டிவைன் மையத்தை புகைவண்டி அடைந்தபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. ஒரு நிமிடத்திற்கு மேலாக புகைவண்டி நிற்காது. ஆகவே, அவசர அவசரமாக ஃபிலோமினாவை கீழே இறக்கினாள் மேரியம்மா. ஃபிலோமினாவுக்கு மிகவும் பசித்தது. இருப்பினும் அவ்விஷயத்தை மேரியம்மாவிடம் சொல்லவில்லை. மழைமேகம் கவிந்த வானத்தைப் போல காணப்பட்டது மேரியம்மாவின் முகம். பசியை மீறி ஆட்கள் யாரும் அல்லது அறிமுகமானவர்கள் யாரும் தங்களைப் பார்த்து விடக்கூடாது என்கிற மெளனமான பிரார்த்தனை மேரியம்மாவின் உதடுகளிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அம்பு திருவிழா பிரதட்சிண நாளன்று நடப்பதைப் போல சீக்கிரம், சீக்கிரம் என்று சொல்லியவாறு ஃபிலோமினாவைத் தள்ளியபடி மேரியம்மா ஸ்டேஷனுக்கு வெளியே வந்தாள். புகைவண்டி கூவல் ஒலியெழுப்பி கிளம்பிச் சென்றது. அந்தக் கூவல் சத்தம் தங்களை அவமானப்படுத்துகிறதோவென மேரியம்மாவுக்குத் தோன்றவும் செய்தது. மனிதர்கள் மட்டுமல்ல; தற்போது வாகனங்களும் கேலி செய்யத் தொடங்கிவிட்டதா…என்கிற சங்கடத்துடன் மேரியம்மா தனக்குள் முணுமுணுத்தாள். காலம் முடியுற நேரத்துல மனுசனோட ஒவ்வொரு கண்டுபிடிப்புங்க….
புகைவண்டி நிலையத்திற்கு வெளியில் கார்களும்ஆட்டோ ரிக்ஷாக்களும் நின்றிருந்தன. இரையைப் பிடிக்கக் காத்திருக்கும் வனவிலங்குகளைப் போன்ற மனிதக்கண்கள். மேரியம்மா யாரையும் பொருட்படுத்தாமல் முன்னால் நின்றிருந்த ஆட்டோ ரிக்ஷாவுக்குள் ஃபிலோமினாவைப் பிடித்துத் தள்ளினாள். ஆட்டோ டிரைவர் எங்கேவென்று விசாரிப்பதற்குள் டிவைன் சென்டர் என்றாள் மேரியம்மா.
உச்சிவெயில் தார்சாலையில் ஆவியாக எழுந்து கொண்டிருந்தது. அவளது கண்களின் அமைதித் தடாகத்தை ஆட்டோ டிரைவர் ரியர் கண்ணாடி வழியாகப் பார்த்தான். அவன் தங்களைக் கவனிக்கிறான் எனத் தெரிந்ததும் மேரியம்மா ஃபிலோமினாவின் புடவைத் தலைப்பை எடுத்து அவளது தலையில் போர்த்தி முகத்தை மறைத்தாள். அப்போது ஓரக்கண்ணால் ஆட்டோ டிரைவர் மேரியம்மாவைப் பார்த்தான்.
