ஐந்து குறுங்கதைகள்
சுரேஷ் ப்ரதீப்

by olaichuvadi

1

மேசையைப் பூட்டி எழுந்தபோது எல்லா சனிக்கிழமைகளிலும் மறுநாள் அலுவலகம் விடுமுறை என்பதால் தோன்றும் மென்குதூகலம் மனதில் பரவியது. வாசலுக்கு வந்தபோது கான்கிரீட் கட்டடம் அளித்திருந்த தட்பவெட்பம் சற்று மாறி தோலில் குளிர்ச்சியை உணர்ந்தபோது குதூகலம் சற்று கூடுவதாக உணர்ந்தேன். கூடிய மகிழ்வினை யாரும் கண்காணிக்கிறார்களா என்ற எண்ணம் மனதில் எழுந்த கணமே அலைபேசி ஒலித்தது. திரையைப் பார்ப்பதற்கு முன்னே யாராக இருக்கும் என்ற கற்பனைக்குச் சென்றேன். அறிந்த எண்ணாகவே இருக்கும் என பேண்ட் பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்தபோது அது +91 என்று தொடங்கும் எண்ணைக்காட்டி எரிச்சலூட்டியது. அலைபேசியில் பதியாதவர்கள் அழைத்தால் அழைப்பினை ஏற்பதில் எனக்கிருந்த தயக்கம் அலைபேசி பயன்படுத்தத் தொடங்கிய இந்த பதினைந்து ஆண்டுகளில் இம்மியும் குறைந்திருக்கவில்லை. இத்தனைக்கும் எதிர்பாராது அழைத்து வேறு குரல்களில் பேசி எரிச்சலூட்டும் நண்பர்களோ கடன்காரர்கள் தொல்லையோ எனக்கு இல்லை. இந்த அழைப்பினை அது துண்டிக்கப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன் ஏற்றேன்.

“ஹலோ… சுரேஷ் நான் சித்திரைவாணன்” என்று மறுமுனையிலொரு குரல் தயங்கியது.

இப்பெயருக்காக மட்டுமே நான் அவரை நினைவில் வைத்திருந்தேன். நான் அங்கம் வகிக்காத தொழிற்சங்க கிளைச் செயலாளர்.

“சொல்லுங்க சார்” என்று சொல்லியபடியே அலுவலகத்தில் இருந்து வெளியேறி விரைவாக நடக்கத் தொடங்கினேன். அங்கு நின்றால் அலுவலகத்தின் உள்ளே சென்று செய்யும்படி ஏதேனும் வேலை விடுவாரோ என்ற பயம் எனக்கு. ஆனால் அவர் குரல் வேலை ஏவும் நிலையில் இல்லை.

“கொஞ்சம் ஜியெச் வரை போக முடியுமா? பையனுக்கு ஏதோ மைனர் ஆக்ஸிடென்ட்டாம். ஒய்ஃப் மட்டும் தனியா இருக்காங்க” என்றார். திருத்துறைப்பூண்டி பொது மருத்துவமனை எங்கிருக்கிறது என்று தெரியாத காரணத்தாலும் எங்கிருந்தாலும் அது தூரமாகவே இருக்கும் என்ற கணிப்பாலும் இன்றும் எட்டரை மணிக்குள் வீடு சேர முடியாது என்ற ஆற்றாமையாலும் எனக்கு எரிச்சல் மூண்டது.

குரலில் ஒரு செயற்கை பதற்றத்துடன் “உடனே போய் பார்க்கிறேன் சார். நீங்க பதற்றப்படாம வாங்க” என்று வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்டிருக்க வாய்ப்பிருப்பவருக்கு ஆறுதல் சொன்னேன். அலுவலகத்தில் யாரிடமும் இருசக்கர வாகனம் கேட்டால் காரணம் கேட்பார்கள் என்பதால் அரசு நூலகத்துக்கு அருகில் மருத்துவமனை இருப்பதாக முன்பு நண்பர்கள் சொல்லி கேட்ட ஞாபகத்தில் நடக்கத் தொடங்கினேன். நூலகத்துக்கு எதிர்ப்புறம் இருந்த முள்ளியாற்றினை கடக்கும் ஒரு குறுகிய பாலத்தைக் காட்டினார்கள். அகலத்தில் மட்டுமல்ல நீளத்திலும் பாலம் குறுகியதே. முள்ளியாறு புழக்கடையில் புழங்கும் பெருச்சாளி போல சத்தமில்லாமல் திருத்துறைப்பூண்டியின் பின்புறத்தில் மெலிந்து போய் ஓடிக்கொண்டிருக்கும். பாலத்தைத் தாண்டும் போது மீண்டும் அலைபேசி ஒலித்தது. சித்திரைவாணனாக இருக்கும் என்றும் அவர் மகன் இறந்துவிட்டதாகவும் நீங்கள் திரும்பி விடலாம் என்று சொல்வார் என்றும் நினைத்தேன். ஜியோவில் இருந்து ஒரு கனிவான கம்ப்யூட்டர் குரல் அழைத்து டாப்அப் செய்யச் சொன்னது.

ஒரு குறுகிய தெருவைக் கடந்தபோது பொது மருத்துவமனை கண்ணில்பட்டது. ரிசப்ஷனில் சித்திரைவாணனின் மகன் பெயரைக் கேட்டு உள்ளே நுழைந்தேன். ஐ.சி.யுவில் இருந்தான். வெளியே அவன் அம்மா புடவையைப் போர்த்தி ஈரம் காய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். ஐ.சி.யுவில் இருந்தவனை எட்டிப்பார்த்தேன். நீளமான உடல் கொண்ட சிறுவன். முதலில் பார்த்தால் எட்டு வயதென யாரும் சொல்லிவிட முடியாது. உடலில் காயங்கள் எதுவுமில்லை. ஆனால் ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டிருந்தார்கள்.

