நாம் எப்படி மீளப்போகிறோம்? – வெள்ளத்திலிருந்து வறட்சி வரை
தயாளன்

by olaichuvadi

 

முதலாளி என்ற படத்தில் “ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே” பாடல் காட்சியை யூ டியூப் வலைத்தளத்தில் பார்க்க நேர்ந்தது. அந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி ஒரு ஏரியின் மேலே நடந்து செல்வது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. காட்சியின் பின்னணியில் மலையின் முன் ஏரியில் நீர் ததும்பி இருக்கும் காட்சி இருந்தது. பின்பு அந்தக் காட்சி சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியில் எடுக்கப்பட்டதை அறிந்து கொண்டேன். தற்போது அந்த ஏரி முட்புதர்களால் மூடி கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

“கட்டோடு குழலாட” என்ற பாடலில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் செம்பரம்பக்கம் ஏரிக்கரையிலும், அதனைச் சுற்றியுள்ள கால்வாய்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக மலையம்பாக்கத்தில் வசித்துவரும் கி. நடராஜன் தெரிவித்தார். கருப்பு வெள்ளைப் படமான “பெரிய இடத்துப் பெண்” என்னும் இப்படத்தின் இக்குறிப்பிட்ட பாடல் காட்சி கோவூர் கால்வாயில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவூர் கால்வாய் முழுவதும் சாக்கடையாக அழிவின் விளிம்பில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கோவூர் கால்வாய் எப்படி இருந்தது என்பதற்கு “கட்டோடு குழாலாட” போன்ற ஒன்றிரண்டு பாடல் காட்சிகளே நம் கையில் எஞ்சியிருக்கும் ஆவணங்கள்.

இது போல் எத்தனையோ நீர் நிலைகள் நம் கண் முன்னே வேக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. 2015ம் ஆண்டு இறுதியில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய சென்னை வெள்ளத்தின் பின்புலத்தில் நின்று சற்று நிதானமாக சிந்தித்தால் இப்பேரிடரை ஏற்படுத்தியது இயற்கையா அல்லது நமது சமூகச் சூழலா? என்ற கேள்வி நிச்சயம் எழும்.

இன்று மிகப்பெரிய வணிகத் தலமாக கருதப்படும் சென்னை தியாகராய நகர் ஒரு காலத்தில் ஏரியின் மீது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் என்று சொன்னால் நம்புவது சற்று கடினம். சென்னையின் பிரதான பகுதியாக மேற்கு மாம்பலம் இருக்கிறது. அப்படியெனில் கிழக்கு மாம்பலம் என்ற பகுதி எங்கே இருக்கிறது? உண்மையில் கிழக்கு மாம்பலம் என்பது ஒரு ஏரி. புறநகர் ரயில் நிலையத்திலிருந்து அண்ணாசாலையின் கரையில் இருக்கும் ஆலையம்மன் கோவில் வரை பரந்து விரிந்திருந்தது மாம்பலம் குளம் அல்லது மாம்பலம் ஏரி. அது போலவே நுங்கம்பாக்கம் ஏரியில்தான் புகழ்பெற்ற கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. நீள ஏரி அல்லது லாங் டேங்க் என்று அழைக்கப்பட்ட இந்த இரட்டை ஏரிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன.

