புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா
நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி

by olaichuvadi

நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் ஒரு அங்கம் என்றில்லாமல், நாவல் எழுத்தே தனியொரு கலை என்பது இவரது கருத்து. தற்போது 90 வயதை கடந்துவிட்ட நிலையில், அவரது படைப்புகள் வெளிவருவது தோய்ந்துவிட்டது. 2014ம் வருடத்தில் வெளியான The festival of insignificance என்பதே கடைசியாக வெளிவந்த இவரது நாவலாகும்.

செக் குடியரசின் புரூனோ நகரில் 1929ல் பிறந்தவர் என்றாலும் 1975ல் இருந்து பிரான்ஸிலேயே வாழ்ந்து வருகிறார். 1993க்கு பிறகு, பிரெஞ்சு மொழியிலேயே தமது புனைவெழுத்துக்களை எழுதி வருகிறார். இளம் பருவத்தில் கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், செக் குடியரசின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துடனான தமது உறவுகளை முறித்துக்கொண்டார். விளைவாக, இவரது படைப்புகள் செக் குடியரசில் தடை செய்யப்பட்டன; குடியுரிமையும் ரத்துசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, பிரான்ஸுக்கான இவரது இடப்பெயர்வு நிகழ்ந்தது. பலமுறை நோபல் பரிசுக்கான பரிந்துரைகளில் இவரது பெயர் பரிசீலனை செய்யப்படிருக்கிறது என்றொரு வழக்குப் புழக்கத்தில் இருக்கிறது. எனினும், தமது நிலைபாடுகள், செக் குடியரசில் இருந்து வெளியேறியது, சோஷியலிஸ அரசுடனான அவரது சிக்கல் மிகுந்த உறவு போன்றவற்றால், குந்தேராவுக்கு நோபல் பரிசு கிடைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

தமது படைப்புகளை பிரெஞ்சு இலக்கியத்தின் அங்கமாகவும், தம்மை ஒரு பிரான்ஸ் தேசத்து எழுத்தாளராகவுமே எப்போதும் வகைப்படுத்த வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். பொதுவாக, தனது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த தகவல்களை வெளியிடுவதை விரும்பாதவர். 1987ம் வருடத்தின் குளிர்காலத்தில் மிலன் குந்தேராவிடம் எழுத்து, புலம்பெயர்வு, அரசியலும் கலாச்சாரமும், மொழிபெயர்ப்பு, பிரான்ஸில் வாழ்க்கை மற்றும் பெண்கள் எனும் தலைப்புகளின் கீழ் ஜோர்டன் எல்கிராப்லியால் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.

  1. எழுத்து

The book of Laughter and Forgetting-ல், கிராஃபோமேனியா பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அதாவது, ‘ஒவ்வொருவரும் தம்மையே தமது சொந்த எழுத்துக்களால் சூழ்ந்திருக்கிறார்கள், வெளியில் இருந்து வரப்படும் அனைத்து குரலொலிகளையும் கண்ணாடி தடுப்புகளை அரணாக அமைத்து, உள்நுழைய அனுமதிக்காதபடி’. கிராஃபோமேனியா என்பது புத்தகங்கள் எழுதுவதன் மீதிலான அதீத விழைவு. அப்படியானல் பிறகு, எழுத்து என்பது விடுதலை அளிப்பதாகவும், ஆரோக்யமானதாகவும் இருக்கிறது என்பதை ஒப்புகொள்ள மறுக்கிறீர்களா?அதோடு, பிரத்யேகமான சிகிச்சையாகவும், சுய வெளிப்பாடு என்பதயும் சேர்த்தே மறுக்கிறீர்களா?

எழுத்து என்பது சிகிச்சையின் வடிவத்திலானது; ஆமாம். ஒருவர் தன்னில் இருந்து ஏதோவொன்றை விடுவிப்பதற்காகத்தான் எழுதுகிறார். எனினும், இதில் அழகியல் மதிப்பீடுகள் எதுவுமில்லை. இந்த வகைப்பட்ட எழுத்தை– அதாவது முழுமையாக அனுதாபத்தைக் கோருவதும், முறையியலாக இருப்பதும், அதோடு நினைவூட்டலையும், சிகிச்சை முறையையும் கொண்டிருப்பது–குறிப்பிட்ட அழகியல் மதிப்பீடுகளின் தேவையைப் பெற்றிருக்கும். நாம் இலக்கியம் என்று அழைக்கும் எழுத்துடன் குழப்பிக்கொண்டால், அதன் பெயர்தான் கிராஃபோமேனியா. அதனால் ரோலாண்ட் பார்தேயின் சொற்றொடரான, “Tout est ecriture” ரொம்பவும் அபாயகரமானதாக எனக்கு தெரிகிறது. நாம் எழுதுகின்ற அனைத்திலுமே இயற்கையாக அழகியல் மதிப்பீடு இருக்கிறதென்று அவர் வலியுறுத்தினார்.அந்தக் கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை.

நாவல் கட்டமைப்பு என்பது நீள்வட்டமானதாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதோடு, ஒருவர் “நாவல் நுட்பத்தின் தன்னியல்பு தன்மையில் இருந்து” விடுவிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறீர்கள். அதோடு, “நாவல் என்பது கேள்விக்கு பதில் அளிப்பதில்லை; அது பல்வேறு சாத்தியங்களைக் கையளிக்கிறது” என்றிருக்கிறீர்கள். இதனை மேலும் விவரிக்க முடியுமா?

”நாவல் நுட்பத்தின் தன்னியல்புத் தன்மை” என்றால் என்ன? நாம் இசையுடன் ஒரு ஒப்புமையைச் செய்யலாம். உதாரணத்திற்கு ஃபுகூவின் வடிவத்தை எடுத்துக்கொள்வோம். இரண்டு மூன்று குரல் ஒலிகளை ஒரு பாலிஃபோனிக் தொகுப்பாக உருவாக்கும்போது, சில குறிப்பிட்ட விதிகள் இருக்கவே செய்கின்றன. இசைப் பயிற்சியின்போது, இசைத் தொகுத்தல் வகுப்பில் இந்த விதிமுறைகள் உங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. பிறகு என்ன, முன்னதாகவே ஆயிரமாயிரம் ஃபுகூ குறிப்புகள் எழுதப்பட்ட கலாச்சார பின்புலம் உங்களிடம் இருக்கிறது. அவ்வகையில், செறிவான வீட்டுபாடமாக சிறிய நோக்கத்துடன் என்னிடம் கோரப்படும்போது, நான் ஒரு ஃபுகூவை பகுதி- தன்னியல்பாகவே எழுதிவிடுவேன். இந்தத் தன்னியல்பான நுட்பம் என்பது அனைத்து இசைத் தொகுப்புக்கும் தொடர்ச்சியான அபாயமாகவே இருக்கிறது. ஆனால், இதே அபாயம் அனைத்து வகையிலான கலைக்கும் இருக்கிறது. குறிப்பாக, நாவல் கலைக்கு அது மிகுதியாகவே இருக்கிறது. மகத்தான உலகத்தின் நாவல் உற்பத்தியை பாருங்கள்! நாவல்கள் கண்கூடாகவே தம்மைப் பற்றியே எழுதத் துவங்கிவிடுகின்றன; அது ஆசிரியரைப் பற்றி அல்ல, ஆனால் “தன்னியல்பான மற்றும் வழக்கமாக நாவல் நுட்பத்தை எழுதத் துவங்கிவிடுகிறது”. ஒரு ஆசிரியர், அதாவது அசலான ஆசிரியர், தொடர்ச்சியாக இத்தகைய மிகுதி எடையை சுமப்பதில் இருந்து எதிர்நிலையில் செயல்படுகிறவராக இருக்க வேண்டும்.

இவ்வகையில், நாவலை கூடுமானவரையில் நீள்வட்ட வடிவில் எழுத வேண்டுமென்கிற உங்களது விருப்பம் சாத்தியமானதுதான்.அப்படியென்றால், பல பத்திகளை உங்களது எழுத்து மேசையில் நீங்கள் செயல்பட துவங்கும்போது நசுக்கிவிடுகிறீர்கள் என்று அர்த்தமா?அழிப்பான்களும், மாற்றங்களும்தான் இத்தகைய உரைநடை எழுத்திற்கு எதிராக நீங்கள் முன்வைக்கும் எதிர் அமைப்பா?

ஆமாம். அதிகளவிலான பக்கங்களையும், பத்திகளையும் நான் நீக்கிவிடுகிறேன் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நடைமுறை வழக்கம்தான். ஒருவர் எழுதியதில் இருந்து பலவற்றையும் நீக்குவது என்பது உச்சபட்சக்கற்பனை வளர்த்தெடுப்புச் செயலாகும். காஃப்காவின் விமர்சகர்கள் (அவர்களில் முதன்மையானவர் மாக்ஸ் ப்ராட்), தனது நாவல்களில் காஃப்கா நீக்கியிருக்கும் சொற்றொடர்களைக் குறிப்பிட்டு பேசும்போது, எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஒரே மூச்சில் காஃப்கா எழுதுவது வெளியீட்டிற்காகவே என்று மேற்கோள் காண்பிக்கிறார்கள். இங்கு உங்களுக்கு “Tout est ecriture”-க்கு ஒரு நடைமுறை உதாரணம் கிடைத்துவிட்டது. காஃப்காவின் விமர்சகர்களைப் பொருத்தவரையில், அவர் எப்போதும் சமமான மதிப்பீடுகளுடன்தான் எழுதியிருக்கிறார். இப்போது, ஒரு சொற்றொடரை நீக்குவது, அதில் எந்தவொரு சிறப்பும் இல்லை என்பதை உணருவது, அதாவது அது பிரத்யேகமானதாகவும், புதிதாகவும் இல்லை அல்லது அது தொடர்ச்சியான பிரயோகத்தில் இருப்பது – இதுவொரு அதீத முயற்சியின் செயல்பாடானது, எனது மனதைப் பொருத்தவரையில், அவ்வப்போது, எழுதுவதை விடவும் அதிகப்படியான அறிவார்த்தமான ஆற்றலை கோருவதாகவும் இருக்கிறது.

நாவலாசிரியர்களின் ஒரே கடமை என்பது அறிவு சேகரத்திற்கான தேடல்தான் என்று ஹெர்மன் ப்ரோச் குறிப்பிட்டிருப்பதாக மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். இது ஒருவகையில், கலை செயல்பாடு என்பது அழகியல் கிளர்ச்சி என்பதை விட, குறிப்பிட்ட அழகியலுக்கான வெற்றிடத்தை பிரதிபலிக்கும் தரத்தைப் பெற்றிருக்கும் என்று குறிப்புணர்த்துவதாக தோன்றவில்லையா?

ஆனால், அழகியல் ரீதியிலான கிளர்ச்சி என்பது என்ன? என்னைப் பொருத்தளவில், சொல்லப்படாத, விவரிக்கப்படாத, பார்த்திருக்காத ஒன்றிற்கு முன்பாக நான் அனுபவம்கொள்ளும் ஆச்சர்யமே ஆகும். ஏன் மேடம் பொவாரி எப்போதும் நம்மை வசீகரிக்க தவறுவதில்லை? ஏனெனில் இன்றைக்கும்கூட இந்த நாவல் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. நமது தினப்படி வாழ்க்கையில் நாம் பார்க்கும் நிலையில் இல்லாததை அது திறந்துவிடுகிறது. நாம் எல்லோரும் மேடம் பொவாரியை ஒரு சமயத்திலோ அல்லது வேறொரு சமயத்திலோ சந்தித்திருப்போம்; எனினும், அவளை அடையாளம் காணுவதில் தோல்வியுற்றிருக்கிறோம். உணர்ச்சி நிலைகளின் வழிமுறை, மாயைகளின் வழிமுறை அணிந்திருந்த முகமூடியை ப்ளொபெர்ட் அவிழ்த்து வெளிப்படுத்தினார். லிரிக்கல் உணர்ச்சி நிலையின் மூர்க்கத்தையும், குரூரத்தன்மையையும் அவர்தான் நமக்குக் காண்பித்தார். அதைத்தான் நாவலின் அறிவு சேகரம் என்று நான் கருதுகிறேன்.

ஒரு ஆசிரியர் முன்பொருபோதும் வெளிப்படாத யதார்த்தத்தின் சாம்ராஜ்யத்தை திறந்து காட்டுகிறார். இந்தத் திறப்பு ஒரு ஆச்சர்யத்தை உண்டுபண்ணுகிறது. அதோடு, ஆச்சர்யமான அழகியல் கிளர்ச்சியையும், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அழகின் உணர்வை வெளிப்படுத்துகிறது. மற்றொருபுறத்தில், வேறொரு அழகும் நிலவுகிறது: அறிவுக்கு வெளியில் இருக்கும் அழகு. முன்னதாகவே ஓராயிரம் முறை இலகுவாகவும், வசீகரமான முறையிலும் விவரிக்கப்பட்டதையே ஒருவர் மீண்டும் விவரிப்பு செய்கிறார்.”ஆயிரம் முறை முன்னதாகவே சொல்லப்பட்டது” என்பதன் அழகைதான் நான் “Kitsch” (அழகற்றத் தன்மை) என்று உறுதியாகக் கருதுகிறேன். இந்த வகையிலான விவரிப்பைதான், ஒரு உண்மையான கலைஞன் மிக ஆழமாக வெறுக்கச் செய்வான். அதோடு, ஆமாம், இந்த ”அழகற்றதன் அழகு” எனும் வகையிலான அழகுணர்ச்சிதான் நமது நவீன உலகத்தை ஆக்கிரமிப்பு செய்யத் துவங்கியிருக்கிறது.

ஒருகையில், நாவலென்பது வாழ்க்கையின் குறிப்பிட்ட அறிவை எய்துவதற்கான புதிய அணுகுமுறையை சாத்தியப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். மறுகையில், ”நாவல் கேள்விகளுக்கு பதில் அளிக்காது” என்று விவாதிக்கிறீர்கள். ஆனால் நாவல் வடிவத்தில் அறிவுத் திறப்பு என்பதில், எழுத்தாளர் சில பதில்களை முன்னிறுத்துகிறார் என்கிற அர்த்தம் உண்டாகிறது அல்லவா?

