தலைகீழ் பிரிவு
அது எப்போதோ இருந்த வேறொரு காலம். ஆயிரக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து நிர்மாணித்துக் கொண்டிருக்கும் மகத்தான நகரை நோக்கி மீண்டும் ஒரு பயணத்தில் இருந்தான் அந்தச் சிறுவன். ஆனால் இம்முறை தனது மாமாவுடன் பயணம் போகிறான். விமானப் புறப்பாடு ஏனோ மிகவும் கடினமாக இருந்தது. விமானத்துக்குள் குழப்பத்துடன் தடுமாறி விழுந்தான். சோர்வு போல ஏதோ ஒரு உருண்டை திரண்டு வயிற்றுக்குள் சுழன்றது. அவனிடம் யாராவது பேசும்போது புன்னகைப்பது போன்ற பாவனை மட்டுமே செய்தான். தன் அன்னை உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். அதனால்தான் அவனை அங்கிருந்து அனுப்புகிறார்கள், உறுதியாக நீண்ட நாட்களுக்கு, மிக உறுதியாக. ஏனென்றால் அவர்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். அதனால்தான் பொம்மைகளையும் விளையாட்டுப் பொருட்களையும் அவன் தன்னுடன் எடுத்து வர வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அத்தை அவனுக்கு மிக விருப்பமான பொம்மையை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அது அதிர்ஷ்டமான பொம்மையும் கூட: அவனுடைய படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த, பழுப்பு நிறக்கால் சராயும், இறகுகள் பொருத்தப்பட்ட சிவப்புத் தொப்பியும் அணிந்திருக்கும் குட்டியான குரங்கு பொம்மை அது. அதற்கு மட்டும் மனிதனைப் போல உயிருடன் வாழவும் நடமாடவும் முடியுமென்றால் மற்றெவரையும் விட மிகவும் குறும்பாகவும், தந்திரங்கள் நிறைந்ததாகவும் இருந்திருக்கும். பெரியவர்கள் அளவுக்கதிகமான வாஞ்சையுடன் அவனிடம் நடந்து கொள்ளக்கொள்ள சிறுவனின் மனதில் அதிகளவு பயம் ஏற்படத் தொடங்கியது. மாமா, நகைச்சுவையான தொனியில் அவனை ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கச் சொன்ன போதும், அங்கிருந்த சஞ்சிகைகளை எடுத்துத் திறந்து பார்க்கச் சொன்ன போதும் அவருடைய குரலில் அவ்வளவு உண்மை தெரியவில்லை. மற்ற விஷயங்களும் அவனைப் பயமுறுத்தின. அம்மாவையே நினைத்துக் கொண்டிருந்தால் அவனுக்கு அழுகைதான் வரும். அம்மாவும் துக்கமும் ஒரே வேளையில் ஓரிடத்தில் பொருந்திப் போக மாட்டார்கள்; ஏதோ ஒன்று அவனைப் புரட்டிப் போட்டது. அது பயங்கரமாக இருந்தது, எதுவுமே சாத்தியமில்லாததாகத் தோன்றியது. அவனுக்குத் தன்னையே புரிந்து கொள்ள முடியவில்லை; எல்லாமே குழப்பமாக இருந்தது. இந்த உலகத்தில் உள்ளது எல்லாவற்றையும் விடப் பெரிதாக ஏதோ ஒன்று நிகழக்கூடும், நிகழப் போகிறது என்று தோன்றியது.
அடுக்கடுக்கான மேகப் பொதிகள் தொலைவில் வெவ்வேறு திசைகளில் கலைந்து செல்வதைப் பார்ப்பதும் கூட பயனற்றதாக இருந்தது. அங்கிருந்த அனைவரும், விமானம் ஓட்டுபவரும் கூட துயருற்றவர்களாகக் காணப்பட்டார்கள். இயல்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவும் காட்டிக் கொள்வது போல இருந்தது. மாமா, தனது பச்சை வண்ண கழுத்து டையால் கண் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டார். அம்மாவின் உடல்நிலை அபாயகரமாக இருந்திருந்தால் நிச்சயமாக மாமா இப்படி அழகான டை அணிந்து வந்திருக்க மாட்டார். இப்போது, அவனுக்குத் தன் சட்டைப்பையில் சிறிய குரங்கு பொம்மையை வைத்திருப்பதை நினைத்து சட்டென இரக்கம் மேலிட்டது. அது எப்போதும் மாறாமல். அதே மகிழ்வுடன், இருக்கும் சின்னஞ் சிறிய சிவப்புத் தொப்பியின் மீது உயரமான இறகு செருகிய வெறும் பொம்மை. அதை எறிந்து விட வேண்டுமா? இல்லையில்லை; பழுப்பு நிறக் கால்சட்டை அணிந்திருக்கும் குரங்கு அவனுடைய குட்டித் தோழன், அதனால் அப்படியெல்லாம் மோசமாக அவனை நடத்தக் கூடாது. இறகு தாங்கியிருந்த அந்தத் தொப்பியை மட்டும் எடுத்து எறிந்தான்; இப்போது அது இல்லை. அந்தச் சிறுவன் தனக்குள்ளேயே, தனது இருப்பின் ஏதோ ஒரு மூலையில் ஆழ்ந்து போனான். நினைவுகள் பின்னோக்கிச் செல்ல. அந்தச் சிறுவன் பாவம், வேறுவழியின்றி அங்கு அமர்ந்திருந்தான்.
