நுண் கதைகள்
இளங்கோ கிருஷ்ணன்

by olaichuvadi

மணலின்புத்தகம்

1975ம் வருடம் ஹோர்ஹே லூயி போர்ஹே மணலின் புத்தகம் என்ற தன் புகழ் பெற்ற சிறுகதையை எழுதத் திட்டமிட்ட நாளில்தான் பாம்பேவில் என் தாத்தா கங்காசிங்கை போலிஸ் அடித்து இழுத்துச் சென்றது. பிரதமர் இந்திரா இந்தியாவில் மிஸா சட்டம் கொண்டு வந்த மறுநாள் அது என்று என் அப்பா தன் பால்யத்தின் தைல வண்ண நினைவுகளில் மூழ்கியவராய் அதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாங்கள் அப்போது தாராவியில் இருந்தோம். எங்களின் பூர்வீகம் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு சிறு கிராமம். மும்பையில் தன் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொள்ள இயலாத தாழ்த்தப்பட்ட மக்கள் பெயரின் பின்னொட்டில் சிங் என சேர்த்துக்கொள்வது வழக்கம் என்று அப்பா சொல்வார். அப்படித்தான் என் தாத்தா கங்காதரன் கங்காசிங் ஆனார். தாராவியில் எங்கள் தாத்தா ஒரு பழைய புத்தகக்கடை வைத்திருந்தார். வீதிதோறும் அலைந்து, பழுப்பேறிய, கிழிந்த, முனை கசங்கிய பழைய புத்தகங்கள் சேகரித்து அரை விலைக்கு விற்பார். நேரம் கிடைக்கும்போது அதில் ஒரு சில புத்தகங்களை வாசிக்கவும் செய்வார். ஒரு முறை ஜின்னிங் மில்லில் வேலை செய்யும் தோழர். ஆறுமுகம் இறந்தபோது அவர் மகன் டிட்டோ கொண்டு வந்து கொடுத்த சிவப்பு வண்ண கெட்டி அட்டைப் புத்தகங்களின் தாளின் வழுவழுப்பில் மயங்கி அவற்றில் சிலதை வீட்டுக்குக் கொண்டுவந்தார். அதில் ஒன்றிரண்டை வாசிக்க முற்பட்டபோது அவருக்கு உலகத்தின் இன்னொரு கதவு திறக்கப்படுவதை உணர்ந்தார்.

மெல்ல வாசிப்பில் ருசியேற ஒவ்வொரு கதவாய் திறந்து சென்று கொண்டேயிருந்தார். இப்படித்தான் அவர் ஒரு சிவப்புத் துண்டுக்காரர் ஆனார். பிறகு ஒரு மழைநாளில் பாபாசாகேப் அம்பேத்கரின் புத்தகம் ஒன்றை வாசிக்கத் துவங்கியபோது அவருக்கு இந்த தேசத்தின் வேறு கதவுகள் திறக்கப்படுவதை உணர்ந்தார். அம்பேத்கரின் புத்தகங்களைத் தேடித்தேடி படிக்கத் துவங்கினார். அப்படித்தான் அவருக்கு ஒரு புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. அதன் பெயர் மணலின் புத்தகம். முதலும் முடிவுமற்ற அந்த புத்தகத்தைப் போலவே, பல விநோத புத்தகங்கள் என் தாத்தாவிடம் சேரத்துவங்கின. பகல் முழுதும் அலறல் ஒலிக்கும் புத்தகங்கள்; விதவிதமான நறுமணங்களைப் பரப்பும் புத்தகங்கள்; ஓயாது பிற புத்தகங்களுடன் வாதிட்டுக்கொண்டிருக்கும் புத்தகங்கள், கடைசிபக்கம் தீராவே தீராத புத்தகங்கள் என பலவிதமான புத்தகங்கள். ஒருமுறை ஒரு புத்தகத்தில் சாணிப்பால் புகட்டப்படுவதை, யோனியில் கம்பி செருகப்படுவதைக் கண்டு அந்தப் பக்கங்களைக் கிழித்து துப்பாக்கி செய்துகொண்டார் என் தாத்தா.