எல்லோரும் தீர்ப்புகளை வழங்க விரும்புகிறார்கள். ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாகவே, அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று தீர்மானித்துவிடுகிறார்கள், ஒரு கருத்தை கேட்பதற்கு முன்பாகவே, ஒருவர் கும்பல் மனோபாவம் கொண்டவரா அல்லது தனக்கு எதிரியா என்றெல்லாம் முடிவு கட்டிவிடுகிறார்கள். இத்தகைய நியாயத் தீர்ப்புகளை வழங்குவதன் மீதிலான ஆர்வம், ஒன்றைப் பற்றி அறிந்துகொள்வதில் நிலவும் மந்தத்தன்மையும், பிறரைப் புரிந்துக்கொள்வதும்தான், மனித இயல்பு என்று வகுக்கப்படுகிறது. இது மனிதன் மீது கவிந்துவிட்டிருக்கும் சாபமாகும். இப்போது நாவல், குறைந்தபட்சம் நான் எண்ணிக்கொண்டிருக்கும் விதத்திலாவது, மனிதனின் இந்தப் போக்குக்கு எதிராக இயங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாவல் புரிந்துகொள்வதற்கு பாடுபடுகிறது. ஈவா பொவாரி மனிதத்தன்மை அற்றவளா?ஆமாம். அவள் ஆன்மாவைத் தொடுகின்றவளா?ஆமாம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அவள் தெளிவற்றவளாக இருக்கிறாள். தெளிவற்றத்தன்மை எனும் வார்த்தையைக் கைப்பற்ற முயலுங்கள். ஒருவேளை, தினப்படி வாழ்க்கையில், உங்களிடம் நான், “நீங்கள் பேசுவது அனைத்துமே எனக்கு தெளிவற்றதாகவே இருக்கிறது” என்று கூறினால், அது நான் உங்களை நிந்திப்பதைப்போல ஆகிவிடும். அர்த்தத்தை வெளிப்படுத்த நீங்கள் விரும்பவில்லை, அல்லது உங்களுக்கு அதனை எப்படி சுருக்கமாக சொல்வது என்று தெரியவில்லை. தெளிவற்றதாக இருப்பது, வீழ்த்துவதாக இருக்கிறது. அல்லவா? ஆனால் நாவல் கலையில், தெளிவற்றதாக இருப்பது என்பது பலவீனமானதல்ல. நாவல் கலை கண்டுப்பிடிக்கப்பட்டதே, உண்மையில், மாஸ்டர்களால், இந்த தெளிவற்றத்தன்மையை பயன்படுத்தத் துவங்கியபோதுதான். நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்று, நாவல் கலையை கண்டுப்பிடிப்புக்காக ஏங்கும், அதோடு, விஷயங்களின் தெளிவற்றத்தன்மையையும், உலகத்தின் தெளிவற்றத்தன்மையையும் கைப்பற்ற உண்டாகும் விழைவு என்று அர்த்தப்படுத்தி விளக்கலாம். ஏன் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலங்களையும், நாவல்களையும் ஒன்றென கருதி குழம்பிக்கொள்ளக்கூடாது என்பதை இது விளக்குகிறது. வாக்குமூலம் என்பது தெளிவற்றத்தன்மையில் இருந்துவிடக்கூடாது. அது வாக்குமூலம் வழங்கும் நபரின் மனதைத் திறந்து நேரடியாகவும், நேர்மையாகவும் சொல்வதாக இருக்க வேண்டும். நாவல் என்பது ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. மாறாக, அது தனது கதாப்பாத்திரங்கள் பற்றியும், அவர்கள் வளர்ந்த உலகம் பற்றியும் நம்மிடம் உரையாடுகிறது. நாவலின் குறிக்கோள் என்பதே, கதாப்பாத்திரங்களின் இந்தக் கலைடாஸ்கோப் தன்மையை ஒருங்கிணைத்தலே ஆகும்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தமக்கேயான பிரத்யேக உண்மையையும், பிரத்யேக பார்வையிலான உலக அணுகுமுறையையும் கொண்டிருக்கிறார்கள். அனைத்துக் கதாப்பாத்திரங்களும் சுயம் பற்றிய தனிப்பட்ட கருத்தாக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். மற்றும் இந்தக் கருத்தாக்கம் துயரார்ந்த வகையில் (அல்லது நகைச்சுவையாக) அவர் யதார்த்தம் என்று கருதி வாழும் உலகத்தால் மாறுதலடைகிறது. பாருங்கள், திடீரென நாம் இப்போது குழப்பங்கள் நிலவும் பிரபஞ்சத்தில் நம்மை உணருகிறோம். நாவலாசிரியர் இந்தத் தெளிவற்றத்தன்மையின் மீது அழுத்தம் கொடுத்து, தனது வாசகர்களிடம், இவ்வாறு குறிப்பிடுகிறார்: உலகத்தை எளிதானதாக கருதாதீர்கள்! இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், தெளிவற்றத்தன்மையை, அதனது முழுமையான ஆற்றலுடன், அதனது அத்தனைச் சிடுக்குத்தன்மையுடனும் நீங்கள் கைப்பற்றியாக வேண்டும்.

நதீன் கோர்டிமரை பொருத்தவரையில், சில ‘இயற்கையான’எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் மிக இளைய வயதிலேயே எழுதத் துவங்கிவிடுவார்கள். அதோடு, சமூக எதிர்வினை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் சீற்றத்தையும், ஒருவகையிலான தார்மீக கோபத்தை வெளிப்படுத்துவதற்குமான உந்துதலைப் பெற்றிருப்பார்கள். உங்களது எழுத்து, இதுபோன்ற நோக்கங்களை வலியுறுத்தும் வகையினை சார்ந்ததா?அல்லது இவற்றில் இருந்து வேறுபட்டு வேறு வகையில் நீங்கள் இயங்குகிறீர்களா?

நிச்சயமாக நான் இரண்டாம் வகைப்பட்ட பிரிவை சார்ந்தவன் அல்ல. இதனை நான் அழுத்தமாக வலியுறுத்த காரணம், என்னுடைய எழுத்து, ஏதோவொன்றிற்கு எதிராக கிளர்ச்சிச் செய்வதற்காக துவங்கப்பட்ட எழுத்து என்றே பார்க்கப்படுகிறது. நான் முதல் வகைப்பட்ட பிரிவை சார்ந்த எழுத்தாளன்தான் என்றாலும், சில ஒதுக்கீடுகளுடன்தான். நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்றால், எனக்குள் இந்தக் கலைக்கான விழைவுணர்வு சிதறியதாகவே இருந்தது. ஒரே சமயத்தில் நான் இசையில் வேலை செய்ய விரும்பினேன், அதன் தொடர்ச்சியாகச் சில காலத்துக்கு ஓவியக் கலையில் எனது நேரத்தைச் செலவிட்டேன். அதன்பிறகு, திரைப்படங்களையும் இலக்கியத்தையும் பற்றி சிறிது காலம் நினைத்துக்கொண்டிருந்தேன். கண்பார்வையற்றவன் எதையேனும் பிடுங்க முயற்சிப்பதைப்போல கலைக்குள் உலாத்திக்கொண்டிருந்த நான், எதனை என்னால் தாங்க முடிகிறது என்று கண்டுபிடிக்க முயற்சித்தேன். இறுதியில், எனக்கு 30 வயது ஆனபோது, உரைநடையில் எனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன்.

என்னை நானே கண்டடைந்தபோது, இது நிகழ்ந்தது. சமூகத்துக்கு எதிர்வினை புரிய வேண்டும் என்கிற எண்ணத்தால் அடித்துச் செல்லப்படும் வரையில் இது எனது உந்துவிசையாக இருக்கவில்லை, இலக்கியத்தின் மீது சாய்வுகொள்ளச் செய்த உந்துவிசை இதுவல்ல. வேறு ஒரு கோணத்தில் இதனை விவரிக்கிறேன்: ஒன்றிற்கு எதிராக எழுதுவது என்பதோ, ஒன்றை எதிர்த்து எழுதுவது என்பதோ கேள்வியாக எழவில்லை, ஆனால் என்னைச் சுற்றிலும் இருந்த பொருள்வயப்பட்ட யதார்த்தம் ரொம்பவும் புதிரானதாகவும், சுவாரஸ்யமூட்டுவதாகவும் இருந்ததால், உடனடியாக மற்றைய அனைத்தையும் கை கழுவிவிட்டு, உரை நடையின் திசையில் பயணிக்கத் துவங்கிவிட்டேன். எனினும், உரைநடையை நான் கையில் எடுத்துக்கொண்டுவிட்டபோதிலும், முன்காலத்தில் என்னவிதமான அழகியல் லட்சியங்களை நான் பெற்றிருந்தேனோ அதே உணர்வுகளுடன்தான் உரைநடையிலும் தொடர்ந்தேன்.

விட்டோல்ட் கோம்ப்ரோவிச் தனது சிறுகதைத் தொகுதியையும், இறுதியாக ஒரு நாவலையும் (ferdydurke) பதிப்பிப்பதற்கு முன்னால், இரண்டு நாவல்களை எழுதி எரித்துவிட்டார். புனைவெழுத்தை எழுதுவது என்ற தீர்மானத்தை உருவாக்கிகொண்டதும், உங்களது வளர்ச்சி நிலை அதில் என்னவாக இருந்தது?

ம்ம். Laughable loves தொகுப்பில் இருக்கின்ற சிறுகதைகளை எழுதுவதில் இருந்துதான் துவங்கினேன். அதனால் அந்தத் தொகுப்பு, முதலில் பத்து கதைகளாக இருந்து, பின்னர் ஏழு கதைகளாகச் சுருக்கப்பட்ட அதுதான் எனது முதல் முழுமையான உரைநடைஎழுத்து முயற்சி. ஒரு இசையமைப்பாளர் தனது இசைக் குறிப்புகளைக் கோர்த்து வடிவமைப்பதைப்போலத்தான் நானும் துவங்கினேன்: அத்தொகுப்பில் சில கதைகள் இடம்பெறவில்லை. Laughable loves-ன் முதல் கதையிலேயே எனது எழுத்து சிலிர்த்து எழுந்தது. அதுதான் எனது முதல் இசைக் குறிப்பு. அதற்கு முன்பு நான் எழுதியிருந்த அனைத்தும் முந்தைய காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படலாம்.

அமெரிக்க கலாச்சாரமும், இலக்கியமும் எந்த எல்லை வரையில் உங்கள் மீது தாக்கத்தை செலுத்தியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். Cowards புத்தக ஆசிரியர் ஜோசப் ஸ்க்வொர்கி தனது எழுத்திலும், பார்வையிலும், அதோடு போருக்கு பிந்தைய செக் புனைவெழுத்திலும், அமெரிக்க இலக்கியமும், ஜாஸ் இசையும் மிகுதியான பாதிப்புகளைச் செலுத்தியிருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்.

ஸ்க்வொர்கி அமெரிக்காவின் மீது சார்புநிலை கொண்ட ஆசிரியர். இது விநோதமானதுதான், எனினும், சிறிய நாடுகள் ரொம்பவும் காஸ்மோபொலிட்டனாக விளங்குகின்றன. அவை காஸ்மோபொலிட்டனாக இருப்பதற்கு விதிக்கப்பட்டுள்ளன என்று நீங்கள் தெரிவிக்கலாம், ஏனெனில் இந்தச் சிறிய போலிஷ், டேனிஷ் மற்றும் செக் இலக்கியங்களை மட்டுமே அறிந்த, தன்னுடைய உடனடி சூழலுக்கு வெளியில் நிலவும் உலகத்தைப் பற்றி சிறிய அளவிலேயே தெரிந்து வைத்திருக்கும் ஒரு ஏழை மாகாணத்தை சேர்ந்தவராக நீங்கள் இருக்கலாம் அல்லது அனைத்து இலக்கியங்களின் பரீட்சயங்களையும் உடைய பிரபஞ்சவாதியாக இருக்கலாம். சிறிய நாடுகள் மற்றும் மொழிகளின் முரண்பாடான ஒரு சாதக அம்சம் என்னவென்றால், அவைகளுக்கு உலகத்தின் பல்வேறு இலக்கியங்களின் அறிமுகம் ஏற்பட்டிருக்கும். ஆனால், ஒரு அமெரிக்கருக்கு பெரும்பாலும் அமெரிக்க இலக்கியங்களே தெரிந்திருக்கும். ஒரு பிரெஞ்சு குடிமகனுக்கு பிரெஞ்சு இலக்கியமே அறிமுகமாகியிருக்கும். செக் குடியரசுவாசிகள் பகிர்ந்துகொள்கின்ற இந்தப் பொதுவான எல்லைகளைக் கடந்தும், அவர்களுக்கு ஒருதலை சார்பு இருக்கவே செய்கிறது.

ஜாஸ் இசையின் காரணமாகவே, அமரிக்க இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டிருக்கும் சிலரில் ஒருவர்தான் ஸ்க்வொர்கி என்று நான் நம்புகிறேன். இளைஞனாக இருக்கும்போதிலிருந்தே அவர் ஒரு ஜாஸ் இசை கலைஞனாகத்தான் இருக்கிறார்; அதனால் இளம் வயதில் இருந்தே அவர் ஒரு அமெரிக்கனிஸ்ட்தான்! அவர் வில்லியம் பால்க்னரை அற்புதமான வகையில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதனால் ஸ்க்வொர்கியின் தனிப்பட்ட அசல்தன்மை என்பது, ஒரு செக் குடியரசைச் சேர்ந்தவனை பொருத்தவரையில், அமெரிக்க இலக்கியத்தின் இணைப்பாளர் என்பதுதான். மறுபுறத்தில், நான் எப்போதும் பிரெஞ்சு இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தால்தான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். மிக இளைய வயதில் இருந்தே பாதுலேயரையும், ரிம்பாடையும், அபோலினரையும், ப்ரெட்டனையும், கூக்டேயையும், பெதலியையும், ஐனோஸ்கோவையும் வாசித்து வருகிறேன். அதோடு, பிரெஞ்சு சர்ரியலிஸத்தால் நான் கவரப்பட்டிருக்கிறேன்.