அந்தப்பெண்ணுக்கு என்னை ஏற்கனவே தெரிந்திருக்கும் போல “வாங்க” என்று எழுந்தார்.

“இல்லல்ல உட்காருங்கம்மா,சார் ஃபோன் பண்ணினாரு. இன்னும் ஹாஃபனவர்ல வந்துடுவாரு. ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா உங்களுக்கு” என சரியாக பேச வராமல் திணறிக் கொண்டிருந்தேன்.

“இல்ல சார் ஒன்னும் வேண்டாம். நீங்க உட்காருங்க” என்று அவள் நிதானமாகச் சொன்னதும் இவ்வளவு பதற்றம் காண்பித்திருக்கத் தேவையில்லை எனத் தோன்றியது.

“என்னாச்சு” என்றேன்.

அவர் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஏனோ ‘என் கணவன் எப்படிப்பட்டவன் என்று உனக்குத் தெரியாதா?’ என்ற கேள்வி இருப்பதாகப்பட்டது. சித்திரைவாணன் நேர்மையானவர். குடிப்பழக்கம் கிடையாது. அலுவலகத்தில் எவ்வளவு இசைவாக அனைவரிடமும் நடந்து கொள்கிறாரோ அதே அளவு கண்டிப்புடன் வீட்டில் நடந்து கொள்வார் என்பது அலுவலகத்தில் நிலவும் கூற்று. பையனின் உடலில் காயங்கள் இல்லாதது இந்தப்பெண் இப்படிப் பார்ப்பது சித்திரையின் குரலில் தென்பட்ட தயக்கம் என அனைத்தையும் இணைத்து சித்திரைவாணனின் மகன் விஷம் அருந்தியிருக்கிறான் என்று புரிந்து கொண்ட கணத்தில் அவராகவே “விஷங்குடிக்கிற வயசாத்தம்பி இந்தப் புள்ளைக்கு” என்றார். ஆனால் அவர் குரலில் நம்பிக்கையின்மை தென்படவில்லை.

பதற்றமாக எங்களை நோக்கி ஒரு பெண் ஓடிவந்தாள். பேச்சிலிருந்து சித்திரையின் தங்கையென ஊகித்துக் கொண்டேன். அவள் அழத்தொடங்கினாள்.

“ஏட்டி எதுக்கு இப்படி கொலவ வைக்கிற. அதெல்லாம் அவன் பொழப்புச்சுப்பான்டி. அப்பன் பேசினதுக்கு ரோஷந்தாங்காம வெசத்த குடிக்கிற பயலா பொட்டுன்னு போவான்” என்று சித்திரையின் மனைவி சொன்னபோது அக்குரலின் தன்னம்பிக்கை என்னை அச்சுறுத்தியது.

சித்திரை தயங்கித் தயங்கி வந்தார். அவரைப் பார்த்து அவர் மனைவி துளியும் கோபப்படவே இல்லை. மாறாக மகனின் செயல் மீதான பெருமிதமே முகத்தில் தெரிந்தது. சித்திரை அவர் கோபம் கொள்வதற்கான முகாந்திரங்களை உருவாக்கிக் கொடுத்தபின்னும் சித்திரையை அவர் பொருட்படுத்தவில்லை. மருத்துவர் சித்திரையையும் அவர் மனைவியையும் ஜ.சி.யுவுக்குள் அழைத்தார். இவர்கள் ஏதோ கேள்வி கேட்க பையன் நான்கு விரலை உயர்த்தி பதில் சொல்வது கண்ணாடியின் வழியே தெரிந்தது. அவன் படிக்கும் வகுப்பாக இருக்கும் என எண்ணிக் கொண்டேன். சித்திரை வெளியே வந்தபோது கொஞ்சம் நிதானம் அடைந்திருந்தார்.

“ரொம்ப நன்றி சுரேஷ். உங்களத்தவிர யாரையும் நம்பி இதெல்லாம் சொல்ல முடியாது” என்று பையன் நன்றாக இருக்கிறான் என்ற உற்சாகத்தில் எனக்கு திரும்பத் திரும்ப நன்றி சொன்னார்.

மறுநாள் காலை சைலண்ட் மோடில் போட்டிருந்த அலைபேசியின் திரைக்கு ஒளியூட்டியபோது வந்திருந்ந வாட்ஸ்அப் செய்திகளில் இரண்டு செய்திகள் என்னை திகைக்க வைத்தன. ஒன்று சித்திரைவாணனின் மகனுடைய இறப்புக்கு தொழிற்சங்கம் தெரிவித்திருந்த அஞ்சலி. மற்றொரு செய்தி அஞ்சலிக்குறிப்பு வந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டிருந்தது. சித்திரைவாணன் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக் கழிவறையில் தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டாவது செய்தி வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் எனக்கு +91 என்று தொடங்கும் வேறொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. நான் அந்த எண்ணுக்கு திரும்ப அழைக்கவில்லை. அது யாருடைய எண் என்று அறிந்துகொள்ள இன்றுவரை முயலவில்லை. ஆனால் அறியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் என் பதற்றம் முன்பைவிட பன்மடங்காகக் கூடிவிடுகிறது.

