நாய்ப்பூனையூர் மழைச்சடங்கு
றாம் சந்தோஷ்

by olaichuvadi

 

மேகேஷு ஒன்டில்லுதான் ராமுலு பற்றிய கதையை முதன்முதலில் என்னிடம் சொன்னான்.
இந்த கல் பூமியில்தான் ராமுலு ரொம்ப காலம் வசித்துவந்தான். நிறைய நாய்களையும் பூனைகளையும் அவன் வளர்த்து வந்தான். அவன் இவ்வாறு சொல்லத் தொடங்கியதும், உடனே எனக்கு அந்த ஊருக்கு “குக்கல, பில்லில ஊரு” என்று அட்டப்பெயர் ஏன் வந்தது என்பதற்கான காரணம் புரியத் தொடங்கியது. அந்த ஊரெங்கும் நாய்கள் உலாத்திக் கொண்டிருந்தன. அவற்றின் கட்டுப்பாடுகள் பற்றி ஊராரோ, கார்ப்ரேஷனோ கவலைப் பட்டதைப் போலத்தெரியவில்லை. இதற்கு மூலாதாரம் ராமுலுதான் போல என நினைத்துக் கொண்டேன்.

மேகேஷு கதையைத் தொடர்ந்தான், அவனுக்கு நாய்கள் பேசும் பாஷை புரியும். அவை அவன் வார்த்தைக்குக் கட்டுப்படும், ஒருநாள் இப்படி ஒரு விசயம் நடந்ததை ஊராரால் நம்ப முடியவில்லை. ராமுலு ஒரு நாயைக் கல்யாணம் பண்ணிக்கொண்டான். எல்லோருக்கும் ஆச்சரியமும், அச்சமும், அசிங்கமாவும் போய்விட்டது. இதை யாரேனும் பார்த்துக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தால் தர்மசங்கடமாக ஆகிவிடும் என்று ஊர் மூத்தவர்கள் பேசிக்கொண்டனர்.

ஊரே அவனை கேலி செய்து கல்லால் அடித்தது. அவன் அந்த நாள் இரவு ஒரு நாயகவே மாறிப்போனான். தன்னை கல்லால் அடித்தவர்களைப் பழிவாங்கும் நோக்கில் எல்லோரையும் கடிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் மணலைப் புராண்டி புராண்டி வைத்தான். அந்தக் குழியெல்லாம் வெறும் கற்களாய் முளைத்து, வளர்ந்தன” என்றான்.
எனக்கு அதிசயமாய்ப் போனது.  


அந்த பூக்களின் ஊரின் வசந்த் என்கிற கதை ஆசிரியன் வசித்து வந்தான். அவனை கதை ஆசிரியன் என்பதைவிடவும் கதாபாத்திரங்களின் மோகி என்று சொல்லலாம். காரணம் அவன் சில நேரங்களில் தான் வாசிக்கும் கதாபாத்திரங்களாகவே மாறிப்போவதுண்டு. மாறும்போது ஊர் ரெண்டாவது உறுதி. எனவே அவனைச் சுற்றி சில பேர் அவன் எந்த வகையான புத்தங்களைப் படிக்கிறான் என்பதை நோட்டம் விட்டபடியே இருந்தனர்.  

விசயம் கொஞ்சம் கைமீறி போகும் நாட்களில், ஆற்றுநரிடம் செல்லும் போது அப்புத்தங்களைப் பற்றி சொல்வது, அல்லது அந்த நூல்களை கையோடே எடுத்துச் செல்வது நடக்கும். இது எப்படி பாம்புக் கடி முறிவுக்காக மருத்துவமனைக்குச் செல்லும் போது கடித்த பாம்பின் அடையாளம் சொல்வது சிகிச்சையில் உபகாரமாக இருக்குமோ அதுபோல அவர்களுக்கு உதவி வந்தது.

இந்தமுறையும் ஆற்றுநர் வழக்கம் போல அவனிடம் ஒரு தாளை நீட்டி, தன்னைப் பற்றிய கதையை வேறுயாருக்கோ நிகழ்ந்ததைப் போல படர்க்கையில் ஒரு கதையாய் எழுதித் தன்னிடம் கொடுத்துவிடப் பணித்தார்.

