செவ்வக வடிவ பெண்கள்
நரன்

by olaichuvadi

 

நேரம் காலை 8.45

நகரின் பிரதான சாலையிலிருக்கும் கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்குகிறது  ஆண்களுக்கென பிரத்தியேக ஆயத்த ஆடைகள்  விற்கும் அந்த நவீன அங்காடி .கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு நம்மை அழைத்து செல்லும் படிகள் மரத்திலானவை.  அடர்த்தியான  கருந்தேக்கு நிறம் .முன் முகப்பு  பகுதி  வெளிப்படையான கண்ணாடியால் அடைக்கப்பட்டிருந்தது . செவ்வக வடிவத்திலிருக்கும் அங்காடியின் தரைப்பகுதியை தினமும் சுத்தம் செய்யும் பொறுப்பை  வசந்தா  ஆயிரத்து இருநூறு ரூபாய் ஊதியத்திற்காய் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். கருப்புநிறமும்  கனத்த சரீரமும்  கொண்டிருக்கும் நாற்பத்தொருவயது பெண்  அவள். கணவன்  சிறைச்சாலையில்முக்கால் ஆண்டை கடந்துஅடைந்துக்கிடக்கிறான் . சரீர தொடுதலாக்காய் ஏங்கும் உடல்.

தளத்தை ஈரத்தால் தழுவி எடுத்தபடியே ஆடை அணிந்து காட்சி அளிப்பதற்காக அமைக்கப்பட்ட அந்த ஆண் வடிவ பொம்மையின் அருகில் வந்தாள். வடிவ மைப்பாளர்களால்  எப்போதும் போலவே பொம்மைக்கு இருபத்தி இரண்டிலிருந்து இருபத்தி ஐந்துக்குள் இருக்கும்படி தேகம் மற்றும் முக அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது . அதன் உடலில் மேலாடையாய்  தோள்பட்டை  வரை மட்டுமே மறைக்கும்  பனியன் வகை ஆடை., முழங்கால் வரை மட்டுமிருக்கும் கீழாடை. 

வசந்தா பொம்மையின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள் உறைந்தநிலையிலிருக்கும் சிவந்த நிறமுடைய அழகான இளைஞன். உணர்ச்சி மேலெழுச்சியால் ஏக்கத்தோடும் , மிகுந்த பிரயாசையோடும் அந்த பொம்மையின் இடப்புறம் நின்று கீழாடையை  தொடை வரை  கொஞ்சமாய் கீழிறக்கினாள். பொம்மை  மறுக்காது வெறுமென சும்மாயிருந்தது . உடலில் சிறு படபடப்பும் , சந்தோஷமுமான பதட்டமும் கூடிக் கொண்டிருந்தது. ஆடையினுள்ளே வளர்ந்த ஆணுக்கு இருப்பது போலவே குறி வடிவமைக்கப்பட்டிருக்குமா ? இந்த தொடுதலில் அதன் விரைப்பு இன்னும் கூடியிருக்குமா ? என்று அறிய முற்பட்டவளாய் பகுதி இறக்கி முடிந்த கீழாடையை முழுக்க கீழிறங்கும் நோக்கில் மெல்ல மெல்ல இறங்கினாள் . பொம்மையின் கண்களில் கொஞ்சமாவது சலமிருக்கிறதாவெனப் பார்த்தாள். பொம்மை அவளை பார்க்காமல் சாலையை பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது மரப்படியில் ஜோடி மலிவு விலை பாதணிகள் ஏறி வரும்  சப்தம் கேட்டது

அவசர அவசரமாய் ஆடையை மேலேற்றி அமர்த்தி விட்டு அந்த இடத்திலிருந்து நீங்கி வேறிடத்தில் தரையை ஈரப்படுத்திக்கொண்டிருந்தாள் .

மேலேறி வந்தது கடையில் சேல்ஸ் உமனாக  வேலை பார்க்கும் பெண்.  அவளுக்கு பருக்கள் நிறைந்த மங்கலான  முகம் .வாலிப்பற்ற தேகம் இதுவரை ஒரு ஆண் பையன்களுமே  சிறு காதல் சமிக்க்ஷைக் கூட தந்திராத   இருபத்தியொரு வயது பெண் .

‘‘வசந்தா எல்லாம் நிறைவேறிற்று ’’ என்பது போல் பணியை நிறைவேற்றிவிட்டு கிளம்பிவிட்டாள் .