அது முதலாய் அந்த வீடு அவருக்கு அந்நியமாய் போனது. என் அப்பா நிமோனியா கண்டு மரணப் படுக்கையில் இருந்த போது அவரைப் பார்க்க ஒரு முசல் மான் வேடத்தில் வந்தார் என் தாத்தா. எப்படியும் வருவார் எனக் காத்திருந்த போலிஸார் அவரைப் பிடித்து என் அப்பாவின் கண் முன்பேயே துவம்சம் செய்து கொண்டு சென்றார்கள். வீட்டில் இருந்த புத்தகங்கள் உட்பட அனைத்தும் சூறையாடப்பட்டன. கடைசிப்பக்கம் முடியவே முடியாத பைசாசம் பீடித்த அந்த மணலின் புத்தகம் எங்களிடம் இருந்து தொலைந்தும் போனது. சில நாட்கள் கழித்து போர்ஹேவின் கதை பிரசுரமான போது என் தாத்தா தாராவியின் சாக்கடை மேட்டில் அழுகிக்கிடந்தார்.

கொந்தளிக்கும் மலர்

ரயிலில் கூட்டம் இல்லை. விடிகாலை நேரம் என்பதால் நிறைய இருக்கைகள் காலியாகவே இருந்தன. திருப்பூரைத் தாண்டினால் கூட்டம் வரக்கூடும். சக்திவேல் தன் பையில் இருந்து ஒரு புக்கை உருவினான். ஆலிவார்சாக்ஸ். எனக்கு சக்திவேல் எப்படி இது போன்ற புக் எல்லாம் படிக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது. என்னளவில் இலக்கிய புத்தகங்கள்தான் எனக்கான மன உந்தத்தைத் தருபவை. சேர்ந்தார்போல ஓரிடத்தில் பத்து நிமிடங்கள் உட்கார முடியாத, அலைபாயும் மனமும் உடலும் கொண்டவனான என்னை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றால் அது ஒரு இலக்கிய புத்தகத்திடம்தான் முடியும்.  கட்டற்ற உணர்வின் வெள்ளத்தில் ஒரு சருகைப்போல அதில் மிதந்து செல்வேன். ஒன்றைப் பத்தென புரிந்து கொள்ளும் படைப்பூக்கம் என்னை அழ வைத்து, சிரிக்க வைத்து மனம் சொக்கிக் கிடக்க வைக்கும்.

இந்தக் கட்டுரைத் தொகுப்புகளே கூட எரிச்சலானவைதாம். சுவாரஸ்யமான மொழியில் எழுதப்பட்ட எளிய வாழ்வியல் அனுபவங்கள் என்றால் சரி. மற்றபடி முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்லப்படும் கட்டுரையின் மொழியில் உள்ள செயற்கையான விரைப்புத்தன்மை ஏனோ பிடிப்பதில்லை. எவ்வளவு தங்கமான விஷயத்தை,  எவ்வளவு தங்கமான மனிதர் சொன்னாலும் ஏனோ அதில் ருசி உருவாவதே இல்லை. ஆனால், இவன் அப்படி இல்லை. கட்டுரைகளாகத் தேடித்தேடிப் படிக்கிறான். ஃபூக்கோ என்ற பெயருக்கு அவன் வைத்திருந்த புத்தகத்தில் இருந்த ஸ்பெல்லிங்கைப் பார்த்தபோது சிரிப்பாக இருந்தது. இதை ஏன் ஃபூக்கோ என உச்சரிக்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. கேட்டால் சிரிப்பான். உண்மையில் அவனுக்கும் அப்படித்தான் முதலில் தோன்றியிருக்கும். ஆனால் அப்படி இல்லை என்பதாக பாவனை செய்வான். அறிவுஜீவித்தனம். அது அவனோடே இருக்கட்டும். நான் கலைஞன். பெருகும் உணர்ச்சியில் திணறி உருண்டு, அதன் மீது தடுமாறி ஏறி சவாரி செய்பவன்.

“என்ன திரு காலங்காத்தாலேயே தீவிர சிந்தனை?”

“ஒன்னும் இல்லை. சரி அது என்ன புக். அந்த நரம்பியல் நிபுணர் எழுதினதா?”

