழுந்தபோது பிள்ளையும் வெள்ளக்குட்டியும் பேசுவதைக் கவனித்தான். அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை. நாடகம் முடிந்து உறங்குகையில் பிரக்ஞை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் காட்சிகளுடனும் கதைகளுடனும் தொங்கும் உறக்கம்போல அந்த இரவு இருந்தது. அப்படிப் பல முறை அவனே அக்கதைகளை மறுபடியும் ஓட்டிப் பார்க்கும்போது நாடகத்தைவிடச் சிறப்பான, விறுவிறுப்பான, தர்க்கம் குறையாத சம்பவங்கள் கற்பனையில் நிகழ்வதுண்டு. கதாபாத்திரம் பேசியிருக்க வேண்டிய பல நல்ல வசனங்கள் உதித்து மறுநாள் காலையில் அவை மறந்து விட்டதற்காக அலுத்துக் கொள்வான். இது ஒவ்வொரு நாடக இரவுகளிலும் நடக்கும் வாடிக்கை. இப்படித்தான் அன்றைய இரவும் அவை நினைவிலிருந்து வழுக்கிற்று.

எப்படியென்றால் வெள்ளக்குட்டியின் கூற்றுப்படி மன்னரை அரியணையிலிருந்து அகற்றும் சூழ்ச்சியாகவே இருந்தாலும் அதில் யார் யாருக்கெல்லாம் லாபம் இருக்க வேண்டும்? ஒன்று, பகதுாரை வெளியேற்றி அவரது சகோதரன் அரசராக வந்திருக்க வேண்டும் ஆனால் அவர் திவானாகத்தானே இருக்கிறார். அல்லது பிரிட்டிஷ் வசம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் அதுவுமில்லை. இந்த இரண்டும் நடக்கவில்லையென்றால் வெறுமனே எதற்கு நீங்கள் சொல்வதுபோல கலாச்சாரத்தைப் புகுத்தி நாட்டைவிட்டு விரட்டுவதில் யாருக்கு சாதகம்? மாவடிப்பிள்ளை கூச்சலிடுகிறார். “இது அவ்வாறு நடந்திருக்காது”.

அதற்கு வெள்ளக்குட்டி வேறொரு பதிலைச் சொல்கிறார் ”பிரிட்டிஷின் தந்திரம் என்ன தெரியுமா,? இந்திய சமஸ்தானம் முழுக்க ஐரோப்பியக் குழந்தைகளைக் கருவுறச் செய்வது. அவை வளர்ந்ததும் ஐரோப்பா எங்கு என்றுதான் கேட்கும். அல்லது தன் பறங்கித் தாயைத் தேடி சீமைக்குப் புறப்படும் அங்கு நிச்சயம் அப்படியொருத்தி கிடைக்க மாட்டாள் இருந்தும் அழகான பறங்கியொருத்தியை மணந்து அவ்வெண்ணத்தை அடைந்து விடும்.”

“ஐயோ! இது அபத்தம் நான் கேட்பதென்ன நீங்கள் கூறுவதென்ன. பிள்ளை வாயைப் பொத்திக்கொண்டார். அருகில் குழந்தையுடன் பாரியாள் நிற்கிறாள். “அவ்வாறென்றால் இந்தியா பூராவும் அப்படி மன்னர்களைக் கலாச்சாரத் திரிபைப் புகட்டி விரட்டிவிட்டார்களா? இல்லையே இந்த சமஸ்தானத்தைப் பொறுத்தவரை இது எதிர்பாராத சம்பவம்தான். இதில் யாரும் யாருக்கும் இரண்டகம் செய்யும் எண்ணமுமில்லை. என்னுடைய கேள்வி இதுதான் இந்த சூழ்ச்சியை யார் செய்திருந்தாலும் காலம் அதை நிச்சயம் காட்டி கொடுத்திருக்கும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையே” வெள்ளக்குட்டி எந்த பதிலும் கூறவில்லை. அமைதியாக இருக்கிறார். சட்டென குழந்தை சாம்பாஜி அழுகிறான். அம்மா அவனுக்குப் பாலுாட்டுகிறாள். சேலைத் தலைப்பை விலக்கி மார்பைப் சப்பியபடி அரண்மனைக் கூடத்தில் சமைந்துபோய் நிற்கும் அத்தனை பேரையும் கவனிக்கிறான். அடுத்த கணம் திடுமென அவன் வளர்ந்துவிட்டான். சேலைக்குள்ளிருந்து வெளியே வருகிறான். அப்பாவைத் தேற்றுகிறான்.

சாம்பாஜி திடுக்கென விழித்தெழுந்தான். நல்ல இருள், வெளியே தவளை இரைச்சல், மாட்டு வண்டி ஓடும் சப்தம், காற்றில் அணைந்துவிட்ட அரிக்கன் மற்றும் வெள்ளக்குட்டியின் குறட்டை திண்ணையில். சொப்பனம் போலவே இல்லை பால்ய பருவத்தில் நடந்தவற்றின் ஞாபகம். ஒரே சாட்சி நானே. அப்பா சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார். வெள்ளக்குட்டியால் பதில்கூற முடியவில்லை? காலையில் நானே இதைக் கேள்வியாக கேட்டுவிடப் போகிறேன் சாம்பாஜி புரண்டு படுத்துக்கொண்டான். அதன்பிறகு தொடங்கிய துாக்கம் காலையில் கடுக்காப்பியின் வாசனையில் கலைந்தது. சோமப்பன் கடையிலிருந்து ராங்கியர் வாங்கி வந்திருக்கிறார் அவரது குரல் கேட்டது. இருவரும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளக்குட்டி வந்ததிலிருந்தே ஊரில் பலதும் அவர் சொல்வதுபோலவே நடப்பதாக ராங்கியர் முணுமுணுக்கிறார். அவனது செவியருகே விழுகிறது. சாம்பாஜி புரண்டான். இன்னும் நிறைய குரல்கள் கேட்டன. வெள்ளக்குட்டியைப் பார்ப்பதற்கென்றே விடிந்தும் விடியாமலும் சனம் வந்துவிடுகிறது என்று முணுமுணுத்தவாறே போர்வை நீக்கிக் கண்விழிக்கையில் ராங்கியர்தான் தெரிந்தார். ”உன் அப்பன் கடுதாசி எழுதியிருக்கிறான். எழுந்து படி.” சாம்பாஜி புரியாமல் ராங்கியரைப் படுத்தவாறே வெறித்தான். அவர் முகம் கலங்கியிருக்கிறது. சொம்பிலிருந்த நீரை அள்ளி முகம் கழுவி வாய் கொப்பளித்து அமர்ந்தான். திண்ணையில் பதினைந்து பேர் இருக்கலாம். அப்பாவைப் புழக்கடைக்குள் எட்டி அழைத்தான். “சாம்பாஜி .இதைப்படி” என்றார் ராங்கியர் தோளைத் தொட்டு.

”நானே சொல்லி விடுகிறேன்” வெள்ளக்குட்டி அதக்கிய வெற்றிலையை ஓரடி நகர்ந்து அப்பால் துப்பிவிட்டு காகிதத்தை வாசித்தார். சுருக்கமாக, ராஜ துரோகக் குற்றத்திற்கு ஆளாக நேரிட்டதையும் தான் தெரிந்தே அப்படியொரு தவறைச் செய்யவில்லையென்றும் தர்பாரில் இதற்கு மிகப் பெரிய தண்டனை நிச்சயம் கிட்டும் அதைத் தாங்கும் வலிமை தனக்கு இல்லை ஆகவே உலகின் கண் முன்னிருந்து தொலைந்து போகிறேனென பிள்ளை மிக உருக்கமாக ஒரு பத்தியில் எழுதியிருந்தார். தெய்வங்களைத் தொழுது இறைஞ்சி முதல் பத்து வரிகள், மன்னிப்பு, பாவம், குற்றம் எனக் கடைசிப் பத்தி. “எழுதச் சொற்கள் கிடைக்காமல் தடுமாறியிருக்க வேண்டும்” வெள்ளக்குட்டி பரிகசித்தார். சாம்பாஜி, வெள்ளக்குட்டி துப்பிய வெற்றிலை உருண்டையை ஈக்கள் மொய்ப்பதை வெறித்தவாறே கடிதத்தைக் காதில் கேட்டு முடித்தான்.
***
மாவடிப்பிள்ளையின் வெளியேற்றம் ஊருக்குள் புற்றீசலாகக் கதைகளைக் கிளம்பிவிட்டது. மாவடியின் அற்புதங்கள், பழக்க வழக்கங்கள், கணிப்புகள், தொண்டைமான் குடும்பத்தின் உடனான நெருக்கம், வளர்ந்தவிதம், திருமணத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் என தினம் அவரது கதை பேசப்பட்டது. ஆனால் சாம்பாஜி ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மௌனியாகிவிட்டான். தகப்பனார் தொலைந்ததைவிட அவரைக் காப்பாற்ற அவனிடமிருந்த ஒரே பதிலும் காலையில் கண்விழித்தக கணத்தில் முதல் நாள் சொப்பனத்துடனே சென்றுவிட்டதுதான் அவனைத் துக்கமாக்கிற்று. இரண்டு நாட்களாகத் துழாவியும் ஒரு சொல்கூட பிடிக்குக் கிடைக்காமல் வெறும் காட்சிகள் மட்டுமே மறுபடியும் மறுபடியும் தோன்றுகின்றன. வெள்ளக்குட்டி அவனைச் சமாதானப்படுத்தினார். இனி நீதான உன் அம்மாவிற்குத் துணை. அவளை நன்றாகப் பார்த்துக்கொள். இன்றைக்கு இரவு நான் கிளம்பி விடுவேன். பிள்ளை கண்ணில் பட்டால் நிச்சயம் அழைத்து வருகிறேன் என்றார். அவன் சிறிது ஆசுவாமானான். சிட்டுக்குக் கற்பூரவள்ளி வேண்டுமே வாங்கி வர முடியுமா? சாம்பாஜி அவரைப் பார்த்தான். “இரண்டு நாளாகப் பழம் சாப்பிடவே இல்லை” என்றார்.

