உணவுத்தட்டுக்கும் கடலுக்குமான தூரம்
நாராயணி சுப்ரமணியன்

by olaichuvadi


எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் இனம் கடலிலிருந்து மீன்களைப் பிடித்து உணவாக எடுத்துக்கொண்டதற்கு ஆதாரங்கள் உண்டு. ஒரு லட்சத்து அறுபத்திரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் (ஹோமோ சேப்பியன்ஸ்), சிப்பிகள், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளை சாப்பிட்டிருக்கிறார்கள். சமகால மனித வரலாறு தொடங்குவதற்கு முன்பே மனிதனுக்கும் கடலுக்குமான உணவுச் சங்கிலி ஒன்று இருந்திருக்கிறது.

பல பெரிய சுறாக்கள் கடற்கரையை ஒட்டிய கழிமுகங்களில் நீந்திக்கொண்டிருந்ததாக சங்க இலக்கியங்கள் பதிவு செய்கின்றன, கடலோர வாழ்விடங்கள் நல்ல நிலையில் இருந்ததற்கான அறிகுறி இது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை மீன்பிடித் தொழில் என்பது ஒரு வாழ்வாதாரமாக, கடலோரப் பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கான ஒரு வழியாக மட்டுமே பார்க்கப்பட்டது. அப்போது இருந்த தொழில்நுட்ப வசதிகள் அதிக தூரம் பயணிப்பதற்கும் அதிக அளவில் மீன்களைப் பிடிப்பதற்கும் அனுமதிக்கவில்லை. ஆனால் உலகப்போரின்போது பல அறிவியல்/தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள், ஒலி அலைகளைக் கொண்டு ஆழம் கண்டறியும் சோனார் (SONAR), குறைவான எடை கொண்ட பாலிமர் செயற்கை இழைகள் (Lightweight Polymer technology), அதிக செயல்திறன் கொண்ட டீசல் எஞ்சின்கள், எளிதில் பொருட்களை உறையவைக்கக்கூடிய தொழில்நுட்பம் ஆகியவற்றை மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

மேன்மைப்படுத்தப்பட்ட எஞ்சின்கள் இருந்ததால் அதிக தூரம் பயணிக்க முடிந்தது. மீன்களின் இருப்பிடத்தை எளிதில் அறிந்துகொள்ள சோனார் பயன்பட்டது. படகிலேயே மீன்களை உறையவைக்கும் வசதி இருந்ததால் பிடித்த மீன்கள் கெட்டுப்போய்விடுமோ என்ற பயம் இன்றித் தொடர்ந்து மீன்பிடிக்க முடிந்தது. எளிதில் அறுந்துவிடாமல் செயற்கை இழை வலைகள் அதிகநாள் நீடித்தன. கரையிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்வது சாத்தியமானது. மீன்பிடித் தொழிலில் அசுரத்தனமான ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது.

1950களிலிருந்து ஒரே தாவலில் நிகழ்காலத்துக்கு வருவோம். 2020ன் நிலவரப்படி சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஒரு தனி மனிதன் சாப்பிடும் கடல் உணவின் அளவு 20.5 கிலோ. 1967ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது இரண்டு மடங்கு அதிகம். உலக அளவில் மீன் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் சாப்பிடும் கடல் உணவின் அளவும் அதிகரித்திருக்கின்றன. மீன்பிடித்தல் மற்றும் அதுசார் தொழில்களை வாழ்வாதாரமாக நம்பியிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
வருடத்துக்கு சராசரியாக 80 முதல் 95 மில்லியன் டன் அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. சீனாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் எடை இது!

