உர்சுலா லெ குவின்-இன் கத்தரித்த வலது ஆள்காட்டி விரலை கசங்கிய பழைய செய்தித்தாள் பக்கங்கள் நிரப்பிய அட்டைப் பெட்டியில் சியாமளா அனுப்பியிருந்தாள். விரலுக்கு அடியில் கோணலாக கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத் தாளில் நீல நிற மையில் ‘இதோ உனக்காக. உர்சுலா லெ குவின்’ என்று எழுதப்பட்டிருந்தது. இருபுறமும் சதை திரண்டு தேன் நிறமாய்ப் பிரகாசிக்கும் சியாமளாவின் ஆழமான முதுகுத்தண்டைப் போலவே லேசாய் முன்புறமாக வளைந்திருக்கும் கையெழுத்து.
படிப்பறை மேசைமீது கதகதப்பான மஞ்சள் வட்டமாய் மேசை விளக்கின் வெளிச்சம். லேசாய்க் கை நடுங்க கனமான நிக்கோடின் புள்ளிகளோடு பழுப்பு நிறமாக மாறியிருந்த உர்சுலாவின் கை விரலை இரண்டு விரல்களால் நிமிண்டி எடுத்து எனது மூக்கின் அருகே கொண்டுவந்து ஆழ முகர்ந்தேன். மூக்குக்குள் பழைய சிகரெட் டப்பாக்களின் வாசனை போன்ற ஒன்று கனமாய் ஏறியது. உர்சுலா எழுதிய பல்லாயிரம் வார்த்தைகளின் நிழல்கள் அந்த விரல் நெடுக சிவப்பு நகப்பூச்சு தீற்றியிருந்த விரல் நகத்துக்கு மேலிருக்கும் மேட்டில், விரல் மூட்டுகளில் கறுப்பில் கூடிக் கூடிக் கோபமான குரல்களின் பேசிக் கலையும் சத்தம் எனக்குத் தெளிவாய்க் கேட்டது.
உடலுறவுக்குப் பிறகு சுவருக்கு ஓரமாய் போடப்பட்டிருந்த பல்கலைக்கழக ஹாஸ்டல் கட்டிலில் ஒரு குவியல் கால்களாகவும் கைகளாகவும் மார்புகளாகவும் கிடந்தபடி காதோரங்கள், உதட்டின் வளைவுகள், ஈரமான தலைமயிர் ஆகியவற்றில் ஒட்டியிருக்கும் உப்பு வாசத்தைச் சுவாசித்தபடி நானும் சியாமளாவும் உர்சுலா லெ குவின்-இன் நாவல்களையும், சிறுகதைகளையும் விவாதித்து இருக்கிறோம்.
“புனைவு என்பதே ஊகம்தானே. இதில் என்ன தனியாக எதிர்காலத்தைப் பற்றி ஊகமாய் எழுதுவது?” என்று சியாமளா என் கரத்தைத் தனது சூடான மார்பில் அழுத்தி வைத்தபடி அரைத் தூக்கத்தில் முனகுவாள்.
“ஒருவேளை புனைவு என்பது கேள்விகளே இல்லாத இடமாய் மாறிப்போனதாக அவர் நினைத்திருக்கலாம்.”
“அப்படியென்றால் நான் புனைவா ஊகமா?”
எனது அடிவயிற்றில் ஆமை ஓடுபோல் வழவழப்பாக இருந்தது சியாமளாவின் பின்புறம்.
“முக்கால்வாசி புனைவு. இந்த இடம் மட்டும் எப்போதும் ஊகம்.”
ஒற்றை விரலால் சியாமளாவின் மார்பிலிருந்து அவள் வயிற்றின் அடிப்பாகம்வரை இழுத்தேன். அவள் உடம்பில் பயணம் செய்த என் விரலுக்குப் பின்னால் சன்னல் வழியாக எங்கிருந்தோ அறைக்குள் விழுந்த வெளிச்சம் சியாமளாவின் பழுப்பு உடல்மீது வெள்ளிப் பட்டையாய் நீண்டது. என் விரல் வந்து நின்ற இடத்தில் தொப்புளைத் தாண்டி வெண்ணிறமாய்த் திரண்டிருக்கும் சின்ன தொந்தி. அதற்கு ஓரமாய் அடர்த்தியும் ஈரப்பதமும் நிறைந்த மழைக்காடு.
