ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 1இதழ்கள்கட்டுரை

காவிரி…  கர்நாடகம்… காடுகள் – ஓர் சூழலியல் பார்வை
இரா.முருகவேள்

by olaichuvadi November 15, 2021
November 15, 2021

கர்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டிய நீரைத் தர பிடிவாதமாக மறுத்து வருகிறது. மத்திய அரசு இவ்விவகாரத்தில் மூச்சுக்காட்டவே இல்லை. வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் வரையிலும் தாக்குப்பிடித்தால் போதும். பிறகு இவ்விவகாரத்தை வழக்கம் போல எல்லோரும் மறந்து விடுவார்கள். அடுத்த வருடம் வரை பிரச்சினையில்லை என்பது திட்டமாக இருக்கலாம். அப்படியே கர்நாடகம் இறங்கி வந்து காவிரியில் கொஞ்சம் தண்ணீர் விட்டாலும் அந்த நீர் ஒகேனக்கலில் இருந்து நாகபட்டினம் வரை பரந்து விரிந்து கிடக்கும் காவிரி வடிநிலத்தின் தாகத்தைத் தீர்க்க போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகமே.

கர்நாடகத்தோடு போராடி நமக்கு உரிமை உள்ள நீரில் கடைசி சொட்டு வரை பெற்றாக வேண்டும். அதோடு பொன்னி நதிக்கு என்ன நேர்ந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதும் அதைப் பீடித்திருக்கும் பிணிகளைத் தீர்க்க முனைந்து நிற்பதும் நமது கடமையாகும். ஒரு காலத்தில் பூம்புகார் துறைமுகத்தில் கப்பல்கள் கடலிலிருந்து பாய்களை இறக்காமல் நேராகக் காவிரி ஆற்றில் பிரவேசித்தன என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நாம் கர்நாடகத்தோடு போராடிக் கொண்டிருக்கும் போது அதே அளவுக்குப் பிரச்சினைக்குக் காரணமான இன்னொரு தரப்பு கவனத்துக்குத் தப்பி தனது அழிவு வேலைகளைத் தொடர்ந்து வருகிறது என்பது ஒரு வேதனையான உண்மை.

காவிரி தலைக்காவிரியில் தொடங்குகிறது. பிரச்சனையும் அங்கிருந்தே தொடங்கி விடுகிறது. சென்டர் ஃபார் எகோலாஜிக்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த டி.வி. ராமச்சந்திரா என்ற ஆய்வாளர் “1973ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரையிலும் கர்நாடகத்தின் மல்நாடு பகுதியில் 44 சதவீதமாக இருந்த காடுகள் 22 சதவீதமாகக் குறைந்து விட்டன. 36 ஆயிரம் ஏக்கர் வனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மல்நாடு பகுதியில் தேக்கு, சவுக்கு, யூகலிப்டஸ் பயிரிட்டதில் ஷராவதி நதியிலும், காவிரியின் கிளைநதியான லக்ஷ்மண தீர்த்த நதியிலும் நீர்வரத்து குறைந்து விட்டது” என்கிறார்.

குடகுப்பகுதியில் உள்ள மடிகேரி நகரம் குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படுகிறது. 230 கோடி ரூபாய் செலவில் காவிரியின் மீது கட்டப்பட்ட ஹராங்கி அணை அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த மைசூர், ஹசன் மாவட்டங்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. இந்த அணையால் தனது விளைநிலங்களையும் வனங்களையும் இழந்த குடகில் வெறும் 607 ஹெக்டேர் நிலம் மட்டுமே பாசன வசதி பெறுகிறது. ஆனால் மைசூர், ஹசன் மாவட்டங்களில் 54,591 ஏக்கர் நிலம்  நீர்பாசன வசதி பெறுகிறது. சமவெளியில் அமைந்துள்ள பெருநகரங்களின் தொழில் மற்றும் குடிநீர் தேவைக்காகவும், பணக்கார விவசாயிகளின் நலனுக்காகவும் மலைகளில் மிக நுண்மையான இயற்கை அமைப்பு நாசமாக்கப்பட்டு வனங்களும், புல் வெளிகளும், சதுப்பு நிலங்களும் முழுகடிக்கப்படுகின்றன.

