வலம் இடம்
ஜெயமோகன்

by olaichuvadi

 

[ 1 ]

செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?”

“என்னது?” என்றான்

“நம்ம எருமைய பாக்குதது உண்டா?”

“பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?”

“அதில்ல” என்றாள்

“போடி, போய் சோலிகளை பாரு.. எருமைக்க காரியம் நான் பாத்துக்கிடுதேன்”

குமரேசன் மூக்கணாம்கயிறு திரித்துக்கொண்டிருந்தான். பெரும்பாலானவர்கள் நைலான்கயிறை மூக்கணாம்கயிறாக போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருமுறை போட்டால் ஏழெட்டுமாதம் கிடக்கும். ஆனால் எருமையின் மூக்கு எப்போதுமே புண்ணாகத்தான் இருக்கும். அதன் அரம் அப்படிப்பட்டது. சில எருமைகளுக்கு நைலான் பிடிக்காமலாகி மூக்கே மொத்தமாக வீங்கிவிடுவதும் உண்டு. அதுவும் நல்லதுதான் என்பார்கள். மூக்கில் ரணமிருந்தால் எருமை சுட்டுவிரல் அசைவுக்கு அடங்கி பதுங்கி நிற்கும்.

ஆனால் குமரேசன் பனைநார் முறுக்கிய மூக்குக்கயிறுதான் போடுவது. அவனே கைப்பட முறுக்குவான். பனம்பட்டையின் வழவழப்பானநாரை சுழற்றி சுற்றி இறுக்கி அவன் மூக்கணாம்கயிறு செய்தபின் கண்ணைமூடி தடவிப்பார்ப்பான். கண்ணாடியால் செய்யப்பட்டதுபோலிருக்கும். எருமையின் மூக்கில் எப்போதும் ஈரமிருக்கும். ஊற ஊற மூக்கணாங்கயிறை உருவி சுழற்றி முக்குக்குள் இருக்கும் இடத்தை மாற்றவேண்டும். ஆனால் பனைநாரால் எருமைக்கு புண் வராது. பனையும் எருமையும் சேர்ந்தே பிறந்தவை.

செல்லம்மை அங்கேதான் நின்றிருந்தாள் என அவன் உணர்ந்தான். “என்னட்டி தீனம் உனக்கு?”என்றான்

“எருமை முன்னமாதிரி இல்ல”

“முன்ன எப்டி இருந்தது? இப்பம் எப்டி இருக்கு? சொல்லு…” என்று அவன் மூக்கணாம்கயிறை கீழே வைத்தான்

“இப்ப கேளுங்க… என்ன சத்தம்?”என்றாள்

எருமை குளம்பு மாற்றும் ஒலி கேட்டது

“அது எப்பமும் சவிட்டிக்கிட்டுதானே இருக்கும்?”

“இப்டி சவிட்டுகதில்லை… நின்னநேரம் முழுக்க சவுட்டுது… அதுக்கு என்னமோ தீனம் இருக்கு”

அப்போதுதான் அவனும் கவனித்தான். எருமை நிலைகொள்ளாமல்தான் இருந்தது. பூச்சிகடிக்கிறதா? புகைபோட்டிருந்தானே?

அவன் தொழுவுக்குப்போய் எருமையை பார்த்தான். அது அவனை திரும்பி பார்த்து ர்றேங் என்றபின் தலையை குலுக்கியது. கனத்த குளம்புகளால் தரையை உதைத்துக்கொண்டே இருந்தது.

“வயித்தை வலிக்குதோ?” என்றான் குமரேசன்

“நல்லா எரையெடுக்குதே…” என்றாள். உண்மைதான் .அது வாய்நிறைய வைக்கோலை எடுத்து நாசுழற்றி மென்றுகொண்டிருந்தது.

“பொறவு என்ன செய்யுது?”என்று அவன் கேட்டான். அது அவன் அவனிடமே கேட்டுக்கொண்டது. அவள் ஒன்றும் சொல்லவில்லை

“நீ கொஞ்சம் வேப்பெண்ணை கொண்டா” என்றான்

அவள் வேப்பெண்ணை குப்பியை கொண்டுவந்து தந்தாள். எருமைக்கு என்ன நோவு என்றாலும் உள்ளும் புறமும் வேப்பெண்ணை காக்கும் என்பது அவனுடைய புரிதல். அவனுடைய எருமைக்கு அது பெரும்பாலும் பயனளிக்கவும் செய்தது

மூங்கில் குழாயில் வேப்பெண்ணையை ஊற்றி எடுத்துக்கொண்டான். எருமையின் மூக்குக்கயிற்றை பிடித்து வாயை மேலே தூக்கி தடித்த வாழைப்பூநாக்கை ஓரமாக விலக்கி அதில் குழாயை செருகி வேப்பெண்ணையை அண்ணாக்கில் ஊற்றினான். சும்மா கொடுத்தாலே அது குடிக்கும். வேப்பெண்ணைச்சுவை அதற்கு நன்றாக பழகிவிட்டிருந்தது. நாக்கைச்சுழற்றி உறிஞ்சியபின் தரையில் விழுந்த சொட்டுகளையும் நக்கியது. கண்களிலும் செவிகளிலும் ஓரிரு துளிகள் ஊற்றினான். பின்பக்கம் அறையிலும் பூசிவிட்டு எஞ்சியதை வழித்து உடலெங்கும் பூசினான். ஒரு மாதிரி நிம்மதி ஏற்பட்டது.

கையை கழுவிவிட்டு வீட்டுக்குள் போய் “ஏட்டி கஞ்சியை எடுத்து வை” என்றான்.இரவு அவனுக்கு கிழங்கு மயக்கியதும் மீன்கறியும் கஞ்சியும்தான் வழக்கம். பலாக்காய் பருவத்தில் கிழங்குக்குப் பதில் பலாக்காய் மயக்கு. மழைக்காலத்தில் காய்ச்சில் கிழங்கு மற்ற காலங்களில் மரவள்ளிக்கிழங்கு.

கைகழுவும்போது மீன்முள்ளும் சோறுமாக ஒரு பெரிய உருளை மணிக்கு. அது கொல்லைப்பக்கம் விறகுப்புரையில் அதற்காக காத்திருந்தது. ஏற்கனவே ஜொள்ளு ஊறி வழிந்திருந்தது. அவன் உருளையை வைப்பதற்குள் முனகியும் வாலாட்டியும் துள்ளியது.

வழக்கமாக தட்டில் எஞ்சிய மயக்கிய மரவள்ளிக்கிழங்கில் ஒரு பெரிய உருளை கொண்டுவந்து எருமைக்கு கொடுப்பான். குமரேசன் அதற்கும் சேர்த்தே பரிமாறுவாள். அது அவன் வரும் காலடியோசையை கேட்டு செவி தழைத்து, கண்களை உருட்டியபடி காத்திருந்தது. அவன் நீட்டியதை நாக்கால் பெற்றுக்கொண்டது. அதன் நீண்ட கொம்புகள் அழிகளில் முட்டின. சுவையுடன் நக்கி உண்டது. அவன் தன் கையை நீட்டினான். கையை நன்றாக நக்கி தூய்மை செய்தது.

எருமையின் அருகே இருந்து மீண்டும் கைகழுவச் செல்லும்போது அவன் முகம் மலர்ந்திருந்தது. எப்போதுமே தொழுவத்திலிருந்து செல்லும்போது அவன் சிரிப்பவன்போல முகத்தசைகளை விரித்திருப்பதை அவன் கொஞ்சம் கழித்துத்தான் உணர்வான். முகத்தை இறுக்கிக்கொள்வான். ஆனால் அதன்பிறகும் நெடுநேரம் அவன் மனதில் அந்த மலர்வு இருந்துகொண்டிருக்கும்.

வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தபோது அந்த ஓசை கேட்கவில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். துப்பிவிட்டு வாய் கொப்பளித்து பாயை விரித்தான். விபூதி போட்டுக்கொள்கையில் எருமையின் ஓசை கேட்டது. மூச்சு சீறுகிறது, கொம்புகள் அழிகளில் முட்டுகின்றன. குளம்புகள் கல்தரையில் மாற்றி மாற்றி ஊன்றுகின்றன.

மணி எருமையிடம் போய் ஏதாவது வம்புசெய்கிறதா? சோறு இறங்கினால் அதற்கு ஒரு தெனாவெட்டு வருவதுண்டு. அவன் எழுந்து போய் பார்த்தான். ஆனால் மணி அங்கே இல்லை. எருமை அவனை ஏறிட்டுப்பார்த்து “ர்றே” என்றது.

அங்கே எவரும் இல்லை. அவன் எருமையைப் பார்த்தபடி கொஞ்சநேரம் நின்றான்.அதன் கன்னங்கரிய உடல் வேப்பெண்ணைப்பூச்சில் பளபளத்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் குந்திரிக்கத்தை போட்டு புகையை தூண்டிவிட்டுவிட்டு கைகளை கழுவியபடி வந்து படுத்தான்.

