வெள்ளந்தி
வா.மு.கோமு

by olaichuvadi

வெங்கடாசலம் புங்கை மரத்தினடியில் அமர்ந்திருந்தான். சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது. சாலையோரத்தில் ரொம்ப காலமாகவே நின்றிருந்த புங்கை மரத்தினடியில் சாரல் சுத்தமாகவே இல்லை. சுள்ளிமேட்டூரிலிருந்து திங்களூருக்கு தன் எக்ஸெல் சூப்பரில் கிளம்பி வந்தவன் வெங்கடாசலம். விஜயமங்கலம் மேக்கூரைத் தாண்டி மூன்று கிலோமீட்டர் வடக்கே வந்த பிறகு தூறல் ஆரம்பித்து விட்டது. சிகரெட்டின் கடைசி தம்மை இழுத்து முடித்தவன் மண்ணில் தீக்கங்கை நுழைத்து அணைத்து விட்டு சிகரெட்டை சுண்டியெறிந்தான். வடக்கே சிறுவலூர் பக்கமாக மழை பட்டையெடுத்துக் கொண்டிருப்பதாக தோன்றியது இவனுக்கு. வடக்கே இடிமுழக்கம் கேட்டுக் கொண்டிருந்தது.

சென்ற வாரம்தான் வெங்கடாசலம் திருப்பூர் சென்றிருந்த போது பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் குவித்து வைத்து விற்றுக்கொண்டிருந்தவனிடம் இளநீல வர்ணத்தில் ஒன்றும், அடர்நீல வர்ணத்தில் ஒன்றும் என இரண்டு டீசர்ட் இருநூறு ரூபாய்க்கு எடுத்து வந்திருந்தான். எதாவது திருவிழா சமயமோ அல்லது பெண் பார்க்கச் செல்லும் படலத்திலோ அணிந்து கொள்ளலாமென நினைத்து வாங்கியிருந்தான். வாங்கியவன் டீசர்ட்டில் பாக்கெட் இருக்கிறதாவெனப் பார்த்துத்தான் வாங்கியிருந்தான். பாக்கெட் இல்லாமல் வாங்கினால் செல்போனை ஜீன்ஸ் பாண்ட்டினுள் வைத்துக் கொண்டு வெளியில் சுற்ற வேண்டும். யாராவது அழைத்தால் பேண்டினுள் இருந்து எடுப்பதற்கு இவனுக்கு சிரமம். அதுவும் வண்டியில் செல்லுகையில் என்றால் வண்டியை நிறுத்தி உடலை முன்னுக்கு கொண்டு வந்து பாக்கெட்டிலிருந்து எடுப்பதற்குள் எதிராளி கூப்பிட்ட அழைப்பு தவறிய அழைப்பாக போய்விடும்.

மாரியம்மன் கோவில் விஷேசத்திற்கு என்று கிளம்பியதால் வெங்கடாசலம் இளநீலவர்ண டீசர்ட் அணிந்து வந்திருந்தான். இவன் சுள்ளிமேட்டூரிலிருந்து கிளம்புகையில் வானத்தில் மழைக்கான எந்த அறிகுறியுமே இல்லை. சுள்ளிமேட்டூரில் எப்போதுமே எந்த அறிகுறிகளுமே தெரிவதில்லை. நியூஸ் சேனல்கள்தான் வெப்ப சலனம் காரணமாக ஏழெட்டு மாவட்டங்களில் இன்னமும் இருபத்திநாலு மணி நேரத்தில் மழை கொட்டோ கொட்டென கொட்டுமென்றும், அதுவும் இடியுடன் கூடிய கனமழையாக இருக்குமெனவும் சொல்கிறார்கள். இவனது மாவட்டம் அதில் உள்ளதாவென ஊன்றிப் பார்த்தால் ஆமாம்ல! ஈரோடு மாவட்டமும் அதில் இருக்கத்தான் செய்தது. அடுத்த நாள் பார்த்தால் சேனலில் ஈரோடு டவுனுக்குள் தண்ணீரினுள் பயணிக்கும் வாகனங்களைக் காட்டுகிறார்கள். இவனுக்கு கடுப்பாய் இருக்கும். ஈரோடு நகரின் ஒவ்வொரு வீதியிலும் கம்பு, ராகி, சோளம் என நகரவாசிகள் பயிரிட்டு சாலையெங்கிலும் பயிர்கள் நிற்பதாய் நினைத்துப் பார்ப்பான்.

இவன் ஊருக்கும் மழை பெய்யத்தான் செய்தது. வாசலில் சருகு வெள்ளம் போக! ஆனால் இவன் செல்லும் ஊர்களில் எல்லாம் இரண்டு நாட்களாவது தொடர்ந்து ஒரு உழவு மழை ஒன்னரை உழவு மழை பெய்தது போல சாலையோரங்களில் தண்ணீர் நின்றிருந்தது. சுள்ளிமேட்டூருக்கு போன் செய்து ‘அங்கு மழையா?’ என்று மாப்பிள்ளையிடம் விசாரிக்கலாமா என்று யோசித்தான். இவன் அழைத்தால் பெய்து கொண்டிருக்கும் மழையும் கப்பென யாராவது மிரட்டியது போல நின்றுவிடுமென்று யோசித்து அதைக் கைவிட்டான்.

இவனது எக்ஸெல் சூப்பரை வாட்டர் சர்வீசுக்கு விட்டு நாளாகி விட்டதென புங்கை மரத்தை விட்டு சாலையோரமாக சைடு ஸ்டேண்டு போட்டு நிறுத்தியிருந்தான். மழை பொங்கு பொங்கென சிணுங்கிக் கொண்டிருந்தது. அணிந்திருந்த இளநீல வர்ண டீசர்ட்டில் பொட்டுப் பொட்டாய் மழைத்துளி விழுகிறதே ஒரு புகைப் போட்டு விட்டு மெதுவாகச் செல்லலாமென்ற யோசனையில், யாரோ விரைவாய் வந்து தலைவாழை இலை போட்டு இவனுக்கு விருந்து வைக்கிறது போல சம்மணமிட்டு அமர்ந்து விட்டான். சிறுவலூர் பக்கம் வானம் இடறும் சப்தம் தூரத்து இடி முழுக்கமாய் கேட்டது.

