தேவதச்சனின் இலக்கிய சபை பேர் போனது. அதில் நான் வாடிக்கையான பங்கேற்பாளர் அல்ல. இன்னும் அதிக முறை சந்தித்திருக்கலாமோ என வருந்தும் படிக்கு குறைவான தடவையே அவரோடு உரையாடியிருக்கிறேன்.யாவுமே குறைந்தது மூன்றுமணி நேரம் நீளமான உரையாடல்கள் தாம். குறைந்தபட்சம் feauture film நீளத்திலாவது இருக்கவேண்டும் ஒவ்வொரு உரையாடலும்.முதன் முறை சந்தித்த போது நான் எனது முந்தய தொகுப்பொன்றை அவரிடம் தந்ததாக ஞாபகம்.உதயசங்கரும் சோ.தர்மரும் கூட இருந்தனர். அந்தச் சிறு சந்திப்பில் தேவதச்சன் என்னிடம் கூறிய வரி ஒன்று இன்னும் ஞாபகம் உள்ளது.
பெரும்பாலும் அவரது நீண்ட உரையாடல்களில் கூட இத்தகைய வரிகள்தான் என் நினைவில் தங்கியுள்ளன.ஒரு ஆறுமாத காலம் எடுத்துக்கொண்டு நவீனத் தமிழிலக்கியத்தை வாசித்து முடியுங்கள் என்றார்.அப்போது நான் வேலை இல்லாது இருந்தேன். இப்போது யோசித்துப்பார்த்தால் கூட அவரது யோசனை எவ்வளவு பயனுள்ளது என்று படுகிறது.கூடவே அந்த யோசனை தந்த உத்வேகமும் கனவும்.
பேச்சு வாக்கில் கூடவே ஒன்று சொன்னார்:you have to kill your fathers. அதாவது எல்லா முன்னோடிகளையும் வாசித்து விமர்சித்து முன் செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார்: you have to kill your fathers. அப்போது நான் கல்லூரி முடித்திருந்த காலம்.அவ்வமயம் நான் எழுதிக்கொண்டிருந்தவற்றை நவீனக்கவிதை என்று கூடக் கூறமுடியாது. ஆனால் அந்தவொரு நிலையில் இருந்த ஒரு அமெச்சூர் இளைஞனிடம் கூட தேவதச்சன் போன்ற ஒரு முன்னோடி கவிஞரால் அப்படிக் கூற முடிந்தது.இந்தத் தன்மை தேவதச்சனிடம் எப்போதுமே இருந்த ஒன்றாக இருக்கலாம். அவர் எனை ஒரு முதிரா இளைஞனாகவோ, சிஷ்யப்பிள்ளையாகவோ கருதி நடத்தவில்லை.ஒரு சமானமான இலக்கிய மனமாகவே கருதினார். இந்த திறந்த தன்மைக்கும் ஒரு வித dogma இல்லாத பண்புக்கும் ஒரு கவிஞனாக தேவதச்சன் தன்னை காலவோட்டத்தினூடே வெவ்வேறு விதமாக தகவமைத்து உருமாற்றி வடிவமைத்துக் கொண்டதற்கும் தொடர்பு இருப்பதாக எண்ணுகிறேன்.
எழுபதுகளின் அறிவியக்க சூழல் பன்மடங்கு கொதிநிலை கொண்டது எனலாம். மார்க்சியமோ அதனோடு தொடர்புடைய எம் எல் நிலைப்பாடுகளோ, நக்சல்பாரி இயக்கங்களோ அல்லது இருத்தலியமோ அல்லது புதுயுகக் குழுக்கள், ஒஷோ, ஜேகே மாதிரியான கீழை ஆன்மிக மீட்பியங்கங்களோ இப்போதைப் போல வெறும் கோட்பாடுகளாகவோ கருத்தியல் பகடைகளாகவோ மட்டும் கையாளப்பட்டவை அல்ல. அவை எதார்த்தமாக இருந்தன.அது தொடர்புடைய விவாதங்களுக்கு விளைவுகள் இருந்தன. இப்போது நமக்கவை தர்க்க விளையாட்டுக்கும் சாமர்த்தியத்துக்குமான காற்றடைத்த கருவிகள் ஆகிவிட்டன. ஆனால் அப்போது அப்படி இல்லை. அவற்றுக்கு எடை இருந்தது. அப்போது வாழ்வு சார்ந்து சமூகம் சார்ந்து அரசியல் சார்ந்து எழுப்பப்பட்ட கேள்விகள் அறிவுக்கேளிக்கையாக அல்லாமல் அடிவயிற்றில் இருந்து எழும்பின. அப்போது எழுதப்பட்ட கவிதைகளும் கூட மெய்மைத் தேடலின் தீவிரம் கொண்டு இயங்கின. தேவதச்சனும் இந்த உறையுடனேயே தமிழ்க்கவிதைக்குள் நுழைகிறார். அவரவர் கைமணல் 1982 இல் வெளிவருகிறது. அவரது அணுகுமுறை வேறாக இருப்பினும் அவருக்கும் அக்காலத்து கவிதையின் தேடல் சார்ந்த பார்வையும் தீவிரமும் இருந்தன. அவரது தொடக்க கால கவிதைகள் சற்றதிகமான அறிவார்த்த கட்டமைப்பைக் கொண்டுள்ளவை. சில கவிதைகள் மூளைக்கு வேலை வைக்கக் கூடியவை. மேல் மாடி ஸ்விட்சை ஆன் செய்து வாசிக்க வேண்டியவை.
