தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல்

by olaichuvadi

சந்திப்பு: ஏ.சண்முகானந்தம், எழுத்தாக்கம்: சித்திரவீதிக்காரன், ஒளிப்படங்கள்: பொன்தமிழன், ஏ.சண்முகானந்தம்

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகம் நன்கறிந்தவர். பேராசிரியர் நா.வானமாமலை துவக்கி வைத்த நாட்டார் வழக்காற்றியல் துறையை இன்று வளர்த்தெடுத்தலில் ஆ.சிவசுப்பிரமணியனுக்கும் பெரும் பங்குண்டு. பேராசிரியர் நா.வானமாமலையின் அறிவுத்துறை மாணவராகவும் சிவசு அறியப்பட்டுள்ளார். தமிழகத்தில் அடிமை முறை நூல் வழியே கோவில் சார்ந்து தமிழகத்தில் அடிமை நிலவியதை உறுதிப்படுத்தியவர். கிறித்தவம் தொடர்பான சில ஆய்வு நூல்கள், பேராசிரியர் நா.வானமாமலை, தமிழ் அச்சுத்தந்தை அண்ட்ரிக் அடிகளார், வ.உ.சி., என தமிழகம் நன்கறிந்த ஆளுமைகளின் வாழ்வை வரலாறாக்கியுள்ளார்.

நூலகங்களுக்குள் அடைந்து கிடந்த ஆய்வுகளை, மக்கள் வாய்மொழிக் கதைகள், பாடல்கள் என களத்திற்கு கொண்டு சென்றவர். பேசப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வடிவங்களை நூல்களாக கொண்டு வந்துள்ளார். இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, முதல் ஆலை வேலை நிறுத்தப் போராட்டம் என வரலாற்றின் பக்கங்களையும் நூல்களாக ஆக்கியுள்ளார். பொருள்சார் பண்பாட்டு ஆய்வை மையப்படுத்திய ‘பனைமரமே! பனைமரமே!’, ‘உப்பிட்டவரை’, ‘தோணி’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். ‘தமிழரின் தாவர வழக்காறுகள்’ நூலில் தாவரங்களுக்கும், மனித சமூகத்திற்க்குமான உறவு, சமூக, பொருளியல் மாற்றங்களைப் பதிவு செய்துள்ளார். அந்தவகையில், தமிழ்ச்சூழலுக்கு சுமார் 40 நூல்களை ஆவணமாக்கித் தந்துள்ளார்.

அவரது வாழ்வியலை அடிப்படையாக கொண்ட ஆவணப்பட உருவாக்கத்திற்காக சென்ற ஆண்டு (2019) ஆகஸ்ட் மாத மத்தியில் தூத்துக்குடி சென்றிருந்த போது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுடனான இச்சிறு உரையாடல் சுற்றுச்சூழல் தொடர்பாக அமைந்தது. இந்த உரையாடலில் மானுடவியலாளர் முனைவர் அ.பகத்சிங், இளம் இயக்குநர் பொன்தமிழன் பங்கேற்றனர். இனி அவரது உரையாடலில் இருந்து…

*

சங்க இலக்கியங்களில் நிறைய இடங்களில் நீர் மேலாண்மை பற்றி படித்திருக்கிறோம். தங்களுடைய கட்டுரையொன்றில் நீர்நிலைகளை விற்றது குறித்த கல்வெட்டுச் சான்றைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்? நீர்நிலைகளை விற்பதற்கான காரணம் என்ன?

கல்வெட்டுகளில் நீர்நிலைகள் என்று குறிப்பிடப்படுவது ஆறோ, ஏரிகளோ அல்ல. ‘சின்ன குட்டம்’னு சொல்லுவாங்க. குளங்கள் போன்றவற்றைத்தான். நில விற்பனையோடு இணைந்ததுதான் நீர். இன்றைக்குப்போல நீரைத் தனியாக விற்றதுபோலத் தெரியவில்லை. பயிருக்கும் நீருக்குமான தொடர்பு. அதை அப்படித்தான் நாம் பார்க்கவேண்டும். ஏரி வாரியம் போன்ற அமைப்புகள் எல்லாம் பெரிய குளங்களை மையமாக வச்சுத்தான் இருக்கிறது.

நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு என்னென்ன மாதிரியான விழாக்களை மன்னர்கள் எடுத்திருக்கிறார்கள்?

நீர்நிலைகளைப் பாதுகாத்து விழா எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், ஆறோடு தொடர்புடைய விழாக்கள் இருந்திருக்கிறது.  சங்க இலக்கியங்களில் பிற்பட்டதான பரிபாடலில் வைகையில் எடுக்கப்பட்ட விழா பற்றிய குறிப்பு இருக்கிறது. காவிரியில் எடுக்கப்பட்ட விழா (இந்திரவிழா) பற்றி இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் காவிரியினுடைய சிறப்பு அதிகமாக பேசப்பட்டுள்ளது. ஆனால் ’புஷ்கரணி’ நிகழ்ந்ததாக தெரியவில்லை.

நாட்டார் வழக்காற்றியல் பார்வையில் பருத்தி, ஏலக்காய், மஞ்சணத்தி (நுணா) என சில தாவரங்கள் பற்றி எழுதியுள்ளீர்கள். தாவரங்கள் குறித்து நாட்டார் வழக்காற்றியல் பார்வையில் எழுத வேண்டியதன் அவசியம் என்ன? இதில் தாவரங்களைப் பற்றி எழுதப்படாத செய்திகள் என்ன?

