தலைநகரம்
எம்.கோபாலகிருஷ்ணன்
புழுதியும் வெக்கையுமான ஹோஸ்பேட் சாலையின் ஒரு திருப்பத்தில் வளைந்தபோது நெடிய கோபுரம் கண்ணில்பட்டது. காரை நிறுத்தச் சொன்னான் தியோ. லாராவும் எட்டிப் பார்த்தாள். இருவரும் இறங்கினார்கள்.
‘அனந்தசயனபுரம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்’ கையிலிருந்த ‘லோன்லி பிளானட்’ புத்தகத்தைக் கூர்ந்துபார்த்தவாறே சொன்னாள் லாரா. தியோவின் அளவுக்கே உயரம். அகன்ற தாடையுடனான முகத்தை குளிர்கண்ணாடி மறைத்திருந்தது. நீண்ட கழுத்தில் பளிச்சிட்டது சிலுவைச் சங்கிலி. பழுப்புக் கூந்தலை ஒழுங்கில்லாமல் முடிந்து கிளிப்பில் அடக்கியிருந்தாள். கழுத்திலும் கன்னத்திலும் வெயில் தீட்டிய சிவப்பு. நேற்றிரவு ஹம்பி பஜாரில் வாங்கிய மணிமாலை மார்பில் கிடந்தது.
கோபுரத்தைப் பார்த்தவாறே நுழைவாயிலைத் தேடி நடந்தார்கள். வலதுபக்கமாய் பிரிந்த மண்பாதையில் சில நூறு அடிகளில் உடைந்த சுற்றுச்சுவரும் அதற்குப் பின்னால் மண்டபமும் விமானமும் தென்பட்டது.
‘இப்படித்தான் போகவேண்டுமா?’ சந்தேகத்துடன் முனகினான் தியோ. அடர்பச்சை தொப்பி. கழுத்தில் காமிரா. அழுக்கான வெள்ளைச் சட்டை. சிறிதும் பெரிதுமான பைகளுடனான காக்கி பேகி பேண்ட். களைத்திருந்த முகம் வெயிலில் சிவந்திருந்தது.
‘தெரியவில்லை. சரியான வழி இருக்கவேண்டும்’ லாரா வளைந்து திரும்பிய சாலையை ஏறிட்டாள்.
‘பார்க்கலாம்’ தயங்கியபடியே மண்பாதையில் திரும்பி நடந்தார்கள்.
உலர்ந்து அடர்ந்த புற்களுக்கு நடுவே உடைந்த சுற்றுச்சுவரின் சதுரக் கற்கள் குவிந்திருக்க சிறிதும் பெரிதுமான தூண்கள் வரிசையாகக் கிடந்தன. சுவரையொட்டி வெளிப்பகுதியில் வரிசையாக ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் சின்னச்சின்னதாய் குடியிருப்புகள். பிளவுண்ட சுவரின் அருகே துணிதுவைத்துக்கொண்டிருந்தவள் இருவரையும் பார்த்து நிமிர்ந்தாள். நீல பிளாஸ்டிக் வாளியில் சோப்பு நுரை. நெற்றியில் வேர்வை மினுக்க நைட்டியில் ஈரம் சொட்டியது.
‘இப்பிடிப் போங்க’ என்று ஒற்றையடிப் பாதையைக் காட்டினாள். இடிபாடுகளுக்கு நடுவேக் கிடந்த கற்களில் ஏறி தாவிக் குதித்தனர் இருவரும். காய்ந்த புற்கள் அடர்ந்திருக்க கற்களுக்கு நடுவே பச்சை துளிர்த்த முட்புதர்கள். சீரமைப்பு வேலைகள் இன்னும் முழுவீச்சில் நடைபெறாததன் அடையாளங்களாய் எண்கள் இடப்பட்ட கற்கள் ஒழுங்கின்றிக் கிடந்தன. மத்தியிலிருந்த கோயிலை ஒட்டிய பகுதிகளில் மட்டும் தரைத்தளம் சீராக்கப்பட்டிருந்தது.
‘‘அளவில் பெரிய கோயில் இல்லை. ஆனால் நிறைய சேதாரங்கள்’’ லாரா கண்களை இடுக்கியபடி பார்த்தாள்.
விமானத்தின் மேற்கூரை முழுவதுமாக சேதமுற்றிருந்தது. உடைபட்ட சிற்பங்களுடன் பழுப்படைந்தும் கருத்தும் முதல் இரண்டு நிலைகள் மட்டுமே எஞ்சி நின்றன. ஐந்துநிலை கோபுரமாய் இருந்திருக்கலாம். மண்டபத்தின் மேற்புறச் சுவரை ஒட்டுச்சுவர் தாங்கி நின்றது.
