தேவதை வந்துபோன சாலை

by olaichuvadi

 

சிறுகதை: சு.வேணுகோபால்

‘மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ இவள் ஆவாரம் பூதானோ நடை… கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது.

‘ஹலோ’

‘சார் நான் விஜயலட்சுமி பேசுறேன்’

‘ஆ… சொல்லும்மா நல்லா இருக்கியா’

‘நல்லா இருக்கேன் சார். வகுப்பில இருக்கீங்களா சார்’

‘இப்பத்தாம்மா வகுப்ப முடிச்சிட்டு வந்து ஒக்காந்தேன். நீ கூப்பிட்டிட்ட’

‘பதினொறரைக்கு ப்ரேக் டைம்மா இருக்குங்கிறத நெனைச்சுத்தான் சார் அடிச்சேன். சார் பேசலாமா சார்’

‘பேசும்மா’

‘சார் தங்கச்சிய டீச்சர் ட்ரெயினிங் ஸ்கூல்ல சேத்திட்டேன் சார்’

‘அப்படியா? எப்ப சேத்தீங்க’

‘நேத்து சார். அடியே எங்க ஓடுற. இந்த சோனக்காது இடுப்ப இடுப்ப ஆட்டிக்கிட்டு பண்ற அலும்பு தாங்க முடியல. சார் லயன்ல இருங்க சார். ஒரு நிமிசம் சார். எல்லாம் ஒரு பக்கம் போனா இது ஒருபக்கம் போறதே தொழிலா போச்சு. என்ன தெக்க வடக்க ஓடவைக்கிற. மொதல்ல ஒன்ன தீத்துக்கட்டியிருக்கணும்… ச்சை…’

‘மெல்லம்மா’

‘… … …’

மேட்டாங்காட்டில் விதைத்த எள்ளுச்செடிகள் வாடி வதங்கிக்கொண்டிருந்தன. அதன் வரப்பைச் சுற்றி இடுப்பு உயரத்தில் கொணங்கி தொய்ய நிற்கும் ஆமணக்கு இலைகளை பருக் பருக்கென பறித்து அவசரமாக மென்றது. சாப்பாட்டு பையையும், இடது கையில் வைத்திருந்த நீண்ட தொரட்டிக் கம்பைப் போட்டுவிட்டு, கல்லை எடுத்து எறிந்து கொண்டே ஓடினாள். தொடை பக்கம் ஒரு கல் பொத்தென விழ ஆடு குதித்து இந்தப்பக்கம் ஓடியது. உழவுக்காடு அத்தோடு முடிகிறது. இந்தப்பக்கம் கல்லாங்காட்டு கரடு. சுள்ளியும் சாலிக் கருவேலும், வெள்வேலும் கிளுவையுமாய் அடர்த்தியில்லாமல் நிற்கின்றன. ஒவ்வொரு குன்றுகளிலும் நடமாட்டம் இன்னொரு குன்றிலிருந்து தெரியும்படியாய் மரங்கள் வெளிச்சம் கொண்டு இருக்கின்றன.

வரப்பில் நின்று மூச்சு வாங்கினாள். ஊக்கமில்லாமல் எள்ளுச்செடிகள் வெளிறிப்போய் இருக்கின்றன. மழை விழுந்தால்தானே காட்டைப் பார்க்கக் காட்டுக்காரனுக்குப் பிரியம் இருக்கும். இந்த வாட்டத்தில் ஆடு வாய்வைத்ததைப் பார்த்த்தால் காட்டுக்காரனுக்கு கண்ணுமன்னு தெரியாமல்தான் கோவம் வரும். ஒரு மழை விழுந்தால் இந்த வாட்டத்திற்கு செடி முழுக்க வெண்பூவாய் வெளேரென்று பூத்துவிடும். அப்படியே செடிகளை சிங்காரித்தது போல காடே பூத்துக் குலுங்கும்.

‘ஹலோ சார்’

‘என்னம்மா இப்படி மூச்சு வாங்குற’

‘எங்க ஆட்டுக்கூட்டத்தில ஒரு சிறுசு பண்ற வேலை சார்’

‘மெல்லம்மா’

சுடிதாரில் ஒட்டியிருந்த மூக்குத்தி விதைகளை எடுத்து விட்டுக்கொண்டே பேசினாள்.

‘சார் அடுத்த வருசம் காலேஜில் சேந்திர்றேன் சார். இவ டீச்சர் ட்ரெய்னிங் சேரணும்னு ஒத்தக்கால்ல நின்னுட்டா சார். ஒரு கிழட்டாடு, அஞ்சு இளங்கெடாக்கள வித்து சேத்து விட்டோம் சார். நான் காலேஜுக்கு வந்தா இவள படிக்க வைக்க முடியாது. இவ எடுத்த மார்க்குக்கு எங்க மெரிட்டில கிடைக்கும்? கேட்டா நான் நான் ஆடுமேச்சுட்டு வீட்டப்பார்த்துட்டு இதுக்குமேல எப்படி என்னால எடுக்க முடியுமுன்னுட்டா. சார் அடுத்த வருசம் எனக்கு சீட்டு கிடைக்குமில்ல சார்’

‘கெடைக்கும். நான் சொல்றதக் கேளும்மா. செமஸ்டர் பீஸ் பதினைஞ்சாயிரம்தான் இப்ப காலேஜ்தொறந்து ஒன்றரை மாசந்தான் ஆகுது. செல்ப் பைனான்சில நாங்க பாத்து அஜஸ் பண்ணிருவோம். காலேஜுக்கு வாரத்தில ரெண்டு நாள் வந்தாக்கூட போதும். தாட்டி விட்ருவோம். இப்ப பணமில்லையண்ணா நான் கட்டிவிடுறேன். அப்புறம் உன் கைக்கு பணம் வர்றப்போ தா. எம்பத்தஞ்சு பர்சண்டேஜ் வாங்கியிருந்தா கவர்மெண்ட் காலேஜில சீட்டு கிடைக்கும். நீ அதையும் கோட்டவிட்டுட்ட. ஆடு மேய்க்கப்போறேன், மாடு மேய்க்கப்போறேன்னு பஸ்ட் கிளாச கூட முக்கிதக்கித்தான் வாங்கிருக்க. காலத்த வேஸ்ட் பண்ணாத. என்ன கஷ்டமிருந்தாலும் காலேஜில சேரப்பாரு’

‘இப்ப ரெண்டுபேர் படிக்கிறது சிரமம் சார். அடுத்த வருசமன்னா சமாளிச்சிடலாம் சார். அம்மானால கரட்டில சுத்தி ஆடுமேய்க்க முடியாது சார். இடதுகால்புண்ணு ஆறவே மாட்டேங்கிது சார். மேய்ச்சலுக்குப் போய் வந்தா புண்ணுல நெய்யா ஒழுக ஆரம்பிச்சிடுது. என்னவோ ஆறவே மாட்டேங்குது. அப்படியும் இந்த நூறு நாள் வேலைக்குப் போகுது சார். அடுத்த வருசம் படிக்கிறேன். சீட்டுக் கெடைக்குமில்லையா சார்’

‘அதெல்லாம்…’

‘ஏ… ஏ… விஜயா வாரயாடி. இல்ல நாங்க போகவா’

வடக்கே கோணமூக்கு வெங்கல்பாறையிலிருந்து செண்பகம் அழைத்தாள்.

‘ஓ… நீங்க போங்க. நான் மணி சாரோட பேசிக்கிட்டிருக்கேன். எனக்கு வேலையிருக்கு.’ சத்தம்போட்டுக் கத்தினாள்.

‘அதெல்லாம் பார்த்துக்கிடலாம்மா. என்ன இங்கயும் பேசுற எங்கயோவும் பேசுற. அதுவும் ஊரே தூக்குற மாதிரி’

சார் வாய்விட்டுச் சிரித்தபடி சொன்னார். விஜயலட்சுமிக்கு  வெட்கமாக இருந்தது.

