1
“Come – வா
Don’t come – வராதே
You came – நீ வருகிறாய்
You do not come – நீ வரவில்லை
Yes I come – ஆமாம் நான் வருகிறேன்
No I do not come – இல்லை நான் வரவில்லை
what a beautiful word come is – என்ன அழகான வார்த்தை ‘வா’ என்பது
How a beautiful Word come is – எவ்வளவு அழகான வார்த்தை ‘வா’ என்பது
ஒரே மூச்சில் சொல்லி முடித்ததும் எல்லாம் சரியாக வந்துவிட்டதா? என வினவும் தொனியில் முருகனைப் பார்த்துச் சிரித்தான் சிவா. இராஜபாளைய ஸ்கூலில் இருந்து முருகன் படிக்கும் ஸ்கூலுக்கு சிவா வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இங்க்லீஷ் மீடிய பயலுகளில் சிவா கொஞ்சம் அப்பிராணி என்ற நினைப்பு முருகனுக்கு உண்டென்பதால் அவன் மேல் முருகனுக்கு கூடுதல் பிரியம்.
மொத பிரீடு வாங்கிய பச்ச மட்டையடி இன்னும் உணர்வழிஞ்சு போகவில்லைதான். இருந்து என்ன செய்ய? உதுத்துவிட்டு அடுத்த பிரீடுக்கு ஓடியே தீரவேண்டுமே! அந்த ஆயத்த நடவடிக்கையாகத்தான் சிவாவிடம் வசனம் படிக்கச் சொல்லிக்கேட்டான். எத்தனை வட்டம் கேட்டாலும் முருகனுக்கு இது ஆச்சரியமாகத்தான் இருக்கும். “பாத்துக்கோ! பெற சொல்லுதயே” யென அசந்துபோய் தலையாட்டுவான். “அந்த அறுதளிக்கு பதிலு, நீயே எனக்கு குரூப் லீடர் ஆயிருக்கலாம்” என்று தன் ஆற்றாமையையும் சொல்லுவான்.
மேப்படி வசனத்தை பள்ளிக்கூடத்தில் பிரபலப் படுத்தியது ஓவிய வாத்தியார்தான். இதையே அவர் இன்னும் தோரணையாகச் சொல்வார். கையை பின்னாடி கட்டி ரெண்டு கண்ணையும் இருக்கலாக மூடி, தலையை பின்னால் தொங்கப் போட்டது போல சாய்த்து “ப்பு! இம்புட்டுத்தானாங்கும்” என்ற பாவனையுடன்.
“பூராங் மொட்ட மனப்பாடந்தாங் எங்க அப்பா படிக்கைல இருந்து இப்பத் தண்டியும் இதே தாலியருப்புத்தாங்” என பெரியண்ணன்மார்கள் சொன்னாலும் இந்த வரியை அடி மாறாமல் சுலுவாக அடிப்பதென்ன லேசான காரியமா?
இருந்திருந்து கடைசி வரியை முடிக்கும் போது அவருக்கு என்ன நோக்காடு எடுக்குமோ! பூச்சு – பொட்டுக்களை புடிக்க விருட்டென்று நீளும் பள்ளி நாக்கைப் போல அசுர வேகத்தில் நீளும் அவர் கை அகப்பட்டவன் காதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும். அகப்பட்ட பயல் அந்த வசனத்தை மறுபடி அழ வேண்டும். சொல்லத் தெரியவில்லையென்றால் அன்றைக்கு கூத்து அவனை வைத்துத்தான்.
“நேத்து ஒரு பயலப் பாத்தேங். நம்ம ஸ்கூல்ல படிச்ச பயதாங் காலேஜ் எல்லாம் முடிச்சுட்டாங். சார்! நல்லாதாங் படிச்சேங் செஞ்சேங் ஆனா இங்க்லீஷ்ல புளுயன்சி வரமாட்டிங்கு சார். நீங்க சொல்லுதப்ப தெரியாம போச்சு சார்ங்காங்! புளுயன்சி எப்படி புடுங்கும்?” என்ற வகையறா கதைகளை அவன் காதைப் பிடித்து ஆட்டிக்கொண்டே சொல்லுவார். அகப்பட்ட பயல் கொஞ்சம் நறுங்கலாக வாய்த்தால் ரெண்டு காதவும் பிடித்து தரையில் இருந்து அரையடிக்கு அச்சலக்காக தூக்கி இறக்குவார். பயல் வலியில் கத்தினால் அவனுக்கு துணையாக இவரும் சேர்ந்து கத்துவார். ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கலாம்.