2

கட்டியம்

ஒரு பெரியவர் திக்கித் திணறிச் சொன்ன ஒரு கதையை அல்லது சம்பவத்தை எழுதித்தரும்படி கேட்டு ஜஸ்டினா எனக்கு அந்த ஒலிப்பதிவை அனுப்பி இருக்காவிடில் இதனை இப்போது எழுதிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தஞ்சைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அந்தச் செய்தியை பதிவு செய்திருக்கிறாள். ஆண்டு முழுவதும் செலவழிப்பதற்கான தொகையை மூன்று மாதங்களில் சம்பாதித்து விடுவதாலும் முப்பத்திநான்கு வயதிலும் குடும்பம் குழந்தை போன்ற விஷயங்களில் ஆர்வம் தொற்றாததாலும் மானுடவியல் ஆய்வாளர்களுடன் சேர்ந்து கொண்டு கதை சேர்ப்பதையும் அவற்றை ஆய்வதையும் ஒரு தொழிலாகக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறாள் ஜஸ்டினா. பால்ய நண்பன் என்பதாலும் சரளமாக தமிழ் எழுதத் தெரிந்தவன் என்பதாலும் என்னிடம் அவ்வப்போது இப்படி சில்லறை வேலைகளைக் கொடுத்து கனத்த தொகையையும் “தப்பா எடுத்துக்காத சுரேஷ்” என்ற குற்றவுணர்வையும் அனுப்பி வைப்பாள்.

Inference

தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏறத்தாழ ஆறு கிராமங்களில் இந்தக் கதையின் வெவ்வேறு வடிவங்களை மக்கள் சொல்கிறார்கள் என்றாலும் முதிர்ந்தவரான கோவிந்தராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் தந்தை காத்தான் குறித்துச் சொல்லும் பிற விஷயங்களுடன் ஒப்பிட்டு அவர் சொல்லும் இத்தருணமும் உண்மையானதாகவே இருக்கும் என்ற கசப்பான முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. மேலும் இதில் இறந்த ஓர் இந்தியனின் மாண்பு சம்மந்தப்பட்டிருப்பதால் ரகசியம் காக்கப்படும் என்ற எழுத்துப்பூர்வ உறுதியை அளிக்கும் அமைப்புகளிடம் மட்டுமே நாங்கள் சேகரித்த ஆதாரங்களைக் கொடுக்க இயலும்.

ஜஸ்டினா சேவியர்

கதை

மாவட்ட ஆட்சியர் வந்து சென்ற பிறகு சார் ஆட்சியரான மெக்கன்சி பரபரப்படைந்திருந்தார். கோபத்தில் அவர் ஓங்கி அறைந்திருந்த அவரது படுக்கையை வெகுநாட்களாக அலங்கரித்த சாரா அன்று இறந்து போயிருந்தாள். கன்னித்திரை கிழித்து உறவுகொண்ட முதல்பெண் என்பதால் மெக்கன்சிக்கு சாராவின் மீது தனிப்பட்ட பிரியம் இருந்தது. ஆனால் கட்டுப்படுத்தமுடியாத கோபத்தில் அவளுக்குக் கொடுத்த ஒரு அறை அவளது பின்மண்டையில் அடிபடச் செய்து கொன்றுவிடும் என்று மெக்கன்சி நினைத்திருக்கவில்லை. அப்படி சில பெண்கள் முன்னரே இறந்ததும் அவர்களது குடும்பங்கள் சரிகட்டப்பட்டதும் இயல்புதான் என்றாலும் துர்நாற்றம் வெளிக்கசிந்துவிடாதபடிக்கு ஒரு நாள் முழுக்க சாராவின் பிரேதத்தை அறையிலேயே வைத்திருந்த மெக்கன்சியின் செய்கை வீட்டு வேலைக்காரர்களுக்கு விசித்திரமாகப்பட்டது. ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்தபோது அவள் பிரேதத்துக்கு அவர் முத்தமிடுவதை அவருடைய சமையலாளும் காத்தானிடம் தான் செய்யவிருப்பதை சற்று நேரத்தில் சொல்ல இருப்பவனுமான பீமன் கண்டான். அன்றுமாலை விருந்துக்காக வந்திருந்த ஆட்சியரை திருப்பி அனுப்பிய பிறகு மாடிக்குச் சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் பீமனை மாடிக்கு வர மெக்கன்சி கட்டளையிட்டார்.

பீமனை மெக்கன்சி அறைக்குள் அழைத்தபோது அவர் முகம் அச்சுறுத்தும் வகையில் தெளிவாக இருந்தது. பொதுவாக படுக்கை அறைக்கு வெளியே நிறுத்தி தன் ஏவளாலை அனுப்பிவிடும் மெக்கன்சி அன்று பீமனை உள்ளே அழைத்தார். சற்று நேரத்துக்கெல்லாம் பீமன் சோர்ந்த முகத்துடன் சமையலறைக்கு வந்தான். அங்கு கைவேலைகளுக்காக அவன் வைத்திருந்த காத்தானிடம் ஒரு துணிப்பொதியை கொடுத்தான். அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இறைச்சி என நினைத்துக் கொண்டிருந்தவனிடம் அந்தப் பொதியில் இருப்பது சாராவின் அறிந்த முலைகள் என்றான். காத்தான் பொதியை கைநடுங்கி கீழே போட்டுவிட்டான்.

பீமன் அவனை அழைத்து நிதானமாகச் சொன்னான்.

“இவனுக்கு இந்த ருசி மட்டுந்தான் பழகலன்னு இருந்தேன். இதையும் பழகிட்டான்னா தெனம் ஒருத்திய புடிச்சு அரிய வேண்டியிருக்கும்” என்று பீமன் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டு இளைஞனாக இருந்த காத்தான் “அவனக் கொன்னுபுடுவோம்” என இறைச்சி அறியும் கத்தியை இறுக்கிப் பிடித்தான். அவன் அறியாமையை எண்ணி ஏளனமாகச் சிரித்தபடி “அட வெண்ணமொவன நீ அவனக் குத்துனா உன் வம்சத்துல ஒருத்தனையும் நிம்மதியா இருக்கவுடாதுடா அவனோட சட்டதிட்டம். பொழுதனைக்கும் பொம்பள சூத்த மோந்துகிட்டுத் திரியுற இந்த வெள்ள ஓணானெல்லாம் அறுத்துப்போட விதியில்லாமயா நாம இவனுக்கு வளைஞ்சு நிக்கிறோம். அவங் கையில இருக்கிற துப்பாக்கியும் கொட்டை கொட்டையா எழுதி வச்சிருக்கிற பேப்பருக்கும் பயந்துதாண்டா அடங்கிக் கெடக்கிறம். புரிஞ்சிக்க” என்று அவனை சமாதானப்படுத்திவிட்டு தன் திட்டத்தை பீமன் சொன்னான்.