“ஆமா. மனுஷன் பிச்சு உதறாரு. பிராய்டையே லெஃப்ட் ஹேண்டுல டீல் பண்றாரு நண்பா. அடிக்கடி நீ சொல்வாய் இல்லை. அனுபவத்தை மட்டும்தான் எழுதணும்னு. அனுபவத்தை எழுதறதுன்னா என்னான்னு சொல்றாரு வாத்தியாரு”

“ம்ம்ம்… நீயே படிச்சுக்க;  நீயேவச்சுக்க… எனக்கு இதெல்லாம் வேண்டாம் நண்பா. எனக்கு என் அனுபவங்கள், அதன் வழியா ததும்பும் உணர்ச்சிகள் போதும். சரஸ்வதிக்கு நேர்மையா இருந்தா சரஸ்வதி கூப்பிட்டுட்டு போவா எங்க வேண்டும்னாலும்…”

“……”

“நேத்து கோவை ஞானி கூட பேசிட்டு இருந்தேன். அவரும் இதைத்தான் சொல்றாரு. அனுபவம்தான் கலை. கரைஞ்சு, கலந்து போயிடனும் அப்படிக் கரைஞ்சு எடுத்து வைச்சா அதான் நிலைக்கும். சத்தியம்”

“சரிநண்பா, அனுபவம்னா என்ன?”

“…….”

“தஸ்தாயெவ்ஸ்கியோட சேர்ந்து சாவின் முனைல நின்னுட்டு இருந்தவங்க எத்தனை பேரு? எல்லோருக்கும் அனுபவம் நேர்ந்ததே? எல்லோருமே தஸ்தாயெவ்ஸ்கி ஆகிட்டாங்களா? ஏன்ஆகமுடியலை?”

“………”

“அடி வாங்கிறதுதான் அனுபவம்னு சொன்னா நான் நம்ப மாட்டேன். முறைச்ச உடனே அழற குழந்தை இருக்கு. கை ஓங்கினதும் அழற குழந்தை இருக்கு. அடி வாங்கினதும் அழற குழைந்தை இருக்கு. அடி வாங்கினாலும் அழாத குழந்தை இருக்கு. அப்ப அனுபவம்ங்கிறது எங்க இருக்கு? அடிப்பதுங்கிற சம்பவத்திலா, அடி வாங்கிற குழந்தையின் மனசிலா…  நீ அடி வாங்கிறயா, வாங்கிலயாங்கிறது முக்கியம் இல்லை. அடியை எப்படி உணர்கிறாய் என்பதுதான் முக்கியம்.”

“அப்ப அனுபவத்துக்கு ஒரு பொருளும் இல்லைங்கிறயா?”

“அனுபவங்கிறது ஒற்றைப்படையானது இல்லைன்னுதான் தோணுது நண்பா. இன்னும் சரியா சொன்னா ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட சம்பவத்தில் இருந்தால் கூட எல்லோர் அனுபவங்களும் ஒன்று இல்லை. அதனால் அனுபவங்கள் என்பவை சார்பானவைன்னு தோணுது.”

“ம்ம்ம்ம்”

“சுந்தர ராமசாமியின் நினைவலைகள்’  நூலில் கமலா சுந்தர ராமசாமி ஒரு சம்பவம் சொல்றாங்க. அறுவை சிகிச்சை செய்து கால் நீக்கப்பட்ட கிருஷ்ணன் நம்பியைப் பார்க்க சு.ராவும் அவங்களும் போறாங்க. கிருஷ்ணன் நம்பி, நீக்கப்பட்ட காலில் கட்டை விரல் அரிக்குதுன்னு சொல்லி இருக்கிறார். இப்போ சொல்லு காலே இல்லாம அரிக்குது. அனுபவத்துக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம் சொல்லு? விளையனூர் ராமசந்திரன் படிச்சியா?

“ம்ம்ம்… படிச்சேன். பாதி போச்சு, அப்புறம் வெச்சுட்டேன்.”

“அவர்கிட்ட கிருஷ்ணன் நம்பியின் பிரச்னைக்கு பதில் இருக்கு… அவர் ஒரு கேஸ் ஹிஸ்டரி பத்தி சொல்றார். ஒரு நோயாளியின் கபாலத்தைத் திறந்து சிகிச்சை கொடுத்திட்டு இருந்தாங்களாம். அந்த நோயாளிக்கு ஊசி போடப்போகும் போது எல்லாம் ஒரு குறிப்பிட்ட நியூரான் ஒளிர்ந்திருக்கு. அதுதான் வலிக்கான நியூரான்னு கண்டுபிடிச்சிருக்காங்க.”

