1
“What good will it be for a man if he gains the whole world, yet forfeits his soul?”
– மேத்யூ, 16:26
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கைவசமாயிருக்கும் விருப்புகளையும் வெறுப்புகளையும் வகையறுக்கும் விதத்திலேயே தொன்மக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. அதனாலேயே அவற்றிற்கு வயதாவதில்லை. அவை காலத்தால் பழையதாகி தாழக்குதியிடுவதில்லை. என்றும் புதியவை போலிருக்கின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்திப் போகின்றன. எல்லோருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிப்பதைப் போன்று உயிரோடிருக்கின்ற அனைவருக்கும் ஆகாயத்தைக் காட்டுகின்றன. அதில் கடந்துசெல்கிற பறவையின் செய்தியை எல்லோரிடமும் பாகுபாடின்றிக் கொண்டு சேர்க்கின்றன. நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்குமான பிரயாசைகளை நித்யகாலமாக அறியச் செய்கின்றன. நீதிக்கும் அக்கிரமத்துக்கும் இடையேயான சமரில் எழும் பலிபீடங்களை உற்று நோக்குகின்றன. மழுங்கி மறைந்திருக்கும் பொய் வேடங்களில் இடறுவதே அவற்றின் நோக்கமாய் இருக்கின்றது. ஏனெனில் மனித மனங்கள் பைத்தியம் கொண்டிருக்கின்றன. அவர்கள் செத்துப் போனவர்களிடம் சேர்கிறவரை தத்தம் மதிகேட்டின் மிகுதியினால் அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்வார்கள். காரிருளில் பிரகாசத்தைத் தேடி அலைவுறுவார்கள். வெளிச்சப் பொட்டில் மையிடுவார்கள்.
அத்தகைய மனங்கள் இருக்கின்ற வரை சில தொன்மங்களுக்கு அழிவே இல்லை. அவை மீண்டும் மீண்டும் புத்துருவாக்கம் செய்யப்படும். காலத்தின் தேவைக்கேற்ப வளைந்துகொடுத்து தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும். கலையின் நவீனப் போக்குகளுக்கு ஒப்புக்கொடுத்து புதிய பரிமாணங்களைப் பெறும். ஜெர்மனியில் தோன்றி உலகெங்கும் பாதிப்பைச் செலுத்திய ‘ஃபௌஸ்ட்’ (Faust) தொன்மமானது அத்தகைய சமகால முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு வகையான கலைஞர்களை இன்றைக்கும் தன்பால் ஈர்த்துக்கொண்டிருப்பதால் அழிவற்றது. நிகரில்லாதது. மேற்கூறப்பட்டிருக்கும் மேத்யூவின் வசனமே இக்கதையின் மையக்கரு எனலாம். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் மருத்துவர் ஃபௌஸ்ட்டின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. மருத்துவனாகவும் உடற்கூராய்வாளனாகவும் இரசவாதியாகவும் மந்திரவாதியாகவும் அல்லலுற்று அலைந்த பல்கலை வித்தகன். அந்தத் தொன்மத்தை எடுத்தாண்டு எழுதப்பட்டிருக்கும் சில புனைவுகளையும் எடுக்கப்பட்டிருக்கும் சில திரைப்படங்களையும் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன் அவனது கதையைச் சுருக்கமாக எழுதிவிடுகிறேன்.
தற்சமயம் கிழவனாகிவிட்ட ஃபௌஸ்ட்டை மயக்கி அவனைத் தீங்கிழைக்கச் செய்ய முடியும் என்று கடவுளிடம் சாத்தான் சவால் விடுகிறான். ஃபௌஸ்ட்டோ, இன்னமும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்க, வாழ்க்கை தீர்ந்துகொண்டிருக்கிறதே எனும் கவலையில் முடங்கிக்கிடப்பவன். நிராசைகள் சூழ்ந்து நிர்க்கதியும் வெறுமையும் ஆட்டுவிக்கிற காலம். மேலும், அவன் இப்போது தனிமையில் இருக்கிறான். பிணங்களுக்கும் புத்தகங்களுக்கும் நடுவே அவனது அறிவின் மறுப்புகளும் யதார்த்தத்தின் முரண்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. மௌனம் உண்டாக்குகிற கசப்பை விழுங்கிச் செரிக்கும்போதெல்லாம் உள்ளுக்குள் எரிகிற நெருப்பை ஒருகணமும் ஆற்றுப்படுத்த இயலவில்லை. சகலமும் பறிபோய்க்கொண்டிருக்கிறதே என சர்வகாலமும் மனம் அடித்துக்கொள்கிறது. அவன் நல்லவன்தான். ஆனால், அவனது ஆன்ம பலத்தின் ஒளி குன்றிக்கொண்டிருக்கிறது. சரிகளுக்கும் தவறுகளுக்குமான இடைவெளி குறுகிக்கொண்டிருக்கிறது.