‘சாரி சார்’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மாதான் சொன்னேன்’

எப்படியும் அடுத்த ஆண்டு படிக்க வேண்டும் என்பதைச் சொன்னாள். அவர் இந்த வருடமே ஆடுகளை யாரிடமாவது வாரத்திற்கு மேய்க்க ஒழுங்குபடுத்தி வருவது நல்லது என்றார். ஆனால் அது இப்போதைக்கு ஆகாது என்பது அவளுக்குத் தெரிந்தது.

*

குன்று குன்றாக கல்லாங்காட்டுக்கரடு விரிந்திருக்கிறது. புதரையும் பெருங்கல் சந்துகளையும் பார்த்தால் சற்று எட்டவே விலகிப்போவாள். அதில் சுருட்டைப் பாம்புகள் இருக்குமென்ற பயம் எப்போதும் உண்டு. சின்னக் குடைக்கருவேல் மரத்தில் பந்தலாக இருக்கும் கோவைத் தழைகளை ஆடுகள் முன்னங்கால்களைத் தூக்கி எட்டும் மட்டும் உதடுகளில் முள்குத்திவிடாதபடி வெடுக்வெடுக்கென பிடுங்கித்தின்றன. குட்டிகள் முன்னங்காலைத் தூக்கி வெறும் நாக்கை நீட்டி நீட்டிப் பார்த்து எட்டாமல் ஏமாந்து கோவைப் பந்தலை தலைசாய்த்துப் பார்த்தபடி மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்தன. காவி நிற கூழாங்கற்களில் எல்லாம் சூடு ஏறிக்கொண்டிருந்தது. விஜயலட்சுமி தொரட்டியை நீட்டி மேற்கால் செல்லும் கொப்பை இழுத்தாள். கொப்பு தாழத்தாழ குட்டிகள் ஓடிவந்து முன்னங்கால்களைத் தூக்கி மடக்கியபடி கழுத்தை நீட்டி கோவைத்தழைகளைப் பறித்து வேகமாகத் தின்றன. நெத்திச்சுட்டி பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுருளை டங்கென்று கன்னப்பொட்டில் நெற்றியால் தாக்க வலியில் ம்ம்மெகேகே… என கத்தியபடியும் வாயில் தழையை மென்றபடியும் குட்டிகள் தின்னும் பக்கம் மடியை ஆட்டிக்கொண்டு ஓடியது. அதன் கொம்புகள் பாம்புகள் படம் எடுத்தது போல நிமிர்ந்து நுனிப்பகுதி ஒருசுற்று சுருண்டுவிட்டன.

கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும் ஆவாரஞ்செடி குட்டைகள் ஏகமாகத் தெரிந்தன. ஒவ்வொரு தூரிலும் ஏழெட்டு பாச்சிகள் கிளைவிரித்து குத்துக்குத்தாக இருக்கின்றன. கூட்ஸ் வண்டி ஆறுமணிக்கு மேல்தான் வரும். அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வரும். அதற்கு எவ்வளவோ நேரமிருக்கிறது. இரண்டு குன்றுகளுக்கிடையே நுழையும்போது பாம்பு புற்றுக்குள் நுழைவதுபோல மறைந்துவிடும். குன்றைத்தாண்டி வெளியேறும்போது புற்றிலிருந்து புறப்படும் பாம்புபோல உடம்பு நீள நீளத் தோன்றும். செங்கரட்டின் குன்றுகள் கடலில் மூழ்கியபடி பெரும் பெரும் முதுகுகளை மட்டும் காட்டுவது போலத்தெரிந்தன. காட்டின் நாலாபக்கமும் தோட்டத்தின் சமதள பரப்பு. நிலத்தில் மிதக்கும் கரடு. தூரத்தில் ஒரு சிறுமி வெள்ளாடுகளை ஓட்டிக்கொண்டு போகிறாள். எத்தனை சிறுமிகளின் பாதம் பட்ட பாதைகள் இவை. எத்தனை குமரிகள் நடந்த பாதை. பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், இளைஞர்கள், கிழவிகள், கிழவர்கள் தங்கள் பாதங்களால் போட்ட பாதைக்கோலங்கள். காய்ந்துபோன மாட்டுச் சாணத்தின் உள்ளிருந்து வெளியே வந்த எறும்பு நொறுங்கிப் போன சிறுசிறு குச்சிகளில் சுற்றி நுகர்ந்து மறுபடி சாணகுகைக்குள் போனது. மாடுகள் ஊழித்தழை, துத்தித்தழைகளைத் தின்றால் செரிக்காத குச்சிகள் சாணியோடு இப்படித்தான் வரும்.

கள்ளிகுன்றிற்கும் கிளுவை குன்றிற்குமான பள்ளத்தில் செல்லும் அகன்ற பாதையில் ஜீப் ஒன்று சட்டென தெரிந்து மறைந்தது. அழைப்பு மணி விட்டுவிட்டு வந்தது. தொரட்டியை மரக்கிளையில் தொங்கவிட்டுப் பார்த்தாள். டவர் குறியில் இரண்டு கோடுகள் மட்டும் குறுகித் தெரிந்தன. தொடர்பைத் தொடவில்லை. ‘ஐயோ இவன்வேற எப்பப்பாத்தாலும் போனப்போட்டு நச்சரிக்கிறான். போகப்போக டவர் கிடைக்காது. அது இந்தச் சமயத்தில் ஆறுதலாக இருந்தது. ஆடுகள் கரட்டின் மேல்பக்கம் படர்ந்திருக்கும் பிரண்டையை நோக்கி ஓடின. அடுத்தாண்டு படிப்புக்கான புத்தகங்களை இப்போதிலிருந்தே வாங்கி வாசிக்க வேண்டும் என்ற நினைப்பும் ஓடியது. விஜயலட்சுமி தொரட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். இனி அழைத்தாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்றுதான் அவனுக்குச் சொல்லும்.

காலடி பள்ளத்தில் பாப்பரங்காய் கொடி படர்ந்து பந்து பந்தான மஞ்சள் பழங்களும் மஞ்சளும் வெளிர்பச்சையும் கலந்த காய்களுமாகக் கிடந்தன. உப்புக்கொதிநீரில் இந்தக்காய்களை நன்றாக வேகவைத்து நீர்க்கட்டுக்காரர்கள் முட்டியில் சூட்டோடு பிளந்து வைத்தால் நீரையெல்லாம் உறிஞ்சிவிடும். துண்டங்களாக அறுத்துப்போட்டு உப்பைக் கலந்து வத்தலுக்குக் காயப்போட்டு எடுத்து வைத்தால் கசப்போடு மொலுமொலுவென இருக்கும். காய்களின் மையத்தில் ஜிகுஜிகுவென இருபுற ரம்பக்குறிகளோடு வெண்ணிற வட்டம் ஓடுகிறது. வரும்போது பிடுங்கிக் கொள்ளலாம் என பார்த்து வைத்துக் கொண்டாள்.