ஆனால் தேவதச்சனின் இரண்டாவது தொகுப்பு 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2000இல் வெளியாகிறது. இப்போது நாம் 2,3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுப்பு கொண்டு வருகிறோம். நம் மனநிலையிலோ, நிதர்சனத்திலோ பெரிய மாறுதல் ஏதுமிருப்பதில்லை நாம் வேறொரு அலைபேசி வைத்திருக்கிறோம், அடுத்த ஆபரேடிங் சிஸ்டம் வெளியாகியிருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் தேவதச்சனின் இரண்டாவது தொகுப்பு வருகையில் இருந்த எதார்த்தம் முற்றிலும் வேறான ஒன்று. வழமையான அரசியல் ஆன்மிகக் கருத்தியல்கள் தமது அழுத்தத்தை முற்றாக இழந்து போய் இலட்சியவாதம் கிட்டதட்ட அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துவிட்ட காலகட்டம்.கூடவே மூர்க்கமான தேடலும், தீவிரமும்.இப்போது தேவதச்சனும் ஒரு புதிய கவிஞராக வந்து நிற்கிறார். தனது பாரங்கள் அனைத்தையும் கழற்றிவைத்துவிட்டவராக, அனைத்தும் பெரும் கதையாடல்களாக கேலிக்குள்ளாகி பழைய தேடல்கள் எல்லாம் ஊடக நிகழ்ச்சிகளாக மாறியபிறகு தேவதச்சன் ஆசுவாசமாய்’ஹே ஜாலி..எந்தக் கேள்விக்கும் விடையில்லை’ எனக் குதூகலிப்பவராக மீண்டும் நுழைகிறார்.அத்தொக்குப்புக்குத் தலைப்பே அத்துவான வேளை’.
இந்த இடத்தில் இருந்துதான் தேவதச்சனின் கவிதைகளின் கவனம் அன்றாட வாழ்வில் மையம் கொள்ளத்துவங்குகிறது எனலாம். எஸ்ரா ஒரு புத்தகப் பின்னட்டையில் குறிப்பிட்டது போல தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. உறுதியாகத் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். உலகளவில் எனக்கு சட்டென நினைவுக்கு வருபவர் அமெரிக்கக் கவிஞர் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ். கவிதை பாடுபொருளிலும் கவிதை சார்ந்த அபிப்ராயத்திலும் ஏன் வடிவத்திலுமே கூட அவரை ஞாபகப்படுத்துபவர். ஆனால் வில்லியம்ஸ் பின்னாளில் பேட்டர்ஸன் எனும் பெருநீளக் கவிதைகளை எழுதினார். தேவதச்சன் அதை செய்வாரா தெரியாது. வில்லியம்ஸை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளதாக ஞாபகம். அவரது தொலைவிலிருக்கும் கவிதைகள் தொகுதியில் உள்ளன. அவரது கவிதைப் பார்வையை இப்படி ஒரு வரியில் சொல்லலாம் ‘வாழ்வு என்றாலே அது தினசரிதானே’.