2
‘பொத்’ என்ற சத்தத்தோடு வேலு வாத்தியார் கொண்டு வந்த பேப்பர் கட்டு மேசை மீது விழுந்தது. மொத்த கிளாசையும் இருளத்துப் போகச் செய்ய அந்தச் சத்தம் தாராளம்! காலையில் முதல் பிரீடு இப்படி விடிய வேண்டியதில்லை. ஒரு நாள் இரு நாளா? தினமும் எடுத்ததும் இங்க்லீஷ் பிரீடுதான். முருகன் பாணியில் சொன்னால், “டெய்லியுங் மொத பிரீடு இங்க்லீசுதாங் வைக்கனும்னு வச்சவன கொண்டாந்து மரக்கட்ட ஸ்கேல மாத்திப் புடிச்சு மொளியிலே………. அடிக்கணும்”
காலை ஒன்பது மணி வரையில் வேப்ப மரத்தடியில் எஸ்காட்ஸ் எமகா வண்டியைக் காணோம். இத்தினியூண்டு நம்பிக்கை! இப்போது அதிலும் அரலாரி மண் விழுந்துவிட்டது. வேலு வாத்தியார் வந்துவிட்டார். அதுவும் பேப்பர் கட்டும், பச்ச மட்டையுமாக வந்துவிட்டார். காலையில் பஸ்டாண்டு புள்ளையார் கோயிலைக் கடக்கும்போது முருகனுக்கு இருந்த ஒரே வேண்டுதல் “மொத பிரீடு இங்க்லீஸ்லயும், ரெண்டாம் பிரீடு ஓவியத்துளயும் எப்புடியாது காப்பாத்தி விட்டுறு” என்பதுதான்.
முதல் பெஞ்சில் உக்காந்திருந்த மணிராசுதான் எப்படியோ துருப்புடித்து பின்னாடி உள்ளவர்களுக்கு முதற்கட்ட அறிக்கை தந்தான். “இன்னியுங் திருத்தல போலுக்க” மணிராசு கையாட்டியதும் முருகனுக்கு மேலே நிமிர்ந்து பார்க்கவே தைரியம் வரவில்லை. “இன்னைக்கு குண்டி பழுக்கப் போறது உறுதி” பக்கத்தில் இருக்கும் குருவுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான்.
“சொன்னம்ல மூர்த்தி வாத்தியார்ட போன பேப்பர வாங்கிட்டு இவருக்கு வந்த அவுக கிளாஸ் பேப்பர தள்டாருனு” இந்தக் கொள்ளையிலும் தன் கணிப்பு தப்பவில்லை என்று முருகன் காதில் குரு ஓதிக் கொண்டிருந்தான்.
“அவனுககிட்ட குடுத்து திருத்தச் சொல்லிட்டா நமக்கு வாய்ல குடுத்து பத்திருவாங்க”
“எங்கிட்டுக் கூடி பாத்தாலும் இன்னைக்கு ஒப்பேறாது”
3
எல்லோருக்குமே ஓவிய வாத்தியார் மேல் பயம் உண்டு. விதிவிலக்கென்று ஒன்று உண்டென்றால் அது ‘பவுல்’ வாத்தியார் வகுப்பைச் சொல்லலாம். விதிவிலக்கெல்லாம் விதியாகாதே!
“உம்ம சோலியென்ன! படம் வரஞ்சு போடுததுதான? அதமட்டும் செஞ்சேர்னா போதும். எங்கிளாஸ் பயலுகளுக்கு இங்கிலீஸ் எடுத்துத் தவிக்க வேண்டாங். ஒரு சம்பளத்துக்கு மட்டும் வேல பாரும் போதும்”. என்று ஒரு முறை நேராகவே சொல்லிவிட்டார்.
நமத்துப் போன சுள்ளி ஏதோ ஒரு முனையில் சூடு கண்டு பத்துவது போல என்றைக்கோ அவர்களுக்குள் கிளம்பிய பகை பவுல் வாத்தியார் முந்திக் கொண்டார். மேற்கொண்டு அதற்கு பதில் ஏதாவது சொல்ல போய், “Simple, Compound, Complex ல இதுக்கு என்ன வரும்னு சொல்லு பாப்போம்” என பவுல் வாத்தியார் திருப்பிக் கேட்டால்! அதிகப் புடிச்ச மூஞ்சூறு கழனிப்பானையில் விழுந்த கதையாகி விடும். போதாக் குறைக்கு, ‘Not only but also’ வந்தால் இது. In spite of Two ங்குற வார்த்த வந்துருக்கா? வேற யோசனையே வேண்டாங்! கண்ண மூடிட்டு என்ன செய்யு! இத போட்டு விடு” என்று யாரோ ஒரு வல்லாலகண்டன் வரைந்து கொடுத்த அட்டவணையை வைத்து களமாடிக் கொண்டிருந்த 98 சதவிகித இங்கிலீஸ் வாத்தியார்கள் உள்ள பள்ளிக்கூடத்தில் எஞ்சிய ரெண்டு சதவிகிதமாக பவுல் வாத்தியார் இருந்தது ஓவிய வாத்தியாருக்கு பீதியை கிளப்பிவிட்டது.