பலமுள்ளவற்றின் உறுதி குலையும்போது அவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் விபரீதமானவை. மலைப்பாறை உருண்டு வீழ்கையில் மலர்க்கொத்துகளின் நசிவைப் பற்றி யாருக்குமே அக்கறை இருக்க முடியாதே! எதையாவது கண்டெடுத்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஃபௌஸ்ட் வந்துவிட்டான். தர்க்கங்களின் மேலிருந்த அவனது ஆர்வம் வடிந்துவிட்டது. தீர்வுகள் நாசமாகப் போகட்டும். தான் நிலையழிந்து கொண்டிருக்கையில் உலகம் எக்கேடு கெட்டால்தான் என்ன? அவன் வேண்டுவது ஓர் அற்புதம். அவனது ஆசைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு. அப்போதுதான் அவனிடத்து சாத்தான் வந்து சேர்கிறான். அவனுடைய இளமையைத் திருப்பி அளிக்கிறான். உலகியல் இன்பங்களைக் கைக்காட்டுகிறான். அவற்றிற்கு ஈடாக, ஃபௌஸ்ட்டின் ஆன்மாவைக் கேட்கிறான்.
ஃபௌஸ்ட் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயற்றப்பட்டிருக்கும் படைப்புகளின் வரிசையை எடுத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. நாடகம், கவிதை, செவ்வியல் இசை, ஓவியம், புனைவு என அனைத்து வகையான வெளிப்பாட்டு முறைமைகளிலும் காலங்காலமாக ஃபௌஸ்ட்டின் ஆதிக்கம் தொடர்ந்தவண்ணம் இருந்திருக்கிறது. வாக்னரும் (Faust Overture) பீத்தோவனும் (Aus Goethes Faust) ஃபௌஸ்ட்டுக்குப் பண் அமைத்திருக்கிறார்கள். பைரனும் (Manfred) கெரொல் ஆன் டஃப்பியும் (Mrs.Faust) கவிதை எழுதியிருக்கிறார்கள். A Scene from Faust என்ற பெயரில் அலெக்ஸ்சாண்டர் புஷ்கினின் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவான் துர்கனேவ் (Faust), மிக்கேல் புல்ககோவ் (The Master and Margarita), க்ளாஸ் மன் (Mephisto), தாமஸ் மன் (Doktor Faustus), ஆஸ்கர் வைல்ட் (The Picture of Dorian Gray), ஹாருகி முரகாமி (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) என நாம் மதிக்கும் நவீனப் படைப்பாளிகள் பலரும் ஃபௌஸ்ட்டினால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
The Strange case of Dr.Jekyll and Mr.Hyde போன்ற ஆக்கங்கள் பலவும் ஃபௌஸ்ட்டையும் சாத்தானையும் பிரதியெடுத்தும் முன்மாதிரியாகக் கொண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டவையே. திரைப்படங்கள் எடுக்க ஆரம்பிக்கப்பட்ட தொடக்க காலத்திலேயே ஃபௌஸ்ட் படம் வந்துவிட்டது (F.W.Murnau, 1926). இன்றுவரை இருபதுக்கும் மேற்பட்ட ஃபௌஸ்ட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சித்திரக் கதைகளிலும் (Ghost Rider) அனிமேஷன் படங்களிலும் (Sebastian Faust, Felix Faust) மாங்கா காமிக்ஸ்களிலும் (Osamu Tezuka’s Faust) கூட ஃபௌஸ்ட்டின் அல்லாட்டதைக் காண முடிகிறது. அமெரிக்கக் கலாச்சாரத்தின் பகுதியாகவே மாறிவிட்டிருக்கும் The Simpsons தொடரின் ‘The Bart Sells His Soul’ எனும் அத்தியாயத்தில் ஃபௌஸ்ட் பகடி செய்யப்பட்டிருக்கிறான். ஆக, கலையின் புதுப்புது சாத்தியங்களை வரலாறு கண்டடையும் போதெல்லாம் அதில் ஃபௌஸ்ட்டின் இடம் மறுக்கப்பட முடியாததாகவே இருந்திருக்கிறது. இவ்வனைத்திலும் தலையாயது என கதேயின் ஃபௌஸ்ட்டைச் சொல்லலாம்.