அண்ணாசாலையின் கரையில் இருக்கும் ஆலையம்மன் கோவிலின் கல்வெட்டில் ஏரி இருந்ததற்கான பழமரபுக்கதை சொல்லப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் தொடங்கி துரைசாமி சுரங்கப்பாதை வரை நீண்டு இருக்கும் ஏரிக்கரைச் சாலையே அழிக்கப்பட்டு ஏரியின் சாட்சியாய் நிற்கிறது. அது போலவே நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தை அடுத்த சாலை குளக்கரைச் சாலை என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. ஆற்காடு சாலையின் கரையில் அமைந்திருக்கும் ஏரிக்கரை அம்மன் கோவிலும் ஏரியின் சாட்சியே. பரந்து விரிந்திருந்த நுங்கம்பாக்கம் ஏரியின் மிச்சத்தின் மீதுதான் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இன்றும் வள்ளுவர் கோட்டத்தின் அருகில் இருக்கும்பகுதி லேக் ஏரியா என்றே அழைக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் அருகே இருந்த அல்லி குளம் வணிகவளாகமாக மாற்றப்பட்டது. மயிலாப்பூரிலும் பெரிய குளம் இருந்ததாகத் தரவுகள் இருக்கின்றன. சேத்துப்பட்டு ஸ்பர் டேங் ரோடு என்றழைக்கப்பட்ட சாலையும் கவட்டை ஏரி அல்லது ஸ்பர் ஏரியின் மிச்ச சொச்ச சாட்சியே. விருகம்பாக்கம் ஏரியும் அதனைச் சுற்றியும் இருந்த தாங்கல்களும், குட்டைகளும் 1980ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்திருக்கின்றன. தற்போது விருகம்பாக்கம் ஏரி வருவாய்த்துறையின் ஆவணங்களில் மட்டுமே இருக்கிறது. தற்போதைய சென்னையில் ஓரளவுக்கு மீதமிருக்கும் நீர்நிலைகள் சேத்துப்பட்டு ஏரி, வேளச்சேரி ஏரி, போரூர் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆகியன மட்டுமே.

இந்தப் பேரவலத்தின் பின்புலத்தில்தான் தமிழ் கூறும் நல்லுலகம் நீர்நிலைகளையும், தண்ணீரையும் பண்பாட்டின் கூறாக கருக் கொண்டிருந்தது என்பதனை நினைக்க வேண்டியிருக்கிறது. “தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே”, “நீரடித்து நீர் விலகாது”, “தவிச்ச வாய்க்குத் தண்ணி” போன்ற சொலவடைகள் தண்ணீரை எந்த அளவுக்கு முக்கியமாக தமிழக மக்கள் கருதினர் என்பதைச் சொல்கிறது. திருக்குறளில் “வான் சிறப்பு”என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் படைத்திருந்தார். துப்பார்க்குத் துப்பாய, நீரின்றி அமையாது உலகு, வானின்று வழங்கி வருதலால்தான், என்று மழை நீரையும், “தொட்டணைத்தூறும் மணற்கேணி, ஊருணி நீர் நிறைந்தற்றே போன்ற அடிகளின் மூலம் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார்.

தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதி, எனவே இங்கு நீரின் தேவையும் முக்கியத்துவமும் எண்ணிலடங்காதது. ஆரியர்கள் தங்கள் வழிபாட்டு முறைகளிலும், பண்பாட்டுக் கூறுகளிலும் நெருப்பை முன்னிலைப்படுத்தினர். ஆனால் தமிழர்கள் தண்ணீரை முன்னிலைப்படுத்தினர். குழந்தை பிறப்பு முதல், அவனது அத்தனை பரிணாம வளர்ச்சியிலும் நீர் பண்பாட்டின் உட்கூறாகவே விளங்கி வருகிறது. ஒரு பெண் பூப்பெய்து விட்டால் அவளுக்கு நன்நீராட்டு விழா எடுக்கும் வழக்கமும், புதிதாக திருமணம் ஆன பெண் முதன்முதலில் தன் கணவன் வீட்டுக்குச் செல்லும் போது, இடுப்பில் தண்ணீர் குடத்தை கொண்டு செல்லும் வழக்கமும், இறப்பின் போது நீர்மாலை செல்லும் வழக்கத்திலும், இறந்தவர்களின் சுடு சாம்பலை நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கத்திலும் தண்ணீர்  நமது பண்பாட்டின் தொடர்ச்சியான உட்கூறாகவே இருக்கிறது.  தண்ணீரை விற்கக்கூடாது என்பது தமிழர்களின் அறம் சார்ந்த பண்பாடு என்பதையே “சோறும் நீரும் விற்பனைக்கல்ல” என்னும் சொலவடை உணர்த்துகிறது.நீரை மாசுபடுத்துவதையோ, நீர் நிலைகளில் மல, ஜலம் கழிப்பதையோ பெரும் பாவமாகக் கருதும் உன்னதமான பண்பாடும் தமிழர்களுடையதே.

நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த தமிழர்கள் அவற்றை, இலஞ்சி, கேணி, கயம், கோட்டகம், கிணறு, ஓடை, மடு, வாவி, வட்டம், தடாகம், நளினி, பொய்கை, கிடங்கு, கால்வாய், வாய்க்கால், குளம், குட்டை, கண்மாய், ஏரி, தாங்கல், ஏந்தல், ஊற்று என்று அதன் வடிவங்களுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைத்தனர். தமிழகத்தில் சற்றேறக்குறைய 40,000  நீர் நிலைகள் இருந்தன என்று ஆவணங்கள் சொல்கின்றன. இதில் மிகப் பெரிய ஏரிகளான வீராணம் ஏரி,  செம்பரம்பாக்கம் ஏரி,  மதுராந்தகம் ஏரி,  மாமண்டூர் ஏரி, இராமநாதபுரம் பெரிய ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி போன்றவை கொள்ளளவிலும், நீர்ப்பிடிப்பிலும் மிகப் பெரியவை. காலத்தால் மிகப் பழம் ஏரிகளாக இவை இன்றும் உயிர்த்துடிப்போடு விளங்கி வருகின்றன. தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசம் என்பதால் நீரின் மகத்துவத்தை அறிந்த மன்னர்கள் மிகப் பெரும் நீர் நீலைகளை உருவாக்கினர். முக்கியமாக சோழர்கள் ஆட்சிக் காலத்திலும், பல்லவர்கள் ஆட்சிக் காலத்திலும் மிகப் பெரும் ஏரிகள் உருவாக்கப்பட்டன. பல்லவர்கள் ஆட்சி செய்த தொண்டை மண்டலத்தில் அதாவது இன்றைய திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் மிகப் பெரிய ஏரிகள் உருவாக்கப்பட்டன. எனவேதான், காஞ்சிபுரம் மாவட்டம் ஆயிரம் ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.

ஆர்தர் காட்டன் என்னும் பிரிட்டிஷ் பொறியாளர் கல்லணையின் கட்டுமானத்தைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போனார். புவி ஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட கல்லணையின் தொழில்நுட்பத்தையும் தமிழர்களின் நீர் மேலாண்மையும் புரிந்து கொண்ட அவர் ஆங்கிலேயே அரசுக்கு எழுதிய கடிதத்தில், “இந்தியாவில் ஏராளமான பாசன அமைப்புகள் உள்ளன. அதைக் கட்டிய உன்னதமான மக்களின் துணிச்சலையும் பொறியியல் திறனையும் அவை காட்டுகின்றன. நீர் மேலாண்மை குறித்து ஆங்கிலேயர்களான நமக்கு எதுவும் தெரியவில்லை என்று இந்தப் பாமர மக்கள் கேலி பேசினர். ஒரு வகையில் அது உண்மைதான், அந்த அளவுக்கு இம்மக்கள் நீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நாம் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

ஆங்கிலேயர்களை நாகரிகமான காட்டுமிராண்டிகள் என்றும், அவர்களுக்கு போரிட மட்டுமே தெரியும் என்றும், அவர்களுக்கு ஒரு நீர்நிலை பாசனத்தை கூட உருவாக்கவோ, அவற்றைப் பராமரிக்கவோ தெரியாது என்றும் சொல்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். கல்லணையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் முல்லைப் பெரியாறு அணையை பென்னி குயிக் கட்டினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்த செய்தி.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் நீர்நிலைகள் மீதான அக்கறை குறைய ஆரம்பித்தது. ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னரே தமிழர்கள் கட்டிக் காத்த நீர் மேலாண்மை பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தது. பள்ளமான இடங்களில் நீரைச் சேமித்து அதில் மிகும் நீரைச் சங்கிலித் தொடர் போல பல குளங்களுக்கும் நிரப்பி பின் மீண்டும் ஆற்றில் விடும் தமிழர்களின் நீர் மேலாண்மைக்குப் பதிலாக மிகப் பெரிய அணைகளைக் கட்டி நீரைத்தேக்கும் பிரம்மாண்டமான அணுகுமுறையை பிரிட்டிஷ் அரசு கடைப்பிடிக்க ஆரம்பித்தது. பொதுச் சொத்தாக இருந்த நீர்நிலைகள் அரசின் பொதுப்பணித்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் மாற்றப்பட்டன. ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் புறம்போக்கு நிலங்களாக வரையறை செய்யப்பட்டன. இது நீர் மேலாண்மையை சீரழித்ததில் மிக முக்கிய பங்கை வகித்தது.