இந்த வளர்ச்சியின் மறுபக்கத்தைப் பார்த்தால் பல கவலையளிக்கும் தரவுகள் இருக்கின்றன. . கிட்டத்தட்ட 89% மீன்கள், வரையறுக்கப்பட்ட அளவையும் தாண்டி பிடிக்கப்படுகின்றன. ‘பெரிய மீன்கள்’ என்று சொல்லப்படும் சூரை,கேரை, மார்லின், மயில்கோலா, சுறா போன்ற பல மீன்கள் அழியும் தருவாயில் உள்ளன. பசிபிக் பெருங்கடலின் பல இடங்களில் எந்த உயிரினமுமே வாழ முடியாத ‘இறந்த வாழ்விடங்கள்’ (Dead zones) உருவாகியிருக்கின்றன.

கடல்சார் உணவின் நுகர்வும் மீன்பிடித் தொழிலின் கட்டமைப்பும் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. ஆகவே அதிகமாகப் பிடிக்கப்படும் மீன்களின் வகை, மீன்களின் அளவு, மீன்பிடி வகைமை, மீன்கள் நமது உணவுத்தட்டை வந்து அடையும் வழி ஆகியவையும் மாறத் தொடங்கியிருக்கின்றன.

நுகர்வோர் மனநிலையும் உணவு அரசியலும்

வாழையிலையில் வைத்து சுடப்பட்ட கறிமீன் (கேரளா), கடுகு விழுதுடன் சமைக்கப்படும் இலிஷ் (மேற்கு வங்கம்), நாஞ்சில் கடலோர சமையல் முறைப்படித் தேங்காயுடன் செய்யப்படும் மீன் அவியல் (கன்னியாகுமரி மாவட்டம்), மீனவத் தொல்குடியினரான கோலி இனத்தவர் பச்சை நிற மசாலாவுடன் சமைக்கும் பாம்பில் மீன் (மகாராஷ்டிரா), தேங்காயும் சிவப்பு மிளகாய்களும் சேர்த்து செய்யப்படும் கானாங்கத்தை கஸ்ஸி குழம்பு (மங்களூரு-கடலோர கர்நாடகா), புளியுடன் சமைக்கப்படும் மீன் குழம்பு (ஆந்திரா) என நம் கடலோர மீன் உணவு மரபுகள் பன்முகத்தன்மை கொண்டவை. தமிழ்நாட்டுக்குள்ளேயே கடலோர மாவட்டங்களில் உணவுமுறைகளும் சமையல்முறைகளும் மாறுபடுகின்றன. இதுதவிர, வருடத்தின் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு மீன்களின் வருகை ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மரபைப் பொறுத்தவரை, உணவுத்தட்டுக்கும் கடலுக்கும் தொட்டுவிடும் தூரம்தான்!

ஆனால் இப்போது உலகமயமாக்கல், நகரமயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மீன் உணவு பற்றிய பார்வை மாறத் தொடங்கியிருக்கிறது. ‘விலை உயர்ந்த’, ‘நல்ல தரமான’ மீன் என்று அடையாளப்படுத்தப்படும் மீன்களையே இந்தியாவின் பெருநகரவாசிகள் அதிகம் வாங்குகிறார்கள் என்று தெரிவிக்கின்றன சில சமீபத்திய ஆய்வுகள். இறால் சமைப்பது நகரங்களில் அதிகரித்திருக்கின்றது எனவும், ‘சிறு மீன்கள்’ கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும் முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. நகரங்களில் வசிக்கும் நண்பர்களிடம் பேசியபோது, தாங்கள் அதிகம் சாப்பிடும் மீன்களாக வஞ்சிரம், சீலா, சூரை/கேரை, வாவல் எனப்படும் pomfret,சங்கரா, பெரிய வகை பாரை மீன்கள், இறால் ஆகியவற்றையே குறிப்பிடுகிறார்கள். இதைத் தனிப்பட்ட விருப்பமாக மட்டும் ஒதுக்கிவிட முடியாது. சந்தை நிலவரங்கள், சமூகப் பொருளாதாரக் காரணிகளோடு இதைப் பொருத்திப் பார்க்கும்போது ஒரு கவலைக்குரிய போக்கு தெரியவருகிறது. நகரங்களைப் பொறுத்தவரை மீன் உணவின் பல்வகைமை அழிந்துவருகிறது என்றே சொல்லலாம்.