அடிப்படையில் நானொரு மார்க்சியவாதி. சேலத்தில் விருத்தகிரின்னு ஒரு தோழர் இருந்தார். பேராசிரியர் நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் இவர்களெல்லாம் தங்களுடைய எழுத்துக்கள், உரையாடல்களின் வாயிலாக மார்க்சியத்தை தமிழ்நாட்டு வரலாறு, பண்பாட்டுடன் இணைத்து கற்பிக்க வேண்டும் என்று சொல்லிட்டு இருந்தாங்க. சரஸ்வதி இதழில் இந்தியத் தத்துவங்களைப் பற்றி மொழிபெயர்ப்பாக இல்லாமல் சுயமாகத் தொடர் கட்டுரையை தொ.மு.சி. எழுதிக்கொண்டிருந்தார். நா.வானமாமலையும், விருத்தகிரியும் சில நூல்களை எழுதினார்கள். இந்த மூன்று பேர்கள் தான் அதிகமாக செய்திருக்கிறார்கள். தோழர் பாலதண்டாயுதம் ‘மார்க்சிய ஞானரதம்’ என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார். மார்க்சியத்தில் பொருள்முதல்வாதம் என்று சொல்கிறோம். தொ.மு.சி., தத்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்ததை நா.வானமாமலையும், விருத்தகிரியும் விரிவுபடுத்தினார்கள். இவர்களுடைய படைப்புகளின் வழி நான் எழுதியதைக் குறித்து சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய மாணவர் முத்துமோகன்தான் விடை கூற வேண்டும்.

மார்க்சியத்தில் பொருள் முதல்வாதம் பற்றி சொல்கிறோம். பொருள் என்று பார்க்கும்போது அதில் நிறைய விசயங்கள் அடங்கிவிடுகிறது. அந்தப் பொருளை வைத்துக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்க வேண்டும் என்று வரும்பொழுது, மேற்கத்திய மானுடவியல் துறை வருகிறது. நாட்டார் வழக்காற்றியல் மேற்கத்திய ஆய்வுகளின் தாக்கத்தில்தான் இன்று வரை உருப்பெற்றிருக்கிறது. நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல் இரண்டிலும் ’பொருள்சார் பண்பாடு’ என்ற வகைமையை ஏற்கிறார்கள்.

கொங்குப் பகுதியில் முழுக்க தோலாலான ’கமலை’ (கவலை) இருந்திருக்கிறது. தென் மாவட்டங்களில் உலோகத்தாலான கொள்கலன் கமலையின் முக்கிய உறுப்பாக விளங்கும். உலோகத்தாலானதில் தோல்பை போன்ற ஒன்று இருக்கும். இதை ’வால்’ என்று தென் மாவட்டத்திலும், ’பறி’ என்று கொங்குப் பகுதியிலும் கூறுவார்கள். தோலாலான கவலை என்றால் அதில் சின்னச் சின்ன பொத்தல் விழும். அது கொஞ்சம் பெரிசாகும். அதை வேறொரு துண்டுத்தோல் வைத்து ஒட்டுப்போட்டுத் தைக்க வேண்டும். உலோகத்தாலானது என்றால் இந்தத் தோல்பையில் ஏற்படும் பழுதை நீக்க வேண்டும். அல்லது புதிதாய் மாற்ற வேண்டும். அதனால் அருந்ததியர்களின் பணி கொங்கு வேளாளர்களுக்கு அவசியமாகத் தேவைப்பட்டது.

பைகாரா மின்திட்டம் அறிமுகமானபொழுது, கோவையில் அப்போதுதான் தோன்றிய நூற்பாலைகள் அந்த மின்சாரத்திற்கு மாறத் தயாராக இல்லை. உற்பத்தியாகக் கூடிய மின்சாரத்திற்கு நுகர்வோர்கள் கிடைக்கவில்லை.

கிராமத் திருவிழாக்களையொட்டி நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சாரத்தை ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்கள் மேற்கொள்கிறார்கள்.

வீட்டை விட அதிகமாகப் பயன்படுத்தணும்னா விவசாயத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்தணும். அவங்க இந்த மின் இறவை இயந்திரத்தை பற்றிச் சொல்லி, அது வந்து ஒரு மணி நேரத்திற்கு எத்தனை காலன் தண்ணீர் இறைக்கும் ஆற்றலுடையது. அதே நேரத்தில் ஒரு ’கவலை’ வந்து எவ்வளவு தண்ணீர் இறைக்கும் என்பதை ஒப்பிட்டுக் காட்டி அதைவிட இது இலாபகரமானது என்று சொல்லி மின் இறவை இயந்திரத்தை அறிமுகம் செய்கிறார்கள்.

அது கொஞ்சம் கொஞ்சமாக பரவியதால் தோல் தொழில் செய்து வந்த அருந்ததியர்களுக்கும், கவுண்டர்களுக்குமான உறவு கொஞ்சம் உடைகிறது. இனி அருந்ததியரைச் சார்ந்து இருக்க வேண்டியத் தேவை கவுண்டர்களுக்கு இல்லை. இதே நேரத்தில் இரட்டயிழை பருத்தியை அறிமுகப்படுத்துறாங்க. இங்கிலாந்துக்கு கொண்டு போறதுக்காக. உணவு தானியம் விளைந்த பகுதிகளில் எல்லாம் பருத்தி விளைகிறது. இந்த பருத்தி வானம் பார்த்த பூமியில் விளையக் கூடிய பருத்தி போலில்லை. இந்தப் பருத்திக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின்சார இயந்திரம் வந்துவிடுகிறது. இது அவர்களிடம் பணப் புழக்கத்தைத் அதிகப்படுத்தியது. ஒருவரொருவரை சார்ந்து இருந்த சமூகத்தில் வேறுபாடு வருகிறது.