அன்றிலிருந்து தன் அதிகார வரம்பு 6, 7, 8 வகுப்பு தமிழ் மீடியம் பயலுகள் மட்டும்தான் என்பதையும் அந்த எல்லைக்குள் வட்டச் சம்மணமிட்டு சுகமாகவும் சுலுவாகவும் ரெட்டைச் சாட்டை சுழட்டலாம் என்பதையும் மறுவரையறை செய்து கொண்டார். அதில் ஒரு சாட்டைதான், ‘Come – வா, Don’t Come – வராதே’ என்ற ஒரு முழத்திற்கு நீளும் தரித்திரியம். ரெண்டாவது கொஞ்சம் லேசுதான். ஆனால் தலகட்டு அதிகமென்பதால் சிக்கலானது.
Brake – Braked – Braked – வேகத்தைக் குறை
Believe – Believed – Believed – நம்பு
Walk – Walked – Walked – நட
இப்படி ஏதாவது ஒரு வினைச் சொல்லை எடுத்து அதை மூன்று காலமாகச் சொல்ல வேண்டும். முக்காலமும் சத்தியமாக அந்தப் பிரீடு முடிவதற்குள் பயலுகள் பேருகாலம் ஆனா பரிதாவத்துக்கு வந்துவிடுவார்கள். ஏதோ “ஏ” கிளாஸ்காரர்கள் பாடு கொஞ்சம் தேவலைதான்.
4
“English is a Funny Language” என்று அடிக்கொரு முறை வேலு வாத்தியார் சொல்வதுண்டு. யாருக்கு ஃபன்னோ, ‘ஏ’ கிளாசுகளில் ஒண்டுக்குடுத்தனம் போடும் இங்கிலீஸ் மீடிய பயலுகளுக்கு ஃபன்னோ ஃபன்தான். ஐஞ்சு பாடமும் இங்கிலீசில் படிக்கும் பயலுக்கு ஒரு பாடம் எம்மாத்திரம் “ப்பு” என்று ஊதிவிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு டெஸ்ட்/பரிச்சை பேப்பர் திருத்தும் அதிகாரம் உண்டு. “இந்தா புடி” என்று சில மேலாதிக்க விவரங்களை பேப்பர் திருத்தும் குழுவுக்கு வேலு வாத்தியார் குடுக்கத் தொடங்கினார்.
“2 மார்க் கேள்வில ஒரு தப்புக்கு ½ மார்க் வெட்டிரு, Synonyms – Antonyms அதுல ஏதாவது ஒரு எழுத்து மட்டும் மாறி எழுதுனா அரை மார்க் போடு, சும்மா அவன் இஷ்ட மயித்துக்கு எழுதிருந்தா அடிச்சு விட்ரு, பேரகிராப்புல 5 தப்பு வரலாம், ஒரு தப்புக்கு ஒரு மார்க்க வெட்டு, 6 தப்புக்கு மேலன்னா ஏங் கிட்ட கேக்கவே வேண்டாங் நேர குறுக்க வெட்டீரு! மனப்பாடப் பாட்டுல எத்தன 5 வரி கேட்ருக்கா? 4 தப்புத்தான்”
“சார், சார், சார்” 5 தப்பில் தொடுக்கிக் கொண்டிருக்கும் பெருங்குழுவின் கருணைக் கோரல்கள் ஆங்காங்கே எழுந்தது. அலற அலற மறு இழுப்புக்கு மட்டையை ஓங்கும் நெஞ்சுத் திடம் போலீசுக்கு அடுத்து வாத்தியார்களுக்கு மட்டுமே உண்டு. அங்கு முடியுமா?
“எவங் கேட்டது? எத்தன வட்டம் கிளாஸ்ல டெஸ்ட் எழுதீருக்கு! கேட்டவங் இப்ப எந்திச்சு கேளு! அந்த மொகரைய பாப்போம்” இனி மறுவார்த்தை பேச முடியுமா? அடுத்த நொடி சட சடவென பேப்பர் திருப்பும் சத்தம் சட சடத்தது.
5
“சிவா, லேசா இருக்க மாறி மூணு வார்த்த சொல்லு”, ஓவிய பிரீடு எப்பவும் சொந்த கிளாசில் கிடையாது. பள்ளிக்கூட மைதானத்தைத் தாண்டி தெக்கடைசியில் உள்ள ஆடிடோரியத்தில்தான். போகும் பாதையில் இப்புடி ஏதாவது ஒரு இங்க்லீஸ் மீடியா பயலைப் பிடித்து வார்த்தை கேட்பார்கள்.
“Come – வா” வேண்டாமா? சிவா சிரித்தான்.