தூக்கம் மயங்கியபோது அவன் எருமையின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தான். எருமை அதனருகே நின்றிருக்கும் இன்னொரு எருமையுடன் கொம்புகளால் முட்டிக்கொண்டு விளையாடுவதுபோல அந்த ஓசைகளில் இருந்து தோன்றியது. அப்படி நினைக்க நினைக்க அந்த சித்திரம் தெளிவடைந்தது. அவன் தூங்கிவிட்டான்.

பின்னிரவில் அவன் ஒரு கனவு கண்டான். அவன் தொழுவில் இன்னொரு எருமையும் நின்றிருந்தது. அவனுடைய எருமையைப்போலவே அச்சு அசலாக ஓர் இணை எருமை. அதையே கண்ணாடியில் பார்ப்பதுபோல. தன் பிம்பத்துடன் கொம்புமுட்டி விளையாடுவதுபோல அவனுடைய எருமை அந்த இணைஎருமையுடன் குலவிக்கொண்டிருந்தது.

அந்தக்கனவில் அவன் அதில் எந்த ஆச்சரியத்தையும் அடையவில்லை. அதை வழக்கமான காட்சியாகவே எடுத்துக்கொண்டான். புண்ணாக்கு பருத்திக்கொட்டை கலக்கிக்கொண்டுசென்று பதியன் தொட்டியில் ஊற்றி உப்பிட்டுக் கலக்கி வைத்துவிட்டு தன் எருமையை மட்டும் அவிழ்த்துக்கொண்டு வந்தான். அதற்கு மட்டும் நீர்காட்டினான். மற்ற எருமை உடன் வந்து அருகே நின்றது. அதன் கண்கள் இரண்டு கண்ணாடிக்குண்டுகள் போலிருந்ததன. அவன் எருமையின் கண்களில் ஓர் ஈரம் உண்டு. ஒரு மென்மையான மினுமினுப்பை அது அளிக்கும். வயதான பெண்களின் கண்களில் உள்ளதுபோல ஒரு கருணை அதில் இருக்கும்.

அவன் விழித்துக்கொண்டபிறகும் அக்கனவின் யதார்த்தத்திலேயே இருந்தான். தொழுவில் இரண்டு எருமை நிற்பதைப்போல உள்ளம் உறுதியாக உணர்ந்தது. அப்படியே தூங்கிவிட்டான். காலையில் அண்டியாபீஸ் சங்கொலி கேட்டு விழித்துக்கொண்டபோது எழுந்த முதல் எண்ணம் தொழுவில் இரண்டு எருமை நிற்கிறது என்பதுதான். திடுக்கிட்டு எழுந்து நின்றுவிட்டான். உடனே எல்லாம் தெளிவடைந்தன.

நெஞ்சு படபடக்க அவன் வெளியே சென்று தொழுவத்தைப் பார்த்தான். எருமை கொம்புசரித்து தலையை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தது. அவன் அதைப்போல அது செய்வதை அதற்குமுன் பார்த்ததே இல்லை. கொம்புகளை சரித்து சுழற்றியது, பின்னர் மூச்சு சீறியபடி எடைமிக்க குளம்புகளை எடுத்துவைத்து பின்னால் வந்தது. மீண்டும் முன்னால் சென்றது.

என்ன செய்கிறது என வியந்ததுமே அவனுக்குப் புரிந்துவிட்டது, அது இன்னொரு எருமையுடன் கொம்புகோத்து விளையாடுகிறது என்று. கண்ணுக்குத்தெரியாத எருமை. அவன் உடல் அச்சத்தால் சிலிர்த்தது. முழங்கைமேல் மயிர்க்கால்கள் புள்ளிபுள்ளியாக தெரிந்தன. மூச்சு செறிந்து நின்ற நெஞ்சை கையால் நீவிக்கொண்டான்.

திடீரென்று எழுந்த வெறியுடன் ஓடிச்சென்று அதன் புட்டத்தில் அறைந்து “ஏட்டி கோட்டிக்கழுத.. என்ன செய்யுதே?” என்று கூவினான். அது நீள்மூச்சு சீறி தலையை அசைத்தது’

“என்ன செய்யுதியோ?” என்று செல்லம்மை எட்டிப்பார்த்து கேட்டாள்.

“நீ உன் சோலியப்பாருடி”

“கிறுக்கு பிடிச்சிருக்கு…” என்றாள் செல்லம்மை.

மேல்மூச்சு வாங்க அருகே அமர்ந்திருந்தான். அதன் உடலை நீவி ஓரிரு உண்ணிகளை எடுத்து அப்பாலிட்டு நசுக்கினான்.

பிறகு சற்றே விலகி நின்று பார்த்தான். எல்லாம் அவனுடைய கனவென்று நிறுவிக்கொள்ள ஆசைப்பட்டான். ஓரக்கண்ணால் பார்த்தபோது எருமை இயல்பாக இருப்பதுபோலத்தான் தோன்றியது.

சாணிவழித்துவிட்டு எருமையை அவிழ்த்துக்கொண்டு ஆற்றுக்கு சென்றான். குளிர்ந்த நீரில் அதை இறக்கி அரைமணிநேரம் ஊறவிட்டுவிட்டு பல்தேய்த்தான். அதன்பின் வைக்கோல்சுருணையால் நன்றாகத் தேய்த்து குளிப்பாட்டினான். எருமைக்கு அவன் குளிப்பாட்டுவது பிடிக்கும். அதன் உடலில் அவன் தேய்க்கவேண்டுமென அது விரும்பும் பகுதி துடித்தது. இரு காதுகளையும் பற்றி உள்ளே களிம்பை தேய்த்து அகற்றினான். மூக்கிலும் கண்ணிலும் பீளை அகற்றி கழுவினான்.

அவன் நீரில் மூழ்கி நீந்தி துழாவி குளிப்பதை பார்த்தபடி எருமை தலை வரை நீரில் அமிழ்ந்து காதுகளை நீரில் அளைந்தபடி கிடந்தது. அவன் நீந்தி அதனருகே சென்று அதன் கொம்பை பற்றிக்கொண்டு கால்களை நீரில் அளைந்தான். எருமை கொம்பை சரித்து அவனை அப்படியே தூக்கியது.

கரையில் நாராயணன் வைத்தியர் கையில் பையுடன் சென்றார். அவனிடம் “ஏம்லே கூட்டுகாரிகூட கும்மாளகா காலம்பற?”என்றார்.

“கூட்டுகாரிதானே?”என்றான்.

“எட்டுமாசமாலே?”

“இல்ல ஆறுதான்”

“ஆறா… பாத்தா நல்லா நெறைஞ்சிருக்கு… பாத்துக்கலே”

அதுவரை இருந்த உற்சாகத்தை இழந்து அவன் எருமையின் வயிற்றை பார்த்தான். ஆறுமாச சினைதான். ஆனால் அனைவருமே எட்டா ஒன்பதா என்கிறார்கள். அவன் எருமைக்கு வயிறு வாட விடுவதேயில்லை. ஆகவே அது நன்றாக உருண்டு பருத்துத்தான் இருந்தது. அதனாலேயே வயிறு பெரிதாக இருக்கலாம்தான். ஆனால் அத்தனை பெரிதாக ஆகாது. எருமையின் சினைவயிறு கடைசி மூன்று மாதங்களில்தான் சரசரவென பெருக்கும். ஏதாவது நோயா? ஆனால் சென்றவாரம்கூட வைத்தியர் வந்து பார்த்தார். “நல்லா இருக்குடே, நல்லா போக்கும் வரத்தும் இருக்கு… ஒண்ணும் கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவன் எருமையை கொண்டுசென்று தொழுவில்கட்டிவிட்டு வைக்கோல் பிய்த்துப்போட்டான். அதன்பின் சென்று அடுக்களை திண்ணையில் அமர்ந்து ஊறவைத்த மாங்காயும் மோர்மிளகும் சேர்த்து பழங்கஞ்சி குடித்தான். கருக்கரிவாளை எடுத்துக்கொண்டு புல்லரிந்துவர கிளம்பினான்.

கரடிக்காடு எஸ்டேட் பக்கம் புதுமழையில் முளைத்த புல் இடுப்பு உயரத்திற்குச் செறிந்து நின்றது. அங்கே பெரும்பாலானவர்கள் புல்லரியச் செல்வதில்லை. பாம்புகளின் உலகம் அது. அவன் துணிந்து செல்வான். செல்லம்மை சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டாள். “போடி நல்ல கரும்புப்புல்லு இங்க… நம்ம கருப்பிக்கு இத தின்னாத்தான் நெறையும்” என்று சொல்லிவிட்டான்.