பழம் வாங்கி வருவதற்குள் திண்ணையில் கூட்டம் கூடிற்று. வெள்ளக்குட்டி அவர்களிடம் மாவடிக்கும் அவருக்கும் குறிப்பிட்ட நாளன்று நடந்த கடைசி சம்பாஷனையை விளக்கிக்கொண்டிருந்தார். அதில், மாவடிப்பிள்ளை தன்னிடம் மன்னர் பகதுாரின் திருமண ஆசையும் அது விழுந்த திசை அமைப்பையும் தானே முதலில் கண்டுபிடித்ததாகவும் ஆனால் அது அவ்வளவு சாதாரணமாக வேறெந்த கால சாஸ்த்திரரும் கணித்துவிட முடியாதென்று பிள்ளை கூறியதை வெள்ளக்குட்டி நினைவுகூர்ந்தார். முதலில் எனக்குப் புரியவில்லை. அரச குடும்பங்களிலும் நடக்கப் போவதை ஜாதகத்திலிருந்து கேட்டு வைத்துக் கொள்வது உண்டு. அதன்படி மன்னர் குடும்பமும் எச்சரிக்கையாகத்தானே இருந்திருப்பார்கள் என்றதற்கு, பிள்ளை சொன்னது…

அவர்களுக்குத் தெரிந்தது, மன்னருக்குத் திருமணத்திசை திரும்பினால் அது வெள்ளைக்காரப் பெண்மீதுதான் ஏற்படும் என்பது மட்டும். அதுபோக அவருக்கும் பிரிட்டிஷரசின் மேல் சற்று வெறுப்பு மூண்டிருந்த சமயம். இரண்டாவது, லக்னத்தில் திருமண ஆசை வருவதற்கான காரியமும் இல்லாததால் மன்னர் குடும்பம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அங்குதான் சூட்சுமம் உள்ளது. லக்னமும் திசையும் ரேகைப்படி ஓடும் கிரகணத்தில்தான் அவ்வாறான ஆசை ஏற்படாதேவொழிய ரேகையும் திசையும் மாறினால் கர்மம் தானாக நிகழும். சந்திரன் ஒன்பதிலிருப்பதால் வெளிநாட்டுப் பயணம் ஆசை உண்டு தடுக்க முடியாது… பகதுாருக்கு சிந்தனையில் மெல்ல அசைவு ஏற்பட்டது. அதாவது கணிக்கும் காலம், திசை, ரேகை எல்லாம் இடம், நேரம், காலம் மாறினால் அங்கு என்ன நட்சத்திரத்தின் பார்வை விழுகிறதோ அதன் சிருஷ்டியைதான் பெறும். சுருக்கமாகச் சொல்வதென்றால் காலம் ஒரே சமயத்தில் ஒவ்வொரு தேசத்திலும் முன்னும் பின்னுமாக இருக்கிறது இல்லையா. இங்குள்ள நேரத்தை வைத்து பூமிக்கு முதுகுப்புறத்தின் நேரத்தைக் கணிக்கிறோமே அப்படி. பிரபஞ்சம் பூராவும் கிரகத்தின் விசை உண்டு. நம்முடைய நகர்வை அவை உற்று கவனிக்கும். அதனதற்கான பாதைக்குள் நுழைகையில் அவற்றின் முழு வினையையும் அனுபவிக்க வேண்டும். நான் பகதுாரின் நட்சத்திரத்திற்குரிய திசையின் பலம் பலகீனங்களைக் கணக்கிட்டேன். அதாவது எல்லோரும் கட்டத்திற்குள் பிரபஞ்சத்தின் திசையை வைப்பார்களென்றால் நான் கட்டத்திலிருந்து அவனை வெளியே எடுத்து பிரபஞ்சத்தின் கட்டத்திற்குள் உருட்டிப் பார்ப்பேன். ஏனெனில் நாட்டை ஆளும் அரசனுக்கு பூலோகத்தின் ஜாதகம்தான் அவசியம்”.

“ஆக மன்னரின் திருமணம் சீமையில் நிகழும் எனப் பிள்ளைக்குத் தெரியும். அவர் மறுபடியும் கடல் பயணத்தைத் தொடங்குவாரென்பதை அறிந்திருந்தார் இல்லையா?” வெள்ளக்குட்டியின் கேள்விக்குக் கூடியிருந்தவர்கள் ஆமோதித்தனர். “அன்றைக்கிரவே அதை நான் உறுதிப்படுத்திவிட்டேன். ஆனால் குறுக்கிட்டுக் கேட்கவில்லை ஒருவேளை பிள்ளை அதை மறுக்கக்கூடும். எனவே கதையை முழுமையாகக் கூற வைத்தேன்.”

ரங்கூன் தாசர் கேட்டார் ”ஐயா, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பிள்ளை மன்னரின் ஜாதகத்தை பலமுறை எங்களிடம் கூறியிருக்கிறார். நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒன்றைச் சொல்கிறேன். சில வருடங்கள் இருக்கும் ஒருநாள் அவர் கட்டத்திலிருந்து எதையோ பொறுக்கியெடுத்துக் கணக்கிட்டுக் கொண்டிருக்கையில் நான் அகஸ்மத்தாக இங்கு வந்தேன். என்னுடன் இங்கிருப்பவர்களில் சிலர் இருந்தனர். மாவடிப்பிள்ளை ஒரு கணம் வலிப்பு வந்ததுபோல திடுக்கிட்டுத் துாணில் சாய்ந்தார். பொற்பனைக் கோட்டை ஈஸ்வரா என்று அலறினார் ”என்ன ஆயிற்று மாவடி. ஏன் இப்படிச் செய்கிறது?” என்று கேட்டதற்கு எதுவும் பேசாமல் மீண்டும் கணக்கைச் சரிபார்த்தார். முகம் பெரிதாக மலர்ந்தது. சந்தோஷத்தில்தான் அப்படி சரிந்திருக்கிறார். ”தாசரே, தொண்டைமானின் பூலோகக் கணக்கில் சிறிய நகர்வு அமையவுள்ளது அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விளக்கமாகச் சொன்னார். பத்மதிசை என்பது அதற்கு பெயர். நான் முதலில் நம்பவில்லை. காரணம், அவர் கூறியதற்குச் சிலமாதங்கள் முன்புதான் மன்னர் லண்டன் சென்றுவிட்டுத் திரும்பியிருந்தார். பத்மதிசையில் நுழைந்தால் மீள முடியாதென்றால் பகதுார் திரும்பியிருக்கக் கூடாதலல்வா? அடுத்தநாள் மாட்டுச் சந்தை போய்விட்டு தவிடு, புண்ணாக்கு எல்லாம் வாங்கிக்கொண்டு நானும் அம்பியும் மெயின் ரஸ்தாவில் நடந்து வரும்போது பிள்ளையைப் பார்த்து, கணிப்பு தவறாக இருக்கலாம் என்றேன். பிள்ளை அப்போது வேறொரு கணக்கு வைத்திருந்தார்.

பத்மதிசை என்பது ஒருவிதத்தில் அயரிபோல. அது அத்திசையின் ஒவ்வொரு சந்திப்பிலும் இருக்கும். எனக்கு அவர் கூறியது விளங்கவில்லை. பிள்ளை மேலும் சொன்னார், நீர் நினைப்பதுபடி திசையின் ஆழத்தில் சுழன்று கொண்டிருப்பது மட்டும் அல்ல பத்மதிசை, அதை நோக்கிச் செல்ல அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தடமும் பத்மதிசையின் அமைப்பைக் கொண்டிருக்கும். நான்கு நான்கென உள்ளடுக்காக அமைந்த பதினாறு கட்டங்கள். கட்டங்களைப் போட்டுக் காட்டினார். எப்படி நடக்கிறதென திசையையும் கிரகங்கள் அதனுள் நகர்வதையும் வரைந்தார். எனக்குத் தலைச்சுற்றியது சுருக்கமாகச் சொல்லுங்கள் என்றேன். ”சிலர் தொலைந்து போவதும் ஊரைவிட்டு ஓடிப்போவதும் மறைந்துவிடுவதும் நட்சத்திரம் பத்மதிசைக்குள் சென்று சிக்குவதுதான்” என்றார். பிள்ளை கூறியபோது அதிர்ந்து போனாலும் மறுபக்கம் மிகப் பெரிய ஆச்சர்யம். பிள்ளையின் வான சாஸ்த்திரப் புலமையின்மேல் பெரிய மரியாதை ஏற்பட்டது. அவர் சொன்ன இரண்டாவது ரகம் தான் மன்னர் பகதுாரின் லக்னம். அதாவது விரும்பியே பத்மதிசைக்குள் நுழையும் ரகம்”

வெள்ளக்குட்டி மடித்திருந்த கால்களை இலகுவாக்கி அமர்ந்தார். அருகில் சிட்டு, வெற்றிலைச் செல்லத்தை இழுத்து உள்ளிருந்து ஒவ்வொன்றாக எடுத்து உருட்டியது. பின்பு மடித்திருந்த வெற்றிலையை உருவிக் காம்பை மட்டும் கிள்ளி  மென்றது. ”ஆக உங்களுக்கும் இதெல்லாம் முன்கூட்டியே தெரியும். ம் பிறகு“ என்று அங்கலாய்ப்புடன் கேட்டார் வெள்ளக்குட்டி. “விசயம் இரண்டொரு நாளில் ஊர் பூராவும் பரவிவிட்டது.”

”ஊர் முழுக்கவா?”

”ஊர் முழுவதுமென்றால் இந்த சமஸ்தானம் பூராவுமில்லை. இந்தப் பிள்ளைமார் தெரு, வாணியச் செட்டித்தெரு, அப்புறம் ஊரணிக்கு தெற்கில் சௌராஷ்டிரா காலனி வரை. திருக்கோகர்ண கிராமம் முழுக்க” அதற்கு மேல் ரங்கூன்தாசரை எதையும் பேச வைக்கும்படி வெள்ளக்குட்டியின் தோரணை துாண்டவில்லை. சற்று தீவிரமான முகபாவம். ஆனால் புன்னகைக்கிறார். தாசர் ஒன்றும் விளங்காமல் வெள்ளக்குட்டியையும் மற்றவர்களையும் பார்த்தார்.

“ராஜ வம்சத்தின் ஜாதகத்தை எழுதுவது என்பது வெறுமனே ஒரு குடும்பத்தின் காலக்கணிப்பு மட்டுமல்ல அது அந்நாட்டின் தலைவிதியை அறிந்துகொள்வது. அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அந்தத் தேசத்தின் போக்கை மாற்றும். அவனுக்கு நிகழும் சம்பவங்கள்  ஏன் அவனது அந்தரங்கச் செயல்பாடுகளுமே. கற்பனைகள், கனவுகள், காமபோதங்கள், உபாதைச் சிக்கல்கள்கூட நாட்டின்மீதே விழும். அதனால்தான் அரசனின் ஒவ்வொரு நாளையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ற சாதகபாதகங்களோடு வாழ்வை நகர்த்துகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களுக்கு நிகழ்காலம் பற்றிய பிரக்ஞையே இருக்காது. ஒன்று கடந்தவை மற்றொன்று நடக்கப் போவது. அதனால்தான் ராஜவம்சத்து ஜாதகங்கள் யார் கண்ணிலும் படுவதில்லை. பரம வந்தணம். ஆக இத்தனை சிரமசாத்தியமான ராஜரகசியத்தை பிள்ளை தெரிந்து வைத்திருக்கிறார்.

அதோடு அவர் கணித்ததை, அதாவது அரசனுக்கு நிகழும் திருமணம், சீமைப் பிரவேசம், பிறக்கப் போகும் பறங்கி இளவரசன் என ஒவ்வொன்றையும் கணித்தது மட்டுமில்லாமல் அதை ராஜகுடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்கிற பொறுப்பின்றி தர்பாரின் பாதுகாப்புச் சட்டத்தைமீறி உங்கள் அத்தனை செவிகளிலும் கூறியிருக்கிறார். அதாவது, அரசனுக்கு விடியப் போகும் ஒவ்வொரு பொழுதும். பாவம் ராஜகுடும்பமும் சேர்ந்தே தப்பான கால நகர்வை நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அத்தனையும் பிள்ளைக்கும் உங்களுக்கும் முன்னமே தெரிந்திருக்கிறது. நாட்டுக்கு நடக்கப் போகும் அவலத்தை அறிந்தும் துப்புக் கொடுக்க யாருக்கும் எண்ணமில்லை. ஆக, ராஜத் துரோகக் குற்றத்தை செய்ததற்காக முதல் குற்றவாளியாக பிள்ளையும் அதற்குப் பாதுகாப்புக் கொடுத்ததற்காக இந்தக் கிராமத்தையும் தொண்டைமான் குடும்பம் நிச்சயம் விடப் போவதில்லை” வெள்ளக்குட்டி சொல்லி முடிப்பதற்குள் சட்டென அத்தனைபேரும் ஓவென அலறியதில் சிட்டு பயந்துபோய் தலைதெறிக்கக் கத்திக்கொண்டு கூண்டுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டது.