“ஆத்தே எத்தத்தண்டி! நானு நடுவுல போய் உக்காந்துகிறுவேங்! நீ லேசா மூணு வார்த்த மட்டுஞ் சொல்லு”
“லேசா என்ன லேசா? இருக்கதே மூணு வார்த்த! நாங், சொல்லுறத சொல்லு உன்னய எழுப்ப மட்டாரு”
“என்னது?”
“Bad, Worse, Worst – மோசம்”
“ஈடி, ங்கு இப்புடி னு வரும்லா அது ஒன்னையுங் காணல”
“ங்கா?”
“ING – ங்கு, sleeping, Walking அந்த ங்கு”
“அதெல்லாங் இதுல வராது”
“………..”
“என்ன ஆ! னு பாக்க? இது ‘Verb’ பே கெடயாது சும்மா சொல்லி விடு அவருக்கு தெரியாது”
“நல்லா இருப்ப சாமி இங்கயே சொன்னயே, அங்கன போய் நின்னுகிட்டு என்னத்தையாவது ஒலட்டிட்டம்னா இதாங் சாக்குன்னு என்ன இழுத்து விட்டு கூத்து பாத்துருவாங் அந்தாளு! இப்புடி ‘ed’, ‘Ing’ இப்புடி வார்த்த வந்தாத்தா சரிம்பாரு! போனாட்ட Cook, Cooked, Cooking னு சொன்னல்ல? இப்பம் வரைக்கு நெனவுல இருக்கு. அன்னைக்கு மனசுலே வச்சுருந்தேங் கேட்டுக்கோ, கரெட்டா ஒரு ஒருத்தனா எந்திக்கப்ப அந்த குரு கண்டாரோளி கேட்டாம்னு ஒளறிட்டேங். அத அவங் சொல்லி எனக்கு வாய்ல வச்சுட்டாங்”
“Cry, Cried, Crying – அழு” நீ சொன்ன ‘ஈடி’, ‘ங்கு’ ரெண்டும் வந்துருச்சு
“அதாங் சரி! உங் கூட்டாளின்னா புதுப்புது வார்த்தையா சொல்ல வேண்டியதாங். அயிரைக்கு என்னத்து வெளாங்குச் சேட்டங்கேங்”
“எப்புடி எப்புடி”
“புரியலியோ, தமிழ்லதான சொன்னே” கைரெண்டையும் பின்னாடி சேர்த்து நெளித்துக் கொண்டே முருகன் சிரித்தான்.
“அர கொறையாதாங் புரியுது”
“ஆங்! ‘All the Glitter that Gold” மாதிரி இங்க்லீஸ்ல ஏதாவதுன்ன புரிஞ்சுருக்கும் என்ன?
“என்னது, என்னது”
“அதாங், ‘All in Glitter gold’ னு மொழிபெயர்ப்புல ஒன்னு வருமா? மின்னுவதெல்லாம் பொன்னல்ல! அது”
“நீ ஒரு நேரத்துக்கு ஒன்னு அடிச்சு விடுவியே! அது ‘All the Glitters is not gold”
“ஏதோ ஒரு தாலி! glitter gold னு வந்தா அதுன்னு நாவவம் வச்சிருந்தெங். இப்புடி வந்துருக்கும்னா, மணியா எழுதி லட்டு மாறி மார்க் வாங்கிருப்பெங். வேற கழுதய கேட்டுத்தான் காலைல அடி”
“ஓங் லீடர் சொல்லித் தர மாட்டனா?”
“அவனா நீ வேற! அவனயெல்லாங் நெய்ல வறுத்து குசுவுல தாளிச்சுருப்பாகனு பாக்கேன். இருந்தாப்புல ரெம்ப மண்டையா பேசுவாங்”.
சிவாவுக்கு அதக் கேட்டு சிரிப்புத்தான் வந்தது. “சரி அந்த ஐர கதைய சொல்லு”
“ஐர மீன் எவளோ தண்டி இருக்கும்” என்றவன் சுண்டு விரலைக் காட்டி “இம்புட்டுத்தண்டி இருக்குமா? என்ன குதி குதிச்சாலும் வேட்டித்துண்டப் போட்டு புடிச்சுரலாங். இதுவே வெளாங்னு வைச்சோ, அதுவே ஒரு மொழத்துக்கு இருக்கும். இங்கனதான இருக்குனு புடிக்க போனா ஒரே எவ்வுல கெலிச்சு வேற திக்கம் போய் விழுந்துரும். அது சேட்ட பண்ண வேண்டியதாங், ஐர என்னத்துக்காவும்.”
6
“சார் Translation” என நமட்டுச் சிரிப்போடு இழுத்தான் விக்னேஷ். அவனேதான் முருகன் குரூப் லீடர்.