புல்லறுக்கும்போது அவன் தன்னை மறந்துவிடுவதுண்டு. அப்போது அவனே ஓர் எருமையாக ஆகிவிடுவதுபோலிருக்கும். கறுக் கறுக்கென அவனே சாறுள்ள புல்லை கடிப்பதுபோல. கொழுத்தபுல் அவனுக்கு உடம்பெல்லாம் பரவசத்தை நிறைக்கும். எத்தனை வெட்டினாலும் மனம் அடங்காது. எப்படி கொண்டுசென்று சேர்ப்பது என்றே எண்ணத்தோன்றாது. பலசமயம் நாலைந்து நடைவரை சுமக்க நேரிட்டிருக்கிறது.

அவன் புல்லுக்கட்டுடன் இரண்டுமுறை வரவேண்டியிருந்தது. முதல்கட்டு புல்லை கண்டபோதே எருமை துள்ள ஆரம்பித்தது. அவன் புல்லுக்கட்டை அவிழ்த்துக்கொண்டிருந்தபோது மூச்சு சீறல் ஒலிகள் எழுந்தன. அவன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தான். எருமை நாக்கை சுழற்றி மூக்கை நக்கியது. இரண்டுமுறை மூச்சொலி எழுந்ததா?

அவன் அதை பார்த்தபடியே புல்லைக்கொண்டுசென்று போட்டான். அது ஆவலுடன் தலையை அசைத்தபடி பெரிய பிடிகளாக கவ்வி எடுத்து தின்னத்தொடங்கியது. முறுக் முறுக் என அது புல்லை மெல்லும் ஓசையும், அரைபடும் புல்லின் மணமும் எழுந்தன. சுவைத்து உண்ணும்போது அதன் உடலெங்கும் ஒரு அவசரமும் பரவசமும் தெரியும். புல்லை நோக்கி உடலை உந்தி உந்தி முன்செலுத்துவதுபோலத் தோன்றும்.

அவன் புல்லுக்கட்டை போட்டுவிட்டு அடுத்த கட்டை எடுக்க நடந்தபோது எல்லாம் வெறும் கற்பனை என நினைத்துக்கொண்டான். அதெப்படி இன்னொரு எருமை? அப்படி ஒரு விஷயம்பற்றி அவன் கேள்விப்பட்டதே இல்லை. எருமைகளுக்கு அப்படி ஒரு வழக்கம் உண்டு. அவை சின்னவயதில் இன்னொரு எருமையுடன் சேர்ந்தே வளர்ந்திருக்கும். அவற்றை பிரித்தாலும்கூட அந்த இன்னொரு எருமை இருப்பதாகவே நினைத்துக்கொள்ளும். அந்தப்பாவனைகள் அதன் உடலில் இருக்கும்.

எருமை தன்னந்தனியாக இருந்தாலும் மந்தைவிலங்குதான். அது எப்போதுமே மானசீகமாக கூட்டத்தோடுதான் இருக்கிறது. அஞ்சியதும் அது தன் கூட்டத்தை எச்சரிக்கை செய்யும். உணவு கண்டால் கூட்டத்தை அழைக்கும். அப்போது ஏராளமான எருமைகள் அதனுடன் இருப்பதாகவே தோன்றும்.

அவன் திரும்ப வந்தபோது எருமை பாதி புல்கட்டை தின்றுவிட்டிருந்தது. இரண்டாவது புல்கட்டை கொண்டுசென்று உரப்புரையில் நிழலில் போட்டுவிட்டு சற்ற்நேரம் படுத்தான். அரைத்தூக்கத்தில் எருமையின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் மயங்கி மயங்கி செல்ல ஒரு கட்டத்தில் அவன் இரண்டு எருமைகளின் குளம்பொலியை கேட்டான்.

[ 2 ]

ஏழெட்டுநாளில் குமரேசன் பித்துப்பிடித்தவன் போல ஆகிவிட்டான். செல்லம்மைகூட “என்ன செய்யுது?நல்ல ஒறக்கமும் இல்லியே? ஆளு பாதி ஆயாச்சு?”என்றாள்.

“ஒண்ணுமில்ல” என்றான்.

“எருமை நல்லாத்தான் இருக்கு… அதுக்கு ஒரு நரம்பு எளக்கம் இருக்கலாம். செனையெருமைக்கு அப்டி சில சீலங்கள் உண்டுண்ணு கேட்டிட்டுண்டு”என்றாள்.

“ம்”என்றான்.

ஆனால் அவனால் அந்த பிரமையிலிருந்து வெளியேற முடியவில்லை. அருகே நின்று எருமை செய்வதையெல்லாம் பார்த்தால் அது சாதாரணமாக எருமைகள் செய்வதைச் செய்வதுபோலத்தான் இருந்தது. ஆனால் ஓரக்கண்ணால் பார்த்தால், அப்பாலிருந்து ஓசைகளை மட்டும் கவனித்தால் இன்னொரு எருமையும் இருப்பதுபோல் இருந்தது. அரைத்தூக்கத்தில் மிகத்தெளிவாகவே இன்னொரு எருமையை உணரமுடிந்தது.

காலையில் எழுந்து வரும்போது அங்கே இன்னொரு எருமையும் நின்றிருக்கும் என இயல்பாக எதிர்பார்த்து, அங்கே ஒரே எருமையை கண்டு திகைத்தான். எருமையை அவிழ்த்து ஆற்றுக்கு கொண்டுசெல்லும்போது பின்னால் இரண்டு எருமைகளின் குளம்படிகள் கேட்டன. திரும்பிப்பார்த்தால் ஒன்றுதான். அவனையறியாமலேயே இரண்டு எருமைகளுக்கு ஆணைகளை இட்டான். இரண்டிடமும் பேசினான். “இப்ப காலெடுத்துவச்சு நடந்து வாறியளா இல்லியா, சூத்திலே நாலு அடி இளுத்தாத்தான் அடங்குவீக” என்றான்.

செல்லம்மை ஒருகட்டத்தில் கேட்டுவிட்டாள். “என்னென்ன சொல்லுதீய? ரெண்டு எருமை எங்க இருக்கு?”

“நீ உன் சோலிய பாருடீ”என்றான்.

“மண்டை குளம்பிப்போச்சு”என்றாள்.

“மண்டை உனக்க அப்பன் நேசையனுக்கு…எந்திரிச்சு வந்தா பாத்துக்க”

ஆனால் அவளிடம் இரவில் சொன்னான். “இன்னொரு எருமை இருக்குடி… சூச்சுமமா… அந்த எருமைகூட இது வெளையாடுது. அதாக்கும் வேறமாதிரி சத்தம் குடுக்குது”

“மயிரு மாதிரி பேசாதிய… இன்னொரு எருமையா?”

“உள்ளதாக்கும்டீ”

“எனக்க அளப்பங்கோடு சாஸ்தாவே…இந்த மனியனுக்கு என்னாச்சு?”

செல்லம்மை அளப்பங்கோடு சாஸ்தாவுக்கு ஒரு முந்நாழி பொங்கல் வைப்பதாக நேர்ந்துகொண்டாள். மேப்பாலை அளப்பங்கோடு தர்மசாஸ்தாவை அளப்பங்கோட்டு அப்பச்சி என்றுதான் அழைப்பது. அவர் ஆடுமாடுகளுக்கு மட்டுமான தெய்வம். குட்டி பிறந்தது முதல் எல்லா நல்லதுகெட்டதுக்கும் அங்கே வேண்டுதல் உண்டு. பேராலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் அளப்பங்கோட்டு அப்பச்சி அங்கே இருப்பதை ஒரு பசுதான் முகர்ந்து கண்டுபிடித்தது. அங்கேயே நின்றுவிட்டது. உரிமையாளன் இழுத்தாலும் அடித்தாலும் வரவில்லை. அதன்பிறகுதான் அங்கே அப்பச்சியின் சான்னித்தியத்தை கண்டுபிடித்தார்கள். அங்கே அவரை நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்.

செல்லம்மை அவனிடம் “வல்லதும் நினைச்சு மனசை கெடுக்காதிக. அளப்பங்கோட்டு அப்பச்சியை நினைச்சுக்கிடுங்க. நம்ம செல்லத்துக்கு ஒரு குறவும் வராம அவரு பாத்துக்கிடுவாரு” என்றாள்.

“போடி, பெரிய பேச்சு பேசுதா”என்றான் குமரேசன்.

ஒருநாள் ஒரேயடியாக உண்மையாகவே இன்னொரு எருமை கூடவே இருக்கிறது என்று முடிவெடுத்தபின் எல்லாம் சரியாகப்போயிற்று. அந்த இன்னொரு எருமை வெறும் பிரமைதானா என்று எண்ணி கண்காணிப்பதும், சோதனைசெய்வதும்தான் தொடர்ச்சியான அலைக்கழிப்பாக இருந்தது.

“ரெண்டு எருமை இருக்குன்னா அது நல்லதுதானே?”என்றான்.