தமிழகத்திலும் கேரளத்திலும் இதே நிலைதான். காவிரியின் மிக முக்கிய கிளை ஆறுகளான பவானி, குந்தா, கபினி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகின்றன. கூடலூர் தாலூக்கா தென்னிந்தியாவின் தண்ணீர்தொட்டி என்றழைக்கப்படுகிறது. சிரபுஞ்சிக்கு அடுத்து அதிக மழைபெறும் பகுதி இதுதான். இங்கும், நீலகிரியிலும், வயநாட்டிலும், அட்டப்பாடி பள்ளத் தாக்கிலும் கடந்த நூறு ஆண்டுகளாக தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அந்த இடங்களில் டீ, காபி, ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவாட்டத்தின் பெரும்பகுதியில் அடர்ந்த சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் யூகலிப்டஸ் காடுகளையும், தேக்குத் தோட்டங்களையும் உருவாக்கினார்கள். முதலில் ஊட்டி குன்னூர் நகரங்களுக்கு விறகுக்காக உருவாக்கப்பட்ட யூகலிப்டஸ் காடுகள் பின்பு ரேயான், காகித ஆலைகளுக்காக விரிவாக்கம் செய்யப்பட்டன. 150 ஆண்டுகளுக்கு முன்பே நிலம்பூர் கோவிலகம் என்ற சிற்றரசுக்குச் சொந்தமான நிலங்களில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அத்துமீறி நுழைந்து தேக்கு பயிரிடத் தொடங்கியது. வேறு வழியில்லாத ஜமீனும் ஒத்துழைக்கத் தொடங்கியது. நிலம்பூர் இந்தியாவில் தேக்குத் தலைநகரானது. அந்த காலத்தில் ஒரு ஏகாதிபத்தியத்தின் பலம் என்பது அதன் கடற்படையின் பலமாகும். கப்பல்கள் ஐரோப்பாவில் ஓக் மரங்களைக் கொண்டே கட்டப்பட்டன. ஐரோப்பா தனது ஓக் மரங்களை 18ம் நூற்றாண்டிலேயே வெட்டித் தீர்த்துவிட்டது. எனவே காலனியாதிக்கவாதிகள் காலனி நாடுகள் முழுவதும் ஓக் மரத்துக்கு இணையான ஒரு மரத்தைத் தேடி அலைந்தனர். தென்னிந்தியாவின் தேக்கு அதற்கு மிகச்சிறந்த மாற்று என்பதை ஆங்கிலேயர்கள் விரைவில் கண்டு கொண்டனர். ஓக்கை விட வலிமை வாய்ந்ததும், விரைவில் வளரக் கூடியதும் தேக்கு என்பதை அவர்கள் அறிந்ததன் விளைவாக நமது காடுகளை கபளீகரம் செய்தனர். நிலம்பூர் கோவிலகத்தின் நிலங்கள் மட்டுமல்லாமல் முதுமலையிலும், சிறுவாணி அடிவாரத்திலும், வாளையாரிலும் பல கிலோமீட்டர்கள் நீண்டு செல்லும் பிரம்மாண்டமான தேக்குக் காடுகளை உருவாக்கினர். கீழுள்ள நகரங்களுக்கு நீரும், மின்சாரமும் கொடுப்பதற்காக மலைகளை முழுகடித்து பெரும் அணைகள் கட்டப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் 55 சதவிகிதம் டீ,காபி தோட்டங்கள் உள்ளன. மீதிப் பகுதிகளில் காடுகள் உள்ளதாகச் சொல்லப்பட்டாலும் இந்த தேக்கு, யுகலிப்டஸ் தோட்டங்கள் காடுகள் அல்ல. இதன் விளைவு என்ன தெரியுமா? சுமார் நான்காயிரம் ஓடைகள் வற்றிப் போய்விட்டன என்று சூழலியலாளரும், எழுத்தாளருமான நக்கீரன் கூறுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் என்பது வெறும் மரங்கள் அல்ல. மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளைச் சோலைக் காடுகள் என்று அழைப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். சோலைக் காடுகளில் மலை முகடுகள் புற்களால் மூடப்பட்டிருக்கும். பல கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த புல்வெளிப் பிரதேசம் பரந்து விரிந்திருக்கும். சரிவுகளில் குட்டை மரங்கள் அடர்ந்திருக்கும். பள்ளத்தாக்குகளில் ஆங்காங்கே மிக நீண்ட சதுப்புப் பகுதிகள் இருக்கும்.