கவிதையின் வளர்ச்சிப்போக்கு தொடர்பில் நிறைய பொருள்கோடல்கள் உள்ளன. வரலாறு என்றாலே அநேக மொழியியல்கள் சாத்தியம்தானே. அத்தகைய ஒருபார்வையில் கவிதை மந்திர உச்சாடணங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பது ஒரு மானுடவியல் ஊகம். மொழியின் வேலை அமானுஷ்யத்தைக் கையாள்வது என்பது இப்போதும் உள்ள பழங்குடி நம்பிக்கை. ஒரு சொல் சரியான முறையில் உச்சரிக்கப்படுகையில் அது ஆற்றல் வயப்படுமென நம்பப்பட்டது. பாரதி கூட மந்திரம் போல் சொல் என்றானே. சொல்லப்போனால் கவிதை மட்டுமின்றி நடனம் இசை போன்ற எல்லாக் கலைவடிவங்களுமே மந்திரச் சடங்குகளில் இருந்து பிறந்ததாக ஊகிக்கலாம். ஆனால் பிரதானமாக கவிதை பாதுகாப்பதற்கான ஒரு பெட்டகாமாகவே கருதப்பட்டது. ஞாபங்களை அறிவை சம்பவங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கான வழியாகவே கவிதை பயன்பட்டது. தமிழ், சீனம், கிரேக்கம் உள்ளிட்ட அநேக செவ்வியல் மொழிகளில் வைத்தியத்தில் இருந்து ஜோதிடம் வரை அனைத்தும் கவிதை வடிவத்தில் சேகரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே குலமரபை பதிவதற்கும் அதையொட்டிய வீரபிரதாபங்களை விவரிப்பதற்குமான வடிவமாக கவிதை இருந்தது. பிறகு குலமரபுப்பாடல் பண்பை விவரித்து புராணக் கற்பனைகள் சேர்த்து இதிகாசங்கள் எழுதப்படுகிறது. வாழ்வின் அடிப்பைடையான நெறிகளை வகுத்திடவோ ஆராயும் பொருட்டோ நாட்டார் கதைகளின் பின்னணியில் காப்பியங்கள் உருவாகின்றன. பின்னர் நீதி உபாசனைக்கான வாகனமாக பின் பக்தி இலக்கிய காலகட்டத்தில் இறை தேடலுக்கான பாதையாக கவிதை மாறுகிறது. பின் வந்த காலத்தில் நாட்டார் வாழ்வின் கூறுகள் சற்று உட்புகுந்தன எனினும் அப்போதும் கவிதை பக்தி சிருங்காரம் ஆகிய உயரிய ரசனைகளிலேயே சஞ்சாரம் செய்தது எனலாம்.
பின் வந்த கற்பனாவதக் கவிதைகள் எல்லா உணர்ச்சி நிலையிலும் உன்னதத்தையும் கட்டற்ற தன்னிலை வெளிப்பாட்டையுமே வற்புறுத்தின. இதற்குப் பின் வந்த நவீனக்கவிதை இயல்பாகவே தனக்கு முந்ைதய கட்ட கற்பனாவதக் கவிதைகளிடம் இருந்த முகம் திருப்பலாக அமைந்தது. தவிர ஜனநாயக யுகம் வலுவாக காலூன்றிய பிறகு, இப்படியாக உன்னதங்கள் மீதான அவநம்பிக்கையும், அறிவியலுக்கு அப்பாற்பாட்ட பொதுப்புத்தியும், வரலாறு ஒரு அறிவுத்துறையாக வளர்ந்ததும், மதச்சார்பின்மையின் நிறுவலும் நவீனக்கவிதையிடம் இருந்து முந்தய காலகட்டத்து கவிதைகளுக்கு இருந்த பாடுபொருள்களை எல்லாம் கவர்ந்துகொண்டது. சற்று பொதுமைப்படுத்திப் பார்த்தால் இறுதியில் இதற்கு மிஞ்சியது அன்றாட சாமான்ய வாழ்வு தான். இதுதான் கவிஞனின் கைக்கு கிடைத்துள்ள கச்சாப்பொருள். அதனால்தான் நவீன புனைவாக்கங்களில் நாம் செவ்வியல் அர்த்தம் கொண்ட கதாநாயகனை காண இயல்வதில்லை. கில்காமெஷை கிருஷ்ணனைப் போன்றோ ஒடிசியசை ராமனைப் போன்றோ அவர்களை நாயகன் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவன் சாமான்யனின் அல்லது அதனது ஒரு கூறின் பிரதிநிதியாகவே தென்படுவான். அடிப்படையில் அவை நாயகர்கள் இல்லை முதன்மைப் பாத்திரங்கள் அவ்வளவுதான். வேறு மாதிரி சொல்வதென்றால் தேவதைகளும் கந்தர்வர்களும் நிரம்பிய சொர்க்கமோ அல்லது பாதாள பயங்கரங்களின் நரகமோ படைப்பாளிகளுக்கு வாய்க்கவில்லை. அவர்களுக்கு பாத்தியப்பட்டது இந்த மண்ணகம் மட்டுமே.