தமிழர்கள் பாதுகாத்த நீர் மேலாண்மையின் மேன்மையைப் புரிந்து கொள்ள இயலாத ஆங்கிலேயர்கள் மிகப் பெரிய அணைகளை நிர்மாணிக்கத் தொடங்கினர். இதன்  காரணமாக மரபுவழி  நீர் மேலாண்மையில் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. மக்களின் சொத்தாக இருந்த நீர்நிலைகள் அரசின் கைகளுக்குச் சென்றவுடன் அவை ஆக்கிரமிப்புகளுக்கும், மாசுபடுத்தலுக்கும் ஆளாகத் தொடங்கின. 1960களுக்குப் பின் தொடங்கிய பசுமைப் புரட்சியும், வேளாண் தொழிலில் விசைப்பம்புகளின் அறிமுகமும் தண்ணீருக்கான தேவையை மிகக் கடுமையாக அதிகரித்தன. அதே சமயம் நீர் நிலைகள் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 40000 நீர் நிலைகளைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் தற்போது 12000 நீர் நிலைகளே மிஞ்சி இருக்கின்றன. தனியார் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அரசே நீர் நிலைகளை தனது தேவைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்தது. மதுரையில் கட்டப்பட்ட உயர்நீதிமன்றக் கட்டிடம், பேருந்து நிலையம். திருநெல்வேலி, நாகர்கோவிலில் கட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் ஆகியவை நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையே.

ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் என்றால் மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்கள் இன்னொரு புறம் நீர் நிலைகளைத் தாக்கத் தொடங்கின. தாமிரபரணியில் கழிவுகளைக் கலக்கும் காகிதத் தொழிற்சாலை தொடங்கி, நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் கட்டப்பட்ட ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள், பாலாற்றின் கரைகளில் கட்டப்பட்ட சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் என தமிழகமெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த வளர்ச்சியின் வன்முறை நீர் நிலைகள் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை சொல்லி மாளாது. இவ்வாறு பலமுனைகளில் தொடுக்கப்பட்ட தாக்குதல்களின் எதிர்விளைவாகவே கடந்த 2015 டிசம்பர் 1ம் தேதி சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகள். கூர்ந்து கவனித்தால் இது இயற்கை ஏற்படுத்திய பேரிடர் அல்ல மனிதர்களால், மனிதர்களுக்காக, மனிதர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட செயற்கைப் பேரிடர் என்பது புரியும்.

சென்னையைப் பொறுத்தவரை நான்கு ஆறுகள் பாய்கின்றன. ஆரணி, கொசற்றலை ஆறு, கூவம், அடையாறு ஆகியவை ஆகும். இவற்றில் ஆரணி ஆறு சென்னைக்கு வடக்கே ஆந்திர எல்லையில் கடலில் கலக்கிறது. இதன் பின் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கும் கொசற்றலை ஆறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே சென்னை நகரின் அத்தனை கழிவுகளும் கொட்டப்பட்டு சாக்கடையாக மாற்றப்பட்டிருக்கும் இந்த ஆறு எண்ணூர் கழிவெளியின் சூழலைத் தீர்மானிக்கிறது. கிட்டத்தட்ட 5 அனல் மின்நிலையங்கள் அதாவது, எண்ணூர் அனல் மின் நிலையம்1,2, வடசென்னை அனல் மின் நிலையம் 1,2, வல்லூர் அனல் மின் நிலையம் எண்ணூர் அனல் மின் நிலையம் 2, ஆகியவை போக புதியதாக கொசஸ்தலை ஆற்றின் கரையில் இருக்கும் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் 3ம் பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. இந்த அனல் மின் நிலையங்கள் தவிர மிக அபாயகரமான நச்சுப் பொருட்களை வெளியிடும் தொழிற்சாலைகள் குறிப்பாக கோத்தாரி அம்மோனியம், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உட்பட மோசமான சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் இங்கே உள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர் குடிப்பதற்கு பயன்படும் தகுதியை இழந்து விட்டது.