சியாமளாவின் முகவரி உள்ளாதா என்று அட்டைப் பெட்டியை இரண்டு மூன்று முறை புரட்டிப் பார்த்தேன். ஆனால் அட்டையின் மேல்புறத்தில் கறுப்பு மையில் எழுதப்பட்டிருந்த என் பெயரும் விலாசமும் தவிர வேறெதுவும் அதன்மீது எழுதப்பட்டிருக்கவில்லை. வலது பக்க மேல் முனையில் தென்பட்ட சிவப்பு நிற அஞ்சல் குறிகள் எந்தத் தகவலும் அறிந்து கொள்ளாதபடி கலங்கலாக இருந்தன. பெட்டியின் அருகில் நான் அலட்சியமாக வைத்த உர்சுலாவின் விரல் அறையிலிருக்கும் வெளிச்சத்தை எல்லாம் தன்னிடம் இழுத்துக் கொண்டதைப்போல அறை மொத்தத்தையும் இருளில் ஆழ்த்திவிட்டு அதுமட்டும் பிரகாசித்தது.
“இந்தக் கதையில் உண்மையில் இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.” என்று நாங்கள் இருவரும் கடைசியாகச் சந்தித்தபோது சியாமளா சொல்லியிருந்தாள். பல ஆண்டுகளாகப் பணப் பற்றாக்குறையால் தள்ளாடிவந்த பல்கலைக் கழகச் சமூகவியல் துறை காலாண்டு விடுமுறைக்குப் பின் மூடப்படும் என்று அறிவிப்பு அன்று பிற்பகல் வெளியாகியிருந்தது. நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த மர இருக்கைகளின் பின்னணியில் நூலகத்திலிருந்து அள்ளிய கனமான சமூகவியல் புத்தகங்களை மார்பில் சாய்த்தபடி பல மாணவர்கள் முதுகைப் பின்னோக்கி வளைத்தபடி தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். குடைபோல் கணுக்கால்களைச் சுற்றிக் காற்றில் எழும்பிய நீண்ட சாம்பல் நிறப் பாவாடையை அணிந்திருந்த முதிய பேராசிரியை ஒருத்தி கலைந்திருந்த தனது தலைமயிரை கைவிரல்களால் கலைத்துவிட்டுப் பிறகு கைகளை உயரத் தூக்கியவளாகப் புத்தகங்களைத் தூக்கிச் செல்லும் மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் பரிதாபமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“அந்த இரண்டு பேரில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த எழுபது வயது தையற்காரர். கழுத்தில் புற்றுநோய் கட்டி வளர்ந்து இன்னும் சில வாரங்களில் நிச்சயமாகச் செத்துப் போய்விடுவார் என்ற நிலையில் இருந்தவர் எங்கள் கிராமத்துக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் வாழ்ந்துவந்த ஒரு கிழட்டு விதவையின் சாவுக்குப் போயிருக்கிறார். செத்துப்போன கிழவி மிகவும் சுவாரஸ்யமானவள். திருமணமான இரண்டு மாதங்களிலேயே பாதுகாப்பு அதிகாரி வேலை முடிந்து பழுத்த பின்னிரவில் வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில் அவளுடைய கணவன் லாரி அடித்துச் செத்துப் போனான். அந்த நாளிலிருந்து ஐம்பத்திரண்டு ஆண்டுகளாய் இந்தக் கிழவி தரையில் உடல்நீட்டித் தூங்காமல் இருந்திருக்கிறாள். உப்பில்லாத கையளவு உணவை ஒரு நாள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டிருக்கிறாள். இதனால் கிழவியை அந்தப் பிரதேசம் முழுவதும் தெய்வாம்சம் உடையவளாகக் கொண்டாடியது. தையற்காரக் கிழவன் கிழவியின் வீட்டை அடைந்தபோது அவள் பிணத்தை நடுவீட்டில் ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நீட்டிப் படுக்க வைத்திருந்தார்கள். அவள் உடலை உறவினர்கள் அப்போதுதான் குளிப்பாட்டி முடித்திருந்ததால் அவளுக்கு உடுத்தியிருந்த பச்சை நிறச் சேலையும் ரவிக்கையும் ஈரமாகவே இருந்தன.