“வாயை மூடுங்க.. எனக்கு இந்த கிறுக்குப்பேச்சு கேக்க நேரமில்லை”

“நீ போயி சாவுடி”என்றான்.

இரண்டு எருமைகளையும் குளிப்பாட்டினான். இரண்டுக்கும் தீனிபோட்டான். இரண்டையும் வருடிவிட்டு, புகைபோட்டு, பேச்சுக்கொடுத்து நெடுநேரம் தொழுவத்தில் இருந்தான். இரண்டு எருமைகளும் அவன் பேச்சை கேட்டு செவிதாழ்த்தி நின்றன. அவன் சொறிந்துகொடுப்பதற்காக தலையை தாழ்த்தி கொம்புகுழியை காட்டின. அவன் எழுந்து சென்றபோது இரண்டும் இணைந்து முக்ரியிட்டு விடைகொடுத்தன. காலையில் அவன் எழுந்து வந்தபோது கால்மாற்றி உதைத்து வால்சுழற்றி உறுமி வரவேற்றன.

“ஒண்ணு வலத்து எருமை, இன்னொண்ணு எடத்து எருமை… ஒருநொகத்திலே பூட்டினா அப்டி சொருமிப்பா இருக்கும்” என்று அவன் செல்லம்மையிடம் சொன்னான். “வலத்து எருமையாக்கும் நம்ம எருமை. அதை நாம கண்ணாலே பாக்கலாம். எடத்து எருமை மறைஞ்சிருக்கு”

“சும்மா இருக்குதியளா? கேட்டா எனக்கு கிறுக்கு பிடிச்சிரும்போல இருக்கு”

“ஏட்டி இப்ப நம்ம ரெண்டு கையும் இருக்குல்லா? ஒண்ணு வலது இன்னொண்ணு எடது”
“பேசாதீக..போங்க”

அவனுடைய எருமையின் எல்லா அசைவுகளும் இடப்பக்கம் நோக்கியவை. இடப்பக்கம் ஓர் எருமை இருந்தால் மட்டுமே இந்த அசைவுகளுக்கு அர்த்தம் உண்டு. இல்லையேல் பாதிச்செயல்போல தவறாகத் தெரியும். ஆகவேதான் அங்கே அந்த இடப்பக்க எருமை தோன்றியது. இந்த எருமை இப்படி பாதி அசைவுகளை உருவாக்கவில்லை என்றால் அந்த இன்னொரு எருமை இருப்பதே தெரிந்திருக்காது.

அவன் செல்லம்மையிடம் அதைச் சொன்னான். அவள் அதை செவிகொள்ளவே இல்லை.

“உள்ளதாக்கும்டி, ரெண்டு எருமை இருக்கு. எனக்கு என்ன தோணுதுண்ணா எல்லா எருமையுமே ரெண்டு எருமைண்ணாக்கும். ஒண்ணு நாம காணுத ஒரு எருமை. இன்னொண்ணு நாம சொப்பனத்திலே காணுத எருமை… இஞ்சபாரு, ஊஞ்சல் மாதிரியாக்கும். ஊஞ்சலுக்க இந்த எடம் நம்ம எருமை… ஊஞ்சல் வேகமா ஆடினா அந்த எருமைய தொட்டுட்டு வந்திருது…”

”இனி ஒரு வார்த்த சொன்னா தண்ணி கொடத்தை தூக்கி தலையிலே போடுவேன்…போங்க”

இரவில் அவன் ஒரு கனவு கண்டான். யாரோ ஒருவன் வந்து அவனுடைய எருமையை அவிழ்த்துக்கொண்டிருந்தான். அவன் ஓசைகேட்டு எழுந்து கதவைத்திறந்து பார்த்தபோது அவன் எருமையை அவிழ்த்துவிட்டான். தெரிந்தவன்தான்…

“ஆருவே? ஏன்வே எருமையை அவுக்கேரு?”

அவன் பதில் சொல்லவில்லை.

“வேய் கேக்குதேன்ல? எதுக்குவே எருமைய அவுக்கேரு? இது எனக்க எருமை… வேய்”

அவன் கூவி தடுப்பதை வந்தவன் கேட்கவே இல்லை. அவனும் மேலே நின்று கூச்சலிட்டானே ஒழிய கீழே போய் அவனை தடுக்க முயலவில்லை.

அவன் எருமையை அவிழ்த்துக்கொண்டு நடந்தான். ஒரு எருமையைத்தான் அழைத்துச்சென்றான். இன்னொரு எருமை நிழல்போல கூடவே சென்றது. இரு எருமைகளின் அசைவுகளும் மிகச்சரியாக ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே அசைவுபோல தோன்றின.

உண்மையிலேயே எவரோ எருமையை அவிழ்த்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று எண்ணி உளறியடித்துக்கொண்டு அவன் விழித்தான். எழுந்து வேட்டியை கையால் பிடித்தபடி ஓடிப்போய் தொழுவில் பார்த்தான். எருமை படுத்து தூங்கிக்கொண்டிருந்தது.

கனவுதான், ஆனால் கனவில் வந்தவன் யார்? அவன் தன்னைப்போலவே இருப்பதாக தோன்றியது. அவனுடைய முகம்தான். ஆனால் உடல் இன்னும் திடமானது. மீண்டும் பாயில் வந்து அமர்ந்து ஒருதரம் வெற்றிலை போட்டுக்கொண்டான். அப்போது ஞாபகம் வந்தது அது அவன் அப்பா.

அப்பா இறந்துபோய் எட்டு ஆண்டுகள் ஆகின்றன. சாகும்போது எழுபது வயது. கஷ்டப்பட்டுதான் போனார். ஆனால் அவனுக்கு எட்டுவயதாக இருக்கும்போது ஒருமுறை அவருடன் அளப்பங்கோடு சாஸ்தா கோயிலுக்கு சைக்கிளில் சாமிகும்பிடச் சென்றான். அந்த அப்பாதான் எப்போதும் கனவில் வருகிறார்.

அவன் மீண்டும் படுத்துக்கொண்டு சற்றுநேரம் அப்பாவை நினைத்துக்கொண்டிருந்தான். காலையில் விழிப்பு வந்ததும் எழுந்த முதல் எண்ணம் அப்பா ஏன் எருமையை அவிழ்த்துக்கொண்டு போகவேண்டும் என்பதுதான்.

எழுந்து ஓடி கதவைத் திறந்து தொழுவத்தை நோக்கிச் சென்றான். எருமை படுத்து தூங்கிக்கொண்டிருந்தது. முதற்கணம் ‘நல்லவேளை, தூங்கிக்கொண்டிருக்கிறது’ என்ற எண்ணம் வந்தது. அடுத்த கணம் நேற்றிரவு பார்த்தபோதும் அப்படியேதான் தூங்கியது என்ற நினைவு எழுந்தது. அவன் கால்கள் தளர்ந்துவிட்டன.

அவன் மேலுமிருமுறை உடலை உந்தி முன்செலுத்த முயன்றான். விழுந்துவிடுவான் என தோன்றியது.

“ஏட்டீ ஏட்டீ…”

”என்ன, எந்திரிச்சாச்சா அதுக்குள்ள?” என்றபடி செல்லம்மை வந்தாள். கையில் கலம் வைத்திருந்தாள்

“இது ஏம்டீ இப்டி உறங்குது?”

“உள்ள ரெண்டாம்சீவன் இருக்குல்லா?”

“இல்லடி… ஒண்ணு தொட்டு பாரு…. ஏட்டி தொட்டு பாத்து சொல்லுடி”

அதற்குள் செல்லம்மைக்கே சந்தேகம் வந்துவிட்டது. எருமையின் காதுகளில் அசைவில்லை.

“அனக்கம் இல்லியே” என்றாள்.

“பாத்து சொல்லுடீ…. பாத்து சொல்லுடீ”

அவள் “எனக்க அளப்பங்கோட்டப்போ ரெட்சிக்கணுமே” என்று நெஞ்சில் கைவைத்து முனகியபடி மெல்ல சென்று அருகே நின்றாள். மூச்சொலியுடன் தயங்கினாள். குனிந்து எருமையின் செவிகளை தொட்டாள்.

“எனக்க தெய்வங்களே சதிசெய்து போட்டியளே”

“ஏட்டி ஏட்டி என்னது? என்னன்னு சொல்லுடீ”

“அய்யோ…. அய்யோ கண்ணு நெறைஞ்சு நின்னுதே… எனக்க கண்ணு நெறைஞ்சு நின்னுதே…. அய்யோ !அய்யோ! நான் என்ன செய்வேன்! எனக்க பகவதீ! என்னைப்பெத்த அம்மோ!”