“இந்தக் கூதியாங் வேற….. எட்டாப்புலே இவனுக்குத்தாங் வாயிருக்குனு நெனப்பு. இவங் எல்லாத்தவும் படிச்சு கரைச்சு குடிச்ச மானிக்கு வாரானே வரத்து! அவுக கணக்குல பெயிலு இங்க்லீசுல லீடர் மயிறு” முருகன் பொறுமித்தள்ளினான். குருவுக்கு அதே நினைப்புத்தான் ஆனால் வாய் திறக்கவில்லை. போன முறை சிலர் சிரிக்கச் சிரிக்க அடிவாங்கிய அனுபவம் அவனுக்குண்டு. அன்று “வாடா கட்டிரெத்தம் நீயா வந்துரு பாப்பம்” என வேலு வாத்தியார் அழைக்கும் போது குருவுக்குப் புடிபடவில்லை.
“எழுதுனவனுக்குத் தெரியுங் வந்துரு” என ரெண்டாவது எச்சரிக்கை வரும்போது பொறி தட்டி விட்டது. முருகன் தொடையை அழுத்தி “என்னத்தாம்ல” என எழுந்து நின்றான்.
“Blood Is thicker then Water” ஐ “தண்ணியை விட ரெத்தம் கட்டியானது” என மொழிபெயர்த்திருந்தான் குரு. “சார்……. சார்……… சார்” என விழுந்த மூணு குடுப்புக்கும் அலறியவனுக்கு தாரை தாரையாய் கண்ணீர் ஓடியது. அந்த பயத்தில் காலாண்டுக்கு மொழிபெயர்ப்பையே துப்புரவாகத் தொடவில்லை. ஆனால் இன்று விடிந்ததென்னவோ முருகனுக்குத்தான். திருத்திய பேப்பர் மேப்படி வட்டத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது. அந்தத்தாள் மட்டும் மடமடவென்று அங்கனக்குள்ளயே ஏழு எட்டு கைமாறி பின் கடைசியாக வாத்தியார் கைக்குப் போனது.
7
அடிபுடியாக முண்டியடித்து ஆடிடோரியாத்தின் நட்ட நடுவில் போய் உக்காந்து கொண்டான் முருகன். அடியில் இருந்த மொசக்கித்தரை குளிர்ச்சி டவுசரைத் தாண்டி குளிரூட்டியது. வருசக் கொடை கேட்கும் ஊர்சாமி போல திடீர் என்று தான் ஓவிய வாத்தியார் என்பது பிடதியில் வசகேடாக உரைக்கும் போது அவரும் சிலவற்றைக் கேட்பார்.
ரெண்டு டசன் வெள்ளப்பேப்பரையும், ஒரு மஞ்சள் நிறச் சார்ட்டையும் வாங்கி பேப்பரை நடுவில் நூல் போட்டு தைத்து, அதற்குத் தக்கன சார்ட்டை பக்குவமாக வெட்டி, அதை பேப்பருக்கு அட்டையாக்கி பசை போட்டு ஒட்டி, அந்த அட்டையின் கீழ் இருந்து ஐந்து செண்டி மீட்டர்க்கு மேல் சிறிது, நடு, பெரிது என்ற அளவுகளில் வட்டமேடை வரைந்து, அதன் நடுவில் இருந்து பதினைந்து சென்டி மீட்டருக்கு கம்பம் எழுப்பி அதன் மேல் கொடி வரைய வேண்டும். இதுபோல ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு படமுண்டு.
ஐம்பது பைசாவுக்கு மூன்று தாள்கள் வரும் சாதாப் பேப்பர் எல்லாம் ஆகாதாம்! ரெண்டு தாள் மட்டும் வரும் நயம் பேப்பர்தான் வாங்க வேண்டுமாம். கோடு போடாத கட்டுரை நோட்டே 12 ரூபாய்தான். இங்கு பேப்பரே 12 ரூபாய் வந்து விட்டது. இனி சார்ட் மூனம்பது. மொத்தம் பதினைந்தம்பது. சேப்பில் கெடந்த ரெண்டு ரூபாயை போட்டும் ஒன்றரை ரூபாய் கடஞ்சொல்லித்தான் கடையை விட்டு வெளியேறும்படியிருந்தது.
வந்து ஐந்து நிமிடமாகியும் ஓவிய வாத்தியாரை காணவில்லை. முதலில் சங்கர் எழுந்து போய் வாசலை நோட்டமிட்டான். வெளியே யாரும் தெரியவில்லை. உள்ளே எங்காவது இருந்து மைதானத்தைத் தாண்டி ஆடிடோரியத்திற்கு நடந்து வந்தாலும் சுதாரித்துக்கொள்ள ஐந்து நிமிடங்கள் உண்டு. திடுதிடுவென்று ஓடிவந்து சர்…..ர்….ர்.. என்று ஒரு சறுக்கு சறுக்கினான். அடுத்தடுத்து ராஜேஷ், முரளி, மணி, “சர்……சர்…..சர்….” கூட்டம் கூடி விளையாட்டு சூடுபிடித்தது.