சடங்கு நடத்த வந்திருந்த கிராமத்துப் பூசாரி கிழவியின் வீட்டு வாசலில் நின்றபடி சிறு மத்தளத்தைக் குச்சியால் தட்டியபடி ஒப்பாரிப்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது பூசாரியின் முகத்தில் ஏற்பட்ட உக்கிரமான மாறுதல்களைப் பார்த்த எட்டு மாத கைக்குழந்தை ஒன்று வாய்விட்டுக் கதறி அழுதது. அந்த இடம் முழுவதும் கனமான பச்சை நிறக் கடலாய்ப் பரவிய பூசாரியின் பாட்டுச் சத்தத்தில் மெல்லிய போதை போன்ற ஒரு மயக்கத்துக்குள் அவள் பிணத்தின் முன்னால் அமர்ந்திருந்தவர்கள் போன நேரத்தில் கிழவியின் ஈரமான ரவிக்கையில் சின்னஞ் சிறிய வெள்ளைப் பூவாகத் தாய்ப்பால் துளி ஒன்று பெருகியிருக்கிறது. இந்த அதிசயத்தை அந்தக் கிராமத்தில் விபச்சாரத் தொழில் செய்து வந்த கெங்கம்மாதான் முதலில் கவனித்தாள். அவள் போட்ட கூப்பாட்டில் கூடத்தில் இருந்த மற்றவர்களும் ‘அதிசயம், அதிசயம்’ என்று கூவிக் கொண்டு வாசலிலில் நின்று சிறு மத்தளத்தை வாசித்துக் கொண்டிருந்த பூசாரியிடம் விஷயத்தைச் சொல்ல ஓடினார்கள். அந்த நேரத்தில் கிழவியின் வீட்டினுள் கூடத் தொடங்கியிருந்த அரையிருட்டில் மெல்ல அதிர்வதுபோல் ஜ்வலித்துக் கொண்டிருந்த தாய்ப்பால் துளியைக் கண்கொட்டாமல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த கிழவன் பூர்வ ஜன்மத்தின் ஏதோ ஒரு கிளர்ச்சியால் உந்தப்பட்டவன்போல வாயைக் கிழவியின் மார்போடு வைத்து அந்த ஜீவ ரசத்தை ஆசைதீர உறிஞ்சிக் குடித்தான். அடுத்த நாள் காலை எழுந்த போது அவன் கழுத்தில் இருந்த கட்டி முற்றாக மறைந்திருந்தது.”
சியாமளா முதல் கதையைச் சொல்லி முடித்தபோது அவளுக்கு லேசாய் மூச்சிரைத்தது. நான் பல்கலைக்கழக டீ சட்டைக்குள் பொங்கியிருந்த அவள் மார்பை கவனித்தபடி இருந்தேன். பவளப் பாறைத் துண்டுபோல் சிவந்து கூர்மையாய் இருந்த அவளுடைய நாக்கின் நுனியைத் தனது உதடுகளின்மீது ஒருமுறை ஓடவிட்டு விட்டுச் சியாமளா பேச்சைத் தொடர்ந்தாள்.
“அடுத்தவள் கிழவன் வாழ்ந்த அதே கிராமத்தில் வாழ்ந்துவந்த ஒரு திருமணமான சலவைக்காரி. பிணத்திலிருந்து கிளம்பிய தாய்ப்பாலைப் பருகியபின் கிழவனின் கட்டி குணமானதைக் கேள்விப்பட்டவள் அவரைத் தினமும் போய்ப் பார்க்க ஆரம்பித்தாள். கிழவனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. சலவைக்காரி அவன் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் குறைந்தது அரை பாட்டில் மதுவையாவது எடுத்துக் கொண்டு போவாள். ஊர்க்காரர்கள் அவள் நடத்தையைப் பற்றி அரசல்புரசலாக சந்தேகப்பட்டாலும் கிழவனுக்கு நடந்த அதிசயத்தால் ஏற்பட்ட பக்திப் பரவசத்தால்தான் இதையெல்லாம் அவள் செய்வதாக தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.
ஒரு நாள் காலை வயிறு முட்டக் குடித்த நிலையில் கிழவன் தன் தையற்கடையில் செத்துக் கிடந்திருக்கிறான். அவன் சாவுக்குப் பிறகு வீட்டின் எல்லா இடத்திலும் அவன் மகன் கிழவன் ஏதேனும் பணத்தை விட்டுப் போயிருக்கிறாரா என்று தேடியிருக்கிறான். ஓர் பகல் ஓர் இரவு வீட்டைச் சல்லடைப் போட்டுத் தேடியும் அவன் கைகளில் கொஞ்சம்கூட பணமோ நகையோ அகப்படவில்லை. மகாகஞ்சனான தனது தகப்பன் சின்ன வயதில் ராஜ குடும்பத்துக்குத் தையல் வேலை செய்து சேர்த்த பணத்தைப் பாதுகாப்புக்காகத் தங்கப் பற்களாக மாற்றிப் பொய்ப்பல் கட்டியிருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்ட அவன், வீட்டிலிருந்த சிறு சுத்தியலால் கிழவனின் பற்களை ஒவ்வொன்றாக உடைத்து அவர் வாயை வலியத் திறந்திருக்கிறான்.