ஒரு காலத்தில் மேலை நாடுகளிலும் பன்முகத்தன்மை கொண்டதாக இருந்த உணவுப்பழக்கம் மெதுவாக மாறி, சில இனங்களை மட்டும் முன்னிலைப்படுத்தியதாக உருவானது . இதனால் குறிப்பிட்ட மீன் இனங்கள் அதிகம் பிடிக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. காலப்போக்கில் அவை பண்ணை மீன்களாக மாற்றப்பட்டன.

இப்போது மேலை நாடுகளின் கள நிலவரம் இதுதான் – நிறுவனங்களின்மூலம் மீன் உணவுகள் விற்கப்படுகின்றன. மீன் உணவுகளில் பல்வகைமை இல்லை, பத்து முதல் இருபது வகைகள்தான் அதிகம் விற்கப்படுகின்றன. காலச்சுழற்சிக்கு ஏற்றவாறு கிடைக்கும் ‘சீசன்’ மீன் என்பதெல்லாம் அங்கே கிடையாது, அதிகம் விற்கப்படும் எல்லா மீன்களும் எல்லா காலகட்டத்திலும் கிடைக்கும் அளவுக்குப் பண்ணை சுழற்சி முறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கடல்சார் உணவுகள் முற்றிலும் சந்தைமயமாக்கப்பட்டுள்ளன.

சில வருடங்களில் இங்கும் அப்படி ஒரு சூழல் வரலாம். வாடிக்கையாளர்கள் எதை விரும்புவார்கள் என்ற நோக்கிலேயே மீன்கள் பிடிக்கப்படலாம். மீன்பிடித் துறைமுகத்தின் சிறு கடைகளிலிருந்து பெரிய கடைகளின் குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் மீன்கள் நகரலாம். சரியான அளவில் வெட்டப்பட்டு, மீன் என்கிற வடிவமே தெரியாமல் நெகிழித்தாள் சுற்றப்பட்ட இளஞ்சிவப்புத் துண்டுகள் ஐஸ்கட்டிக்குள் பொதித்து காட்சிக்கு வைக்கப்படலாம். “மீன் எங்கிருந்து வருகிறது?” என்று கேட்டால் “ஐஸ்பெட்டிக்குள்ளிருந்து” என்று சொல்கிற ஒரு தலைமுறை வெகுதூரத்தில் இல்லை.