அவன் உறங்க வேண்டுமென்று ஏங்கினான். நிம்மதியாக உறங்கத் தேவையான நேரத்தில் விழித்திருக்கும் நிலையை மனிதர்கள் தவிர்க்க வேண்டும். ஆனால் அப்படி நடக்காது. கண்களை மேலும் அகல விரித்தபடி, நிலையற்ற சிற்பங்களை அமைத்துக் கொண்டிருக்கும் மேகக் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். மாமா அவர் கைக்கடிகாரத்தை நோட்டமிட்டார். செல்ல வேண்டிய இடத்தை அடைந்தவுடன் அங்கு என்ன நடக்கப் போகிறது? அது, இது என எல்லாமே ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை. வாழ்க்கை எப்போதாவது நிதானிக்காதா, அப்போது மனிதர்கள் ஒரே சமதளத்தில் வாழ்ந்து தங்களை சீர்படுத்திக் கொள்ள நேரம் கிடைக்குமல்லவா?அவனுக்குத் தெரிந்திருப்பது போலவே, வீடுகள் கட்டப்பட்டிருக்கும் அந்த நிலத்தின் அருகே உள்ள காட்டின் மரங்களின் அளவைப் பற்றி அந்தத் தொப்பியில்லாத குரங்குக்கும் தெரியும். பாவம் அந்தக் குரங்கு, எவ்வளவு குட்டியானது, எவ்வளவு தனிமை வாய்ந்தது, தாயற்றது; சட்டைப் பைக்குள் கை விட்டு குரங்கைப் பற்றிக் கொண்டான். அந்தக் குரங்கு அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே உள்ளே இருட்டில் அழுது கொண்டிருப்பது போலத் தோன்றியது.
ஆனால் அம்மா என்பது குறிப்பிட்ட கணத்துக்கான மகிழ்ச்சி மட்டுமே. இப்படி அம்மா ஒரு நாள் நோயில் விழப்போகிறார் எனத் தெரிந்திருந்தால் அவளருகிலேயே எப்போதும் இருந்திருப்பான், அவளை நன்கு பார்த்துக் கொண்டிருந்திருப்பான் மற்றும் அவனால் இயன்றவரை அம்மாவுடன் இருப்பதையும், அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் கவனமாக மனதிலிறுத்திக் கொண்டிருப்பான். வேறு எதனோடும் விளையாடச் செல்லாமல், மூச்சு விடும் நேரம் கூட அவளைப் பிரிந்திருக்காமல், எந்த மாற்றங்களையும் வேண்டியிராமல் பக்கத்திலேயே இருந்திருப்பான். இப்போது அவள் நினைவுகளில் மூழ்கி எப்படி இருக்கிறானோ, அதைப் போலவே. அவர்கள் சேர்ந்திருந்த நேரத்தை விட தற்சமயம் அம்மாவுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தான்.
பெரும் வெளிச்சத்தை இடையறாது ஊடுருவிக் கொண்டு விமானம் அசையாமல் பறந்து செல்வது போல இருந்தது. ஆனால் நிச்சயமாக, கருப்பு மீன்கள், வளைந்த முதுகுடனும், கூரிய கொடுக்குகளுடனும் வானில் முகில்களுக்கப்பால் அவர்களைக் கடந்து போயின. அந்தச்சிறுவன் சிரமத்திலிருந்தான், கட்டுப் படுத்தப்பட்டிருந்தான். பறந்து கொண்டிருக்கையிலேயே இந்த விமானம் ஒரே இடத்தில் அப்படியே தொங்குவது போல நின்று விட்டால் என்ன ஆவது? அப்படியே பின்னால் பறந்து, பல கல் தொலைவைக் கடந்து சென்றால் அவன் அம்மாவுடன் இருப்பான், அவன் இது வரை கற்பனை செய்தே பார்த்திராத அளவு அவளுடனிருப்பான்.
பறவையின் வருகை
வீட்டைச் சுற்றிலும், பின்பக்கமும் மரங்கள் சூழ எதுவும் மாறாமல் எப்போதும் போலவே இருந்த அந்த வீட்டில் அவனை மிகையான அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள். அங்கு வேறெந்தச் சிறுவர்களுமில்லாமலிருப்பது மிகவும் சங்கடத்துக்குரியதென்றார்கள். அப்படி இருந்திருந்தால் அவன் தனது பொம்மைகளை அந்தச் சிறார்களுக்குக் கொடுத்திருப்பான். இப்போதெல்லாம் அவனுக்கு விளையாடவே பிடிக்கவில்லை. விளையாடுகையில் போதிய கவனத்துடன் இல்லாமலிருந்தால் தீய செயல்கள் நம்மை ஆக்கிரமிக்க வலை விரிக்கின்றன, அவை நமக்காக கதவுக்குப் பின்னால் நின்றபடி காத்திருக்கின்றன.