நான்கு மாதம் முன்பாக வெள்ளோடு சென்ற போது திடீரென இவனிடம் எந்த அறிவிப்பும் சொல்லாமலேயே மழை வந்து விட்டது. அப்போதுதான் சென்னிமலை நோக்கி சாலையில் எக்ஸெலில் வந்து கொண்டிருந்தான். வந்த மழைக்கு ஒதுங்குவதற்குக்கூட அந்தச் சாலையில் மரங்கள் இல்லை. காட்டு வேலிகள்தான் இருந்தன. சரி என முறுக்கிக் கொண்டே வந்தவன் தொப்பரையாய் நனைந்த நிமிசத்தில் மழை நின்று போனது. இவனை நனைத்தேயாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்த மழையாகவே இவனுக்குத் தோன்றியது. சாலையினோரத்தில் தென்பட்ட டீக்கடை முன்பாக வண்டியை நிறுத்தியவனை எல்லோரும் அதிசயமாய் பார்த்தார்கள். ஏனெனில் டீக்கடைப்பக்கம் மழைக்கான அறிகுறி எதுவுமிருக்கவில்லை. அந்த மழை இவனுக்கு சளி காய்ச்சலை கொண்டுவந்து விட்டது.

சென்னிமலை குமாரசாமி டாக்டரிடம் சென்றான். உயர்குருதி அழுத்தம் பார்த்தவர் இவனிடம் வயதென்ன? என்றார். ‘ஆடி பொறந்தா நாற்பத்தைந்து’ என்றான். ‘உங்களுக்கு உயர்குருதி அழுத்தம் இருக்கே! ஒரு மாசத்திக்கி சாப்பிட கொடுக்கிறேன். தவறாம சாப்பிடுங்க! ஒரு மாசம் கழிச்சி வாங்க! மறுபடி பார்த்துட்டு பெட்ல தங்கோணுமா இல்லியான்னு சொல்லிடறேன்!’ என்றார். இவனுக்கு காய்ச்சல் போன இடமே தெரியவில்லை. இருமிக்கொண்டே இருந்தவனுக்கு இருமலும் நின்று போயிருந்தது அதிர்ச்சியில். டாக்டர் கொடுத்த மாத்திரைகளை பொட்டணம் கட்டிக் கொண்டு வீடு வந்தான்.

அறிந்த நண்பர்களிடம் உயர்குருதி அழுத்தம் பற்றியான தெளிவுகளைக் கேட்டான். ‘மாத்திரைய தின்னு பழக்கீட்டீங்கன்னா அப்புறம் கடேசி காலம் வரைக்கிம் தின்னுட்டேதான் இருக்கோணும் என்றார்கள். அதுசரி. எப்போ உயர்குருதி அழுத்த வியாதி தீரும்? என்று மட்டும் சொல்லவே மாட்டேன் என்கிறார்களே! நாற்பத்தியைந்து வயதில் இன்னமும் ஒரு கல்யாணம் கூட கட்டிக்கொள்ளாமல் இருக்கும் போதே உயர்குருதி அழுத்த வியாதியா? ஐயகோ! ஏற்கனவே ரத்த ரிசல்ட் எல்லாம் பெண் வீட்டுக்கு கொடுத்தால்தான் பெண்ணைக் கொடுப்பேன் என்கிறார்கள்.

விஜயமங்கலம் மூர்த்தியண்ணனிடம் இதுபற்றி விசாரித்தான். அவர் கடந்த ஆறு வருடங்களாக குருதி அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்துக் கொள்கிறவர். ‘மூர்த்தியண்ணா.. இந்தக் கருமம் என்னத்தையண்ணா பண்டும்’ என்றான். ‘ஒருவிசுக்கா ராத்திரில செரியா தூங்கலையப்பா.. அடுத்த நாளு மத்தியானம் பதினொன்னு இருக்கும். இத்தனைக்கும் எம்பட ஊட்டுலதான் சேர்ல குக்கீட்டு டீவி பார்த்துட்டு இருந்தேன். கொய்யி கொய்யின்னு ரூமு சுத்த ஆரம்பிச்சிடுச்சு! நானு மெரண்டு போயிட்டேன். மூனு வருசம் மாத்திரை தின்ன பொறவு சக்கரையும் வந்துருச்சு. எம்பட டாக்டரு அதுக்கும் மாத்திரை எழுதிக் குடுத்து சாப்பிடச் சொன்னாரு. புண்ணு கிண்ணு கால்ல பண்டிக்காதீங்க! அப்பிடின்னாரு. அதனால பதனமா ரோட்டுல நிதானமா நடக்க ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் காசுக்கு எங்க போவேன் நானு? பொண்டாட்டி தறிக்கி போயிட்டு வந்துட்டு வீட்டு ஜாமான் வாங்குவாளா இல்ல எனக்கு வைத்தியத்துக்கு காசு தருவாளா? ஒரு நாள் கத்துனா பாரு வெங்கடாசலா! போயி ரோட்டுல உழுந்து செத்தே போயிடலாம்னு ஆயிப்போச்சு! கலியாணங்கட்டி வந்த முப்பது வருசத்துல ஒரு பேச்சு அவ என்னையப் பேசியிருப்பாளா? அப்புறம் உசுரு பொழைச்சுத்தான ஆவணும்னு விஜயமங்கலம் கெவருமெண்ட்டு ஆஸ்பத்திரிக்கிப் போனேன். அவங்க பாஞ்சு நாளைக்கி ஒருக்கா செக்கப் பண்டி மாத்திரை குடுத்து உடறாங்க! பொண்டாட்டியும் இப்பச் சத்தமெல்லாம் போடறதில்ல!’

வெங்கடாசலம் மிரண்டு மாத்திரைகளை கொரங்காட்டுக்குள் எறிந்து விட்டான். காட்டுச்சேரி சென்றால் இலை தலை, பூக்கள் என்று கண்ணுக்குச் சிக்கினவற்றையெல்லாம் பறித்து வாயில் போட்டு மென்று விழுங்க ஆரம்பித்தான். சோத்துக்கத்தாழை சாப்பிடத்துவங்கினான். முகம் கூட சைனிங் கூடிவிட்டதாய் கண்ணாடி முன்பாக நின்று தடவிப் பார்த்துக் கொண்டான். இந்த சைனிங்கோடே அந்த முதல் கல்யாணத்தை செய்து விட வேண்டும். இவனது தானாவதி நான்கு நாட்களுக்கும் முன்பாக நல்லசேதியை காதில் போட்டிருந்தார். பல்லடத்திலிருந்து திருப்பூர் கம்பெனிக்கு மேனேஜராய் சுகன்யா வந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்று. சுகன்யா! ஹா!