அருந்ததியர்கள் பஞ்சம் பிழைக்க மலைத்தோட்டங்களுக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள. அதற்கு முன் நாணய வடிவிலான ஊதியம் கிடையாது. தானிய வடிவிலான ஊதியத்தைத்தான் வழங்கி வந்தார்கள். இப்போ அவங்க வந்து நாணய வடிவிலான ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அருந்ததியர்களின் இருப்பிடத்திற்கு போய் அவர்களை வேலைக்கு அழைக்கக்கூடிய நிலைமை உருவாகிறது. அங்கு போய் அழைப்பதால் அவர்களுக்குப் பேரம் பேசக்கூடிய ஒரு ஆற்றல் வந்துவிடுகிறது. நாங்க இவ்வளவு கூலி கொடுத்தால்தான் வருவோம் என்கிறார்கள். இதைத்தான் குன்னல் என்ற சுவீடன் நாட்டு ஆய்வாளர் பாண்ட்ஸ் லாஸ்ட் (Bonds Lost) என்ற  தமது நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள்.

ஒரு பொருளை அறிமுகப்படுத்தினா அதுக்கு வரலாற்றில் ஒரு பங்களிப்பு இருக்கிறது. சமூகத்தில் ஒரு பங்களிப்பு இருக்கிறது. உதாரணமாக அவுரி. அவுரி நம்ம நாட்டுத் தாவரமில்லை. ஆப்பிரிக்காவுல விளைஞ்சதை ஆங்கிலேயர் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்கள். பீகாரில் காந்தி சம்பரான் போராட்டத்தை நடத்தினார். நீல்டப்ர்ன் என்ற பிரச்சார நாடகம் இப்போராட்டத்தால் உருவாகியுள்ளது.

இதுபோன்று ஒரு தாவரத்தை வைத்துக் கொண்டு நம்முடைய வரலாற்றைக் கட்டமைக்கலாம். இந்த நோக்கத்தில்தான் முழுமையாக பனையைப் பற்றி நூல் எழுதினேன். (பனை மரமே! பனை மரமே!, 2017) நம்முடைய வரலாறு, பண்பாடு எல்லாவற்றிலும் இந்த மரம் ஊடுருவியிருக்கிறது. பொதுவாக மரங்களை நாம் எப்படிப் பார்க்கிறோம். ஒன்று அதனுடைய உணவுப் பயன். ரெண்டாவது அதோட மருத்துவப் பயன். மூன்றாவது நுகர்வியம் சார்ந்தது. அதில் இருந்து ஒரு மணப் பொருள், மது தயாரிப்பது, அழகு பொருள் தயாரிப்பது என்று ஒரு நுகர்வுப் பண்பாட்டில் பார்க்கிறோம்.

இதையும் தாண்டி இந்தத் தாவரங்களுக்கு ஒரு பயன்பாடு இருக்கிறது. அதுல நம்ம பண்பாடு இணைந்திருக்கு, நம்முடைய சாதி அமைப்போடு, ஆதிக்கத்தோடு இணைந்திருக்கு. இந்த மாதிரி பிரச்சனைகள் வருகிறது. ஆகையினால் பொருள்முதல்வாதம் என்பதில் தாவரங்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் கடந்த கால பண்பாட்டு வரலாற்றை, சமூக வரலாற்றை கட்டமைக்க முடியுமா என்ற முயற்சி. இதில் முழுமையாக வெற்றி பெற்றேனா என்று சொல்ல முடியாது. இதுபோன்ற முயற்சியை பலர் மேற்கொள்ளலாம். நான் எழுதின கட்டுரைகளில் இடம் பெறாத செய்தி வேறு இடங்களில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

சூழலியல் தொடர்பான செய்திகள் நாட்டார் மரபுகளில் பேசப்பட்டிருக்கிறதா?

சூழலியல் என்ற அறிவுத்துறை நமக்கு ரொம்பப் புதிது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான செய்திகள் நாம் அறிந்தவைதான். அன்றாடம் நாம் பயன்படுத்தும் புழங்கு பொருள் பண்பாட்டோடு சூழல் இணைந்திருக்கிறது.

உதாரணமாக, நமக்கு துடைப்பம் என்பது தரையில் இருக்கக்கூடிய தூசியை போக்க கூடியது, அல்லது அழுக்கை நீர் விட்டுக் கழுவ பயன்படக்கூடியது. தமிழர்களுடைய பயன்பாட்டில் பார்த்தோம் என்றால் பல வகையான துடைப்பங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான பயன்பாடு இருக்கு.

வீட்டு முற்றங்களிலும், திண்ணைகளிலும், மாட்டுத் தொழுவங்களிலும், கிணற்றடியிலும் சதுர அளவிலான அல்லது நீண்ட செவ்வக வடிவிலான கற்களை பாவி இருப்பாங்க. வீட்டு மூலையில் ’அங்கணம்’ என ஒரு குழியை உருவாக்கி அதிலும் கற்களை பாவி வைத்திருப்பார்கள். தண்ணீர் வெளியே போவதற்காகவும், குளிப்பதற்காகவும் அங்கணத்தை பயன்படுத்துவார்கள். அதில் பாசம் பிடிக்கும். அந்தக் குழிகளில் நாற்றம் அடிக்கும். அந்தத் தண்ணீரை வெளியேற்ற தென்னையால் செய்யப்பட்ட துடைப்பத்தைத் தான் பயன்படுத்துவார்கள். இது குழியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், பாசியை நீக்கவும் பயன்படும்.