மாமாவுடன் அவரது ஜீப்பில் அமர்ந்து வெளியே செல்லவோ, மக்களையோ, நிலப்பரப்பையோ, மாசுப் படலத்தையோ பார்க்க அவனுக்கு விருப்பம் எழவில்லை. அப்படியும் வெளியே செல்ல நேரிட்ட போது கண்களை மூடிக் கொண்டு இருக்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்படி அவன் விறைப்பாக இருக்கக் கூடாதென்றும், வாகனத்தின் குலுக்கலுக்கேற்ப முன்னும் பின்னும் அவனது உடலை அசைந்து கொடுக்க வேண்டுமென்றும் மாமா சொன்னார். அவனுக்கு உடல் நலக்கேடு ஏற்பட்டால், மிகவும் நலிந்து போய் விட்டால் எங்கே போவான் அவன்? அம்மாவிடமிருந்து மேலும் தூரமாகப் போய் விடுவானோ அல்லது அருகில் இருப்பானோ? அவன் இதயம் தவித்தது. தன்னுடைய குட்டிக் குரங்கு பொம்மையுடன் கூட அவன் பேசப்போவதில்லை. தாள முடியாத களைப்படைவதற்கு மட்டுமே அந்த நாள் உகந்ததாக இருந்தது.
இரவு கவிந்த பின்னும் கூட அவனுக்கு உறக்கம் வரவில்லை. அந்த இடமெங்கும் சன்னமான குளிர்காற்று விரவியிருந்தது. படுத்திருக்கும் போதும் அவன் மனம் அச்சமுற்றிருந்தது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அம்மா… அவளால்தான் அவனுக்கு உறக்கம் பிடிக்கவேயில்லை. அந்த நிசப்தம், அந்த இருள், அந்த வீடு, அந்த இரவு எல்லாமே அடுத்த நாளை நோக்கி மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தது போலத் தோன்றியது. நாம் விரும்பினாலும் எதுவும் நிற்கப் போவதில்லை அல்லது ஏற்கெனவே தெரிந்த விஷயத்துக்கும், பிடித்ததற்கும் திரும்பிப் போகவும் போவதில்லை. அவன் மட்டும் அறையில் தனியாக இருந்தான். ஆனால் அந்தக் குரங்கு பொம்மையின் இடம் இப்போது படுக்கைக்கு அருகிலிருந்த மேசையில் இல்லை. அது படுக்கையில் கால்களைப் பரத்திக் கொண்டு, மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கும் தோழன். அவனுடைய படுக்கையறைக்கும் பக்கத்திலேயே அமைந்திருந்த மாமாவின் அறைக்குமிடையே மெல்லிய மரத்தாலான சுவர் மட்டுமே இருந்தது. மாமா குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். குரங்கு பொம்மையும்தான், வயதான சிறுவனைப் போல. அவர்கள் அனைவரும் இந்த இரவிலிருந்து எதையாவது அபகரித்துக் கொண்டால்தான் என்ன?
பொழுது விடிந்தபோது, உறக்கமுமில்லாத, விழிப்புமில்லாத ஒரு நிலையில் சிறுவனுக்குள் ஒரு உள்ளுணர்வு தோன்றியது—இனிமையான, இலகுவான உணர்வு. யாரோ ஒருவர் தன் உன்னதங்களை நினைவு கூர்வதைப் பார்ப்பது போல இருந்தது; ஏறக்குறைய அவன் இதுவரை அறியாத எண்ணங்களின் ஒளிப்படங்களைப் போலவும், மகத்தான மனிதரொருவரின் சிந்தனைகளை தன் மனதில் ஏற்றிக் கொள்வது போலவும் இருந்தது. சிந்தனைகள்… என்றோ சிதறிப் போன சிந்தனைகள்.
ஆனால் அந்தக் குறிப்பிட்ட பிரகாச வட்டத்திற்குள்ளிருந்து நிகழ்வுகளின் அழகையும் நற்பண்புகளையும் முழுவதுமாக அறிந்து கொள்வதென்பது ஒருபோதும் முடியாத காரியமென்பதை மனமும் ஆன்மாவும் அறியும். சில வேளைகளில் அவை மிக வேகமாகவும். எதிர்பாராத விதமாகவும் அமைந்து விடுகையில் நாம் அதற்குத் தயாராக இருப்பதில்லை அல்லது நீ எதிர்பார்த்துக் காத்திருந்தது போல அது அத்தனை இனிமையானதாக இல்லாமல் மிகவும் அதிர்ச்சிகரமான கணிப்புகளாகவே இருக்கின்றன அல்லது அவற்றுடன் மோசமான விஷயங்களும் இணைந்திருக்கலாம், இரண்டிலுமே எதுவும் தூய்மையாகவும் தெளிவற்றதாகவும் இருக்கின்றன. அல்லது இந்தக் கணத்தை மேலும் கச்சிதமாக்கக் கூடிய ஏதோ ஒன்று, எப்போதோ நடந்த ஒன்று இப்போது இல்லாமலிருக்கிறது. அப்படி ஏதாவது நடந்தாலும் கூட, அது நகரும் மணித்துளிகளால் துண்டாடப்பட்டு, சுக்கலாக உடைந்து முடிவடையக் கூடியதாக உள்ளது, சிறுவனுக்கு அதற்கு மேல் படுக்கையில் இருப்புக் கொள்ளவில்லை. உடனடியாக எழுந்து ஆடை அணிந்து தயாரானவன் குரங்கு பொம்மையை எடுத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அவனுக்குப் பசியெடுத்தது.