முருகனுக்கும் உக்காந்தே இருக்க எரிச்சலாக வந்தது. ஏதோ நியாபகத்தில் வேகமாக எந்திக்க பிட்டிச் சதையில் மட்டையடி வாங்கிய இடம் வின்னுவிண்ணென்று தெரித்தது. “சரி இத்தோட கழிஞ்சது” என்ற நினைப்புடன் சறுக்கு விளையாட்டு நடக்கும் இடத்துக்கு வந்து வேடிக்கை பார்த்தான். குண்டு ‘நீராத்து’ ஓடி சறுக்கி விழவும், மேலும் குஷி கிளம்பியது. அடுத்து சதீசும், முருகனும் சருக்க ரெடியாகும் போது, ஏதோ உள்ளுக்குள் மணியடித்தது நீராத்துக்கு! “எல வண்டில” எனச் சத்தம் குடுத்தான். உடனே சுதாரித்துக் கொண்ட எல்லாரும் இடத்துக்கு ஓடி பதுங்கிக் கொண்டனர். ஓவிய வாத்தியார் வண்டிதான். விட்டுப்போன நேரத்தை சமம் செய்கிறார் போல!
8
“சூப்பரு ரோல் நம்பர் ‘305’ எவன்டா?”
வேலு வாத்தியார் சத்தம் கேட்டதுமே முருகனுக்கு கால்கள் சூடேறி முதுகு காந்தியது. ஒவ்வொரு அடியும் நெஞ்சுக் கூட்டுக்குள் புடிக்கும். பச்ச மட்டையடி என்பதால் ரெண்டு வெரக்கட அகலத்துக்கு முதலில் பட்டைத்தடம் விழும். பின்மதியத்துக்கு மேடெழுந்து சாயங்காலத்துக்குள் சிவந்து கன்னிப் போகும். சிவந்த இடம் பச்சையாகி அதே இடம் கருப்பாகி இயல்புக்கு மாறும். வீட்டுக்கு தெரியாமல் சமாளிக்க நான்கு நாளைக்கு கைலியை இறக்கி விட்டுக் கொண்டே நடமாட வேண்டியது வரும்.
“விருட்டுனு எந்திச்சுரு பெற அதுக்கு வேற வீணா ரெண்டடி வாங்காத.”
“போச்சு வெச்சு வணங்கப்போறாங்” என்றான் குரு. முருகன் மேசை மீது வைத்திருந்த கையெல்லாம் ஈரம்.
“சார்” என கம்மிய குரலோடு எழுந்த முருகனை நோக்கி மட்டை நீண்டு மேடைக்கு அழைத்தது. மேடையில் மரநாற்காலி ஒன்று உண்டு, சௌகர்யமாக அமர்ந்து கொள்ள, இருந்ததும் எழுத்து மேசையின் ஓரத்தில் ஒரு தொடையை அமர்த்தி மட்டையை சுழட்டி “வா”யென தலையாட்டும்போது எளியவனை பதற வைக்கும் அதிகாரத் தோரணை வந்து விடுகிறது வாத்தியார்களுக்கு.
“கிட்டத்துல வா, என்னமோ மனையடி சாஸ்திரமேல்லாங் எழுதிருக்க?” முருகனுக்கு மொழிபெயர்ப்புதான் என்று புரிந்தது. கருமத்தை விட்டுத் தொலைத்தால் பெயில் ஆவது உறுதி. எழுதித் தொலைத்தால் கேவலப் படுவது உறுதி. ஆனால் பல முறை வரி வரியாக உறுதி செய்து எழுதியது போலத்தான் முருகனுக்கு நினைவு.
“East or West home is best” என்பதற்கு “கிழக்கு, மேற்கில் வீடு இருந்தால் சிறந்தது” என்று திருத்தமாக எழுதியிருந்தான்.
“சார்…. சார்… சார்” என தயங்கி நின்றிருந்தான் என்றால் கூட “கைய்யக் கிய்ய அடிவிழுவும் போது ஊடால விட்றாத எழும்பு ஒடிஞ்சு போவும் திரும்பு திரும்பு…” என்ற அவர் வழக்கமான வசனத்துடன் அடி கொஞ்சம் இழந்து விழுந்திருக்கும். பதட்டத்தில் வந்த முருகன் வந்த வேகத்தில் திரும்பி குண்டியை அடிகுடுக்க தோதாகக் காட்டியது அவருக்கு இளக்காரமாக வந்து நிற்பது போலப் பட்டுவிட்டது.