அவன் தூணைப்பிடித்துக்கொண்டான். எருமை தொழுவத்தில் சளியாக கழிந்திருந்தது. அதன் வயிறு ஒரு பக்கமாக குன்றுபோல உப்பி உயர்ந்திருந்தது. அது இறந்துவிட்டது என தெரிந்ததுமே நாற்றமும் தெரியத்தொடங்கியது.

செல்லம்மை அருகே அமர்ந்து அதன்மேல் தொட்டு வருடி தலையில் வைத்து அலறி அழுதாள். “எனக்கு முடியலியே… எனக்க செல்லமே.. எனக்க கருஞ்செல்லமே… எனக்க ராத்திரியே…”

அவன் “ஏட்டி, இன்னொரு எருமை எங்கடீ… அதை பாருடீ” என்றான்.

“சும்மாகெட மனுசா…கிறுக்குப்பேச்சு பேசாம…அய்யோ எனக்க ஆனைக்குட்டியே…எனக்க ஐசுவரியமே”

அவன் அப்படியே தரையில் அமர்ந்தான். மெய்யாகவே அங்கே இன்னொரு எருமையும் இல்லாமலாகிவிட்டிருந்தது. தொழுவில் பெரிய கரிய குவியலாகத் தெரிந்தது எருமை அல்ல. அது வேறு ஏதோ. அவன் கைகளை ஊன்றி தவழ்ந்து ஏறி தன் அறைக்குள் போய் சுருட்டாமலிருந்த பாயில் படுத்துக்கொண்டான்.

[ 3 ]

செல்லம்மைதான் எல்லாவற்றையும் செய்யவேண்டியிருந்தது. அவளுடைய அம்மாவை அணைஞ்சகரையிலிருந்து வரச்சொல்லி கிழவியை வீட்டில் விட்டுவிட்டு அவளே எல்லா இடங்களுக்கும் அலைந்தாள். எருமைக்கு சொசைட்டியில் இன்ஷ்யூரன்ஸ் செய்திருந்ததனால் அதற்கு ஆள்வந்து பார்த்து புகைப்படங்களெல்லாம் எடுத்த பிறகுதான் அடக்கம் பண்ணவேண்டியிருந்தது. அதற்கு சொசைட்டி ஆளுக்கு ஐநூறு ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும். எருமையின் உடலையும் தோலையும் விற்று கிடைக்கும் காசில் பங்குதானே அது என்று தங்கையா நாடார் சொன்னார்.

விற்க செல்லம்மைக்கு மனமில்லை. “பிள்ளையப்போல வளத்தோம் டீக்கனாரே” என்றாள். “அதனாலே நாம இங்க வச்சிட்டிருக்க முடியுமா?மண்ணு திங்குதத மனுசப்பய திங்குதான்… என்னைய கேட்டா மனுசனைக்கூட சும்மா புதைக்கிறதும் எரிக்கிறதும் தப்பு. அதுக்கும் என்னமாம் பிரயோசனம் உண்டுமானா செய்யணும். பண்டு ஹிட்லர் செய்தது மாதிரி”

ஊரே கூடியிருந்தது. செல்லம்மைக்கு அழவும் பொழுதில்லை .அவள் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினாள். ஆதார்கார்டு நகல் எடுக்கவேண்டும். எருமைக்கு அளிக்கப்பட்ட கார்டு அசல்வேண்டும். ரேஷன் கார்டு நகல், சொசைட்டி உறுப்பினர் அட்டை நகல். எதையும் கேட்டுத்தெரிந்துகொள்ளும் நிலையில் குமரேசன் இருக்கவில்லை. அவன் பாயில் முனகியபடியும் உளறியபடியும் படுத்துக்கிடந்தான். சன்னல்வழியாக எட்டிப்பார்த்த செம்பகப்பெருமாள் “பாவம், ஒரு லெச்சமுல்லா அப்டியே போச்சு…பதறுமே” என்றார்.

“இன்சூரன்ஸ் வராதோ?”என்றார் ஆசீர்வாதம் நாடார்.

“ஆமா, இன்சூரன்ஸ் வாரியில்லா குடும்ப்பான்? எதிர்கணக்கு வைக்கணும்லா?… கண்டவன்லாம் கைநக்கினது எல்லாம் போக முப்பது நின்னா யோகம்”

”பய பொன்னுபோலே வளத்தான்”

“என்னவாக்கும் சீக்கு?”

“எருமைக்கும் பலசீக்குகள் உண்டு… இப்ப அதை நாகர்கோயிலிலே கொண்டுபோனா டாக்டர்மாரு சொல்லுவாக”

அந்தவழியாகச் செல்லும்போது மட்டும் செல்லம்மை “அய்யோ , கெடக்குத கெடைய பாத்தியளா… அய்யோ எனக்க சங்கு பொறுக்கல்லையே” என்று நெஞ்சிலும் தலையிலும் அறைந்து கதறினாள்.

“ஏட்டி நீ என்னத்துக்கு நெஞ்சை அடிச்சு உடைக்கே? எல்லாம் செரியாவும். போனா வரும்… விடு….வேண்டிய காரியங்களைப்பாரு ”என்றார் தங்கையா டீக்கனார்.

போற்றியும் தங்கப்பன் நாயரும் சேர்ந்தே வந்தனர். “பய எப்டி இருக்கான்?கிடக்கானோ?”என்றார் போற்றி
“தளர்ந்துபோயிட்டான்” என்றார் அருமைநாயகம்.

“ராப்பகலா நாகக்காட்டிலே புல்லு பறிப்பானே” என்றார் போற்றி.

“அவனுக்கு நெஞ்சடைச்சிருக்கும்… போனவருசம் எனக்க கருப்பன் போனப்ப நான் ஒருவாரம்லா கிடப்பிலே கிடந்தேன்” என்றார் கரடி தங்கப்பன் நாயர்.

லாசர் போட்டோஸ் லாசர் வந்து எல்லா கோணங்களிலும் எருமையை புகைப்படம் எடுத்தான். அதன்பின் தங்கையா நாடாரும் தங்கப்பன் நாயரும் அருமைநாயகமும் சாட்சிக் கையெழுத்து போட்டார்கள்.
எருமையை கால்கள் கட்டி மூங்கில் ஊடே செலுத்தி எட்டுபேராக தூக்கினார்கள். மூங்கில் வளைந்தது. தூக்கியவர்கள் “ஏந்து…ஏந்து …விடாதே” என்று கூவினார்கள்.

”நல்ல கனம் உண்டு”

“அதிலே முக்காலும் வயித்துநீராக்கும்… அது இந்நேரம் வெசமா ஆயிருக்கும்”

”தோலுக்கு நிக்கும்”

“தொடையும் எடுத்துக்கிடுவானுக…. மத்த எறைச்சி கெட்டுப்போயிருக்கும்”

எருமையை கொண்டுபோனபோது செல்லம்மை நெஞ்சிலறைந்துகொண்டு பின்னால் ஓடி அலறி விழுந்தாள். “எனக்க பொன்னுமோளே எனக்க செல்லராத்திரியே எனக்க ஆனைக்குட்டியே எனக்க ஐசரியமே”

“ஏட்டி அவளை பிடி… எளவு மண்டைய உடைக்கப்போறா”

கிழவியால் செல்லம்மையை பிடிக்கமுடியவில்லை. பங்கஜமும் கிறிஸ்டியும் அவளை பிடித்து இழுத்து கொண்டுசென்றனர். அவள் கையை வீசி மண்டையை அறைந்து அழுதாள்
அப்போதெல்லாம் அறைக்குள் குமரேசன் புலம்பிக்கொண்டு கிடந்தான். “ரெண்டு எருமை நிக்குது… அருக்கம் நிக்குதது மத்த எருமை”

அறைக்குள் எட்டிப்பார்த்த தங்கப்பன் நாயரைக்கண்டு அவன் எழுந்து அமர்ந்தான். தலையை சொறிந்தபடி “ரெண்டு எருமையாக்கும்… ஒண்ணு வலம் ஒண்ணு எடம்” என்றான்.

“என்ன சொல்லுதான்?”என்றார் தங்கப்பன் நாயர்.

“அவன் நாலஞ்சுநாளாட்டு இதைத்தான் சொல்லுதானாம்… “

“நாலஞ்சுநாளாட்டா? அப்ப பயலுக்கு குறி தெரிஞ்சுபோச்சோ?” என்றார் தங்கப்பன் நாயர்.

“சாவுகுறி ஏளுநாள் முன்னாடியே சொப்பனத்திலே வந்திரும்…. மனுசப்பயலுக்கு பிடிகிடைக்காது, அம்பிடுதான்”என்றார் போற்றி.

செல்லம்மையின் அம்மாக்கிழவி வந்து “வீட்டுக்கு வந்தவிக ஓரோ வாய் வெறுங்காப்பியெங்கிலும் குடிச்சிட்டு போகணும்…. வெத்திலை போட்டு போகணும்”என்றாள்.

“இதுக்கெடையிலே காப்பியா?”என்றார் தங்கையா நாடார்.