அந்தச் சிறிய வீட்டையும், அதைச் சுற்றியுள்ள அடர் காட்டையும், அகன்ற வெளியையும் இணைக்கும் நீள்பாதை வீட்டு முகப்பின் தாழ்வாரத்தில் அமைந்திருந்தது. அந்த அகன்ற வெளி – சில்லிட்ட, அடர் பனியால், பனித்துளியின் முத்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இருள் பிரதேசம், கீழ்வானின் விளிம்பு வரை, தொடுவானத்தின் எல்லை வரை அது நீண்டிருந்தது. சூரியன் இன்னும் உதயமாகவில்லை. ஆனால் மர உச்சிகளை தங்கக் கீற்றுகளாக ஒளி தீண்டிக் கொண்டிருந்தது. பனித்துளிகளால் கழுவி விடப்பட்டிருந்த புற்களை விட உயர்ந்த மரங்களின் பசுமை அதிகமாகத் தெரிந்தது. நாள் ஏறக்குறையத் தொடங்கி விட்டது—அவை எல்லாவற்றிலுமிருந்தும் ஒரு நறுமணமும், ஒரு பறவையின் கீச்சும் எழும்பியது. யாரோ சமையலறையிலிருந்து காஃபி எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
அதன் பின், ‘ஸ்ஸ்ஸ்’ –யாரோ சுட்டிக் காட்டினார்கள். அசைவற்ற நிசப்தமான பெருவெளியில் டௌக்கன் (பேரலகுப் பறவை) பறவையொன்று சிறகடித்துக் கொண்டிருந்தது. அது மிக அருகில் இருந்தது. தூய்மையான நீலம், பசுமையான நீண்ட தளிர்கள், அவற்றோடு அதன் மீது படர்ந்திருக்கும் பளபளக்கும் மஞ்சள் வரிகளும், இளஞ்சிவப்பு வண்ணமும் அந்தப் பறவை தரையிறங்குகையில் மனதைக் கிறங்கடிக்கும் காட்சியாக அது இருந்தது. மிகப் பெரியதாக, கண்ணைப் பறிக்கும் அலங்காரத்துடன், உலகின் மிகப் பெரிய மலரைப் போல அதன் அலகு இருந்தது. செழித்திருந்த மரத்தின் ஒவ்வொரு கிளையாகத் தாவித் தாவி விருந்துண்டு கொண்டிருந்தது. அங்கிருந்த வெளிச்சம் யாவும் அந்தப் பறவைக்குச் சொந்தமானதாகவும். அது உயர எழும்புகையில் வானில் அவற்றைச் சிதற விட்டுக் கொண்டே எதையும் பொருட்படுத்தாத சுதந்திரத்தோடு, அற்புதமாக நிலை கொண்டிருந்தது போலவும் இருந்தது. மர உச்சியில், கனிகளுக்கு நடுவே, டுக்-டுக் எனக் கொத்தியது, அதன் பின் தனது அலகைக் கிளையிலேயே சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. கண் முன்னே எந்த முன்னறிவிப்புமின்றி நிகழ்ந்த அந்தக் காட்சியை விழிகள் விரியப் பார்த்த அந்தச் சிறுவனால் அந்தக் கணத்தைக் கையகப்படுத்த முடியாத போது அமைதியாக ஒன்று இரண்டு என எண்ணிக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மாமாவும் ஏதும் பேசவில்லை. தனது கண்ணாடியைத் துடைத்துக் கொண்டே அவரும் அந்தக் காட்சியை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். டௌகன் சற்றே தயங்கி நின்று, வனம் இருந்த திசையிலிருந்து வந்த மற்ற பறவைகளின் குரலைக் கேட்டது—ஒருவேளை அதன் குஞ்சுகளின் குரலாக இருக்கலாம். அதனுடைய பேரலகை வான் நோக்கி உயர்த்தி, அதன் கரகரத்த குரலில் ஓரிரண்டு கீச்சுகளை வெளியேற்றியது. ’க்ரீச்!’… அந்தச் சிறுவன் உடைந்தழும் நிலையிலிருந்தான். அதே நேரத்தில் சேவல் கூவியது. அவன் எதையுமே நினைத்துப் பார்க்கவில்லை. அவனுடைய இமைப் பீலிகள் கண்ணீரால் நனைந்திருந்தன.