சுரண்டப்படும் கடல்

உலக அளவில் 4.4 பில்லியன் மக்கள் தங்களது புரதத் தேவைக்கு மீன்களை நம்பியிருக்கிறார்கள். கடலோரப் பகுதி மக்கள் உட்கொள்ளும் 50% புரதச்சத்து மீன்களிடமிருந்துதான் வருகிறது. மரபார்ந்த மீனவர்களைப் பொறுத்தவரையில் மீன் என்பது உணவாகவும் வாழ்வாதாரமாகவும் பண்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது. அவர்களுக்கும் கடலுக்கும் உள்ள உறவு நுட்பமானது. “வலையில் மீன்கள் மாட்டுவதை அதிகரிப்பதற்கு ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “எங்களுக்கு எவ்வளவு தரவேண்டும் என்று கடலுக்குத் தெரியும், அதற்கு மேல் எதுவும் தேவையில்லை” என்று நாட்டுப்படகு வைத்திருந்த ஒரு அந்தமான் மீனவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
செவுள் வலைகள், இழுவலைகள், இரட்டைமடி வலை, சுருக்கு வலை ஆகியவை சூழல் பாதுகாப்புக்கு முற்றிலும் எதிரானவை. இவற்றை Non specific fishing gear என்று அழைக்கிறார்கள், அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட மீன் இனத்தையும் மனதில் வைத்து இவை வடிவமைக்கப்படவில்லை. ஆகவே இவற்றைக் கடலுக்குள் பயன்படுத்தும்போது தேவையற்ற மீன்கள், கடல்பாம்புகள், கடல் பாலூட்டிகள், கடலாமைகள், கடற்பஞ்சுகள், பாதுகாக்கப்பட்ட பவளப்பாறை இனங்கள், மீன் குஞ்சுகள் என்று எல்லாமே மாட்டி இறந்துவிடும். குறிப்பாக இழுவலைகள் கடற்படுகையைக் கூட விட்டுவைக்காமல் முற்றிலும் துடைத்தெடுத்துவிடுகின்றன. ‘இழுவலைகளை வைத்து மீன் பிடிப்பது என்பது, புல்டோசர்களை வைத்துக் குருவிகளைப் பிடிப்பது போன்றது’ என்கிறார் கடல்சார் அறிவியலாளர் சில்வியா ஏர்ல்.
ஆனால் மரபார்ந்த மீனவர்கள் வைத்திருக்கும் வலைகள் அப்படிப்பட்டவை அல்ல. ஒவ்வொரு வகை மீனுக்கும் தனித்தனியாக வலை வைத்திருப்பார்கள். கடலின் சூழலையும் காற்றின் போக்கையும் கவனித்து, அந்தந்த மாதத்துக்கும் காலகட்டத்துக்கும் ஏற்றாற்போல் வலைகளை எடுத்துச் செல்வார்கள். ஆகவே இதுபோன்ற வலைகளில் தேவையற்ற மீன்கள் மாட்டுவது குறைவு. பாதுகாக்கப்பட்ட மீன் இனங்கள், பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகள், எந்தெந்த அளவுகளில் உள்ள மீன்களைப் பிடிக்கக்கூடாது என அவர்கள் பின்பற்றிவரும் நம்பிக்கைகள் பலவும் சூழல் பாதுகாப்புக்கு வழிவகுப்பவை. மரபார்ந்த மீன்பிடித் தொழில் என்பது தற்சார்பை முன்வைப்பதாகவும் சூழலைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது.
இப்போதைய மீன்பிடித் தொழிலின் சூழல் மரபார்ந்த மீனவர்களுக்கு ஆதரவானதாக இல்லை. விசைப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.அதிக தூரம் போய் கிலோக்கணக்கில் மீன்களை அள்ளி வரும் விசைப்படகுகளோடு சிறு மீனவர்களால் போட்டி போட முடியாது. அதே சமயம் முன்பு இருந்த அளவுக்குக் கரையை ஒட்டிய கடலோரப் பகுதிகளிலும் மீன்கள் கிடைப்பதில்லை, இதனால் வருமானம் குறைந்துவிடுகிறது. தவிர சமூக, பொருளாதார அரசியல் காரணிகள் சிறு/குறு மீனவர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை என்பதால் அவர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இயற்கை சீற்றங்களின்போதும் இவர்களுக்கு பாதிப்பு அதிகம். ஆகவே சிறு/குறு மீனவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

இது தொடர்ந்து கொண்டே வரும்போது, ஒருகட்டத்தில் மீனவர்கள் என்பது மாறி ‘படகு முதலாளிகள் & படகில் வேலை செய்பவர்கள்’ என்ற ஒரு கட்டமைப்பாக மட்டுமே மீன்பிடித்தொழில் உருமாறும். வணிகமயமாதலுக்கான முதல் படி இது. சந்தைநோக்கிலான தொழிலில் மீன் என்பது ஒரு பண்டம்/வியாபாரச் சரக்கு (commodity) மட்டுமே. ஒரு பண்டமாக மட்டுமே அணுக்கப்படும்போது, உணவுப் பாதுகாப்பு/ஊட்டச்சத்து/வாழ்வாதாரம் ஆகியவற்றில் மீன்களின் பங்கு கண்டுகொள்ளப்படாது.
முற்றிலும் சந்தைமயமானதாக இன்னும் மீன்பிடித்தொழில் மாறவில்லைதான், ஆனால் மீன்பிடித்தொழிலில் சந்தைக் குறுக்கீடுகள் அன்றாடம் அதிகரிக்கின்றன. இதனால் நம் உணவுத்தட்டுக்கும் கடலுக்கும் இருக்கும் தூரமும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

என்ன செய்யலாம்?