துரதிர்ஷடவசமாக அவன் தகப்பனின் வாயில் தங்கப்பற்கள் ஏதும் இல்லை. ஆனால் கிழவனின் நாக்கை யாரோ கத்திரிக்கோலால் வெட்டி எடுத்திருந்தார்கள். சலவைக்காரி மீது சந்தேகப்பட்டு ஊரார் அவளை விசாரிக்க அவளும் கிழவனுக்கு அளவுக்கு அதிகமான மது ஊற்றிக் கொடுத்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டாள். கிழவனுடைய உடல் பாகங்களில் ஏதோ ஒன்றைச் சாப்பிட்டால் வயதே ஆகாமல் அவள் என்று இளமையாகவே இருக்கலாம் என்று கருதியதாகவும் யாரும் பிணத்தின் வாயைத் திறந்து பார்க்க மாட்டார்கள் என்று நினைத்ததால் கிழவனின் நாக்கை அறுத்து மென்று தின்றதாகவும், மதுவில் தோய்ந்த நாக்கு நல்ல உயர்ந்த தரமுடைய கோழி இறைச்சியின் மணத்தோடும் பதத்தோடும் இருந்ததாகவும் அவள் சொன்னாள். பெண் என்பதால் அவளுக்கு மரண தண்டனை தரப்படாமல் ஆயுள் தண்டனையே கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் ஆகியும் எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் பெருநகரத்தில் உள்ள சிறையில் பளபளக்கும் நீண்ட அழகிய கூந்தலோடும், அளவாய் வெட்டி சிவப்பு மதுவில் துவைத்த பஞ்சைப் போன்ற உதடுகளோடும் பொன்னிறமான தோல் நிறத்தோடும் அந்தப் பெண் இன்றும் வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார்கள். நான் சிறுமியாய் இருந்தபோது அவளுடைய கொள்ளுப் பேத்தியின் சாவுக்காக அவளை ஊருக்கு அழைத்து வந்தபோது அவளை ஒரு கணம் பார்த்திருக்கிறேன். கோடைக்கால நடுப்பகல் சூரியனை மிஞ்சும் ஜோதியுடன் இருந்தாள்.”
சியாமளா இந்தக் கதைகளை என்னிடம் சொன்னபோது என் மனதுக்குள் ஆயிரம் பாதைகளும் குறுக்குப் பாதைகளும் நிறைந்த மாபெரும் நகரமாக ஒரு சிந்தனை உருவாகிப் பேராசையாக வளர்ந்து நின்றது. நான் சியாமளாவிடம் என் உள்ளத்தின் சாசுவதமானதும், நிராகரிக்கக் கூடாததுமான ஆசையைச் சொன்னேன். அந்த நேரத்தில் சியாமளா சிறகடித்துப் பறப்பதற்கு முன்னால் அடுக்குமாடிக் கட்டடத்தின் விளிம்பிலிருந்தபடியே வானத்தை ஆராயும் மைனாவைப்போல் தலையை லேசாய்ச் சாய்த்தபடி பேசிக் கொண்டிருந்தாள். பல்கலைக் கழகப் படிப்புப் பாதியில் நின்று போனாலும் அசாதாரணமான மனிதர்களின் உடல்களில் சேகரித்து வைத்திருக்கும் அபரிதமான சக்தியை அறுவடை செய்யப் போவதாகச் சொன்னாள். அப்படிச் சொன்ன நேரத்தில் சியாமளாவின் அகலமான மஞ்சள் நிறக் கண்கள் ஜுரம் கண்டதைடப்போல் சுடர்விட்டன. நான் அவள் பேசி முடிக்கப் பொறுமையாகக் காத்திருந்தேன்.
“இது எல்லாம் நீ முன்னால் சொன்னதுதானே சியாமளா?”