அதன் பின் டௌகன் மெல்ல எழும்பி, சிறகடித்து , நேராக, குறைவான வேகத்துடன் பறந்து சென்றது, ச்சூ ச்சூ! – அற்புதம், உடலெங்கும் படர்ந்த வண்ணங்கள்… பகட்டான ஆடை, அலங்காரம்; அதுவோர் அழகிய கனவு. அவனுடைய கண்கள் அந்த அழகிலிருந்து மீண்டு ஓய்வெடுக்கும் முன்பே யாரோ உலகின் மற்றொரு பக்கத்தை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்கள். பிரகாசம் மிக்க நட்சத்திரம் இருந்த கீழ்வானில் இப்போது சூரியன் மேலே வரக் காத்திருந்தது, கரிய, உயரம் குறைவான சுவர் போன்றிருந்த வயல்வெளியின் விளிம்பில் மின்னும் சாய் சதுரத்தின் துண்டிக்கப்பட்ட கூர் முனைகளைப் போல பீறிட்டெழும்பியது. அது மெல்ல மெல்ல சுழன்று, பிரகாசமாக, நிதானமாக, முதலில் அரை சூரியனாக, பிசிரற்ற தகடாக, பின் பூரண சூரியனாக, முழுமையான வெளிச்சமாக மாறியது. நீல வானிலிருந்து நூலில் கட்டித் தொங்க விடப்பட்ட தங்கப் பந்து போல இப்போது தகதகத்தது. மாமா தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அக்கணத்தில் சிறுவன் சிறு சப்தம் கூட எழுப்பவில்லை. தொடுவானின் ஒவ்வொரு அசையையும் அவன் பார்வை ஆர்வத்துடன் கைப்பற்றிக் கொண்டிருந்தது.
இருப்பினும் அவனால் அந்த மயக்க நிலையுடன் தாயைப் பற்றிய தற்போதைய நினைவுகளை சமரசம் செய்துகொள்ள முடியாமல் போனது. நோய்மையற்ற, குணமடைந்த நிலையில், எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமோ அவ்வளவு மகிழ்ச்சியுடன் அவள் இங்கு இருந்திருந்தால்… சட்டென தனது சின்னஞ் சிறுதோழனான குரங்கு பொம்மையும் டௌகன் பறவையைக் காணட்டும் என மனதில் தோன்றியதால் சட்டைப் பையிலிருந்து அதை வெளியே எடுத்தான். அச்சிறிய சிவப்பு நிறக் கடவுள் தனது இறகுகளைத் தட்டிக் கொண்டு, அலகை நிமிர்த்தியபடி பறந்து கொண்டிருந்தது. பறத்தலின் சிறகை விரித்த நிலையில் அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தது போல இருந்தது. அந்த நுண்கணம், அந்த மகத்தான நிலை வானத்தில் மட்டுமல்ல-நிரந்தரமாக, எங்கும், என்றென்றைக்குமாக வியாபித்திருந்தது.
பறவையின் பணி
அந்தச் சிறுவன், நாளின் சோர்வான மதிய வேளையில் தன்னுள் தானே நிராகரித்த ஏதோ ஒன்றுடன் போராடிக் கொண்டிருந்தான். எதையுமே அவற்றிற்குரிய உண்மையான, அசலான, எப்போதும் அவை இருக்கக் கூடிய தன்மையுடன் அவனால் பார்க்க இயலவில்லை. எந்த வித முன்னெச்சரிக்கைகளுமின்றி ஒன்றைப் பார்க்கையில் அது கனமானதாக, உள்ளது உள்ளபடி இருந்தது. ஏதாவது செய்தி உள்ளதா எனக் கேட்கக்கூட அஞ்சினான். அவனுடைய அன்னையை நினைத்து. கொடிய நோயென்னும் கானல் நீரில் அவள் கரைந்து போவாளா என்று பயப்படுகிறானா? எவ்வளவு விருப்பமற்றதாக இருந்த போதும் அதைப்பற்றி அறிந்தே ஆக வேண்டும். அவன் பின்னோக்கிச் செல்ல முடியாது. அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை, அவர் ஆரோக்கியமாக இல்லை என்று நினைத்துப் பார்த்தாலே அவனுடைய சிந்தனைகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. அனைத்தும் அவன் மூளையிலிருந்து அழிக்கப்பட்டு விட்டன. அம்மா என்பது அம்மா மட்டுமே. அவ்வளவுதான்.
அப்படியான மனநிலையிலும் ஒரு பரிபூரண அழகிற்காக அவன் காத்திருந்தான். அப்போது அந்த டௌகன் பறவை வந்தது- எந்தக் குறைகளுமற்றது-பறத்தலில், அமர்தலில், மீண்டும் பறத்தலில்… ஒவ்வொரு நாள் காலையும் அந்த நெடிதுயர்ந்த மரத்தை நோக்கி வந்தது. சொல்லப் போனால் டௌகன் மரம் என்று அழைக்கக் கூடிய அளவிற்கு அதன் வருகை நிகழ்ந்து கொண்டிருந்தது, விடியும் வேளையில் தன்னுடைய சீரான நடவடிக்கை, சற்றும் பிறழாமல், சப்தமிட்டுக் கொண்டே டௌகன் பறவை வருகிறது… வருகிறது… பொம்மையைக் கயிற்றில் இழுப்பதைப் போன்று தனது பாயை ஒய்யாரமாக அசைத்து அசைத்து வரும் சிவப்பு வண்ணப் படகு போலக் காற்றில் இலகுவாகப் பறந்து கொண்டே வருகிறது. பொன் வண்ண நீரின் ஒளியைக் குறுக்காகக் கிழித்துக் கொண்டு இளம் வாத்து மிதந்து முன்னே செல்வது போல கிடைமட்டமாக பறந்து வருகிறது.