தொழிற்சாலைப் பெருக்கங்களால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலங்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் நீரின் பாதை தடைபட்டு விட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு அடுத்து சென்னையின் முக்கிய ஆறான கூவம்! கூவம் என்றால் சாக்கடை என்றே பெயர் நிலைத்து விட்டது. சென்னையில் உள்ள எல்லா நீர் நிலைகளும் பொதுவாக கூவம் என்றே அழைக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு சாக்கடை ஆறாக மாறிவிட்டது கூவம்.

கடந்த வெள்ளத்தில் கூவம் கரையோர மக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அடையாறு செம்பரம்பாக்கம் ஏரியில் துவங்கி சைதாப்பேட்டை வழியாக அடையாறு கழிமுகத்தில் கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்க ஏரியில் அதிகமாகத் திறக்கப்பட்ட தண்ணீரே சென்னைப் பெருவெள்ளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அடையாறு ஆற்றின் கரைகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களே நீரின் போக்கைத் தடுத்து நாசத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை. குறிப்பாக சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பகுதிகள் அடையாறு வடிநிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டையில் இருக்கும் பனகல் மாளிகை அடையாற்றின் கரையிலேயே கட்டப்பட்டுள்ளது.

ஆறுகளைத் தவிர குறிப்பிடத்தக்க நீர் வழிகளும் சென்னையில் உள்ளன. அவை, பக்கிங்காம் கால்வாய், ஒட்டேரி நல்லா கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வீராங்கல் ஓடை, கொடுங்கையூர் நீர்வழி, விருகம்பாக்கம் கால்வாய், ஹாடோஸ் சாலைக் கால்வாய், மாம்பலம் கழிவு நீர் கால்வாய்.  இவை முக்கியமாக நான்கு காரணங்களால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. அதிகரிக்கும் மக்கள் தொகைப் பெருக்கம், ஆக்கிரமிப்புகள், கழிவு நீர் கலப்பு,  நெகிழி குப்பைகள் மற்றும் இடிக்கும் கட்டிடங்களின் கல் மண் போன்ற குப்பைகள், ஆகியவை முக்கிய காரணிகளாக அமைகின்றன. இவற்றில் மிக முக்கியமான நீர் வழியான பக்கிங்காம்  கால்வாயின் அழிவு மிகப் பெரும் சோகம். 2004 சுனாமியின் போது சென்னையை பேரழிவிலிருந்து காப்பாற்றியது இந்த நீர்வழியே.

1878இல் பக்கிங்காம் கால்வாய் என்று  பெயரிடப்பட்ட இக்கால்வாய் கிட்டத்தட்ட 420 கிலோமீட்டர் நீளம் கொண்டது. தமிழகத்தில் 257 கிலோமீட்டரும், ஆந்திராவில் 163 கிலோமீட்டரும் செல்லும் இந்தக் கால்வாய் தமிழக எல்லைக்குள் அதுவும் குறிப்பாக சென்னை நகரத்தை கிழக்கு மேற்காகப் பிரிக்கிறது. மரக்காணம் அருகே துவங்கும் இக்கால்வாய் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளை வெட்டியும் ஒட்டியும் செல்கிறது. தற்போது தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளாலும் நகரமயமாக்கத்தாலும் மிக மோசமான நிலையில் உள்ளது. அகன்று விரிந்து இருந்த இக்கால்வாய் தற்போது சுருங்கி சாக்கடை போல் ஓடுகிறது. செயிண்ட் மேரி சாலை, அக்ராகாரம் சாலை அருகே கிட்டத்தட்ட 143 மீட்டர் நீளத்தில் ஓடிய இக்கால்வாய் தற்போது 38 மீட்டர் அளவில் சுருங்கி விட்டது. மேலும் பறக்கும் ரயில் திட்டத்தில் கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர் ஆகிய ரயில் நிலையங்கள் இக்கால்வாயின் மீதே கட்டப்பட்டுள்ளது என்பது, அரசு நீர் நிலைகள் மீது எவ்வளவு அக்கறையுடன் செயல்படுகிறது என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கும் உதாரணம்.