மிலோஷின் ஒரு தொடர்கவிதைக்குப் பெயர் ‘இந்த உலகம்’. நம் கவிஞர்கள் இந்த உலகிற்குள்ளேயே சொர்க்கத்தையும் நரகத்தையும் தேட, அனுபவிக்க கடமைப்பட்டவர்கள். என்பதால் தவிர்க்கவே இயலாமல் அவன் இந்த உலகைப் பற்றி எழுதியாக வேண்டும். இதில் சந்திக்கிற சின்ன ஏமாற்றத்தையும் சிறிய விழாக்களையும் தவறவிடமுடியாது. ஆனால் தேவதச்சன் கவிதையில் தேவதைகள் துணிதுவைக்கும் இடத்தில் சிறகுலர்த்துபவர்களாக இருக்கின்றனர். வினோத ராட்சசனோ கண்ணீர் துளிக்குள் குடியிருப்பவனாக உள்ளான். சொர்க்கத்தையாவது கண்டுபிடித்து விடலாம் தேவதச்சனின் உலகில் நரகத்துக்கு இடமே இல்லை.
இது ஆச்சர்யமான விஷயம்தான். அவரது கவிதையில் அதன் முழுமுதலான அர்த்தத்தில் இருளுக்கு இடமே இல்லை. இப்போது திரும்பிப்பார்க்கையில் புதுமைப்பித்தன் சொன்னாரே ‘மண்டும் பெருஇருட்டு மானுடர் தம் நினைவில் கண்டும் அறியாத காரிருட்டு’ அத்தகைய இருட்டுக்கே இடமில்லை என்று படுகிறது. நவீன மனிதனின் மனக்கலக்கமோ(anxiety) அநாதரவான தன்மையையோ அவர் கவிதைகளில் இடம் பெறுவதில்லை. அந்நியமாதலின் பொற்காலத்தில் கூட தேவதச்சன் அதைப் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை (‘அம்மா காபி தராவிடினும்..நான் அந்நியமாகிவிடவில்லை’).தேவதேவனும் இதே போன்ற ஒரு கவிஞர் எனலாம். ஆனால் எனக்கென்னவோ தேவதேவனிடம் ஒரு சாயையாக அபாவ இருப்பாக கவுண்டர் வெயிட்டாக துயரம் இருப்பதாகவே படுகிறது. துயர் என்ற பதம் மீள மீள வருகிறது அவரிடம். ஆனால் தேவதச்சனிடம் நடுத்தர சாமான்யர்களின் எளிய தடுமாற்றங்களைத் தவிர்த்தால் இருட்டுக்கு துயரத்துக்கு இடமிருப்பதாகவே தெரியவில்லை.
படிக்கட்டில் கால் தடுக்குவதைப் போன்ற எளிய கலக்கத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்கிறார் தேவதச்சன். கூடவே நமது சிறுபிள்ளைத் தனமான சந்தோஷங்களையும் பதிவு செய்பவராக. தன் பிறந்த நாளில் ஒரு வாழ்த்தும் பெறாத ஒருத்தி, முட்டையைக் கைதவறி உடைத்துவிடும் நபர், மருத்துவமனையில் அரசு அலுவலகங்களில் காத்திருப்பவர்கள், குடுகுடுப்பைக்கார பாலகனின் முன்னே விசனித்து நிற்கும் குண்டு பெண்மணி இப்படியாக சாமான்ய மனிதர்களின் சராசரி பாதிப்புகளிலேயே கவனம் கொள்கிறார். சொல்லப்போனால் நவீன மனிதன் எனும் வரலாற்று அலகின், அவனது துல்லியமாகக் கத்தரிக்கப்பட்ட தன்னிலையின் உராய்வுகளோ கூர்மையான ப்ரக்ஞையினால் உருவாகிற உணர்ச்சி நெருக்கடிகளுக்கோ அதனால் அவனே உருவாக்கிக் கொள்கிற நரகத்துக்கோ தேவதச்சனின் உலகில் இடமில்லை என்றுதான் சொல்ல முடிகிறது. ஒன்றுமில்லை எந்த ஒரு நவீனக்கவிதைத் தொகுப்பை புரட்டிப்பார்த்தாலும் தென்படக்கூடிய வன்மமோ காமமோ கூட இல்லை இக்கவிதைகளில். ரொம்ப ஆச்சர்யமாக தனிமை பற்றி கூட தேவதச்சன் பெரிதாக எழுதியதைப் போலத் தெரியவில்லை. சாராம்சத்தில் நவீன மனிதனின் நிழலுலகை அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை எனலாம். நினைவுக்கு வரும் ஒரே விஷயம் அவரது கவிதைகளில் மீள மீள வரும் அடையாள அட்டை என்ற குறியீடு.