மெல்ல  படியிலிறங்கி செல்லும் தேய்மானமான சப்தம். இறுதி படியில் இறங்கி சென்றதை உறுதி செய்துக்  கொண்டு சேல்ஸ் பெண் அந்த பொம்மையின் அருகில் நெருங்கி சென்று அதன் முகத்தை ஏறிட்டாள். தினமும் அந்த பொம்மையின் உடலுக்கு வேறு வேறு உடையை அணிவிக்கும் பணியை அவள் தான் பெரும் உவப்போடு செய்து வருகிறாள். பொம்மையை அந்த  இடத்திலிருந்து நீக்கி எடுத்துக் கொண்டு கொஞ்சம் மறைவான தடுப்பிற்குள் நுழைந்தாள் . அவள் அணிந்திருந்த அதே மாதிரியான கடல்  நிற பனியன் வகை ஆடையை தேடினாள்.  முந்தைய நாளின் ஆடையை உரித்து பொம்மையை  நிர்வாணமாக்கினாள் .அதன் வழுவழுப்பான , இறுக்கமான  உடலை தழுவிக் கொண்டாள். முத்தமிட்டாள். அது மறுப்பேதும் சொல்லவில்லை. அதற்கு அவள் பெயரிட்டிருக்கிறாள்.  இப்படியான நேரங்களில் அவள் மகேஷ் …மகேஷ் என்று தான் அழைப்பாள் .

மீண்டும் ஆடையை உடுத்திய பின் அழைத்துப் போய் அதனிடத்தில் நிற்க வைத்தாள்.

நேரம் காலை 9.50 

 கடையின் உரிமைக்காரியான படித்த வசதியான முப்பத்தி நான்கு வயது லீலா தாமஸ் வந்தாள். அவளுக்கு திருமணம் நிகழ்ந்து நான்கு வருடமாகிறது. திருமண முறிவு நிகழ்ந்தும்  நான்கு வருடமாகிறது. பாண்டிச்சேரியில் வளர்ந்தவள். பெற்றோர் பிரான்சில் பல வருடமாயிருக்கிறார்கள் தொடைக்கு கீழ்  சரியான அளவிலான, நாகரிகமான அமெரிக்கன் காக்கி நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தாள். வெண்ணிற ‘‘லினன் ’’  வகை மேலாடை வழக்கமான நாளாய் வாடிக்கையாளர்கள் வருகையும், விற்பனையும் நடந்தது. வழக்கமாய் இப்படியான கடைகளுக்கு மொது  மொதுவென வாடிக்கையாளர்கள் இருக்க மாட்டார்கள். நாளொன்றுக்கு  இருபதிலிருந்து, முப்பது வரைதான் வாடிக்கையாளர்கள். அவர்கள் பெரிய விலைக்கு வாங்க தகுதியான .பிராண்டட் ஆடைகளைத் தேடி வாங்குபவர்கள்.

நேரம் இரவு 9.35

கடை ஊழியர்கள் எல்லோரும் மெல்ல சோம்பலும், அயர்ச்சியும் சேர கிளம்பத் துவங்கினார்கள் . சங்கரி பொம்மையின் அருகே சென்று “போய் வருகிறேன்” என்று மெலிதாய்  சொல்லி விடைப் பெற்று சென்றாள். நிறைய ஜோடி செருப்புகளின்  சப்தங்கள் தடியாய் கிளம்பி பின் மெலிந்து இறுதி படிக்குப் பின் சாலையில் நடக்கத்  துவங்கின.

எல்லா சப்தங்களும் போனதும் லீலா தாமஸ் கதவை உள்பக்கமாய் தாழிட்டு வந்தாள் . செவ்வக வடிவ கடையின். இறுதியிலிருந்து ஒவ்வொரு விளக்காய் வரிசையாய்  அணைத்தபடி வந்தாள். அதிலொரு ராணுவத்  தன்மை தெரிந்தது. அவளின் எல்லா நடவடிக்கையிலும் அது தெரியும்  எந்த சப்தமும் ஊடுருவாத கண்ணாடியின் ஊடாக சாலையில் கார்கள் மௌனமாய் பயணிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு திரும்பி பொம்மையின் முகத்தை அதை போலவே சலமின்றி குறைந்த நேரம் பார்த்தாள். அதன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்துக் கொண்டு போய் அதன் உடைகளை உரித்துப் போட்டு விட்டு புட்டங்களை இருத்திக்கொள்ளும் வடிவிலான வெஸ்டர்ன் கழிப்பறைக்கு  எடுத்துப்  போனாள். கால்வாசி திறந்து கிடக்கும் கதவின் வழியே பார்க்கையில் மஞ்சள் வெளிச்சத்தின் நடுவே  கண்களை சொருகி  தன்  சொந்த உடலை புணர்ந்து கொண்டிருந்தாள். பொம்மை நிர்வாண உடலோடு அவளின்  காலிடையே படுத்துக் கிடந்தது . அயற்சியாய் உணர்ந்தவள். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தாள். இப்போது இருவரும் புகை மூட்டத்திற்குள்ளிருந்து தெரிந்தார்கள் . உடையை சரியாய் உடுத்திவிட்டு, அதற்கும் அணிவித்துவிட்டு கழிவறையிலிருந்து நீங்கி பொம்மையோடு படியிறங்கினாள். காரில்  தனக்கருகே பொம்மையையும் அமர வைத்தாள். சாலையில் நடமாட்டம் குறைவாயிருந்தது.