2
கிறிஸ்டோஃபர் மர்லோவின் ‘Doctor Faustus’ நாடகத்தை முன்மாதிரியாகக் கொண்டே தனது ஃபௌஸ்ட் காவியத்தை எழுதத்தொடங்கினார் கதே (Goethe). கவிதை வடிவில் இயற்றப்பட்டிருக்கும் நாடகம். இரண்டு பாகங்களைக் கொண்டது. ஜெர்மன் கலையின் மணிமகுடமாகக் கருதப்படும் பேரிலக்கியம். தனது வாழ்நாளின் இறுதிக்கணம் வரை இதன் வரைவை கதே செப்பனிட்டுக்கொண்டிருந்தார். அப்போதும் அவருக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை (ஃபௌஸ்ட்டைப் போலவே!). அதனால், இந்நூலின் இரண்டாம் பாகம் அவரது இறப்புக்குப் பிறகே வெளியானது. நாட்டுப்புறக் கதையாகவும் பொம்மை நாடகமாகவும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த கதைக்கருவிற்கு கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் வடிவத்தை அளித்து, மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் ஒப்பற்ற நவீனக் கூறுகளை அதனுடன் இணைத்து, அதைச் செவ்வியல்தன்மையுடையதாக அவர் உருமாற்றுகிறார். கதேயின் ஃபௌஸ்ட், அறிவுத்தேட்டம் உள்ளவனாக இருக்கிறான். கிறித்தவ மரபிலும் தத்துவத்திலும் ஆழ்ந்த தேர்ச்சி உடையவன். நாட்டுப்புறக் கதையில் பயின்று வருவதைப் போல மருத்துவம் கற்றவனும் கூட. பிறரது நோயைக் கண்டறிந்து குணப்படுத்திவிட்டு தனக்கான நேரத்தில் வாழ்வுக்கான மீட்பைப் பரிசோதிக்கிறவன். மரணம் நெருங்கிக்கொண்டிருப்பதை அறிந்துவிட்ட அவனது மனத்தின் ஒடுக்கத்தில் எந்நேரமும் பயம் வீற்றிருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றின கனவுகளை முதுமை தடுத்தாட்கொண்டு விட்டது. கடந்து வந்த பாதையை எண்ணி பெருமூச்செறிவதைத் தவிர இனி வேறு வழியில்லை.
மனிதர்தம் வாழ்வுக்கான அர்த்தத்தைத் தேடி அலைந்தவன். தன் உயிராற்றல் மொத்தத்தையும் அதற்காகவே அர்ப்பணித்தவன். அறிவின் மீதான அவனது தீவிர பற்றும் மூர்க்கமும் அதனிலிருந்து கூர்கொண்டவை. ஆனால், எல்லோருக்கும் நிகழ்வதுதான் இறுதியில் ஃபௌஸ்ட்டுக்கும் நேர்கிறது. வாழ்க்கைக்கு அப்பால் இருப்பதை அறிய முயன்றவன் என்பதால் வாழ்வு அவனைத் தடவிக்கொடுப்பதில்லை. அவனுக்கு சலுகைகள் தருவதில்லை. அசோகமித்திரனின் சொற்களில் சொல்வதானால், தேடத் தேட நழுவிக்கொண்டேயிருந்த அர்த்தத்தின் பிடிகிடைக்காமல் அவனது நிம்மதி குலைகிறது. நிறைவின்மையுடன் சமாதானம் செய்துகொள்ள அவனது அகங்காரம் இடங்கொடுப்பதில்லை. அவனுக்கு ஆத்திரமாக இருக்கிறது. நூறாண்டுகள் போதவில்லையே என வருந்துகிறான். இன்னும் சிலகாலம் வாழ முடிந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறான். அவ்வாறு ஆயுளை நீட்டிக்க முடிந்தால், தன் அறிவைக்கொண்டு மனிதன் அடையக்கூடிய உச்சங்களைத் தொட்டுவிட முடியுமே என பேராசைப்படுகிறான்.
விவிலியத்தைப் பொருத்தமட்டில் ஏழு கொடிய பாவங்களுள் கர்வச்செருக்கும் ஒன்று. அதன்பொருட்டு சாத்தான் கீழிறங்கி வருகிறான். ஃபௌஸ்ட்டுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்கிறான். அவனுக்கு இருபத்து நான்காண்டுகள் இளமையையும் லௌகீக இன்பங்களை அடைவதற்குண்டான முற்றதிகாரத்தையும் அளிக்கிறான். இந்த இளமைக்காலம் முழுவதும் அவனது பணியாளாக சாத்தான் சேவகம் புரிவான். ஒப்பந்த காலத்தின் முடிவில் ஃபௌஸ்ட்டின் ஆன்மா சாத்தானுக்குச் சொந்தம்.