பழங்கால சமூக அமைப்பில் மண் தரைகள் தான் அதிகம்.. மேற்கூறிய தென்னை துடைப்பத்தை பயன்படுத்தினால் அது மண்ணைப் பெயர்த்துவிடும். பனையில் ’பீலி’ என்ற உறுப்பு சாக்லேட் கலரில் இருக்கும். அதில் ஒரு சின்னத் துடைப்பம் செய்வார்கள். அந்தத் துடைப்பம் கிடைக்காத போது ஒருவகையான புல்லைக் கொண்டு செய்த துடைப்பத்தை பயன்படுத்துவார்கள்.

மாட்டுத் தொழுவத்தைக் கூட்ட மேற்சொன்ன இரண்டு துடைப்பமும் பயன்படாது. கத்திரிச் செடியின் காய்ந்த மார் அல்லது பருத்தி மாரை வைத்து சாணம், கூழங்கள் இவற்றை கூட்டுவாங்க. வைகைப் பகுதியில் கோரைப்புல் ஒன்று வளரும் இக்கோரைப்புல்லைக் கொண்டு துடைப்பம் செய்துள்ளார்கள். தற்போது இயந்திரங்களை பயன்படுத்தி கோரைப்புல் துடைப்பங்களை செய்து ஏற்றுமதி செய்றாங்க.

சிமெண்ட் தரை இருக்கிறது. தண்ணீர் படாத இடம். அதைத் துடைக்க ஒட்டுப்புல்னு ஒன்று இருக்கும். அந்தத் துடைப்பதை வைத்து கூட்டுவாங்க. அது பூந்துடைப்பம். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்துக்காக வைக்கும்போது இது சூழலியல் சார்ந்தது. ஒன்று அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய பொருள், அவர்கள் பயன்படுத்துவதற்கான நோக்கம். நாம் இன்னொரு செய்தியையும் பார்க்க வேண்டும். இந்த துடைப்பம் எதுவுமே சூழலைப் பாதிக்காவை. இவை எல்லாம் மண்ணோடு மக்கிப் போய்விடும்.

நகரத்திலேயே பார்க்கலாம். தெருவுல பலரும் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டியிருப்பாங்க. அங்கே தேய்ந்து போன துடைப்பதைப் போட்டு இருப்பாங்க. அதை காக்கா வந்து கூடு கட்ட எடுத்துப் போகும். இப்ப நம்ம ஞெகிழி துடைப்பம் வந்த பிறகு எதுவுமே இல்லை.

தமிழ்ச் சமூகத்தில் கழுதை பற்றி, ஆந்தை பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் இருக்கிறது. அதேவேளையில் சங்க காலப் புலவர்கள் பலபேர் தங்களுடைய பெயருக்கு முன்னொட்டாக  ‘ஆந்தை’யின் பெயரை வைத்துள்ளனர். இந்த முரண்பாட்டை எப்படிப் பார்ப்பது?

தொல் சமயக் கூறுகளில். முக்கியமான ஒன்று குலக்குறி குறித்த நம்பிக்கையும் அதன் அடிப்படையில் உருவான வழிபாடு. ஒரு குறிப்பிட்ட விலங்கு , தாவரம் , அல்லது இயற்கைப் பொருளைச் சார்ந்து இது அமையும் .தாம் குலக்குறியாக க் கொண்டதை ,தம் பாது காவலனாக க் கருதி அதற்கு ஊறு செய்யமாட்டார்கள்.அதை வழிபடுவார்கள்.சடங்கு சார்ந்தும்  உணவுத்தேவையை முன்னிட்டும் கொல்ல நேர்ந்தால் அதனிடம். மன்னிப்புக் கேட்டுவிட்டே கொல்வர்.குலக்குறி வழிபாடானது,ஒரு வகையில்  சில விலங்குகளையும் தாவரங்களையும் அழிவில் இருந்து பாதுகாத்தது.

தொடக்க கால சமயத்தினுடைய வரலாற்றைப் பற்றிச் சொல்லும்போது குலக்குறி வழிபாட்டைச் சொல்வாங்க. மன்னர்கள் முதலில் வரவில்லை. இனக்குழுத் தலைவர்கள்தான். ஒவ்வொரு இனக்குழுவுமே தனக்கென ஒரு உயிரினத்தையோ, பறவையையோ, தாவரத்தையோ அது குலக்குறியாக கொண்டிருக்கிற வாய்ப்பு உண்டு. அது பின்னால் அரசர்களாக பரிணமிக்கும் போது இதை தக்கவைத்துக் கொண்டு அதை புனிதமாக போற்றுவது தொடங்கியது. சிலர் அதை வேட்டையாடவே மாட்டார்கள். வேட்டையாட நேர்ந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வேட்டையாடுவது என்ற நிலைப்பாடுகள் வருகின்றன. இது, அரசு என்கிற அமைப்பு விரிவடைகிறபோது ஏற்படுகிற ஒன்று.