ஆட்டு ஈரல் பதத்திலான அந்த இளமுலைகளை அறிந்து ரத்தம் வடியச்செய்து ஈரல் பிரட்டல் போலவே பீமன் சமைத்துக் கொண்டான். துரையின் முன்சென்று நிற்கும்போது துணிந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முலைக்கறியை தான் உண்டு பார்த்ததாகவும் அதில் கடுமையான உப்புச்சுவை இருப்பதாகவும் சொன்னான். உப்பின் சுவையுடையதாக சாராவின் முலைகள் இருந்ததாக அவன் சொன்னதைக் கேட்டதும் உப்பை சற்று அதிகமாக சேர்த்து உண்டாலும் மயங்கியச்சரிய நேரும் தன் உடலுக்கு இந்த இறைச்சி மரணத்தையே கொடுக்கலாம் என்ற அச்சமே மெக்கன்சிக்கு முதலில் எழுந்தது. பின்னர் தன் காதலியின் முலையைச் சுவைத்தவன் மீதான கரிப்பாக அந்த மரணபயம் மாறியது. சில அடிகளிலேயே உடலும் மனமும் பலவீனப்பட்டு நின்றிருந்த பீமன் செத்துப் போனான்.

குறிப்புகள்:

1.17.07.1919 அன்று தன்னுடைய தாய் தகப்பன் அற்ற பேத்தி சாரா தொலைந்து போனதாக வின்சென்ட் என்ற ஒரு கிழவர் தஞ்சை காவல் நிலையமொன்றில் புகார் செய்து சாரா மெக்கன்சியின் வீட்டில் சமையல் வேலையில் இருந்த பீமன் என்ற வேலைக்காரனுடன் ஓடிவிட்டாள் என்று தெரிந்த பிறகு அப்புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

2.கோவிந்தராஜனின் தந்தையின் சொந்த ஊரான வெள்ளப்படி என்ற கிராமத்தில் பரங்கிப்பிஞ்சுகளை இரண்டாக அறிந்து மேல்தோல் நீக்கி அதிக உப்பிட்டு சித்திரை மாத அமாவாசை தினத்தில் குலதெய்வத்துக்குப் படைத்து பச்சையாக உண்டு ஓங்கித்துப்பும் வழக்கம் நிலவுகிறது.

3.இந்த ஆய்வுக்குப் பிறகு ஜஸ்டினா மானுடவியல் ஆய்வுகளில் ஆர்வமிழந்துவிட்டாள். இந்த ஆய்வு சம்மந்தப்பட்ட குறிப்புகளையும் வெளியிட வேண்டாம் என்று அவள் கேட்டுக்கொண்டதால் இதை ஒரு கதையாக்கிவிடலாம் என்ற எண்ணம் சுரேஷுக்கு இருக்கிறது.

3

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. அப்போதெல்லாம் கதைகளில் மனைவியருக்கு கணவன் மீதான பிரியத்தை படிக்க நேரும்போது உள்மனதை சிவப்புப் புள்ளிகள் முகிழ்த்த சிகரெட்டால் யாரோ சுடுவது போலிருக்கும். ‘இதெல்லாம் வெறும் கற்பனை. எழுத்தாளனின் பகற்கனவில் உதித்தாக இருக்கும்’ என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றால் ‘நீ நம்பி வாழும் இலக்கியமும் வெறும் பகற்கனவு என்கிறாயா சுரேஷ்?’ என்று ஒரு கனிவான குரல் உள்ளிருந்து கேட்டுக் கொல்லும். இரண்டுக்கும் சமானமான மனமொன்று நடுவில் முளைத்து ‘இது கனவுதான். ஆனால் கற்பனைகள் நிமித்தங்கள் இல்லாமல் அந்தரத்தில் முளைப்பதில்லை. ஒருவனால் அந்த பிரியத்தை எழுத முடிகிறதென்றால் அப்படியொன்று ஏதோவொரு வடிவத்தில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்’ என்று சமாதானப்படுத்தும்.

குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகம் எழுதப்படும் கதைகளாகத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். ஆண்களை விட பாலியல் வன்முறைகளை பெண்கள் ரசித்து எழுதுவதாகப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாகச் சொல்லி நண்பன் ஒருவன் கொடுத்த மொழிபெயர்ப்பு கதையை ஒரு பெண் எழுதியது என்று என்னால் நம்ப இயலவில்லை என்று சொன்னபோது “நீ பிறந்த பட்டிக்காடு உன்னை அப்படித்தான் யோசிக்க வைக்கும்” என்றான். அக்கதையை அவன் என்னிடம் கொடுத்தபோது உடனிருந்த அவன் மனைவி “தானும் அக்கதையை படித்ததாகவும் தனக்கு அது உவப்பூட்டவில்லை” என்றும் சொல்லி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிருந்தாள்.

“அந்தக்கதையை மொழிபெயர்த்தது ஆணாக இருக்கும்” என்றேன்.

என் அறிவின்மையை ரசித்தபடி “அதுவும் பெண்தான்” என்றான்.