அறிதலின் துயரத்தைக் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஃபௌஸ்ட்டின் சிக்கல்கள் அத்தனையும் அவனது அறிதலில் இருந்தே தொடங்குகின்றன. அவனது கட்டுப்பாடான ஒழுங்குகளும் களங்கமின்மையை இழந்துவிட்ட முதிர்ச்சியுமே அவனுக்குப் பாரமாகின்றன. திட்டவட்டமான எந்த ஒழுங்கின் மீதும் வெகுவிரைவில் பாசி படிந்துவிடுகிறது. மீறலையே இயல்பாகக் கொண்ட நுட்பமான மனமானது அந்த உறுதியான கட்டமைப்பின் பலவீனங்களை எப்போதும் கண்டுகொள்ளும். அதன்பிறகு அத்தகைய பூஞ்சையான ஒழுங்குகளுடன் இசைந்து போவதென்பது அறிஞர்களால் இயலாத காரியம். அதே சமயத்தில், தன் மனம் வேண்டுவது இதுவல்ல இதுவல்ல என ஒவ்வொன்றாக விலக்குந்தோறும் அந்த மனத்தில் தோன்றுகிற இழப்புணர்ச்சி விசித்திரமானது. இவற்றுடன் தன்னிரக்கமும் கலைப்பித்தும் தத்துவ நாட்டமும் கூட்டாக இணைந்து துடிப்பு கொள்கையில் அவர்தம் நெஞ்சத்து நீர்மை சலசலக்கிறது. அழியாத ஒன்றைத் தேடித் திரிந்து சஞ்சலமுறுகிறது. சீர்மைக்கான இலட்சியம் பேருருக் கொள்கிறது. நெடுநாள் அடைபட்டுக் கிடக்கிற போதம் திடீரென வெடித்துப் பிரவாகமெடுக்கும்போது உண்டாகிற வேட்கை சாதாரணமானதல்ல. அதன்பிறகு, நாம் காண நேர்வதெல்லாம் அளப்பரிய ஆற்றலின் ஊற்றுமுகம். கட்டற்று திமிறிப் பாய்வதொன்றே அதன் இலக்கு.
இக்காப்பியத்தின் முதற்காட்சியே கடவுளுக்கும் சாத்தனுக்குமான விவாதமாகத்தான் தொடங்குகிறது. அவர்கள் வானிலிருந்து பூமியை நோக்கும்போது, ஃபௌஸ்ட் விவிலியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறான். ‘In the beginning was the word‘ என்பதை மந்திரம் போல திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்க்கிறான். அவனுக்கு அவ்வாக்கியம் திருப்தியளிக்கவில்லை. ‘சொல்’ என்பதற்குப் பதிலாக அதிகாரத்தையும் ஆசையையும் பொருத்திப் பார்த்து, ஏமாற்றமடைந்து, இறுதியாக, ‘In the beginning was the deed‘ என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறான். ஆம், செயல்! ஃபௌஸ்ட்டின் வாழ்வினுடைய அர்த்தம் செயல்புரிவதில்தான் உள்ளது. இலக்கை அடைவதைப் பற்றி எண்ணிப்பார்க்காத செயல். உள்ளுக்குள் பொதிந்திருக்கும் ஒவ்வோர் அணுவிலும் விகசிக்கும் செயலூக்கம். அந்தக் கட்டற்ற ஆற்றலைக்கொண்டு அவன் ஈடுபட வேண்டிய காரியங்களில்தான் அவனது முழுமை செழுமையுறும். அதை அவன் அறிந்துகொள்வதற்குக் கொடுத்த விலைதான் எத்தனை எத்தனை! அவன் செய்த பாவங்கள்தான் எத்தனை எத்தனை!
அத்தகைய செயலூக்கம் பொங்கிப் பெருக்கெடுக்கும் போதெல்லாம் ஃபௌஸ்ட் பின்வாங்குகிறான். அவனுக்கு இடைஞ்சலாக இருப்பது அவனுடைய மிகுதியான அறிவுத்தேடல்தான். அது செயலை எள்ளலுடன் அணுகச் செய்கிறது. இந்த வாழ்வில் இட்டு நிரப்பிக்கொள்வது எதுவும் நிலையற்றது எனும் அச்சம் அவனைத் தீவிரமாக அலைக்கழிக்கிறது. நாம் தேர்ந்தெடுத்த பாதையின் முடிவில்தான் அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியுமெனில் அதுவரை வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்வும் வீண்தானா? அதுகாறும் அனுபவித்த அத்தனை துயரமும் தேடலும் ஒரே ஒரு உச்ச கணத்திற்காகவா? அதை அடையும் முன்பே இறந்தவர்களின் ஆன்ம ஓலம் எத்தனை வீரியமிக்கது? எதன் ஒன்றிற்குப் பிறகும் வேறொன்று நிகழக் காத்திருக்கிறது எனும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தினத்தையும் நீட்டித்து வைக்கிறோம். அதெல்லாம் அற்ப மாயை எனத் தெளிந்துவிட்டாலும் எத்தனை பேர் உடனடியாக மரணத்தைச் சந்திக்கத் தயாராவார்கள்? அபாயகரமான வழிகளில் எதை எதையோ முயன்று பார்த்தும் இந்த ஊசிமுனையளவு விஷத்தின் உறுத்தலை ஃபௌஸ்ட்டினால் பிடுங்கி எறியவே முடியவில்லை. அதன் விளைவாக அவனது உறுதி குலைகிறது. எண்ணங்களில் சிடுக்கேறுகிறது. ஊரையும் உற்றவர்களையும் பகைத்துக்கொண்டு பிழைத்துவிடலாம். வாழ்வைப் பகைத்துக்கொண்டு விட்ட பிறகு விமோசனம் ஏது? இந்த வாழ்வில் அவன் எதிர்பார்த்ததுதான் என்ன?