கோம்ப்ரோவிச்சின் வாதத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா? அவர் சொல்கிறார், “எழுத்தாளர் தொழிற்வயப்பட்டவன் அல்ல. எழுதுவதற்கு ஒருவருக்குக்குறிப்பிட்ட வகையிலான குணவியல்பும், அதோடு சில அளவு இறைத்தன்மையும் இருக்க வேண்டும்என்கிறார்.

தொழிற்வயப்பட்டவனா? ஆமாம் மற்றும் இல்லை. தினசரி வாழ்க்கையை மறுக்கக்கூடிய தொழிற்வயப்பட்டவன் அல்ல எழுத்தாளன் என்பவன். அதே சமயத்தில், ஒரு தொழிற்நுட்பவாதிக்கு அவனது தொழிற் சார்ந்த அறிவு தொடர்ச்சியாகத் தனது வேலைகளில் ஈடுபாட்டுடன் இயங்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறது, ஒரு எழுத்தாளருக்கு மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் இல்லாத ஒரு சூழல் உண்டாகும்போது, அவர் மெளனித்துவிட வேண்டும். என்னதான் தனது செய்நேர்த்திப் பற்றிய அறிவு அவரிடத்தில் இருந்தாலும், தொழிற்வயப்பட்டவராக அவர் இருந்தாலும், அவருக்கு இவை கைக்கொடுக்கப் போவதில்லை. மறுபுறத்தில், ஒரு ஆர்க்கஸ்ட்ராவை எழுதுவதற்கு முன்னதாக நான்காண்டு காலம் பயிற்சிப் பெற்ற பின்னர் அறிந்துகொள்ளும் இசைத் தொகுத்தலில் உள்ள நுட்பமான அம்சங்களைப்போல, எழுதுவது என்பது, அந்தக் கலையில், அதன் செய்நேர்த்தியில் மிகுந்த ஆளுமையுடன் செயல்புரிவதே ஆகும். நீங்கள் அப்படியே அமர்ந்து உடனடியாக இசைக் குறிப்பை எழுதிவிட முடியாது.இசையுடன் தொடர்புடைய இதுப்போன்ற பின்னணி, இலக்கியத்தில் உடனடியாக வெளிப்படையாகப் பார்வைக்குப் புலனாவதில்லை.இலக்கியத்துக்கென்று ஒரு பாதுகாப்பு வளையம் எதுவும் கிடையாது. எந்தவகையிலும், இலக்கியம் என்பது ஒரு தொழில், ஆனால் அது முற்றிலுமாகக் கடினமானது.

  • புலம்பெயர்வு

Varia-வில் பிரசுரமாகியிருந்த ஒரு கட்டுரையில் (1978) கோம்ப்ரோவிச், “தன்னையே மதிக்கக்கூடிய எந்தவொரு கலைஞனும் இருக்க வேண்டிய நிலை, அதன் முழு அர்த்தப்படுத்தல்களுடனும் ‘அகதிநிலை என்றே கருதுகிறேன்என்றார். புலம்பெயர்வு என்பதன் அர்த்தம் தொடர்பாக குந்தேராவையும், கோம்ப்ரோவிச்சையும் ஒப்பீடு செய்ய முடியுமா?

எழுத்தாளரின் வலுவான தனித்துவம் இயல்பாகவே அவரை உருவகத் தன்மையில், நாடு கடத்திவிடச் செய்கிறது என்பதை சுட்டிக்காட்ட அவர் விரும்பியிருக்கலாம். அதாவது, அவன் தனது இயல்பினாலேயே எந்தவிதமான கூட்டுத்திறனுக்கு செய்தித் தொடர்பாளனாக இருக்க முடியாது; மாறாக அவன் எப்போதும் கூட்டத்திறன்களை எதிர்ப்பவனாகவே இருப்பான். எழுத்தாளர் எப்போதுமே ஒரு கருப்பு ஆடுதான். அவருடைய வழக்கை பொருத்தவரையில், இது குறிப்பாக போலிஷ் இலக்கியங்களைத் தேசத்திற்கு சேவைபுரியும் ஒன்றாக கருதுவதை போலவெளிப்படையாகவே தெரிகிறது. பெரும்பாலான, துருவப் பகுதி எழுத்தாளர்களுக்கு மத்தியில் நிலவும் ஒரு சிறப்பான கலாச்சாரம் என்பது, அவர்கள் தேசத்திற்கான செய்தித் தொடர்பாளர்களாக விளங்குகிறார்கள் என்பதுதான். கோம்ப்ரோவிச் இந்த பாத்திரத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், கடுமையாக கேலியும் செய்தார். இலக்கியத்தை நாம் முற்றிலுமாக தன்னாட்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அர்ஜெண்டினாவில் இருந்தபடியே, ‘தனது சொந்த நாட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு எழுத்தாளரின் சூழ்நிலையை பிரதிபலிக்கும் ஒருவரே நான்’ என்ற கருத்தை முன்வைப்பவராகவும் இருந்தார்.

உங்களுக்கும், கோம்ப்ரோவிச்சுக்கு உள்ள இடைவெளி என்னவென்றால், போலந்தில் இருந்து தென் அமெரிக்கா சென்றஅவர், திரும்பவும் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று விருப்பம் கொள்ளவே இல்லை, போலவே, அவர் திரும்பவும் இல்லை. ஆனால் நீங்களோ செக்கோஸ்லோவியா மீதும், அதன் விதியின் மீதும் பெரும் விருப்பத்தில் இருக்கிறீர்கள்.

முரண்பாடாக, கோம்ப்ரோவிச் உண்மையில் போலந்தின் மீது ஆர்வத்தில்தான் இருக்கிறார்! நினைவில் கொள்ளுங்கள், தனது 35வது வயதில் போலந்தில் இருந்து வெளியேறிய அவர், தனது வாழ்நாள் முழுக்கவே போலிஷ் மொழியில்தான் எழுதினார், அதோடு, அவரது பத்திகள் கடிதங்கள் போன்றவற்றை வாசித்தீர்கள் என்றால், பெரும்பாலான அவரது நண்பர்களும், எதிரிகளும்கூட துருவ பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதை உணர முடியும். மிகத் துலக்கமாகவே, வேறு யாரையும்விட போலந்து நாட்டு அறிவாளிகளுடன்தான் அவர் அதிகளவில் வலுவாக உரையாடியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அவரது ஒவ்வொரு நாவலும், போலந்தில் நடைபெறுவதாக இருக்கும், அல்லது துருவ பகுதிகளுக்கு இடையில் நடைபெறுவதாகவே இருக்கும். செக்கோஸ்லோவியா மீது எவ்வளவு தூரம் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறோனோ அதை விடவும், அதிகப்படியான ஈர்ப்பு அவருக்கு போலந்தின் மீது இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

உங்களது அனைத்து நாவல்களும், கதைகளும் செக்கோஸ்லோவியாவில்தான் மையம் கொண்டிருக்கின்றன. நீங்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி பத்து வருடங்கள் கடந்துவிட்டது. உங்களது தாய் நிலத்திற்கு வெளியில் செயல்கள் நடைபெறும் வகையிலான ஒரு புனைவை எழுத நீங்கள் சிந்திப்பீர்களா?

இது உண்மையாகவே கொஞ்சம் புதிரான விவகாரம்தான். கோம்ப்ரோவிச் தனது 35வது வயதில் போலந்தில் இருந்து வெளியேறினார். அதாவது, தனது வாழ்க்கையின் சாகசப் பருவங்களை அவர் அர்ஜெண்டினாவிலேயே கழித்திருக்கிறார். போலந்துடன் அவருக்கு வன்முறை மிகுந்த உறவே நிலவியது என்றாலும், அவரால் போலந்தை தவிர வேறு எதைப் பற்றியும் எழுத முடியவில்லை. நாங்கள் எவ்வாறு எங்களது வாழ்க்கையின் முற்பகுதியில் வேர்கொண்டிருக்கிறோம் என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. எங்களது வாழ்க்கையின் இரண்டாம் பகுதி தீவிரமானதும், நெகிழ்வூட்டக்கூடியதுமான சம்பவங்களால் நிரம்பியிருக்கிறது என்றாலும், முற்பகுதி வாழ்க்கையிலேயே நாங்கள் அபாயகரமான வகையில் வேர்கொண்டிருக்கிறோம். அனுபவத்தைப் பற்றி மட்டுமே இங்கு கேள்வி எழுப்பப்படுவதில்லை (கோம்ப்ரோவிச்சுக்கு அர்ஜெண்டினாவில் பலப் பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்) ஆனால், வாழ்க்கையின் முதற் பகுதியுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ள ஆவேசங்கள், அதிர்வுகள்– அதில் குழந்தைப் பருவமும் அடங்கும், வளரும் பிராயமும் அடங்கும், இளமைப் பருவமும் அடங்கும். உங்களது கேள்விக்கு பதில் சொல்வதென்றால்: இல்லை.

ஒரு உதாரணத்திற்கு, ஒரு நாவலை பிரான்சிற்குள் பொருத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை (நான் மேலும் ஒன்றை எழுத வேண்டுமா). ஆனால், “புவியியல் ரீதியாக நாவலை எங்கு நிலைநிறுத்துவது” என்பது எனது முக்கியமான அழகியல் சங்கடங்களில் ஒன்று ஆகும். அதோடு, அதனை தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் நான் ஈடுப்பட்டே வருகிறேன். முன்பே, Life is Elsewhere (ப்ராகில் அந்த நாவலை 1969ம் வருடத்தில் எழுதினேன்) நாவல் பிரத்யேகமாக ப்ராகில் நிலைப்பெற்றிருக்கவில்லை. உண்மைதான், அதன் மையக் கதாப்பாத்திரம் ப்ராக் நிலப்பகுதிக்கு உரியவன்தான், மேலும் அவன் ஒருபோதும் தனது நகரத்தை விட்டு வெளியேறுவதில்லை.எனினும், நாவலின் அலங்காரம் என்பது, எனது மையக் கதாப்பாத்திரத்தின் கதையின் அலங்காரத்தை விடவும் பெரியது. விளைவாக, கதாப்பாத்திரத்தால் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு செல்ல முடியாது என்பதால், விவரிப்பாளரின் ஆன்மா நகர்வுக்கான முழுமையாக சுதந்திரத்தை அனுபவிக்கிறது. சாத்தியமான அனைத்து தொடர்ச்சிகளையும் விரிவாக்க நான் முயற்சித்தேன். இவ்வகையில், எனது நாவல் ப்ராகில் நடைப்பெற்ற சம்பவங்களுடன் மட்டுமே தொடர்புடையது அல்ல, மாறாக 1968ம் வருடத்து மே மாதத்துடனும் தொடர்புகொண்டிருக்கிறது. அது ஜெரோமில்லை (கதையின் மையக் கதாப்பாத்திரம்) மட்டும் கையாளுவதில்லை, மாறாக ரிம்பாட், கீட்ஸ் மற்றும் விக்டர் ஹுகோவையும் கையாளுகிறது.

நுட்பமாக இதனை சொற்றொடர் ஆக்குவது என்றால்: நாவலின் அலங்காரம் என்பது, ஐரோப்பியா முழுவதுக்குமான விவரிப்பாளரின் திசைதிருப்பல்களால் மேலும் பெரிதுப்படுத்தப்பட்டிருக்கிறது. The Book of Laughter and Forgettingல் இந்த கோட்பாட்டை நான் மேலும் வளர்த்தெடுத்தேன். அந்த நாவலை நான் பிரான்சில் இருந்து எழுதினேன்.குத்துமதிப்பாக, கதையின் சம்பவங்களில் மூன்றில் இரண்டு பங்கு ப்ராகிலும், ஒரு பங்கு ஓசிடெண்டிலும் தொடர்புடையதாக இருக்கிறது. அதோடு, ப்ராகில் அவிழ்க்கப்படும் கதைகளும், அந்த நிலத்தில் இருந்து பார்க்கப்படுவதில்லை; மாறாக, பிரான்சில் சொகுசாக இருக்கும் யாரோ ஒருவரின் பார்வையின் வழியாகவே அணுகப்படுகிறது. பிரான்ஸ் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு, அவை ஈரத்துடன் பிரதிபலிப்பு செய்யப்படுகின்றன.உதாரணத்திற்கு, நாவலின் இரண்டு பகுதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவை ஏஞ்சல்ஸ் என்று தலைப்பிடப்பட்டிக்கின்றன: முதல் பகுதி (நாவலில் மூன்றாவதாக வருவது) முதலாவதிலும் ஒரே நேரத்தில் நடக்கிறது) ப்ராகில் இரண்டாவது) மெடிரேரியன் நகரத்தில் மூன்றாவது) கட்டுக்கதையின் புதிரான தளத்தில் நான்காவது) விமர்சன பிரதிபலிப்பின் சுருங்கிய உலகத்தில் (பெண்ணியவாத புத்தகம் பற்றிய பகுப்பாய்வு) நடக்கிறது. கடைசி பகுதி (நாவலில் ஆறாவது) முதலாவதிலும் ஒரே நேரத்தில் நடக்கிறது) ப்ராக் – எனது தந்தை மரணம் பற்றி சித்தரிப்புகளோடு, அந்த நகரத்தின் அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய சித்தரிப்பும் – இரண்டில்) மேற்கத்திய ஐரோப்பியாவின் ஒரு நகரம் மூன்றாவதில்) தாமினா தனது நாட்களை நிறைவுச் செய்கின்ற ஒரு புதிரான தீவில். நாவலின் புவியியல் ரீதியிலான அலங்காரத்தின் மீதான எனது பரிசோதனை முயற்சியே இது. இவ்வகையிலான பரிசோதனை முயற்சிகள் எனக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக தெரிகின்றன, அதோடு எனது வருங்காலத்தைய நாவல்களில் மேலும் மேலும் இதனை செய்து பார்க்கவே நான் விரும்புகிறேன்.