இந்தச் சின்னச்சாமியிடம் நாசூக்காக விருப்பமில்லை என்பதைச் சொல்லியும் ஆகிவிட்டது. விவஸ்தை கெட்டத்தனமாய் திரும்பத் திரும்ப ‘என்ன சொல்ற… என்ன சொல்ற’ என்று கேட்கிறான். பித்தநரை தலைமயிர் முழுக்க கலந்து இருப்பதால் அல்ல, எப்போது பார்த்தாலும் மேல் பொத்தானைத் திறந்து விட்டுக்கொண்டு சவடால் அடிப்பது பிடிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் எவனிடமாவது ஒரு ஓசி இருசக்கர வாகனத்தை வாங்கி ஓட்டிக்கொண்டு ஜூம் காட்டுவது எரிச்சலாக இருக்கிறது. எங்க எளைய மச்சான் போலீசுல இருக்காரு. எப்படியும் என்ன சேத்து விட்டுருவாரு என்று ரெண்டு வருசமாக சொல்லிக்கொண்டு திரிவதில் அவனுக்கு ஒரு மேனாத்தம் வேற. இப்போது தண்ணி அடித்துப் பழகிவிட்டான். கேட்டால் இல்லை என்று சத்தியம் வேறு செய்யக் கிளம்பி விடுகிறான். சத்தியம் செய்தால் நான் இறங்கி சம்மதித்து விடுவேன் என்று நினைப்பு வேறு. குமரேசன் தான் கண்ணார பார்த்ததைச் சொல்லியிருக்கிறான். சின்னச்சாமி சுற்றிச் சுற்றி வந்தாலும் ஏனோ அவனைப் பிடிப்பதில்லை. எப்படியெல்லாமோ சொல்லியும் புரியாதவன் போல தொடர்கிறான்.

விஜயலட்சுமிக்கு பிரகாஷின் நிறமும் உயரமும் ரொம்பப் பிடிக்கும். டக் செய்து வந்தான் என்றால் ஜம்மென்று தெரிவான். மாநிறத்துக்கும் சற்று தூக்கலான நிறம். திருத்தமான முகம். அவனது குறுஞ்சிரிப்பு அப்படியே பேசும். ‘ஏய் ஆட்டுக்குட்டி ஒன்னோட அசைன்மெண்ட் கொடு எழுதிட்டுத் தர்றேன்’ என்பான். ‘குண்டு குண்டான உன் எழுத்து படிக்க லெகுவா இருக்கு’ என்பான். அவனுடைய அப்பா ஆவின் பால் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார். தன் மூத்த அக்கா காதல் கல்யாணம் செய்துகொண்டதால் அப்பா பேசுவதில்லை. அப்பாவிற்குத் தெரியாமல் போய் பேசியிருக்கிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறான்.

முந்நாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இறந்த அன்று இறந்த செய்தியை வெளியிடாமலே கலவரம் ஏதும் வந்துவிடுமோ என்று மதியமே கல்லூரிக்கு விடுமுறை விட்டார்கள். அவரவர் வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வர பேருந்துக்கு ஓடினார்கள்.சைரா மேடத்திற்கு டெஸ்ட் மார்க் டோடல் போட உதவிவிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு ஓட்டமும் நடையுமாக வரும்போது 1.45 வண்டி நகர்ந்து விட்டது. எதிர் டீக்கடையில் நின்றிருந்த பிரகாஷ் இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்து ‘ஏ… ஆட்டுக்குட்டி ஏறு பஸ்டாண்டில எறக்கிவிடுறேன்’ என்றான். ஏறியமர்ந்ததும் ‘பஸ் ஸ்டாண்டிலிருந்து உங்க ஊருக்கு வண்டி இருக்கில்லையா. இல்ல, கொண்டு வந்து விடவா’ என்றான். பதட்டத்தில் ‘இருக்கு… இருக்கு’ என்றாள். அன்று ஏனோ அவனை தன் ஊருக்கு அருகே கொண்டுவந்து விடச் சொல்லியிருக்கலாம். நீண்ட தூரம் வண்டியில் அவனை இறுகக் கட்டியணைத்துச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. கருணாநிதி இறந்த செய்தி பரவியபின் பயந்ததுபோல கலவரமெல்லாம் நடக்கவில்லை.

எப்போது பார்த்தாலும் கொடிசுற்றிய மரமாக இந்த ரட்சிகா அவனோடே இருக்கிறாள். ஸ்கூட்டியில் ரொம்ப மாடனாகத்தான் வருவாள். பெரிதான மார்புகளை துப்பட்டாவல் மறைக்க மாட்டாள். படியில் இறங்கும்போது மேலெழுந்து ததும்பும்படி டங்டங்கென்று குதித்துத்தான் இறங்குவாள். அதில் அவளுக்குப் பெருமிதம் கூட. கண்ணாடி முன்நின்று துப்பட்டா இல்லாமல் தன் மார்புகளை எப்படி இருக்கிறது என்று நேராக இடமாக வலமாக திரும்பி நெஞ்சை நிமிர்த்திப் பார்த்திருக்கிறாள். குலுங்காமல் பனவட்டு அளவில் இருந்தன. துப்பட்டா போடாமல் கல்லூரிக்கு ஒரு நாள் போகக்கூட நினைத்தாள். அப்படி பிரகாஷிடம் போய் நின்றால் செயற்கையாகப் பண்ணுவதாகத் தோன்றுமோ என்று விட்டுவிட்டாள். அவனுக்கும் அவள் மேல் லவ் என்று தோழிகள் சொன்னபோது இரண்டுநாள் தூங்கவே முடியாமல் நெற்றியை சுவரில் மோதிக்கொண்டு அவதிப்பட்டதை யாரிடமும் சொல்லவில்லை. ஹெட்போனில் ஏதோ ஒரு பாட்டைக் கேட்டபடி கண்களை மூடிக்கொண்டு மிக மெல்ல தலையை அசைத்துக் கொண்டு ஜிம் ஹாலுக்கு முன் படிக்கெட்டில் அமர்ந்திருந்தபோது அவனது உதட்டில் முத்தமிட்டு எடுத்ததுபோல நினைத்துக்கொண்ட ஒரு நினைப்பை தொரட்டிக் கம்பில் முத்தமிட்டுப் பார்த்திருக்கிறாள். குடிகொண்டிருந்த கனவு, ஆசை, மெல்ல மெல்ல கரைந்து போனது. இப்போது கோவையில் சேர்ந்து படிக்கிறான். நான் உன்னை நினைத்தேன். நீ? எங்கு இருந்தாலும் நல்லா இருடா சாமி.

இருபது நாட்களுக்கு மேல் இருக்கும் ஆடுகளை மேயவிட்டுக்கொண்டே வெள்ளைக்கல் சாலைக்கு வரும்போது இரண்டுபேர் ஆலமரத்தடியில் நின்று ஸ்கூட்டியில் வரும் அந்தப் பெண்ணை மறித்து நிறுத்தி ‘பதில் சொல்லு… ம்ம்.. எனக்கான பதில சொல்லு’ என்று கோவமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் இந்த கரட்டுப்பாதையில் தைரியமாக வண்டியோட்டிச் செல்லும் அமர்க்கையைப் பார்த்த செண்பகம் ‘அக்கோ இவ படிச்சு கலெக்ட்ரா வந்தா ஜம்மன்னு இருப்பாக்கா’ என்றாள். அவன் ‘என்னடி வேற ஆள பாக்குறயா. நீ எனக்க்குத்தான்’ அவன் தலையை சிலுப்பிக்கொண்டு சுட்டு விரலை ஆட்டிப் பேசுவதும் கேட்டது. தொரட்டியை நன்றாக ஊன்றி ஓணாங்கொடி ஏறிய கிளுவை மரத்தடியில் நின்று பார்த்தாள். அவன் ஸ்கூட்டியின் முன் சக்கரத்தை தன் இரு கால்களுக்கிடையில் இருத்தி வண்டியின் சாவியைத் தராமல் ‘சொல்லு சொல்லு’ என்றான். அவள் விஜயலட்சுமி வந்து நின்றிருப்பதைப் பார்த்ததும் ‘எனக்கு இஷ்டமில்லை’ என்று கொஞ்சம் தைரியத்தோடே சொன்னாள். மற்றொருவன் தள்ளி நடுரோட்டில் நின்று யாரேனும் வருகிறார்களா என்பதுபோல மாறிமாறி பார்த்தான். இருசக்கர வாகனம் ஒன்று மரத்தடி பட்டியல்கல் ஓரம் நிறுத்தியிருக்கிறது.