“கை ரெண்டவும் தூக்கி மேல செவுத்துல வைடா” என்றொரு அரட்டு போடும்போது அறை முழுவதும் பீதியடையும் என்பது அனுபவத்தில் அவரடைந்த ஞானம். அறிவு தோற்கலாம் ஞானம் தோற்குமா? முருகனுக்கு குலையாடிப் போனது. மூன்றடிக்குப் பின்னால் போன மட்டை சடாரென்று பிட்டியில் இறங்கும்போது பெறந்தலையில் இருந்து குதிங்கால் வரையில், குண்டியில் இருந்து குஞ்சாமணி வரையில் அதிர்ந்தது. மூச்சை அவனாக இழுத்தானா? இல்லை அதுவாக உள்ளுக்குள் சுழண்டு சுருக்குப் போட்டுக் கொண்டதா? எனத் தெரியவில்லை. மூணாவது அடி வாங்கியதும் அவ்வளவுதான் என்ற பரிதாவத்தில் ரெண்டு கையையும் குண்டியில் வைத்து பரட்டுப் பரட்டென்று தேய்த்துக் கொண்டே விலகினான்.
“உன்னய யாரு இப்பம் திரும்பி போவச் சொன்னது” அந்த மட்டில் விட்டால் ரெண்டு அடி விழும் “வேற என்ன பெருசா” என்று குளிர்விட்டு போய் விடும் அல்லவா! அதை எப்படி அனுமதிப்பது.
“சார்…..” இந்த முறை உண்மையில் அவன் வார்த்தையும் செயலும் பலவீனமாகவே கிளாசில் இருக்கும் 59 பேருக்கும் தெரிந்தது. வாத்தியார் அந்தக் கூட்டத்தில் சேர்த்தி இல்லையே.
“உன்னை இப்பம் திரும்புனு மட்டுந்தாங் சொன்னேன்! வேற ஒன்னுங் பேசச் சொல்லல”.
“சார், சார்” என்றபடியே முருகனும் திரும்பினான். காலங்கடந்து வந்த ‘சார்’க்கு மதிப்பு கிடையாது.
“திரும்பு, இருக்….கது ரெண்……டே ரெண்….டு ம்ம்….ம் திரும்பு”
“சார்…..சார்……சார்”
“திரும்பு அந்த ரெண்……ட ரெண்டப்……படிக்க வழியக் காணம் ஓடு” வார்த்தைகள் வெட்டுண்ட இடங்களிலெல்லாம் மட்டை ஓங்கல்களும் வெளாசல்களும் ஒட்டுப்போட்டது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நகண்டான்.
“இந்தா இத எடுத்துட்டுப் போ” மட்டை பேப்பரை மேசையிலிருந்து தள்ளியது. பெஞ்சுக்கு வரும்போது இங்கிலீஸ் மீடிய சிவாவிடம் கேட்டான்.
“அதுக்கு என்ன வரும்”
“எலி வலையாயினும் தனி வலை வேண்டும்” சிவா மெதுவாகச் சொன்னான். கேட்ட முருகனுக்கு ஈரேழு லோகமும் சுழண்டது.
இதுல ‘Rat’ ங்க வார்த்தயே வரலையே” நா வறண்டு கேட்ட முருகனைப் பார்க்க சிவாவுக்கு பாவமாக இருந்தது.
“இது ‘proverb’ இங்கிலீஸ்ல அப்புடிதாங் இருக்கும். தமிழ்ல அப்புடியே மாத்தக் கூடாது முருகா” என்றான். முருகன் அவன் பெஞ்சில் பேப்பரைப் போட்டு உட்காரும் போது சொன்னான்.
“என்ன சுண்ணி இங்கிலீசோ”
9
இடம், பொருள், ஏவல் பாத்து நடந்தும் குப்புறப் போய் விழுந்து கிடக்கும்படிதான் ஆகிவிட்டிருந்தது. இது மட்டையோ, மூங்கில் பிரம்போ அல்ல! ஏதோ மரக்கொப்பு. ‘கெடாவ’ வாகான கொப்பு. கொப்பில் கிளை விட்டிருந்ததை ஒடித்துத் தரித்த இடத்தில் கசிந்த தண்ணிப்பிசின் கூட இன்னும் ஈரம் காயவில்லை. ஓவிய வாத்தியார் வரக் கொஞ்சம் தாமதமானதே இதற்குத்தானோ என்று கூட முருகனுக்குத் தோன்றியது.
எழுபத்தி மூன்று பேரில் முப்பத்தி மூன்று பேர் இடுப்புயர ஆடிட்டோரிய மேடையை ஒட்டி நின்று, அப்படியே மேடைத் தரையில் நெஞ்சு சாயப் படுத்திருந்தனர். இடுப்புக்கு மேலான உடம்பும், தலையும் மேல் நீட்டிய கையும் தரையோடு தரையாக இருக்க முருகன் லேசாகத் தலைதூக்கி ஒரு முறை பார்த்தான். வாட்சை வேகமாகக் கழட்டி மேசையில் வைத்தார் வாத்தியார்.