மழை கொட்டும்போது புற்கள் ஒரு ஸ்பாஞ்ச் போல நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும். ஒரு முறை மழை பெய்தால் மூன்று மாதத்துக்கு அந்த நீரை இந்த புல்வெளிகள் சேமித்து வைத்திருக்கும். சரிவுகளில் இருக்கும் மரங்கள் அதைத் தாண்டி வழிந்தோடிவரும் நீரை தடுத்து பூமிக்குள் அனுப்புகின்றன. அவற்றின் அடர்ந்த கிளைகள் ஒன்பது மாதங்கள் சுழன்றடிக்கும் காற்றையும், மழையையும், பனியையும் தடுத்து புதிதாக வளரும் நாற்றுகளைப் பாதுகாக்கின்றன. இந்த புல்வெளிப் பிரதேசங்களிலிருந்து பெருகி வரும் ஓடைகள் சதுப்பு புல்வெளிப் பகுதிகளில் மறைந்து திரும்பவும் ஓடும். இதன்மூலம் எவ்வளவு கடுங்கோடையிலும் ஊற்றுகள் வற்றுவதில்லை.

ஊட்டி, வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களுக்குச் செல்பவர்கள் சாலைக்காக பிளக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை கட்டாயம் பார்த்திருப்பார்கள். இந்த சோலைக் காடுகளில் யானைகளும் காட்டெருமைகளும் மற்ற விலங்குகளும் தனித்தனி வலசைப் பாதைகளைக் கொண்டுள்ளன. இவை தாவரங்களுக்குத் தங்கள் பயணங்களின் மூலம் ஒளியையும், உணவையும் அளிக்கின்றன. பழங்குடி மக்கள் தங்களது மிகக் கட்டுப்பாடான வேட்டை மற்றும் விவசாய முறைகளால் விலங்குகளின் எண்ணிக்கையை சமப்படுத்தும் பாத்திரத்தை வகிக்கின்றனர். பரவி வரும் காட்டுத்தீயை எதிரே தீமூட்டி அணைப்பது, காட்டுத்தீ ஏற்படுவதற்குக் காரணமான சீமாற்றுப் புற்களை முன்பே அறுத்து பயன்படுத்துவதன் மூலம் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பது போன்ற பணிகளை ஆற்றுகின்றனர். இவையெல்லாம் இணைந்ததுதான் காடு.

சோலைக் காடுகளைப் பார்க்க விரும்புபவர்கள் வால்பாறை கிராஸ் ஹில்ஸிலும், ஊட்டி அவலாஞ்சி, கூடலூர் ஜீன்பூல் பார்க்கிலும் அவற்றைக் காணலாம். ஆனால் தொண்ணுறு சதவிகித சோலைக் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் மேற்சொன்ன சோலைக் காடுகளிலும் பெரும்பகுதிகளை அணைகளும் தேயிலைத் தோட்டங்களும் ஆக்கிரமித்துள்ளன.

புற்களை அழித்து மரங்களை வெட்டி சதுப்பு நிலங்களின் நீரை வடித்து எல்லா இடங்களிலும் ஒன்று போலவே தேயிலைச் செடிகளை நட்டு வைத்தனர் வெள்ளைக்காரர்கள். சூரிய ஒளி புகாத காடுகளை அழித்து அந்த இடங்களில் ஒருமைக்கலாச்சார முறையில் தேக்கு, யூகலிப்டஸ் மற்றும் ரப்பர் மரங்களை வளர்த்தனர். சதுப்பு நிலங்களின் நீரை வடித்தனர். இயற்கை சர்வ நாசம் அடைந்தது.

எந்த அளவுக்கு என்றால் நிலம்பூர் ஜமீன் கூடலூரில் பேரழகு வாய்ந்த மிக அற்புதமான காடுகள் கொண்ட ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை மஞ்சுஸ்ரீ போன்ற எட்டு பெரிய தேயிலை நிறுவனங்களுக்கு நூறு ஆண்டு குத்தகைக்கு விட்டது. அப்போது முப்பதாயிரம் ஏக்கரில் தோட்டங்களும், எழுபதாயிரம் ஏக்கரில் சோலைக் காடுகளும் இருந்தன. இப்போது தொண்ணூராயிரம் ஏக்கரில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. எனவே அறுபதாயிரம் ஏக்கர் காடுகளை இந்த நிறுவனங்கள் ஆக்கிரமித்து அழித்துள்ளன. கூடலூர் எனும் ஒரு தாலுக்காவில் மட்டும் இப்படியென்றால் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, பந்தலூர், வயநாடு பகுதிகளை நினைத்துப் பாருங்கள். நான்காயிரம் ஓடைகள்  எப்படி வற்றின என்று புரிகிறதல்லாவா!