தேவதச்சனின் கவியுலகம் தொடர்ந்துவரும் தனித்த படிமங்களோ பிரத்யேகக் குறியீடுகளோ கொண்டதல்ல.அதற்குக் காரணம் பொருட்களின் பொருட்தன்மைக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதுதான் என்று நம்புகிறேன்.பொருட்களின் இருப்பு குறித்த ஆழ்ந்த அக்கறை கொண்ட கவிஞர் ஒருவரால்தானே ‘போய் வாருங்கள் உபயோகமற்ற பொருட்களே’ என உரிமையோடு விளிக்க முடியும். ஏனெனில் அவர் ஈர்க்கப்பெறுவது கருத்துக்களுக்குப் பெரிய இடமில்லாத சாமான்யக் களத்தை நோக்கி. அங்கு பொருட்கள் அவசியமானவை.அதனால் அவற்றை பொருட்களாகவே நீடிக்கச்செய்துவிடுகிறார். அவற்றை குறியீடாகவோ உருவகங்களாகவோ மாற்றிக் காட்ட முயற்சிப்பதில்லை. ஒருவகையில் Vermeer போன்று domestic life இன் காட்சி சித்திரங்களை வரைந்து காட்டியவர்களின் அல்லது still life painters களின் உலகத்துக்கு மிக நெருக்கமானது தேவதச்சனின் கவியுலகம்.
அங்கு ஒரு ஆரஞ்சு தோலுரிக்கப்பட்டு அமர்ந்துள்ளது. ஒரு மேஜையில் ஜாடிகள் வீற்றிருக்கின்றன. ஒரு பெண் ஜன்னல் கதவை துடைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லது ஒரு கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள். இன்னோர் ஓவியத்தில் வீட்டு வாசலில் ஒரு பெண் கையால் பின்னிக்கொண்டிருக்கிறாள். அவ்வழகிய தெருவில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அருகே ஒரே ஒரு சன்னல் மட்டும் திறந்துள்ளது அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றுமில்லை. யோசித்துப் பார்த்தால் தேவதச்சன் கவிதைகளை அப்படிச் சித்திரங்களாகத் தீட்டமுடியும். இப்படி இருப்பினும் அரிதான ஒன்றாக அவர் கவிதைகளில் அடிக்கடி இடம்பெறுவது இந்த ’அடையாள அட்டை’. தேவதச்சன் மனிதனை ஒரு உயிரியல் வகையினமாக மிஞ்சிப் போனால் ஒரு மானுடத் திரள்தொகுதியாகவே காணவிரும்புகிறார்.அதைத் தாண்டி மேலதிகமாக அவன் மேல் சுமத்தப் பெறும் எந்த அடையாள வில்லைகளையும் அவர் எதிர்மறையாகவே அணுகுகிறார்.அவற்றை மனித இயல்பூக்கத்துக்கு தடையாக இருப்பதாகவே எண்ணுகிறார். உயிரோடு இருப்பது எனும் கவிதையில் எழுதுகிறார்:
உயிரோடு இருப்பது
எவ்வளவு
ஆனந்தமாய் இருக்கிறது
ஆனால் ஆனால்
என்
அடையாள அட்டை
தொலைந்து விட்டதே
நான்
ஆண்நாயுமல்ல
பெண் நாயுமல்லவே
இதுவும் ஒரு ஆச்சர்யமான விஷயம்தான். அதாவது தேவதச்சனின் கவிதைகளில் கற்பனாவத மனநிலைக்கு கிஞ்சித்தும் இடமிருப்பதில்லை. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பெரிய மனவெழுச்சிகளை பதிவுசெய்யும் கவிதைகள் அல்ல இவை. அவரது கவிதைகளில் அகமுயரும் சிகரங்களோ மருட்டும் பள்ளத்தாக்குகளோ இல்லை. சமவெளியின் கவிதைகள் அவை. அவர் குதூகலம் அடையக்கூடிய இடங்கள் கூட குழந்தைத்தனமான வியப்பையும் கண்டுபிடிப்புகளையும் அவர் வந்தடையும் இடத்தில்தான். அப்போதுதான் அவர் “ஜெல்லி மீனே ஜெல்லி மீனே” என உற்சாகம் அடைபவராகத் தோன்றுகிறார். இதே போல அவர் கவிதைகளில் மதியமும் அடிக்கடி வருவதைப் பார்க்கலாம். மோனமும் சாவகாசமும் நிறைந்த அந்தப் பொழுது இந்த சமவெளித்தன்மைக்கு மிக உவப்பான ஒரு சிறுபொழுது. தன்னையே ஓரிடத்தில் 7 வயது மத்தியானப்பையன் என அறிமுகப்படுத்துகிறார். இன்னோரிடத்தில் சொல்கிறார் ’இரண்டு வேளைகளால் ஆனது எனது என் தெரு ஒரு மதியம் இன்னொரு மதியம்’.அப்புறம் மிகப்பிரபலாமக அவர் மத்தியான வார்த்தையை உடைத்துக் காட்டியது நினைவு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அவரது கவித்தொனியிலேயே அந்த மத்தியானம் இருப்பதைக் காணமுடியும்.