“விருபாட்சரைப் போலவோ விட்டலா போலவோ பெரிய கோயில் இல்லை. ஆனால் கிருஷ்ணதேவராயர் தன் மகனுக்காக அமைத்த கோயில்’’ மஞ்சள் பற்கள் தெரியச் சிரித்தான் தியோ. பழுப்பான சிறிய கண்களில் சற்றே வியப்பு.
மண்டபத்துக்கு முன்னால் விரிந்திருந்த நிழலில் நீலச் சேலை அணிந்தவள் கையில் குச்சியுடன் அமர்ந்திருந்தாள். அருகில் சிறிய வயர் கூரையும் தண்ணீர் பாட்டிலும். தொல்லியல் துறை பணியாளர். இருவரையும் ஏறிட்டுப் பார்த்தவள் மீண்டும் செல்போனில் ஆழ்ந்தாள்.
கொடிமரத்தின் மூன்று நிலைகள் மட்டுமே எஞ்சி நின்றன. மேலே ஒருபுறத்தில் சக்கரமும் மறுபுறத்தில் சங்கும். அன்னபட்சியின் வேலைப்பாடுகள் அமைந்த உடலும் அழகிய மங்கையின் தலையுமாய் ஒரு சிற்பம். தியோ தலை உயர்த்திப் பார்த்தான்.
லாரா முகமண்டபத்தின் முன்னால் நின்றாள். படிகளின் இருபுறமும் தும்பிக்கைகளற்ற யானைகள். ஒழுங்கற்ற தூண்களுக்கு நடுவே ஒளியும் இருளும். வௌவால் வாடை. முன்வரிசையில் வலதுபுறத் தூணில் யாளி பெரிய விழிகளுடன் வாய்பிளந்து நிற்க இடதுபுறத்தில் யாளிக்குப் பதிலாக வெறுமனே மலர்கலசம் தாங்கிய ஒரு கம்பம் நின்றது. அகன்ற தூணின் கீழ்ச் சதுரத்தில் கொண்டையிட்ட மங்கை வலதுகரத்தை இடுப்பில் வைத்து நின்றாள்.
‘‘ராயர் தன் மகனுக்காக அமைத்த நகரம் இது. அவனைப் பெருமைப்படுத்தவென அவன் பெயரைச் சொல்லவென கட்டப்பட்டது இந்தக் கோயில். அவரது கடைசி காலத்தில் கட்டத் தொடங்கியிருக்கவேண்டும். எதையும் பிரமாண்டமாய் திட்டமிடும் அவர் இந்தக் கோயிலை இன்னும் சிரத்தையுடன் யோசித்திருப்பார். ஒருவேளை இது முழுக்கவே அழிக்கப்பட்டிருக்கலாம். இப்போது தொல்லியல் துறை இதை மீண்டும் எடுத்துக் கட்டியிருக்கக்கூடும். இன்னும் வேலை முடியவில்லை” தியோ கொடிமங்கையின் சேலை மடிப்பின் சுருக்கங்களை சுட்டிக் காட்டினான்.
தூண்கள் அபாயகரமாய் சாய்ந்து இரும்புப் பூண்களால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்க கூரையாக அமைக்கப்பட்டிருந்த கற்பாளங்கள் கருத்துக் கிடந்தன. இருண்ட அர்த்தமண்டபத்துக்குள் கற்களும் தூண்களும் ஒழுங்கற்றுக் கிடந்தன. தடயங்களேதுமின்றி கருவறை மொத்தமும் சிதைந்திருந்தது. கூரையில் செருகியிருந்த கற்பாளங்களுக்கு மேலே எதுவுமில்லை. துவாரபாலகர்களின் கால்களுக்குக் கீழே தாமரைபீடங்களின் சில பகுதிகள் மட்டுமே எஞ்சி நின்றன. கீர்த்திமுகத் தோரணம் ஒன்றில் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி இருந்தமைக்கான அடையாளங்கள்.
“தகுதியான ஒருவனை சரித்திரத்திலிருந்து அப்புறப்படுத்துவது அத்தனை சுலபமில்லை” லாரா இடதுபுற வாசல் வழியே வெளியே வந்தபோது வெயில் கண்களைக் கூசிற்று.