வியாகுல மாதாவின் முகத்தைப் போன்றிருந்தது ஃபிலோமினாவின் முகம். அவளது ஒளிரும் கண்களின் ஓரத்தில் ஓர் தெளிந்த நீரூற்று நிறைவதை மேரியம்மா கவனித்தாள். “தியானத்துக்காகவா?” என்று ஆட்டோ டிரைவர் கேட்டபோது ஒரு முனகலுடன் மேரியம்மா பதிலை முடித்தாள் . பின்னர் ஆட்டோவின் அடியில் கடந்து செல்லும் சாலையின் கருமையில் கண்களைத் தாழ்த்தி மேரியம்மா நகர்ந்து உட்கார்ந்தாள். சொரூப கூண்டில் சிலையைப் போல ஃபிலோமினா அமர்ந்திருப்பதைப் பார்ப்பதற்காக ரியர் கண்ணாடியைச் சரிப்படுத்திய டிரைவர் இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று மனதில் சொல்லிக் கொண்டான். ம்ம்…எங்கோயோ இருந்திட்டுப் போகட்டும் என ஆறுதல்பட்டு, ஹாரனை அழுத்தி டிவைன் மையத்திற்கான மண்பாதையை நோக்கி ஆட்டோவைத் திருப்பினான். ஆட்டோவுக்குள் திருபிறவியின் படம் மாட்டப்பட்டிருப்பதை மேரியம்மா கவனித்தாள். அச்சமயம் சிலுவைப் போட்டுக் கொண்டாள். மையத்தில் அறிமுகமானவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்கிற மெளனப் பிரார்த்தனையைத் தொடர்ந்தாள். வாணியம்பாடியிலிருந்து இந்த இடம்வரை அறிமுகமானவர்களின் கண்ணில் சிக்காமல் ஒரு புதையலை எடுத்து வருவதைப் போல அத்தனை பாதுகாப்புடன், ஃபிலோமினாவை ரயிலில் ஏற்றி இங்கு அழைத்து வந்திருக்கிறாள். நிறைய கேள்விகளுக்கான பதிலைத் தந்த எழுத்துகள் கூட மனதை விட்டு மாய்ந்து போய்விட்டன. இனி எந்தக் கேள்வியைக் கேட்டாலும் மேரியம்மாவின் உதட்டில் ஒரு முனகல் மட்டுமே வரும்.
“தியான மையத்துக்கு வர்றது இது முதல் தடவையா…?” டிரைவர் பேச்சை தொடரும் நோக்கில் கேட்டான். மேரியம்மா ஆமாம் என்கிற பொருளில் உம் கொட்டினாள்.
“நல்ல கூட்டம் இப்ப… எங்கிருந்தெல்லாமே ஆளுங்க வர்றாங்க….” ஆட்டோ டிரைவர் அந்த உம் கொட்டலுக்குத் தொடர்ந்து பதிலளித்தான். ஆனால் மேரியம்மா எதிர்வினையாற்றவில்லை. ஆட்டோ டிரைவர் தலையைத் திருப்பி பதில் இல்லையா என்ற கேள்வியை கண்களால் கேட்டு திரும்பினான். மேரியம்மா வெளியே வெயிலின் தகிப்பில் கண்களைப் பதித்திருந்தாள்.
இப்போதும் ஃபிலோமினா மெளனமாக அமர்ந்திருந்தாள். டிவைன் மையத்திலிருந்து திரும்பிப் போகும் பெண்கள் கூட்டமொன்று ஆட்டோவின் எதிரில் நடந்து போனது. அவர்களின் வெள்ளை உடையில் செம்மண் புழுதி படிந்திருப்பதை மேரியம்மா கவனித்தாள். பாதையோரத்தில் மாணவிகளின் கூச்சல் சத்தத்தைத் தாண்டி ஆட்டோ சென்றது. பள்ளிக்குழந்தைகளின் ஆரவாரத்தைக் கேட்ட ஃபிலோமினாவின் கண்களின் ஓர் அசைவு தெரிந்தது. வாழ்நாளில் முதல் முறையாக தலையைத் திருப்பிப் பார்ப்பதைப் போல ஃபிலோமினா ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி திரும்பிப் பார்த்தாள். குழந்தைகள் சோற்றுப்பாத்திரங்களை தூக்கிப் போட்டு ஓடி விளையாடுவதை ஒரு திரைப்படக் காட்சியைப் போல ஃபிலோமினா பார்த்தாள். தொலைவில் எங்கிருந்தோ எழுந்த ஒரு தொடர் மணியோசையை ஆட்டோவை பின்தொடர்ந்த காற்று எடுத்து வந்து சேர்த்தது. அதொரு பள்ளிக்கூடத்தின் மணியோசையாக ஃபிலோமினாவின் மனதில் எதிரொலித்தது.