நமது வாழ்வுக்கான அர்த்தத்தையும் சிக்கல்களுக்கான தீர்வையும் நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்திருப்பதென்பது வாடிக்கையான நிகழ்வு. அர்த்தத்தை ஏன் தேடுகிறோம் எனில் நாம் முக்கியமானவர்கள் என நம்புகிறோம் என்பதனால்தான். ஆனால், இந்த உலகமும் அதன் அர்த்தமும் பிரம்மாண்டமான விஷயங்கள். அவற்றின் காலவெளியின் முன்பு உயிரினங்களின் வாழ்க்கையானது மிகச் சிறியது. குறுகிய காலத்தை கையிருப்பில் வைத்துக்கொண்டு பிரம்மாண்டங்களுக்கான தீர்வை எட்ட முடியாது. அதனால்தான் வரலாறு உருவானது. மனிதர்களது தேடல்களும் அறிதல்களும் தொகுக்கப்பட்டு அறிவாகவும் பண்பாடாகவும் காலந்தோறும் கைமாற்றப்படுகிறது. எனவே, நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நூறாண்டுகளுக்குள் வாழ்வின் அர்த்தத்தை கண்டடைந்துவிட முடியும் எனப் பகற்கனவு காண்பதென்பது தீராத மன உளைச்சல்களுக்கும் வெறுமைக்குமே இட்டுச் செல்லும். நம்மால் இயன்றதெல்லாம் அந்த மாபெரும் கால இயந்திரத்தில் ஒரு சிறிய பற்சக்கரத்தைச் சேர்ப்பது மட்டுமே. இவ்வுலகம் அழியும்போது, அதன் பிரம்மாண்டம் சரிந்து வீழும்போது, வாழ்வின் அர்த்தத்தை மனித இனம் கண்டுணருமோ என்னவோ?
அதைக் காண நாம் உயிருடன் இருக்கப்போவதில்லை. ஆனால், அந்தக் கடைசி மனிதனின் மனம் பொங்கும்போது நான் உடனிருப்பேன். அந்தக் கணத்தில் அவன் சிலிர்க்கும்போது எனக்கும் மயிர்க்கூச்செறியும். அதற்காகவே இந்த வாழ்வு. இதை உணர்ந்துகொள்ளாததே ஃபௌஸ்ட்டின் துரதிர்ஷ்டம் என நினைக்கிறேன். அவன் தன்னை முன்னிட்டு உலகத்தைக் காண்பவன். உலகின் போக்கை மாற்றிவிட முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறவன். வரலாற்றின் ஆற்றொழுக்கில் தன்னை ஒரு சாதாரண கண்ணியாக அவனால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இதை மேற்குலகின் தத்துவ விசாரங்களில் இருந்தே அவன் பெற்றுக்கொள்கிறான். ரெனே டெகார்ட்டே (René Descartes) தொடங்கி இமானுவல் காண்ட் (Immanuel Kant) வரை அனைவருமே ‘நான்’ என்பதை முன்னிறுத்தியவர்கள். இந்த ‘நான்’-ஐ விட்டொழித்திருந்தால் மட்டுமே ஃபௌஸ்ட்டுக்கு மீட்சி சாத்தியமாகியிருக்கும்.
கதேவுக்கு ‘Superhuman’ (தெய்வ மனிதன்?) என்கிற கருத்தாக்கத்தின் மீது அதீத பற்றிருந்திருப்பதை அறிய முடிகிறது. தனது சாயலிலேயே ஃபௌஸ்ட் கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். ஏனெனில், இதன் மூலக்கதையிலும் கிறிஸ்டோஃபர் மர்லோவின் துன்பியல் நாடகத்திலும் கடவுளின் விசுவாசியாகவே ஃபௌஸ்ட் வலம்வருகிறான். அவற்றில் கிறித்தவ மதத்தின் தாக்கமும் அதை அடியொற்றியே கதையை நகர்த்தவேண்டிய கட்டாயமும் தென்படுகிறது. ஆனால், கதேயின் ஃபௌஸ்ட்டோ, தன்னைத் தவிர வேறெவருக்கும் அடிமையாக இருக்க விரும்பாதவன். கதேயின் காப்பியத்தில் மதம் என்பது கதைச்சூழலுக்கான பின்னணியை வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது. அதனுடன் விவாதித்தும் முரண்பட்டும் தன்போக்கில் கதை வளர்கிறது. கதையின் முடிவில் மட்டுமே அது விவிலிய தொன்மத்துடன் மீண்டும் இணைந்துகொள்கிறது. உதாரணமாக, க்ரெச்சன் (Gretchen) எனப்படும் மார்கரெட் (Margarette) பரிசுத்த ஆன்மாவாக இருக்கிறாள். அவள் மீது காதல்கொண்டு, அவளை மயக்கி கர்ப்பிணியாக்கிவிட்டு, சாத்தானின் சூழ்ச்சியால் அவளது அண்ணனைக் கொன்றுவிட்டு, ஃபௌஸ்ட் தலைமறைவாக நேரிடுகிறது. திருமணமாகாதவள் கர்ப்பவதியாகி விட்டதால் அக்கால வழக்கப்படி அவளைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்.