அந்த மாயப் பரவசத்திற்குப் பின் நாளின் சாதாரண நிலைக்கு அவன் திரும்ப வேண்டும். அது போன்ற தினம் அவனுக்கானதில்லை, மற்றவர்களுக்குச் சொந்தமானது. வாகனத்தின் குலுக்கல் நிதர்சனத்தில் மனநிலையைச் சமன்படுத்தியது. அவனது நல்ல ஆடைகளைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்குமாறு அம்மா எச்சரிக்கை செய்து கொண்டே இருப்பார். ஆனால் அந்தப் பிரதேசத்தில் அவனது முயற்சிகளெல்லாம் தோல்வியடைந்தன. அவன் தன் சட்டைப் பைக்குள் வைத்துப் பத்திரப்படுத்தியிருந்த சிறிய குரங்கின் மீது கூட வியர்வையும் மாசும் படிந்திருந்தன. ஆயிரமாயிரம் மனிதர்கள் தங்கள் கடின உழைப்பால் அந்த மாநகரை நிர்மாணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் அதிகாலையின் வண்ணம் பூசிக் கொண்டதும் டௌகன் தப்பாமல் வந்து விட்டது. அங்குள்ள அனைவரும் அதை அறிவார்கள்.
அதன் வருகை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. முன்பெல்லாம் அங்கே இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் சுமார் முப்பது பறவைகளின் கூட்டம் மட்டுமே இளங்காலையில் பத்து மணிக்கும் பதினொரு மணிக்குமிடையே வந்து கொண்டிருக்கும். இந்தப் பறவை மட்டுமே நித்தமும் அதிகாலையில் முதற்கதிரொளி விரிந்ததும் வருகிறது. கண்களில் உறக்க மயக்கத்தோடும், சட்டைப் பையில் குரங்கு பொம்மையோடும், படுக்கையிலிருந்து அவசரமாக எழுந்து வந்து முற்றத்திற்குச் சென்று விடுவான். அதை நேசிக்கும் ஆர்வத்தோடு.
மாமா அவனுடன் அளவுக்கதிகமான அனுசரணையுடனும், சிரமம் மிக்க சங்கடத்துடனும்தான் உரையாடுவார். என்ன நடக்கிறதென்று அறிய இருவரும் வெளியே சென்றார்கள். மாசு அவ்விடத்தை முகில் போலப் போர்த்தியிருந்தது. என்றாவது ஒரு நாள் குரங்கு பொம்மைக்கும் நீண்ட இறகு பொருத்திய மாற்றுத் தொப்பி தேவையாக இருக்கும். ஆனால் இப்போது, மாமா அணியும் பிரத்யேக பச்சை டையின் நிறத்தில் வேண்டும். ஒவ்வொரு கணமும் அந்தச் சிறுவனின் விருப்பத்திற்கு மாறாக அவனுடைய ஏதோ ஒரு பகுதி முன்னோக்கி தள்ளப் படுவது போல இருந்தது. இலக்குகளற்ற எப்போதும் செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சாலைகளில் வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஆனால் சிறுவன் தன்னுடைய இதயத்தின் ஆழத்தில் தன் அன்னை நலமடைய வேண்டுமென்றும், அவள் காப்பாற்றப்பட வேண்டுமென்றும் உறுதியாக எண்ணினான்.
காலை, மிகச் சரியாக ஆறு மணி இருபது நிமிடத்துக்கு டௌகன் பறவை மரத்தின் மீது வந்தமரக் காத்திருந்தான். வழக்கம்போல மரத்தின் முக்கிய கொம்பின் மீதே வந்தமர்ந்த டௌகன் பத்து நிமிடங்கள் மட்டுமே பழத்தைக் கொத்திக் கொண்டும், கொறித்துக் கொண்டும் இருந்தது. அதன் பின், வெட்ட வெளியிலிருந்து சிவப்புப் பந்தாக சூரியன் மேலெழும்பி வரும் நேரத்துக்குச் சற்றே முன்னதாக எப்போதும் போல எதிர்த் திசையில் பறந்து சென்று விட்டது. ஆறு மணி முப்பது நிமிடத்தில் சூரியன் உதயமாகும். தன் கைக்கடிகாரத்தில் மாமா அதைக் குறித்து வைத்தார்.
பகல் பொழுதில் அந்தப் பறவை திரும்பி வரவே இல்லை. அது எங்கு வசிக்கிறது? எங்கிருந்து வருகிறது—வனத்தின் நிழலிருந்தா? யாருமே நுழைய முடியாத அதன் அடர்வுகளிலிருந்தா? அது எந்த நேரத்தில் எங்கு, எந்த ஆளரவமற்ற தனிமைப் பிரதேசத்துக்குச் சென்று எவற்றை உண்டு அருந்தி வாழ்கிறது என்பதை யாருமே அறியவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அது அப்படித்தான் இருக்க வேண்டும், யாரும் அறியாத இடமாக இருக்க வேண்டும் என சிறுவன் நினைத்தான். அது ஒரு மாறுபட்ட பிரதேசத்திலிருந்து வருகிறது; அந்த நாள் மற்றும் அந்தப் பறவை. அவ்வளவுதான்.