“ம்ம்ம்ம்…”

“அதெல்லாம் மேட்டரே இல்லை. அதுக்கப்புறம் அவர் சொல்றதுதான் மேட்டரு. அவருக்கு ஊசி போடும் போது மட்டும் இல்லை பக்கத்தில இருப்பவருக்கு ஊசி போடப் போனாலும் அந்த நியூரான் ஒளிருதாம்… யோசிச்சுப்பாரேன். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்னு ஒருத்தன் சொல்றான்னா அவன் நிஜமாவே வாடி இருக்கான் நண்பா… அதாவது அந்த வாட்டத்தை உணர்ந்திருக்கான். அதாவது, அவனளவில் நிஜமா அந்த அனுபவம் இருக்கு.”

“அப்ப அனுபவம்ங்கிறது புலன்களுக்கு நேர்வது மட்டுமே இல்லை. அப்படித்தானே.”

“அப்படித்தான் விளையனூர் ராமசந்திரன் சொல்றார். ஆலிவர்சாக்ஸ் சொல்றார்.”

எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. இப்படித்தான் உரையாடல் பல சந்தர்ப்பங்களில் முட்டுச்சந்தில் வந்து நின்று விடும். அவன் தர்க்கத்தைக் கொண்டு எதையோ உருட்டிக் கொண்டிருப்பான் அர்த்தமற்ற சொற்களாக… நான் திகைத்து நின்று விடுவேன். இருவருக்குமே தெரியும் அது முட்டுச்சந்தென்று. நான் ஒப்புக்கொள்வேன். ஆனால் அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். என்னால் ஸ்தூலமாக உணர முடியாத விஷயங்கள் பற்றி நான் பேச மாட்டேன். ஆனால், அவன் பேசிப்பேசி விஷயங்களை ஸ்தூலமாக்கி விடுவான். தர்க்கத்தின் புதிர்பாதைகளில் அது சாத்தியமே என்று தோன்றும். ஆனால் அந்த விளையாட்டு அவனுக்குச் சலிக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு விளையாட்டு என்பது கூட அவனுக்குத் தோன்றவே இல்லை.

இதோ இன்றும் இப்படி ஒரு தர்க்க விளையாட்டு.  நான் எந்த விஷயங்களையும் சாரம்சப்படுத்திக் கொள்வது இல்லை. எல்லா உரையாடல்களிலும் பங்கெடுக்கிறேன். ஆனால் எடுக்கப்படும் எல்லா முடிவுகளிலும் சந்தேகம் கொள்கிறேன். அதுவே என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. கலைஞன் தர்க்கத்தை நம்பினால் நாசம். ஆனால், இவனைப் போன்ற சிலரால் முடிகிறது. தர்க்கத்துக்குள் லாவகமாக கால் வைத்து நடந்துசென்று, மீண்டும் கலைக்குள் ஓடி வர முடிகிறது. ஒரு வேளை கலையின் அபத்தத்தையும் தர்க்கத்தின் அபத்தத்தையும் மாறிமாறி உணர்கிறானோ என்னவோ… ஆனால் என்னதான் மனசோ? சதா சர்வகாலமும் கொந்தளிப்பும் குளிர்ச்சியுமான ஒரு அகம். ‘மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலர்’ யாருடைய சொல்லாட்சி இது கண்ணதாசனா? சங்க கவிதை கூட இப்படி ஒன்று இருக்கிறதுதானே…

“என்னப்பா மறுபடியும் சிந்தனை”

“ஒன்னும் இல்லை… அந்த ஆலிவர்சாக்ஸ் படிச்சிட்டு தா… ட்ரை பண்றேன் நானும்” என்று புன்னகைத்தேன். அதிகாலை காற்று முகத்தில் மோதி தலையைக் கலைக்க அதன் குளிரில் உடலெங்கும் சிலிர்ப்பு பரவியது.

 

 

பிற படைப்புகள்

Leave a Comment