நீர் எழுத்து – நூல் பகுதிகள்
நக்கீரன்

by olaichuvadi

 

ஆறு என்பது…

பருவமழை தொடங்கினால் ஆற்றிலே நீரோட, நீரிலே மீனோட, காடர்களுக்கும் வாழ்வு ஓடும். மழை பெய்ததும் மண்ணிலிருந்து வெளிவரும் வரமீன், கட்டன் தவலா போன்ற மீன்களைப் பிடித்து நெருப்பில் வாட்டி வைத்துக் கொள்வர். அவை மூச்சுதிணறல், அம்மை போன்ற நோய்களுக்கு மருந்து. முழி, சூரா, பச்சிலவெட்டி, மலிஞ்சீல் போன்றவை கடும் மழைக்காலங்களில் ஏராளமாகக் கிடைக்கும் மீன்வகைகள். ஞெழு மழைக்காலத்துக்குப் பிந்திக் கிடைக்கும் பெரிய மீன்வகை. மீந்த மீன்களைக் கருவாடுகளாக்கிச் சேமிப்பர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி இனங்களுள் ஒன்றே காடர் இனம். இவர்களை ‘இந்தியாவிலேயே மிகப் பழமையான பழங்குடிகள்’ என்கிறார் பக்தவத்சல பாரதி. காடர்களுக்குக் காடுகளைப் போலவே ஆறுகளும் முதன்மையானது. வசிப்பதற்கு ஆற்றங்கரைகளையே தேர்ந்தெடுப்பர். ஆற்றில் நீர் குறைந்தாலோ, அற்றுப் போனாலோ அவர்களின் வாழ்வு சிரமம்தான். அவர்கள் நம்பி வாழ்ந்த ஆறுகளுள் சாலக்குடி ஆற்றில் மட்டும் ஆறு அணைகள் கட்டப்பட்டதால், தம் வாழிடங்களில் இருந்து பலமுறை அகற்றப்பட்டனர்.

மீன்பிடிப்பு காடர்களுக்குப் பிழைப்பல்ல; வாழ்வியல். ஆற்றில் நீர்ப் பெருகினால் உடனே புனைகளைக் கட்டி நீரோட்டம் வழியே குடும்பத்தோடு மீன்பிடிக்கச் செல்வர். ஏறக்குறைய 30 மீன்வகைகளைச் சார்ந்திருந்தாலும் உத்தல் மீன்பிடிப்பு அவர்களின் சிறப்பு முறை. மீன்கள் நீரோட்டத்தை எதிர்த்து மேல் நோக்கி வந்து, நீர்த் தாவரங்களின் மேல் தன் முட்டைகளைத் தோய்த்துக் குஞ்சுப் பொரிக்கும். தூயநீரும் தாதுக்களும் மீன்குஞ்சு வளர்ச்சிக்கு அவசியம். உத்தல் மீன்பிடிப்பில் காடர் இனப் பெண்கள் முழுமையாகப் பங்கு பெறுவர். சத்துமிகுந்த இம்மீன் காடர்களின் உடல்நலத்தை உறுதிசெய்தன.

இன்று உத்தல் மீன்கள் குறைந்துவிட்டன. செலவின்றிக் கிடைத்த இயற்கை ஊட்டச்சத்துக் குறைந்ததால் காடர்களின் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வரமீன், இட்டா ஆகியவை அறவே அற்றுவிட்டன. ஆற்றின் நீர்ப்போக்கை அணைகள் கட்டுப்படுத்தியதே மீன்கள் குறைந்ததற்குக் காரணம். அணையிலிருந்து நீருடன் வெளியான சேறும் சகதியும் மீன்களின் செவுள் உறைகளுக்குள் ஊடுருவி நிறைய மீன்களைக் கொல்கின்றன. கேரளப் பல்லுயிரிய மன்றத்தின் கூற்றுபடி ஆறுகள் தொடர்ந்து வறள்வதால் ஆற்று மீன் வகைகள் பல அழிவின் விளிம்பில் உள்ளன.

காவிரியிலும் இத்தகைய கதையுண்டு. மேட்டூர் அணையைத் திறந்த ஒருவாரத்தில் கடலில் இருந்து உள்ளக்கெண்டை மீன் இரவில் ஆற்றுப்போக்கை எதிர்த்து 30-35 கி.மீ. தொலைவு வரை நீந்தி வரும். வாளை மீன்களும் வரும். ஐப்பசி, கார்த்திகையில் சேல்கெண்டையும் சாணிக்கெண்டையும் ஆற்றில் ஏராளமாகப் புரளும். இன்று சாணிக்கெண்டையைக் காணோம். கடந்த 2016 ஐப்பசி மாதம் காவிரி வடிநில மாவட்டங்களில் ஆற்றில் நீர் ஓடாத ஐப்பசியாகப் பதிவானது. இதில் மீன்களை எங்கே தேடுவது?