சென்னையின் மொத்தமுள்ள 55மில்லியன் லிட்டர் கழிவு நீரில் 60%க்கும் அதிகமான கழிவு நீர் இக்கால்வாயிலே விடப்படுகிறது. வடசென்னை அனல்மின் நிலையத்தின் கழிவு சாம்பலும் சுடு நீரும் இக்கால்வாயிலேயே விடப்படுகின்றன. இதுபோலவே ஒட்டேரி நல்லா கால்வாயும்,  மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கைவிடப்பட்டுள்ள பாடி, வில்லிவாக்கம் குளங்களில் துவங்கும் இக்கால்வாய் சென்னையில் கிழக்கு – மேற்காக சென்று புரசைவாக்கம் வழியாக பக்கிங்காம் கால்வாயோடு இணைகிறது. இந்த நீர்வழியும் மிக மோசமான சூழலியல் தாக்குதல்களுக்கு ஆட்பட்டு உள்ளது. தற்போது கைவிடப்பட்டுள்ள விருகம்பாக்கம் குளத்தில் துவங்கும் விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய்  நுங்கம்பாக்கம் அருகே கூவத்தில் இணைகிறது. குளத்தூர் மற்றும் மாதவரம் குளங்களில் துவங்கி கொடுங்கையூர் கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாயில் இணையும் கொடுங்கையூர் நீர்வழி குப்பைகளாலும் ஆக்ரமிப்புகளாலும் சீரழிக்கப்பட்டு வருகிறது.

ஆதம்பாக்கம் குளத்தில் துவங்கும் வீராங்கல் ஓடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கலக்கிறது. வியாசர்பாடி குளத்தில் துவங்கி தண்டையார் பேட்டை அருகே பக்கிங்காம் கால்வாயில் இணையும் கேப்டன் காட்டன் கால்வாய், வேளச்சேரி குளத்தில் துவங்கி, பள்ளிக்கரணையில் கலக்கும் வேளச்சேரி கால்வாயும் தங்களது இருப்பைத் தொலைத்து வருகின்றன. நீர்வழிகள் ஆறுகளைத் தவிர சென்னையின் மிக முக்கியமான நீர் நிலை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 1965இல் 5500 ஹெக்டேர் பரப்பளவு கொண்டிருந்த இந்த சதுப்பு நிலம் தற்போது வெறும் 600 ஹெக்டேர் பரப்பளவாக சுருங்கி விட்டது.

இந்த சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் நீர் ஒக்கியம் மடுவு கால்வாய் வழியாக ஒக்கியம் துரைப்பாக்கம் சதுப்பு நிலத்தின் அருகில் பக்கிங்காம் கால்வாயில் இணைகிறது. இந்த நிலவெளினை ஊடறுத்துதான் ராஜிவ்காந்தி தகவல் நுட்ப விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பெருங்குடி, சிறுசேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி மற்றும் தரமணி ஆகிய பகுதிகளில் 31 நீர் நிலைகளை இணைத்து நிலத்தடி நீருக்கான பாதுகாப்புக் கேடயமாகவும், வெள்ள வடிகால் பாதுகாப்புக் கேடயமாகவும் செயல்பட்டு வந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது மேலும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது போதாதென்று குப்பை கொட்டும் தளமாகவும் இது மாற்றப்பட்டிருக்கிறது.