கருத்தியல் ரீதியாகவும் சட்டவரையறைகளிலும், மீன்பிடித் தொழில் பற்றிய பொது அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் தேவை. பல்வேறு வகையான மீனவர்கள்,மீன்பிடி முறைகள், மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மக்களின் சமூகப் பொருளாதாரப் படிநிலைகள் என சிதறுண்ட ஒரு துறையை ஒற்றைத் தன்மையோடு அணுகிவிட முடியாது. காலத்தைப் பொறுத்தும் இடத்தைப் பொறுத்தும் மீன்பிடித் தொழில் மாறுபடுகிறது. இவ்வளவு ஏன், சென்னை என்கிற ஒரு நகரத்துக்குள்ளேயே விசைப்படகுகள் நிறைந்த காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சனைகளும், சிறு படகுகளும் நாட்டுப்படகுகளும் நிறைந்த பட்டினப்பாக்கத்தின் சிக்கல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

முக்கியமான சட்டவரைவுகள், கடல்சார்ந்த சூழலைப் பற்றிய முடிவுகள் ஆகியவை சிறு மீனவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்பவையாக இருக்கவேண்டும். அதிகமான எண்ணிக்கையில் மீன்கள் பிடிக்கப்படுவதை மட்டுமே மீன்பிடித் தொழில் வளர்ச்சியாகாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், வாழ்வாதாரம், உணவுப்பாதுகாப்பு ஆகியவை குறித்தும் நிச்சயம் விவாதிக்கவேண்டும். மரபார்ந்த மீனவர்களின் தொழில்சார் அறிவு, சூழல் பாதுகாப்பு பற்றிய அவர்களின் நம்பிக்கைகள்/செயல்பாடுகள் ஆகியவை ஆவணப்படுத்தப்படவேண்டும். கடல் பாதுகாப்பில் இந்த மரபார்ந்த செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டும்.

மீன்களைப் பாதுகாக்க நுகர்வோர் ஏதாவது செய்ய முடியுமா?

‘Fish is the last wild food we eat’ என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. நாம் உண்ணும் மற்ற எல்லா இறைச்சிகளும் பண்ணைகளிலிருந்தே வருகின்றன. ஆனால் இன்னும் கடலுக்குச் சென்று இயற்கைச்சூழலில் பிறந்து வளர்ந்த மீன்களைப் பிடித்து வருகிறோம். ஆகவே ஒவ்வொரு மீன் துண்டை உட்கொள்ளும்போதும், கடலோடு நாம் பிணைக்கப்படுகிறோம் என்றே புரிந்துகொள்ளவேண்டும்.
பாதுகாக்கப்பட்ட மீன்களை வாங்காமல் தவிர்ப்பது அவசியம். பலவகை சுறாக்களும் திருக்கைகளும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இருப்பவை. அவற்றைக் கூடியவரையில் தவிர்க்கலாம்.
இறால்களை வாங்கும்போது அவை பண்ணையில் வளர்க்கப்பட்டனவா என்று விசாரிக்கலாம். உடனடியாக நேரடி பதில் கிடைப்பது சந்தேகம்தான் என்றாலும், பொதுவான விழிப்புணர்வை நுகர்வோர் வெளிப்படுத்துவது அவசியம். இறால் வலைகளைப் பயன்படுத்துவதால் சூழல் மாசுபடுகிறது, மீன்கள் வீணாகின்றன என்பதால், பொதுவாகவே இறால்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் ஒரு அறிவுறுத்தல் உண்டு. அதையும் கூடியவரையில் கடைபிடிக்கலாம்.