கோடையில் ஆற்றுநீரில் குறைவான ஆழத்தில் நீந்திய உளுவை மீன்களை சட்டையைக் கழற்றி அமுக்கிப் பிடித்து வந்து வீட்டுக்கிணற்றில் விட்டு வளர்த்தது இன்று பழங்கதை. உளுவை மீன்களை இன்று வலைவீசித் தேடுகின்றனர். ஆற்றுநீருள் கரையொட்டி வெறும் கைகளாலேயே பொடி மீன்களை அள்ளலாம். கச்சப்பொடி, சார்முட்டி, அயிரை மீன்கள் கூடை கூடையாகப் பிடிக்கப்பட்டன.

பனை மரத்தில் சிறிது உயரத்துக்கு ஊர்ந்து ஏறும் ‘பனையேறிக் கெண்டை’ என்றொரு மீன் இருந்தது என்றால் ‘மாயாஜாலக் கதை’ என்பர். காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றில் வாழ்ந்த ஓர் அரிய மீனைப் பற்றித் தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார். ‘மயில் கெண்டை’ என்று பெயர். செதில்கள் ஓரத்தில் உள்ள நீலப்பச்சை நிறம்தான் பெயர் காரணமாம். இம்மீனின் எடை 30-40 கிலோ இருக்கும் என்கிறார். இப்படி எத்தனை உயிரினங்களை இதுவரை காவு கொடுத்துள்ளோம் என்று தெரியவில்லை.

 

 

ஆறுகளின் வாழ்நிலைகள்

ஆறு என்பது வெறும் நீரோட்டமல்ல. அதற்கும் வாழ்க்கை உண்டு. ஆறுகளின் வாழ்க்கைப் பருவத்தை இளைமை நிலை, பக்குவ நிலை முதுமை நிலை என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

ஆறு மலைப்பகுதிகளில் உருவாகும் நிலையே இளமைநிலை. உயரத்திலிருந்து விரைந்து கீழிறங்கும் முயற்சியில் பாறைகளை அரித்து ஆழமாக்கிப் பள்ளத்தாக்குகளை உருவாக்கும். இதற்குக் கண்டத்திட்டுக்களின் நகர்வும் ஒரு காரணம். மலைப்பகுதி உயர்ந்து கொண்டிருந்தால் அரித்துப் பள்ளமாக்கும் தன்மையும் அதிகரிக்கும். V வடிவப் பள்ளத்தாக்கு உண்டாகும். மாறாக நிலம் கீழே அமிழ்ந்தால் அதன் வீரியம் குறைவாக இருக்கும்.

ஆறு சமவெளியில் இறங்கிய நிலைப் பக்குவநிலை எனப்படும். முதல் நிலையின் வீரியம் இங்கு கணிசமாகக் குறைந்துவிடும். அதேசமயம் கடல்மட்டத்தை விட உயரத்தில் இருப்பதால் அரிக்கும் தன்மையும் பள்ளமாக்கும் தன்மையும் ஓரளவு இருக்கும். சமவெளியில் ஓடுகையில் ஒரு மருங்கில் மணலைக்கொட்டியும், மறு மருங்கில் மண்ணை அரித்தும் செல்லும். வெள்ளம் பெருகும்போது இரு மருங்கிலும் வெள்ளப்படுகைகளை உருவாக்கும். இது 40-50 வயது கொண்ட மனிதரின் பக்குவ நிலையோடு ஒப்பிட்டு இப்பெயர் வழங்கப்படுகிறது.

கடலோரப் பகுதியை அடைவது முதுமைநிலை. தன்னுடைய ஆற்றல் மண் கற்கள் சுமக்கும் வேகம் அத்தனையும் இந்நிலையில் ஆறு இழந்துவிடும். கடற்பொழியில் அலைகள் எதிர்ப்பதால் தள்ளாடிச் செல்கிறது. இது முதிர்ந்த மனிதரின் நிலைக்கு ஒப்பாகும்.

மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று (அகம்126:3-5)

‘மலைகளினூடே தோன்றிப் புறப்பட்ட காவிரியின் வெள்ளநீர் பூங்காக்கள் செறிந்த நீர்த்துறைகளைச் சேர்ந்து பின்னர் கடற்கரையை அணுகியதும் வேகம் குறைந்து பரவிப்பாய்கிறது’ என்ற பாடல் ஆறுகளின் மூன்று நிலைகளையும் கூறும் அறிவியல் செய்தியாக உள்ளது. தமிழ்நாட்டில் மூன்று நிலைகளையும் கொண்ட ஒரு முதிர்ந்த ஆறு காவிரி.

(விரைவில் வெளிவரவிருக்கும் நக்கீரன் எழுதிய ‘நீர் எழுத்து’ நூலில் இருந்து)

பிற படைப்புகள்

Leave a Comment