அப்படியானால், கோம்ப்ரோவிச் ஒரு உருவகத்தன்மையிலான வெளியேற்றத்தில் வாழ்ந்தார் என்றால், நீங்கள் (செக்கோஸ்லோவியாவின் அரசியல் முட்டுக்கட்டைகளால் முன்மொழியப்பட்டு) பிரான்ஸை உங்களது வாழ்விடமாக தேர்வு செய்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பியாவையும் உங்களது பிரதேசமாக முன்வைக்கிறீர்கள். உங்களால் ப்ராக்குக்கு திரும்பிச் செல்வதைப்போலவும், அங்கு சுந்ததிரமாக வாழ முடிகிறது என்றும் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

பதில் சொல்லாமலிருப்பதற்கு என்னை அனுமதியுங்கள்.எப்போதெல்லாம் ஒரு கணிப்பை, ஒரு அரசியல் முன்கணிப்பை செய்துப் பார்க்க நான் விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நான் தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறேன். எனது ஒரே சான்றிதழ்: அரசியல் ஆட்சி அதிகாரம் குறித்த முன்கணிப்புகளில், வெகு இயல்பாகவே எனது யூகத்திற்கு எதிராகவே எதுவொன்றும் நிகழ்ந்தேறுகிறது.

நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்?

நான் ரொம்பவும் அவநம்பிக்கைவாதி. என்றேனும் ஒரு நாள் செக்கோஸ்லோவியாவுக்கு திரும்பிச் செல்வேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. அது எப்போதும் சாத்தியமில்லாமல்தான் இருக்கும்.

பிற செக்கோஸ்லோவியாவினர், நண்பர்கள் உடன் நெருக்கமான தொடர்பை பேணி வருகிறீர்களா?

நிச்சயமாக. எனக்கு செக் நண்பர்கள் இருக்கிறார்கள், எனினும் அவை காலத்தால் ரொம்பவே முன்னால் நிகழ்ந்தது. 90 சதவீதமான எனது தொடர்பு என்பது பிரான்ஸ் மக்களுடன்தான் இருக்கிறது. எனக்கு 46 வயது ஆனபோது இந்த நாட்டிற்கு நான் வந்தேன். அந்த வயதில் மேற்கொண்டு காலத்தை வீணடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை, உங்களது நேரமும், ஆற்றலும் வரையறைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் தேர்வு செய்தாக வேண்டும்: ஒன்று நீங்கள் கடந்த காலத்தை அசைப்போட்டபடியே, நீங்கள் இப்போது வசித்திருக்காத, உங்களது முந்தைய நாட்டில், பழைய நண்பர்களுடன் வாழ்ந்ததை நினைத்தபடியே நாட்களைக் கடத்த வேண்டும். அல்லது, இத்தகைய சோதனையான சூழலை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள உங்களது ஆற்றலை பயன்படுத்த வேண்டும், சைபரில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க, நீங்கள் இப்போது இருக்கும் நிலத்தில் ஒரு புதிய வாழ்க்கையை உண்டாக்கிக்கொள்ள ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தவொரு சுணக்கமும் இல்லாமல், இரண்டாவது வழியை நான் தேர்வு செய்துகொண்டேன்.

அதனால்தான் என்னை ஒரு அகதியைப்போல நான் உணருவதில்லை. நான் இங்கு வாழ்கிறேன், பிரான்சில், சந்தோஷமாக, ரொம்பவும் சந்தோஷமாக வாழ்கிறேன்.என்றாவது ஒரு நாள் மீண்டும் செக்கோஸ்லோவியாவுக்கு திரும்புவதைப் பற்றி சிந்திருக்கிறேனா என்று கேள்வியெழுப்பினீர்கள். இல்லை என்று நான் பதிலளித்தேன், சூழ்நிலை ஒருபோதும் அதனை அனுமதிக்காது. ஆனால், அது பாதி உண்மைதான். என்னால் அங்கு திரும்பிச் செல்ல முடியும் என்றாலும்கூட, நான் அதனை விரும்ப மாட்டேன்! ஒரு இடப்பெயர்வே வாழ்நாளுக்கு போதுமானது.நான் ப்ராகில் இருந்து பாரீஸுக்கு இடம்பெயர்ந்தவன்.பாரீஸில் இருந்து மீண்டும் ப்ராகுக்கு இடம்பெயருவதற்கான மன வலிமை என்னிடத்தில் ஒருபோதும் உண்டாகாது.

  • அரசியலும் கலாச்சாரமும்

கலாச்சாரங்களின் அரசியல்மயமாக்கல் என்று நீங்கள் அழைக்கும் ஒரு பிரத்யேக விவாதத்திற்குள் நுழைய விரும்புகிறேன். ”மத்திய ஐரோப்பவின் துயரம்எனும் உங்களது கட்டுரையில், ”கலாச்சாரம் என்பது பணிந்துவிட்டது என்பது மட்டுமே எனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்என்று எழுதியிருக்கிறீர்கள். இன்றைய முக்கிய எழுத்தாளர்களால், சிந்தனையாளர்களால், இசையமைப்பாளர்களால் சாதிக்கப்பட்ட மிக முக்கியமான கலைச் செயல்பாடுகளை, நீங்கள் மறுக்கவில்லைதானே?வேறுபட்ட மனிதர்களான கார்சியா மார்க்குவேஸ், ஸ்டாக்ஹூசன், பெலினி அல்லது கிராஸ் போன்றவர்களை நினைத்துக்கொள்கிறேன். அவர்களுடைய கலைச் செயல்பாடுகள் சர்வதேச எல்லைகளை கடந்ததாகவும், கலாச்சார வரையறைகளை கடந்ததாகவும், அவ்வகையில் வாழ்க்கையின் குழப்பச் சூழலுக்கு வெளியில் கலையின் மூலமாக, ஒரு ஒற்றுமையைத் தோற்றுவிக்கிறதோ என்று நினைக்கிறேன்

நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனிதர்கள், என்னுடன் ஒத்துப்போகுமாறு நேர்ந்தால், அதற்காக நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.நானும் எழுதுகிறேன், படைக்கிறேன்.அதனால், எனது செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட நான் விரும்ப மாட்டேன்.கலாச்சாரம் பணிந்துவிட்டதா? இதற்குமேலும் கலைஞர்களென எவரும் இல்லை என்று நான் குறிப்பிடவில்லை; ஆனால் அவர்களது குரல் மேலும் மேலும் கேட்கவியலாதபடி சன்னமாக ஒடுங்கிக்கொண்டே போகிறது என்றே குறிப்பிட்டிருக்கிறேன். நாம் அவர்களை குறைவாகவே செவியுறுகிறோம்; வாழ்க்கையில் அவர்களது பங்களிப்பு என்பது குறைந்துவிட்டது.வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இலக்கியத்தின் எடை, கலாச்சாரத்தின் எடையை விட குறைவான அளவில் சிறந்ததாக இருக்கிறது.

இனிமேல் உலகத்தில் கலாச்சார அடையாள பிம்பங்களுக்கு சாத்தியமே இல்லை என்றும் விவாதிக்கிறீர்கள்.

எனது அனுமானம் என்னவென்றால், ஐரோப்பியாவில், நவீன யுகத்தின் துவக்கத்தில், செர்வாண்டிஸ் மற்றும் டெஸ்கார்ட்டஸ்-இல் இருந்து துவங்கலாம் என்று வைத்துக்கொள்வோம், மதம் தனது ஒருங்கிணைப்பு பாத்திரத்தை கைக்கொள்ள தவறியபோது, கலாச்சார படைப்புகளால் உண்டாக்கப்பட்ட கலாச்சாரம் மற்றும் கலாச்சார மதிப்பீடுகளும்தான் திடீரென்று மதம் தவறவிட்ட இடத்தைக் கைப்பற்றி பூர்த்திச் செய்ததோடு, ஐரோப்பியாவை ஒரு ஆன்மீக நிறுவனமாகவும் வறையறுத்தது. கலாச்சாரத்தின் இந்த பாத்திரம் ஒரு முடிவுக்கு வருகிறது என்று பாதுகாப்பாகவே நாம் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

ஆனால், கலாச்சாரம் எதற்கு வழிவிட்டு ஒதுங்குகிறது?

எனக்கு தெரியவில்லை; நான் தீர்க்கதரிசி அல்ல. ஒரு கருதுகோளை உறுதிப்படுத்துவதற்கு என்னை நானே உள்ளடக்கிக்கொள்கிறேன்.நான் தவறாகவும் இருக்கலாம்; அப்படி தவறாக என்றால், அதுவும் நல்லதுதான்.என்னுடைய எண்ணம் பொய்த்துப் போகுமென்றால், அதற்காக சந்தோஷமடைகின்ற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.எதிர்காலம் என்பது ஒரு கேள்விக்குறி.

மரித்துவிட்ட எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனைவாதிகளான தாமஸ் மண், காம்யு, சாத்தர் போன்றவர்கள் ஏன் உலகத்தின் கலாச்சார அடையாள பிம்பங்களாக உங்களைப் பொருத்தவரையில் விளங்குகிறார்கள்; அதே சமயத்தில், போல், பெல்லோ, கோர்டீமர் அல்லது வி.எஸ். நாய்பால் போன்றவர்களுக்கு அதே வகையிலான முக்கியத்துவம் ஏன் தரக்கூடாது?எது அவர்களது தரத்தை நிர்ணயம் செய்கிறது?

அவர்களது தரத்தைப் பற்றிய கேள்வியே அல்ல இது; ஒருவேளை அவர்கள் மிகச் சிறந்த தரமான மனிதர்களாகவும் இருக்கலாம்.வேறு ஏதோவொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய உபகதை: ரெனெஸில் நான் பாடம் புகட்டிருக்கொண்டிருந்தபோது, மாணவர்களுக்கு தேர்வுகளை அளிப்பதை நான் வெறுத்தேன், மாணவர்கள் என்ன கற்றிருப்பார்கள் என்பதை சோதனையிடும் முகமாக மேற்கொள்ளப்படும் தேர்வுகள் எனக்கு அபத்தமானதாக தோன்றியது. அதனால், வழக்கமான தேர்வுகளை வைக்காமல், ஒரு சர்வே செய்வதன் மூலமாக என்னையே நான் சந்தோஷப்படுத்திக்கொண்டேன்.அவர்களது பாடத்துடன் துளி சம்பந்தமும் இல்லாத கேள்விகளையே அவர்களிடத்தில் கேட்டேன்.யார் உங்களது விருப்பத்திற்குரிய தற்காலத்திய ஓவியர்? மேலும் ஆழமாகச் சென்று: விருப்பமான இசையமைப்பாளர்? தத்துவாசிரியர்? அந்த வகுப்பில் இருந்த 40 மாணவர்களில், பெரும்பான்மையானவர்கள், அதாவது 38 அல்லது 39 பேர், தற்காலத்திய பிரெஞ்சு ஓவியர்களால் ஈர்க்கப்படவில்லை என்பதோடு, அவர்களைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவும் இல்லை என்பதை கண்டுப்பிடித்து வெளிப்படுத்தினேன்.

உங்களுக்கு நினைவூட்டுகிறேன், அவர்கள் இலக்கிய மாணவர்கள்.அவர்களுக்கு தற்காலத்திய இசையமைப்பாளர்கள் எவரையும் தெரிந்திருக்கவில்லை.தொலைக்காட்சியில் தோன்றும் தத்துவாசிரியர்களைப் பற்றி மட்டுமே அவர்கள் தெரிந்துவைத்திருந்தனர். அது உண்மையிலேயே அற்புதமானது! 20 வருடங்களுக்கு முன்னால், ஒரு தையற்காரரையோ, ஒரு வணிகரையோ, அல்லது உள்ளூர் மளிகைக்கடை உரிமையாளரையோ இதே கேள்வியைக் கேட்டால், அவர் நிச்சயமாக பதில் அளித்திருப்பார்.எனக்கு பிக்காசோவை தெரியும், எனக்கு மாட்டீசியை தெரியும் என்ற பதில்கள் உங்களுக்கு கிடைக்கும். பிக்காசோவின் ஓவியங்கள் புரிதலுக்கு கடினமானவையாக இருக்கின்றன என்று கருதப்பட்ட காலம் ஒன்றும் இருந்தது; அவர் மக்களுக்கான ஓவியர் அல்ல, அவருடன் உடன்படுகிறோமோ இல்லையோ, புரிந்துகொள்கிறோமோ இல்லையோ, எனினும், பிக்காசோவில் நம்மை நாம் பார்த்தோம். அவர் இங்கு இருந்தார்.அவரது இருப்பு இருந்தது.தற்காலத்திய ஓவியர்களோ அல்லது சர்வவல்லமை பெற்றவரோ எவருக்கும் நடப்பு உலகத்தில் இடமில்லை.

ஒருவேளை வரலாறு ஓய்வு எடுக்கிறது என்பதாக இருக்கலாம்.எல்லாவற்றையும் விட, சாத்தர் நீண்ட காலம் இறந்துவிடுவதில்லை, ஹெய்டெக்கரும் அதேப்போலத்தான்.தத்துவத்தின் வரலாற்றில் ஒரு இடைவெளி விழுந்திருக்கலாம்.கலாச்சாரத்தின் சரிவுப் பற்றிய கேள்வியை மேலும் கொஞ்சம் விரிவாக பேச விரும்புகிறேன், அதன்பிறகு நாம் வேறு தலைப்புகளுக்கு செல்லலாம்.கலாச்சாரம் அடிபணிந்துவிட்டது என்று நீங்கள் சந்தேகப்படுவதை ஒரு கோட்பாடாக நாம் தொகுத்தால், உங்களது நாவல்கள் (உதாரணத்திற்கு) ஆயிரம் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்படாது.அல்லது ஒரு பதினைந்து மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்படாது.ஏன் துருக்கியர்களும், கிரேக்கர்களும், ஜப்பானியர்களும், இஸ்ரேலியர்களும் மிலன் குந்தேராவை வாசிக்கிறார்கள்?அல்லது விளம்பரப்படுத்துதல் மட்டுமே உங்களது புத்தகம் அதிகளவில் விற்கப்படுவதற்கான காரணம் என்று கருதுகிறீர்களா?கலாச்சார பன்முகத்தன்மையையும், கலாச்சார செழுமையையும் வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் குறிப்பாக உங்களது நூல்களை மக்கள் வாசிப்பதில்லையா?

புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக உண்டாவதில்லை.நூற்றுக்கணக்கான கீழ்த்தரமான புத்தங்கள் பல எனது புத்தகங்களை விடவும் நூறு மடங்கு பெரு வெற்றியை அடைகின்றன.இந்த சிறந்த விற்பனை பண்டங்கள் எல்லாம் நடப்பு நிகழ்வாக இருக்கின்றன.அதாவது, அவை சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு (அதிக எண்ணிக்கையில்), வேறொரு நடப்பு நிகழ்வுக்கான தேடுதலால் சீக்கிரத்திலேயே மறக்கப்படவும் செய்கின்றன.அப்படியென்றால், கேள்வி என்பது இதுதான்: எனது புத்தகம் கலைப் படைப்பாக (கலாச்சார புரட்சியின் தொடர்ச்சியை ஆதரிக்கவும், அதனை தாங்கிப் பிடிக்கவும்) வாசிக்கப்படுகிறதா அல்லது நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பாக (விரைவாக மறக்கப்பட்டுவிடும்) வாசிக்கப்படுகிறதா? இந்த நவீன உலகத்தில், ஊடகத்துறை அபார வளர்ச்சி கண்டிருக்கும் தருணத்தில், கலைப் படைப்பு, கலைப் படைப்பாகவே எஞ்சியிருக்க சாத்தியமிருக்கிறதா?மற்றொரு நாள், திடீரென எனது விருப்பத்திற்குரிய இசைக் கலைஞரான பிராம்ஸின் சிம்பொனியில் இருந்து சில இசைத் துணுக்குளை கேட்டேன்.நான் நிமிர்ந்து, தொலைக்காட்சியை பார்த்தபோது, ஒரு வாசனை திரவியத்திற்கு அந்த இசையை பின்னணியாக பயன்படுத்தியிருந்தார்கள்.இப்போது ஒருவர், பாருங்கள், செவ்வியல் இசைத் துணுக்குகள் எப்படி இன்றும் செழுமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என வாதிடக்கூடும்.

நவீன விளம்பர ஸ்தாபனங்களுக்கு நன்றி, வெகு சராசரி பார்வையாளர்கள் கூட பிராம்ஸின் இசைக் குறிப்பால் கிளர்ச்சியுறுகிறார்கள்! ஆனால், விளம்பர படத்தில் ஒலிக்கவிடப்படும் பிராம்ஸின் சிறிய இசைத் துண்டு, உண்மையில் அவரது நித்தியப்பூர்வமான படைப்பு வாழ்வை விவரிக்கிறதா அல்லது அவரது மரணத்தை விவரிக்கிறதா? அனைத்துமே ஒரு கேள்விக்கான பதிலில் அடங்கியிருக்கிறது என்பதையே இது குறிக்கிறது: நமது வெற்றியை எது தீர்மானிக்கிறது? இதற்கு எளிமையான பதில் எதுவுமில்லை.தொலைக்காட்சி விளம்பரத்தில், மூன்று முழ பிராமிஸ் இசைத் துணுக்குக்கு மக்கள் செவியுறுவதைப்போல நாம் வாசிப்பையும் அணுகுகின்றோமா? ஊடக நிறுவனங்களின் முட்டாள்தனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உலகத்தில், ஒருவர் அதற்கான கனமான எதிர்வினையையும், அழிந்துவரும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்துக்கு எதிராக எதையேனும் மேலெடுத்துவருவதற்கு முயற்சித்து வருகிறார். முரண்பாடாக, ஊடக விஷமேற்றுதல் கலை மற்றும் இலக்கியத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக வழங்கவும் செய்யலாம்.எனக்கு தெரியவில்லை.

ஊடகத்துக்கு எதிராக அதிருப்தியையும், வெறுப்பையும் பல நேரங்களில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். குறிப்பாக, உங்களது புனைவெழுத்தை புரிந்துகொள்வதில் நேரும் சிக்கல்களின்போதுமேற்கத்திய அறிவுஜீவுகள் ரஷ்ய மேலாதிக்கத்திற்கு எதிரான செயல்பாடாக, உங்களது புத்தகங்களை வாசிக்க அதிக விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

ஆமாம்.நிச்சயமாக எனது புத்தகங்கள் முதலில் வழக்கமான முறைகளான கற்பனை மற்றும் திட்டவட்டமான வழியில் அமைந்த எனும் விதங்களில்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோவியத் மேலாதிக்கத்திற்கு எதிராக இலக்கிய செயல்பாடு என்றுதான் எனது படைப்புகள் பெருமளவில் வகைப்படுத்தப்பட்டன. இது துல்லியமாக ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் அமைந்த இடையீடு ஆகும்.பத்திரிகையாளர் சிந்தனை என்பது உடனடி முன்முடிவுகளுக்கு செல்வதும், வழமையான முறைகளில் சிந்திப்பதுமே ஆகும். துவக்கத்தில், எனது படைப்புகளை ஊடகங்கள் இவ்வகையில் ஏற்றுக்கொண்டது ஒரு சாபத்தைப்போல எனக்கு தோன்றியது, ஆனால், இப்போது என்னை எவ்வாறு வாசிக்க வேண்டுமோ அவ்வகையில் கூடுதலாகவோ குறைவாகவோ வாசிக்கப்படுகின்றேன் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு தெரியும், அமெரிக்காவில் உங்களை அதிருப்தியாளராகவும், ஸோல்ஸெனிஸ்டெயினின் வழித் தோன்றலாகவுமே கருதுகிறார்கள்.ஆனால், உங்களது புனைவுகளில் அதிருப்தியாளர் என்கிற நிலையை எடுப்பதில்லை என்று பலமுறை விளக்க முயற்சித்திருக்கிறீர்கள்.உங்களுக்கும் அவருக்கும் இடையிலான உறவு குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.ஸோல்ஸெனிஸ்டெயின் கம்யூனிஸ எதிர்காலத்திற்கு தனது விசுவாசத்தை காண்பிக்க, இறுதி கட்டங்களிலிருந்த செக் புத்திஜீவிகளை முடக்குவதற்கு தேவைப்பட்டாரா?

தவறான புரிதல் ஏற்படுவதை நான் தவிர்த்துவிடுகிறேன்.ஸோல்ஸெனிஸ்டெயினின் துணிவிற்காகவும், ரஷ்ஷிய கம்யூனிஸம் பற்றிய அவரது கடுமையான விமர்சனங்களாலும், அவர் மீது அதிகப்படியான மரியாதையை வைத்திருக்கிறேன்.அவரோ அல்லது வேறு யாரோக்கூட தற்செயலான உள்ளுணர்வுகளை அதிர்ச்சியூட்டுவதிலோ (வார்த்தைகளின் சிறந்த அர்த்தத்தில்), வருத்தப்படுவதிலோ வெற்றி பெறவில்லை. ஆனால், எனது தனிப்பட்ட வகையில், அவர் எந்தவொரு பங்களிப்பையுமே செய்யவில்லை.கம்யூனிஸத்தின் ஓபியத்துடன், செக்கோஸ்லோவியா தனது சொந்த அனுபவத்தை ஸ்டாலினஸத்தோடுதான் வாழ்ந்தது.ரஷ்ஷியாவிலிருந்து வேறான ஒரு அனுபவத்தை கொண்டிருந்த செக்கோஸ்லோவியா, தனது சொந்த அறிவார்த்த விளைவுகளை அனுபவித்தது.வெளியில் இருந்து தாக்கங்கள்?ஆமாம். நிச்சயமாக. ஆனால், எல்லாவற்றிருக்கும் மேலாக, அல்லது எல்லாவற்றிருக்கும் முன்னதாக சர்வாதிகாரத்திற்கு எதிரான, அறிவுசார் கலகத்தில் போலந்து-தான் ஒரு புதுமையான பங்கு வகித்தது. சரியாக 50களின் துவக்கத்தில்! நான் எந்த அளவிற்கு போலந்து தத்துவாசிரியர் கோலகொவ்ஸ்கி, நாடகாசிரியர் மிரஜெக் அல்லது கஸிமெய்ர்ஸ் பிராண்டிஸ் மீது கவரப்பட்டிருந்தேன் என்பதை நினைவுகூருகிறேன்.

ஸெஸ்லா மிலோஸ் முன்னதாக ரஷ்ய கம்யூனிஸம், 1953ல் போலந்தில் (மற்றும் அனைத்து மத்திய ஐரோப்பியாவிலும்) விதைக்கப்பட்டத்தை பொருத்தமான மற்றும் விரிவான பகுப்பாய்வு செய்து எழுதியிருக்கிறார். The Capitive mind என்பது ரொம்பவும் அடிப்படையான ஒரு படைப்பாகும்.அதோடு மற்றொரு துருவம், குஸ்டவ் ஹெர்லிங் 50களின் குலாக் பற்றி அற்புதமான சாட்சியம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதே நேரத்தில், மேற்கத்திய அறிவுஜீவித்துறையில் இருந்த சோவியத் சார்பு கூறுகளுக்கு நன்றி, அந்த புத்தகம் அறியப்படாமலேயே இருந்தது! மறக்கப்பட்டது.அதனால், ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்பதால், நான் பின் தொடருவதற்கான ஒரு அறிவார்த்த வீரியத்தை எனக்குள் கிளர்த்திவிட்டு பின் தொடருவதற்கு ஒரு உதாரணமாக திகழ்ந்தார்கள் என எவரையும் குறிப்பிட வேண்டுமென்றால், எனது போலந்து சகாக்களைத்தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு பெரிதும் நன்றிகடன் பட்டிருக்கிறேன். அதோடு, நான் எதையேனும் பரிந்துரைக்க வேண்டுமென்றால், அது இதுதான்: போலந்தை படியுங்கள்! 1945க்கு பிறகு, ஐரோப்பியாவின் உண்மையான மைய பகுதியாக போலந்து மாறிவிட்டது. இதன் மூலமாக, கிழக்கும் மேற்குக்கும் இடையில், ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையில், சகிப்புத்தன்மைக்கும் சகிப்பின்மைக்கும் இடையில் நிலவிய ஐரோப்பிய டிராமாவின் மையப்புள்ளியாக போலந்தே விளங்கியது என்கிறேன்.

செக் அறிவுஜீவிகள் எவ்வாறு தங்களது அரசியல் வாழ்க்கை குறித்த குறிப்புகளை அடையாளப்படுத்த மறுத்தார்கள் என்று ஜோசப் செம்ப்ருன் வியப்புகொள்கிறார்.அதோடு, ஸோல்ஸெனிஸ்டெயினின் படைப்புகளை பதிப்பிக்க வேண்டிய அவர்களது, “மீட்பையும்அவர் பின்தொடர்ந்து செல்கிறார்.

தவறு.முழுமையாக தவறு.முற்றிலும் சுதந்திரமானதாக, அதிருப்தி உணர்வுடன்கூடிய, மேலும் கம்யூனிஸத்திற்கு எதிரான நாவல் என்றுக்கூட வாசிக்கப்பட்ட The Jokeஐ 1961ல் நான் எழுதத் துவங்கினேன்.மிலாஸ் போர்மேன் மற்றும் மற்றைய செக் திரைப்படப் படைப்பாளிகளின் படங்களும் உருவாக்கப்பட்ட காலகட்டம் அதுதான். அவர்கள் ஒரு சுதந்திரமான மனநிலையில் இயங்கினார்கள்! முன்பே நாம் குறிப்பிட்ட ஸ்கொவெர்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.அவரது முதல் நாவலான The Cowards 1948ல் எழுதப்பட்டு, 1956ல் வெளியிடப்பட்டது.அது குறிப்பிடத் தகுந்த அளவில் சுதந்திரமாக சிந்திப்பதை பற்றியும், விமர்சிப்பதைப் பற்றியும், அதோடு, ஸோல்ஸெனிஸ்டெயினின் தாக்கம் பெறாமல் எழுதப்பட்ட நாவல்.அல்லது மீண்டும், ப்ரோகிமிள் ஹ்ரபாலின் 50களில் எழுதப்பட்ட படைப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.அவை மேலும் பல வருடங்கள் கழித்துதான் வெளியிடப்பட்டன.அழகியல்ரீதியிலாகவோ அல்லது அறிவார்த்தமாகவோ, அவருடைய படைப்புகளுக்கும் ஸோல்ஸெனிஸ்டெயினின் படைப்புகளுக்கும் எந்தவொரு ஒப்புமையும், தொடர்பும் அறவே இருக்கவில்லை. அவருடையது அதி அற்புதமான சுதந்திரத்தைப் பற்றியது!

முன்பு உங்களை நீங்கள் அவநம்பிக்கைவாதி என்று குறிப்பிட்டீர்கள்.ஆனால், வேறொரு இடத்தில், மத்திய ஐரோப்பியாவில் புதிப்பிக்கப்பட்ட தாராளமயமாக்கல் குறித்து நம்பிக்கை கொள்வதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்று உங்களது நம்பிக்கையை தெரிவித்திருக்கிறீர்கள். அதோடு, இன்னமும், போலந்து தனது அரசியல் சூழலில் கரைசலை பார்க்கவில்லையா? கிழக்கு ஜெர்மனி, சோவியத் நுகத்தில் இருந்து தன்னை உடைத்துக்கொண்டு, தீவிரமாக ஒத்துழைப்பை கோரும்விதமாக, அல்லது ஒருவேளை மீண்டும் RFA மற்றும் மேற்குடன் இணைவதற்கு நகரவில்லையா?