“ஆமாம் ஆனால் இதற்கு முன்னால் என் திட்டங்கள் அனைத்தும் வெறும் புனைவாக மட்டுமிருந்தன.”
“அப்படியென்றால் எனக்கும் உன்னிடம் வைக்க ஒரு கோரிக்கை இருக்கிறது சியாமளா.”
கண்களை மூடி தன் அழகிய மென்மையான நாசித் துவாரங்களால், பளிங்குபோல் வெண்மையான கண்ணிமைகளால், மெல்லிய நீலோத்பல மொட்டாய் மலர்ந்திருந்த உதடுகளால், காமத்தின் உக்கிரம்போல் சிவந்த கைவிரல் நுனிகளால் என் வார்த்தைகளை உறிஞ்சிக் குடிப்பவள் போல ஏதும் பேசாமல் சியாமளா அமர்ந்திருந்தாள். அவ்வாறு அவள் அமர்ந்திருந்தபோது பல்கலைக்கழகச் சமூகவியல் துறைக் கட்டடத்தின் கண்ணாடிக் கூரை வழியாகப் பொழிந்த வெயில் கிரணங்கள் அவள் முகவாயில் பட்டு அவள் வாய்க்கடையோரங்களில் இரண்டு பேரழகிய கோரைப் பற்கள் முளைத்திருப்பதாக எனக்குத் தோன்றியது. எங்களைச் சுற்றி அலைந்து கொண்டிருந்த தூசுப் பந்துகள் அவள் தலையின் உச்சியிலிருந்து மேலேறிப் பொன்னிறமான கிரீடம்போல் ஜ்வலித்தன.
மிகத் தாழ்ந்த குரலில் ‘ஒன்றோடு ஒன்று தொடர்பே இல்லாத இரு வேறு சூட்சுமமான விஷயங்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி ஒன்றினால் ஒன்றை உருக்குலைத்துப் பயனடைய முயல்வது போன்ற கீழறுப்புக் காரியம் உலகத்தில் இல்லை. அதன் விளைவுகள் பயங்கரமானதாய் இருக்கக் கூடும். கேட்பதை நன்றாக யோசித்துத்தான் கேட்கிறாயா?”
“இதனால் நமக்கு அரசாங்கத்தால் எந்த பாதிப்பும் வராதே.”
சியாமளா தனத அழகான மஞ்சள் நிறக் கண்களைத் திறந்து என்னை சில மணித்துளிகள் அசையாமல் உற்றுப் பார்த்தாள். பிறகு தனது தலையை நன்றாகப் பின்னால் சாய்த்துக் கலகலவென்று சத்தமாகச் சிரித்தாள்.
“ஆம்லெட் செய்யணும்னா சில முட்டைகளை உடைத்துதான் ஆகணும் என் நண்பனே.”
ராணுவப் பயிற்சியின்போது காட்டுக்குள் போவது என்பார்கள். முழுவதுமாய்க் காட்டுக்குரிய வண்ணங்களையே உடம்பெங்கும் பூசிக்கொண்டு, காட்டின் மரப்பட்டைகளையும் தாவரக் கிளைகளையும் அதிகமாக உரசி எதிரிக்கு நமது இருப்பைக் காட்டித் தராத, அவற்றில் சிக்கிக் கொள்ளாத குறைந்தபட்ச ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, காட்டின் உள்ள பச்சைத் தாவரங்களையும், ரத்த வாடை அடிக்கும் பச்சை மாமிசத்தை மட்டுமே சாப்பிட்டு, காடோடு காடாய், காட்டின் ஒரு இயல்பான பகுதியாய் மாதக் கணக்கில் வாழ்வது.
அன்று நானும் அவளும் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை கட்டடப் பொது இடத்தில் கடைசியாய்ச் சந்தித்துப் பிரிந்த பின்னால் சியாமளா ஒருவகையில் காட்டுக்குள் போயிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். ஆன்மீகப் பெரியவர்கள், மதத் தலைவர்கள், அசாதாரணமான செயல்களைச் செய்தவர்கள் ஆகியோருடைய உடல்கள் எவ்வகையிலேனும் சிதைக்கப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டதாக உலகெங்கிலும் இருந்து வரக்கூடிய செய்தித் துணுக்குகளை ஆர்வத்துடன் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இந்தச் செய்திகள் முதலில் முக்கியத்துவமே இல்லாத இணையப் பத்திரிகைகளில் மட்டுமே அவ்வப்போது வந்தன. அவற்றைப் படிக்கும்போது காட்டுக்குள் மறைந்திருக்கும் சியாமளாவின் தோளின் பழுப்பை, அவள் நடக்கும்போது முன்னும் பின்னும் மெல்ல அசையும் வளமையான அவளுடைய வெண்மையான உள்தொடைகளின் கனத்தை சுடர்விடும் கண்களை ஒரு கணம் பார்த்துவிட்டது போன்ற குறுகுறுப்பு எனக்குள் ஏற்பட்டது.