நிழலில் அசைபோட்டுப் படுத்திருந்த பசுமாடு வாலைச் சுழற்றி ஈக்களை விரட்டியது. வடக்குப்புற சுற்றுச்சுவரை ஒழுங்கான வரிசையில் கற்களை அமைத்து மிகத் திருத்தமாக எழுப்பியிருந்தனர். ஓங்கி வளர்ந்த வேப்பமரத்துக்குப் பின்னால் அடர்ந்த முட்புதர்களுக்கு நடுவே கற்பாளங்களை அடுக்கியிருந்தார்கள். கோயிலுக்குப் பின்னால் எட்டுத் தூண்களைக் கொண்ட வெளிச்சுற்றும் நான்கு தூண்களைக் கொண்ட உள்சுற்றுமாய் அமைந்த சிறிய அழகிய ரங்கமண்டபம். உடைந்த சிற்பங்கள் ஒளியிலும் நிழலிலுமாய் நின்றன.
“சரிதான். உடைத்தும் சிதைத்தும் நெருப்பு மூட்டியும் அழித்துப் புதைக்கப்பட்ட நகரம்தான் இன்று ஒவ்வொரு நாளும் மண்ணிலிருந்து எழுந்தபடியே இருக்கிறது. உண்மையில் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் வெற்றித் தலைநகரம் இது” லாரா தரையில் கிடந்த கல்லில் செதுக்கியிருந்த வாளேந்திய வீரனின் சிற்பத்தை மெல்லத் தடவினாள்.
காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தான் தியோ. ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஓடிவந்தது சிறுவர் கூட்டம். இரண்டொரு சிறுமிகளும். பத்துக்கும் மேற்பட்டவர்கள். அழுக்குச் சட்டையும் கிழிந்த காற்சட்டையுமாக பரட்டைத் தலையுடன் ஓடி வந்தவர்கள் அவர்களைக் கண்டதும் நின்று தயங்கினர். முகம் முழுக்க சிரிப்பு. வேர்வை மினுமினுக்கும் முகங்கள்.
மஞ்சளும் சிவப்பும் கலந்த வண்ணப் பாவாடை அணிந்த சிறுமி இரண்டடி முன்னால் நகர்ந்தாள். உடைந்த பற்களின் இடைவெளியும் குறுகுறுத்த கண்களுமாய் லாராவைப் பார்த்துச் சிரித்தாள்.
“ஃபாரினர், கிவ் மீ ஃபிப்டி ரூபிஸ்” கையை ஏந்திக்கொண்டு லாராவின் முன்னால் நின்றாள்.
தோள்களை குலுக்கியபடி வியப்புடன் தியோவை ஏறிட்டாள்.
அதேநொடியில் அவளைவிட சற்றே வயதில் மூத்தவன் தியோவை நெருங்கிக் கேட்டான் “குட்மார்னிங் ஃபாரினர், கேன் யூ கிவ் மீ ஃபிப்டி ரூபிஸ். ஐ ஹேவ் டு பை ஸ்கூல் புக்ஸ்.”
தியோ கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்துவிட்டு மறுபடியும் படமெடுப்பதில் முனைந்தான்.
தெற்கு வாயில் கோபுரமும் பாதியளவே நின்றது. உடைந்த மரக்கதவு சரிந்து கிடந்தது. அதையொட்டியே நெருக்கமாய் அமைந்திருந்தன ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட வீடுகள். ஒரே திசையில் திரும்பியிருந்த டிஸ் ஆண்டென்னாக்கள். குழப்பமாய் கருப்பு வயர்கள். தேவியின் சிறிய கோயில் அருகே கல்யாணமண்டபம். நெருக்கமாக அமைக்கப்பட்ட தூண்கள் மட்டுமே எஞ்சி நின்றன. அங்கங்கே மண்டியிட்ட யானைகள். வாலை மேலே சுழற்றி வாய் பிளந்த சிங்கங்கள். பெரிய கொண்டையும் வட்ட முகமுமாய் கொடிமங்கையரின் வெவ்வேறு தோற்றங்களுடனான கற்பாளங்கள். ஆஞ்சநேயர் முகத்துடனான சிற்பத்தில் எண்ணெய் பிசுக்கு.
சிறுவர் கூட்டம் கலைந்தோடியிருந்தது. மூன்று பேர்மட்டுமே இப்போது பின்தொடர்ந்தனர். அதே சொற்கள். அதே மன்றாடல். அவர்கள் அதை சீரான இடைவெளியில் சொல்லியபடியே வந்தனர். லாராவும் தியோவும் அதை காதில்போட்டுக்கொள்ளாததைப் பற்றி அவர்கள் கவலைப்படாமல் ஒருவர் மாற்றி ஒருவர் “ஃபாரினர், ஃபாரினர்”, “கிவ் மீ பிப்டி ரூபிஸ். பென்சில் பாக்ஸ், புக்ஸ்” என்று கெஞ்சியபடியே தொடர்ந்தனர்.