***
கத்திச் செறுப்பும் பட்டு வேட்டியும் கொழுத்த வயிறும், திவான் வஸ்திரம் அவ்வளவு பெரிய உடம்பை மறைக்க முடியாமல் திணறிக் கிடக்க, ஒரு பக்க மார்பு மட்டும் தெரிய, பெரிய மீசையும் பிடரி வரை சிகை புரள மழித்த முகத்துடன் வெண் முண்டாசுத் தலையுமாக மைவிழியாளைப் போன்று நளினமான முக பாவத்துடன் இரண்டு கையிலும் பெரிய உடைமைகளைச் சுமக்க முடியாமல் நின்ற அந்த அந்நியர், திருவேங்கைவாசல் மேட்டைக் கடந்து வந்த குதிரை வண்டியைக் கூப்பிட்டு நிறுத்தினார்.

மாமுன்டியா பிள்ளை இறந்ததிலிருந்தே அவரது சீடர்கள் கஞ்சிராவும் கையுமாகப் புதுக்கோட்டைக்கு வந்து போவது வாடிக்கையாக இருந்ததால் சத்தியவானுக்கு அந்த அந்நியரை விசாரிக்கத் தோன்றவில்லை. அதோடு தசரா விழாக் காலத்தில் புதிய ஆட்கள் வருவதும் சகஜம்தான். இதையெல்லாம்விட அவனுக்கு அவரிடம் சொல்வதற்கு இருந்த முக்கியமான விசயம், தன்னுடைய குதிரை யாரையும் ஏற அனுமதிக்காது என்பது. கேட்டதும் அந்நியர் புருவத்தைத் துாக்கினார். “ஆமாம். மன்னியுங்கள் வேறு ஏதும் மாட்டுவண்டி கிடைத்தா பாருங்கள்” என்றான். அவருக்கு மற்றொரு சந்தேகம் இருந்தது. அந்தியரை மட்டுமா அல்லது யாரையுமேயா என்றார். இல்லை யாரையும்தான் என்றான் சங்கடமான புன்னகையில். நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கிறேன் என்று அவன் தடுப்பதற்குள் அவர் குதிரையின் பிடரியைத் தடவி காதில் ஏதோ உசாவ, அது சமத்துப்பிள்ளையாகத் தலையை பலமாக ஆட்டிக் கால்களால் நிலத்தை அறைந்தது. சத்தியவான் திடுக்கிட்டுப் போனான். இனி அவனே மறுத்தாலும் ஜார்ஜ்(குதிரையின் பெயர்) விடாதெனத் தெரிந்தது. அந்நியர் கைப்பையை வண்டியின் அடிவயிற்றில் வைத்துவிட்டுப் பெரிய பொதியை(அதுதான் கஞ்சிரா போல அவனுக்குத் தோன்றிற்று) கையில் பிடித்தபடி அமர்ந்ததும் குதிரை நடையைக் கட்டியது.

சத்தியவானுக்கு அந்நியர் என்ன மந்திரம் பிரயோகித்தார், எப்படி அது வேலை செய்தது, அதைச் சொல்லிவிட்டால் போதும் என்கிற அவசரம். அதைவிட அந்நியருக்கு குதிரை எதற்கு இவ்வளவு வீம்புப் பிடிக்கிறதெனத் தெரிந்து கொள்வதில் ஆர்வம். எனவே சத்தியவான்தான் முதலில் பேச வேண்டியிருந்தது அவன் சொன்னான்,  

“ஜார்ஜைப் பெற்றவர்கள் பிரிட்டிஷார்களுக்கு கோச் வண்டி ஓட்டியவர்கள். சர் ஜோன்ஸி, பீட்டர் சார்லன். நான்கு பேர் வெண்ணிற குதிரைகள். கோதுமை உமியும் கேப்பைக் கட்டையும் தின்று வளர்ந்தன, தன்னை மேற்றிராணியாகவும் துரையாகவும்தான் எண்ணிக்கொள்ளும். இப்போது இருப்பது ஜோன்ஸியின் மகன் ஜார்ஜ். அவனுக்கும் அதே வீம்பு உண்டு. ஆனால் தவிட்டு உமியை ஆரம்பத்திலேயே பழக்கிவிட்டேன். புண்ணாக்குடன் சிறிது கருப்பட்டி கலந்தால் பிடிக்கும். கொள்ளு தீண்டவே மாட்டான். கொள்ளு தின்னாமல் எப்படி? சரியென்று ஒரு உருண்டையைத் தெரியாமல் புண்ணாக்குடன் கரைத்தாலே முகர்ந்துவிடுவான். வேகத்தில் படு மந்தம். சவுக்கால் அடிக்கக்கூடாது. நான் அடிப்பதைப் பார்த்தீர்களானால் அது பாவனை, காற்றில் சுழற்றும் சப்தம். திட்டினால் போதும் வேண்டுமென்றே தடம் மாறிச் சென்றுவிடும். சவுக்கால் அடித்தால் சொல்லவே வேண்டாம். அடித்த இடத்தில் அப்படியே நின்றுவிடுவான். அரைமணி நேரத்திற்கு ஒரு அடி கூட நகராமல் சாவதானமாக புல் மேய்ந்து கொண்டிருப்பான். மானம் போய்விடும். இரண்டு பேருக்கு அதிகம் ஏறிவிட்டால் கிளம்பமாட்டான். சரக்கு ஏற்றக்கூடாது, பாதை தெளிவாக இருக்க வேண்டும், பொழுது சாய்ந்தால் அனுமதியில்லை.  

அழகாகவும் பறங்கிக்குதிரையின் வாரிசாகவும் இருப்பதால்தான் இவனுக்கு இவ்வளவு மவுசு. சவாரிக்கு வருபவர்களிடம் ஜார்ஜை அனுசரிக்க முடியாமல் ஏதாவது சாக்குச் சொல்லி தவிர்த்திடுவேன். பார்க்கிறவர்களுக்கு நான்தான் சோம்பேறியாகவும் குதிரை ஓட்டத் தெரியாதவனாகவும் படும். இதைக் கட்டி மாரடிப்பதால் திருமணமே செய்து கொள்ளவில்லை. பலநாட்கள் எந்தச் சவாரியையும் ஏற விடாமல் வெறும் கையுடன் வீடு திரும்புகையில் கொன்று போடலாமெனத் தோன்றும். சோற்றுக்கு வழியில்லாத இடத்தில் கௌரவம் எதற்கு? தீவனம் வாங்கிய வட்டிக்காசுக்கு யானை கட்டி வைத்திருக்கலாம். சாராயத்தைக் குடித்துவிட்டு ஆத்திரத்தில் மூங்கில் பிளாச்சால் அடித்து போடுவேன். சாகவும் வாழவும் வழியில்லாத வாழ்க்கை. ஒருநாள் மனத்திவேசததுடன் விசயத்தைப் பிள்ளையிடம் கூறினேன். பிள்ளை ஜார்ஜின் பிறந்த தேதி, நாள், இடம், நேரத்தைக் கேட்டார். கொடுத்ததும் இரண்டு நாளில் அதன் ஜாதகத்தை வரைந்துவிட்டார்”

“குதிரை ஜாதகமா?”  

“ஆமாம். எனக்கும் ஆச்சர்யம். குதிரைக்கெல்லாம் ஜாதகம் உண்டா? பிரபஞ்சத்தில் எல்லா உயிர்க்கும் ஆத்மா இருப்பதுபோல ஜாதகமும் உண்டு என்றார். மனிதர்களுடைய ஜாதகத்தில் எந்த இடத்திலும் அது மனிதப்பிறவிக்குரியது மட்டும் என குறிப்பிடப்பட்டதில்லை. அனந்தகோடி உயிர்களில் அதுவும் ஒன்று. மனிதன் தனக்குரிய தேவைகளுக்காக அதை தனக்குரியதாக வியாபித்துக் கொண்டான். பிள்ளைதான் கூறினார் சரி எங்கெனும் வழி கிடைத்தால்போதும் இல்லையா?” சத்தயவான் அவரைப் பார்த்துக் கேட்டான். அவர் சரிதான் எனத் தலை ஆட்டிவிட்டு சிறிய வெண்கலக் கவளத்தில் பொரியையும் வெல்லத்தையும் கொஞ்சம் மிளகாய் பொடியையும் துாவி தண்ணீர் விட்டுக் கிண்டினார்.

“இந்திரனுக்குரிய வாகனம். இதன் மேல் இந்திரன் மட்டும் பிரயாணிக்க வேண்டும். அல்லது தேவர்கள். மற்றவர்களுக்கு எப்படி அனுமதி கிடைக்கும். தேவர்கள் யார்? வேறு யார் வெள்ளக்காரர்கள்தான். பிள்ளைதான் கூறினார். இன்னொரு யோசனையும் சொன்னார். எங்காவது சர்க்கஸில் விட்டுவிடலாம்” அந்நியர் அவனுக்கும் ஒரு உருண்டைப் பொரியைக் கொடுத்துவிட்டு  ”வித்தைக் கற்றுக் கொள்ளவில்லையென்றால் அடித்து உரிக்க மாட்டார்களா?” எனக் கேட்டார். கார இனிப்புச் சுவையுடன் பொரி உருண்டை அந்தப் பொழுதுக்கும் பயணத்துக்கும் நன்றாக இருந்தது. “நிச்சயம், ஆனால்  ஜார்ஜ் ஒரே தடவையில் கற்றுக் கொள்வான். அதாவது அவனைச் சுற்றிக் கூட்டம் இருக்க வேண்டுமாம். எல்லோரும் அவனைப் பார்த்து ரசிப்பதும் உற்சாகம் எழுப்புவதும்தான் அவனது கர்மப் பயன். அவன் முதலாளியாகப் பிறந்தவன். தொழிலாளி வர்க்கம் அவனுக்கு ஒப்பாது. இன்னொன்று, அவனுடைய ஜாதகத்தில் இப்போது சனி நடக்கிறது இனி ஆறு மாதத்திற்கு அவனுடைய தொல்லைகள் உனக்கு அதிகம் வரும். கொன்று போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் அவ்வழியிலாவது பிரபலமடைந்தால் போதுமென்பது அவனது கர்மம் . கிழக்கில் அவனுக்குரிய சாதக திசை தெரிகிறது. ஆறுமாதத்திற்கு நீ அவனைக் கிழக்கில் யாரிடமாவது விட்டு வை. நிலைமை சீரானதும் வரட்டும் என்றார்.