கதை இதுதான். ஒருநாள் கணவன் தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து வருகிறான். நண்பன் மறுநாள் வெளியூர் செல்ல வேண்டியவன். நண்பன் கூச்ச சுபாவி என்றும் ஹோட்டலில் அறை எடுக்கச் சென்றவனை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் மனைவியிடம் கணவன் சொல்கிறான். அவள் பேரழகி என ஒருமுறை நிமிர்ந்து பார்த்ததுமே நண்பனுக்குத் தெரிந்து விடுகிறது. தலைகவிழ்ந்து கொள்கிறான். அன்று மாலை முதலே கணவனுடன் உறவு கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவளில் நிரம்பியிருக்கிறது. அன்று மாலை வீட்டுக்கு வந்த தோழி அவள் வாழ்க்கை மேற்கொள்ளச் சென்ற குடும்பம் அவளுக்கு ஓயாமல் வேலை வைப்பதையும் கணவனின் தம்பிகள் இருவரும் அவ்வப்போது அவளைத் தொடுவதும் இடுப்பு முறியும்படி வேலை பார்த்து உறக்கத்துக்குள் புக முயலும்போது கணவன் மேலும் இடுப்பை முறிக்க முயல்வதையும் சொல்லிப் புலம்பப் புலம்ப மணமாகி ஆறு மாதங்களுக்கு உள்ளாக தனியாக தன்னை அழைத்து வந்த கணவனையும் வீட்டு வேலைகளை தன்னுடன் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் அவனது பாங்கினையும் ‘இன்னிக்கு வேணாமே’ என்று சற்று மறுத்தாலும் சிரித்துக்கொண்டே நெற்றியில் முத்தமிட்டு திரும்பிப்படுத்து உடனே உறங்கியும் விடும் அவன் நாகரிகத்தையும் எண்ணி இவளுக்கு உடல் சிலிர்த்துக் கிளர்ந்தது.

நண்பன் வந்திருப்பதால் கணவனுடன் கூடியிருக்க முடியாததை எண்ணி மனதில் மெல்லிய துக்கம் அவளுக்குள் பரவியது. அந்த துக்கத்தை உணர்ந்தவன் போல கணவன் அறைக்கதவை தட்டினான்.

“அவன் தூங்கிட்டான்” என்று சொன்னதுமே அவள் முகம் மெல்லச் சிவந்தது. தொடக்க முஸ்தீபுகள் முடிந்து உள்ளாடையின் பட்டன்களை கழட்ட முனையும்போது நண்பன் கதவைத் தட்டினான். அவள் அடிவயிறு பதறியது. புடவையை அள்ளிச் சுற்றிக் கொண்டாள். கணவன் எரிச்சலுடன் கதவைத் திறக்கச் சென்றான். நண்பனின் முகம் துயர் கொண்டது போலிருந்தது.

“மாப்ள என்னைய மன்னிச்சிடுடா” என்று சொல்லியபோது அவன் ஏறக்குறைய அழுதிருந்தான். குழப்பம் நீங்காதவனாக கணவன் நிற்கிறான். எதிர்பாராத கணத்தில் அவன் கைகளை பின்பக்கமாக முறுக்கி ஏற்கனவே எடுத்து வைத்திருந்த நைலான் கயிற்றால் கைகளைக் கட்டுகிறான். அவனை அப்படியே இழுத்துச் சென்று கதவுக்கு வெளியே போட்டு கதவை தாழிடுகிறான். பின்னர் எப்படியாவது தப்பிவிட்டான் என்றால் என்ன செய்வது என்று பயம் தோன்ற கதவைத் திறந்து அவனை இழுத்து வந்து அறையில் இருந்த ஒரு நாற்காலியில் கட்டுகிறான்.

(இந்த இடத்தை வாசித்தபோது எனக்கு ஒரு மலையாளப்படம் நினைவுக்கு வந்தது)

நண்பனின் முகத்தில் துயரின் சாயை மாறவே இல்லை. மனைவி கல்லாய்ச் சமைந்து போய் நிற்கிறாள். கணவன் கட்டப்பட்ட நாற்காலியில் இருந்து திமிறி அழுகிறான். அவன் வாய் துணி வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது.

அவன் “சாரி சிஸ்டர்” என்றபடியே அவளை கையெடுத்து வணங்கியபடி நெருங்கினாலும் அவனுடைய ஒவ்வொரு தொடுகையும் முரண்டு பிடித்தால் அவள் உடல் கூடுதல் வலியை அனுபவிக்க நேரலாம் என்று சமிக்ஞை கொடுப்பதாகவே இருக்கின்றன.

கணவனின் கண் முன்னே அவளுடன் ஈடுபடுவதற்கு முன் “நண்பா நீ கண்ணை மூடிக்கோயேண்டா” என்று கணவனிடம் சொன்னபோது நண்பன் அழுதேவிட்டான். அவளுடன் ஈடுபட்ட மொத்த நேரத்தில் இருபது சதவீதம் மட்டுமே அவன் முகத்தில் திருப்தி பரவியது. அந்த இருபது சதவீதத்தை நூறு சதவீதமாகக் கொண்டால் அதில் பத்து சதவீத நேரத்தில் மனைவியின் முகத்திலும் திருப்தி பரவியது. அந்த பத்து சதவீதத்தை நூறு சதவீதமாகக் கொண்டால் அதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான நேரத்தில் ஒருமுறை மனைவியின் உதட்டில் நண்பன் முத்தமிட்டான். அது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட முத்தமாக இருந்தது. அந்த முத்த கணத்தில் மட்டும் மனைவிக்கு கணவன் அறையில் இருக்கும் பிரக்ஞை இல்லாதிருந்தது. புணர்வுக்குப் பிறகு மனைவி அழவில்லை. ஆனால் நண்பன் அதிகமாக அழுதான். கட்டப்பட்டிருந்த கணவனுக்கு அருகில் இன்னொரு நாற்காலியை எடுத்துப் போட்டு மனைவியை அதில் அமரச் செய்தான். அதற்குள் அவள் புடவையை உடுத்தி முடித்திருந்தாள். பிரம்மை பிடித்தவள் போல நாற்காலியில் அமர்ந்திருந்தாள். இருவர் காலிலும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். நமஸ்கரிக்கும் போது கூட அவன் உடல் குலுங்கிக்கொண்டே இருந்தது. அதன்பிறகு தான் தங்கியிருந்த அறைக்குச் சென்று கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுகிறான்.