இறைவனுக்கு அஞ்சுகிறவளாகவும் ஊழியம் செய்கிறவளாகவும் அவள் இருக்கின்ற போதிலும் மனமறிந்து பாவம் செய்யாதவள் என்றாலும் அவளது பரிசுத்தம் அவளைக் காப்பாற்றுவதில்லை. அவள் இறந்தபிறகே சொர்க்கத்திற்குச் செல்கிறாள். நாட்டுப்புறக் கதையாதலால், இன்னும் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு, கதேயின் சௌகரியத்திற்கேற்ப வேறெப்படியும் முடித்திருக்க முடியாது என்பதாக இதைப் புரிந்துகொள்கிறேன். ஃபௌஸ்ட் மாதிரி தேடல் உடையவனாக இருந்தாலும் சரி, க்ரெச்சன் போல களங்கமற்றவளாக இருந்தாலும் சரி, இவ்வாழ்வின் பெருங்கருணைக்குட்பட்டே மனிதர்கள் இயங்க முடியும் என்பதைத்தான் கதே உணர்த்த விரும்புகிறாரா? நம்முடைய அசாத்திய நம்பிக்கைகள் அத்தனையும் இப்பிரபஞ்சத்தின் இரகசியங்கள் முன் துச்சமானதா? எதைத்தான் செய்வது? செய்யாமலிருப்பது?
3
1926ம் ஆண்டு வெளியான F.W.முர்னோவின் படத்தில் ஃபௌஸ்ட் காப்பியத்தின் முதல் பாகத்தை மட்டும் படமாக்க எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மூலநூலுக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலான காட்சிகளையே அமைத்திருக்கிறார்கள் எனலாம். ஃபௌஸ்ட்டும் சாத்தானும் புயல்காற்றை எதிர்த்து ஊருக்குள் பறந்து வருகிற காட்சியை இப்போது பார்க்கையிலும் வியப்பாக இருக்கிறது. அந்த ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டின் மீதும் அவர்களது பிரம்மாண்ட நிழலுரு படிந்து படிந்து மேலெழுவதை, ஒரு துர்சகுனமாக, திகிலூட்டும் விதத்தில் காட்டிவிடுகிறார்கள். ஃபௌஸ்ட்டுக்கும் க்ரெச்சனுக்கும் இடையேயான காதற்காட்சிகள் குழந்தை விளையாட்டு போல அமைக்கப்பட்டிருக்கின்றன. நாடக வடிவில் எடுபடக்கூடிய நகைச்சுவைப் பகுதிகள் மட்டும் படத்திற்குப் பொருத்தமாய் இருக்கவில்லை. படம் உருவாக்கப்பட்ட காலத்தைக் கணக்கில்கொண்டால் அவற்றையும் மன்னிக்கலாம். மற்றபடி, வலுவான காட்சிப்படிமங்கள் நிறைந்த படம்.
‘Faust bargain’ என்கிற சொற்றொடர் புகழ்வாய்ந்தது. அறத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுந்தோறும் ஏதோவொரு வகையில் நடைமுறை யதார்த்தங்களுடன் சமரசம் செய்துகொள்கிறோம் இல்லையா? ஒன்றை இழந்து மற்றொன்றைப் பெறுதல். அந்தந்த நேரத்து நியாயப்படி நம்மில் ஒரு பகுதியையோ மொத்தமாகவோ அடகுவைத்து, நமது மனசாட்சியை அல்லது ஆன்மாவை விட்டுக்கொடுத்து, நாம் நிறைவேற்றுகிற அத்தகைய காரியங்கள் அத்தனையுமே தீமையுடனான ஒப்பந்தமே! அரசியல், ஆன்மீகத்திலிருந்து அன்றாட குடும்ப விஷயங்கள் வரை சூழ்நிலைக்குத் தக்கவாறு எல்லோரும் எப்போதாவது விலைபோவதுதான். பெரிய பேரம் படிந்தால் இன்னும் பெரிய விலையைக் கொடுக்கத் தயாராகப் போகிறோம். கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளாமல் அப்படியென்ன பெரிய வாழ்க்கை வேண்டியிருக்கிறது? வளைய முடியாது என முறுக்கிக்கொண்டும் தலையைச் சிலுப்பிக்கொண்டும் திரிந்தவர்கள் எல்லாம் கோமாளிகளாக்கப்பட்டதன் கதை தெரியும்தானே? இந்தப் போக்குகள் குறித்து அறிந்திருந்தும் கண்டும் காணாததைப் போன்று வாழ்வதை விடவும் ஆபாசமான விஷயம் வேறுண்டா? காலப்போக்கில் பழகிவிட்டது என்றாலும் ஆன்மாவை அரிந்து கொடுப்பதே வெற்றிக்கான சூத்திரமாகக் கருதப்படுவதன் விநோதத்தைப் பற்றி என்றைக்காவது திகைப்படைந்ததுண்டா?