குழந்தைகள் நிறைந்திருக்கும் ஸ்கூல் முற்றம். தேசியக்கீதத்தைப் பாடி அசம்பளி பிரிந்தது. குழந்தைகளும் ஆசிரியைகளும் தத்தமது வகுப்பறைகளை நோக்கி சென்றார்கள். சர்வஞானமும் ஒரு பாட்டின் தாளத்தில் பள்ளிக் கட்டடத்தில் நிறைந்தது. ஏழாம் வகுப்பு வரை உள்ள ஒரு அப்பர் பிரைமரி பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு பி பிரிவில் ஃபிலோமினா டீச்சர் கணக்குகளின் உலகிற்குக் குழந்தைகளைக் கைபிடித்து அழைத்துப் போனாள். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்கிற வாய்ப்பாடு பிரார்த்தனைப் பாடலைப் போல ஃபிலோமினாவின் உதட்டில் உதிர்ந்து விழுந்தது. கூட்டுப்பாடலின் ஆரவம் போல குழந்தைகள் ஃபிலோமினாவுடன் சேர்ந்து பாடினார்கள். ஒரு தினத்தின் சுற்றுப்பாதையில், காலைவெயில் உஷ்ணமடைந்து மதியவெயிலின் தகிப்பிலிருந்து சாயங்கால வெயிலின் பொன்னிறத்திற்கு உருண்டது. வராந்தா உத்திரக்கட்டையில் தொங்கவிடப்பட்ட தண்டவாள இரும்புத்துண்டில் பியூன் சேகரன் இரும்புத்தண்டைத் தட்டி மரணப் பாடலை முழக்கினான். எதிர்பாராத வேளையில் பெருமழை பெய்வதைப் போல குழந்தைகள் வகுப்பறையிலிருந்து தத்தமது வீடுகளுக்கு பெய்து விழுந்தார்கள்.
வயல்வரப்பு வழியாக ஃபிலோமினா நடந்தாள். செறக்காட்டு சிறுகோயில் வரை ரேணு டீச்சர் உடன் வந்தார். உளுந்துத் தோட்டமும் மூங்கில் காடும் தாண்டி தேவாலயத்திற்கு அப்பால் லில்லி வில்லா வரை இனி டீச்சருக்குத் துணை அவளது கனவுகள் மட்டுமே. சாலமன் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும் என்கிற கனவே ஃபிலோமினாவின் மனதில் நிறைந்தது. சாலமன் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விடுவார் என்றும் தேவி டாக்கீஸில் மோகன்லால் நடித்த ஆறாம் தம்புரான் பார்க்கப் போகலாம் என்றும் காலையில் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் போது உறுதிப்படுத்திய ஆசை ஃபிலோமினா டீச்சரின் நடையைத் துரிதப்படுத்தியது. மோகன்லால் திரைப்படங்களின் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்து குழந்தைகளைப் போல ஃபிலோமினா டீச்சர் கைதட்டி உரக்கச் சிரிப்பாள். அதைக் கண்ட சாலமன் தலையில் ஒரு குட்டு வைத்துக் கொடுப்பான். நீ என்ன பெண்ணே ஒரு வித ஃபான்ஸ் காரங்களை மாதிரி… மோகன் லாலை எனக்குப் புடிக்கும் தானே… நமக்கு பார்க்கான் முந்திரி தோப்பு சினிமாவுல சாலமன் என்கறதுதான் அவரோட பேர்… அதை மறந்திடாதீங்க. அப்போது சாலமன் சிரிப்பான். அதைக் கண்ட ஃபிலோமினாவின் உடல் மே மாத மரத்தைப் போல பூத்துக் குலுங்கும்.