பேரைக் கேட்டதுமே இவனுக்குள் புஷ்பங்கள் பூக்கத்துவங்கியது. இவனது ஜாதகத்தை சுகன்யாவின் பெற்றோரிடம் கொடுத்து வைத்ததில் அவர்கள் சோமனூர் சோசியரிடம் பார்த்து விட்டார்களாம். எட்டுப் பொருத்தம் வருகிறதாம். வசியப்பொருத்தம் வேறு வருகிறதாம். கேட்கவே இனிப்பாய் இருந்தது இவனுக்கு. எல்லாப்புஷ்பங்களிலும் தேன் தடவப்பட்டு விட்டது. சுள்ளிமேட்டூருக்குள் நான்கு எருமை பத்து ஆட்டுக்குட்டி, அஞ்சு ஏக்கரா மொட்டக்காடு வைத்திருப்பவனுக்கு என்ன வேலை? சம்சாரம் சுகன்யாவை இவனது எக்ஸெல் சூப்பரில் அமர வைத்து திருப்பூருக்கு எல்லக்காட்டு வழியே பிரயாணித்து ஊத்துக்குளி சென்று அப்படியே திருப்பூரில் அவளை கம்பெனியில் காலையில் விட்டு விட்டு, மாலை வரை ரயில்வே ஸ்டேசன் பக்கம் அமர்ந்து நான்கு சிகரெட் குடித்து விட்டு, மாலையில் பணி முடிந்து வருகிற சுகன்யாவை யாராவது களவாடிச் சென்று விடாமல் அழைத்து வந்துவிடலாம். அப்படியே பெண்பிள்ளையோ, அல்லது ஆண்மகவையோ ஈன்றாள் என்றால் அதையும் கான்வெண்ட்டில் சேர்த்து மூவரும் திருப்பூர் செல்வது போன்ற வடிவ நேர்த்தியான காட்சிகள் வெங்கடாசலத்தின் மனதினுள் எழுபது எம் எம்மில் ஓடியது.

தானாவதி இவனை சீக்கிரம் திருப்பூர் கூட்டிப்போவதாய் வாக்களித்திருந்தார். அப்பாய்ன்மெண்ட் இன்னும் கிடைக்கவில்லை என்றார். திருப்பூரு போயி என்னத்த கழட்டுறது? பல்லடம் போனாலாச்சிம் காரியம் ஆகுமே! ‘என்னுங்கண்ணா?’ என்றான். ‘அந்தப் பொண்ணு சுகன்யா உன்னை இண்டர்வியூ பண்ணனுமாம்!’ என்றார். பிறந்ததிலிருந்து இண்டர்வியூ என்று எந்த கம்பெனி வாசலுக்கும் ஃபைலை எடுத்துக் கொண்டு இவன் சென்றதில்லை. படிப்பு பத்தாவதோடு போயிற்று. சர்ட்டிபிகேட் என்று சென்னிமலை பள்ளி சென்று இன்னமும் வாங்கவில்லை. தானாவதி இவனை டிகிரி டிஸ் கண்டின்யூ என்றே மற்ற குடும்பத்தார்களிடம் சொல்வார். சகன்யா டிகிரில என்ன கோர்ஸ் படிச்சீங்க? என்று கேட்டால் பிஏ என்று சொல்ல வேண்டும்! எந்த வருசம் படிச்சீங்க? என்றால் ஞாபகத்துல இல்லெ, என்று சொல்ல வேண்டும்.

எல்லாம் சரி! தானாவதி கடைசியாக ஒன்று சொன்னார் இவனிடம். ‘பொண்ணுக்கு இது ரெண்டாம் கல்யாணம்’ அப்படியானால் சுகன்யாவுக்கு எல்லா பார்ட்டுகளும் கணு கணு கணுக்கென இருக்க வேண்டும்! வத்தக்கறவையாக இருக்க கூடாது! மிதிக்க முடியாது. முதல் கணவனோடு ஆறு மாதம் வாழ்ந்து விட்டு டைவர்ஸ் வாங்கி விட்டாளாம். ‘புள்ளை பெத்தவளா இருக்கப்போறாளுங்கண்ணோவ்’ என்றான் பீதியில். ‘மாடு கன்னுகளையும் இழுத்துட்டு வந்தா இருக்குற ஆடுகளையெல்லாம் வித்துட்டு சோறு போட என்னால முடியாது பார்த்துக்கங்க’ என்று சொல்லியிருந்தான். இண்டர்வியூவிற்கு செல்ல அடர்நீல வர்ண டீசர்ட் இருக்கிறது. கோத்ரேஜ் மை இந்த ஞாயிறன்றே மண்டைக்கு பூசியாயிற்று.

திடீரென மழைத்தூறல் பெரிதாயிற்று. புங்கைமர கிளைகளிலிருந்து தண்ணீர் வடியலாயிற்று. இவனது எக்ஸெல் குளிக்கத் துவங்கியிருந்தது. காற்று வடக்கிலிருந்து சுழன்று சுழன்று வீசிற்று. சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. எல்லாமும் மழைக்கு ஓரம்பாரமாய் ஒதுங்கி விட்டன போல. மழைத்துளிகளை காற்றின் வேகம் இவன் பக்கமாய் கொண்டு வரவே எழுந்து மரத்தை ஒட்டிப்போய் நின்றான்.

எதிர்க்கே வேலிக் காட்டினுள் மூன்று கூந்தப்பனைகள் நின்றிருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்திருந்த காகம் முழுக்க நனைந்திருந்தது. அது வடக்கே பார்த்து ‘கா கா’ வெனக் கத்தியபிறகு பக்கத்து மரத்திற்கு பறந்து சென்று அமர்ந்தது. எதன் காரணமாய் அது மரத்தை மாற்றிக் கொண்டது எனத்தெரியவில்லை இவனுக்கு. காக்கைகளை இப்போதெல்லாம் அதிகம் காணமுடிவதில்லை. சுற்றுவன சிலவும் பெருந்தலைக் காகங்களாகவே இருக்கின்றன. சனிக்கிழமை காகங்களுக்கு சோறு வைத்தால் எறும்புகள்தான் வந்து பொழுதுக்கும் தின்கின்றன. காகங்கள் எல்லாம் ஒன்று கூடி பேசி ஈரோடு மாவட்டத்தை ரிஜக்ட் செய்து விட்டு போய்விட்டன போல.