முருகனுக்கு ஒரு நினைப்பு. அடிக்கும் ஆள் நடுவுக்கு இறங்கி வரும் போது கொஞ்சமாவது அயரமாட்டாரா? சடேர் என்று முதலடியிறங்கவும் அலறியபடியே வெளு வாங்கியவன் துள்ளிக் குதித்தான். புள்ளிக்கு ஒரு இழுப்பு என்ற கணக்கில் அடி விழுந்தபடியே இருந்தது. கிட்டத்தில் படுத்திருந்த பயலுகளின் மூச்சொலிகளும், எட்டத்தில் இருந்து நெருங்கிக் கொண்டிருந்த கம்பு வெளாசல்களும், அடிபட்டவன் சுத்தியோடும்போது சுழண்டு விலகும் அலறல்களும் முருகனை வளய வளய வந்தது. கம்பு கிட்டத்தில் வரும்போது சட்டென சில நொடிகள் ஒய்வு கொண்டது. ஓரக்கண்ணில் பார்க்கும் போது அவன் அருகில் ஒரு ‘பேன்ட்’ கால் நிற்பதை கவனித்து விட்டான். அவ்வளவுதான் ஆனமட்டும் கண்ணை இறுக்கிக் கொண்டான்.
முருகன் ஒரு முறை மோட்டார் ரூமின் மீதேறி கிணற்றில் ‘சொர்க்’ அடித்து பெட்டுக்குழி வழியாக எழுந்து விட்டான். அப்போது கவ்விய அதே ஈரக்குலை பதறச் செய்யும் இருட்டு, முதல் நொடி வெயில் மறையும் இருட்டாகி, அடுத்த நொடி ஆள் மறையும் இருட்டாகி, இறுக்கலாக மூட மூட கண்ணுக்குள் இருட்டு திருவல் திருவலாக உதிரும் தருவாயில் இறங்கியது அடி!
“ஒத்தாக்கூதி” கட்டிய பல் பிரியாமல் ‘நா’ உள்ளுக்குள் சுழண்டது. இருட்டிலும் மின்னல் வெட்டு உண்டென்பதை அப்போது தான் முருகன் நம்பினான். பிட்டியை தேய்த்துக் கொண்டே வந்து உக்காந்தான். தரையில் இப்போது ஒரு பொட்டுக் குளிர்ச்சியில்லை.
வண்டிச்சத்தம் கேட்டு ஓடிவந்து உக்காந்ததும் முருகனுக்கு திமிரடித்துப்போனது.
“ஏங் நோட்டக் காங்கல குருவு”
“பேரெழுதலல்ல?”
“………..”
“போச்சு எவங் எடுத்தானோ கொண்டாந்து குடுக்கயா போறாங்”
உள்ளே நுழையும் போதே ஓவிய வாத்தியாரின் முகவெட்டு சரியாகப்படவில்லை. அட்டன்டன்ஸ் எடுத்து போடும் கையெழுத்தையே கிழித்த வாக்கில்தான் போட்டார்.
“நோட்டு கொண்டுட்டு வராதவனெல்லாங் வரிசையா வந்து மேடைல சாஞ்சு படு! குண்டி பழுத்தாத்தான் ஒவ்வொருத்தனுக்கும் அறிவு வரும்”.
நோட்டு இல்லையென்றாலும் அந்த கிரிசு கெட்ட ஆளிடம் இதே அடிதான் விழும். அடி ஒரு புறம் என்றால் மறுபடியும் தண்டமழும் பதினைந்தம்பது வேறு ஒரு பக்கம் கொடச்சல் குடுத்தது.
அடித்தோய்ந்தவர் வழக்கம் போல எவனையோ எழுப்பி சிரித்த முகத்தோடு ‘Walk, Walked’ -ஐ கேக்கத் தொடங்கினார். யாரோ ஒருவன் எழுந்து சொல்லி வைத்தது போல எழுந்து “Cry, Cried, Crying – அழுகை” என்று சொன்னதும் சிவாவுக்கு முருகனை நினைத்து தர்ம சங்கடமாகி விட்டது. சீவன் அற்று போனதும் ஒரு வெளம் வருமே! இனி ஆனது கணக்கு போ என்ற வாக்கில், கிட்டத்தட்ட அதே வேகம்தான் முருகனுக்கும் வந்திருக்க வேண்டும். சிவா எதிர்பாராத நேரம் முருகன் குரல் கேட்டது.
“Bad, Worse, Worst – மோசம்” என.
1 comment
என்றோ ஆங்கில வாத்தியாரிடம் வாங்கிய அடியின் வலி இந்தக் கதையைப் படிக்கும் போது வந்து போனது. அருமை…. வாழ்த்துகள்….