ஆடு மேய்க்க வரும்போது இந்த வழியில் இரண்டாண்டுகளாக அவ்வப்போது பார்த்திருக்கிறாள். சில சமயம் செண்பகம் ‘இருக்கா அவ வர்ற நேரம்தான் பாத்துட்டுப் போவோம்’ என்பாள். ‘பொண்ணா பொறந்தா இப்படிப் பொறக்கணும்க்கா’ என்பாள். அவளுக்கு அந்தக் குட்டியின் சொரூபத்தின் மீது கொள்ளப் பிரியம். அந்த சிரித்த முகம் இவளுக்கும் ரொம்பப் பிடிக்கும். நல்லாம்பாளையம் சந்தையிலிருந்து வீட்டுக்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு மாலை மயங்கும் வேளையில் புருட்டென்று வேகமாகப் போவாள். இந்த குட்டிக்கு என்ன தைரியம் பாரு என்பாள் தங்கமணி. சென்னப்பன்பாளையம் ஊர்ப்பெண் என்பதைத் தெரிந்திருந்தார்கள். ப்ளஸ் டூ முடித்து எஞ்சினியரிங் கல்லூரி போகிறாள் போல. சில பேரிடம் பழகாமலே பார்வையிலேயே பிரியம் ஏற்பட்டு விடுகிறது. ஏன் இப்படித் தோன்றுகிறது என்று சில சமயம் நினைத்துப் பார்ப்பாள். முகத்திலே பிரியத்தைக் கொட்டிக்கொண்டு திரிவதுபோல் சிலரிடம்தான் இருக்கிறது. அவர்களிடம் பழக வேண்டும், நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என மனம் விரும்புகிறது.

வண்டியை விட்டு இறங்காமல் விஜயலட்சுமியை நான்கைந்து முறை பார்த்தாள். அந்தப்பார்வை ‘அக்கா இந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் விடாதே’ என்பது போல இருந்தது. தள்ளி நின்றிருந்தவன் ‘இங்கென்னடி பாக்குற, ஆட்டப்பாக்கப் போடி’ என்றான். பயமாகவும் இருந்தது. ஆனால் தூரத்தில் கிடைமாடு வைத்திருக்கும் ராமண்ணாவும், செந்தில் அண்ணனும் மூணாண்டி கரட்டில் மாடுகளை ஓட்டிவிட்டு வெப்பாலை மரத்தடியில் அமர்ந்திருந்ததைத் தாண்டித்தான் கீழே வந்திருந்தாள். அவன் சொல்லியும் நகராமல் நின்றிருந்தாள். அவன் அவளது கையைப் பிடிக்கவும் உதறி ‘எங்கப்பாகிட்ட சொன்னேன்னா அவ்வளவுதான்’ என்று இருகைகளையும் தடுப்பது போல மறித்தாள். ‘என்ன காதலிக்கிறாயா இல்லையா’ என்றான். வாயால்கூட அவளால் சொல்ல முடியவில்லை. தலையை மட்டும் இல்லையென்று ஆட்டினாள். அப்படிச் சொல்லும்போது அவளது காதுகளில் தொங்கிய தேன்கூடு லோலாக்கின் அசைவில் இன்னும் குழந்தைமை துடித்தது.

அந்தப்பெண் இன்னும் குறுகி சிறுத்து விட்டது போல் இருந்தது. அவள் வீட்டிலிருந்து வரும்போது முகம் அப்படியே தண்ணீரில் முக்கியெடுத்த தாமரை மொட்டுபோல பளபளவென்று மின்னும். இப்போதுதான் ஒற்றைசடை போட்டு மல்லிகை சரத்தைத் தொங்கவிட்டுப் போகிறாள். போன வருசம் ரெட்டைச் சடையின் பிடறிப்பக்கம் வகிர்ந்து பின்னிய இரண்டு பின்னல் பகுதிகளையும் தொட்டுக்கொண்டு வெண்மை பளிச்சென்று தெரிய போவாள். இவளுக்கு சீவி சடைபோட்டு வகிடின் வெண்தடம் தெரிய அனுப்பி வைப்பதில் தாயின் நேசம் அதில் அப்படியே அப்பியிருப்பது தெரியும். ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு என்ன மகிமையோ! அவள் ஸ்கூட்டியை ஓட்டிச்செல்வதே ஒரு அழகாக இருக்கும். அலுங்காமல் குலுங்காமல் காலை ஒடுக்கிவைத்து நெஞ்சை நிமிர்த்தி நிதானமாகப் போவாள். கரடுகளுக்கு இடையே ஒரு தேவதையை அனுப்பி வெங்கரடே அவள் வருகைக்காகக் காத்திருந்த தன் உடல்வழி அவள் கடந்து செல்லும் தருணத்தில் முழு நிலவு மிதந்து செல்வது போல குன்றுகள் குறுகி வணங்கி மரங்கள் திரும்பிப் பார்த்து புன்னகைப்பது போல இருக்கும். அவள் கடந்து சென்றதும் கல்லாங்கரடு தன் முதுகுகளை உயர்த்தி இறுக்கத்தைக் காட்டி வெப்பத்தைக் கக்கத் தொடங்குவது போல இருக்கும். கரட்டின் மரங்கள் வெயிலில் தலைகுனிந்து நிற்பதுபோல இருக்கும். இந்த கரடிற்கு வெறென்ன அழகு இருக்கிறது? அவள் தன்னுள்ளிருந்து ஒரு அருவியை பொங்கவிட்டுச் செல்வது போல இந்தக் காட்டிற்கு கொஞ்சம் பெருமிதம். நாளை இவள் படித்து பெரிய அதிகாரியாக வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த வெள்ளைக்கல் சாலையில் போன பெண்தான் கலெக்டராக வந்திருக்கிறாள் என்பார்கள். எப்படியும் படித்து இந்த அழகு குமரியைப்போல வேலைக்குப் போகும்போதாவது ஒரு ஸ்கூட்டியில் இவள் போல செல்ல வேண்டும் என்று தோன்றுவதுண்டு.

மையிட்ட இமைகளில் மெல்ல நீர்த்தேங்குவது தெரிந்தது. இரண்டு ஆண்களும் விஜயலட்சுமியை முறைத்துப் பார்த்தார்கள். தொரட்டியை மட்டும் கைமாற்றி இன்னும் உறுதியாக நின்றாள். என்ன நினைத்தானோ சாவியைத் தூக்கி எறிந்து விட்டு ‘ங்கோத்தா கூதி மகளே ஒன்ன வச்சுக்கிறேண்டி’ நிறுத்தியிருந்த வண்டியில் ஏறிகோவத்தில் கியரை உதைத்து கிளப்பி நண்பனை ஏற்றிக்கொண்டு போனான். கரட்டின் குன்றுகள் முரண்டு கோவம் கொண்டு வெறித்து உயர்ந்து விட்டன போல இருந்தது. அந்த வெய்யிலிலும் கிளுவை மரங்கள் தன் சிறு இலைகள் சண்டைச்சேவல் கழுத்திறகு சிலிர்க்க நிற்பது போல விரைத்து அவளைப் பார்ப்பது போல இருந்தன. அவள் இறங்கி தரையில் கிடந்த சாவியைஎடுத்து விஜயலட்சுமையைப் பார்த்து கும்பிடுவதுபோல கை நடுங்க காட்டினாள். அப்படி அவள் செய்திருக்க வேண்டாம் என்றே தோன்றியது. இந்தக் காட்டின் தேவதை அப்படி தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. உலகத்தையே தன் உள்ளங்கையில் வைத்து ஊதிவிட்டது போல செல்லும் அவள் அப்போது எருமையின் குலம்பில் மிதிபட்ட புழுபோல தலைதூக்க முடியாது நசிந்து வண்டியில் ஏறுவதுபோல இருந்தது. விளக்கி விட முடியாத துக்கம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்த பட்டியக்கலை உருக்குவது போல இருந்தது. சல்லடையாகி கருத்த மேகத்தினுள் சிக்கி நகர்ந்து செல்லும் நிலவைப் போல கடந்து போனாள். ஒரு கணத்தில் அரும்பும் மொட்டும் பூவுமாய் பூத்திருந்த குட்டி வேப்பமரம், இலை உதிர்த்து மேங்காற்றிற்கு கொப்புகளின் இலை கருகி நிற்பது போல தோன்றியது.