“வழி கிடைத்ததா?” புதியவர் கேட்டு, இன்னொரு உருண்டை வேண்டுமா என சைகை செய்தார். அவன் வாங்கி மென்றுகொண்டே தொடங்கினான் “பட்டுக்கோட்டையில் சிநேகிதன் வீட்டில் எருமை மாடுகளோடு ஜார்ஜைக் கட்டிவிடடு வந்தேன். வெள்ளைக்காரியைத் திருமணம் செய்து தொழுவத்தில் நிறுத்தியது போன்றிருந்தது. ஊருக்குள் கேட்காத வாய் கிடையாது. கிரகம் சரியில்லை, லக்னம் சிக்கல் என்றேன். பிள்ளைதான் உண்மையைச் சொல்லும்படி செய்தார். ஊரே சிரித்தது. குதிரை ஜாதகக் கதை ஜில்லா முழுக்கப் பரவியது. எனக்குப் பொறுமை கொள்ளவில்லை பிள்ளையிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். சிநேகிதனுக்கு வாரம் ஒரு கடிதம். பருத்தி, கொள்ளு சிப்பத்தைத் தவணைக்கு வாங்கி அனுப்புவதைப் பார்த்தவர்கள் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக பரிகாசம் செய்தார்கள். ஜார்ஜ் ஆறுமாதம் கழித்துத் திரும்பியபோது சந்தோஷமும் இளைத்துக் கழுதைபோலிருந்ததைக் கண்டு வருத்தமும் ஏற்பட்டது. எல்லோருடைய இளக்காரமும் நகைப்பும் ஒரே பேச்சில் அடைந்துவிடும்படி அவன் வந்த அன்றைக்கே தபால் அலுவலகத்தில் சர்க்கார் உத்யோகமும் துரைகளின் துணி மூட்டைகளை வண்ணார் வீட்டிலிருந்து ஏற்றி இறக்கும் பகுதி நேர ஊழியமும் தயாராக இருந்தது. இரண்டும் பிள்ளையின் சிபாரிசு. தபால் அலுவலத்தில் தினமும் வேலை இருக்காது, அரசாங்கக் கடிதத்திற்கு மட்டுமென்பதால் பொதி அதிகமிருந்தால் உண்டு. ஆனால் ஒவ்வொரு நாளும் போய் நிற்க வேண்டும்.

ஜார்ஜ்க்கு இதில் பெரிதாக சிரமமில்லை. பொதி ஏற்றுவதும் கனம் இல்லை பாருங்கள். சர்க்கார் உத்யோகத்தில் எனக்குத்தான் ஏகபோக மரியாதை. ஜார்ஜ்க்கு துரைவீட்டு அழுக்குத் துணிகளைச் சுமப்பதில் பெருமிதம். பறங்கியர் பங்களாவில் நுழைந்ததுமே உற்சாகமாகி விடுவான். தலையைச் சிலுப்பி உதறுவதும் அடிக்கடி குளம்பால் நிலத்தைத் தட்டி வாலைத் துாக்கி முதுகில் போட்டுக் கொள்வதுமாக பாவனை மாறிவிடும். பழைய சிடுக்கும் சோம்பேறித்தனமும் அறவே இல்லை. இப்போது ஊரே ஜார்ஜின் ஜாதகக் கதையை நம்புகிறது. எத்தனையோ பேர் தங்களது குதிரைக்கும் பசுவிற்கும் காளைக்கும் ஜாதகம் எழுதத் சொல்லிக் கேட்டார்கள், துரை ஒருவர் தன்னுடைய சீமை சாதி நாய்க்குக் கேட்டிருக்கிறார், ஏன் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து யானைக்குக் கட்டம் வரையச் சொல்லிக்கூட அழைப்பு வந்தது. பிள்ளை அத்தனையும் மறுத்துவிட்டார்.”

அந்நியர் இறங்கிக்கொள்ளும் இடத்தைக் காட்டினார். பிரகதம்பாள் கோவில் சந்நதி. வானம் விடியத் தயாராயிற்று. ஊருக்குள் ஆள் நடமாட்டமில்லை. சத்தியவான் ஜார்ஜின் கடிவாளத்தை வண்டியிலிருந்து அவிழ்த்துச் சற்று இளைப்பாற்றி அருகிலிருந்த மரத்தில் கட்டும் இடைவெளிக்குள் அந்நியர் தன்னுடையப் பொதிகளைப் பிரித்து, பாத்திரம் ஒன்றில் நீர் எடுத்துத் தீ மூட்டி கருப்பட்டியும் காப்பித் துாளும் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பறக்க அவனுக்கொரு தம்ளர் அளித்தார். வாய் அருகே வைப்பதற்குள் நாசி நிறைத்துவிட்டது. விடியலிலே காப்பி அருந்தும் பழக்கம் இருக்குமென அவன் எண்ணினான். அப்போது மணி ஐந்து இருக்கும். செட்டிநாட்டுக்குப் போகும் டிராம் வண்டியின் அலறல் கேட்டது.

குதிரைக்காரன் சத்தியவான் சொன்ன அடையாளங்கள் வெள்ளக்குட்டிதானென உறுதியாவதற்கு ஒரு சந்தேகம் மட்டும் பாக்கி, அது, அந்நியரின் கையில் கிளிக்கூண்டு இருந்ததா என்பது. அவன் நினைவிலில்லை என்றான், ஆனால் கஞ்சிரா வடிவில் ஒன்றை பிடித்திருந்ததாக ஞாபகம்“. கிளி கத்துவது கூடவா கேட்கவில்லை? ரங்கூன்தாசர் பள்ளிக்கூடப் பிள்ளையிடம் கேட்பதுபோல குனிந்தார். “இல்லை அது விடியல் என்பதால் பறவைகளின் சப்தம் அதிகமிருக்கும்தானே, அதோடு உரையாடலின் சுவாரஸ்யத்தில் எதையும் சட்டை செய்யவில்லை” என்றான். அதுவும் வாஸ்தவம்தான். “வேறெதுவும் சந்தேகப் படும்படி, வித்யாசமாகவோ புரியாத சொற்களையோ கூறினாரா?” வைத்தியர் நந்தி கிருஷ்ணன் மீண்டும் கேட்டார். சத்தியவான் சலித்துக் கொண்டான்.

“அவர்தான் எதுவும் பேசவில்லை வெறுமனே அவன் கூறிய கதையை மட்டும் கேட்டபடி வந்திருக்கிறாரென்று சொல்லிவிட்டானில்லையா இன்னும் எத்தனை முறை கேட்பீர்?” மற்றவர்களின் முகங்கள் இனிச் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுமில்லை என்பதைக் காட்டியது.

மீமிசல் ராவுத்தர் தனக்குள்ளே ஒருமுறை “பிரகதம்பாள் கோயிலில் இறக்கிவிடச் சொன்னார்“ என்று சொல்லிவிட்டு சத்தியவானைப் பார்த்து, “அங்கிருந்து எந்தத் திசையில் நடந்தார்?” என்றார். “இப்போது இந்தக் கேள்வி எதற்கு?” நந்தி கிருஷ்ணன் கேட்டார். ரங்கூன்தாசர், “நல்ல கேள்விதான் ஏதாவது துப்புக் கிடைக்கும் பேசாமல் இரு” நந்தியை அடக்கினார். அதற்குள் சத்தியவான், “கோயில் குளத்து மேட்டில் திரும்புவதுவரை இறக்கிவிட்ட இடத்தைவிட்டு நகர்ந்ததுபோலத் தெரியவில்லை. விடிவதுவரை கோயில் திண்ணையிலேயே இருந்திருக்கலாம்” அவன் முடிப்பதற்குள் ராவுத்தர் “இல்லை இல்லை அவர் விடியலில்தான் வாசலில் வந்து நின்றதாக பிள்ளை அவரை அறிமுகம் செய்யும்போது தெரிவித்தார். ஆக இறங்கியதும் யாரிடமோ விலாசம் கேட்டு உடனே அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்” தாசர் சட்டென கால்களை உதறிக்கொண்டு, “அதானோ” வழக்கமாகச் சொல்லும் தொனியுடன் எழுந்தார். “என்ன?” மீமிசல் கேட்டார். தாசர் சத்தியவானைப் பார்த்து “நீ இறக்கிவிடும்போது விடியவில்லை இல்லையா?” அவன் தலையாட்டினான். “பிள்ளையும் அவர் வீட்டுக்கு வந்தபோது விடியவில்லை என்றுதான் சொல்லியிருந்தார். மோர் கொடுக்கும்போதுதான் உருவத்தைப் பார்த்தேனென்றார். அப்படியானால் பிரகதம்பாள் கோயிலில் விடிய அரை நாழிகை இருக்கையில் இறங்கியவர் அங்கிருந்து வடக்கில் ஐம்பது காத துாரமுள்ள மாவடிப்பிள்ளை வீடு இருக்கும் சௌராஷ்டிரா தெருவுக்கு எப்படி உடனே போயிருக்க முடியும்? சாத்தியமில்லை”.

நந்தி கிருஷ்ணன் பதற்றத்துடன் “இதெல்லாம் மாய மந்திரம். பொற்பனை கோயிலுக்குப் போய்க் குறி கேட்போம். இல்லையென்றால் மேடை அம்மனிடம் போவோம். ஏதோ துர்சகுனம்” சொல்லி முடிக்கையில் கவுளி கத்தியதுதான் தாமதம் உடனே கூட்டத்தில் சலசலப்பு, நந்திகிருஷ்ணன் வலிப்பு வந்ததுபோல “ஈஸ்வரா” என்றார் கைகளைக் கூப்பி.. ”அமைதி அமைதி” ராவுத்தர் தோளைத் தொட்டு சமாதானம் செய்தார்.

“ஆனால் வந்தவரிடம் அம்மன் காசு இருந்தது” சத்தியவான் முடிப்பதற்குள் ”எப்படி எப்படி” ராமசாமி நம்ப முடியாமல் கேட்டார். “ஆமாம். வைத்திருந்தார். அதைத்தான் இறங்கியதும் கொடுத்தார். நானும் நம்ப முடியாமல் நீங்கள் இந்த ஊர்தானா என்று கேட்டதற்குச் சிரித்தார்” “ஆக ஏற்கனவே இங்கு வந்திருப்பாரோ?” என்று நந்தி கிருஷ்ணன் மூக்குக் கண்ணாடி சறுக்கிய பிரக்ஞையின்றி எல்லோரிடமும் பொதுவாகக் கேட்கும் பாவனையில் பார்த்தார். “அப்படி வந்திருந்தால் இங்கு மட்டும் செல்லுபடியாகும் காசை ஏன் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும்?” ராவுத்தர் குழப்பமாக எல்லோரையும் பார்த்துவிட்டுக் கடைசியாக நந்தி கிருஷ்ணன் பக்கம் திரும்பினார். நான் அப்போதே சொன்னேனே என்பதுபோல நந்தி தலையை மட்டும் ஆட்டி உதட்டைக் கோணாலாக்கி சொல் உதிராமல் கேட்டார். நாசி விரிந்து அழத் தயாரானது. நந்திக்கு நளினங்கள் நன்றாகக் கை வரும்.

“சரி, வந்தவர் எந்த வழியாக வந்தார், எப்படிப் போனார், அம்மன் காசை யார் தந்தது இதையெல்லாம் கண்டுபிடிப்பது நேர விரயம். இதை இத்துடன் விட்டுவிட்டு, நம்மீது எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கு என்ன செய்வது அதை மட்டும் பேசுவோம். எனக்குத் தெரிந்த வக்கீலிடம் இதைப் பற்றிக் கேட்கலாம்” மீமிசல் ராவுத்தர் கூறியதற்கு தாசர் ஆட்சேபித்தார். “விசயம் சமஸ்தானத்தைத் தாண்டினால் பிறகு பிரிட்டிஷ் விசாரணை நடக்கும். யாருக்கும் தெரிய வேண்டாம் பரம மந்தணமாக இருக்கட்டும். ஆமாம் மந்தணம்”

“கிருஷ்ணசாமி ஐயர்தான் நீதிபதி. ஐயர் சாதாரணமில்லை. பிரிட்டிஷ் மேற்பார்யைாளர் சிட்னி பர்னுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார். காந்தியை கலகக்காரர் என்று சமஸ்தானத்துக்குள் வரவிடாமல் தடுத்ததில் இருவருக்கும் பெருமை உண்டு. இவர்கள் பேச்சிற்கு திவான் கிளிப்பிள்ளை, திரும்பச் சொல் என்றால் பிசிராமல் சொல்வார்”

”மன்னர் ஆட்சேபிக்கவில்லையா? நந்தி கிருஷ்ணன் கேட்டார்.