சம்பவ தினத்துக்குப் பிறகு கணவனுக்கும் மனைவிக்கும் அந்நியோன்யம் அதிகமாகிவிடுகிறது. ஒவ்வொரு முறையும் மிக உணர்ச்சிகரமாக படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் இருவரின் பற்றுதலுக்கும் யாருமே இல்லை என்பது போல அவ்வளவு நெருக்கம். சம்பவம் நடந்த ஒன்றரை ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு பையன் பிறக்கிறான். அப்பாவைவிட அம்மாவிடம் அதிக பற்றுதலோடு மகன் வளர்கிறான்.

இதன்பிறகு கதையில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு என்று சினிமாவில் வருவது போன்ற ஒரு சொற்றொடர் வருகிறது.

அந்த இரவுக்குப் பிறகு அந்த நண்பனை கணவன் பார்க்கவேயில்லை. அவன் முகவரி மனைவிக்கு கிடைக்கிறது. தற்செயல் போல அமைக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட பயணத்தை கணவனுடனும் மகனுடனும் மேற்கொள்கிறாள். மகனிடம் ஏற்கனவே அனைத்தையும் சொல்லி இருக்கிறாள். இவர்கள் நண்பனின் வீட்டுக்கதவைத் தட்டியபோது இரவு ஒன்பது மணி. நண்பன் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு மூவரையும் உள்ளே அழைத்தான். அவன் கண்கள் கணவனையும் மனைவியையும் கெஞ்சிக் கொண்டிருந்தன. நண்பனின் மனைவி உணவு பரிமாறினாள். அவர்கள் உறங்குவதற்கு அறையைக் காட்டினாள்.

நள்ளிரவில் நண்பனும் அவன் மனைவியும் மகளும் உறங்கும் அறைக்கதவு தட்டப்பட்டது. மகன் நின்றிருந்தான். அவன் பின்னே அவன் தாயும் கைகள் கட்டப்பட்ட நிலையில் தகப்பனும் நின்றனர். நண்பனை ஒரே அறையில் கீழே தள்ளி அவன் கைகளை உடலோடு சேர்த்துப் பிணைத்து தரையில் உருட்டினான். அவன் தகப்பனும் அவ்வாறே கட்டி உருட்டப்பட்டான். பின்னர் நண்பனின் மனைவியையும் அவ்வாறு கட்டி உருட்டிய பிறகு அலறித்துடித்த மகளிடம் மூர்க்கமாக ஈடுபட்டான். வாயில் துணி அதக்கி இருக்க மூவரும் மனைவியின் காலை நோக்கி அழுத கண்களுடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். அவள் சலனமே இல்லாமல் மகன் இயங்குவதைப் பார்த்திருந்தாள். முடிந்ததும் மனைவி நண்பனின் மனைவியின் கட்டை அவிழ்த்து அக்கயிற்றால் உடை உடுத்தி முடித்திருந்த மகளைக் கட்டினாள். மகன் நண்பனின் மனைவியை கட்டிலுக்கு இழுத்துச் சென்றான். மகள் அளவுக்கு அவள் மூர்க்கம் காண்பிக்கவில்லை என்றாலும் இளமையானவனின் வேகத்தை முதியவளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது அவள் முகத்தின் வலிச்சுழிப்பில் தெரிந்தது. ஆனால் மகள் அளவு முதியவள் முகத்தில் அதிர்ச்சி இல்லை.

மனைவி இப்போது நண்பனைப் பார்த்து நிதானமாகச் சொன்னாள்.

“நானும் தொடக்கத்தில் உன்னால் என் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை தற்செயல் என்றே எண்ணியிருந்தேன். அந்த இரவில் நீயும் என் கணவனும் இணைந்து முடிவெடுத்தே அதைச் செய்தீர்கள் என்று பின்னர் அவனுடைய செயல்பாடுகளில் இருந்து தெரிந்து கொண்டேன். அவனுக்கு என்னுடன் இணைவதில் உணர்ச்சிகள் இல்லாதிருந்தது. இதுபோன்ற விபத்தினை நிகழ்த்தி எங்கள் உறவை உணர்ச்சிகரமானதாக மாற்றிக் கொண்டான். அதற்கான தண்டனை இது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று புரிகிறதா?” என்று மனைவி சொன்னதை வாசித்தபோது எனக்கு புரையேறிவிட்டது. எழுதியது பெண்ணாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என எண்ணிக் கொண்டேன். இறுதிவரியில் அக்கதையை எழுதியது ஆணோ பெண்ணோ அந்த எழுத்தாளருக்குள் கலைஞனின் மெல்லிய சாயல் தென்பட்டு மறைந்தது.

மகன் வெறுப்பும் கோபமுமாக அறையைவிட்டு வெளியேறுகிறான். மனைவி மெல்ல நடந்து நண்பனின் உதட்டில் தன் உதட்டினைப் பொறுத்தி எடுக்கிறாள் என்று கதை முடிகிறது.

அதை நண்பனிடம் சொன்னேன். அதைச்சொன்னபோது அவனுடைய இரண்டு வயது மகள் அவன் மடியில் எறி அமர்ந்து எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். நண்பன் புன்னகைத்தான்.