“அதுபின்னே வீட்டுக்கு வந்த கூட்டம்லா? வெறும்வாயோட போனா ஐசரியம் கூட எறங்கிரும்லா? இப்பமே நிறைஞ்ச மகாலட்சுமி போயிருக்கு”

“இங்கதான் கெட்டியிருக்கு… ரெண்டு எருமை..” என்றான் குமரேசன்.

கிழவி பெரிய சருவத்தில் கருப்பட்டி போட்ட காப்பி கொண்டுவந்து அலுமினிய டம்ளர்களில் எல்லாருக்கும் கொடுத்தாள். பங்கஜம் பெரிய மரத்தாலத்தில் வெற்றிலை பாக்கு புகையிலை கொண்டுவந்து வைத்தாள்.

“சுண்ணாம்பு எங்கட்டி?”என்றார் போற்றி… “அதையாக்கும் முதல்ல கொண்டுவரணும்…சாஸ்திரம் மாறப்பிடாது”

வெற்றிலைபோட்டுக்கொண்டு ஒவ்வொருவராக கலைந்தனர்.

“பய இப்டி கோட்டிபிடிச்சு கிடக்கானே?” என்றார் தங்கப்பன் நாயர்.

“கெடக்கட்டும்…ஒரு கணக்கிலே நல்லதாக்கும். தாங்குறவனுக்குத்தான் தெய்வம் துக்கத்தை தரும். தாங்காதவனுக்கு சொப்பனத்தை குடுக்கும்…. நாலஞ்சுநாளிலே வந்திருவான்”

சொல்லிக்கொள்ள சென்றபோது செல்லம்மை “போத்தியே கெடக்குத கெடைய கண்டுதா… எனக்க ராசா கெடக்குத கெடைய கண்டுதா…” என்று கதறினாள்.

“சும்மா இருடி… அவனுக்கு ஒண்ணுமில்லை. சொப்பனஜாலமாக்கும். செரியாயிரும்…”என்றார் போற்றி.

“இது ஒரு நாப்பதுநாள் களியட்டு. நான் நல்ல சில்லுக்கருப்பட்டி மாதிரி எருமைக்குட்டியை உனக்கு தேடி கொண்டுவாறேன். தொளுவம் ஒளிஞ்சு கிடக்கக்கூடாது.மூத்தவ வந்து நின்னுகிடுவா” என்றார் தங்கையா நாடார்.

அவர்கள் போனபின்னர் குமரேசன் எழுந்து வந்து “ஏட்டி ரெண்டு எருமையும் தண்ணி கேட்டு விளிக்குதே… அங்கே என்ன எடுக்கே?”என்றான்.

“அய்யோ, நான் சாவுதேன் !நான் சாவுதேன்!” என்று செல்லம்மை தலையில் அறைந்துகொண்டாள்.

பங்கஜம் “நான் பாத்துக்கிடுதேன்… நீ சும்மா இருடி” என்று எழுந்து வெளியே சென்றாள்.

சற்றுநேரத்திலேயே அவள் கிட்டன் மூப்பனிடமிருந்து கஞ்சா வாங்கி வந்தாள். சாம்பிராணி பிடிக்கும் கிண்டியில் கனல்போட்டு அதை அதன்மேல் பரப்பி “அத்தான் இஞ்சேருங்க புகை போடுங்க” என்றாள்.

“எதுக்கு புகை? எருமை கிடந்து விளிக்குது…”

“எருமைக்கு நல்லதாக்கும்… இஞ்சேருங்க புகையை இளுங்க”

சற்றுநேரத்திலேயே குமரேசன் விழுந்துவிட்டான். அவன் வேட்டியை நன்றாக கட்டி போர்வையை போர்த்திவிட்டாள் பங்கஜம்.

“எனக்கும் இம்பிடு குடுடீ… நான் உறங்கல்லேன்னா செத்திருவேன்” என்றாள் செல்லம்மை.

“நீ உறங்கப்பிடாது… நீ இருந்து அழணும்… செத்தவருக்காக ஒருத்தரெங்கிலும் நெஞ்சுலைஞ்சு அழலைன்னா செத்தவரு சொர்க்கம் போகமாட்டாரு”

மறுநாள் காலையில் எழுந்தபோது குமரேசனுக்கு எல்லாம் தெளிவாக இருந்தது. பாயில் படுத்தபடியே கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.

பங்கஜம் வந்து “அத்தான் காப்பித்தண்ணி எடுக்கட்டா?”என்றாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் விசும்பினான்.

“என்ன அத்தான் இது? போனது போச்சு. ஆண்டவன் நினைச்சா நாம என்ன செய்ய? விடுங்க. நான் காப்பி கொண்டாறேன் குடியுங்க” என்றாள் பங்கஜம்.

அவன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு தொழுவத்திற்குச் சென்றான். தொழுவம் ஒழிந்து கிடந்தது. அப்பகுதியிலேயே வெளிச்சம் நிறைந்திருப்பதுபோல.எருமை எத்தனை கருப்பு, எவ்வளவு பெரியது என்று அப்போதுதான் தெரிந்தது. நெஞ்சை பனங்கருக்கால் அறுப்பதுபோல வலிதோன்ற அவன் அங்கேயே நின்று தலையில் அறைந்தபடி “எனக்க செல்லமே… எனக்க கறுப்பே!”என்று கதறி அழுதான்.

பங்கஜம் ஓடிவந்து பிடித்துக்கொண்டாள். “அத்தான் இப்பம் எதுக்கு இங்க வந்தீக? உங்களுக்கு நான் காப்பி கொண்டுவந்திருக்கேன்…. வாருங்க”

அவள் கொடுத்த காப்பியை கையில் வாங்கியபடி அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

“குடியுங்க” என்றாள்.

“இல்ல”

“குடியுங்க, சொல்லுதேன்லா?”

அவன் மடமடவென்று குடித்தான். வாயிலிருந்து தீ போல ஆவி எழுந்தது.

“ஒண்ணும் நினைக்காதீக… போயி படுத்துக்கிடுங்க”

அவன் எழுந்துசென்று மீண்டும் படுத்துக்கொண்டான். உடல் வியர்த்து வழிந்துகொண்டிருந்தது
வெளியே தொழுவத்தில் எருமையின் குளம்படிச் சத்தம் கேட்கிறதா என்று செவிகூர்ந்தான். கேட்பதாக கற்பனைசெய்துகொண்டான். ஆனால் கேட்கவில்லை. மூர்க்கமான ஒரு மறுப்பாக வெளியே தொழுவம் அமைதியாக இருந்தது.

அவன் கண்களை மூடிக்கொண்டு அழுதான். அழுந்தோறும் நெஞ்சின் வெறுமை ஏறி ஏறி வந்தது.

[ 4 ]

நினைத்ததுபோல குமரேசன் மனநிலை சீர்பெறவில்லை. அவன் தட்டுகெட்டவனாகவே இருந்தான். “ஏட்டி எருமைக்கு தண்ணி வைச்சாச்சா?”என்று திடீரென்று கேட்டான். உடனே கையிலிருந்த பொருட்களை அப்படியே போட்டுவிட்டு விசும்பி அழுதான்.

நாளாக நாளாக கோட்டி கூடிக்கூடி வருவதுபோலிருந்தது. பெரும்பாலான நேரம் தொழுவத்திலேயே அமர்ந்திருந்தான். வயலுக்கு போவதில்லை. தோட்டத்துக்கு போவதில்லை.

“எதுக்கு இந்தமாதிரி இங்கியே இருக்குதீய? கொஞ்சம் கடைமுக்கு வரை போய்ட்டு வாங்க”

அவன் மனிதர்களையாவது பார்க்கட்டுமே என்று அவள் கடைக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவன் எவர் முகத்தையும் பார்க்கவில்லை. வாங்கச்சொல்லி அனுப்பிய பொருட்களை மறந்தான். கடைக்குமுன் சென்று பிரமைபிடித்தவன்போல நின்றான்.

காப்ரியேல் நாடார் கடைப்பையனை கூடவே அனுப்பி அவனை திருப்பி அனுப்பினார். ”மொதலாளி சொல்லுதாரு, இப்டி தனியாட்டு அனுப்பவேண்டாம்னுட்டு”என்றான் பையன்.

இன்னொருமுறை தோட்டத்துக்கு அனுப்பினவனை காணவில்லை என்று செல்லம்மையே பதறி அலைந்து தேடி கண்டுபிடித்தாள். அவன் ஓடைக்கரையில் மூர்ச்சையடைந்து கிடந்தான்.

அதன்பின் அவள் அவனை எங்கும் அனுப்பவில்லை. அவன் தொழுவத்திலேயே வைக்கோல்போட்டு அதன்மேல் சாக்குப்பையை விரித்து அமர்ந்துகொண்டான். அவன் கைகள் இயல்பாக மூக்கணாம்கயிறு செய்ய ஆரம்பித்தன.