கொங்கு வேளாளர்களிடம் கூட்டம் என்ற உட்பிரிவு உண்டு. இது பிராமணர்களின் கோத்திரம் போன்றது. இவர்களின் கோத்திரங்களின் ஒன்றின் பெயர் ‘ஆந்தைக் கூட்டம்’ என்பதாகும்.

தமிழ்நாட்டில் இறந்த உயிரினங்களின் நடுகற்கள் ஏதாவது கிடைத்துள்ளதா?

நடுகற்களை இரண்டு வகையா பிரிக்கலாம். ஒன்று மனிதனால் கொல்லப்பட்ட உயிரினம்.. மனிதனுக்காகவே இறந்த உயிரினம். இப்போது கிடைத்துள்ள சில நடுகற்களில் நாய்க்கு நடுகல் இருக்கு. ஒரு வீரனை காப்பாற்றும் முயற்சியில இருந்ததால் நாய்க்கு சேர்த்து நடுகல் எடுக்குறாங்க. சிலவற்றில் ’புலிகுத்திபட்டான் கல்’ அப்படின்னு வருது. அது புலி கூட சண்டை போட்டு அந்த புலிய கொன்று இறந்தவன்.  அப்பறம் சேவலுக்கு நடுகல் இருக்கு. சேவல் சண்டையில் வெற்றி பெற்ற சேவலாக இருக்கலாம்.

அந்த நடுகற்கள் கிடைத்துள்ள நிலப்பரப்பை குறிப்பிட இயலுமா?

செங்கம் கல்வெட்டுல தான் இது வருது. நடுகல்லில் இறந்தவர்கள் எதுனால இறந்தாங்கன்ற கேள்வியும் வருது. பெரும்பாலான நடுகற்கள் ‘தொரு’ (ஆநிரைக் கூட்டம்) கொண்ட போது (கவர்ந்த போது) இறந்துபட்டதையும், ’தொரு’ மீட்கும்போது இறந்துபட்டதையும் குறிப்பிடுகின்றன. தொடக்கக் கால நடுகற்களில் ’தொரு’ கவர்தலும், ’தொரு’ மீட்டலும் முக்கிய இடம்பெற்றுள்ளன.

இப்போது நடுகற்களில் கிடைத்துள்ள உயிரினங்களை எந்த மாதிரி பிரிக்கலாம்நாய், சேவல்  அதை தாண்டி வேற  என்ன மாதிரி உயிரினங்களின் நடுகற்கள் கிடைத்துள்ளது?

பெரும்பாலும் நமக்கு வருவது எருது, பசு, ஆடு, சேவல், நாய் என்பவைதான்.

தமிழர் சமூகத்தோடும்பண்பாட்டோடும் யானை நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதைப் பார்க்கிறோம். யானைக்கும் தமிழ் சமூகத்துக்குமான உறவு?

தந்தம் பண்டமாற்றுப் பொருளாக சங்க காலத்திலிருந்து இருக்கிறது. யானைத் தந்தம் கொடுத்து கள்ளு வாங்கியதாக ஒரு குறிப்பு உள்ளது. யானை வந்து போர்ப் படைகளில் முக்கியமான அங்கம் வகித்திருக்கிறது. பிறகு மன்னர்களுடைய அரண்மனைகளில் அவர்களுடைய பெருமையைப் பறைசாற்றும் அங்கமாக இருந்திருக்கிறது. படையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. யானை மேல் வருவது உயர்வு என்று இருக்கிறது.

யானையைப் பரிசிலாக வழங்கியது. ஆய் என்ற குறுநில மன்னன் யானையைப் பரிசாக வழங்கினார். ஒரு கவிஞர் அவனுடைய பரிசுத் தன்மையைப் புகழும்போது உன்னாட்டு யானை ஒரு சூலுக்கு பத்து குட்டி போடும் என பாடுகிறார். கோவிலோடு யானை இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது கோவில் யானைக்கு பெயரெல்லாம் வைத்திருக்காங்க. இப்போது கோவில் யானை இறப்பதை பெரிதாக காட்டுகிறார்கள்.

நாய் தான் முதல் முதலாக பழக்கப்படுத்திய உயிரினமாக இருக்கிறது. யானைப் படை, குதிரைப் படை போன்று தமிழக அரசர்கள் நாய்ப் படைகளை வைத்துக் கொண்டிருந்தனரா?

அப்படி நாய்ப் படை வைத்து இருந்த மாதிரி தெரியல. ஆனா ஊர்ல வந்து நாய்கள் காவல் பணிய செஞ்சு இருக்கு. ஒரு அகப்பாடல் உண்டு. அகநூலில் ஒரு தலைவன் தலைவிய சந்திக்க வருகிறான். அப்படி சந்திக்க வரும்பொழுது என்னவெல்லாம் இடையூறு இருக்கும் போது அதுல நாய்க்குலைப்பதும் ஒரு இடையூறா சொல்லப்பட்டு இருக்கு. ஏன்னா மானுடவியல்ல குகையில் மனிதன் வாழ்ந்த காலத்துல இறைச்சிகளின் கழிவுகள் எல்லாம் குகைக்கு வெளிய கொட்டி இருக்காங்க. மானுடவியல்ல இதை ’கிட்சன் மிட்டன்ஸ்’ என்று சொல்லுவாங்க. தமிழ்ல ’அடிசிலறைக் கழிவுகள்’னு நாம மொழிப்பெயர்க்கலாம். அந்த எலும்புகள்ல வந்து நாயினுடைய பற்குறி பதுஞ்சு இருக்கு. அப்படின்னு எடுத்துக்கும் பொழுது, முன்னாலேயே நாய் மனிதனுடன் ஒன்றிருக்கு அப்படின்ற தன்மை நமக்கு புலப்படுது. நம்ம சங்க இலக்கியத்துல நாய் ஒரு வளர்ப்பு உயிரினமா வந்துட்டுன்னு ஒரு பதிவு இருக்கு. பின்னால் வரக்கூடிய கல்வெட்டுகள்ல கிடைக்குது. 