***

சுற்று முற்றும் பார்த்தாள். யாரும் எந்த ஒத்தையடி தடத்திலும் தென்படவில்லை. ஆடுகள் தரையிலும் முள்புதரிலும் படர்ந்திருந்த வேலிப்பருத்திக் கொடிகளை பிரியமாகத் தின்றன. சுருண்டு கருகிக்கிடந்த அதன் இலைகளை தாலியாடு உதடுகளில் பொறுக்கி மொறுக் மொறுக்கென்று மென்று தின்றது. வயிற்றில் கட்டியிருந்த துப்பட்டாவை அவிழ்த்து கழுத்தில் சுற்றிப் போட்டுக்கொண்டு ஒத்தையடிப் பாதையிலிருந்து விலகி நிற்கும் காத்தாடி மரத்தில் மறைந்து சுடிதாரைத் தூக்கிவிட்டு கால்சராய் நாடாவை அவிழ்த்தாள். நன்றாக கால்சராயையும் பேண்டீசையும் ஒருசேர முழங்காலுக்கு இறக்கிவிட்டு அமர்ந்து ஒன்றுக்கு இருந்தாள். பரவி காலுக்கு வராமல் இறக்கத்தை நோக்கி ஓடும்படி மேட்டை நோக்கி அமர்ந்து இருந்தாள். ஒன்றுக்கு இருந்தபடி கழுகுதலையை இடவலம் திருப்புவது போல உடலைக் குறுக்கி இருபக்கம் பார்த்துக்கொண்டாள். யாரும் இல்லை.

‘அப்பாட’ கால்சராய் நாடாவை கட்டி சுடிதாரை இழுத்துவிட்டு நின்றபோது அடிவயிற்றை அழுத்திக்கொண்டிருந்த பாரம் குறைந்து ஆசுவாசத்தைத் தந்தது. எதிர்குன்று கரடு முழுக்க கள்ளிகள் நிறைந்திருக்கின்றன. அதன் மந்தமான இலையின் முள்ளை சீவிப்போட்டால் துண்டுகளை வாய் கொள்ளாமல் பால்வடிய வடிய மென்று விழுங்கும். தின்ற நவநவப்பிற்கு வாய் ஓரங்களை தரையிலோ கல்லிலோ போட்டு தேய்த்து ‘பிர்பிர்’ என தும்மும். சினையாக நிற்கும் கருவாச்சி மண்டியிட்டு அமர்க்கையாக சிறுவாவிழைக் கொடியைப் பறித்துத்தின்றது. தீரத்தீர மண்டியிட்டபடியே முன்னங்கால் முட்டிகளை மாற்றி மாற்றி வைத்துத் தின்றது. அதன் வயிற்றுப் பகுதிகள் துளுதுளுவென சூல் கொண்டிருப்பதைக் காட்டின. வெயிலில் ரோமங்கள் பளபளவென மின்னின. நான்கு குட்டிகள் ஈனும். மடியில் ரோமங்கள் நீண்டு நீண்டு இருந்தன. இன்னும் காம்புகள் புடைக்கவில்லை. சம்பா மிளகாய் போல நீண்டிருக்கின்றன. கிடாயின் தொடை ரோமங்களில் சாணி அப்பித் திரண்டு திரண்டு தொங்குகின்றன. நீண்ட தொடை மயிர்களின் நுனிகள் செம்பட்டைப் பாய்ந்து கொச்சைவாடை அடிக்கின்றன. குளிப்பாட்டி விட வேண்டும். ஆடுகளை குளிப்பாட்ட வேண்டும் என்றால் மூன்று பேர் இருந்தால்தான் முடியும். குளிப்பாட்ட ஆரம்பித்தால் பாதிப்பொழுது போய்விடும். அதனாலே தள்ளித்தள்ளிப் போட்டுவிட நேர்கிறது.

ஊத்தாங்கண்ணில் நீர் முகிழ்த்து வரவில்லை. குழியைச் சுற்றி பாசி காய்ந்து கிடக்கிறது. நேரம் ஒன்றே முக்காலாகியிருந்தது. கரடின் மையத்தில் இருந்து இந்த ஊற்று ஆரம்பிக்கிறது. இரண்டு வேப்ப மரங்கள் இங்கு மட்டும்தான் நிற்கின்றன. பசித்தது. துப்பட்டாவை உதறி பாதசாரிகள் யாரோ எந்தக்ககாலத்திலோ கொண்டுவந்து போட்ட அகன்ற வட்டக்கல்லில் விரித்து அமர்ந்தாள். சாப்பாட்டுப் பையைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கை கழுவினாள். 

ஒரு வாய் சோற்றை வாயில் வைத்து மெல்லத் தொடங்கியபோது கள்ளிப்புதர்ப் பக்கமிருந்து ஆடு ஒன்று  ‘பால்…பால்’ என்று கத்துவது கேட்டது. இடப்பக்கம் திரும்பிப் பார்த்தாள். இவளுடைய ஆடுகள் இருந்தன. ஏதேனும் வழிதவறிப்போய் நின்று கூட்டத்தில் விலகி வந்து விட்டதாக நினைத்து கத்துகிறதா என்று பார்த்தாள். கருப்பி, மோழை, சடக்சடக் சண்டியர், மறை, செவலைக்கன்னி, கோணக்கொம்பு… எல்லாம் இருக்கின்றன. பால் மறந்த குட்டிகள் நிழலில் நின்று நாக்குநீட்டி இளைக்கின்றன. உண்டு கொண்டேஎக்கியும் பார்த்தாள். எல்லாம் இருந்தன. கள்ளி பின்னலுக்கு அப்பால் இருந்து கரடே அதிரும்படியாகக் கத்துகிறது. தண்ணீரை ஒரு மடக்கு குடித்துக்கொண்டாள். கத்தலைக் கேட்கக் கேட்க எரிச்சல் வந்தது. எதுக்கு இப்படி தொண்டை கிழியுறது மாதிரி கத்துது கழுதை. வாயில் அள்ளிப்போட்ட சோற்றை மெல்லாமல் கூர்ந்து கேட்டாள். கத்துவதில் சற்று ஓசை குறைந்தது. சரி தன் கூட்டத்தைக் கண்டு ஓடுகிறது போல தோன்றியது. யாருடைய ஆடாக இருக்கும். இந்த நேரத்தில் தங்கமணி ஆடுகள் வந்திருக்குமோ என்று நினைத்தாள்.