“நல்ல காரியம் செய்தீர்கள் என்றாராம் இலண்டனில் இருந்துகொண்டு”

“காந்தியின் பிரச்சனையை இப்போது பேசி என்ன ஆகப் போகிறது.?” காந்தி என்றதும் நந்தியின் விசும்பல் கேட்டது. “நம்முடைய பிரச்சனைக்கு வருவோம்” ராமசாமி ஐயர் பக்கம் திரும்பி “ஐயா உங்களுக்கு ஏதும் தெரிந்தால் கூறுங்கள், இந்த வழக்கு எப்படி போகும்? யாரையாவது வக்காலத்துக்கு அழைத்து வரலாமா? என்ன விதமான தண்டனை உண்டு?”

ராமசாமி ஐயர் தொண்டையைச் செறுமியபடி மடித்திருந்த காலை விடுவித்துவிட்டுச் சில கணங்கள் விதானத்தைப் பார்த்தவாறு பாதங்களைத் தடவினார். அவர் முகம் வாடியிருந்தது. நந்தி “சத்தியமூர்த்தியைப் போய்ப் பார்த்தால் என்ன?” என்று ஐயரிடம் கேட்டார். அவர் சரிப்படாதெனத் தலையசைத்து, “அவர் காங்கிரஸ்காரர். காந்தியவாதி” என்றார் பதிலுக்கு. அதற்குள் கூட்டத்தில் ஒருவர், “ஐயோ தயவு செய்து காந்தியின் பெயரை எடுக்காதீர்கள். வினையே வேண்டாம்” என்று சத்தம் போட்டார். உடனே நந்திகிருஷ்ணன் வாயைத் துண்டால் பொத்தி அழுதார்.

ராமசாமி ஐயர் எல்லோரையும் அமைதியாகுங்கள் என சைகை காட்டிவிட்டுத் தொடங்கினார் “ராஜ துரோகக் குற்றம் வெள்ளக்குட்டி கூறுவதுபோல உண்மைதான். அதை அவரே விளக்கியிருக்கிறார். மற்ற சமஸ்தானத்தில் இப்படி நடந்திருக்கிறதாவெனத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம், மன்னரின் ஜாதகத்தை அரச குடும்பத்து ஜோசியர் தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது. இதில் தாட்சண்யமே இல்லை. இரண்டாவது, மன்னருக்கு நேரும் அபாயங்களை முன்னறிவிக்கும் விசுவாசம். இந்த இரண்டுக்கும் கடும் தண்டனை புதுக்கோட்டை தர்பார் பீனல் கோடில் வெள்ளக்குட்டி சொல்வதுபோல இருக்கலாம்” சற்று நிறுத்தி நீர் அருந்திவிட்டு “ஆனால் இவ்விரண்டு சிக்கலிலிருந்தும் தப்ப ஒரே வழி மாவடிப்பிள்ளை தானாக வந்து ராஜகுடும்பத்தின் முன் ஆஜர் ஆக வேண்டும்”

“அது எப்படி”

ஐயர் நெற்றியில் கை வைத்து மண்டை உச்சி வரை துடைத்துக் குடுமியைப் பின்னால் நீவினார்.  பிறகு சாவதானமாக உதட்டைச் சுழித்து “பிள்ளை தான் மட்டும்தான் ராஜ ரகசியக் கட்டத்தைத் திறந்தேன். யாருக்கும் தெரியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றார். கிண்ணத்தில் வைத்த தண்ணீர் ஆடியதுபோல கூட்டத்தில் சிறு அசைவு. உடல்கள் சமன்குழைந்தன. சட்டென ஒரு குரல் “வெள்ளக்குட்டி மாவடிப்பிள்ளையை ஒப்புக்கொள்ள விடுவாரா? நம் எல்லோருக்கும் தெரியும் என மாட்டி விடுவாரே.” உடனே இன்னொருவர் “ஆமாம் விதரணையாக வாதிப்பார். சிக்கல் பெரிய சிக்கல்”

மீமிசல் ராவுத்தர் பெருத்த உடம்பைத் துாக்கி எழுந்து “எங்களுக்குத் தெரியாது என்று கூறுவீர்களா?” கூட்டத்தை நோக்கிக் கேட்டார். கலைந்த எறும்பு வரிசைபோல தலைகள் அலைந்தன. ராமசாமி ஐயர் குறுக்கிட்டு “அப்படிச் சொல்லித் தப்பிக்க முடியாது ராவுத்தரே. அவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள் பிள்ளை உங்களுக்கெல்லாம் ஜாதகம் கணித்திருக்கிறாரே உண்மையா? என்பார்கள், உண்மைதான். அவருடைய முன்கூறலின்மீது அசாத்திய நம்பிக்கை உண்டா? உண்டு. ஏதோவொரு வகையில் அத்தனைபேரின் ஜாதகமும் எல்லோருக்குமே தெரியும்தானே? தெரியும். இறுதியாக பிள்ளையை நன்றாக அறிவீர்களா? என்றால் ஆமாம் என்போம். அப்படியானால் பிள்ளையின் மூலம் நிறைய அனுகூலங்களைப் பெற்றதற்காக பிரதிகூலமாக தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று முடிப்பார்கள்”

அழுது கொண்டிருந்த குழந்தையை அமர்த்த முடியாத குடியானவன் இடுப்பில் துாக்கிக்கொண்டு எழுந்து “விமோசனத்திற்கு வழி உண்டா இல்லையா சொல்லித் தொலையுங்கள் குழந்தைக்குப் பசிக்கிறது” அவன் போட்ட சத்தத்தில் குழந்தை அழுகையை நிறுத்தி அவன் முகத்தை ஆவேசமாக நோக்கியது. “விமோசனத்திற்கு ஒரே வழி பிள்ளையைத் தேடிப் பிடிப்பதுதான் வேறென்ன? சாம்பாஜிக்கு நிச்சயம் பிள்ளை இருக்குமிடம் தெரியும். விசயத்தைப் பக்குவமாக சாம்பாஜியிடம் எடுத்துச் சொல்லிப் பிள்ளையை அழைத்து வர வேண்டும்”  குழந்தை மீண்டும் அழுதது “சும்மா இருடா விசித்திரப் பிறவியே” எரிச்சலுடன் தன் பெரிய கட்டை விரலை வாயில் கொடுத்து அடக்கினான். “உனக்கு ஏனய்யா இவ்வளவு அவசரம். சட்டை போடவில்லையா குழந்தை மார்பைக் கடிக்கப் போகிறது ஜாக்கிரதை” நந்தி முணுமுணுத்தார். உடனே அங்கு சலசலப்பு ஏற்பட்டதும் தாசர் நந்தியை அடக்கிவிட்டு ஐயரிடம் “பிள்ளை ஆஜரானால் பிறகு என்னவாகும்?” என்றார்.  

”பிறகு என்ன, சற்று முன்பு காந்தியின் சம்பவத்தைக் கூறினீர்களே அந்த சமயத்தில் அவரைச் செட்டிநாட்டுக்குச் சென்று சந்தித்து வரவேற்புரை படித்தளித்த நகர்மன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ததுபோல பிள்ளைமீது குற்றம் நிரூபணமானதும் அவருடனிருந்த நம்மையும் குடிநீக்கம் செய்வார்கள். ஆனால் தற்காலிகமா நிரந்தரமா என்று சொல்ல முடியாது”

நந்திகிருஷ்ணன் மீண்டும் காந்தி பெயரைக் கேட்டதும் கேவினார். மூக்கைச் சிந்தி வேட்டியில் துடைத்தார். ராவுத்தர் “விடிந்ததும் முதலில் இந்த ஆளைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் அபசகுனமாக அழுது கொண்டே இருக்கிறார்.” அதற்குள் தாசர் அவரிடம் “சரி. காலையில் சாம்பாஜியைப் பார்ப்போம். பிள்ளையைத் தேடு காரியத்தை முடுக்க வேண்டும்” என்று முடித்ததும் எல்லோரும் எழுந்து செல்லத் தயாராகினர். அவிழ்ந்த குடுமியை அள்ளி முடித்தும், வாயோரம் தழும்பான நித்திரைக்கோழையைத் துடைத்தும், கசங்கிய வேட்டியை உதறியும், எஞ்சிய பட்டாணிகளை எண்ணிப் பார்த்தும் குடியானச்சனம் மெல்ல அசைந்தது. சிலர் உறங்கிவிட்டிருந்தனர். எழுந்தவர்கள் உறங்கியவர்களை எழுப்பப் பாடாய்ப்பட்டனர். அப்போது கூட்டத்தைப் பிளந்து மூச்சிறைக்க ஓடி வந்தவன் சாம்பாஜி ஊரைவிட்டுப் போன தகவலைக் கூறினான்.
***
சாம்பாஜி தன் சகபாடிகளை ஜமீன் தயவில் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரவு, தசராவுக்கான ஏற்பாடுகள் இங்கு நகரில் நடந்து கொண்டிருந்தன. முதல் மூன்று நாட்கள் பிராமணர்களுக்கு சமைத்துப் போடும் சாப்பாடுகளுக்கென்றே யானை வடிவ அண்டாக்கள் சத்திரத்திலிருந்து வண்டிகளில் வந்திறங்கின. அப்போது தசரா தொடங்க மூன்று நாட்கள் இருந்தது. வெள்ளக்குட்டி வந்த இரண்டாவது இரவு அது. வெள்ளக்குட்டியின் ஏகபோக செல்வாக்கும் படடோப பழக்க வழக்கங்களும் பிள்ளையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வைத்திருந்த தருணம். பிள்ளையினதும் அதற்குச் சற்றும் சளைத்ததில்லையென்றாலும் சமஸ்தானம் முழுக்கப் போதுமானளவு சம்பாதித்த பிரபலத்தைக் கூறத்தான் செய்தார். ஆனால் அவை எதுவும் வெள்ளக்குட்டியின் பெருமைக்கு முன் நிற்கவில்லை. பிள்ளை பேச்சை ஆரம்பித்ததுமே முன்பே தெரிந்த விசயத்தைக் கேட்கும் அசிரத்தை வெள்ளக்குட்டி முகத்தில் அசையும். அவகாசமளிக்காமல் பிள்ளை முடிக்கும் முன்பே அவர் கூற வேண்டியதைத் தொடங்கிவிடுவார். அனுபவஸ்தர்கள் ஒருபோதும் கேட்பவரைப் பேச அனுமதிக்க மாட்டார்களென விட்டுவிட்டாலும் பிள்ளைக்கு தான் அஞ்ஞானியாக அமர்ந்திருப்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்திற்று. எந்த விசயத்திற்குத்தான் மனுஷன் அசருவாரென அவரும் அத்தனையும் சொல்லி வாய் ஓய்ந்துபோனார்.