கோவில் காடு மற்றும் கோவில்களில் ல மரம் குறித்த ஆன்மீக பார்வையில் தற்போது பரவலாக பேசப்படுகிறது. கோவில் காடு, தல மரத்தின் தோற்றத்தை சற்று விரிவாக கூறுங்கள்? அதுபோல, கோவில் காடு, தல மரங்கள் குறித்த தற்போதைய ஆன்மீக பார்வை குறித்தும் விளக்குங்கள்?

நம்ம தொல்சமய அடிப்படையில் பார்த்தோம்னா இயற்கை பொருட்களை வழிபடக்கூடிய ஒரு கருத்துக்கள் மனிதனிடம் உருவாகி இருக்கு. அதுல மரங்கள் அடங்குகிறது. சங்க இலக்கியத்துல மன்னர்கள் காவல் மரம் ஒன்றை வைத்திருந்ததை குறிப்பிடுகின்றன. இது குலக்குறி வழிப்பாட்டுடன் தொடர்புடையது என்று கருதலாம். அந்த மன்னனையும், மன்னனைச் சார்ந்தவர்களையும் காக்கக் கூடிய ஆற்றல் அந்த மரத்துக்கு உண்டு என்று நம்பியுள்ளார்கள். ஒரு காவல் மரத்தை அழித்தால் அந்த மன்னனுடைய பலத்தை பலவீனப்படுத்துறதுனு அப்படின்ற ஒரு கருத்தாகவும் வளர்ந்திருக்கு. போரில் வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுள்ள பகை மன்னனின் காவல் மரத்தை வெட்டி போர் முரசு செய்வான் என்ற செய்தியும் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

போர் முரசு செய்யும் போது பகைவர்களுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்தி, அந்த மரத்தை வச்சு போர் முரசை மன்னர்கள் செய்திருக்கிறார்கள். ’கடிகா’ என்ற ’சோலை’  குறித்த குறிப்பும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. கடிகா என்ற சொல் ’காவலுடைய சோலை’ என்ற பொருள் தரும். அப்ப ஒரு மரம் இல்லாம நிறைய மரங்கள் நிறைந்த சோலைகளும் மன்னர்களோட  பாதுகாவலா அமைந்து இருக்கு அப்படின்னு தெரியுது . இதெல்லாம் இயற்கை பொருள் வழிபாடுல இந்த மரங்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தனால இருக்கு.

இதுவே பின்னால இந்த சமூகம் வளர்ச்சி அடைந்து இந்த தொல் சமயத்தின் கூறுகள் குறையும்பொழுது அடையாளமாக மாறியுள்ளன. சேரனுக்கு, சோழனுக்கு, பாண்டியனுக்கு எல்லாம் குறிப்பிட்ட பூக்களை  சொல்றாங்க இல்லையா? பனம்பூ, வேப்பம்பூ,  அத்தி பூன்னு.  இது ஒரு அடையாளமா குறிக்கிறது. பழையதின் ஒரு எச்சமாகவும் இதனை கொள்ளலாம். இன்னொரு பக்கம் நிறுவன சமயங்கள்  உருவாகும்போது அதெல்லாம்  தல மரங்களாக  போய்விடுகிறது. இந்த தல மரங்கள்ல நீங்க சிலதை கவனிச்சு பார்த்தோம்னா சில மரங்களை வைதீக சமயம் ஏற்றுக்கொள்வதில்லை. அதில் ஒன்று பனை. ஆனால் நிறைய பாடல் பெற்ற தலங்கள் பனையை தல மரமாக கொண்டுள்ளன. அதில் இருந்து பனம்பழம் விழுந்ததை எடுத்து படையலாக படைக்கும் வழக்கம் இருக்கு. அதை ஒரு புனிதப் பொருளாக எடுத்துட்டு போய் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் உண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையும், திருமணம் ஆகாத பெண்கள் அதை எடுத்து சென்றால் விரைவில் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கு. இதெல்லாம் பாடல் பெற்ற தலங்களில் இருக்கு. ஆனால் இன்னைக்கு வைதீகம் பனைபடு பொருளான கருப்புக்கட்டியை புறக்கணித்துள்ளது.

இது அநேகமாக சோழர் காலத்தில் உருவானதுன்னு சொல்லலாம். அதுக்கு காரணம் என்னன்னா பிரம்மதேய கிராமங்களைப் பற்றி சொல்லும்போது, பிரம்மதேய கிராமங்கள்ல தென்னை மரத்தில் இருந்தும், பனை மரத்திலிருந்தும் கல் இறக்கக்கூடாதுன்னு கட்டுப்பாடு கொண்டு வராங்க “இவ்வூர் தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்புராதவறாகவும்’ என்ற தொடர் பிரம்மதேய கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஆனால் தமிழர்களுடைய தேசிய பானமாக தென்னங்கல்லும், பனங்கல்லும் இருந்திருக்கு. அதுனால இந்தப் புறக்கணிப்பு சோழர் காலத்தில் வலுப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.  