அவன் எழுதிய கதை:

முன்பொரு காலத்தில் யோகம், வர்மம் என பல கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒரு இளைஞர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் நாய்ச் சித்தர். சித்தர் என்று பொதுவாக கூப்பிட்டாலும் அவர் ஒரு சம்சாரிதான். அவர் நாயொன்றை காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டு, தானுமொரு நாயாக உருமாறி அதனோடு வாழ்ந்துவந்தார்.

நாய்ச் சித்தரைப் பற்றி கேள்விப்பட்ட தூரதேசத்து இளைஞன் ஒருவன் சென்று அவரைச் சந்தித்து, தங்களிடம் நான் சீடனாக சேர ஆசைப்படுகிறேன் என்று சொன்னான். இளைஞனை முகர்ந்த நாய்ச்சித்தர், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றும் நீயொரு நாயுடன் காதல்புரியும் காலம் வரும் வரை, இப்போதைக்கு இவ்விசயங்கள் மறந்துபோய், அப்போது அது உன் நினைவுக்கு வரும் என்று குரைத்து அனுப்பினார். சீடனும் மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்; அவனுக்குப் பழையவை எல்லாம் மறந்து போனது.  

ஒருநாள் அந்தச் சீடனுக்கு அவனுடைய குரு சொன்னதைப் போலவே தன் கதை மீண்டும் நினைவூட்டப்பட்டது. அந்த இரவு வழக்கபோலவே அவன் தன்னுடைய தோழனுக்கு காணொளியில் அழைத்தான். இருவருக்கும் மெய்நிகர் சரசம் நடக்க ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல, அவன் தோழன் தன் கழுத்தைக் காட்டினான். அப்போது சீடனின் பற்கள் தீடீரென்று நாயின் பற்களைப் போல கூர்மையுற்று அவனைக் கடிப்பதுபோலான பாவனை செய்தான். அழைப்பு துண்டிக்கப்பட்டது. இரவின் நடு ஜாமத்தில் அவன் ஒருமுறை ஊளையிட்டான். உறங்கி எழுந்ததும் மீண்டும் குரைத்தான்.  இனிமையை உணர்ந்தான்.  
இவ்வாறாக கதையை எழுதிமுடித்ததும், கதாசிரியன் அந்தத் தாளை ஆற்றுநரிடம் ஒப்படைத்தான். ஆற்றுநர் அந்தக் கதையைப் படித்ததும் தலையைச் சொறிந்தபடி, பக்கத்து அறையிலிருந்த மருத்துவரிடம் அனுப்பினார்.

கதாசிரியரும் அவரும் நண்பர்களும் அந்தத்தாளோடு மருத்துவரை அணுகினர். சிறு உரையாடலுக்குப் பிறகு, அந்தக் கதையைப் படித்துப் பார்த்த மருத்துவர் உங்களுக்கு நாய்கள் பிடிக்குமா பூனைகளா என்றார். எனக்கு என்னமோ பூனைகள் என் வீட்டில் உலவுவதை விரும்புவதாக தற்போது எனக்குத் தோன்றுகிறது என்றான். அது புராண்டும் போது என் தோலெல்லாம் பூப்பூக்கும் சந்தோஷமாய் இருக்கும் என்றான். மருத்துவர் நண்பர்களை நோக்கி, இப்போது தேவலை போல என்று சொல்லி, குளிகைகளைக் கொடுத்தனுப்பினார்.

கதாசிரியருக்கு இரண்டொரு நாட்களில் சரியாய்ப்போனதுபோல்த்தான் இருந்தது. ஆனால் வேறு என்ன மாதிரியான நூல்களைத் தற்போது படித்துக்கொண்டிருக்கிறார். என்பதை நோட்டம் விடுவதை அவருடைய நண்பர்கள் கைவிடவில்லை. இரண்டொரு நாட்களுக்குப் பிறகு அவரை மருத்துவரிடம் அழைத்தும் போகும் வேலை வந்தாலும் வரலாம் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.