மேகங்கள் சொல்லி வைத்தது போல ஈரோடு நகரை நோக்கி அதிவேகமாய் வானில் கிழக்கே சென்று கொண்டிருந்தன. எல்லாமும் ஈரோடு டவுனில் கூடி கொடேர்ச்சென மழையை கொட்டி விட்டு நிம்மதியாகிவிடும். நாளை செய்திச் சேனல் பக்கம் நமக்கு வேலையில்லை என்றே நினைத்தான் வெங்கடாசலம். மழை சலசலவென பெய்தது. சாலையிலிருந்து தண்ணீர் கீழிறங்கி இறக்கம் கண்ட பக்கம் ஊர்ந்து சென்றது. இவன் நின்றிருந்த புங்கைமரத்தடியிலும் தண்ணீர் சொத சொதக்க ஆரம்பித்து விட்டது. மேலே அருகிலேயே வானம் கடமுடாவென்றது. இடி இடிக்கையில் மரத்தடியில் நிற்கக்கூடாது. இடி விழுந்தால் விரைத்துப் போய்க் கிடப்போம்! அதுவும் முதல் கல்யாணமே ஆகாத நிலையில் போயும் போயும் ஊரைவிட்டு பதினைந்து கிலோமீட்டர் வந்து மரணமென்றால் இங்கே யாருக்கு அடையாளம் தெரியப் போகிறது? நினைத்தவன் உயிர்பயம் மேலிட மரத்தை விட்டு எக்ஸெல் சூப்பருக்கே ஓடி வந்தான். எங்காவது பேருந்து நிறுத்தமிருந்தால் நின்றுகொள்ளலாமென வண்டியைக் கிளப்பினான். மழையில் நனைந்தபடி நாய் ஒன்று குண்டாங் குண்டானென வடக்கே ஓடிக் கொண்டிருந்தது. இவனது எக்ஸெலின் சப்தம் அதனருகில் செல்கையில் அதன் காதுகளுக்கு வர்ரெனக் கேட்கவே பயந்து காட்டுக்குள் ஓடி நின்று பார்த்தது.

கிரேநகர் பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றான். மழை இப்போது குறைந்து விட்டது. நிழற்குடைக்குள் சனமே நின்றிருந்தது. ஆலமரத்தினடியில் தெப்பம் போல மழைநீர் நின்றிருந்தது. இவனுக்கு சனத்தைக் கண்டதும் இங்கே இனி போய் நிற்பதா? என்ற எண்ணத்தில் மளிகைக்கடையைத் தாண்டி வடக்கு ரோட்டில் விட்டான். மழை இவனுக்காகவே குறைந்து விட்டது. ஆனால் ஒரு உழவு மழை பெய்திருக்க வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் மழைத்தண்ணீர் குழிகள் ஒவ்வொன்றிலும் நின்றிருந்தது. ஆறுமணிக்கும் மேலிருக்கலாம். ஆனால் இருள் சூழ இன்னமும் முக்கால் மணிநேரமாகும் போலிருந்தது. திங்களூர் வருகையில் வாகனங்களின் இரைச்சல் அதிகமிருந்தது. எந்தச் சந்திலிருந்து பொதுக்கென முட்டிக் கொண்டு டூவீலர் வருமோவென அஞ்சி நிதானமாய் நான்குவழிச் சாலைக்கு அருகில் வந்தவன் கிழக்கே வெள்ளாங்கோவில் சாலையில் ரவுண்டானாவில் சுற்றிக் கிளப்பினான்.

இவனது நண்பன் மயில்சாமி பிற்பகல் மூன்று மணியைப் போலத்தான் இவனை அழைத்திருந்தான். நேற்றுத்தான் கோவையிலிருந்து ஊருக்கு வந்திருப்பதாய்த் தெரிவித்தான். மயில்சாமி சொந்த ஊர் பாளையம். பாளையத்திலிருந்து வேலை நிமித்தமாக கோவையில் இருந்தவன் அங்கேயே காதலித்து கண்மணி ஒருவளை கட்டிக் கொண்டான். கொஞ்சகாலம் பாளையத்தினுள் வராமலிருந்தவன் அம்மா அப்பா சமாதானம் ஆனபிறகு அவ்வப்போது குழந்தைகளோடு வந்து போய்க் கொண்டிருந்தான். எப்போது வந்தாலும் ஞாபகமாய் இவனை அழைத்து சந்தித்துவிட்டுச் செல்வான். இவனை மயில்சாமி கூப்பிடுகையில் அரை போதையில் இருந்தான் போலத்தான் குரல் கேட்டது. ஊரில் மாரியம்மன் திருவிழா என்றும், இரவில் ஆர்கெஸ்ட்ராவெல்லாம் இருக்கிறது என்றும், வீட்டில் மட்டன் இருக்கிறது என்றும் இவனுக்கு திருவிழா அழைப்பு போட்டான். சரி மட்டன் விற்கும் விலைக்கு ஒரு பிடி பிடிக்கலாம், நண்பன் எப்படியும் நல்ல சரக்கு வைத்திருப்பான் அதை நனைத்துக் கொள்ளலாம், ஆர்கெஸ்ட்ரா பார்த்து பல வருடங்களாயிற்று! ஏ.ஆர் ரகுமான் வந்தபிறகு ஆர்கெஸ்ட்ராவில் அவர் பாடலைக் கேட்டதேயில்லை. ஒரு மகிழ்வான இரவுக்கு ஏங்கி வந்தவனுக்கு அதிர்ச்சியான விசயம் என்னவென்றால் நண்பன் மயில்சாமியின் வீடு பூட்டிக் கிடந்தது. சரி கோவிலுக்கு குடும்பம் சகிதமாய் சென்றிருப்பார்கள் என்று நினைத்து நண்பனை அலைபேசியில் கூப்பிட்டான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