வெள்ளக்குட்டி எழுந்து முதல் நாளைப் போலவே திண்ணை விளிம்புக்கு மேசையை நகர்த்திப் படுக்கையைத் தயார் படுத்தினார். பின்பு தன் பெருத்த உடம்பை ஒருக்களித்துச் சாய்த்து வசதியைச் சோதித்தவாறே விளக்குத் திரியைச் சற்று தணித்துவிட்டு பிள்ளை கூறுவதற்கு வெறுமனே முகம் கொடுத்தார். “உறங்கப் போகிறிர்களா? பிள்ளை கேட்டார். “இல்லை இல்லை நீங்கள் பேசுவதைக் கேட்கிறேன். வந்ததிலிருந்து நானே பேசிக்கொண்டிருக்கிறேனே.” பிள்ளையும் தலையாட்டினார். “ஒன்று செய்யுங்கள் கடலை இருந்தால் பாரியாளிடம் இரண்டு மிளகுடன் உப்பு நிறையப் போட்டு அவிக்கச் சொல்லுங்கள். கூடவே வெல்லம் கரைத்த பானகமும் அமைந்தால் அருமை. கடலை சாப்பிட்டபடி பேசலாம். பானகம் அதற்குச் சரியான இணை” என்றார். பிள்ளை நானே செய்கிறேனென எழுந்தவர் அரை மணி நேரத்தில் திரும்பி வருவதற்குள் வெள்ளக்குட்டி குறட்டையுடன் உறங்கிவிட்டிருந்தார். கோழித் துாக்கமெனத் தெரியும். கடலை வாசத்திற்கு விழித்தார். பிள்ளை சட்டென “சர்க்கஸில் கலாரசனை உளவாளி என்கிற வேலை ஒன்று உண்டு உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டு வெள்ளக்குட்டியின் கண்களை நோக்கினார்.

வெள்ளக்குட்டி புரியாமல் எழுந்தமர்ந்தார். துாக்கம் கலைந்துவிட்டது. “ஆமாம் அமெரிக்கன் சர்க்கஸ், கிரேட் பிரிட்டிஷ் சர்க்கஸ் இந்த இரண்டிலும் அப்படியொரு பணி இருக்கிறது. இந்தியாவில் கோலோச்சியிருந்த பாம்பே, ராயல், ரேமன் கம்பெனிகளுக்குப் போட்டியாக வந்த வெளிநாட்டு கம்பெனி, ரசிகர்களைப் புற்றீசலாகப் பெருக்கவும் காட்சியை ஒரே ஊரில், இந்திய கம்பெனிகளைவிட, அதிக நாட்கள் நடத்தவும் சிலபல நரித்தனங்களை வைத்திருந்தனர். அந்தந்த சமஸ்தானத்து மன்னர்களுக்கு வெளிநாட்டு மரியாதையும் பரிசுகளும் அளிப்பதில்லாமல் பட்டம் கொடுத்து அனுசரிப்பது ஊரரறிந்தது இல்லையா? ஆனால் இதில் வேறொரு விசயம் ஒன்றும் இருக்கிறது. அதுதான், கலாரசனை உளவாளி.
வெள்ளக்குட்டி புருவத்தை உயர்த்தி “கலாரசனை உளவாளி” என்று இருமுறை சொல்லிப் பார்த்தார். “இதில் அதிர்ச்சி என்னவென்றால்” பிள்ளை தொடர்ந்தார், “அக்கலாரசனை உளவாளி ஓர் இந்தியன்” என்றார்.  “அதிர்ச்சியாக இல்லை ஆச்சர்யமாக இருக்கிறது” வெள்ளக்குட்டி மோவாயைத் தடவி மேற்கொண்டு கூறுங்கள் என்பதுபோல தலையைச் சாய்த்து ஆட்டினார்.

“அதாவது, சர்க்கஸின் சாகஸ வித்தைகளெல்லாம் எல்லா கம்பெனியிலும் ஒன்றுபோலத்தான் இருக்கும். சிங்கம், புலி, கரடி, யானை, ஒட்டகம் என்பதைத் தாண்டி புதிதாக எந்த மிருகத்தையும் காட்டவும் முடியாது. ஒரு அளவுக்கு மேல் அவற்றுக்கு புதிய வித்தைகளைக் கற்க வைக்கவும் முடியாது. அதற்காகத்தான் கலைஞர்கள் சதா புதிய புதிய வித்தைகளைக் கண்டுபிடித்துப் பிரயோகித்து ஜனரசனையை ஈர்க்க பிரம்ம பிரயத்தனம் எடுக்கிறார்கள்” வெள்ளக்குட்டி குறுக்கிட்டு ”இருந்தாலும் வெளிநாட்டுக்கென்று தரமும் கவர்ச்சியும் இருக்கிறதே” என்றதற்குப் பிள்ளை உடனே ”இந்திய கம்பெனியிலும் கவர்ச்சிக்காக வெளிநாட்டு வித்தைக்காரர்களை வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு கம்பெனிக் கலைஞர்களும் பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் இருப்பார்கள். ஆக, வெளிநாட்டு கம்பெனி பெரிதாக இங்கு சம்பாதித்து பெயர் ஈட்டிவிடாது என்பதுதான் இந்தியக் கம்பெனிகளின் நினைப்பு. ஆனால் நடந்தது வேறு. பிரிட்டிஷ் சர்க்கஸ் இந்தியாவில் இறங்கிய இரண்டே வருடத்தில் கூடாரம் அதிரும் கைத்தட்டலும் மூட்டை மூட்டையாய்ப் பணத்தை வாரியள்ளிய விசயம் வெள்ளையானையை வைத்திருந்த கல்கத்தா ஸ்டேட் சர்க்கஸ் போன்ற பெரிய ஜாம்பவான்களுக்கே கிலியை ஏற்படுத்தியது. என்னவென்றால் வெளிநாட்டுக் கம்பெனிகள் காட்சிக்கு வெளியே சில அந்தரங்க முணுமுணுப்புகளைப் பரப்பி எந்நேரமும் சர்க்கஸைப் பற்றி பேச விட்டதுதான் ரகசியம்” பிள்ளை சற்று நிறுத்தினார். வெள்ளக்குட்டி பாணகத்தை குடித்து முடித்துவிட்டு “சரி அது என்ன அந்தரங்கமான முணுமுணுப்பு?“ எனக் கேட்டார்.

பிள்ளை தாழ்ந்த குரலில் “அதுதானே கலாரசனை உளவாளியின் வேலை”. பெண்களைப் போல நளினமாகக் கண்ணைச் சிமிட்டினார். “இந்தியக் கம்பெனி சர்க்கஸ்கள் விழி அகலச் செய்யும் சாகஸத்தின்மேல்தான் கவனத்தை வைத்திருந்தன. சில மணிநேரங்கள் பார்வையாளர்களை அதிசயத்தின் உச்சத்தில் நிறுத்திவிடும். மனம் பந்தாக மாறிக் கடலில் மிதப்பது போலிருக்கும் அக்கணம். ஒவ்வொரு அலையாகத் துாக்கிப் போட்டு விளையாடுவது. சாகஸங்கள் அளிக்கும் ஆனந்தமே அக்கணத்திற்கு மாறுவதைத்தான். எப்படிப்பட்ட ஆத்மாவையும் பலுான் ஆக மாற்றிவிட வேண்டும். ஆனால் இதைவிடப் பெரிய சவால், பார்வையாளர்களை வித்தையைப் பற்றிப் பேச வைக்க வேண்டும். அவர்கள் மறந்துவிடாமலிருப்பது அவசியம்”.

“அதற்குத்தான் கோமாளிகள் இருக்கிறார்களே” வெள்ளக்குட்டி சொன்னதைப் பிள்ளை ஆமோதித்தார் “கோமாளிகள் வெறும் நகைச்சுவைக்காக வந்து போகிறார்களென நாம் நினைக்கிறோம். அவன்தான் சர்க்கஸின் துருப்புச் சீட்டு. தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்த அத்தனை வித்தையையும் நான்கைந்து முகபாவங்களில் மறக்கச் செய்துவிடுவான். வௌவால்போல தொங்கியவன், குரங்காகத் தாவியவன், சிங்கத்தின் வாய்க்குள் தலையைப் பணயம் வைத்தவன் என எல்லோருக்கும் அவன் மேல் மகா குரோதம். ஓய்வு நேரத்தில் அவனைப் போட்டு மிதிப்பார்கள் எனக் கேள்விபட்டிருக்கிறேன். அவன் என்ன செய்வான் பாவம். ஆனால் அதில் ஒரு சூட்சுமம் வெளிநாட்டுக் கம்பெனிகளிடமிருந்தது.  அங்கு அவன் வெறும் கோமாளியாக இல்லை. ஜனங்களின் சகல சிந்தனைக்கும் சொற்களுக்கும் கிசுகிசுக்களுக்கும் உருவமாக இருந்தான்” வெள்ளக்குட்டி குழப்பமாக புருவத்தைச் சுருக்கியது

பிள்ளைக்குச் சற்று ஆனந்தமாயிற்று. “எப்படியென்றால், ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி ரசனை உண்டு இல்லையா? ரகசியங்கள், அந்தரங்க ஆதங்கம், சுய எள்ளல், வெற்றுப் பெருமிதம், பொறாமை, பேராசை இப்படி நிறைய. உதாரணத்திற்கு, இந்த சமஸ்தானத்தில்” சட்டென பிள்ளை த்வனியைத் தணித்து “மன்னரின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றிய பேச்சு அதிகம். அவருடைய வெளிநாட்டு குழந்தையை மெல்லாத வாய் இல்லை. ஐயோ பாவம் அவன். அதுபோக பிரிட்டிஷின் காரியாலயக் குழப்பங்கள் ஊரறியும்” சட்டென குரலை ஏற்றினார், “இந்த சங்கதிகளெல்லாம் கோமாளியின் அபிநயத்தில் தெறித்து விழும். அவனது நடை மன்னரை நினைவூட்டும். கை ஜாடைகள் ராணி அடிக்கடி மூக்கைச் சிந்துவது போலிருக்கும். பெருத்த பிருஷ்டம் கலெக்டரின் ரகசிய நாடகக்காரி திரேசாவினதைக் காட்டும். இரும்புக் குண்டுகளை தொடைக்குக் கீழ் தொங்கவிட்டு கூண்டு வண்டியிலிருந்து இறங்கும்போது பர்ன் துரையாகிவிடுவான்.”

“சரி, இதெல்லாம் கோமாளிக்கு எப்படித் தெரியும்?” வெள்ளக்குட்டியால் பொறுமை காக்க முடியவில்லை “பொறுங்கள் வருகிறேன். இப்படி அவனுடைய நடை உடை பாவனைகள்தான் சனங்களை விடிய விடிய உறங்கவிடாமல் ஆச்சர்யமூட்டிற்று. நீங்கள் கேட்டது மாதிரி முகத்தை மாறிமாறிப் பார்த்துக்கொண்டு “இதெல்லாம் அவனுக்கு எப்படித் தெரியும்” என்று சனங்களால் வியந்துத் தொலைக்கத்தான் முடிந்தது“ பிள்ளையின் சீண்டலை வெள்ளக்குட்டி கவனிக்காமலில்லை சட்டெனக் கேட்டார் “ஓ அப்போ எல்லாம் கலாரசனை உளவாளியின் வேலையா?”

“சாட்சாத் அவனேதான். சர்க்கஸ் போடப் போவதற்கு சில மாதங்கள் முன்பே அவன் அந்த ஊரைச் சேர்ந்து, உண்டு, உறங்கி, உறைவிடம் தேடி அடைந்துவிடுவான். அவனுடைய வேலை ஊர் பற்றி விலாவாரியாகக் கடிதம் எழுத வேண்டும். ஒரு புல் பூண்டு விடுபடாமல். சர்க்கார் உத்யோகம்போல பயணப்படி பஞ்சப்படி எனச் சகலமும் உண்டு. ஊருக்கு ஒரு மனைவி குழந்தை குடும்பம்.” வெள்ளக்குட்டி சிரித்தார். மாவடிப்பிள்ளை மிச்சமிருந்த பானகத்தைக் கவிழ்த்துவிட்டு நிமிர்ந்து “எங்கு, எப்படி, என்றைக்கு, எத்தனை மாதத்திற்குக் கூடாரத்தைப் போடுவதென அவன் தான் தீர்மானிப்பானென்றால் பாருங்களேன்” என்றார்.