நீண்டகாலம் கழித்து, அங்ஙனம் திகைத்து, ஹெண்ட்ரிக் விழித்துக்கொள்கிறான். இஸ்த்வான் ஸாபோ (István Szabó) இயக்கிய ஹங்கேரியத் திரைப்படமான Mephisto-வின் கதாநாயகன். 1981ம் ஆண்டு வெளியான படம். க்ளாஸ் மன் (Klaus Mann)-னின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஹெண்ட்ரிக், ஒரு நாடக நடிகன். அரசியல் சார்பற்றவன். உறவுகள் மீது பிடிப்புகள் இல்லாதவன். தன்னலம் மிகுந்தவன். ஆனால், தன்னால் இயன்றதை பிறருக்குச் செய்கிறவன். கண்ணியமானவன். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் நடித்து பெரும்புகழ் அடைய வேண்டும் என்கிற விருப்புறுதி கொண்டவன். ஃபௌஸ்ட் நாடகத்தின் மெஃபிஸ்டோ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக விதந்தோதப்படுபவன். மெஃபிஸ்டோ என்பது சாத்தானின் பெயர். தன்னுடைய எல்லைக்குள் நின்று மனிதத்தன்மை பேணுகிறவனையும் இழுத்துப்போட்டு கபடத்தனங்களில் கூட்டு சேர்ந்துகொள்ள வைக்கிறது காலம். ஹெண்ட்ரிக்கின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக நாஜிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகிறது. அவனது நடிப்புத்திறனைப் பயன்படுத்தி, உலகின் பார்வையில் தங்களை கலாச்சாரக் காவலர்களாக முன்னிறுத்த வேண்டிய நிர்பந்தம் நாஜிக் கட்சியினருக்கு இருக்கிறது. மாற்றுக் கருத்துடையோர் அனைவரும் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகிற சமயத்தில், தனது இலக்கை நோக்கித் தடையின்றி முன்னேறிச் செல்லவேண்டிய கட்டாயம் ஹெண்ட்ரிக்கிற்கு உள்ளது. நான் உமி கொண்டு வருகிறேன், நீ அரிசி கொண்டு வா.
ஃபௌஸ்ட் தொன்மத்தை நவீனகால அரசியல் பின்னணியில் வைத்து மீளுருவாக்கம் செய்த வகையில் இத்திரைப்படம் முக்கியமானது. மெஃபிஸ்டோ பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருப்பவனை மெல்ல மெல்ல ஃபௌஸ்ட்டாக உருமாற்றுகிறார்கள். கதாபாத்திரங்கள் இடம்மாறுகின்றன. இதில் யார் சாத்தான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. நம்முடைய தேர்வுகளை யார் யாரோ நிர்ணயம் செய்கிறார்கள். நம்மை உலுக்கியெடுக்கிறார்கள். நாம் வெறும் கைப்பாவைகளாகிறோம். தப்பியோடவும் வழியில்லாது தவிக்கையில் நமது செருக்கிற்கு எந்த மதிப்புமில்லை என்றாகிவிடுகிறது. நமது திறன்களும் நாம் வளர்த்தெடுத்த ஆளுமையும் நொறுங்கிப் போகிறது. குரூரத்தின் காலடியில் சரணடைந்த பிறகு வாழ்வை வெறுமனே சகித்துக்கொள்ளப் பழகுகிறோம். விதி புன்முறுவலிக்கிறது. அற்பனே என்கிறது. நமது உத்வேகங்கள் தணிகின்றன. காலம் முன்னைவிட வேகமாகச் சுழல்கிறது.
மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது, அலெக்ஸ்சாண்டர் சொகுரோவ் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான ஃபௌஸ்ட் படத்தைத்தான் மிகச் சிறந்த தழுவல் என்பேன். தாமஸ் மன்னின் Doktor Faust நாவலையும் கதேயின் காப்பியத்தையும் அடிப்படையாகக் கொண்டது. தெய்வீகக் காரணிகளை முற்றிலுமாக புறமொதுக்கிவிட்டு ஃபௌஸ்ட்டின் வாதையையும் தத்தளிப்புகளையும் தனிமனிதனின் அகச்சிக்கல்களுடன் தொடர்புறுத்தி இருக்கிறார்கள். அதன்மூலம் அவனது குணாம்சத்திற்கு ஓர் உலகளாவிய பொதுத்தன்மையை வழங்க முடிந்திருக்கிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிச் சட்டகமும் டச்சு ஓவியத்தைப் போலுள்ளது. எந்நேரமும் நகர்தலில் இருக்கிற காமெரா, ஃபௌஸ்ட்டின் தடுமாற்றங்களின் போது மட்டும் உறைந்து நின்றுவிடுவதை கவனிக்க முடிகிறது. அந்தச் சமயங்களில் எல்லாம் அக்காட்சியின் ஒழுங்கு சிதைந்து (distorted image) கதாபாத்திரங்களின் முகங்கள் விகாரமடைகின்றன.