337 வகையான பல்லுயிரிகளின் புகலிடமாகத் திகழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டுத் திணறிக் கொண்டிருக்கிறது. இவை தவிர சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம், போரூர் ஆகியவையும் சென்னையின் நீர் நிலைகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கின்றன. ஒரு காலத்தில் மிகப் பெரும் பாசன ஏரிகளாகத் திகழ்ந்த இந்த ஏரிகள் தற்போது பிரம்மாண்டமான குடிநீர்த் தொட்டிகளாக மாற்றப்பட்டுவிட்டன. இந்த நீர்நிலைகளை ஒரு புறம் அழித்துக் கொண்டே சென்னையில் இருந்து மிகத் தொலைவில் இருக்கும் வீராணம் ஏரி, கிருஷ்ணா ஆறு போன்றவற்றிலிருந்து குடிநீரைக் கொண்டு வரும் பிரம்மாண்டத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மீன் வளம் நிறைந்த செம்பரம்பாக்கம் ஏரி இன்று தன் வளம் குன்றி கிருஷ்ணா நதியில் இருக்கும் மீன்கள் மட்டுமே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

1996க்குப் பிறகு வெறித்தனமாகத் துவக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிற்சாலைகளும் சென்னை நீர் நிலைகளின் மீது தொடுத்திருக்கும் வன்முறையும் படுகொலைகளும் ஏராளம். ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், சோழிங்கநல்லூர் பொருளாதார மண்டலம், டைடல் பார்க், போன்றவை ஏற்படுத்தியிருக்கும் வரைமுறையற்ற குடியேற்றங்களும், கிராமங்களிலிருந்து சென்னைக்கு அதிவேகத்தில் குடியேறும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளின் சமூக மதிப்பும் நீர் மற்றும் நிலப்பயன்பாட்டில் இவர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களும் முக்கிய  நீர்நிலைகளின் இருப்பை கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

ஒருபுறம் எழுத்தாளர் நக்கீரன் குறிப்பிடுவது போல் மறைநீர் என்ற போர்வையில் நீரைச் சூறையாடும் கார், டயர் உற்பத்தி நிறுவனங்கள் இன்னொரு புறம் நீர் நிலைகளை கடுமையாக ஆக்கிரமிப்பதோடு தங்கள் கழிவுகளையும் ஆறுகளிலேயே கொட்டுகின்றன.  தற்போது திட்டமிடப்படாமல் கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் கழிவு நீர் கால்வாய்க்குக் கீழே சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிட்டத்தட்ட கடல் மட்ட உயரத்தில் இருக்கும் சென்னைப் பகுதியில் பூமிக்குக் கீழே அதுவும் கூவம் போன்ற ஆறுகளுக்கு அருகில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை ஏற்படுத்த இருக்கும் விளைவுகள் கவலைதரத்தக்கது. சென்னை வெள்ளத்தின் எதிர் விளைவுகளாக ஆற்றங்கரைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற போர்வையில் குடிசைப் பகுதிகள் நகருக்கு வெளியே தூக்கியெறியப்படுகின்றன. தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்து 50கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்தி அடிக்கப்படும் இம்மக்கள் மேலும் மேலும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

சென்னை போன்ற நெய்தல் நிலப்பகுதியை மனிதர்களாகிய நாம் வளர்ச்சி என்ற பெயரால் சூழலியல் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டே, நீர் நிலைகளை குத்திக் குதறிக் கொண்டிருக்கிறோம். சிறு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, கல்லில் இடித்து விட்டால் அம்மாவிடம் வந்து அழுது கொண்டே அந்தக் கல் இடித்து விட்டது என்று அழும். அது போலவே நாம் நீர் நிலைகளை அழித்து பேரிடர்களை ஏற்படுத்தி விட்டு மழை பேரிடராக வந்து விட்டது என்று புலம்புகிறோம். உண்மையில் இயற்கை நம் மீது கருணை பொழிந்து இருக்கிறது. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாத சுயநலமிக்க பேராசை பிடித்த மனித சமூகமாக நாம் இயற்கையிலிருந்து விலகி காட்டுமிராண்டிகளாக மாறிவிட்டோம். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரும் இயற்கையை சீரழிப்பதில்லை. எனவே நாம் இயற்கையை கண்டடைவதை நம்மிலிருந்து தொடங்குவோம்.

 

நன்றி

தினமலர் நாளிதழ்

சென்னை நீர்வழி 2010 கருத்தரங்க ஆவணம்

மறைநீர், எழுத்தாளர் நக்கீரன்

தமிழகம்… தண்ணீர்… தாகம் தீருமா?

முனைவர் பழ. கோமதிநாயகம்

விக்கிபீடியா

பிற படைப்புகள்

Leave a Comment