சாப்பிட சாப்பிட ஆட்டின் சத்தம் குறைந்துகொண்டே வந்தது. திரும்பவும் நெரிசலான குரலில் வினோதமாக கத்தல் வந்தது. தண்ணீருக்கு அலைமோதுகிறதா? ஊற்றே தூர்ந்து போய் கிடக்கிறது. இங்கே தண்ணீரைத் தேடினால் கிட்டுமா? கோடை மழை நான்கைந்து நாள் பொழிந்தால் இந்த ஊற்றிலிருந்து தண்ணீர் கொப்பளித்து சலசலவென இறங்கி ஓடும். மூக்கில் கெர்கெர்ரென கத்தல் வர அவசர அவசரமாக கையைக் கழுவி உதடுகளைத் துடைத்துக் கொண்டாள். செருப்பைப் போட்டுக் கொண்டு தொரட்டியை எடுத்துக்கொண்டு கள்ளிச்செடிகளைத் தாண்டித்தாண்டிச் சென்றாள். பளீரென கத்தல் வராமல் கெரட் கெரட்டென ஓசை வரும் பக்கம் பார்த்தாள். புள்ளியாடு ஒன்று பெரிய கள்ளி மரத்தடியில் தலை திருப்பி கால்களைப் பரப்பி போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அது கத்த முடியாமல் நான்கு கால்களை உதற உதற கூழாங்கற்கள் நாலாபக்கமும் பறந்தன. ஆடு கள்ளிமரத்தின் அடியில் கழுத்து திருகி சிக்கிக் கிடக்கிறது. ஏழெட்டு கள்ளிமரங்கள் பின்னிக்கிடக்கின்றன. சுற்றிப்போக வேண்டும் என்றால் காட்டின் உச்சிக்குப்போய் அந்தப் பக்கம் வரவேண்டும். இரண்டு கள்ளிக்கு இடையில் தொரட்டியை நீட்டி கள்ளி இலையை இழுத்தாள். ஒரு கள்ளிக்கிளை முறிந்து பால்வடிந்தது. மற்றுமொரு கிளையின் ஊடே விட்டு முறித்து இழுத்தாள். இரு கிளைகளை ஒடித்து இழுக்க சிறுபாதை தோன்றியது. ஆடு ஒருமுறை துள்ளி மல்லாந்து விழுந்து கத்தமுடியாமல் கத்தியது. கதகதவென சிறுநீர் கழித்தது. ஐயையே சிறுநீர் கழிக்கிறதே செத்து விடுமே என்று தோன்ற அவசரமாக இரண்டு சுள்ளிகளுக்கு இடையில் தடுக்காக பக்கவாட்டில் முள் இழுத்துவிடாமல் பார்த்து நகர்ந்தாள். பாதை கிடைத்து விட்டதுபோல தெரிய வேகமாகத் திரும்பினாள். இடது தோல் பக்கம் கொக்கி முள்ளில் மாட்டிக்கொண்டது. வலது தொடை கால்சராய் கள்ளி முள்ளில் சிக்கிக்கொண்டது. காலை நீட்டி எட்டுவைத்து உன்னவும் கால்சராயிலும் தோள்பட்டை சுடிதாரிலும் டரக் டரக்கென தோளையும் அழுத்திக் கிழித்தது. கடுகடுவென காந்தின. வலது தொடையிலும் இடது தோளிலும் ரத்தம் கசியத் தொடங்கியது. முள் இருபக்கமும் குத்திக் கீறிவிட்டது. இன்னும் நிதானமாக எட்டு வைத்திருந்தால் முள் இவ்வளவு ஆழமாகப் பதிந்து இழுத்திருக்காது. காந்தலோடு ரத்தம் வருவதைப் பார்க்க வேதனை ஏற்பட்டது.

மல்லாக்கக் கிடந்த ஆடு, கழுத்தைச் சுழற்றி எழ முயற்சிக்க கால்களை உதறி நேரானது. கழுத்துக் கயிறும் கணங்குச்சியும் மூன்று நான்கு முறுக்கில் கள்ளிக்கவையில் சிக்கி கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தது. முள்கீறிய தொடை தோள்பட்டையில் எரிச்சல் வேறு. ரத்தம் கசிவதும் நிற்கவில்லை. கையை நீட்டி கழுத்துக் கயிறோடு சுழன்று முறுக்கிக் கிடக்கும் குச்சியை இழுத்துப்பார்த்தாள். முடியவில்லை. கயிற்றைத் தளர்த்தவும் முடியவில்லை. வாயிலிருந்து நுரை தள்ளத்தொடங்கியது. ‘அண்ணா அண்ணா யராவது வங்களேன்’ கத்தினாள். தொண்டைக்குழியை இறுக்கும் கயிற்றை விரலை நுழைத்துப்பார்த்தாள். கிண்ணென்று இருந்தது. முறுக்கை அசைக்கவும் பின்னங்கால்களை விசையோடு வெட்டி உதைக்க தவடையில் பட்டென பட்டது. கண்ணே இருட்டிக்கொண்டு வந்தது. ‘யம்மா’ வலியில் தவடையைத் தடவினாள். ‘அண்ணா யாராவது இருக்கீங்களா ஊத்துகோடுக்கு அந்தப்பக்கம் சுள்ளிமுள்ளுல ஆடு சிக்கித் துடிக்குது. ஓடியாங்க’ திரும்பக் கத்தினாள். அலுக்குப் பலுக்கு இல்லை.

குச்சியைத் திருகினால் முறுக்கு இன்னும் இறுக்க ஆடு நான்கு கால்களையும் உதறியது. சாணியோடு லேசாக ரத்தம் கசிந்தது. இளஞ்சினையாக இருக்குமென்று தெரிந்தது. குச்சியை உடைக்க முடிவு செய்து இரண்டு கைகளில் வளைத்தாள். கழுத்தை அழுத்தியது. தொரட்டியை நீட்டி  அறுக்கவும் வழியில்லை. மூன்று கவுளிகளிலும் சிக்கியிருக்கிறது. கைச்சூரி இருந்தால் நெம்பி அறுக்கலாம். ஆட்டின் கழுத்தை மேல் முறுக்கு அடியில் அமுக்கி தலையை அரைச் சுற்றாக எடுக்க முயன்றாள். நான்கு கால்களை கொடும் வேகத்தோடு உதறி சாத்தியது. கையில் அடி விழவிழ எடுத்தால். அதன் கண்கள் மூடி மூச்சு விட்டது. கையெல்லாம் ஆட்டின் வாய் நுரை. குச்சியை எதிர்த்திசையில் நெம்ப கயிறு லேசாக நெகிழ்ந்தது. ஆடு துள்ளி விழுந்து கால்களை உதறியது. ‘அண்ணா யாராவது இந்தப்பக்கம் இருந்தா வாங்கண்ணா. ஆடு செத்துக்கிட்டு இருக்கு’ அவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. ஆட்டை இடப்பக்கமாக அப்படியே புரட்டிப்போட்டாள். கயிற்றின் முடிச்சை அழுதுகொண்டே பின்னலிலிருந்து விரித்துக் கொண்டு வர முயன்றாள். அதன் மூக்கும் காதுகளும் முன்னில் சிக்கிக் கிழிந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருக்கிறது. குச்சியை முரட்டுத்தனமாகத் தூக்க குச்சியின் மறுமுனை பூமியில் ஊன்ற ஆட்டின் தலை திரும்ப ஒரு சுற்று சுழன்று உடலும் இந்தப் பக்கம் புரள கயிறு மிக நெகிழ்ந்து கொடுத்தது. குச்சியை முன்னங்கால்களுக்கிடையில் கொடுத்து ஒரு சுற்று சுற்ற கயிறு தளர்ந்தது. ஆடு கால்நீட்டி அப்படியே படுத்தது. கையை நீட்டி வேலை செய்யவும் முடியவில்லை.

எல்லாம் கள்ளிமுள் வயிற்றுக்குள்ளிருந்து அலை புரள்வது போல ஒன்று புரண்டது. வயிற்றுக்குள்ளே சிசுவும் மூச்சுக்காக போராடிக்கொண்டிருக்கிறது. அப்படியே அமர்ந்து வயிற்றை நீவிவிட்டாள். வயிற்ற்றில் குட்டி தண்டுமுண்டாடுவது தெரிந்தது. குச்சியை வலுவோடு இழுக்க இழுக்க மேலே வந்தது. முடிச்சிற்கும் வழி பிறந்தது. முடிச்சு வெளியே வந்ததும் மளமளவென்று முறுக்கைச் சுற்றி எடுத்தாள். சங்கு தெரிந்துவிட்டதா எனறு தொண்டையைத் தடவினள். ஆடு படுத்தபடி கெரட்டென மூச்சுவிட்டது. கழுத்தும் முன்னங்காலில் ஒரு சுற்றுமாக பின்னியிருந்த கயிற்றைத் தளர்த்தித் தளர்த்தி சுற்றி எடுத்தாள்.