அந்தத் திருட்டுக்குப் பெயர்போன ஊரிலேதான் கஜேந்திரனும் வசித்து வந்தான். அவனுக்கு அவன் அண்ணன் நண்பர்களில் ஒருவன் மீது தனி ஈர்ப்பு இருந்துவந்தது. அதேசமயம் அவன் காதலுக்கு வேறொருத்தி மேல் மோகம் இருப்பதும் இவனுக்குத் தெரியமால் இல்லை. அவனை தான் அடைய வேண்டும் என்ற ஆசை இவனை எப்போதும் அரித்தபடி இருந்தது. அவன் அதற்கான சில தந்திரங்களைச் செய்வதை வாடிக்கையாய்க் கொண்டிருந்தான்.


கஜேந்திரனின் காதலன் ஒரு கதாசிரியன்; அதுமன்றி, அவனுக்குத் தான் வாசிக்கும், கேள்விப்படும் கதாபாத்திரங்களாக மாறும் சுபாவம் இருந்தது. அதை இவன் அடிக்கடித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தான். அன்றைய தினம் கதாசிரியனான வசந்த மருத்துமனைக்குச் சென்று வந்ததும், அவன் தற்போது எப்படியாக கற்பனை செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள விரும்பினான் கேஜேந்திரன். அதற்குத் தோதாக கதாசிரியன் மருந்துவரிடம் எழுதிக் காண்பித்த கதை அவன் அண்ணின் சட்டைப் பையில் இருப்பதைப் பார்த்தான். அதை அவன் திருடி விட்டான்.


குப்பத்தில் நாய்களில் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஊரில் வெளியாட்கள் யாரும் கால்வைக்கக் கூட அஞ்சினர். உள்ளூராட்களுக்கும் இதனால் பிரச்சனை இல்லாமல் இல்லை. அவர்கள் பூனைகள் பற்றி அஞ்சினர். பூனைகள் மொத்தமும் செத்துப் போய்விட்டால், தன் பூவயல்களை வயல்களைக் கொரிக்கும் எலிகளை யார் மட்டுப்படுத்துவது என்பது அவர்களுக்கொரு விசனமாக இருந்தது.

ஊர்பஞ்சாயித்தில் கூடி, முன் தங்கள் குடியில் தாங்கள் இம்சித்த நாயிளைஞனை வழிபட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். ஊர் மக்கள் கூழ்வார்க்கையில் சாமி ஆடிய பூசாரி, நான்தான் நாலு காலு காவக்காரன் வந்திருப்பதாகவும், நாயான தனக்கும் ஒரு பூனைக்கும் கலியாணம் பண்ணி வைத்தால் உங்கள் கஷ்டம் தீருமென்று அருள்வாக்குச் சொன்னார்.


கஜேந்திரன் வசந்தைப் பார்க்க அவனறைக்குச் சென்றான். பார்த்து பேசிக்கொண்டிருக்கையில், நாய்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான். கொஞ்சம் மறதியும் வாய்த்தவனான வசந்த எதற்கு அதைப்பற்றி தற்போது கேட்கிறான் என்பதை யூகிக்க முடியாமல் எனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பதை தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை என்றான். நிலைமையை யூகித்த கஜேந்திரன் வேறுவழியில்லாமல் வசந்த் எழுதிய கதையை அவனிடமே படிக்கக் கொடுத்தான்.
வசந்த் அதை வாசித்ததும், ஏதோ பொறி தட்டியவன் போல என் வனப்பு மிக்க நாயே என்று கொஞ்சல் மொழி பேசினான். கேஜேந்திரனின் தந்திரம் பலித்தது. கலவி உக்கிரம் அடைகையில், கதாசிரியன், தன் காதலின் கழுத்தில் வேகமாய் கடித்தான். அலறிய கேஜேந்திரன் தன்பங்கிற்கும் அவனைத் தாக்கினான். இருவரும் ஸ்திதியும் உச்சம் பெற்று தாழ்கையில், மழை ஜோவென்று பெய்தது.


(யூமா வாசுகிக்கு…)

குறிப்புகள்:
குக்கல பில்லில ஊரு – நாய்ப் பூனையூர்
அட்டப்பெயர் – பட்டப்பெயர்
ரால்லு, பூல்லு, தொங்கலு – குப்பம் குறிப்பிடப் பயன்படுத்தும் சொலவடை பொருள்: பாறைகள், பூக்கள், திருடர்கள். இந்த மூன்றிற்கும் பெயர்போன ஊர்.  

பிற படைப்புகள்

Leave a Comment