அவள் எப்போது வந்து எட்டிப்பார்த்தாலும் அவன் மூக்கணாம்கயிறு முறுக்கிக்கொண்டிருந்தான். மூக்கணாங்கயிறுகளை எடுத்து எரவாணத்தில் செருகி செருகி வைத்தான்.

கைவசமிருந்த பனைநார் முழுக்க தீர்ந்தது. அவனே கருக்கரிவாளுடன் சென்று பனைமடல் வெட்டி வீழ்த்தி நார் உரித்தான் . இளவெயிலில் காயவைத்து சேர்த்துக்கொண்டான். பகல் முழுக்க தொழுவத்தில் அமர்ந்து மூக்கணாங்கயிறு முறுக்கும் அவனை அவள் சமையலறை வாசலில் நின்று பார்த்தாள். அவன் உடல் நன்றாகவே மெலிந்திருந்தது. கையில் தசைகள் நரம்புகளுடன் இழுபட்டன.

இரவிலும் சமயங்களில் அவன் எழுந்துகொண்டன். ஒருதரம் வெற்றிலை போட்டுக்கொண்டபின் தொழுவத்திற்குச் சென்று அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டான்.

”இந்தமானிக்கு இருக்காரே அக்கா?”என்று செல்லம்மை பங்கஜத்திடம் சொன்னாள்.

“அது உனக்க கொறை. அத்தானுக்கு நல்லா சோறுபோடு” என்றாள் பங்கஜம்.

“நல்லாத்தான் சோறு போடுகது… நாலுநாளா மூணுநேரமும் மீனு உண்டு”

“ஏட்டி கோட்டிக்காரி, நான் வாய்க்குச் சோறுபோடவா சொன்னேன்? மக்குணு முண்டையா இருக்கியே”

“அதுக்கு வரணும்லா? நானா போயி விளிச்சவா?”

“சோறுபோட விளிக்கேல்லா?”

செல்லம்மை “அப்படி சீலமே இல்லை”என்றாள்.

“பளகிக்கோ… ஆம்புளைன்னா பொம்புளைக்கு அலைகடலிலே படகுன்னு பாட்டிலே சொல்லியிருக்கு. பாத்துக்கோ. விட்டா உனக்கு நாதியில்லை”

செல்லம்மை இரவில் அவன் அருகே வந்து படுத்துக்கொண்டாள். அவன் மார்பில் கைகளை கட்டியபடி மல்லாந்து படுத்திருந்தான். அவள் அவன் மேல் காலை தூக்கிப்போட்டாள். அவன் மார்பை வருடியபடி “இஞ்சேருங்க”என்றாள்.

அவன் பெருமூச்சுடன் “ரெண்டு எருமையை நான் பாத்தேன்…உன்னாண கண்ணாலே பாத்தேன்”என்றான்.

“அதைவிடுங்க..”

“அந்த மத்த எருமைக்கும் மூக்கணாங்கயிறு மாட்டியிருக்கணும்… தெரியாம விட்டுப்போட்டேன்”

“இஞ்சேருங்க”என அவள் அவனை முத்தமிட்டாள்.

ஆனால் அவன் அவளுடைய தொடுகைக்கு அப்பாலிருந்தான். அவன் உடல் அவளை அறியவே இல்லை.

நாலைந்து நாட்களுக்குப்பின் பங்கஜம் கேட்டாள். செல்லம்மை எரிச்சலுடன் “ஆமா, அது பட்டமரமா கெடக்கு….”என்றாள்.

“நீதாண்டி தீய எரிக்கணும்”

“என்னாலே முடியாது தேவிடியா நாடகம் ஆடுகதுக்கு”என்றாள் செல்லம்மை.

“இஞ்சேரு…”என்று பங்கஜம் சொன்னாள்.

“இனி அதைப்பத்திப் பேசவேண்டாம்”என்றாள் செல்லம்மை.

அதன்பின் செல்லம்மை அவனருகே வருவதையே நிறுத்திக்கொண்டாள். வேளைக்கு சோற்றை மட்டும் போட்டு கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றாள். இரவுபகலாக தன் வேலைகளில் மூழ்கினாள். அவர்களுக்கு நாற்பதுமூடு பனை உண்டு. ஒருநாள்விட்டு ஒருநாள் பதநீர் வரும். அதை கருப்பட்டியாக்கி சந்தைக்கு கொண்டுசென்று விற்றுவருவதற்கே முழுநாளும் சரியாக இருக்கும். அதற்குமேல் அவள் பனைநாராலும் பனையோலையாலும் பெட்டிகள் செய்து அவற்றையும் சந்தைக்கு கொண்டுசென்று விற்றுவந்தாள்.

வேலை அவளை அமைதியடைய வைத்தது. ஒவ்வொருநாளும் அவ்வளவு நீளம். ஒவ்வொருநாள் கடந்துபோகும்போதும் எல்லாம் பழைய நினைவாக மாறி தள்ளித்தள்ளிச் சென்றன
குமரேசன் மூக்கணாங்கயிறுகளையும் கழுத்துக்கயிறுகளையும் செய்துகொண்டே இருந்தான். ஒருநாள் தொழுவம் வழியாகச் செல்லும்போது அவன் செய்துகுவித்திருந்த மூக்கணாங்கயிறுகளை கண்டு அவள் திடுக்கிட்டாள். மூச்சடைப்பதுபோலிருந்தது. பின்னர் பெருமூச்சுடன் கடந்துசென்றாள்.

குமரேசனின் குரல் எழுவதே குறைவாக இருந்தது. அவன் செல்லம்மையை ஏறிட்டுப்பார்ப்பதும் இல்லை.அவன் கண்கள் பழுத்து உடலே மஞ்சளோடிவிட்டது. ஆனால் மூக்குக்கயிறு இழுக்கும்போது விசை மட்டும் குறையவில்லை.பற்களை கடித்து உதட்டை இறுக்கியபடி அவன் நார்களை இழுத்து இழுத்து முடிச்சிட்டான். முடிச்சு முடிச்சாக அவன் விரல்கள் இயங்கிக்கொண்டிருந்தன.

அவன் தனியாக அறையில் இருக்கும்போதும் வெறும்கைகளால் முடிச்சுகளை போட்டுக்கொண்டே இருந்தான். கைகள் அவனை அறியாமலேயே இயங்கிக்கொண்டிருந்தன. அரைத்தூக்கத்திலும்கூட கைவிரல்கள் முடிச்சிட்டுக்கொண்டே இருந்தன.

இரவும் பகலும் விழித்திருக்கும்போதெல்லாம் அவன் தொழுவத்தில்தான் இருந்தான். ஆனால் எருமையை மறந்துவிட்டான். எருமைக்கு தண்ணீர்வைக்கும் தொட்டி காய்ந்து புழுதிபடிந்து கிடந்தது. சாணிக்குழி உலர்ந்து பாளம்பாளமாக வெடித்தது. அங்கே எருமை இருந்ததையே அவன் நினைவுகொள்ளவில்லை.

அருமைநாயகம் “ஏம்லே, எருமைக்குண்டான பைசா வந்தாச்சாலே?”என்று கேட்டார்.

“என்ன?”என்று அவன் கேட்டான்.

“உனக்க எருமைலே… உனக்க எருமைக்குண்டான பணம் வந்தாச்சா?”

“என்ன எருமை?”

“ஏலே உனக்க எருமை செத்துப்போச்சுல்லாடே?”

“எருமையா?”

“வெளங்கிரும்… மொத்தமாட்டு அவிஞ்சுபோச்சுன்னு தோணுது”

செல்லம்மைதான் சொசைட்டிக்கும் பிளாக் ஆபீஸுக்கும் போய் பணத்தை வாங்கிக்கொண்டு வந்தாள்.

“அதுக்கு இப்ப எருமைக்க ஞாபகமே இல்லை மாமா… பச்சைசட்டி மாதிரி வச்ச எடத்திலே பதிஞ்சு இருக்கு”என்றாள்.

“இருக்கும்… போனது வீட்டுக்க ஐசரியம்லா?”

மூன்றுமாதங்களுக்குப்பின் குமரேசன் ஒரு கனவு கண்டான். அவன் தொழுவத்திலேயே விழுந்து அப்படியே தூங்கிவிட்டிருந்தான். குளம்படி ஓசை கேட்டு கண்விழித்தான். முற்றத்துக்கு அப்பால் ஏதோ அசைவு தெரிந்தது. அவன் எழுந்துபோய் பார்த்தான். முற்றத்தில் இரண்டு எருமைக்கன்றுக்குட்டிகள் நின்றிருந்தன. ஒரேபோன்ற உடல்கொண்டவை. காய்ச்சில்கிழங்கு போல கட்டைவிரல் அளவுக்கு கொம்புகள் முளைத்திருந்தன. வைக்கோல்நிறமான மென்முடி உடலில் படர்ந்திருந்தது. தலையிலும் கம்பிச்சுருள் போல முடி.