தல மரங்கள்,  கோவில் காடுகள் குறித்து நாட்டார் மரபுல பேசப்பட்டுள்ளதா?

நாட்டார் மரபு இதை புறக்கணிக்கல.  நீங்க நிறைய அய்யனார் கோவில்கள்ல பாத்தீங்கன்னா இந்த இலுப்ப மரம், புங்கை மரம் நாலு அஞ்சு மரங்கள் நிறைந்து அப்படின்னு  உச்சிபொழுதுல போனாக்கூட  வெயில் வராத அளவுக்கு பெரிய மரங்கள் அடர்ந்த பகுதிகள்ல இந்த கோவில்கள் இருக்கு. வெட்ட வெளியில் இருந்தாலும் இது மரங்களுக்கு அடியில தான் இருக்கு. அப்போ இன்னொரு பக்கம் ‘கடிகா’ தொடருது. நீலகிரி குரும்பர் ‘தெவசோலே‘ என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து வருகின்றனர். இது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ’மன்றம்’ என்ற அமைப்பை நினைவூட்டுகிறது.

சங்க இலக்கியங்கள் ’மன்றம்’ என்ற பெயரிலான பொது இடத்தை குறிப்பிடுகின்றன. இவற்றின் பயன்பாடு பொழுபோக்கு மடம், கல்வி பயிலும் இடம், வழக்குகளை விசாரிக்கும் இடம், ஆநிரை அடைத்து வைக்கும் இடம் என பலரதது. இவை மரங்கள் அடர்ந்த சோலைகளாகவே இருந்துள்ளன. பழங்குடிகளிடம் காணப்படும் இத்தகைய சோலை சார்ந்த அமைப்பை ‘புனித சோலை’ என்று மானுடவியலர் குறிப்பிடுவர். குருமரின் ‘தெவசோலே‘ புனித சோலையாக இன்றும் நிலைத்திருக்கிறது.

வைதீக சமயம் ஒரு பக்கம் கட்டடங்கள் கட்டி கருவறை அமைத்து அதுக்குள்ள யார் போகலாம், போகக்கூடாதுன்னு விதிமுறை எல்லாம் உருவாக்குது. மாறாக இன்னொரு பக்கம் திறந்தவெளியில மரங்களுக்கு அடியில் தெய்வங்கள் இருக்கு.

இன்று கோவில் காடுகளின் நிலைமை என்ன?

இன்னைக்கு கோவில் காடுகள் என்பது நிறுவன சமயங்களில் இல்லை. ஒரு குறிப்பிட்ட மரமாக, அடையாளமாக தல விருட்சம் என்ற பெயரில் இருக்கு.

சங்க கால தமிழகத்தில் ஏரிகுளங்கள் மட்டுமின்றி கிணறுகளையும் அரசர்கள் வெட்டி வைத்தனர். இதில் கிணறு என்ற வடிவம் எந்தக் காலகட்டத்தில் உருவாகியது?

கொங்கர்கள் என்பவர்கள் கிணறு வெட்டுவதை பற்றி அகநானூற்றில் ஒரு பதிவு இருக்கிறது. இடைக்கால தமிழ்க் கல்வெட்டுக்களில் கிணறு குறித்த பதிவு இருக்கிறது. கிணறு வெட்டும் நோக்கம் குறித்து ‘கூவ நூல்’ என்ற பெயரில் ஒரு நூல் பிற்காலத்தில் உருவாகியுள்ளது. கிணறுகளிலும் கூட வட்டாரத் தன்மையை பார்க்க முடிகிறது. நடுநாட்டிலும், வட மாவட்டங்களிலும் பெரும்பாலும் வேளாண் கிணறுகள் வட்ட வடிவில் இருக்கின்றன. தென் மாவட்டங்களில் பெரும்பாலும் சதுர/செவ்வக வடிவில் இருக்கின்றன.

இயற்கை நிகழ்வுகளில் நெருப்பு முதன்மையான இடத்தைப் பெறுகிறது. அரசர்கள் காலத்தில் நெருப்பைக் கொண்டு செல்ல ’தீக்கொளுந்தி’ இருந்தார்கள். எளிய மனிதர்களிடம் நெருப்பு பயன்பாடு எப்போது தொடங்கியது?

ரொம்பப் பின்னால் உள்ள காலம். சோழர் காலத்துக்கு பின்னால் தான் இருக்க முடியும். ஏன்னா நெருப்பு சாதித் தலைவர்கள் கைகள்ல போயிருக்கு. சாதி விலக்கம் செய்தாங்கன்னா அவங்களுக்கு நெருப்பு கொடுக்கக் கூடாது அப்படின்னு அந்த சாதி தலைவர்கள் தடை செய்திருக்கிறார்கள். நெருப்பு கிடைக்காவிடில் அவர்கள் சமையல் செய்யமுடியாது. வீட்டுல தான் நெருப்பு இருக்கும் போய் நெருப்பு வாங்கிட்டு வந்து சமைக்கணும். நெருப்பு குடுக்கக்கூடாதுனா அவங்க சமைக்கவே முடியாதுன்ற இறுக்கமான கட்டுப்பாடு இருந்தது.

நெருப்புக்கான காரணம் என்ன?