இதுவொரு மிகப் பெரிய கேள்வி.

உங்களுடைய சூழ்நிலைக்கு திரும்புவதன் மூலமாக, கேள்வியின் அடர்த்தியை கொஞ்சம் குறைக்கிறேன்.1979ல் வெளியான உங்களது, The book of laughter and forgetting-க்கு பிறகு, செக் அரசு உங்களது குடியுரிமையை ரத்து செய்ததற்கு பிறகு, அந்த நாட்டுடன் உங்களுக்கு என்னவிதமான உறவு நீடிக்கிறது?

ஒன்றுமே இல்லை.ஒருநாள்எனது குடியுரிமை ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பாக எழுதப்பட்டிருந்த மிக விரிவான கடிதம் ஒன்று எனக்கு கிடைத்தது.அந்த கடிதம் ஏராளமான சொற் பிழைகளுடன் படிப்பறிவு இல்லாத ஒருவரால் எழுதப்பட்டதைப் போன்றிருந்தது.அதனுடைய காட்டுமிராண்டித்தனமாக தன்மைக்காக போற்றப்பட வேண்டிய ஆவணம் அது.அவர்களது முடிவை ஒற்றை வாக்கியத்தில், Nouvel Observateurல் வெளியான The Book of Laughter and Forgettingன் ஒரு பகுதியை குறிப்பிட்டு அதுதான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தது.எனினும், அந்த ஒற்றைய பகுதியால் மட்டுமே நான் எனது குடியுரிமையை இழந்துவிட்டேன் என்று நம்புவதை தவிர்க்க வேண்டும்.ஒருவர் அவர்களது முழுமையான நிலைபாடுகளையும் ஆராய வேண்டும், அப்படிதான் ஒரு தீர்மானத்துக்கு வரவும் முடியும். ஆனால், 68க்கு பிறகு அவர்களது சூழ்ச்சி என்னவென்று நான் நம்புகிறேன் என்றால், தேசத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவுஜீவிகள் மற்றும் செக் கலாச்சாரத்தை அகற்றுவது அவர்களுக்கு அவசியமான காரியமாக இருந்திருக்கிறது. அவர்களுடைய ஆய்வின்படி, முழுமையான ப்ராகின் இலையுதிர்காலமும், முழுமையான தாராளமயவாதமும், கலாச்சாரத்தின் மற்றும் அதனது பிரதிநிதிகளால் உண்டாக்கப்பட்ட பண்டங்கள் என்று அவர்கள் கருதியிருப்பார்கள் என்று நம்புவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். சோவியத் யூனியனுக்கு எதிராக இருந்த, பல்வேறு பிரகடனங்களையும், கோஷங்களையும் அவர்களுக்கு எதிராக செய்த அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் கூடுதலாகவோ, குறைவாகவோ மன்னிக்கப்பட்டார்கள். ஆனால், கலாச்சாரம் ஒருபோதும் மன்னிக்கப்படவில்லை! அரசியல் பிம்பமான அலெக்ஸாண்டர் டூபெக் கூட, செக் கலாச்சாரம், அதனது தாக்கத்தால் வீழ்த்தப்பட்டவர் என்றே ரஷ்ஷியர்கள் திடமாக நம்பினார்கள்.

அறிவுஜீவிகள் அரசியல் பதவிகளுக்கு போட்டியிட போவதில்லை என்றாலும், எதிர்வினையான தாக்கங்களை அவர்கள் செலுத்தினார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.சோவியத் ஊடுருவலுக்கு பிறகு, எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், வரலாற்று அறிஞர்கள், தத்துவாசிரியர்கள் போன்றவர்கள் முழுவதுமாக விலக்கப்பட்டதன் காரணத்தை இது விளக்குகிறது.தங்களது தொழில்களை கையாளுவதில் இருந்து அவர்கள் தாழ்த்தப்பட்டார்கள்.வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்வதுஅவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது, அதன் காரணமாகவே, அவர்கள் தேசத்தில் இருந்து வெளியேறவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.அதோடு, அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியவுடன், அவர்களுடன் சேர்த்து அனைத்து பாலங்களும் எரியூட்டப்பட்டன.இதனால்தான் எனது குடியுரிமையை பறிக்க அவர்கள் விரும்பினார்கள்; அதற்கு சாக்காக வெளியில் சொல்வதற்கான ஒரு காரணத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள். சட்டத்தின்படி, உங்களது குடியுரிமை ரத்துச் செய்யப்படுகிறது என்றால், அதற்கு அர்த்தம், இனி செக் குடியரசுடன் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை என்பதுதான்.திடீரென, செக் நாட்டினருடனான உங்களது அனைத்து தொடர்புகளும் சட்ட விரோதமாகிறது.அவர்களைப் பொருத்தவரையில் இதற்கு மேலும் நீங்கள் அவர்களுக்கானவர் இல்லை.

Samizdatல் உங்களது புத்தகம் சுழற்சியில் இருக்கிறதா என்று உங்களுக்கு தெரியுமா?

டொரெண்டோவில் ஜோசப் ஸ்கொவெர்கி ஒரு பதிப்பாக்க முயற்சியை செய்து வருகிறார், அவர் எனது ஆக்கங்களை பதிப்பிக்கிறார். அதனால், தேசத்திற்குள் இதுவொரு ரகசிய பாதையை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. எனக்கு தெரியவில்லை.

  • மொழிபெயர்ப்பு

செக் மொழியில் எழுதும் நீங்கள், உங்களது கையெழுத்துப் பிரதியை இங்கிருக்கும் பதிப்பாளரான கேலிமார்டிடம் கொடுத்துவிடுகிறீர்கள்.உங்களது படைப்புகளை அதன் மூல மொழியில் யாராவது வாசிக்கிறார்களா என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது?

ம்ம்ம்.அது கடினமானது.ப்ராகில் நானிருந்த காலகட்டத்தில், எனது கையெழுத்து பிரதியை பல மாதங்களுக்கு சீக்குபிடிக்கும்படி விட்டுவிடுவேன்.இந்தக் காலப் பகுதியில் எனது நண்பர்கள் எனது படைப்பை வாசிப்பது உண்டு.அவர்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுவதே, ரொம்பவும் முக்கியமானதாக கருதினேன்.எங்கு நீங்கள் வெற்றி அடைந்திருக்கிறீர்கள், எங்கு நீங்கள் ஒரு தெளிவான எண்ணத்தை அடைய முடியாமல் தேங்கியிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். இந்த ”சோதனை” வாசகர்கள் நமக்கு தேவை. ஆனால், இப்போது நான் செக் மொழியில் எழுதுகிறேன், ஆனால் எனது நண்பர்கள் அனைவரும் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள்.எனது கையெழுத்துப் பிரதியுடன் நான் தனியே விடப்படுகிறேன்.

அதோடு, உங்களது மொழிபெயர்ப்புகள்?

ஆஹ். எனது வாழ்க்கையின் துயரார்ந்த அனுபவங்களில் இதுவும் ஒன்று.மொழிபெயர்ப்பு எனது கொடுங் கனவைப் போன்றது. தனது மொழிபெயர்ப்பை மீண்டும் மீண்டும் வாசிக்கும், திருத்தும் மிக அரிதான எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் மேலும் இத்தாலி மொழிபெயர்ப்புகளைக்கூட நான் மீண்டும் மீண்டும் வாசித்து திருத்துகிறேன்.அதனால், எனது சகாக்களை விடவும், மொழிபெயர்ப்பை பற்றி எனக்கு கூடுதலாக தெரியும். அதனால் நான் பிசாசுத்தன்மையில் இருந்திருக்கிறேன்.The Joke-இன் பிரெஞ்சு மொழியாக்கம் செய்யப்பட்ட பிரதியை மீண்டும் திருத்துவதற்கு நான் ஆறு மாதங்களை செலவிட்டேன்.மொழிபெயர்ப்பாளர் – 16 வருடங்களுக்கு முன்னால், நான் இன்னமும் ப்ராகில் இருந்தபோது – எனது புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவர் மீளெழுத்து செய்துவிட்டார்! எனது பாணி அவருக்கு ரொம்பவும் எளிதாகத் தோன்றியிருக்கிறது.

எனது கையெழுத்துப் பிரதியில் அவர் நூற்றுக்கணக்கான (ஆமாம்!) அழகுப்படுத்தும் உருவகங்களை சொருகிவிட்டார்; நான் பயன்படுத்தும் அதே வார்த்தைக்கான இணைபொருட்சொல்லை அவரும் பயன்படுத்தியிருந்தார்; அவருக்கு ஒரு ’அழகான பாணியை’ உருவாக்கும் ஆசையிருந்திருக்கிறது.பத்து வருடங்களுக்கு, இந்த பிரதியை நசுக்கும் பாணியை, ஒவ்வொரு வார்த்தையாக, வாக்கியமாக மீண்டும் திருத்தி மொழிபெயர்ப்பது எனும் கடைமையை ஏற்று, பிரதியில் இருந்து விலக்கினேன். ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை பொருத்தவரையில், இது இன்னும் மோசமான விளைவை உண்டுபண்ணியிருந்தது.பிரதிபலிக்கும் பத்திகள் அனைத்தையும் – இசைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த அனைத்து பத்திகளையும் – நீக்கிவிட்டார்.ஒவ்வொரு அத்தியாயத்தை வேறு வகையில் தன்னிஷ்டம்போல வரிசைப்படுத்துவதன் மூலம், முற்றிலும் புதியதொரு நாவலாக அவர் கட்டமைத்துவிட்டார்.இன்று The Joke ஏற்றுக்கொள்ளதக்க துல்லியமான மொழிபெயர்ப்புடன் வெளியாகியிருக்கிறது.

உங்களது கையெழுத்துப் பிரதிகளை மொழிபெயர்ப்பு செய்வது ரொம்பவும் கடினமானதா?

நான் எப்போதுமே எனது சொற்களை மொழிபெயர்ப்பு செய்வது ரொம்பவும் எளிமையானது என்றே நினைத்து வந்திருக்கிறேன்.அவை உட்சபட்ச சுறுசுறுப்புடன் எந்தவொரு கொச்சையும் இல்லாமல், செவ்வியல் பாணியில் தெளிவான மொழியில் எழுதப்படுகின்றன.ஆனால், அவை எளிமையாக இருப்பதாலேயே, மொழிபெயர்ப்பின்போது, அதிகப்படியான சொற்பொருள் துல்லியத்தை அவை கோருகின்றன.இப்போது பல பல மொழிபெயர்ப்பாளர்களும் மீளெழுத்து செய்கிறவர்களாக இருக்கிறார்கள். The Unbearable Lightness of Being-ன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் மூன்று மாத காலத்தை நான் செலவிட்டேன். என்ன ஒரு எரிச்சலூட்டும் மாதங்கள் அவை. பாணி குறித்த எனது விதிமுறை என்பது: சொற்றொடர் கூடுமானவரையிலும் எளிமையானதாகவும், புதியதாகவும் இருக்க வேண்டும். பரிதாபத்திற்குரிய மொழிபெயர்ப்பாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்ற விதியென்பது: சொற்றொடர் பொலிவுடன் துலங்க வேண்டும் (இதன் மூலமாக மொழிபெயர்ப்பில் தனது மொழிக் குறித்த புலமையையும், திறனையும் அவர் வெளிப்படுத்த முடிகிறது), முடிந்த மட்டும் வழக்கமானதாக இருக்க வேண்டும் (ஏனெனில் மொழிபெயர்ப்பாளரின் பங்களிப்பில் படைப்பின் அசல்தன்மை அருவருப்பூட்டக்கூடியதாக தோன்றக்கூடும், அவரிடம், “இது ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லை” என்று சிலர் கூறுலாம். ஆனால் நான் எழுதுவது செக் மொழியிலும் சொல்லப்பட்டிருக்கவில்லை!).

இந்த வழியில் உங்களது எழுத்து தட்டையாக, வழமையை கொடுப்பதாக, மேலும் அருவருப்பாகவும் பார்க்கப்படும்.உங்களது எண்ணத்திற்கும் இது பொருந்தும். மொழிபெயர்ப்பில் சிறந்து விளங்குவதற்கு சிறிய விஷயங்களை பின்பற்றினாலே போதுமானது: மூலப் பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும்; உண்மையாக இருக்க விருப்பப்பட வேண்டும். புதிராக, எனது படைப்புகளுக்கான மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் சிறிய நாடுகளிலேயே இருக்கிறார்கள்: ஹாலந்து, டென்மார்க் மற்றும் போர்ச்சுகல். அவர்கள் என்னிடம் கலந்தாலோசிக்கிறார்கள்; கேள்விகளால் என்னை தொடர்ச்சியாக தொந்திரப்படுத்துக்கிறார்கள்; ஒவ்வொரு சிறிய நுணுக்க விபரம் குறித்து அக்கறையுடவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை இந்த சிறிய நாடுகளில்தான் அவை சற்றே குறைவான இழிந்த நிலையை பெறுகின்றன; எனினும், இன்னமும், இலக்கியத்தின் மீது காதலில் இருக்கிறார்கள்.

  • பிரான்ஸில் வாழ்க்கை

பிரெஞ்சில் நீங்கள் ஒரு நாடகத்தை (Jacques et son maitre), டெனிஸ் டிடரோட்டுக்கு அர்ப்பணிப்பு செய்து, இயற்றி இருக்கிறீர்கள். அதோடு, சில கட்டுரைகளையும் பிரெஞ்சில் எழுதியிருக்கிறீர்கள்.எப்போதிலிருந்து இந்த மொழியை செளகர்யமாக பயன்படுத்த துவங்குனீர்கள்?

கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகத்தான்.ஒரு கட்டுரையை எழுதும்போது, இப்போது நேரடியாக பிரெஞ்சு மொழியிலேயே நான் எழுதிவிடுகிறேன். இயல்பாகவே, அது எப்போதும் செறிவானதாக இருக்கப்போவதில்லை, அதில் சில திருத்தங்களும் மேற்கொண்டுதான் ஆக வேண்டும் என்றாலும், இப்படி நேரடியாக எழுதுவதில் எனக்கு பெரும் ஆர்வம் இருக்கிறது. மற்றொரு மொழியின் தடைகளை தாண்டிச் செல்வது என்னை வசீகரிக்கும் ஒன்றாகும்; இது கிட்டதட்ட விளையாட்டுத்தனமான உற்சாகத்துடன் கூடிய செயல்பாட்டு அணுகுமுறையை குறிப்பதாக இருக்கிறது. ஒருநாள் திடீரென்று செக் மொழியில் எழுதுவதை விடவும் பிரெஞ்சில் எழுதும் ஆவல் எனக்குள் பெருகியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்! பிரெஞ்சில் எழுதுவது என்பது எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத பிரேதசம் ஒன்றை கண்டுப்பிடிக்கும் செயலுடன் தொடர்புடையது.

ஒரு நாள் புனைவையும் பிரெஞ்சில் எழுத நீங்கள் ஆரம்பிப்பீர்கள் என்று கருதலாமா?

ஆஹா. எனக்கு ஆச்சர்யமூட்டும் ஒன்றின் மீது நீங்கள் தாக்குதல் தொடுத்துவிட்டீர்கள்: ஒரு மொழியில் பிரதிபலிப்பதும், விவரணை செய்வதும் முற்றிலும் இருவேறு முயற்சிகள் என்பதை அறிந்துக்கொண்டேன். ஒவ்வொன்றின் செயல்பாடும் மூளையில் தனித்தனியே அதற்காக விதிக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே இயங்குகிறது என்பதைப் போன்றது அது.இன்று என்னால் செக் மொழியை விடவும் பிரெஞ்சில் சிந்திக்க முடிகிறது.ஒரு உதாரணத்திற்கு, ஒரு கட்டுரை எழுத வேண்டி இருந்து, மொழியை நானே தேர்வு செய்யும் உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருந்தால், பிரெஞ்சையே நான் தேர்வு செய்வேன். பொது நேர்காணல்களில், எனது தாய் மொழியில் உரையாடுவதா அல்லது புகுந்த நிலத்தின் மொழியை பேசுவதா என்ற தேர்வுரிமை கொடுக்கப்பட்டால், பிந்தையதையே நான் தேர்வு செய்வேன். ஆனால், இன்னமும் என்னால் ஒரு வேடிக்கையான கதையைக் கூட பிரென்சு மொழியில் சொல்ல முடிவதில்லை. ஒரு கதை சிரிப்பூட்டும் வகையில் வெளிவர வேண்டுமென்றால், நான் எழுதுவது மோசமானதாகவும், விகாரமானதாகவும் வந்துவிடுகிறது.

அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு சிந்தனையை வளர்த்தெடுப்பதும், ஒரு கதையுடன் தொடர்பேற்படுத்திக்கொள்வதும் முற்றிலும் இருவேறு திறன்களாகும். எனது அடுத்த நாவலை பிரெஞ்சு மொழியில் எழுத வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது என்பது எனக்கு தெரியும்; எனினும், அதற்கு நான் தகுதியுடையவனாக இருப்பேனா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இப்போது நீங்கள் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள், பேனா உங்களது வாயில் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பிரெஞ்சில் நான் விவரிக்க நேர்ந்தால், என்னால் அதனை செய்ய முடியாது: எனது விளக்கம் மிக மிக மோசமானதாக இருக்கும்.

பிரெஞ்சில் நீங்கள் விரிவுரையும் கொடுத்து வருகிறீர்கள்இப்போது உங்களது நாவல்கள் பெற்றிருக்கும் வெற்றியால் பொருளாதார கவலைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. இதன்பிறகும், நீங்கள் ஏன் பாரீஸ் பல்கலைகழகங்களில் தொடர்ந்து பேராசியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

எனது கொள்கையின்படி, பணத்திற்காக இலக்கியத்தை சார்ந்திருக்க நான் விரும்பவில்லை.நீங்கள் இலக்கியத்தை மட்டுமே முழுமையாக நம்பிக்கொண்டிருந்தால், அந்த சார்பு நிலையே உங்களை சிதைக்கக்கூடும்.உங்களது வாழ்வாதாரத்திற்காக எழுத்தை நீங்கள் சார்ந்திருக்கும்போது, வெற்றியை பிரசவிப்பதற்கான கடமையை நீங்கள் செய்கிறீர்கள், அதனை தொடர்ந்து ஏதோவொரு அபாயத்தை தேர்வு செய்திருப்பதாக நீங்கள் உணரத் துவங்குவீர்கள். அதுவொரு சிறந்த இடம் என்பதால் மட்டுமல்ல, அது என்னை அதிகளவில் ஆர்வப்பட வைத்துவிடலாம்.

புனைகதைஎழுதுவதில் முற்றிலும் சுதந்திரமானவனாக செயல்பட விரும்புகிறேன், அதோடு, சுதந்திரமாக உணருவது என்றால், புரிதலை, தோல்வியை, உங்களது வேலைக்கான விருந்தோம்பலையும் சோதனைக்குள்ளாக்கிக் கொள்வது என்பதுதான். இந்த கண்ணோட்டத்தில், நீங்கள் பணி நியமனம் பெற்றிருப்பதும், பாடம் நடத்துவதும் சிறந்த விஷயங்கள்தான்; அங்கிருந்து பார்க்கையில், நீங்கள் படைப்பதற்கு முழு சுதந்திரத்துடன் இருக்கிறீர்கள், அதோடு வருவாய் குறித்த மிகுதி ஆர்வமும் உங்களுக்கு உண்டாகாமல் இருக்கிறது.

நேரத்தைப் பற்றிய கேள்வி: பாடம் நடத்துவது உங்களுக்கு தேவையான நேரத்தைக் கொடுக்கிறதா?

நிச்சயமாக, உங்களுடைய நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறதுதான், ஆனால், உண்மையிலேயே அந்த நேரம் நம்மிடம் இருந்து பறிபோன நேரமாக கருதப்பட வேண்டுமா என்று யோசிக்கிறேன்.அப்படி இல்லையென்றுதான் கருதுகிறேன். நான் என்ன பாடம் நடத்துகிறேன் என்பது முற்றிலும் வெளிப்படையானது. எந்த வகையிலும் நான் ஒரு அடிமை அல்ல. ஒவ்வொரு வருடமும், வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி பேச வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது, அதோடு ஒரு புதிய பொருளைப் பற்றி நீங்கள் விரிவுரைக் கொடுக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் அந்த புதிய பொருளைப் பற்றி வாசித்து பின்னர் சிந்தனை செய்திருக்க வேண்டும். வாசிப்பதற்கும், சிந்திப்பதற்குமான இந்த தேவை நிச்சயமாக மிகச் சிறந்ததுதான்.மேலும், நீங்கள் எப்போதும் சில சுவாரஸ்யமான மனிதர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறீர்கள்.ஒரு எழுத்தாளரை அவர் வசித்துக் கொண்டிருக்கும் உலகத்தில் இருந்து பிரித்து வெளியேற்றுவது மிகவும் ஆபத்தமானது என்றே நினைக்கிறேன்.

ஒரு பேராசிரியராக குந்தேரா, தனது மாணவர்களிடம் தனது சிந்தனைகளையும் தகவல்களையும் தொடர்பு படுத்துகிறார்.ஆனால், பதிலீடாக அவருக்கு என்னக் கிடைக்கிறது?

நானும் சிலவற்றைப் பெறுகிறேன். ஏனெனில், எனக்கு சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், சிலரை நான் சந்திக்கிறேன்.வேறு எந்த வகையிலும் இவர்களை எல்லாம் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கவே செய்திருக்காது.புதிய புதிய சந்திப்புகளில் இருந்து உங்களை நீங்களே விலக்கிக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது என்றே நினைக்கிறேன்.ஏகாந்த நிலையின் அபாயம், வேறு சில எழுத்தாளர்கள் வசிக்க விரும்பும் அந்த மூடுண்ட சூழல், என்னைப் பொருத்தவரையில் அன்னியமானது.உலகம்தான் எழுத்தாளரின் ஆய்வுக்கூடமாகும்.பல்கலைகழக்கத்தில் நான் இல்லை என்றாலும், வேறொரு வேலையை நான் தேர்ந்தெடுத்திருப்பேன். அது தற்காலிகமாக இருந்தாலும் – நித்தனையின் உச்ச நிலையாக இருந்தாலும், பத்திரிகையில் வேலை செய்வதைக்கூட வாழ்க்கையுடனான எனது தொடர்பை துண்டித்துவிடக்கூடாது என்பதற்காகவாவது, நான் தேர்வு செய்வேன்.

எழுதுவது, தொடர்ந்து எழுதுவது என்பது மட்டுமே, உங்களது பார்வையில் வாழ்வதாக ஆகாதா?இங்கு நீங்கள் காஃப்காவிடமிருந்து முரண்படுகிறீர்கள்.எதுவெல்லாம் இலக்கியம் இல்லையோ, அதுவெல்லாம் பயனற்றது என்று அவர் கருதினார்.

ஆமாம். ஆனால் அவரும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக வேலை செய்திருக்கிறார் என்பதை மறந்துவிட வேண்டாம். நாம் நம்புவதை விடவும், உலகத்துடன் அதிக அளவிலான பரந்த தொடர்பை அவர் கொண்டிருந்தார் என்று சொல்ல வருகிறேன். தனது அலுவலத்தை பூட்டிக்கொண்டு உள்ளே அமர்ந்து வேலை செய்யும் அலுவலர் அல்ல அவர்; காஃப்கா தினமும் மனிதர்களை சந்தித்தார், பிரச்சனைகள் உடைய எளிய மனிதர்களை தினமும் சந்தித்துக்கொண்டிருந்தார். அதிகாரத்துவமும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான். காஃப்கா ஒருபோதும் இந்த உலகத்திடமிருந்து துண்டிக்கப்பட்டு தனித்திருக்கவில்லை.

காஃப்காவில், தங்களது தனிமையை கைவிடுவதன் மூலம் சமூகத்தில் தங்களுக்கான இடத்தைப் பெறுபவர்கள், நீண்ட கால ஓட்டத்தில் தங்களது ஆளுமையையும் நழுவ விடுகிறார்கள்என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். தனியுரிமை உணர்வு உங்களுக்கு ரொம்பவும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்.இந்த தேவைகள், 1968ல் நடைபெற்ற உங்கள் நாட்டின் மீதான சோவியத் யூனியனின் படையெடுப்பிற்கு பின்னர் நிகழ்ந்ததா அல்லது அதற்கும் முன்பாகவே இருந்ததா என்று யோசிக்கிறேன்.

ஓஹ். 68க்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே இருக்கிறது. தனியுரிமை எனது தீவிரமான வெறியாகவே இருந்தது. நான் ஒரு விதத்தில் விவேகத்திற்காக “சிற்பமாக” இருந்தேன் என்று மிகைப்படுத்தியும் சொல்லலாம்.

உங்களுடைய சமீபத்திய நேர்காணலில், உங்களது 40வது வயது வரையில் புழக்கத்தில் இருந்த பொது வாசகர்களை இழப்பது கடினமானதாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.அதன் பிறகு, இப்போது நீங்கள், குறிப்பிட்ட வகையிலான வாசகர்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்களா?

பொது வாசகர்களை இழப்பது எனக்கு கடினமாக இருந்தது என்று கருத்து தெரிவித்திருந்தேன் என்றாலும், முரணாக அது எனக்கு கடினமாக இருக்கவில்லை. அது என்னை ஆச்சர்யப்படுத்திய ஒரு முரண்பாடுதான்.விவரிப்பதற்கு கடினமானது. ஆனால், விடுவிக்கப்பட்டவனாக என்னை உணர்ந்தேன்; நான் விநோதமான வகையில் விடுவிக்கப்பட்டவனாக உணர்ந்தேன், ஏனென்றால் Life is everywhere-யும், The Farewell party-யும் எழுதியபோது கூட, எனது படைப்புகள் நீண்ட காலம் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்பதும், மக்களின் பார்வையில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தேன் என்பது எனக்கு தெரியும். ஏழு வருடங்களுக்கு எந்தவொரு படைப்பு செயல்பாட்டையும் நான் செய்யவில்லை என்பதால், பிரசுரிப்பதற்கு எதுவும் என்னிடத்தில் இருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், உலகத்தில் உயிர்ப்புடன் இருக்க முடியாத ஒரு பிணத்தைப்போல இருந்தேன். எனினும், நான் சந்தோஷமாகவே இருந்தேன்!

லாபகரமான வேலை எதுவும் இல்லாமல், எப்படி மீண்டு வந்தீர்கள்?

அதிர்ஷ்டவசமாக, The joke புத்தகத்தின் விற்பனை மூலமாக, எனக்கு கிடைத்திருந்த பணம் எனது வங்கி சேமிப்பில் இருந்தது. வெராவும் நானும், ஒருவித மானியத் தொகையில், உண்மையில் ரொம்பவும் அடக்கமாக வாழ்ந்து வந்தோம்.ஆனால் பின்பு, உங்களுக்கு அதிகமும் தேவைப்படவில்லை.வெரா முட்டாள்தனமாக ஆங்கில பாடங்களை நடத்தினார்.நான் வேறு சிலரின் பெயரின் கீழ் அவ்வப்போது சிற்சில வேலைகளை செய்வேன்.இவ்வகையில், நான் எழுதிய ஒரு நாடகம் மற்றும் ரேடியோவுக்கான கதையின் மூலமாக எனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தது.வேறொருவரின் பெயரின் கீழ் எழுதுவது, கொஞ்சம் வேடிக்கையாகவே இருந்தது; சுவாரஸ்யமான புதிர்மைத்தனமாக இருந்தது.இந்த காலகட்டத்தின் சில துவக்க வருடங்களில் நாங்கள் எங்களையே மகிழ்ச்சியூட்டிக்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.மறுபுறம், செக் மக்கள் இவைகளை படிக்க மாட்டார்கள் என்ற உறுதி பத்திரத்துடனேயே, இரண்டு நாவல்களை எழுதினேன்.