இப்படியாக நவீனக்கவிதையின் பெரும்பாலான உரிப்பொருட்களை உதாசீனப்படுத்தும் எதிர்நவீனத் தன்மையும், கீழ் மேலாய் ஓங்கிக் குரலெழுப்பாத ஒரு எதிர்கற்பனாவாதத்தனமும் தேவதச்சனுக்கு தமிழ்க்கவிதையில் பிரத்யேகமான தனித்தன்மையை வழங்குகிறது எனலாம்.
ஆனால் இப்படி யோசித்துப்பார்த்தால் பெரும்பாலான நவீன கவிதைகள் அன்றாடத்தையே இயங்குதளமாக எடுத்துக்கொண்டது என்றால் தேவதச்சனிடம் அவற்றை அழுத்திச் சொல்வதற்கான காரணம் என்ன. உதாரணத்துக்கு தேவதச்சனின் அன்றாடச் சித்திரங்கள் கலாப்ரியாவின் சித்திரங்களைப் போல திகைப்பூட்டுபைவையோ நினைவில் தங்குபவையோ அல்லது அர்த்த அழுத்தத்தை கொண்டவையோ அல்ல. விக்ரமாதித்யனுடையதைப் போல உதிரி மனோபாவத்தையோ, விட்டேத்தியான மனப்போக்கையோ பிரதிபலிப்பவை அல்ல. தேவதேவனுடையதைப் போல மேலான மெய்மை தளத்துக்கோ, மனவெழுச்சிகளுக்கான வாய்ப்பாக கருதுபவை அல்ல. ஞானக்கூத்தனைப் போல பகடியும். விமர்சனப்பார்வையை கொண்டதல்ல. கல்யாண்ஜியினுடையதைப் போல அழகியல் நுண்சித்தரிப்புகளை சூடிக்கொள்பவை அல்ல. அவரது கவிதைகள் அன்றாட வாழ்வை அதன் சாமான்யத்தளத்திலேயே சந்திப்பவை.