உளுந்து தோட்டத்தைத் தாண்டி மூங்கில்காட்டை நோக்கி நடந்தாள். மூங்கில் காட்டுக்குள் எப்போதும் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் பெரியவீட்டுப் பையன்கள் இருப்பார்கள். அவர்களின் மோசமான கண்களுக்கு எதிர்படாமல் அவ்விடத்தைக் கடக்க முடியாது என்பது ஃபிலோமினாவுக்குத் தெரியும். எதுக்காக இந்தப் பையன்கள் பொண்ணுங்களைப் பார்க்காததைப் போல இப்படி வெறிச்சுப் பார்க்கிறானுங்க என்று ஃபிலோமினா தனக்குள் சொல்லிக் கொள்வாள். வெயில் பொன்னிறத்தை வழங்கி, மூங்கில் காட்டை ஒரு தங்கக் கோளமாக மாற்றியிருந்தது. நடைபாதையின் இருமருங்கிலும் பெருமரங்கள் நிறைந்து வானத்தை குறுக்கு வழியாக மாற்றியிருந்தது. சிவந்த மேகக்கூட்டங்கள் நடைகூடத்தின் ஊடாக பறந்து போவதைப் பார்த்து, மூங்கில் காடு சட்டென முடிவடைய வேண்டுமென பிரார்த்தித்து ஃபிலோமினா விரைந்தாள். மூங்கில் புதர்களுக்குள் நுழைந்தால் ஒரு வனத்திற்குள் நுழைகிற எண்ணம் எப்போதும் மனதில் எழும். அடர்ந்த மூங்கில் கூட்டங்களின் நடுவில் மெல்லிய இருள் படர்ந்திருக்கும். சில்வண்டுகள் ஒலியெழுப்பும். ஈரமண்ணின் வாசம் இருக்கும். கூடு திரும்பிய பறவைகளும் அவ்வேளையில் பொரிந்த பறவைக்குஞ்சுகளின் கிரீச்சிடலும் ஒலிக்கும். மனதில் நிறைந்த எண்ணற்ற கனவுகளின், பாடல்களின் அலைகளில் ஒரு நொடியிடையில் ஃபிலோமினாவின் குரலை ஐந்து விரல்கள் அமுக்கின. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் சில கைகள் ஃபிலோமினாவின் உடலில் பிரவேசித்தன. மண்ணின் குளிர்ச்சிக்குள் அவளை வீழ்த்தின. அடையாளம் தெரியும் சில முகங்கள், திறக்க முற்பட்ட அவளது உதடுகளை தமது வாய்க்குள் விழுங்கின. வாழ்நாளில் சாலமன் மட்டும் நேர்மையாக ஓர் அனுஷ்டானம் போல செய்த செயல்களை கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக அவள் மீது செயல்படுத்திக் கொண்டிருந்தன. அழுவதற்குக் கூட வாய்ப்பு தராமல் அவளது தொண்டையும் கண்களும் மூடின. இருட்டு மட்டும் எஞ்சியபோது ஃபிலோமினா ஈரமான மண்ணில் சருகுகளின் நடுவில் ஒரு கிழிந்த துணியைப் போல கிடந்தாள்.