“கைப்பான சிந்தனை கொண்டவர்கள் தான் கைப்பான கதைகள் எழுத முடியும் என்று எண்ணுவது முட்டாள்தனம் நண்பா” என்றான். நான் சத்தமாக சிரிக்கத் தொடங்கினேன். அவன் மகளும் சிரிக்கத் தொடங்கினாள். அதன்பிறகு மனைவியரின் அன்பு என்னை துன்புறுத்தவில்லை.

4

பிரண்டைக் கொடிகள் பரவிக்கிடந்த வேலியை ஒட்டிய உடைந்த மண்குதிரையைக் கண்டதும் முத்தம்மா ஆத்தா “இது வரைக்கும் கோவிலு இருந்துச்சுய்யா” என்று சொன்னது நினைவுக்கு வர அஸ்வத்தின் கைகளை மெல்லப்பற்றியபடி முத்தம்மா ஆத்தாவின் மன இடையீட்டுடன் வேலியில் இருந்து நூறு அடிகள் தள்ளித் தொடங்கும் எங்கள் குலதெய்வமான சேவுராயரின் கோவிலுக்குள் நுழைந்தபோது அஸ்வத்துக்கு மொட்டை அடித்து காது குத்துவதற்காக கூட்டம் திரண்டிருந்ததென்றாலும் ஆசாரி வரவில்லை என்பதால் ஆளுக்கொரு வேலைகளில் மூழ்கியிருப்பதைப் பார்த்தபடி அஸ்வத்தின் கைகளை பிடித்துக் கொண்டே புதிதாக எழுப்பப்பட்டிருந்த சேவுராயர் சன்னிதியின் விசாலமான மண்டபத்தில் அமர்ந்த பின்னும் கூட முத்தம்மா ஆத்தாவின் மன இடையீடு குறைந்தபாடில்லாததால் என்ன சொல்ல வருகிறாள் என கேட்கத் தொடங்கியபோது அவள் முன்பொரு காலத்தில் பிராமணனே சேவுராயனுக்கு பூசை செய்ததையும் அவன் ஒருநாள் மகனையும் உடன் அழைத்து வந்திருந்ததையும் வீட்டுக்கு புறப்படும் அவசரத்தில் மகன் பிரகாரத்தில் இருந்தது தெரியாமலேயே கதவடைத்து நெடுந்தூரம் வந்தபிறகே மகனை கோவிலுக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வர திரும்பி நடந்ததையும் மகனும் சேவுராயனும் கோவிலுக்குள் பேசி விளையாடும் சத்தம் கேட்டு பயந்துபோய் மகனை வெளியே அனுப்புமாறு முறையிட்டதையும் பிராமணன் பதறிப்போய் மீண்டும் மீண்டும் கதவை அறைந்ததையும் சேவுராயர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து வழக்கமான உக்கிரம் வெளிப்பட மகன்தானே வேண்டும் உனக்கு என்றபடி இரண்டாகக் கிழித்து அந்த பிராமண பாலகனை வெளியே எறிந்ததையும் திகைத்து நின்ற பிராமணன் கிழிந்து துடிக்கும் மகனின் துண்டுடலைக் கண்டழுது “இனி உனக்கு நீசனே பூசை வைப்பான்” என்று சொல்லி சேவுராயரை சபித்துச் சென்றதையும் அதன்பிறகு பள்ளர்களான நம் குடும்பத்துக்கு பூசை வைக்கும் உரிமை வந்தது என்று அவள் பலமுறை சொன்ன கதையை நினைவு மீட்டிக்கொண்டிருந்த போதுதான் அஸ்வத் என்னருகில் இருந்து மெல்லக் கழன்று சென்றிருப்பதை கவனித்துப் பதறிக் கண்களை சுழற்றியபோது என் மனதை என்னாலேயே நம்ப முடியாதபடி அஸ்வத் ஓட்டமும் தவ்வலுமாக சேவுராயர் சன்னிதியை நோக்கி ஓடிக்கொண்டிருக்க எழ முயன்ற என் கால்கள் துவண்டு விழ சன்னிதிக்குள் நுழைபவனை தடுக்கும் சக்தியோ பிறரை அழைக்கும் சக்தியோ அற்றவனாக அவனை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் உள்நுழைந்தவுடன் சன்னிதியின் கனத்த இரும்புக்கதவு அறைந்து சாத்திக்கொள்ள “உனக்கு நீசனும் பூசை வைக்கமாட்டான்” என்று மயங்கி விழும் முன் நான் சொன்னதாக நான் எழுந்தபோது அழுதுகொண்டே காயத்ரி சொல்லியதைக் கேட்டபோது அஸ்வத் சன்னிதி வாசலில் அமர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த கணத்துக்குப் பிறகு அஸ்வத்தின் மீதான இயல்பான அன்பு எனக்கு இல்லாமலானது.

5

“எனக்கு கெடுதின்னா மட்டும் எல்லாம் சரியா நடக்குமே. இந்த கேண முண்டைய இன்னைக்கு யாரு சாவ சொன்னது. நா ஜெய்ஹனுமான் பாத்தே ஆவணும்” என பிரகாஷ் முத்தம்மா கிழவி செத்தவன்று தாத்தா வீட்டின் பெரிய சாலிடர் டிவியில் ஜெய்ஹனுமான் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று பயந்து போய் கத்திக் கொண்டிருந்தான். “முண்ட” என்ற வார்த்தையை பயன்படுத்தியதை அப்பா கேட்டு விட்டாரோ என்றொரு பயம் வேறு மனதில். நல்ல வேளையாக கேட்கவில்லை.