அதன் சாதாரணத் தன்மையை முன்னிட்டே முக்கியத்துவம் பெறுபவை. அச்சாதாரண வாழ்வின் மேற்பரக்குக் கீழே உள்ள ரகசியங்களைத் திறந்து பார்ப்பதற்கான முயற்சிகள். ஆயினும் சராசரித்தன்மை அதனுள் தருவிக்கப்படும் அமானுஷ்யத்தன்மையையும் தாண்டி அதன் சாமான்யத்தனத்தையும் தக்கவைத்துக்கொள்கிறது. அதாவது விசித்திர பார்வைக் கோணங்களைத் தாண்டி அது தன் சாமான்யத்தன்மையை பிடிவாதமாகத் தக்கவைத்துக்கொள்கிறது. எழுப்பப்படும் ஜாலத்தையும் உட்செறித்து அன்றாடத்தின் சகஜம் தங்குகிறது. சொல்லப்போனால் சாதாரணம் அசாதாரணமாக மாறுவது மட்டுமல்ல. சாமான்யத்தின் சாரமான சாதாரணத்துவமும் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு தேவதச்சன் பெரும்பாலும் விவரணைக் கவிதை வடிவத்தையே கையாண்டுள்ளதைப் பார்க்கலாம். பார்த்தால் அதுதான் பொருத்தமானதும் கூட. இப்போது தமிழில் கிட்டத்தட்ட இந்த வடிவம் பொதுப்போக்காகிவிட்டது. இவ்வடிவ நிலைபடுத்தலில் தேவதச்சனது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தேவத்தச்சன் இதை சாத்தியப்படுத்துவது தனது தனித்துவமான கவித்துவ அல்லது வாழ்க்கைப் பார்வையின் மூலமாக எனலாம். ஏற்கனவே சொன்னது போல தொடக்க கால கவிதைகளில் அறிவார்த்தத்திலும் கருத்தாக்க பாரங்களோடும் அலைக்கழியும் ஒரு மனதைக் காணமுடிகிறது. அதே நேரம் அவரது கவிதையில் சிந்தனைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு என்றே கருதுகிறேன். ஆனால் காலப்போக்கில் இதே சிந்தனையைக் கொண்டே அவர் அறிவார்த்தத்துக்கு எதிரான ஒரு இடத்துக்கு வந்து சேர்வதைக் காணலாம். அதை அவர் புலன்களில் தஞ்சமடைவதின் மூலம் செயல்படுத்துகிறார். அறிவின் குறிப்பாக புலனறிவின் தொடுவானத்தில் உலாத்துவது அவருக்கு பிடித்தமான நடவடிக்கை. அங்கு அநேக கவிதைகளைக் கண்டடைந்தார். புலன்கள் பிரபஞ்சத்தை சந்திக்கும் புள்ளியே ஒரு கவிஞனாக தேவதச்சன் நிலைகொண்டுள்ள இடம். அந்த இடத்தில் கிடைக்கப்பெறும் அனுபவங்களே அவரது கவிதைச் சேதிகள். அவ்வனுபவத்தினூடான புதிர்களும் அற்புதங்களுமே வாசகமனத்திடம் அவர் கடத்தவிழைபவை. புலன்களுக்கு பின்னுள்ள நினைவுகளுக்குள்ளோ மரபான அபிப்ராயங்களுக்குள்ளோ கருத்துக் குழப்பங்களுக்கோ அவர் நுழைவதில்லை. அனுபவம் எதிர்கொள்ளப்படுகிற வேளையிலேயே தன் கவிதையை முடித்துக்கொள்கிறார் என்று படுகிறது. அதனால் ஒரு வகை immediacy இருக்கிறது அவற்றில்.ஆச்சர்யமோ அதிசயமோ உடனடியாகத் தானே நிகழமுடியும். அதனால்தான் தண்ணீர் ஒரு இனிய தோழியாக முடிகிறது அவருக்கு. வேப்பம்பூ பிரம்மாண்ட கோட்டையாகிறது.
இயல்பிலேயே குழந்தைகள் அப்படித்தானே இருக்கிறார்கள். புலன்களின் கற்பனையின் உலகில்தானே வாழ்கிறார்கள் அவர்கள். தேவதச்சன் ஓரிடத்தில் சொல்வதைப் போல இப்போது பிறந்த குழந்தைக்கு பழைய சட்டை என்று எதுவுமில்லை. அங்கு இன்னமும் அறிவின் ஞாபகத்தின் இருட்கொடிகள் படரத்தொடங்கவில்லை. அவர்களது அறிதல் என்பதே விளையாட்டும் வியப்பும் மட்டுமே கொண்ட ஒரு விஷயம். ஆனால் அதற்கு புலன்கள் விரியத் திறந்திருக்க வேண்டும். ஒரு பையன் சொல்கிறான் ‘கொட்டு சத்தமே..உள்ளே வா உள்ளே வா’ என்று. அவ்விடத்துக்குத் திரும்புவதற்கான வேட்கை தேவதச்சனின் மையச்செய்திகளில் ஒன்று. இத்தகைய கவித்துவ அணுகுமுறை இயல்பாகவே அவரை சிறுவர்களைப் பற்றி எழுதத்தூண்டுகிறது. ஏனெனில் அவர்களது அணுகுமுறைதான் அவரது அணுகுமுறையும் கூட. அவர் அடிக்கடி சொல்லப்பிரியப்படுவதைப் போல அவர் இன்னும் பதினாறாவது வயதைத் தாண்டவில்லை.