கோவில் ஊருக்குள் இருக்கும் போலிருந்தது. சலங்கையாட்டக்காரர்கள் மத்தாள ஒலிக்கு தக்கபடி ஆடிக் கொண்டிருக்கும் சப்தம் கொடை ரேடியாவில் கொய் கொய் சலங் சலங்கென கேட்டபடியிருந்தது. இவனைக் கடந்து போன பெண்கள் எல்லோருமே பட்டுச் சேலையில் தலைநிறைய மல்லிகைப்பூ வைத்து இவனை ஓரக்கண்ணால் பார்த்துச் சென்றார்கள். விசில் சப்தமும், சிறுவர்களின் சப்தமும் கொடை ரேடியோவில் ஊர்முழுக்கக் கேட்டது. பக்கத்தில் யாரையேனும் விசாரிக்கலாம் என மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் சாலையில் வருகிறாரா என நோட்டமிட்டான். இவன் எதிர்பார்க்கும் மனிதர் யாரும் வரவில்லை. சற்று தூரத்தில் ஒரு மளிகைக்கடை போல தெரிந்தது. சிகரெட் வாங்கிக் கொண்டே விசாரிக்கலாமென நடையிட்டான். வாக்குவாரம் சொல்லி முடித்ததும் ஒன்னானடித்தாளத்திற்கு ஆட்டச்சப்தம் கேட்டது ரேடியோவில். இவனுக்கும் கால்கள் ஆடச்சொல்லி பின்னியது.

மளிகைக்கடைக்காரர் கடையை சாத்தி விட்டு கோவிலுக்குச் செல்லும் முசுவிலிருந்தார். பலகைக் கதவுகளை எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். இவன் சிகரெட் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டே, ‘மயில்சாமி வீடு பூட்டிக் கிடக்குதுங்ளே அண்ணா! கோயலுக்கு போயிட்டாங்களா?’ என்றான். ‘இல்லப்பா, இப்பத்தான் அவியய்யனுக்கு எதோ ஒடம்புக்கு முடியலன்னு திங்களூரு பொன்னாங்காரை வரவச்சு அவசரமா கோபி ஆஸ்பத்திரிக்கி போறான்!’ என்றார். ‘பெரிய சிக்கலொன்னுமில்லீங்களே அண்ணா?’ ‘எதோ மயக்கம் போட்டு உழுந்துட்டாருன்னு சொன்னாங்க! மயிலான் வந்தவன் மத்தியானம் ஐய்யனுக்கும் சரக்கு ஊத்தியிருப்பான். அது அவருக்கு சேர்ந்திருக்காது’ என்றவர் கடைசிப் பலகையையும் தள்ளி பூட்டை கையில் எடுத்துக் கொண்டார். வெங்கடாசலம் வண்டியருகே வந்தான். இந்த ஊரில் வேறு யாரையும் அவனுக்குத் தெரியாது. வந்த வழியே திரும்பிச் செல்ல வேண்டியதுதான்.

இரண்டு புதிய சேலையணிந்த பெண்கள் இவனைத் தாண்டிச் சென்றார்கள். ஒருத்தியின் பின்பாகங்கள் இவனுக்கு உசுப்பேற்றும் விதமாக ஆடியாடிச் சென்றது. கொஞ்சம் தூரம் பின்பாக தரிசனத்தை முன்னிட்டு அவர்களை தொடர்ந்து செல்வோமா! என்று கூட யோசித்தான். இப்படி அழகான பின்பாகத்தை கண்டு நாட்களாகி விட்டது.

வண்டியை எடுத்துக் கொண்டு பாளையத்தை விட்டு கிளம்பும் யோசனையில் நிதானமாக ஸ்டார்ட் செய்தான். ரேடியோவில் மத்தாளச் சப்தம் நின்று பக்தகோடிகளை சுவாமி தரிசனத்துக்கு அழைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். கோவில் பக்கமாய் போய் சாமி கும்பிட்டு பூசாரி தட்டில் பத்து ரூபாயாச்சிம் போட்டு விட்டு போகலாமே என்று நினைத்தான். ஆர்கெஸ்ட்ராவுக்கு வசூல் செய்தார்கள் என்றால் சுள்ளிமேட்டூர் வெங்கடாசலம் என்று சொல்லி நூறு ரூபாய் கொடுத்துச் செல்லலாம். மாரியாத்தா கண் விழித்தாள் என்றால் திருப்பூர் சுகன்யா நடத்தும் இண்டர்வியூவில் நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று மங்கையே மணாளன் பாக்யமென்று வாழத்துவங்கலாம். திடீரென ‘பாளையத்துப் பொண்ணு நானு சின்னய்யா! பழைய பந்தத்தை நான் தேடி வந்தேன் சின்னய்யா!’ என்று பாடல் பாடிற்று.

வெங்கடாசலம் வண்டியை முறுக்கிக் கொண்டு பாளையத்தை விட்டு திங்களூர் சாலையில் பயணத்தை துவங்கினான். மீண்டும் நால்ரோடு வந்து தெற்கே விஜயமங்கலம் பாதையில் சென்றான். சரக்குக்கடை வாடாவென இவனை அழைத்தது. கையை மறித்தபடி காட்டி மேற்கே சரக்குக் கடைக்கு கிராஸ் செய்து வந்து நிப்பாட்டினான். யாராவது தெரிந்த முகம் வருகிறதாவென ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ஓரமாய் நின்றான். சிகரெட் முடியும் தருவாயில் தெரிந்த முகம் வந்து சேர்ந்தது. அவர் பாளையத்துக்காரர்தான் என்று பின்பாகத்தான் தெரிந்தது.

வெங்கடாசலத்தை பார்த்ததுமே, ‘இங்க எங்கீங்க நீங்க வந்து நிக்கீங்க?’ என்று விசாரித்தபடி வந்தவரின் பெயர் கூட இவனுக்குத் தெரியாது. அவருக்கும் இவன் வயது இருக்கலாம். விஜயமங்கலம் பகுதியில் முன்பு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இவரது ஆட்டோவில் இரண்டுமுறை சுள்ளிமேட்டூருக்கு போயிருந்தான். ‘உங்கூரு இதுங்ளா? நான் பாளையத்து விசேசத்துக்கு வந்தனுங்க மயில்சாமி ஊட்டுக்கு’ என்றான். ‘நானும் பாளையத்துக்காரன்தானுங்க! அவரு தான் அவியப்பாவுக்கு ஒடம்புக்கு முடியலன்னு அப்பலையாவே கார்ல போயிட்டாருங்களே! அதனால என்னங்க, நம்மூட்டுக்கு போலாம் வாங்க!’ என்றார். ‘அப்புறம் விஜயமங்கலத்து பக்கமா காணமாட்ட இருக்குதுங்களே உங்களை?’ என்றான். ‘அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாங்க! வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்!’ என்றவரிடம், ‘வாங்க மொதல்ல சரக்கு வாங்கீட்டு போலாம்’ என்று கடைக்கு கூட்டி வந்தான். எம்சி வி.எஸ்.ஓ.பி முழுபாட்டில் எடுத்துக் கொண்டு போய் எக்ஸெல் கவரில் திணித்தான். ‘உங்க வண்டி எங்கீங்க?’ என்றான் அவரிடம். ‘நான் நடந்துதானுங்க வந்தேன். உடுங்க போலாம்!’ என்று பொறவுக்கு தொற்றிக் கொண்டார்.