முதல் பகுதி முடிந்து விளம்பரம் போடுவதற்கு முன் சீதையை மீட்டு வருவதாக அனுமன் சபதம் எடுத்துக் கொண்டிருந்தார். இவன் உணர்வுகள் முறுக்கேறி பார்த்துக் கொண்டிருந்த போது வெளியே ஒப்பாரி சத்தம் வலுத்தது. எழவு விழுந்திருப்பதால் யாரும் சாமி வூட்டுப் பக்கம் வரமாட்டார்கள். நல்லவேளையாக சாமி வீட்டில்தான் டிவியும் இருந்தது. சாமி வீட்டுக்கு வெளியேதான் தாத்தா எப்போதும் அமர்ந்து இருப்பார். இன்று அவருடைய அம்மா இறந்துவிட்டதால் எழுந்து சென்றுவிட்டார். அந்த அறையில் தனியே அமர்ந்திருப்பது திகிலூட்டக்கூடியதாக மாறியது. விளம்பரம் போட்ட போதுதான் அந்த திகிலைத் தெளிவாக உணர முடிந்தது. தினம் மெழுகப்படும் அந்த அறையில் எப்போதும் ஓர் ஈர உணர்வும் சாணி மணமும் எஞ்சியிருக்கும். அறை வாசலில் அமர்ந்துதான் படம் பார்ப்பான். ஆனால் எழவு வீடு என்பதால் யாரும் தவறாக நினைப்பார்களே என்று அம்மா உள்ளே விட்டுச் சென்றிருந்தாள். சிறிய அறை. சுவரின் ஒரு மூலையில் தாத்தாவின் அப்பாவுடைய படம் தொங்கியது. கிழவருக்கு பல் போன பின் எடுக்கப்பட்ட படம் அது. அதற்கு கீழாகவே அவர் நடந்த ஏதோவொரு கலவரத்தில் யார் கையையோ வெட்டியதாகச் சொல்லப்படும் பெரிய அரிவாள் ரத்தக் கறைகளுடன் அப்படியே இருந்தது. அதன்பிறகு ஆண்டியப்பன் எந்த வம்புக்கும் போனதில்லை என கிழவி சொல்வாள்.

வீரத்தின் அடையாளமாக மற்றவர்கள் பீற்றிக்கொள்ளும் அந்த அரிவாள் அப்போது சொல்ல முடியாத நடுக்கத்தை அளித்தது அவனுக்கு. இந்தப் பக்கம் சாரம்மா கிழவியின் புகைப்படம். அவள் இறக்கும் வரை தன்னைப் படமெடுக்க கிழவி அனுமதிக்கவில்லை. இறந்த பிறகு கண்ணை மூடாமலயே புது உடை அணிவித்து நாற்காலியில் அமர வைத்து எடுக்கப்பட்ட படம் அது. ஆனால் அந்த அளவுக்கு கம்பீரம் வெளிப்படும் வேறு படத்தை பிரகாஷ் அதுவரை பார்த்ததில்லை. அந்தப் படமும் இப்போது பயத்தைத்தான் தந்தது. நல்லவேளையாக கதவு தாழிடப்படவில்லை. கனமான கதவு என்பதால் சாத்தி வைத்தாலே தாழிடப்பட்டது போல பிடித்துக் கொள்ளும். மீண்டும் ஜெய்ஹனுமான் தொடங்கியது. வெளியே ஓடி வந்துவிட்டான்.

அமர்ந்த வாக்கிலேயே நடனமிடுவது போல கிழவிகள் இரண்டு பக்கமும் இருந்தவர்களின் தோளினை கோர்த்துக் கொண்டு ஒப்பாரி வைத்தனர். பெரிய சாவு என்பதால் யாருக்கும் பெரிதாக துக்கமில்லை. அம்மா மட்டும் பகல் துணைக்கு ஆள் இல்லாமல் போகிறதே என வருந்திக் கொண்டிருந்தாள். ஜகதீசனும் வந்துவிட்டான். பிரகாஷின் வயதுதான் அவனுக்கும். அவன் சிரிப்பின் அர்த்தத்தை சிவா புரிந்து கொண்டான்.

அம்சு ஆத்தா என்ன நினைத்ததோ சுவிட்சை நிறுத்தியது போல அதன் அழுகை நின்றது. சட்டென எழுந்த போது பின் மண்டையில் வெடுக்கென கொட்டியது போல வலி.
“எந்த எடுபட்ட முண்டடி எம்மயித்த இழுத்தது” எனச்சொல்லி திரும்பவதற்குள் மங்கலம் பெரியம்மாவும் “யப்பே” என கத்தியது. பெரியம்மாவின் சடையும் ஆத்தாவின் சடையும் முடிச்சிடப்பட்டிருந்தது. வேதவள்ளி சித்தி சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கித் திரும்ப புவனா அக்கா கத்தினாள். வசைகள் கொட்டிப் பறந்தன. மணியம்மா ஆத்தாவுக்கு மட்டும் சோடி கிடைக்காததால் அருகில் இருந்த கீத்துக் கொட்டகையின் மூங்கில் கழியில் கட்டிவிட்டுச் சென்றிருந்தனர். கழியில் சாய்ந்து சோகம் காண்பித்துக் கொண்டிருந்த கனத்த சரீரமுடைய ஆத்தா எழ முயன்ற போது கொட்டகை சரியப் பார்த்தது. பிரகாஷின் அப்பாதான் “யம்மோ யம்மோ மொல்ல மொல்ல இந்தாவாரேன்” எனப் பாய்ந்து கொட்டகையைக் காப்பாற்றினார். சற்று நேரத்தில் எல்லோரும் முத்தம்மா கிழவியை மறந்தனர். பிணத்தைத் தூக்கி பாடையில் வைக்க எடுத்த போதுதான் அவள் தலையும் கயிற்றுக் கட்டிலில் முடியப்பட்டிருப்பதை கண்டனர். எல்லோர் சிரிப்பினூடாகவும் போய் சுடுகாடு போய்ச்சேர்ந்தாள் முத்தம்மா பெருங்கிழவி. 

பிற படைப்புகள்

Leave a Comment