நான் தேவதச்சன் குறித்த கட்டுரையை சென்னையில் இருந்தபோது எழுதநேர்ந்தது. அதற்காக அவரது அனைத்து தொகுப்புகளையும் ஒட்டுமொத்தமாக வாசித்தேன். அதை வாசித்து கட்டுரையை முடித்தபிறகு திடுமென நான் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்ததைப் போல உணர்ந்தேன். இப்போது மீண்டும் வாசிக்கையிலும் தோன்றுகிறது. தேவதச்சனின் கவிதை உலகில் ஒரு சிறுநகரத்தின் மனநிலைதான் குடிகொண்டுள்ளது. அங்கு பெருநகரத்தின் நெருக்கடியோ பதட்டமோ இல்லை. அங்கு காணக்கிடைக்கும் நிலபரப்பும் கூட சிறுநகரத்தை நினைவு படுத்துபவைதான். அந்த விதத்தில் அவர் தனது லொக்காலிட்டியில் வேர்கொண்டவர் என்று சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன். அங்கு பளபளப்பான கட்டடங்களோ இருள் முனகும் சந்துகளோ exotic ஆன இடங்களையோ பார்க்க முடிவதில்லை. லோயா தீவு போன்ற ஃபாண்டசிகளை உருவாக்கியிருக்கிறார் மற்றபடி அவரது கவிதைகளில் ஒரு சிறுநகரின் மனநிலையும் வானிலையுமே அதிகமாக சூழ்ந்துள்ளன (அதே நேரம் மிக அரிதாக கிராமிய சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. கடவுள் விடும் காற்றைப் போல..போன்ற அழகிய கவிதைகள்.) சொல்லப்போனால் இத்தகைய எடையற்ற கவிதைகளை இந்த சாவகாசமான தொனியில் சொல்வதற்கு சிறுநகரமோ அதன் அருகிலுள்ள புறநகரமோதான் பொருத்தமான கித்தானாக இருக்கும் என்று படுகிறது. ஆடுகளையும் மேகங்களையும் மேய்க்கும் இடையன் நிற்பதற்கு சில இடங்கள்தானே பொருத்தமானவையாக இருக்கும்.
தேவதச்சனின் பிரபலமான கவிதை ‘காற்றில் வாழ்வைப் போல்..’இதில் என்ன சொல்ல வருகிறார். .இலை நடனத்தை வாழ்வென்கிறாரா மொத்ததையும் இலை நடனமாக்கும் மரபில் எளிதாக முடிச்சிட முடியும் தானே.. பிடிக்குந்தோறும் நடனம் ஒளிந்துகொள்கிறது. உண்மைதான். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் அந்நடனத்தைப் பார்க்கமுடிகிறது கண்டு பிடிக்கத்தான் முடிவதில்லை. தேவதச்சனின் முக்கியமான கண்டுபிடிப்பானது எதையும் கண்டுபிடித்துவிட முடியாது என்பதுதான். எதையும் முழுதாக புரிந்து முடித்துவிட முடியாது என்பதுதான். முடிவில் புதிர்மையும் மர்மமும் எஞ்சியே தீரும். இது ஒரு வகையில் வருத்தமளிக்கக் கூடிய நிலை போல் காட்சி அளிக்கலாம். ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் தேவதச்சன் ஸ்டைலில் அணுகினால் இதுவே ஒரு பெரிய விடுதலையாகத் தோன்றக்கூடும். ஆகவேதான் அது அவரைத் துள்ளிக்குதிக்க வைக்கிறது ‘ஹே ஜாலி..எந்தக் கேள்விக்கும் விடை இல்லை’ என்று. பொதுவாக எல்லா மறைஞான கவிஞர்களும் இத்தகைய அறியமுடியாமைவாதிகளாக இருப்பதைக் காணலாம். ஆயினும் தேவதச்சனிடம் எஞ்சும் மர்மம் தெய்வீகமான புதிர்மை அன்று மாறாக அது ஒருவகை எலிமண்ட்ரியான மிஸ்ட்ரி. அதைத்தான் அவர் ‘நான் தின்னமுடியாத எச்சிற்பூமி’ என்கிறார் எனக் கருதுகிறேன்.
தினசரி என்ற வார்த்தையில் ஒருவித அலுப்பு தொனிக்கிறது. புளித்த வாடை அடிக்கிறது. அதற்கு நேரெதிரானது இவரது முழுத்தொகுப்பின் தலைப்பான ’மர்மநபர்’. இந்த நேரெதிரான தினசரி மற்றும் மர்மம் என்ற இவ்வார்த்தைகளை இணைப்பதுதான் தேவதச்சனின் ரசவாதம். அதுதான் அவரது தொழில் ரகசியம்.