கண்ணை மூடியிருந்த ஆடு பெருமூச்சுவிட்டது. நின்று மேயாமல் அங்கொரு கடி இங்கொரு கடியாக கடித்து ஓடும் ஓடுகாலிகளுக்கு கணங்குச்சியைக் கழுத்தில் கட்டிவிடுவார்கள். வேகமாக ஓடினால் முன்னங்கால் முட்டியில் டங்டங்கென குச்சி அடிக்கும். அதனால் ஓடாமல் மெல்ல நடக்கும்.  குச்சி எப்படியோ கவுளிக்குள் மாட்டிக்கொண்டது. கழுதை இந்த இண்டம்புதருக்குள் பசப்பைப்பார்த்ததும் நுழைந்திருக்கிறது. தரையில் குறுங்கற்கள் பறக்கத் தும்மியது. தடவிக்கொடுத்தாள். நுரையை வழித்து எறிந்தாள். அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஒரு கள்ளிச்செடி முழுக்க சங்குப்பூ பூத்திருக்கிறது. வெண்ணிற சங்குப்பூக்கள். இளைப்பு நிற்கவில்லை. மூக்கில் ஊளை ஒழுகியது. வயிற்றில் குட்டிகள் சுழன்று மேலேறுவது தெரிந்தது. இந்த புள்ளியாட்டின் உயிர்கெட்டிதான். போராடி போகும் உயிரை பிடித்து இழுத்தது. தன் வயிற்றில் இருக்கும் குட்டிக்காகவும் உருண்டுபுரண்டு மீட்டது. முதுகைத் தொட்டாள்.  கைநடுக்கம் இன்னும் நிற்கவில்லை. துப்பட்டாவால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கைகளை முன்னங்கால் செப்பையில் கொடுத்து தூக்கி நிறுத்தினாள். ஆடு குறுகி நடுங்கியது. மெல்ல தள்ளி கடவு செய்த சந்து வழி வெளியே கொண்டு வந்தாள். கிழிந்த வலது கால்சராய் வழி தொடை தெரிகிறதா என்று பார்த்தாள். அது கிழிந்து தொங்காமல் கோடுபோல கிழிசலாக இருந்தது. துணியில் ரத்தக்கறைபட்டு உறைந்து போனது. பாட்டில் நீரில் கைகளைக் கழுவி தன் ஆட்டோடு தள்ளிவிட்டாள். தங்கமணி ஆடு. ஆடு பிரிந்ததைக் கூட கவனிக்காமல் ஓட்டிக்கொண்டு போய்விட்டாள். திரும்புகாலில் அவளது ஆட்டுடன் சேர்த்து விடலாம். சே! சாப்பிட அமரும்போதே கத்தியது. தண்ணீருக்குக் கத்துகிறது என்ற நினைப்புதான் ஓடியது. அப்போதே போயிருந்தால் இத்தனை முறுக்கு விழுந்திருக்காது ஒரு முறுக்கு இரு முறுக்கிலேயே எடுத்திருக்கலாம். உயிருக்குஎன்ன பாடுபட்டதோ. இங்கு வந்து ஊற்றுநீர் பள்ளத்தில் தண்ணீர் குடிப்பது பழக்கம் என்பதால் இந்தப்பக்கம் ஓடி வந்திருக்கிறது. தண்ணீர் இல்லை என்று தெரிந்ததும் கூட்டத்தை நோக்கி ஓடாமல் இந்தப் புதருக்குள் பசப்பைப் பார்த்து அங்கிருந்து ஏறி வந்திருக்கிறது. ஒரு மூன்று நிமிடங்கள் தாமதமாகச் சென்றிருந்தால்கூட ஆட்டைக் காப்பாற்றியிருக்க முடியாது.

ஆடுகள் ரயில்பாதை பக்கம் போய்க்கொண்டு இருந்தது. மறுபடி கால்சராயின் கிழிந்த பகுதியை விரலால் விரித்துப் பார்த்தாள். இரண்டு முள் விரல் நீளத்திற்கு இழுத்து விட்டது. இரண்டு சிவப்புக்கோடுகள் மேல் ரத்தம்மேவி கருத்துக் கொண்டிருந்தது. இடது தோள்பட்டையில் லேசான காயம்தான். ஆனால் சுடிதார் கை கிழிந்து விட்டது. உடம்புக்குப் பொருத்தமான சுடிதார். இன்னும் நிறம் மங்காமல் இருக்கிறது. விசேஷங்களுக்கு போட்டுப் போகும்படியாகத்தான் இருந்தது. கிழிசல் தெரியாமல் தைக்க முடியுமா என்று பார்த்தாள். போகட்டும். ஒரு ஆடு பிழைத்ததே. தங்கமணி இப்படி பொறுப்பில்லாமல் ஆடு மேய்க்கிறாளே என்று கோவம் வந்தது. அவள் மேலப்பாளையக்காரி. பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறாள்.

எப்படியாவது பி.ஜி படித்துவிட்டால் இந்த இம்சையிலிருந்து விடுபட்டு ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியும் என்று இருந்தது. பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த நீரைக் கொஞ்சம் குடித்தாள். புள்ளி ஆட்டின் கழுத்துப்பக்கம் இருகால்களையும் போட்டு கீழ்த்தாடையின் கடப்பல்லுக்குக்கீழ் கட்டை விரலை வைத்து பாட்டில் நீரை ஊற்றினாள். ஆடு கடக்கடக்கென்று ஐந்து மடக்கு நீரைக் குடித்தது. காலை எடுத்து, அவலாதி கழுதை சாகத்தெரிந்தயேடி, அதன் இடுப்பில் செல்லமாக ஒரு போடு போட்டாள். தூரத்தில் தன் கூட்டம் இருப்பதாக நினைத்து கத்தியபடி ஓடியது.

தண்டவாளத்தின் இருபுறம் உள்ள பள்ளத்தில் நாயுருவி செடிகளும் கருங்குழையும் ராகிப்புல்லும் அடர்ந்திருந்தன. ஆடுகள் அதில் இறங்கி வெடுவெடுவென மேய்ந்தன.

பெரிய சாம்பல் நிற மேகம் ஒன்று தனித்து வானில் நீந்தி வருவதைப் பார்த்தாள். தன் தலைக்குமேல் நிழல் பரப்பி கடந்து போனது. அதே வடிவில் இலந்தை, குடசப்பாலை, கரும்பொரசு, வெவ்வேல் மரங்கள் மீதும் வெட்ட வெளிச்சமான செங்கரட்டு சரிவுகளிலும் முட்புதர்களிலும் கிழியாமல் சிதையாமல் தோய்ந்து நோகாமல் பறந்து போகிறது நிழல். பள்ளம் மேடெல்லாம் அலுங்காமல் இறங்கி ஏறிப்போகிறது. தனித்து நிற்கும் குடைவேல் மரத்திற்கும் ஒரு கணப்பொழுது நிழல்தந்து போகிறது. வெம்பாறைக்குக் கீழ் களாக்காய் மரம் புதராக அடர்ந்திருக்கிறது. கரடிதட்டி குறுகி நிற்கும் ஒதிய மரத்தின் அடியில் வந்து நின்றாள். கரட்டின்மேல் கானல் அலை அசைகிறது. மரப்பட்டை இடையே பிதுங்கி கருஞ்சிவப்பில் இருந்த பிசினைத் தொட்டாள். அது மிதுக்மிதுக்கென்று அமுங்கியது. ஓடையுள்ள இடத்தில் இருந்தால் நன்றாக வளரும்.