மீண்டும் பாளையத்தினுள் வெங்கடாசலத்தின் வண்டி வருகையில் ஆட்டம் மும்மரமாய் கோவிலில் நடந்து கொண்டிருந்தது. இந்தச் சந்துல உடுங்க வண்டியெ… அப்பிடியே அந்தக் கடைசி வீடு எம்படது தானுங்க… நேரு கொண்டி நிறுத்துங்க’ என்று அவர் சொல்ல கடைசி வீட்டின் வாசலில் வண்டியை நிப்பாட்டினான். கிழபக்கமாக காட்டினுள் ஆர்கெஸ்ட்ரா நடக்கும் போலிருந்தது. ஓலைப்பந்தல் வேய்ந்திருந்தார்கள் மேடை மீது. மேடையின் கீழ்ப்புறம் பெரிய பாக்ஸ் இரண்டு நின்றிருந்தது விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. வந்தவர் வீட்டின் கதவு நீக்கி உள்ளே சென்று இவனை அழைத்தார். வெங்கடாசலம் வீட்டினுள் சென்றான்.

கிழக்கு முக்கில் பாயில் மூன்று வயது பையன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கிளுகிளுப்பை பொம்மை கிடந்தது. பையன் விரல் சூப்பிக் கொண்டே தூங்கியிருந்தான். அவரின் மனைவி இளம்பச்சை நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். மொத்தமாக நாற்பத்தியைந்து கிலோதான் இருப்பாளோ என்பது போல ஒல்லிப்பிச்சானாய் இருந்தாள். இவனிடம் ‘வாங்க’ என்று கூட சொல்லவில்லை அவள். வந்தவர் இன்னொரு பாயை மேற்குப்புற மூலையில் விரித்தார். ‘சிக்கனை சூடு பண்டிக் குடு! அப்பிடியே கொழம்பையும் சூடு பண்ணி வைய்யி!’ என்று அவர் சொல்லவும் அவள் ஸ்டவ்வைப் பற்ற வைத்தாள். ‘ஏண்ணா இன்னும் கேஸ் அடுப்பு வாங்காம இருக்கீங்களாண்ணா?’ என்று கேட்டபடி பாயில் அமர்ந்தான்.

‘சரக்கை எடுத்துட்டு வரட்டுங்ளா!’ என்று கேட்டவர் பதிலை எதிர்பாராது வெளியில் சென்றார். சித்தங்கூரியத்தில் பாட்டிலை பாயில் வைத்து விட்டு இரண்டு டம்ளர்களையும் தண்ணீர் செம்பையும் பாயில் வைத்து அமர்ந்தார். வடைச்சட்டியில் இருந்த சிக்கன் துண்டுகளை ஒரு தட்டில் போட்ட அவர் மனைவி அடுத்து கொழம்புச் சட்டியையும் ஸ்டவ் மீது எடுத்து வைத்தாள். சிக்கன் நிரம்பிய தட்டை எடுத்து கணவரிடம் நீட்டினாள். இவரும் வாங்கிப் பாயில் வைத்தார். ‘இன்னொரு தட்டு குடு! எலும்பை வைக்க!’ என்றார். இன்னொரு தட்டத்தை எழுந்து எடுக்கச் சென்றவள் பொதுக்கென கீழே விழுந்தாள்.

‘தட்டாமுட்டிடீ நீயி!’ என்றார் திடீரென சப்தமாய் இவர். ‘சேலை காலுக்குள்ள சிக்கியிருக்கும் உடுங்க! பாத்துப் பண்டு சாமி! ஒன்னும் அவசரமில்ல! இல்லீன்னா பையன் தூங்குது பாரு சித்தெ படுத்துக்கொ! நாங்களே எடுத்துப் போட்டுக்கறோம்!’ என்று வெங்கடாசலம் சொல்ல, பதிலெதுவும் பேசாது காலி தட்டமொன்றைக் கொண்டு வந்து கணவரிடம் கொடுத்து விட்டு கையை முன்புறமாகக் கட்டிக் கொண்டு நின்றாள். வெங்கடாசலமும் அவரும் முதல் ரவுண்டை சியர்ஸ் போட்டு குடித்தார்கள். தட்டிலிருந்து ஒரு பீசை எடுத்து அவர் சாப்பிட, இவனும் ஒன்றை எடுத்து வாயில் போட்டு அதக்கினான். அவர் அடுத்த ரவுண்டு சரக்கை உடனே டம்ளரில் ஊற்றினார். துளி அளவு கூட யாருக்கும் அதிகமில்லாமல் அளவாய் ஊற்றினார்.

நோம்பி நாளும் அதுவுமாய் எப்படி மதியம் குடிக்காமல் இருந்தார் மனுசன்? என்று வெங்கடாசலத்திற்குள் கேள்வி இருந்தது. சரி பொழுதோடக் குடி குடிக்கும் மனுசன் போல! அதற்குத்தான் டாஸ்மாக் பக்கம் வந்திருக்கிறார். வடைச்சட்டி காலி. குழம்பின் நிலைமை வெங்கடாசலத்துக்கு தெரியவில்லை. அந்தப்பெண் எதுவும் பேசாமல் நின்று கொண்டேயிருப்பது இவனுக்கு இடைஞ்சலாய் இருந்தது. ‘நீங்க போயி படுத்துக்கங்க! நாங்க வெகு நேரம் பேசீட்டு இருப்போம்.’ என்றான். அது கணவனைப் பார்த்தது. ‘அவருதான் சொல்றாருல்ல! போயி படுத்து தூங்கு! ஆர்கெஸ்ட்ரா ஆரம்பிக்கட்டும்! அப்புறமா போலாம்!’ என்றார். அவள் பத்திரமாய் வீட்டுக்குள்ளேயே நடந்து சென்று பையனுக்கருகில் சுவரைப்பார்த்துப் படுத்துக் கொண்டாள்.