இது என்னை எவ்வளவு ஆர்வமூட்டியது என்பதை சொல்லியாக வேண்டும், ஏனெனில், ஒரு சிறிய தேசத்தில், ஏற்றுக்கொள்ளவியலாத அழுத்தம் மக்களிடத்தில் இருந்தது.அவர்கள் உங்களை களைப்படைய செய்வார்கள், அதோடு சில சமயங்களில் அவர்களைப் பார்த்து நீங்கள் கொஞ்சம் அச்சப்படவும் செய்வீர்கள்.நீங்கள் பாதிக்கப்படக்கூடியவர்; நீங்கள் பேசும் அல்லது செய்யும் ஏதோவொன்றால், மக்கள் உங்களை வெறுக்கப் போகிறார்கள் என்பது உங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கும்.இதற்கும் அரசியலுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.நான் மக்களின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன்.ஒரு சிறிய கிராமமான செக்கோஸ்லோவியாவில் இயல்பாக எல்லோருக்கும், பலதரப்பட்ட மக்கள் எல்லோருக்கும் அறிமுகமானவராக இருப்பீர்கள்.இது ரொம்பவே அசெளகர்யமானது. நீங்கள் செய்யும் எதுவொன்றும், அவதூறுக்கும் கட்டுக்கதைக்கும் இலக்காகிவிடும் சாத்தியமிருக்கிறது. அதனால், உங்களது சுயபிரக்ஞை இல்லாமலேயே, மக்களுக்காக சில சமரசங்களை நீங்கள் செய்திருப்பீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.அவர்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் கருதலாம், ஆனால் யதார்த்தத்தில் உங்களுடைய மக்களினால் கொடுக்கப்படும் அழுத்தமே உங்களை வடிவமைக்கிறது.நீங்கள் எழுத விரும்பும் அனைத்தையும், நீங்கள் எழுதப்போவதில்லை என்பதை உணருவீர்கள்.

முன்பே குறிப்பிட்டதுபோல, Life is everywhere மற்றும் The Farewell Party இரண்டையும், எந்தவொரு செக் குடிமகனும் அதனை வாசிக்கப்போவதில்லை என்கிற முழு சுதந்திரத்துடன்தான் எழுதினேன். அந்த சமயத்தில், டொரொண்டோவில் இருக்கின்ற ஸ்கொவெர்கியின் செக் அச்சகத்தில் அச்சிடப்படும் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை.அவை செக் குடிமக்களுக்காக இல்லை, யாரோ ஒரு தெரியாத வாசகருக்காகவே எழுதப்படுகிறது என்கிற மாய உணர்வில் தோற்றம் பெற்றவையே.

The book of laughter and forgetting மற்றும் The unbearable lightness of being புதினங்களை எழுதும்போது, ஏற்கனவே சர்வதேச வாசகர்களை நீங்கள் கவர்ந்துவிட்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது ஏதேனும் ஒருவகையில் உங்களை பாதித்ததா?

அத்தகைய பார்வையாளர்கள் ரொம்பவும் குறைவானவர்கள்தான்.The book of laughter and forgetting-ஐ எழுதும்போது நான் இன்னமும் ரெனஸில் தான் வாழ்ந்துகொண்டும், ஆசிரியர் பணி செய்துகொண்டும் இருந்தேன்.பிரெஞ்சு வாசகர்களுக்கு இன்னமும் என்னைத் தெரிந்திருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அநாமதேயத்தை பரிமாரிப்பது அவசியம் என்றே கருதுகிறேன்; அதனால்தான் தொலைக்காட்சியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளர்களை நான் வெறுக்கிறேன். தன்னைப் பற்றியே பேசுவதில் குறிப்பிட்ட வகையிலான ஒரு அபாயம் இருக்கவே செய்கிறது.பொது மக்களின் ஆர்வம் நாவலுடன் மட்டும் அடங்கிவிடுகிறதா என்பது கேள்விக்குரிய ஒரு விஷயமாகும்.பொதுமக்களின் துப்பறியும் கண்களுக்கு ஒரு நடிகர் தீனிப்போடுபவராக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக எழுத்தாளர் அப்படி இருக்கக்கூடாது.

  • பெண்கள்

உங்களது படைப்புகள் அனைத்திலும் பெண்கள் குறைவான அறிவுடையவர்களாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள், ஆண்கள் தொடர்ச்சியாக அறிவுஜீவிகளாகவும், தொழிற்வயப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இது தற்செயலாக அமைந்ததா அல்லது திட்டமிட்டே உருவாக்கப்பட்டதா?

நிச்சயமாக, இது எனது உள்ளுணர்வுடன் தொடர்புடையதாக இருக்கிறது.அவதானிப்புகளில் எனக்கு முழுமையாக நம்பிக்கை இல்லை.நிச்சயமாக சில அறிவுஜீவி பெண்களும் எனது படைப்பாக்கங்களில் இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு, The Unbearable lightness of beingல் வருகின்ற சபீனா.

சபீனா அறிவாளிதான், ஆனால் நிச்சயமாக அவளொரு அறிவுஜீவியா?நான் அவளை ஒரு சிற்றின்ப அறிவாளியாகத்தான் பார்க்கிறேன்.ஒரு ஓவியருடன் தொடர்புடையதாக நான் கருதும் சிற்றின்ப அறிவார்த்தம்.

ஒரு ஓவியர் அறிவுஜீவியா இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை, ஆனால், என்னை பொருத்தவரையில், சபீனா வலுவான மன அமைப்புடைய பெண்தான்.இன்னும் ஒருபடி மேலே சென்று, அவளுடைய சிந்தனைகள்தான் நாவலிலேயே தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பகுதி என்பேன்.ஒருவேளை, மிகவும் குரூரமான மற்றும் உள்ளுறைந்த கொடூர மனப்பான்மை கொண்டவளாகவும் இருக்கலாம்.அவர் சிந்திப்பதைப்போல, நாவலின் மற்ற கதாப்பாத்திரங்கள் தெளிவாக சிந்திப்பதில்லை.The Farewell partyல் ஓல்கா ஒரு அறிவுஜீவிதான், அதோடு Laughable lovesல் வருகின்ற பெண் மருத்துவரும் அறிவுஜீவிதான்.அவளுடைய சிந்தனை ரொம்பவும் இழிவானதாகவும், அதே நேரத்தில் தெளிவானதாகவும் இருக்கிறது. அதனால் உங்களுடைய அவதானிப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நீங்கள் குறிப்பிடுகின்ற விதங்களில் காணப்படுகின்ற வேறு சிலர் இருக்கிறார்கள் என்பது உண்மையும்தான். சமீபத்தில், திடீரென்று, எனக்குள்ளாக நான் கேள்வியெழுப்பிக் கொண்டேன், கோமானே, உலகத்தில் எங்கிருந்து உனக்கு லூசியின் கதாப்பாத்திரம், The jokeல் வருகின்ற லூசியின் கதாப்பாத்திரம் உனக்கு கிடைத்தது? இங்கு பிரான்ஸில் நீங்கள் நாவல் எழுதும்போது, உங்களது சுயசரிதையையே நீங்கள் எழுதியிருப்பதாகவே எல்லோரும் கருதுகிறார்கள். என்னுடைய சமீபத்திய நாவலை பிரசுரம் செய்தபோது, வெராவிடம் மக்கள், “நீங்கள் ஒரு புகைப்பட கலைஞராக இருந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்பதை நான் அறிவேன்.

The jokeல் வருகின்ற லூசி ஒரு நிஜ மனிதரின் சாயலில் இருந்து பெறப்பட்டதாகவே கருதப்படுகிறது.ம்ம்ம், எங்கிருந்து நான் அவளை கண்டுப்பிடித்தேன்?அதற்கான பதிலென்பது, எனது வாழ்க்கையில் நான் சந்தித்திருக்கின்ற எண்ணற்ற பெண்களில், லூசி இதுவரையிலும் சந்தித்திராத ஒரு பெண்ணையே உருவகப்படுத்துகிறாள்.யதார்த்தத்தில் ஒருபோதும், எளிமையான ஒரு பெண்ணை நான் சந்தித்ததே இல்லை.The jokeல் வருகின்ற ஹெலெனாவை (அவளை நான் மனப்பூர்வமாக அறிந்து வைத்திருக்கிறேன்) போல, சாதாரணமான பெண்கள் பலரை அறிந்து வைத்திருக்கிறேன்.ஆனால், லூசி நான் அறிந்திருக்காத பிரத்யேகமான பெண் என்பதால், ஏதோவொன்று அவளை கண்டுபிடிக்கும்படி, அவளை நோக்கி இழுத்துச் சென்றுவிட்டது.லூசி எப்படிப்பட்ட பெண் என்றால், அவள் ஒரே சமயத்தில் எளிமையானவளாகவும், புதிரானவளாகவும் தோற்றமளிக்கிறாள்.புதிரானவளாக அவள் இருக்கிறாள், ஏனெனில் அவள் ரொம்பவும் எளிமையாக இருப்பதால்.பொதுவாக, சிக்கல்தன்மை உடையதைதான் புதிரானது என்று கருதுவீர்கள், எனினும் லூசி ரொம்பவும் எளிமையானவளாக இருந்தும் அவளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நேர்மறையான எளிமை; போற்றுதலுக்குரிய எளிமை, லூசி எனது சொந்த கொழுப்பின் இழிவுத்தன்மைக்கு ஒரு வகையிலான எதிர் சமநிலையாக விளங்கினாள்; எனது சொந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அனுபவம் அவள். இங்குதான் The Joke-ன் கற்பனாபூர்வமான, கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதி இருக்கிறது.லூசி ஒரு உண்மையான கவிதை; அவள் உண்மை அல்ல, கவிதை.

வழக்கமாக உங்களது நாவல்களில் பெண்களின் கதாப்பாத்திரங்கள் அறிவுஜீவிகளாக படைப்படுவதில்லை என்பது உண்மை என்றால், அதனை சரிகட்டும் விதமாக, ஒரு சமநிலையைத் தோற்றுவிக்க, பெண்களை விடவும் ஆண்கள் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார்கள். Unbearable Lightnessல் வருகின்ற தாமஸ், தனது முன்னூகங்களுக்கும் பயத்திற்கும் இடையே, சுதந்திரத்திற்கான அவனது ஆர்வத்தில், தெராஸாவின் மீதான அவனது காதலின்போது என தொடர்ச்சியாக முடிவே இல்லாமல் கிழிக்கப்படுகிறான். கதைச் சொல்லி, எடையையும், இலகுத்தன்மையும் மாற்றி அமைக்கும்போது, தாமஸ் தனது சுய ஒழுக்கத்திற்கே ஒரு கைதியாகி விடுகிறான்; யாரும் அவனை மன்னிப்பதில்லை, எல்லோரையும் கடந்து, அவனே அவனை மன்னிப்பதில்லை.

இருக்கலாம்.

சிற்றின்பம் ஒருவகையில் சிரிப்பூட்டக்கூடியது என்று ஜார்ஜஸ் பதேல் சொல்லும்பொது, அக்கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களோ என்று நினைக்கிறேன்.

எனக்கு தெரியவில்லை.

உங்களது நாவல்கள் மற்றும் கதைகளில் பாலியல் செயல்பாடுகள் என்பது சிரிப்பு மற்றும் இலேசானத்தன்மை என்பதோடு, ஒரு முக்கிய முன்நோக்கை குறிப்பதாகவும் இருக்கிறது.

டியர் ஜோர்டன், பதில் அளிக்க நான் விரும்புகின்ற சில கேள்விகள் இருக்கின்றன, அதே சமயத்தில், நான் விரும்பாத அல்லது எப்படி பதில் அளிப்பது என்று தெரியாத கேள்விகளும் இருக்கின்றன. பகுத்தறிவும், பகுத்தறிவும் இல்லாத நிலையும் எழுத்தில் பங்கெடுத்துக்கொள்கின்றன. பகுத்தறிவு என்பது, நாவல் கலையின்அழகியல் இதுதான், இலக்கிய வரலாற்றில் இவ்வகையில்தான் அழகியல் இருக்கிறது, இதேப்போல வேறு சிலவும்..இப்படிப்பட்ட கேள்விகளுக்குதான் என்னால் எளிதாக சிரமமின்றி பதில் அளிக்க முடியும். அதன்பிறகு, நாவலின் உண்மையான கருபொருள் இருக்கிறது: கதாப்பாத்திரங்கள், அவர்களது அதீத விழைவுகள், சிற்றின்ப கிளர்ச்சி… வியோலா, என்னால் நாவலின் வழியிலேயே அல்லது நாவலுக்குள்ளாக மட்டுமே கையாள முடிகின்ற விஷயங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.

எனது நாவல்களில் வருகின்ற பெண்கள் எல்லாம் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று எப்படி உங்களிடம் விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. எனது படைப்புகளில், புணர்ச்சி ஏன் மகத்தான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று விவரிக்க என்னால் தலைபட முடியாது. இங்குதான் பிரக்ஞையற்றத்தன்மையின், பகுத்தறிவற்றத்தன்மையின், சாம்ராஜ்ஜியம், எனக்கு ரொம்பவும் நெருக்கமான சாம்ராஜ்ஜியம் நிலைபெற்றிருக்கிறது. நாவலாசிரியர் தனது சொந்த நாவல்களைப் பற்றி மேற்கொண்டு கோட்பாட்டுரீதியாக ஒரு எல்லையை கடந்து விவரிக்கக்கூடாத வரம்பு ஒன்று இருக்கிறது.அப்போது தனது மெளனத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டுமென்று அவர் அறிந்திருக்க வேண்டும். அந்த வரம்பை நாம் தொட்டுவிட்டோம்.

பிற படைப்புகள்

Leave a Comment