நெருப்பு அவசியத் தேவை. உணவை சமைக்க நெருப்பு அவசியம். கிரேக்கத்தில் பிரேமித்தியஸ் என்ற தெய்வம் தான் நெருப்பை வழங்கினான்னு புராணம் இருக்கு. அதுக்கு முன்னாடி தேவர்கள் வந்து நெருப்பு தங்களுக்குதான்னு உரிமை கொண்டாடி மனிதர்களுக்கு கொடுக்காமல் இருந்திருக்காங்க. மனிதர்களின் மீது இரக்கம் கொண்ட பிரேமித்தியஸ் மனித குலத்துக்கு நெருப்பை வழங்கியுள்ளான். இதற்காக சியஸ் என்ற கிரேக்கப் பெருங்கடவுள் பிரேமித்தியஸ் தண்டித்ததாக கிரேக்கப் புராணம் உண்டு. மனித குலத்திற்கு நெருப்பின் தேவை முக்கியம் என்ற நிலையில் புராணக் கதைகள் உருவாகியுள்ளன.  

தமிழ்நாட்டுக் கிராமங்களில் நாய் வளர்க்கக் கூடாது என்பது மாதிரியான சட்டம் இருந்ததா?

முன்னால் இருந்திருக்கிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆண் நாய் வளர்க்கக்கூடாது. மேல் சாதிக்காரர்கள் வளர்க்கக்கூடிய பெண் நாயுடன், இவர்களது ஆண் நாய் இணை சேரும் வாய்ப்புண்டு. இவ்விணைச்சேர்க்கையால் தங்கள் வீட்டு பெண் நாய் கருவுற்று குட்டி போட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்விதிமுறையை நிலைநிறுத்தியுள்ளனர். பல்வேறு கிராமங்களில் இந்த நடைமுறை இருந்திருக்கிறது. இதுபோன்றே ஆடு வளர்க்கக்கூடாது, கோழி வளர்க்கக்கூடாது, வீட்டுக் கொல்லையில் தோட்டம் போடக்கூடாது என்ற விதிமுறைகளும் இருந்துள்ளன. இதுகுறித்து தோழர் இரா.நல்லக்கண்ணு என்ன விளக்கம் கொடுத்தார் என்றால் “இதன் அடிப்படை காரணத்தைப் பார்த்தீர்களென்றால் பெண்களுடைய பொருளாதாரம். தோட்டம், கோழி முட்டை, ஆட்டுக்குட்டி இதன் வாயிலாக பெண்கள் தன்னிறைவு அடைந்துவிடக்கூடாது என்பதுதான். எப்போதும் அவர்கள் தங்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தடை” என்று சொல்லுவார்.

ரஷ்ய புரட்சி 1917-இல் நடக்கிறது. ரஷ்ய புரட்சியையொட்டி லெனின் மேற்கொண்ட சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து…

அதில் என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை. சூழலியல் தனித்துறையாக வளர்ந்த பிறகு அவர்கள் செய்த தவறுகளைப் பேசுகிறார்கள். ஆறுகளைத் திசை மாற்றுவது, தொழிற்சாலைகள் அமைத்தது பற்றி நிறைய வெளிவந்துள்ளது.

ஏங்கல்ஸ் சூழலியல் வளர்ந்ததற்குப் பிறகு ’இயற்கையின் இயக்கவியல்’ என்ற நூலில் சில மாற்றங்களை கவனித்து செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான் அதை என்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நூலில் அடிக்குறிப்பாக சொல்லியிருக்கிறேன். அதை இன்று படித்தாலும் வியப்பாக இருக்கிறது.

காரல் மார்க்ஸ் பற்றி திரும்பத் திரும்பச் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அவருக்கு சூழலியல் சார்ந்த பார்வை கிடையாது என்பது குறித்து?

அவருக்கு மட்டும் இல்லை. சூழலியல் சார்ந்த பார்வை அப்போது யாருக்கும் கிடையாது. மார்க்சை தாக்குவதற்காக சில கருத்துக்களைக் கண்டுபிடிப்பார்கள். வளர்ச்சி நோக்கம் பற்றிப் பார்க்கும் போது இதை அப்போது பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இப்போது இதை வைத்துக்கொண்டு மார்க்சை தாக்கப் பயன்படுத்துகிறார்கள்.

செவ்வியல் இலக்கியத்திற்கான நீண்ட வரலாறு போல, நாட்டார் வழக்காற்றியலுக்கான பாரம்பரியத்தை விளக்குங்கள்?

நமக்கு எப்படி 2000 ஆண்டு இலக்கியப் பாரம்பரியம் இருக்கிறதோ அதேபோல நாட்டார் வழக்காறுகளும், அதனுடைய பல்வேறு வகைமைகளோடு ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால், நாட்டார் வழக்காறுகளை சேகரிப்பது என்கின்ற நிலையைக் கடந்து நாட்டார் வழக்காறுகளை ஆய்வு செய்வது என்கிற நிலைக்கு வரும் போதுதான் நாட்டார் வழக்காறு என்ற நிலையிலிருந்து நாட்டார் வழக்காற்றியல் என்ற அறிவுத் துறையாக பரிணமிக்கிறது. தமிழகத்தின் அத்தனை அறிவுத்துறைகளிலும் அதனுடைய தாக்கம் நுழைய வேண்டும். அதுபோல் அத்துணை அறிவுத்துறைகளையும் நாட்டார் வழக்காற்றியல் உள்வாங்க வேண்டும். நாட்டார் வழக்காற்றியல் தொடர்பாக ஓர் அரசியல் இதற்கு உள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இரசனை சார்ந்ததாக மட்டும் நாட்டார் வழக்காற்றியலைப் பார்ப்பதில் பயனில்லை.

பிற படைப்புகள்

Leave a Comment