‘அங்க விசயமங்கலத்துல ரெண்டாவது சம்சாரம் கூட இருந்தனுங்க! அதுக்கும் புள்ளையில்ல! அவ தறிக்காரனோட ஓடிட்டா! அப்புறம் சொந்த ஊருக்கே வந்துடலாம்னு இங்க வந்தேன். என்னோட ஊடு போனவருசம் மழைக்கி உழுந்திருச்சு! இங்கதான் சிறுவலூர் ரோட்டுல இருக்குற பனியன் கம்பெனிக்கி வேலைக்கி போயிட்டு வந்துட்டு இருக்கேன். இவ வெள்ளாங்கோயில்காரி. சொந்தத்துல எங்க மாமன் பார்த்து கட்டி வச்சது. கொஞ்சம் புத்தி கம்மிதான். போன்னா போவா, வான்னா வருவா. எங்கியும் வெளிய சாமார்த்தியமா போக வரத் தெரியாது. இருந்து சாட்டாதுங்ளே! தொணையின்னு ஒருத்தி இருக்கட்டும். பையன் தலயெடுத்தா அட்டனங்கால் போட்டு படுத்துட்டாப் போச்சு! என்னுங்க நாஞ் சொல்றது! அப்புறம் உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க?’ என்றார்.

அவர் பெயரை இனிப்போய்க் கேட்டால் நல்லாவா இருக்குமென நினைத்தான் இவனும். ‘எனக்கு பொண்ணுத்தரத்தான் ஊர்ல ஒருத்தருமே இல்லீங்களே! எங்க போனாலும் எதாச்சிம் நொட்டெ சொல்லீட்டு நம்மை ஆரம்பத்துல இருந்தே நவுத்தி ஓரமா உட்டுட்டாங்க. ஆனா இன்னும் பொண்ணு பார்த்துட்டேதான் இருக்கேன்.”

‘நமக்குத் தெரிஞ்ச பொண்ணு ஒன்னு இதே ஊருக்குள்ள இருக்குதுங்க! வயசு முப்பதாச்சு! அந்தப்பொண்ணோட ஆயா கூட இப்ப சடுதிக்கி தான் செத்துப் போச்சு! இது ஒன்னு மட்டும் தான் வேலைக்கி போயிட்டு வரும். அதே ஆக்கித் தின்னுட்டு இருக்குது! பக்கத்தூடுதானுங்க! ஆனா பொண்ணு மாநிறம்தான். என்கிட்ட அண்ணா அண்ணான்னு நல்லாப்பேசும். ஊர்க்காரங்க கிட்டயும் கொணமாத்தான் பேசும். வீடு ஒன்னுதான் இருக்குது. மத்தபடி சொத்தெல்லாம் இல்லெ! நகையும் இருக்கான்னு தெரியாது”

‘அது கெடக்கட்டுமுங்க.. ஊத்துங்க!’ இவர்கள் அடுத்த ரவுண்டு அடுத்த ரவுண்டென பாட்டிலை காலி செய்ய முக்கால் மணி நேரமாயிற்று. ‘இதோ வந்துடறேனுங்க!’ என்று வெளியில் சென்றவர் ஐந்து நிமிடத்தில் பாக்குமட்டை இரண்டோடு வீட்டினுள் வந்தார். அரைபாட்டில் குடித்தும் நிதானத்தில் மனுசன் இருக்கானே! இவனுக்குத்தான் உலகம் மெதுவாக சுழல் போட ஆரம்பித்திருந்தது. இரண்டு தட்டிலும் சாப்பாடு அளவாய் போட்டவர் குழம்பை ஊற்றிக் கொண்டு வந்து பாயிலேயே வைத்து விட்டு அவர் தட்டிலிருந்து உருப்பென ஒரு கவளம் சோற்றை விழுங்கினார். அள்ளி வீசி விட்டு வெளித்திண்ணையில் போய் சாய்ந்து விடலாமென வெங்கடாசலம் நினைத்தான். சகவயதுக்காரரான இவருக்கு மூனாவது பொண்டாட்டி! இங்கே ஒன்னுக்கே சிங்கி! அவர்மீது பொறாமையாய் இருந்தது.

இன்னமும் அவர் பெயர் தெரியவில்லை. சாப்பிட்டுக் கொண்டே ‘உங்களுக்கு வயசிருந்தா ஒரு நாப்பத்தியேழு இருக்குமுங்ளா?’ என்றான் இவன். ‘எனக்கு நாப்பத்தி நாலுங்க!’ என்றவர் பாக்குமட்டையை வழித்து வாயில் திணித்திருந்தார். இவன் நிதானமாக எழுந்து வெளியில் தட்டைத்தூக்கிக் கொண்டு வந்தான். வெளியே டியூப்லைட் எரிந்தபடி இருந்தது. தென்பக்கமாக சலதாரை இருப்பது போலிருக்கவே, தட்டை அங்கு சென்று சொய்ங்கென தட்டெறிதல் போட்டியில் கலந்து கொள்ள வந்தவன் போன்று விட்டெறிந்தான். அது தென்பக்கமாக காட்டுக்குள் பர்ரெனப் போயிற்று. கையை பக்கெட் தண்ணீரில் கழுவி விட்டு பேண்ட்டிலிருந்து கர்ச்சீப் எடுத்து வாயைத் துடைத்தான். காட்டினுள் ‘ஹலோ ஹலோ! மைக் டெஸ்டிங்!’ குரல் கேட்டது. ‘நீங்கள் நீங்கள் நீங்கள், ஆவலுடன் ஆவலுடன்.. எக்கோ அடிக்க மைக்கில் ஒருவன் பேசினான். திண்ணையில் வந்து அமர்ந்த வெங்கடாசலம் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஊதினான்.

‘எனக்கொன்னு தாருங்க!’ என்று திண்ணையின் ஓரத்தில் வந்தமர்ந்து கைநீட்டினார் அவர். இவன் மேல்பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அதனுள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அவருக்குக் கொடுத்தான். அவரும் வாங்கிப் பற்றிக் கொண்டு குப்பென புகைவிட்டார். கரிஎஞ்சினிலிருந்து ஒரு காலத்தில் இப்படித்தான் புகை குப் குப்பென வெளிவரும். வாலை ஆட்டிக் கொண்டு கருநாய் ஒன்று வாசலுக்கு வந்தது. ‘வாடா கருமா! எலும்பெல்லாம் தெக்கெ கொண்டி வீசினம் பாரு! இன்னிக்கி நீயி எலும்பு கடிப்பியா? ஊர்ச்சோறு முழுக்க தின்னுட்டு வந்திருப்பே!’ என்று நாயுடன் பேசினார்.