ஒரு கிழவர் இரண்டு எருமைகளையும் ஓட்டி வந்திருந்தார். அவன் பார்த்திராத ஒருவர்.

“இது குமரேசன் வீடாக்குமா?”

“ஆமா”

“ரெண்டு எருமையும் இங்க உள்ளதாக்கும். குடுத்திட்டு போலாம்னு வந்தேன்”

“மகாலட்சுமில்லா… வரட்டும்” என்றான் குமரேசன். கைகூப்பியபடி கண்களில் கண்ணீருடன் “அம்மைக ரெண்டும் வந்து அடியனை ரெட்சிக்கட்டும்” என்றான்.

“இருங்க… ஒரு கேள்வி உண்டு. இது ரெண்டுலே ஒண்ணு எடது, ஒண்ணு வலது. வலது எருமை வேணுமா எடது எருமை வேணுமா?”

“அப்டி கேட்டா?”

“அதாக்கும் கேள்வி… நீரு சொல்லுத பதில் நான் நினைக்குத பதிலா இருந்தா ரெண்டு எருமையையும் இங்க விட்டுட்டு போவேன். தப்பான பதிலானா ரெண்டையும் கூட்டிட்டு போயிருவேன்”

அவன் இரு எருமைகளையும் மாறிமாறிப் பார்த்தான்.

“வாயாலே சொல்லவேண்டாம்… மாட்டுவேவாரத்துக்கு மறைவெரல் பாசை இருக்குல்லா?”என்றார் கிழவர். தன் வலக்கைமேல் துண்டை போட்டு நீட்டினார்.

அவன் துண்டுக்குள் விரல்விட்டு அவர் விரல்களில் ஒன்றை தொட்டான்.

அவர் முகம் மலர்ந்தது “எருமை இங்கிண நிக்கட்டு… நல்லா கருப்பிடிச்சு கொலம் நெறைஞ்சு பெருகும்…”
அவர் ஒரு எருமையின் கயிற்றை அவன் கையில் தந்தார். அதற்கு மட்டும்தான் கயிறு இருந்தது. அவன் “ஏட்டீ, இங்கபாரு … லெச்சுமி வந்தாச்சு”என்றான்.

விழித்துக்கொண்டபோது அவன் உடல் எடையில்லாமல் இருந்தது. கைகால்கள் பரபரத்தன. நெடுந்தூரம் ஓடவேண்டும் போலிருந்தது. தாகமாக இருந்தது

விடியற்காலைதான் ஆகியிருந்தது. கருக்கிருள் சூழ்ந்திருந்தது வீட்டை. அவன் எழுந்து வீட்டுக்குள் சென்றான். செல்லம்மை தரையில் புடவையை சுருட்டி தலையணையாக ஆக்கி தூங்கிக்கொண்டிருந்தாள்
அவன் அவளை குனிந்து தொட்டு எழுப்பினான் “ஏட்டி…எந்திரி…நான் ஒரு சொப்பனம் கண்டேன்….”

அவள் எழுந்து “என்ன சொப்பனம்?”என்றாள்.

“எனக்கு காப்பி குடு… கருப்பட்டி காப்பி குடு”

அவள் பெரிய செம்பு நிறைய காப்பி போட்டு கொண்டுவந்தாள். அவன் அதை வாங்கி அனல்புகை போல ஆவி எழ குடித்தான். செம்பை அப்பால் வைத்தான்.

அவன் முகம் மலர்ந்திருப்பதை அவள் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இரு சொல்லுதேன்…என்ன சொப்பனம்னு சொல்லுதேன்”

அவள் அவனருகே அமர்ந்தாள். அவன் அவளை அப்படியே கட்டிக்கொண்டான். “ஏட்டி எனக்கு என்னமோ போல இருக்குடி…என்னால நிக்கமுடியல்ல…”

அவளும் அவனை தழுவிக்கொண்டாள். அவன் அவளை இறுக்கி முத்தமிட்டான். அவள் கன்னங்களையும் தோளையும் கடித்தான். பின்னர் உடம்புடன் இறுக்கிக்கொண்டான்
இருவரும் வியர்வையுடன் தழுவிக்கொண்டு கிடக்கும்போது அவள் “சொப்பனம்னு சொன்னியளே”என்றாள்.

“ஆமா சொப்பனம்… அப்டி ஒரு சொப்பனம்… சொல்லுதேன்”

அவன் எழுந்து அமர்ந்து கனவைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். அவள் புன்னகையுடன் கதைபோல கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவன் எழுந்து சென்று பல்தேய்த்துக்கொண்டிருந்தபோது தங்கையா நாடாரும் அருமைநாயகமும் ஒரு குட்டி எருமையுடன் வந்தார்கள்.

“ஏலே குமரேசா, செல்லம்மோ வந்து பாரு. உனக்க வீட்டுக்கு மகாலச்சுமி வந்தாச்சு”

குமரேசன் பாய்ந்து முற்றத்தை நோக்கி போனான். அவன் கனவில் கண்டதுபோல அதே எருமைக்குட்டி. வாயில் வழியில் கவ்விய செம்பருத்திக்கிளையை பசுந்தழையுடன் வைத்திருந்தது.

“அய்யோ எனக்க அம்மே… எனக்க அம்மையில்லா அம்மையில்லா” என்று கூவியபடி குமரேசன் ஓடிப்போய் அதை தழுவிக்கொண்டான். அது அவன் தழுவியதை முட்டுவிளையாட்டாக புரிந்துகொண்டு அவன் மார்பை மொழுங்கை மண்டையால் முட்டி அவனை மல்லாக்கத் தள்ளியது.

“அவ சுணைக்குட்டியாக்கும்… வெளையாடாதே”என்று தங்கையா நாடார் சிரித்தார். “மண்டை மணமணங்குது அதுக்கு… தென்னைமரத்தையாக்கும் முட்டிக்கிட்டு இருக்கு”

அருமைநாயகம் “உனக்காக சொல்லி வச்சிருந்தோம்லே… மேலேக்கணியான் ராமசுப்பு வீட்டு எருமையாக்கும்… இதுக்க அம்மைய நீ பாக்கனும். கருத்தமலையாக்கும்” என்றார்.

செல்லம்மை அதற்குள் புண்ணாக்குபோட்டு கஞ்சித்தண்ணி கலந்துகொண்டு வந்து விட்டாள். அதை கண்டதும் எருமைக்குட்டி “றே?” என்ற ஓசையுடன் அதை குடிக்கச் சென்றது.

“வாய் ஒருநேரம் ஓயாது… அப்டி ஒரு பசி… நீ தீனிவச்சு நெறையப்போறே” என்றார் தங்கையா நாடார்.

“எனக்க பாக்கியமாக்குமே”என்றாள் செல்லம்மை.

“இவ வாயும் வயிறும் பெருத்தவ…இனி ஒரு கொறையும் இருக்காது”என்றார் தங்கையா நாடார்.

“இரியுங்க காப்பி வெள்ளம் எடுக்கேன்”என்றாள் செல்லம்மை.

குமரேசன் கஞ்சிநீர் குடித்துக்கொண்டிருந்த எருமைக்குட்டியை வருடினான். அதன் தோளை தழுவினான். அது திரும்பி அவனை நக்கியது.

“அம்மை அனுக்ரகிச்சாச்சு… போடே”என்றார் அருமைநாயகம்.

வீட்டுக்குள் நின்றுகொண்டு “இஞ்சேருங்க”என்றாள் செல்லம்மை.

“வாறேன்”என்று அவன் உள்ளே சென்றான்.

“அந்த கருப்பட்டிய எடுத்துக்குடுங்க”

அவன் தொற்றி மேலேறி அடுப்புக்கு நேர்மேலெ இருந்த கருப்பட்டி பெட்டியிலிருந்து ஒரு கருப்பட்டியை எடுத்து செல்லம்மையிடம் கொடுத்தான்.

“எருமைக்குட்டி நல்லா புளியமுத்து கணக்கா இருக்குல்லாடி?” என்றான்.

“அய்யோ, எனக்கு காவிலே பகவதிய கண்டது மாதிரி இருக்கு” என்றாள் செல்லம்மை.

“நல்ல எனமாக்கும்… அதுக்க திமிலு கண்டா தெரியும்”

“இஞ்சேருங்க, சொப்பனத்திலே நீங்க எந்த வெரலை தொட்டிக?” என்று செல்லம்மை ரகசியமாக கேட்டாள்.

“சொல்லமாட்டேன். அது எனக்கும் அந்த அளப்பங்கோட்டு அப்பச்சிக்கும் உள்ள கணக்காக்கும்”என்றான் குமரேசன்.


பிற படைப்புகள்

Leave a Comment