அருட்தந்தை குரியகோஸின் அலுவலக அறையில் குழந்தை யேசுவை மார்போடு சேர்த்தணைத்த மாதாவின் பிரகாசமான ஒரு சிலை வெளிர் பச்சைநிறத்தில் தென்பட்டது. மாதாவின் கண்களில் மட்டும் கருப்புமை படர்ந்திருந்தது. மாதா கருணை நிறைந்த ஒரு பார்வையை தனக்குத் தருவதாக ஃபிலோமினாவுக்குத் தோன்றியது. சுவர்களின் மறுபக்கத்தில் தெய்வீகமும் பக்தியும் நிறைந்த பாடல்கள் ஓராயிரம் உதடுகளிலிருந்து நிறைவதை மேரியம்மா கவனித்தாள். குரியகோஸ் எதுவும் பேசாமல் தங்களையே பார்ப்பதைக் கவனித்த மேரியம்மா, எதையாவது சொல்லுங்க ஃபாதர்… என்று உதட்டை திறக்க முயன்றாள். ஆனால், கூட்டுப்பிரார்த்தனையின் சத்தத்தில் அருட்தந்தை குரியகோஸ் கண் இமைக்காமல் அமர்ந்திருப்பதைக் கண்ட மேரியம்மா மிகவும் வருந்தினாள். எந்நிமிடத்திலும் அருட்தந்தை எதையாவது சொல்வாரென்று மேரியம்மா ஆறுதலடைந்தார். பிரார்த்தனையின் சத்தம் நின்ற நிமிடத்தில் அருட்தந்தை குரியகோஸ் கண்களை இமைத்துத் திறந்து, ‘மேரியம்மா எதுக்கும் கவலைப்படாதீங்க. ஃபிலோமினா இங்கேயே தங்கியிருக்கட்டும்’ என்று விளக்கமாக தணிந்த குரலில் சொன்னார். அதைக் கேட்டபோது இடியோசையுடன் ஒரு மழை பெய்து ஓய்ந்த அமைதி மேரியம்மாவின் மனதில் பரவியது. ‘மேரியம்மாவுக்கும் ஃபிலோமினாவுக்கும் தங்கறதுக்கு பின்பக்கத்துல குவேட்டர்ஸ் இருக்குது. கொஞ்சநாள் இங்க தங்கினா எல்லா கவலைகளும் தீர்ந்திடும். கர்த்தர் தீர்த்து வைப்பார். சாயங்கால பிரார்த்தனையில கலந்துக்குங்க.’
அதற்குப் பதிலளிக்கும் விதமாக மேரியம்மா உம் கொட்டினாள். பிறகு ஸ்துதி சொன்னாள். ஃபிலோமினா அப்போதும் மெளனத்தின் வெளிச்சட்டையை அணிந்திருந்தாள். அருட்தந்தை மிகுந்த வருத்தத்துடன் அவளைப் பார்த்தார். அவளது கூந்தல் மீதிருந்த புடவையின் முந்தானை அறையில் சுழலும் மின்விசிறி காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருந்தது. அவளது நிர்மலமான கண்களில் துயரம் மட்டுமே நிறைந்திருந்தது. மேரியம்மா மெதுவாக ஃபிலோமினாவைத் தொட்டாள். அவள் அனிச்சையாக எழுந்தாள்.
அவள் நடந்து செல்வது ஒரு கற்சிலையின் அசைவைப் போன்றிருந்தது. காற்றில் பறக்கும் ஒரு சருகைப் போல பறந்து அகன்றாள். அருட்தந்தையின் மனதில் இந்த ஆட்டுக்குட்டியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்கிற எண்ணம் மின்னலைப் போல ஒளிர்ந்தது. ’என் கர்த்தரே,எங்கே‘என்று சொல்லி அவர்கள் கண்களை விட்டு அகன்றதை உணர்ந்த அருட்தந்தை குரியகோஸ் திரும்பினார். அருட்தந்தையின் பார்வை வெளிர் பச்சைநிற சிலை மீது விழுந்தது. மாதாவின் கண்களின் துயரத்தை அவர் தெரிந்து கொண்டார். திகைப்புடன் தலையைத் திருப்பி ஃபிலோமினா நடந்து போன கதவைப் பார்த்தார். தெய்வமே… மாதாவே … அவ்வேளையில் பிரார்த்தனை மண்டபத்தில் கூட்டுப்பிரார்த்தனையின் மணியோசை ஒலிக்கத் தொடங்கியது.