நேரம் இரவு 10.40

நகரின் புறவெளி பகுதியிலிருந்த தன்பெரிய வீட்டிற்குள் நுழைந்தாள். காரிலிருந்து பொம்மையை கீழிறக்கி கதவை திறக்குமிடத்தில் சுவற்றில் சாத்தி வைத்துவிட்டு கதவை திறந்தாள்  திறந்ததும்  தொலைக்காட்சிக்கு நேர் எதிரே யிருக்கும் பெரிய சோபாவில் பொம்மையை  அமர வைத்தாள் .. தொலைக்காட்சியை ஒளிஒலியூட்டினாள், எதோ ஒரு  சேனலிலிருந்து  நகர்த்தி ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு மாற்றினாள். இரு குழுக்கள்  கால்பந்து உதைத்துக் கொண்டிருந்தார்கள். ரிமோட்டை பொம்மையின் முன் வைத்து விட்டு  ப்ரத்தியேகமாய் விளையாட்டுக்காய் வெளி வரும் இதழ்கள் சிலவற்றை பொம்மையின் முன்னிருந்த சிறு மேசையின் மீது வைத்தாள். நகர்ந்து கொஞ்ச தூரம் போய் அதனிடம் கேட்டாள் 

‘‘ காஃபி தரவா ’’ .

பொம்மை மறு பேச்சில்லாமல் தொலைக்காட்சியை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ரெண்டு நிமிசத்தில் வருவதாய் சொல்லிவிட்டு போய் தொளதொளவென வெள்ளை கவுன் உடையில் வந்தாள். முடியின் மீது தன் கையை நடுவில் வைத்து சுழற்றி சுழற்றி நுனி முடியை வெளியெடுத்து குடும்பி போட்டாள் . சமையலறைக்கு போய் காஃபி போட தயாரானாள் . சூடாய்  இரண்டு கோப்பைகளில் நிரப்பினாள்.  இரண்டு கையிலும்  காப்பியை எடுத்துக் கொண்டு இருக்கைக்கு திரும்பினாள் .ஒரு காபியை எடுத்து பொம்மையின் முன் நீட்டினாள் . அது வாங்காமல் அப்படியே  இருக்கவே  அதன் முன்னிருக்கும் சிறு மேசையில் வைத்தாள். ஒரு மிடறு சூடாய் மிடறினாள். இரண்டாம் மிடறுக்காய் உதட்டருகில் கொண்டுப் போய் நிறுத்தினாள். எதையோ தீவிரமாய் நினைத்துக் கொண்டவளாய் நெற்றியும் முகமும் சுருங்கியது. ஆவேசமாய் காபி கோப்பையிலிருக்கும் சூடான காப்பியை பொம்மையின் முகத்தில் வீசினாள்.

பொம்மை அப்போதும் உறைந்த நிலையிலிருந்து. பொறுக்கமாட்டாதவளாய் அதன் முன் சிறு மேசையிலிருக்கும் காப்பியையையும் எடுத்து அதன் உடலின் மீது ஊற்றின்னாள். இப்போது அவளுக்கு மட்டும் காதுக்குள் ஆஆ ..வென அலறி துடிக்கும் ஓர் ஆணின் குரல் கேட்டது. ஆவேசமும், சப்தமுமாய் பற்களை கடித்துக் கொண்டு கத்தினாள் ‘‘எனக்கும் இப்படித்தான் இருந்துச்சி’’ இன்னும் கோபம் அடங்காதவளாய் ஓங்கி ஓங்கி காலால் பொம்மையின் நெஞ்சில் உதைத்தாள். அருகில் கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு ஆவேசமாய் அடித்தாள். மூலையில் கிடந்த இரும்புக் குச்சியை எடுத்து வந்து விடாமல் தாக்கினாள். எத்தினாள் சிறிது நேரத்திற்கு பின் பொம்மை தரையில் முகமெல்லாம் சிதைந்து கிடந்தது. கைகள் உடைந்து தொங்கின. கால்கள் பிய்ந்து நான்கைந்து துன்டுகளாய் கீழே விழுந்து விடாமல் தொங்கியது. தலை தனியாய் பிய்த்துக் கொண்டு தள்ளிப்போய் கரகரவென சுழன்றது. தலையற்று உருக்குலைந்த பொம்மையின் காலைப்பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு மாடிப்  படிக்கட்டின் அடியிலிருக்கும்  ஸ்டோர் அறையின் கதவைத் திறந்தாள். மொது மொதுவென அதே போல் நிறைய ஆண் பொம்மையின் தலைகள், உடலின் பாகங்கள் இடம் கொள்ளாமல் சரிந்து விழுந்தன. அள்ளி உள்ளே தள்ளினாள். இறுதியாய் இந்த பொம்மையின் தலையை காலால் எட்டி உதைத்து உள்ளே தள்ளி பெரிய சப்தமாய் கதவைச் சாத்தினாள்.

பிற படைப்புகள்

Leave a Comment