நாட்கள் போகப் போக செய்திகள் முக்கியப் பத்திரிகைகளின் மாலைப் பதிப்புகளிலும் பின்னர் காலைப் பதிப்புகளின் உள்பகுதியிலும் கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டு வெளிவரத் தொடங்கின.
வீட்டு வேலைகளுக்கு உதவும் ப்ளையர்களால் விழிப்பந்துகளும் நாக்கும் அகற்றப்பட்டுத் தனது கோவில் பலிபீடத்தின் முன்னால் கைகள் விரியச் செத்துக் கிடந்த பேராயரின் விவரமும் படமும் நகரத்தின் மிக முக்கியப் பத்திரிகையின் காலைப் பதிப்பின் மூன்றாம் பக்கத்தில் வெளியான போது சியாமளா காட்டை விட்டு விலகி நகரங்களுக்குள் சர்வ சுதந்திரமாய் நகர்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.
அதற்குள் எனது பல்கலைக் கழகப் படிப்பும் முடிந்து சுனிதாவோடு திருமணமும் நடந்திருந்தது.
சியாமளா அனுப்பியிருந்த உர்சுலா லெ குவின்-இன் விரலை மீண்டும் கையில் எடுத்து அதன் மீது அவள் வாசம் வீசுகிறதா என்று முகர்ந்து பார்த்தேன். எனக்குச் சாவு என்பதோ பிணம் என்பதோ பயமுறுத்துவதாய் இல்லை. காவல்துறையில் சார்ஜெண்டாய் வேலை பார்த்து வந்த என் தந்தை விபச்சார வழக்கில் கைதான ஒரு தாய்லாந்து விலைமாதின் மீது புகார் பதியாமல் இருக்க அவளிடம் பணத்தையும் உடலுறவையும் பெற்றுக் கொண்டதால் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு வருமானத்துக்காக பேய்களிடமிருந்து நாலு நம்பர் பெற்றுக் கொள்ள மாதா மாதம் சுடுகாட்டுக்குப் போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார். எங்களை அழைத்துச் சென்றவன் என் தந்தை வேலையில் இருந்த போது அப்பாவுக்குப் பரிச்சயமாகி இருந்த அடகுக்கடைச் சீனன். திருட்டு நகைகளைத் தேடிக் கண்டுபிடிக்க அடகுகடைகளில் போலீஸார் சோதனைக்கு வரும் தேதியையும் நேரத்தையும் என் தந்தை அவனுக்குப் பல முறை முன்கூட்டியே சொல்லியிருந்தார். பெரும்பாலும் அமாவாசைக்கு முந்தைய நாளில்தான் போவோம்.
நல்ல வெயில் காலத்தில்கூட அந்தச் சுடுகாட்டு மண் ஆசையுள்ள பெண்ணின் உடல்போல ஈரமும் வழவழப்பும் மிகுந்ததாக இருக்கும். தற்கொலை செய்து செத்தவர்களின் பெயர்களையும், வாழ்க்கையை அனுபவிக்காமல் மிகுந்த வன்முறையிலோ எதிர்பாராத விபத்துகளிலோ செத்தவர்களின் பெயர்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறையின் விவரங்களையும் சீனன் கையில் வைத்திருப்பான். புதுப் பிணத்துக்கு கிராக்கி அதிகம். ஆனால் எல்லாப் பேய்களும் கழுத்தறுத்த கறுப்புக் கோழியின் ரத்தத்துக்கும் மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கள்ளுக்கும் மசிவதில்லை. தேர்ந்தெடுத்த கல்லறையின் ஓரமாய் நாற்பத்து ஐந்து டிகிரி கோணத்தில் துளையிட்ட முழங்கை நீள மூங்கில் குச்சி ஒன்றை நட்டு, கோழியைத் துடிக்கத் துடிக்கப் பலி கொடுத்து கல்லறையின்மீது கள்ளை ஊற்றி அதற்குள்ளிருக்கும் ஆன்மாவிடம் நீ எண்களைக் கொடுத்தால் இதை எல்லாம் செய்கிறேன் என்று பேரம் பேச வேண்டும். சரியான பேரம் படிந்தால் பேய்கள் துளையிடப்பட்ட மூங்கில் கழியின் வழியாக காற்றில் கரைவதுபோல் ஒலிக்கும் மிகச் சன்னமான குரலில் பேசி நாலு நம்பர்கள் தரும்.