அகன்ற சங்கம்புதருக்கு இந்தப்பக்கம் ஆவாரம் செடியில் சுற்றிப் படர்ந்திருக்கும் இலை ஒன்று மட்டும் படபடவென ஆடிக்கொண்டிருக்கிறது. என்னடா இது ஒரு இலை மட்டும் வேகமாக ஆடுகிறது என்று பார்த்தாள். அது நிற்காமல் ஆடிக்கொண்டிருப்பது விநோதமாக இருந்தது. கொஞ்சம் சாய்வாக நின்று குனிந்து பார்த்தாள். அந்த சங்கம்புதரில் சின்ன சந்தின் இடைவெளி நீண்டு அந்தப்பக்கம் தெரிந்தது. அதன் வழியாக புகுந்து வரும் காற்று சரியாக அந்த இலையில் மோதி தாலாட்டிக் கொண்டு இருக்கிறது.

பால்குடியை மறந்த பூவால் சாம்மல்போர் குட்டி தண்டவாளத்திலிருந்து மேட்டுக்கு ஏறி அந்தரத்தில் குதித்து வளளையான தன் உடல் நெளிய தண்டவாளத்தின் நடுவில் ஜங்கென்று நின்றது. அதைப் பார்த்துவிட்டு பூலி குட்டி அதே போல மேட்டில் ஏறி குதித்தது. சிரித்துக் கொண்டே ‘அடியே இப்பவே ஒங்களுக்கு புருபுருக்க ஆரம்பிச்சிருச்சா, பேசாம மேயிறத பாரு என்று தொரட்டியை சும்மானாச்சுக்கும் ஓங்கினாள்.

தூக்குப்பையைத் தொரட்டியின் மையத்தில் கட்டித்தொங்கவிட்டபடி தோளில் வைத்துக்கொண்டு தண்டவாளத்தின் இடையில் நின்று ஆடுகள் மேவெடுப்பதைப் பார்த்தாள். வடக்குப்பக்கம் இரு கரடு சிறு குன்றுகளுக்கு இடையே காகங்கள் பறந்துகொண்டிருந்தன. எரியும் வலது தொடையை குனிந்து ஊதிவிட்டாள். காற்றுப்பட இதமாக இருந்தது. திடீரென காகங்கள் சண்டையிட்டு எழுந்து கரைந்தன. தண்டவாளத்தை நோக்கி என்ன இந்த காகங்களின் ஆர்ப்பாட்டம் என சிமெண்ட் கட்டைகளில் கால்வைத்து நடந்து வந்தாள். சற்று நெருங்க காகங்கள் தண்டவாளங்களின் மீது அமர்ந்து தத்திக்கொண்டும் மாறிமாறி அமர்ந்து கொண்டு இருந்தன. சுரங்கமாக மாறிச்செல்லும் வலப்புற சுவர் ஓரம் காகங்கள் படபடத்து கரைந்தன. சற்றுவேகமாகச் செல்ல தண்டவளத்தில் அமர்ந்திருந்த காகங்கள் பறந்தன. வலப்புற சுவர் ஓரம் ஏதோ தெரிந்தது. ஒருவித நினநாற்றம் வந்தது. இன்னும் நெருங்க சுவர் ஓரம் இருந்த  காகங்கள் எழுந்து பறந்தன.

நெருங்கியபோது தலையில்லாத முண்டம் ஒன்று மல்லாந்து கிடந்தது. திரும்பி தட்டுத்தடுமாறி ஓடத்தொடங்கினாள். என்னமோ அந்த உடல் ‘அக்கா’ என்று கையெடுத்துக் கும்பிடுவதுபோல இருந்தது. ஒருவித துணிச்சலுடன் தொரட்டியை இறுகப்பற்றி திரும்பச்சென்று எட்டிப்பார்த்தாள். சிறுமுலைகள் இரண்டும் கடித்து சிதைந்து இருந்தன. உடலில் பொட்டுத்துணியில்லை. தோளும் கைகளும்தான் என்ன சன்னம். நீண்ட இளம் வழவழப்பான தொடையெல்லாம் ரத்தக்காயங்கள். விருந்து இலையை விரித்ததுபோல மாசுமறுவற்று இப்போதும் தெரிந்தது வயிறு. வடிவான ஒரு பெரிய குழந்தையின் நிறம் சுழன்று எழுந்தது. ‘ஐயையோ ஸ்கூட்டிப் பெண்ணே’ அலறிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள். ஆடுகளை விரட்டி அடித்து வீட்டை நோக்கித் துரத்தினாள். குமரியின் முண்டம் எழுந்து ‘என்ன கூட்டிட்டுப் போக்கா கண்ணு தெரியலை’ முண்டம் கெஞ்சிக்கொண்டு தள்ளாடி பின் தொடர்வதுபோல பிரமை புகுந்தது.

ஊருக்குள் நுழையும்போதே ‘யப்போ சென்னப்பன்பாளையத்துப் பிள்ளையப்போ… சென்னப்பன்பாளையத்துப் பிள்ளையப்போ’ அலறிக்கொண்டு ஓடினாள். காற்றின் போக்கில் தீ பற்றி எரிந்துபோவது போல ஊரே கேகேயென்று எழுந்தது. ‘யப்போ அது குட்டியப்போ… நிலவப்போ… பிஞ்சப்போ… அழகப்போ’ தொட்டிப்பக்கம் இடறி கல்லில் டங்கென மோதி விழுந்தாள். அந்த முண்டத்தில் தன் தலையைப் பொருத்திக் கொண்டது போல இருந்தது. தன் இடது தோளையும் வலது தொடையையும் பார்த்தாள். ரத்தச்சுவடுகள். கிடுகிடுவென அதிர்ந்தது. வாந்தி வருவது போல இருந்தது. வேர்க்க வேர்க்க மயக்கம் வந்தது.

அந்தக் கரட்டின் குன்றுகள் எழுந்து நெளிந்து குலுங்கத் தொடங்கின. சப்தம் மற்ற பேரோசையில் பிளிறின. காட்டின் வழியாக யாரோ துரத்த கள்ளிமுள்ளில் சிக்கிக்கொண்டாள். கழுத்தறுக்க நீட்டிக்கொண்டு வருகின்றன வீச்சறுவாள். சூறாவளி ஒன்று காட்டையே சுழற்றி எறிவது போல அடர்ந்து விரிந்து சுழல்கிறது. கிளுவை மரங்களும் காற்றாடி மரங்களும் கிளைகளால் மாரில் அடித்துக்கொண்டு முறிய ஓலமிடுகின்றன. செங்குன்றின் உச்சியில் மெல்லிய பெண்கரங்கள் ஒரு குமரியின் முகத்தை ஏந்திக்கொண்டு உயர்ந்தன. ரெட்டை சடை போட்ட ஒரு குட்டிப்பெண்ணின் முகம் சிரித்தபடி வானத்தில் ஏகி பறக்கிறது. நிலவாகி ஒளியை சிந்துகிறது. நிலவு பொழியும் கரட்டின் வெள்ளைக்கல்சாலை வழியே ஒரு குட்டிப்பெண் ஸ்கூட்டியை கூந்தல் பறக்க ஓட்டிச் செல்கிறாள். சாலையின் மரங்கள் தலைதாழ்த்தி குலுங்குகின்றன. குன்று பிளந்து பெருமூச்சொன்றை விட்டு மூடுகிறது. வில்வமரத்தின் உச்சியில் தோன்றிய கன்னியின் முகம் ஒன்று தன் உடலைத் தேடித்தேடிப் பார்க்கிறது.

அம்மா மேசை காற்றாடியைத் தூக்கிவந்து வைத்தாள். சின்னம்மா தன் மடியில் கிடந்த விஜயலட்சுமியை ‘என்னம்மா செய்யுது’ என்றாள். ‘அம்மா என் முண்டம் ரயில் தண்டவாளத்தில கெடக்குதும்மா’ என்றாள்.

பிற படைப்புகள்

Leave a Comment