‘அந்த மருத மலைக்கு நீங்க வந்து பாருங்க!’ என்று ஆர்கெஸ்ட்ரா முதல் பாடலோடு துவங்கி விட்டது. சிகரெட்டை இழுத்து வீசினவர் உள்ளே சென்று மனைவியை எழுப்பினார். இவன் திண்ணையிலேயே டியூப் வெளிச்சத்தில் பறக்கும் சிறு பூச்சிகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பக்கத்து வீட்டில் மாநிறமான பெண் தட்டுப்படுகிறாளா? என்று முகத்தை திருப்பிப் பார்த்தான். அந்த வீட்டில் விளக்கு வெளிச்சமே இல்லை. ஒருவேளை ஆர்கெஸ்ட்ரா பார்க்க அவளும் போயிருக்கலாமென நினைத்தான். இவனால் ஆர்கெஸ்ட்ரா பார்க்க முடியாதென்பதை உணர்ந்தான். தலை கீழே சாய்ந்து கொண்டே சென்றது.

அவர்கள் இருவரும் ஆர்கெஸ்ட்ரா பார்க்க கிளம்பிவிட்டார்கள். இவனுக்கு திண்ணையில் படுத்துக் கொள்ள தலையணை ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார் அவர். ‘பையனை அப்படியே தூங்க வச்சிட்டா போறீங்க ஐயனும் அம்மாளும்?’ என்றான். ‘அவன் விடியக்காத்தாலதான் முழிப்பானுங்க! கதவை சும்மாதான் சாத்தி தாழ்பாள் போட்டுட்டு போறமுங்க! என்ன அஞ்சாறு பாட்டு பார்த்துட்டு வந்துருவோம்! நீங்க படுங்க!’ அவர்கள் இருவரும் போன பிறகு இவன் எழுந்து தென் பக்கமாய் போய் உச்சா அடித்தான். பின்பாக வந்து திண்ணையில் சாய்ந்தான். தலையணை வாசம் பயங்கரமாய் இருக்கவே அதை கால்களுக்கு எடுத்துப் போட்டுக் கொண்டான். ‘ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா.. நான் பார்த்தா பார்க்காமலே போறியா?’ பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்க முயற்சித்தான். ஒரு நான்கைந்து பாடல்களை கேட்டிருப்பான். எப்போது தூங்கினானோ!

நடு இரவிருக்குமா? என்றும் தெரியவில்லை இவனுக்கு. மசமசப்பாய் கண் விழித்தவன் காதில் எந்தப் பாடலும் கேட்கவில்லை. வெளியே எரிந்து கொண்டிருந்த டியூப் லைட் அணைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பொத் பொத்தென சப்தம் கேட்டது. என்ன கருமமாய் இருக்குதே! சிலருக்கு அஞ்சாறு மணி நேரம் கழிச்சிதான் போதை ஏறுமோ? அந்தப் பெண் ‘கூஊ கூஊ வென அழும் சப்தம் தெளிவாய்க் கேட்டது இவனுக்கு.

‘போடி! வெளிய திண்ணையிலதான் படுத்திருக்கான்! போ போய் அவன் கூட படு! அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆவலியாம்! போ! போயி படுத்துட்டு காசு வச்சிருப்பான். அஞ்சாயிரம் வாங்குடி!” அவர்தான் சொல்லிவிட்டு அவளை அடித்தார் போல! ‘கூஊஊஊ கூஊஊஊ!’ என அந்தப் பெண் சப்தமாய் அழுதது.

இவனுக்கு அந்தப்பெண்ணின் உடல்வாகு ஒரு நிமிடம் ஞாபகத்திற்கு வந்தது. ஒல்லிப்பிச்சானாக இருந்தாலும் மார்பகங்கள் பெரியதாக இருந்தன போலத்தான் இருந்தது. இவனது உடலுக்குள்ளும் முறுக்கேறியது. ‘போடீன்னா எருமை கணக்கா நின்னுட்டே இருக்கா பாரு கழுதெ முண்டெ’ மீண்டும் தொப்பென சப்தம் வீட்டினுள் கேட்டது.

வெங்கடாசலம் விருக்கென எழுந்தான். அப்படியே வண்டியை நோக்கி இருளில் நடந்தான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து சைடு லாக்கை வண்டியிலிருந்து ரிலீஸ் செய்து உருட்டிக் கொண்டே அந்த வீட்டை விட்டு சந்தில் கிளம்பினான். கொஞ்சம் தூரம் வந்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்து வர்ரென முறுக்கினான். கருநாய் ஒன்று வண்டியைத் துரத்திக் கொண்டு குரைத்தபடி கூடவே கொஞ்சம் தூரம் வந்தது. இவனுக்கு நாய் துரத்தினதாலேயே இருதயம் திடுக் திடுக்கென அடித்துக் கொண்டது. பாளையத்தை விட்டு வெளிவந்தவன் திங்களூர் வருகையில் டீக்கடை திறந்திருப்பதைக் கவனித்துப் போய் நிறுத்தினான். செல்போனை எடுத்து மணி என்ன என்று பார்த்தான். ‘டீங்களாண்ணா?’ என்று கேட்ட மாஸ்டருக்கு ‘ஆமாம்’ என்று சொன்னான். மணி ஐந்தே கால்.

புது டீத்தூளில் போட்ட முதல் டீயை கண்ணாடி டம்ளரில் வாங்கியவன் முதல் உறிஞ்சை உறிஞ்சினான். ‘டீ செமைங்கண்ணா!’ என்று மாஸ்ட்டரைப் பார்த்து சொல்ல நினைத்தான். சைக்கிளில் வந்தவன் ஒருவன் தினத்தந்தி பேப்பரை சாலையில் நின்று கொண்டே நீட்ட, மாஸ்டர் படியிறங்கிப் போய் வாங்கினார்.

வெங்கடாசலத்துக்கு அவர் பெயர் என்னவென்று கேட்கக்கூட முடியாமல் வந்து விட்டது மட்டுமே துக்கமாயிருந்தது.

பிற படைப்புகள்

Leave a Comment