பேய் அப்படிக் கொடுக்கும் எண்கள் நிச்சயம் ஜெயிக்கும். ஆனால் வாக்கு மாறாமல் அது கேட்ட காரியங்களைச் செய்துவிட வேண்டும். பெரும்பாலும் பேய்கள் படையல்தான் கேட்கும். சில பேய்கள் யாரையாவது பழி வாங்கச் சொல்லும். அப்பா சில முறை பேய்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பணத்தை ஜெயித்திருக்கிறார்.
எனக்கு இந்த விஷயத்தில் அந்த பேரம் பிடித்திருந்தது. வீட்டின் கதவை அகால நேரங்களில் படபடவென்று தட்டியும், வீட்டின் முகப்பிலெல்லாம் சிவப்பு நிறச் சாயத்தைக் கொட்டியும் அண்டை வீட்டார்கள் எட்டிப் பார்க்கும் அளவுக்குக் கத்திப் பேசிய கடன் வசூலிப்பவர்களின் தொல்லை தாங்காமல் அம்மா எனது படுக்கையறை மின்விசிறியில் ஒரு பிற்பகல் தூக்கு மாட்டிக் கொண்டபோது அவளும் சுடுகாட்டில் நாலு நம்பர் வேண்டி அறுக்கப்பட்ட கறுப்புக் கோழி மாதிரியே இருந்தாள்.
அவளைப் புதைத்த கல்லறைக்குப் போய் அப்பா நான்கு எண்களை என்றுமே கேட்காதது அந்தப் பதின்மூன்று வயதில் எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அம்மா நிச்சயம் நமக்கு சலுகை தந்திருப்பார் என்று நம்பினேன்.
கதவைத் தட்டிவிட்டுச் சுனிதா என் அறைக்குள் வந்தாள். மேசைமீது விரித்து வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியையும் அதைச் சுற்றியிருந்த தாள்களையும் சிரித்த முகத்தோடு பார்த்தாள்.
“இன்னமும் வேலைக்குக் கிளம்பலையா?”
“இதோ போறேன்.”
என் கழுத்தில் மாட்டியிருந்த கழுத்துப்பட்டையை நன்றாக மேலே நகர்த்திக் கொண்டு எனது வீட்டின் வாசலுக்கு நடக்கத் தொடங்கினேன். நான் என்றும் சுனிதாவிடம் அன்புள்ளவனாக இருந்திருக்கிறேன். சுனிதாவிடம் முகம் சுளிக்காமல் என்றும் சிரித்த முகத்தோடு பேசுவது என் நெடுநாள் பழக்கம்.
என் தொழிலைத் தவிர என் வாழ்க்கையின் வேறெந்த பகுதியிலும் ஊகமென்பதே இல்லை. என் தொழில்மட்டும் ஊகத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஊகத்தின் அடிப்படையில் கதைகளை வெற்றிகரமாக எழுதிய உர்சுலா லெ குவின்-ஐ நான் மனதாரக் காதலித்தேன். என் சரியான ஊகத்துக்கே என்னை நம்பி வருபவர்கள் எனக்குப் பணத்தை அள்ளித் தருகிறார்கள். என் தொழிலில் உச்சத்தைத் தொடுவதற்காக நான் உர்சுலாவைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி எனக்கு எந்த விதமான குற்ற உணர்வும் தோன்றவில்லை.
பங்குச் சந்தை என்பது ஊகங்களைப் புரட்டிப் போடும் ருசிகரமான விளையாட்டு. அந்த விளையாட்டில் நான் ராஜா. இனி என் லாபம் மிக சிறப்பானதாக இருக்கும் என்று நம்பினேன்.
சுனிதாவை ஆழமாக முத்தமிட்டுக் கிளம்பிய எனது வாய்க்குள் கோழியின் பதத்தோடும் மணத்தோடும் ஒரு விசித்திரமான சுவை நிறைந்திருந்தது.