”பலே. அப்படியொருவனை நீங்கள் பார்த்தது உண்டா. ஏன் கேட்கிறேனென்றால் இது கற்பனைக் கதையைவிட சுவாரஸ்மாக உள்ளது. தேசாந்திரியான நானே கேள்விப்பட்டதில்லை, புதுசாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கே உண்மையா?.”  

“உண்மை பரிபூரண உண்மை. ஒரு வெள்ளை யானை வாங்குவதற்குச் சமம் அவன். கடிதத்தில் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையும் ஆழி முத்து. அதற்குத்தான் அவ்வளவு சன்மானமும் அதிபத்திய வாழ்க்கையும். அவன் அனுப்பியதைத் தொகுத்தால் இந்திய நிலத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் எழுதிவிடலாம்.“

முழுதாக இருட்டிவிட்டது அப்போதுதான் சாம்பாஜி மாட்டு வண்டியிலிருந்து இறங்கினான். அவனிடம் வெள்ளக்குட்டியை அறிமுகம் செய்துவிட்டு படு காலையில் பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தார். சிட்டு கூண்டுக்குள் அடைந்துகொண்டது. வெள்ளக்குட்டி முட்டை விளக்கின் திரியை ஏற்றினார். மறுகையால் மீசையை நீவி இந்த இடத்தில் சற்று நேரம் யோசித்தார். அதன்பிறகு இருவருக்குமே சோர்வு தட்டியது. முகத்தை மாறிமாறி பார்த்துக்கொண்டனர். வெள்ளக்குட்டியின் சிந்தனையைக் கவனித்த பிள்ளை, “அப்படியொரு ஒற்றன் உத்தியோகம் சாம்பாஜிக்கு கிடைத்தது, படாடோப வாழ்வாக இருந்தாலுமே, ஆத்மதிருப்தியைத் தராது என்பதால் அவ்வேலையை மறுத்து விட்டேன்” என்றார். அது மட்டுமே காரணமாக இருக்காதென வெள்ளக்குட்டிக்குத் தெரியும். தனது பதில் திருப்தியளிக்கவில்லையென்பதை பிள்ளையும் கவனித்தார் இருந்தும் மேற்கொண்டு எதையும் பேசாமல் உறங்கத் தயாரானார். வெள்ளக்குட்டியும் வற்புறுத்தவில்லை. ஆனால் இந்த உரையாடல் முடிவதற்கு முன் இறுதியாக ஒன்றைச் சொல்லலாமெனப் பிள்ளை நினைத்திருந்தார். அது,

சாம்பாஜி ஒருநாளும் சமஸ்தானத்தைத் தாண்டியதில்லை. அதிகபட்சமாக திருச்சிராப்பள்ளி பொன்மலை கிராமம், தஞ்சாவூருக்கு முன்பு கந்தர்வக்கோட்டை, சிவகங்கைச் சீமையில் கானாடுகாத்தான் அவ்வளவுதான் அவனது எல்லை. வாஸ்தவத்தில் அவனுடைய வித்தை பார்க்கிறவர்களைத் திகைக்கவும் ஆச்சர்யத்தையும் சில சமயங்களில் அச்சத்தைத்தையும்கூட உண்டு பண்ணும்தான். சீமையைத் தாண்டினால் நிச்சயம் ஆறுமாதத்துக்கான சம்பாத்தியம் கிடைக்கும். பேரும் புகழும் அடையலாம். சாம்பாஜிக்கு அதில் விருப்பமில்லை. விஷயம் என்னவென்றால், வித்தை தந்திரங்களை வெளியூரில் காட்ட முடியாது. அதாவது, எல்லா ஊரிலும் இப்படிச் சில உள்ளூர் வித்தைக்குழு இருக்கும். அவர்களுக்கென ஓர் எல்லை உண்டு. அதனுள் வெளியூரான் சம்பாதித்து விட்டுச் செல்வது அவர்களுக்குப் பெரிய பிரச்சனையில்லை. மாறாக செயல்படுத்தும் வித்தையின் ஜாலங்களும் அதனால் சம்பாதித்த சொற்களும். பிறகு சனம், வேறொரு வித்தையை அவர்களுடைய ரசனைக்கேற்றதாக இராமல் போக நேரும். அதனால் சாம்பாஜி புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குள்ளேயே தனது வித்தைகளுடன் வருடம் பூராவும் சுற்றிக்கொண்டிருந்தான். பிள்ளை இந்தச் சமயத்தில் சிறு திருத்தங்களை அவனது வித்தைக்குள் செய்தார்.

பொதுவாக வித்தையில் இரண்டு விதம் உண்டு. ஒன்று, பொருள் கண்ணிலிருந்து மறையும் அல்லது எங்கிருந்தோ தோன்றும். அல்லது நம்பமுடியாததாக உருமாறும் எப்படி? என்ன ஆயிற்று? என்கிற ஆச்சர்யமும் குழப்பமும் மட்டும்தான் இதற்கு பதில். இன்னொன்று வித்தையில் விடுகதைபோல விடப்படும் ஒரு கேள்வி. ஒவ்வொரு முறையும் சாம்பாஜி வித்தையை முடிக்கையில் ஒரு கேள்வியை வித்தையாகக் காட்டி விட்டு வருவான். அதற்கான பதில், தந்திரத்தின் முடிச்சை அவிழ்ப்பது. வித்தையை அவர்கள் கற்றுக்கொள்ள வைக்கும் முறை. வேடிக்கை பார்ப்பவர்களும் அறியும் ஆசையில் பதிலை ஆராயத் துவங்குவார்கள். அல்லது தெரியாமல் குழம்பியிருப்பதும் உண்டு. விடை, அதே இடத்தில் மறுமுறை(பல மாதங்களுக்குப் பிறகு) நடக்கும் வித்தையின் முடிவில் அன்றைக்கான அடுத்த புதிய கேள்விக்கு, வித்தைக்கு முன்பு அவிழ்க்கப்படும். இதொருவித தொழில் கைங்கரியம். ஆனால் தொழிலுக்குச் செய்யும் தருமம் எனப் பிள்ளை சாம்பாஜியை நம்ப வைத்தார். “கடலளவு ஏமாற்றுவதில் எள்ளளவு எடுப்பவரிடம் திருப்பியளிக்க வேண்டும்.

எல்லா மாயஜாலமும் கணப்பொழுதில் கண்ணுக்கு முன்பாக நிகழும் சிறிய சூழ்ச்சிக்குள்தான்  அரங்கேறுகிறதென்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். கூடவே, எந்த ஊரில் வித்தை அரங்கேறுகிறதோ அங்கிருக்கும் ஜமீனின் கட்டத்தைக் கணித்து அடுத்த ஆறுமாதத்தில்- மறு முறை வருவதற்குள்- நடக்கயிருப்பவற்றை பிள்ளையின் சொற்களை சாம்பாஜி உச்சரிப்பான். சிலது சொன்னபடியே நடந்துவிடும். நடக்காதவைகள் நடப்பதற்கான அறிகுறியை கேட்டவர்கள் மனது பாவித்திருக்கும். பிறகு ஜமீனின் நம்பிக்கை வழியாக ஊர் மக்களும் கேட்கவாரம்பித்துவிடுவர். ஒருபுறம் வித்தையைக் கற்றுத் தருவதும் மறுபுறம் சம்பவங்களை முன்கூறுவதுமாக, பிள்ளையின் விளையாட்டு ஒரு கட்டத்தில் சாம்பாஜியின் வருகையே ஊரின்  நல்லது கெட்டதுக்கான சகுனமாக மாற்றிற்று. இந்த கணக்குகளை எல்லாம் எங்கிருந்தோ வந்த வெள்ளக்குட்டியிடம் எதற்குச் சொல்வானேன் என்று பிள்ளை வாயை மூடிக் கொண்டார்.

இரவு சாப்பிட சுடு சாதத்தையும் நான்கைந்து கருவாடுகளைச் சுட்டுக் கொண்டு சாம்பாஜி வந்து திண்ணையில் அமர்ந்தான். வெள்ளக்குட்டி தனக்கு வேண்டாமென்றார், பிள்ளை எங்கு போனார் என்ன ஆனார் என்று தெரியாத கவலை வாட்டுகிறது என்றார். அவன் வேறெதுவும் செய்யட்டுமா என்றதற்கு அவர் சிட்டுவிடம் திரும்பிக் கேட்டார் அது பதில் சொல்லாமல் தலையைத் திருப்பி சாம்பாஜியைப் பார்த்தது. “சரி, கருவாடுக்குப் பதிலாக சுடு சாதத்தின்மேல் வதக்கிய இரண்டு பூண்டையும் வெங்காயத்தையும் அரைத்துத் துாவி, மரவள்ளிக்கிழங்கைத் துருவலாக்கி நெய்யில் வதக்கிச் சுட்ட அப்பளத்தின் மேல் போட்டுக் கொண்டுவா தெரியவில்லையென்றால் அம்மாவிடம் நானே கூறுகிறேன்” என்றார். சாம்பாஜி ”நானே செய்கிறேன்” என்று அலுப்புடன் நகர்ந்ததும் சிட்டு விதானத்திலிருந்து கயிறு வழி இறங்கி, சுட்ட கருவாட்டைக் கடித்துத் துப்பியது. சற்று நேரம் வெள்ளக்குட்டி அமைதியாக இருந்தார். பிள்ளை ஓடிப்போனது, மகன் தனிமையானது வீடு வெறிச்சோடிப் போனது என அத்தனையும் யோசித்தார். கண்களை மூடி தியானித்தார். மரவள்ளி நெய்யில் சுருளும் மணத்திற்கு சிட்டுவால் ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. அப்பளம் சுட்டு எடுத்து வருவதற்குள் வெள்ளக்குட்டி விளக்கைத் துாண்டிவிட்டுத் தரையில் கட்டம் வரைந்து கொண்டிருந்தார். சாம்பாஜிக்கு அது என்னவென்று புரியவில்லை. சாப்பாடு வைத்ததும் சோற்றைப் பிசைந்தபடி யோசனையிலிருந்தார். “அள்ளிச் சாப்பிடாமல் என்ன இப்படி மீன் பிடிக்கிறீர்கள்?”

“உன்னைப் பற்றிய யோசனைதான்.”