அதே வேளை மாமாவிற்குத் தந்தி ஒன்று வந்தது. அதை படித்த பின் முகத்தில் தோன்றிய கவலையை அவரால் மறைக்க முடியவில்லை. நம்பிக்கை தேய்ந்து போனது. ஆனால் எதுவாக இருந்த போதிலும், சிறுவன் அதை பற்றித் தனக்குத்தானே கூட பேசிக் கொள்ள விரும்பவில்லை. அன்பினால் வலிமை பெற்றிருந்த அவன் தனது அம்மா குணமடைவார், அம்மா மீண்டும் நலம் பெறுவார் என அமைதியாகத் தனக்குள் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டான்.
அவனை ஆறுதல் படுத்த அவர்கள் திட்டமிடுவதை சட்டென்று ஒட்டுக் கேட்க நேர்ந்தது. அவர்கள் டௌகன் பறவையைப் பிடிக்கும் முனைப்பில் இருந்தனர். பொறி வைத்து, அதன் அலகின் மீது கல்வீசி, இறகுகளை அடித்து வீழ்த்திப் பிடிக்க நினைத்தனர். வேண்டாம் –வேண்டாம்!—அவன் கோபமும் மனக் கலக்கமும் அடைந்தான். அவன் ஆசையும் விருப்பமும் டௌகன் சிறையில் கைதியாக அடைபடுவதல்ல. காலையின் சன்னமான முதல் வெளிச்சம், அதனுள் தோன்றும் அதன் கச்சிதமான பறத்தல்தான் அவன் விரும்புவது.
அவன் இதயத்தில் நிகழ்ந்த சிறு போராட்டம் மறுநாள் காலை வரை நீடித்தது. அதன் பின் எப்போதும் போல, அந்தப் பறவை அதன் பிரகாச ஒளியோடு அவனுக்கு இலவசமாக அருளப் பட்டது. சூரியனைப் போல; பிரபஞ்சத்தின் ஒரு சிறிய கரும்புள்ளியிலிருந்து தோன்றி—தட்டையான, புகைத் தோற்றமான பிரம்மாண்ட வெளியில் கண்கூச மினுங்கும் தீப்பொறியின் ஒளியில் சிதறி உடைந்து அதன் பின் மென்மையானதாக மாறிவிடும். உடலிலிருந்து நீளும் மற்றொரு கரம் போல கண்கள் அதை நோக்கியே பின் தொடரும்.
மாமா ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவன் முன் நின்றிருந்தார். ஏதோ ஒரு ஆபத்து இருக்கிறதென்பதை சிறுவன் புரிந்து கொள்ள மறுத்தான். தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான்: ’அம்மா நோய் வாய்ப்படவே இல்லை. அவர் எப்போதுமே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்.’பறவையின் பறத்தல் அவனது முழு மனதையும் இருப்பையும் நிறைத்திருந்தது. குரங்கு பொம்மை கீழே விழுந்து தொலைந்து போக இருந்தது. அவன் அதைப் பிடிக்கையில் அதன் கூர்மையான முகமும், பாதி உடலும் அவனது சட்டைப் பையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஆனாலும் அவன் அதைக் கடிந்து கொள்ளவில்லை. அந்தப் பறவையின் வரவு அவனுக்காக அனுப்பி வைக்கப்பட்ட அதீத விழைவு, புலன்களில் பதியும் தாக்கம், நிறைந்து ததும்பும் இதயம்… மதியம் வரை அந்த மனநிலை நீடித்தது. ஓசைகள் நிரம்பிய காற்று வெளியில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்கும் அந்தப் பறவையைத் தவிர அவன் வேறு எதையுமே மனதில் நினைக்கவில்லை. அது அவனை ஆறுதல்படுத்தி,அவனது துயரங்களை எளிதாக்கி அந்தக் கடினமான நாட்களின் கனத்திலிருந்து தப்பிச்செல்ல உதவியது.
நான்காவது நாள் ஒரு தந்தி வந்தது. மாமா புன்னகைத்தார், இனிய சங்கீதம் போல! அம்மா குணமடைந்து, ஆரோக்கியமாக இருக்கிறார்! மறுநாள்—இறுதி டௌகன் சூரியனுக்குப் பின் அவர்கள் வீடு திரும்பப் போகிறார்கள்.
காலத்தின் சில தருணங்கள்
சில நாட்கள் கழித்து, விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே தெரியும் வெண்மேகங்களையும், வேகமாய் மறையும் வெற்றிடத்தையும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன். அதே வேளை, கடந்த நாட்களை நினைத்து ஏக்கம் கொண்டான். அதுதான் அவ்வாழ்க்கைக்குத் தான் காட்டும் விசுவாசம் என உணர்ந்தான். டௌகன் பறவை, அதிகாலை, அந்த மக்கள், அடர் வனம், வாகனம், மாசு, மூச்சு விட முடியாத இரவுகள் மற்றும் அந்த மோசமான நாட்களில் அவனுடனிருந்த அனைத்துக்காகவும் —அனைத்தும் இப்போது அவனுடைய கற்பனைகளில் தூய்மையாக்கப்பட்டு விட்டன. வாழ்க்கை எப்போதும் நின்று விடுவதில்லை. அவன் மாமா, முந்தையதைப் போல அழகானதாக இல்லாமல் சுமாரான டையைக் கட்டிக் கொண்டு வந்திருந்தார். பொறுமையிழந்து அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தூக்கத்தின் விளிம்பில் இருந்தவன் அரை மயக்கத்தில் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான். சட்டெனக் கவிந்த இறுக்கத்தால் அவனது சிறிய முகம் களையிழந்திருந்தது.