முந்தைய ஆக்கங்களைப் போல, இப்படத்தில் க்ரெச்சனை (Isolda Dychauk எனும் பேரழகி நடித்திருக்கிறார்) ஃபௌஸ்ட் கர்ப்பிணியாக்குவதில்லை. அவளை மயக்கமுறச் செய்தாலும் அவளை அடையும் முன்னமே அவனது குற்றவுணர்ச்சி முந்திக்கொண்டு விடுகிறது. அந்தப் பாவத்தைச் செய்யாவிட்டாலும் அவனுக்கு மீட்பு கிடைப்பதில்லை. மீண்டு வர முடியாத பாழ்வெளியில் சிக்கிக்கொள்கிறான். Man still must err, while he doth strive.
4
கீழைத்தேய தத்துவ மரபுடனும் அதன் மனப்பரப்பின் வீச்சுடனும் ஒப்பிடுகையில் ஃபௌஸ்ட், ஃபிராங்கன்ஸ்டெய்ன் போன்ற மேற்கின் தொல்கதைகள் அத்தனையுமே நன்மை X தீமை என்கிற இருமைக்குள் அடங்கிவிடுகின்றன. அதனால், அவற்றிலிருந்து விரித்தெடுக்கப்பட வேண்டிய சாத்தியங்களும் அவற்றின் நீட்சியாகத் தொடர்ந்து வருகின்ற நவீனப் படைப்புகளின் எல்லையும் குறைபட்டதாகவே இருக்கின்றது. அந்தக் குறுகிய வட்டத்திற்குள் நின்றபடி, பல்வேறு நிகழ்தகவுகளை ஆராய்ந்து பார்த்து, வெவ்வேறு வகையான ஆட்டங்களை விளையாடிப் பார்த்திருக்கிறார்களே ஒழிய, சிறிய அளவிலேனும் அவற்றின் பாதிப்பிலிருந்து துண்டித்துக்கொண்டு விலகியிருந்தால் அவை தொட்டிருக்கக்கூடிய உயரங்கள் வேறாக இருந்திருக்கும். மெஃபிஸ்டோ, டிராகுலா என எல்லாப் பேய்களும் ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அருவருப்பான தோற்றம் கொண்டவர்கள், வஞ்சகர்கள், நயமான ஆடைகளை உடுத்துபவர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள், சூதும் தந்திரமும் கொண்ட புத்திசாலிகள், கடவுளுக்கு எதிரான சூழ்ச்சிக்காரர்கள் என அவர்களது எந்தப் பேய்க்கதையிலும் இத்தகைய ஒற்றுமைகளைக் காண முடியும். அவை எல்லாமே தேவாலயத்திற்கும் சிலுவைக்கும் அஞ்சுகிறவை. விவிலியக் கூண்டில் அடைபட்டவை.
ஆனால், கீழை நாடுகளில் புழங்குகிற பேய்களைப் பாருங்கள். வேதாளத்தில் இருந்து யட்சி வரை நம் ஊரிலேயே எத்தனை விதமான பேய்கள் உலா வருகின்றன! நமது மரபைப் பொருத்தமட்டில் அவை தீமையின் உருவகங்கள் மட்டும் அல்ல. மனிதர்களைச் சீண்டிப் பார்க்கிற பேய்கள் இருக்கின்றன, துடுக்குத்தனமும் பரிகாசமும் கொண்ட விளையாட்டுப் பேய்கள், வழிகாட்டுகிற பேய்கள், இரத்த பலி கேட்கிற ஆவிகள், மனிதர்களின் உதவியைக் கோருகிற பேய்கள், இரக்க சுபாவமுள்ள ஆன்மாக்கள், இன்னும் எத்தனை எத்தனை! இங்கிருந்து மேற்கை நோக்கும்போது அவர்களது பிசாசுகள் சலிப்படையச் செய்கின்றன. மீண்டும் மீண்டும் ஒரே கதையை வாசிப்பது போன்ற உளமயக்கு ஏற்படுகின்றது. அது தொடர்பான புதிய ஆக்கங்களைத் தேடிச் செல்லும் ஆர்வம் மட்டுப்படுகிறது. அவர்களது பேய்கள் சாண்டா கிளாஸாக உருமாறி கிச்சுக்கிச்சு மூட்டுகிற தருணம் அது.