“உன் நிலைமை ஒரு பக்கம் சந்தோஷத்தையும் மறுபக்கம் கவலையையும் அளிக்கிறது சாம்பாஜி. ஆமாம். இந்த விதிச்சுழலிலிருந்து தப்பிக்கும் ஒரேயொருவன் நீ மட்டும்தான். உன் தகப்பனின் ஜாதக ஜோசியப் பலன்களை நம்பாத திடம் உன்னைக் காப்பாற்றும். அவருடன் ஒருநாளும் அமர்ந்து அவ்வித்தையைக் கற்க விரும்பாததும் பேச்சைக் கேட்காததும் அவரது சொல்லை மதிக்காததும்  இந்த ஊர் அறியும். ஆதலால் நீ விசாரணையிலிருந்து தப்பிப்பாய். அவருடைய ஸ்கலிதச் சொட்டின் விருட்சம் என்பதும் அடங்கா காமத்தின் ஸ்துால உருவம் என்பதையும் தவிர உனக்கும் அவருக்கும் எந்த பந்தமும் இல்லை. ஒன்று கவனித்தாயா காமம் கற்பனையில்தான் அழகு. அதை பிழிந்து குழைத்து சக்கரத் துளையிலிட்டு இயக்கினால் உன்னைப்போல கற்பனைக்கும் நிஜத்துக்கும் சம்பந்தமில்லாத வடிவில் சிலருக்கு இப்படி துரதிஷ்டவசமாக கிட்டும். குயவன் கற்பனை செய்வதில்லை ஏனெனில் அவன் நினைத்தபடி பானை வராது” சாம்பாஜிக்கு அவர் பேசுவது விளங்கவில்லை, சோற்றை அளைந்தபடியே இருந்தான்.

“ஒருவேளை கருணை அடிப்படையில் விசாரணையிலிருந்து விலக்கப்பட்டாலும் சுதந்திரம் கிடைக்கும் ஆனால் உன்னால் உனக்குப் பிடித்த தொழிலைச் செய்ய முடியாது. அதில் பெரிய வருமானம் இல்லை என்பது தெரியும். உன் ஆத்ம திருப்திக்காகவே செய்து கொண்டிருந்தாய் அதையும் பிள்ளை ஜமினீன் கட்டத்தைக் கணிக்கிறேன், புதிரை அவிழ்க்கிறேன் என்று உன்னையும் சிக்கலுக்குள் மாட்டிவிட்டார். இருப்பினும்” சற்று நிறுத்தி பூண்டு மணக்கும் ஏப்பம் ஒன்றை வெளியிட்டு, “பிள்ளை ராஜக்குடும்பத்திற்கு இழைத்த துரோகம், பழிச் சொல் உன் முதுகில் எப்போதும் ஒட்டியிருக்கும். என்னதான் குதிரை வேடம் போட்டாலும் கழுதையின் கனைப்பை மாற்ற முடியாதில்லையா? அதற்கு நீயும் குற்றத்திலிருந்து விலக்கம் கோராமல் சிறை சென்றுவிடுவதே உசிதம்” பலநாள் பட்டினியான நாய் போல மாறிவிட்டிருந்தது சாம்பாஜியின தோற்றம். அவன் தோளைத் தொட்டு சாப்பிடு என்று எழுந்தவர் எச்சில் கையைக் கழுவிவிட்டுத் திண்ணையில் மாட்டியிருந்த கண்ணாடியின் முன் நின்று தலையை அழுத்தி நீவி, மீசையை எடுத்துவிட்டு, அங்க வஸ்திரத்தை உதறிப் போட்டுக்கொண்டு, தொங்கிய துாசி படிந்த சேமக்கலத்தில் கட்டையால் இரண்டு முறை ஒலியெழுப்பினார். சாம்பாஜி அப்போதுதான் திரும்பிப் பார்த்தான். இருட்டில் என்ன செய்கிறாரெனத் தெரியவில்லை. தாவித்தாவிக் குதித்துக்கொண்டிருந்த சிட்டு, வெள்ளக்குட்டி வருவதை அறிவிப்பதுபோல மூக்கால் பலமாக மேசையில் பலமுறை தட்டிற்று.

வெள்ளக்குட்டியின் இமைகள் சற்றுத் தாழ்ந்து மேலே உயர்ந்ததும் சாம்பாஜி எழுந்து நின்றான். ஒருகணம் தான் எழுந்து நிற்பது சரிதானா என யோசிக்கையில் அவரது முகம் அதை ஆமோதிப்பது போல மாறிற்று. நாற்காலியைத் தனித்து அமர்ந்தார். அவன் விளக்கைத் துாண்டினான். அவர் உடல் முழுவதும் நாற்காலியில் வியாபித்திருந்தது. அவன்மீதிருந்து பார்வையை விலக்காமல் உடலை வசதிப்படுத்தினார். என்னவொரு தோரணை எதற்கு இப்படி என விளங்கவில்லை ஆனால் அச்சமூட்டிற்று.

“இதுநாள்வரை பிள்ளை கூறிய ஜாதகம் முழுவதையும் பொய்யென நிரூபித்தால் தப்பிக்க வழி கிடைக்கும்” சட்டெனத் தொனியும் மாறிற்று. சாம்பாஜி என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் நின்று கொண்டிருந்தான். மூத்திரம் வேறு முட்டிற்று. “ஆனால் அது, ராஜ குதிரையாகச் சுற்றித்திரிந்ததைத் தோலுரித்துக் கழுதையெனச் சொல்வது போலிருக்கும். அதற்கெல்லாம் வாய் ஜாலமிக்க வக்கீல் வேண்டும். அப்படியொரு தப்பித்தல் தேவையா? ஊரை நம்ப வைத்ததற்கு என்ன பதில்? அது போகட்டும், இந்நேரம் சத்திரத்தில் கூடிய ஊர்க்காரர்கள் ஓடிப்போன பிள்ளைக்கு பதிலாக உன்னை வழக்கில் சேர்த்துத் தாங்கள் தப்பிக்கும் முடிவுக்கு வந்திருப்பார்கள். அவர்களுக்கிருக்கும் கடைசி முடிவும் அதுதான். பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? தசரா நாளில் சமஸ்தானத்தில் இப்படியொரு அவலம். விடிந்தால் தர்பார் யார் சொல்வதைக் கேட்கப் போகிறது?“ சட்டென வெள்ளக்குட்டி உடலை முன்னால் தள்ளி,  “எனக்கொரு சந்தேகம் சாம்பாஜி நான் வந்ததிலிருந்தே வீட்டில் நீங்கள் இருவர் மட்டும்தான் கண்ணில் படுகிறீர்கள். உன் தாயாரை பிள்ளையும் அறிமுகப்படுத்தவில்லை. ஊர்க்காரர்கள் யாரும் பார்த்ததுபோலத் தெரியவில்லை. புதிர்த்தனமாக இருக்கிறது உயிருடன் இருக்கிறாரா கொலை செய்துவிட்டீர்களா?” மெதுவாகக் கேட்டார்.

சாம்பாஜி கடவுளே எனக் காதைப் பொத்திக் கொண்டான். வெள்ளக்குட்டி சிரித்தார். அவனுக்குத் தலை சுற்றியது, வாந்தியும் குமட்டலுமாக மசக்கைக்காரிக்குரிய ஒவ்வாமைகள் ஒன்று திரண்டன. சிட்டு கூண்டுக்குள் படபடவென அடித்தது. ஒருகணம் அப்பாவைத்தான் கிளியாக மாற்றி அடைத்துவிட்டாரோ என்று தோன்றிற்று அப்படியானால் இன்னொன்று இருக்குமே! ஓடிப் போய் வாந்தி எடுத்தான் பூனை உள்ளிருந்து குதிக்குமளவு மோசமான குமட்டல். வெள்ளக்குட்டி மேசையைப் படுப்பதற்காகத் திண்ணையோடு சேர்த்து உறங்கத் தயாரானார். சாம்பாஜி முகத்தைக் கழுவி அமர்ந்திருந்தான். கை கால்கள் நடுங்கின. சற்றைக்கெல்லாம் அவரது குறட்டை கேட்கத் துவங்கியது. கைமீறிப்போன காரியங்களை நினைத்தபடி நெஞ்சு வெடித்துவிடும் அச்சத்துடன் இருளைப் பார்த்தவாறிருந்தான்.

தசரா விழாவுக்கான முதல் நாள் -விடியலில் மன்னர் குடும்பம் பிரகதம்பாள் ஆலயத்திற்கு நெல் எடுக்கும் சடங்குத் துவங்கப் போவதை அறிவிக்கும் வேட்டுத் துவங்கியது. சாம்பாஜி தனக்கு இனி தற்கொலையைத் துாண்டும் அதிர்ஷ்டம் வாய்க்காதெனப் பிரார்த்திப்பதை கை விட்டு எழுந்தான். உள்ளறைக்குள் இரண்டு முறை எட்டி நோக்கிய பின் திண்ணையிலிருந்த பழைய பெட்டியைத் துாக்கிக்கொண்டு வெள்ளக்குட்டியின் விழிகளை நோக்கியவாறே(சிட்டு பார்க்கிறதாவென கவனிக்கவில்லை) வீட்டை விட்டு இறங்கினான்.
நல்ல வேளையாக ஊர் எல்லையைத் தாண்டும் வரை விடியவில்லை. கவிநாடு ஏரியைக் கடக்கையில் பின்னால் வந்து கொண்டிருந்த குதிரை வண்டி அவனை ஏற்றத் தானாகவே நின்றது. உள்ளே பத்து பதினைந்து ஆட்கள். வண்டிக்கூரையில் நிறைய சாமான்களும் பாத்திரங்களும் இருந்தன. எல்லோரும் ஊரைவிட்டு எங்கோ அவசரமாகக் கிளம்பிச் செல்கின்றனர். உள்ளேயிருந்தவர்கள் இடமில்லை என முனங்கியதும் அவன் தயங்கி விலகினான். முகம் மறைந்திருந்ததால் சாம்பாஜியை அடையாளம் தெரியவில்லை. அடுத்தடுத்து வண்டிகள் நிறைய வந்தன. அழுகையும் ஊரைவிட்டுப் போகும் புலம்பலும் கேட்டது. சத்தியவானின் குதிரை வண்டி நின்றது. அதுதான் கடைசி வண்டியாக இருக்க வேண்டும். குதிரை அனுமதிக்காது போகும்வரை போகட்டும் ஏறிக்கொள்ளுங்கள் என்றான் முகத்தைப் பாராமல்.

சாம்பாஜி தன் உடல் எடையை இலகுவாக்குவதுபோல மெல்ல ஏறி அமர்ந்தான். வண்டியும் மெல்ல அசைந்தது. “பலே ஜார்ஜ் ஏற்றிய இரண்டாவது ஆள் நீர்தான்”. பின்பு குதிரையுடன் புலம்பிக்கொண்டே வந்ததில் சாம்பாஜியிடம் பேச மறந்து போனான். சற்று துாரம் கடந்திருக்கும் பிருஷ்டத்தினடியில் ஏதோ உறுத்தவே ஒரு கையால் மூங்கில் பிடிமானத்தைப் பற்றிக் கொண்டு மறு கையால் எடுத்தான், குதிரையின் கடிவாளக் கயிறு. ஓரமாக ஒதுக்கியபோது பழுப்பு நிறக் காகிதம் அதனடியில் விழுந்தது. மேலே மாட்டியிருந்த அரிக்கனில் திரியை உயர்த்திப் பார்த்தான் கடிதம் பிரித்து படித்ததுதான். யாரோ விட்டிருக்கலாமென்கிற இங்கிதத்தோடு உள்ளே பார்க்காமல் திரியைத் தணியப் போனான், அப்போது அனுப்புகை இடத்தில் தெரிந்த பெரிய முத்திரை சற்று கவனிக்க வைத்தது. அதில் தி ராயல் பிரிட்டிஷ் சர்க்கஸ் கம்பெனி கல்கத்தா, கீழே அடைப்புக் குறிக்குள் (தற்போதைய முகவரி) என இருந்தது. விளக்கை அணையுங்கள் சத்தியவான் சத்தம் போட்டான். அதற்குள் விடிந்து விட்டிருந்தது. கண்களுக்கெட்டும் துாரத்திற்கு ஊர் தெரியவில்லை.

பிற படைப்புகள்

Leave a Comment