கோவையைச் சுற்றி பள்ளி நாட்களில் குளித்து விளையாடிய மாங்கரை, பன்னிமடை அருவிகள் இப்போது இல்லை. ஆனைக்கட்டிப் பாதையில் சலசலத்து ஓடிக்கொண்டிருந்த ஓடைகளில் புதர் மண்டிக்கிடக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க நொய்யல், அமராவதி ஆறுகள் முழுமையாக வறண்டுவிட்டன. இருக்கும் ஆறுகளின் நீரையும் பெரு நகரங்களும், ஆலைகளும் குடித்து வருகின்றன. நமது அணைகள் விவசாயத்துக்கு பயன்படுவதைவிட இந்த நகரங்களின் தாகத்தைத் தீர்க்கவே பெருமளவு பயன்படுகின்றன. ஆறுகளில் நீர்வரத்து குறைந்ததற்கும், கரைகளில் நிலத்தடி நீர் குறைந்தற்கும் ஆறுகளில், குறிப்பாகக் காவிரியில் மணல் அள்ளுவதைக் காரணமாகச் சொல்கின்றனர்.

ஆறுகளில் மணல் அள்ளுவது என்பது வீடு புகுந்து திருடுவதைப் போன்ற தனிப்பட்ட செயல் அல்ல. அது நகர்மயத்தோடு தொடர்புடையது. விவசாயம்  புறக்கணிக்கப்படுவதால் மக்கள் நகரங்களில் வந்து குவிகின்றனர். அவர்களுக்காக துணை நகரங்கள், அப்பார்ட்மெண்டுகள் உருவாகின்றன. அந்நிய முதலீட்டினால் தீராப்பசி கொண்ட எண்ணற்ற ஆலைகளும் ஷாப்பிங் மால்களும் வந்து குவிகின்றன. இவற்றுக்கான இரும்புக்கும் சிமெண்ட்டுக்கும் நமது மலைகள் பிளக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர்  என பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே இந்த தவறான பொருளாதாரக் கொள்கையைக் கருத்தில் கொள்ளாமல் மணல் அள்ளும் லாரிகளை மட்டும் பார்ப்பதும் தடுக்க நினைப்பதும் புண்ணுக்குப் புனுகு பூசுவதைப் போலத்தான் முடியும்.

நகரமயமாக்கல், காடழிப்பு, விவசாயம் புறக்கணிக்கப்படுவது என எதுவுமே தனியானது அல்ல. அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், கர்நாடகத்திடம் போராடி நமக்குரிய நீரைப் பெறுவதும் மிக முக்கியமானது. அதே அளவு பெருமுதலாளிகளிடமிருந்து நமது மலைகளை மீட்பதும். கர்நாடகம் செய்வதைப் போன்றே நமக்கு இந்த பெரு நிருவனங்ளும் பெரும் சேதத்தைச் செய்து வருகின்றனர். பெரும்பாலான பெருந்தோட்டங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு இவற்றால் கிடைக்கும் பலனை விட பாதிப்புகளே அதிகம். நமது மக்களை காலம் காலமாக பல வதைகளுக்கு ஆளாக்கி வருபவை இவை. இந்த பெருந்தோட்ட நிர்வாகங்களிடமிருந்து நமது மலைகளை மீட்பது நமது ஆறுகளுக்கு புத்துயிர் கொடுக்க மிக அவசியமானது.

விழிப்புணர்வு அனைத்துதளங்களிலும் ஏற்பட வேண்டும். சுற்றுச் சூழல் அரசியல் என்பது தனியானது அல்ல. தீர்வுக்கான தேடல் ஒரு கழுகின் பார்வையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

         more 
 
         more
இரா.முருகவேள்காடழிப்புகாவிரி
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
ஜாரியா ஓர் அகத்தேடல்
அடுத்த படைப்பு
நிலம் என்னும் நற்றாய்

பிற படைப்புகள்

காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் நாராயணி சுப்ரமணியன்

January 1, 2022

தேவதேவன் கவிதைகள்

November 15, 2021

சுகுமாரன் கவிதைகள்

November 15, 2021

க.மோகனரங்கன் கவிதைகள் க.மோகனரங்கன்

November 15, 2021

உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

November 15, 2021

எம்.யுவன் கவிதைகள்

November 15, 2021

லக்‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் லக்‌ஷ்மி மணிவண்ணன்

November 15, 2021

ஸ்ரீ வள்ளி கவிதைகள்

November 15, 2021

கதிர்பாரதி கவிதைகள்

November 15, 2021

கார்த்திக் நேத்தா கவிதைகள் கார்த்திக் நேத்தா

November 15, 2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top