வருத்தத்தில் அவனது இருக்கையிலிருந்து குதித்தே விட்டான். சிறிய குரங்கு பொம்மை அவனுடைய சட்டைப் பையில் இல்லை. அவன் தனது குரங்குத் தோழனைத் தொலைத்து விட்டான்! அவனால் அதை எப்படி செய்ய முடிந்தது? காத்திருந்த கண்ணீர் கண்களில் உடனடியாகச் சுரந்தது. ஆனால், விமான ஓட்டியின் உதவியாளர் அவனை ஆறுதல் படுத்தும் விதமாக ஒரு பொருளைக் கொண்டு வந்து கொடுத்தார். ”இதோ, இங்கே பார், உனக்காக எதைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன் பார்” – நீள இறகுடன் கூடிய சிறிய சிவப்புத் தொப்பி, இப்போது, சற்றும் சுருக்கங்களற்றதாக அவன் முதல் பயணத்தில் அதன் பொருட்டு அவன் தூக்கி வீசியெறிந்தது.
மேலும் அழுது தன்னை வருத்திக் கொள்ள சிறுவனால் முடியவில்லை. ஆனால் விமானத்தில் அதன் ஓசைகளுக்கு நடுவே அமர்ந்து கொண்டிருப்பது அவனுக்கு தலை சுற்றலை ஏற்படுத்தியது. அந்தச் சிறிய துணையற்ற தொப்பியை எடுத்துத் தன் கையால் நீவி சீராக்கி தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். அவனுடைய சின்னஞ்சிறிய குரங்குத் தோழன் உலத்தின் முடிவற்ற ஆழத்தில் தொலைந்து போகவில்லை. எப்போதும் போகப் போவதுமில்லை. ஒருவேளை அது ஏதோ ஒரு மகிழ்வுக்காக, பூடக அனுபவத்திற்காக, எப்போதும் மக்கள் வந்தும் சென்று கொண்டிருக்கும் வேறொரு உலகத்திற்குச் சென்றிருக்கலாம். அவனைப் புன்னகை புரியத் தூண்டிய விஷயங்களை எண்ணிப் புன்னகை செய்தான் சிறுவன். அப்படிச் செய்ய வேண்டுமென்று சட்டெனத் தோன்றியது. ஆதி காலக் குழப்பத்திற்கு அப்பால், விடுபட்டு விட்ட நெருப்புக்கோளம் போல வேறொரு உலகத்திலிருந்து புன்னகை புரிந்தான்.
அதன் பின் என்றுமே மறக்க முடியாத, முழு அமைதிக்குள் இட்டுச்சென்ற பரவச நிலை அவனுக்கு ஏற்பட்டது. அது ஒரு விநாடியே நிலைத்தது, அவ்வளவு கூட இல்லை அப்படியே துரும்பு போல உதிர்ந்து சிதைந்தது. இயல்பாகவே யாராலும் கைக்கொள்ள முடியாத மின்னல் தருணம் அது. ஒட்டு மொத்த ஓவியக் காட்சியும் அதன் சட்டக விளிம்பிலிருந்து தப்பிச் சென்றது போல இருந்தது. அவன் தன் அன்னையுடன், ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக, புன்னகைத்தபடி இருப்பது போலவும், அவனது குட்டிக்குரங்கு பொம்மை அழகிய பச்சை வண்ணக் கழுத்துப்பட்டை அணிந்து உடனிருப்பதாகவும் உணர்ந்தான். முற்றமெங்கும் மரங்கள் நிறைந்திருக்கும் காட்சியும், குலுக்கலான வாகனப் பயணமும், அது இட்டுச் சென்ற இடங்களும் கண் முன் தோன்றின. அந்த அதிகாலையின் முதல் பொன்னிறக் கீற்று, மீண்டும் மீண்டும் பார்த்துக் களித்த சூர்யோதயம், துல்லியமான உயிர்ப்பும் இசையும் ஒருங்கிணைந்த, முடிவற்ற அசையாத் தன்மை கொண்ட டௌகனின் பறத்தல், மலையுச்சிக்குச் சென்று அவன் உண்ணும் கனிகள், வீட்டின் அருகிலுள்ள உயர்ந்த பள்ளத் தாக்குகளின் விடியல் வேளை… யாவும் அவனுள் நிறைந்திருந்தன. அவை மட்டுமே… உணரும் அனைத்தும் அவை மட்டுமாகவே இருந்தன.
”நாம் ஒரு வழியாக நம் இடத்தை அடைந்து விட்டோம்“ மாமா கூறினார்.
“ஓ, இல்லை, இன்னும் இல்லை” சிறுவன் பதிலளித்தான்.
அவன் ரகசியப் புன்னகை புரிந்தான்: புன்னகையும் புதிரும், அது அவனுக்கு மட்டுமேயானது. வாழ்க்கை அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.