சிறு/குறு மீனவர்களிடமிருந்தும் மீன்பிடித் துறைமுகங்களில் நேரடியாக மீன்களை விற்பவர்களிடமிருந்தும் மீன்களை வாங்கலாம். ஐஸ்கட்டியில் வைக்கப்படாமல் இருக்கும் புதிய மீன்களாக அவை இருக்கும் என்பது கூடுதல் வசதி. பெரு நிறுவனங்களின் கடைகளிலிருந்து மீன்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பழங்கள்/காய்கறிகளுக்கு சீசன் இருப்பதுபோல் மீன்களுக்கும் சீசன் உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் இந்த மீன் சாப்பிடலாம்/சாப்பிடக்கூடாது என்ற ஒரு பட்டியல், சூழலியல் கூறுகளை வைத்து உருவாக்கப்படுகிறது. அதைத் தெரிந்துகொண்டு, அதன்படி மீன்களை வாங்குவதன்மூலம்,மீன்களின் இனப்பெருக்க காலத்தில் அவற்றை உண்பது தவிர்க்கப்படும். Inseasonfish போன்ற வலைத்தளங்களில் இந்த மீன் நாட்காட்டிகள் கிடைக்கின்றன.

மீன் சந்தைக்குப் போகும்போது, புதிய வகை மீன்கள் ஏதாவது விற்கப்பட்டால், அதையும் ஒரு சோதனை முயற்சியாக வாங்கி சமைத்துப் பார்க்கலாம். அந்த மீனை எப்படி சமைக்கலாம் என்று தெரியாவிட்டால் மீன் விற்பனையாளர்களே நமக்கு வழிகாட்டுவார்கள். இப்படிப் புதிய மீன்களை எடுத்துக்கொள்வது கடல் உணவின் பல்வகைமையை அதிகரிக்கிறது (Diversifiction of seafood diet). இது உடல்நலத்துக்கு நல்லது. அதிகம் அறியப்படாத மீன்களை நாம் வாங்குவது சிறு/குறு மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும்.  ‘இந்த மீனையும் மக்கள் வாங்குவார்கள்’ என்ற ஒரு நிலை வந்தால், குறிப்பிட்ட மீன்களைத் தவிர மற்ற வகைகள் கடலில் கொட்டப்படுவதோ தீவனத்துக்காக அனுப்பப்படுவதோ குறையும்.
மத்தி, நெத்திலி முதலிய சிறு மீன்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உடல்நலத்துக்கு நல்லது என்பதோடு, பெரிய மீன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சந்தை நிலவரத்தையும் இது மாற்றும்.
கடலிலிருந்து 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் வசிப்பவர்கள் கூடியவரையில் கடல் உணவுகளைத் தவிர்க்கலாம். ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகளிலிருந்து கிடைக்கும் நன்னீர் மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். கடலோரப் பகுதிகளிலிருந்து உட்பகுதிகளுக்கு மீன்களைக் கொண்டு வரும்போது கரிம கால்தடம் (Carbon footprint) அதிகரிக்கிறது. வெளியூரிலிருந்து வரும் மீன்கள் அன்று பிடிக்கப்பட்ட புதிய மீன்களாக இருக்காது என்பதும் கூடுதல் சிக்கல்.

மீன் என்பது வெறும் உணவுப்பொருள் அல்ல. வாழ்வாதாரம், மரபு, பொருளாதாரச் சிக்கல்கள், சூழல் அரசியல் என்று பல்வேறு கருத்தியல்களோடு பின்னிப் பிணைந்தது. தட்டில் இருக்கும் மீன் எங்கிருந்து வருகிறது, அது எதைக் குறிக்கிறது என்பதை அறிந்துகொள்வது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.

தரவுகள்:
The State of the World fisheries and Aquaculture, FAO, 2020
Central Marine Fisheries Research Institute Annual Report 2018-19.
Demand pattern and willingness to pay for high value fishes in India, Shyam S Salim, 2014.
The Tragedy of Commodity: Ocean, fisheries and Aquaculture, Longo et al, 2015.

பிற படைப்புகள்

Leave a Comment