நிழல் இன்னும் மேலேறியிருக்க நீலச் சேலைப் பணிப்பெண் படிகளுக்கு நகர்ந்திருந்தாள். கையிலிருந்த குச்சியால் சிறுவர்களை விரட்டிக்கொண்டிருக்க அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஓடினார்கள்.
வெளிச்சுற்றின் நுழைவாயில் கோபுரத்தின் வடபகுதியில் இரண்டு நிலைகள் மட்டுமே எஞ்சியிருக்க தென்பகுதி மட்டும் இடிபாடுகளுடனே இன்னும் சற்று உயர்ந்து நின்றது. வெயில்பட்டு ஒளிர்ந்து கண்களைச் கூசியது.
படமெடுத்தபடியே தியோ முன்னால் நகர லாரா மீண்டுமொரு முறை கோயில் மண்டபத்தின் தூண்களை உற்றுப் பார்த்து நின்றாள்.
எண்ணெய்காணாத பரட்டைத் தலைச் சிறுமி அவளை நெருங்கினாள். நீலச் சேலைக்காரி குச்சியை ஓங்கியதும் சிரித்தாள்.
“ஃபாரினர். கிவ் மீ தேர்டி ரூபிஸ்” என்றாள் உடலை நெளித்துக்கொண்டு.
அவ்வளவாய் சேதப்படுத்தப்படாத முகப்பு கோபுரத்தை ஒட்டி இருமருங்கும் புங்கமரங்கள். பழுப்பும் வெண்மையுமான கோபுரத்துக்கு மரங்களின் பசுமை அழகூட்டியது. சிறுவர்கள் பின்தொடர்ந்திருக்க இருவரும் நிழலில் நின்று திரும்பி உள்ளே பார்த்தனர். வெறுமையும் இருளும் சூழ்ந்த மூப்படைந்த தோற்றத்துடன் வெயிலில் நின்றது அனந்தசயனரின் கோயில்.
வெளிப்புறத்தில் புங்கமரத்தின் வெள்ளைப்பூக்கள் உதிர்ந்திருந்த நிழலில் கோயிலைப் பற்றிய குறிப்புப் பலகை. லாரா கவனத்துடன் வாசித்துக்கொண்டிருந்தாள்.
தியோ இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து ஒரு சிறுவனிடம் நீட்டினான் “யூ ஆல் ஷேர் திஷ்.”
பணத்தைப் பெற்றுக்கொண்டவன் அங்கிருந்து நகர மற்றவர்கள் தியோவை நெருங்கி நின்று கேட்டனர் “ஃபாரினர், கிவ் மி டென் ரூபிஸ், ப்ளீஸ்.”
லாரா சிறுமியை அழைத்தாள். ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அவளிடம் தந்தாள் “ஷேர் திஸ். ஓகே.”
அவள் தலையை ஆட்டியபடி ஓட இன்னொரு சிறுவன் அவள் கையைப் பிடித்து முதலில் பணம் வாங்கிய சிறுவனிடம் இழுத்துச் சென்றான்.
புங்கமரத்தின் நிழலுக்கு நகர்ந்த லாரா பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். கண்ணாடியைத் தலைக்குமேல் ஏற்றிக்கொண்டு புரட்டினாள். குறிப்பிட்ட பக்கத்தைக் கண்டதும் தியோவிடம் காட்டினாள் “மகனின் பெயரில் இந்த நகரை நிர்மாணித்து கோயிலைக் கட்டி குடமுழுக்கு செய்தபோது கிருஷ்ணதேவராயர் பலவிதமான தானங்களை அளித்திருப்பதாக குறிப்புகள் சொல்கின்றன. துலாபாரத்தில் எடைக்கு எடை பொன்னையும் மணியையும் தானமாகத் தந்திருக்கிறார். தண்டநாயக்கர்களுக்கு நிலங்களும் சேனாதிபதிகளுக்கு ஆயிரம் யானைகளும் ஆறாயிரம் குதிரைகளும் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் குடிகளுக்கு ஆயிரம் பசுக்களை அளித்திருக்கிறார்.”
சோர்வுடன் தியோ முகவாயைத் தேய்த்தான். ‘பாதுகாக்கப்பட்ட உலகப் பாரம்பரிய கலைச் சின்னம்’ என்ற அறிவிப்புப் பலகை நிறமிழந்து நின்றிருந்தது. கோபுரத்தை அடுத்திருந்த மண்டபத்தின் நிழலில் சரிந்துகிடந்த தூணின் மேலமர்ந்து பணத்தைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர் சிறுவர்கள்.
புத்தகத்தை மூடிவிட்டு லாரா நிமிர்ந்து பார்த்தாள். கம்பீரமாக நின்றது கோபுரம்.
0
தலைநகரம்
313
முந்தைய படைப்பு