பி.எல்.சாமி – மறந்து போன சூழலியல் ஆளுமை
ஏ.சண்முகானந்தம்

by olaichuvadi

பி.எல்.சாமி

 

புதுச்சேரியின் ஆளுநராகவும், தமிழறிஞராகவும், சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தவராகவும் அறியப்படும் பி.எல்.சாமி அவர்கள், சுற்றுச்சூழலுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு மிகப்பெரியது. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பி.எல்.சாமியை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியாக இச்சிறு கட்டுரை அமைந்துள்ளது.

பி.லூர்து சாமி என்ற பி.எல்.சாமி 1925-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். திண்டிவனம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்கும்போதே, பறவைகள், விலங்குகள் குறித்த ஆர்வமும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். கல்லூரிப் படிப்பை, கடலூர் தூய வளவனார் கல்லூரியில் படிக்கும்போது தமிழிலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, தமிழிலக்கியங்களை முழுமையாக கற்றார். உயிரினப் பாடத்தை கல்லூரியில் முதன்மைப் பாடமாக கற்றதனால் ஏற்பட்ட ஆர்வம்தான், பிற்காலத்தில் சங்க இலக்கியங்களில் பாடப் பெற்றுள்ள உயிரினங்கள் குறித்த ஆய்விற்கு பி.எல்.சாமியை இட்டுச் சென்றது.

கவிதை மற்றும் பக்திப் பாடல்களின் தொகுப்பாக மட்டுமே அறியப்பட்டிருந்த, சங்க இலக்கியப் பாடல்களில், அறிவியல் பார்வையில் அமைந்த உயிரினங்கள் (பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன வகைகள், செடி, கொடி, தாவரங்கள், மீன்கள், மணிகள்) குறித்த நுட்பமான பதிவுகளை, பொது மக்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் பி.எல்.சாமி நூல்களாக வெளியிட்டார். அந்தவகையில் சங்க இலக்கியங்கள் குறித்த பார்வையை மாற்றியமைத்தவர்களில் பி.எல்.சாமி முதன்மையானவராக அவதானிக்கப்படுகின்றார். ‘சுற்றுச்சூழல்’ என்பது, ஒரு துறையாக வளராத காலத்திலேயே, சூழலியலுக்காகவும், உயிரினங்கள் குறித்தும் பி.எல்.சாமி ஆழமாகவும், அறிவியல்பூர்வமாகவும் சிந்தித்தார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத் தலைவராக, பி.எல்.சாமியின் தமையனார் இருந்த காரணத்தால், தனக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு விடைகளை கண்டடைந்தார். புதுவை மாநில அரசுத் துறையில் செயலாற்றும்போதும், தமிழிலக்கியம் மற்றும் உயிரினங்கள் குறித்த தேடலிலான ஆர்வம் குறையவில்லை என்பதுடன், அரசுப் பணியிலும் சிறப்புற செயலாற்றினார். அவரது அயராத உழைப்பால் புதுவை மாநில ஆட்சிப் பணியாளராக (ஐ.ஏ.எஸ்.,) உயர்ந்தார். ஆட்சிப் பணியாளர் பொறுப்பேற்ற பின்பும், பழந்தமிழ் நூல்களிலுள்ள உயிரினங்கள் குறித்து ஆய்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தார்.

1945- -1946-களில் பி. லூர்து சாமி என்ற இயற்பெயரில், ‘செந்தமிழ்ச் செல்வி’யில் எழுதத் தொடங்கியவர், தனது இறப்பு வரைக்கும் எழுதுவதை நிறுத்தவில்லை. தமிழ், ஆங்கிலம் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை செந்தமிழ்ச் செல்வி, ஆராய்ச்சி, தினமணிச்சுடர், தினமலர், அமுதசுரபி, இந்து (ஆங்கிலம்), உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இதழ், தமிழ்ப் பல்கலைக்கழக இதழ் போன்ற பல ஆய்விதழ்களில் தொடர்ச்சியாக எழுதியுள்ளார்.

தாய்த் தெய்வ வழிபாடு, சங்க நூல்களில் முருகன், தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு, தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம் போன்ற நூல்கள் இவரை இலக்கியத்திலும், தமிழிலும் தேர்ந்த ஆய்வறிஞராக அடையாளம் காட்டியது. இவருடைய ‘சங்க நூல்களில் அறிவியல் கலை’ உள்ளிட்ட இருநூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசைப் பெற்றுள்ளது. சூழலியல், நாட்டார் பண்பாடு, கலைகள் என சுமார் பதினெட்டு நூல்களை பி.எல்.சாமி எழுதியுள்ளார். சங்க நூல்கள், அறிவியல், மபதை இயல், நாணயவியல், நாட்டார் வழக்காற்றியல், பண்பாடு, மொழி, நாட்டார் தெய்வங்கள் என பன்முக ஆற்றலை கொண்டிருந்தார்.

ஆராய்ச்சி இதழில் இவர் எழுதிய ‘மன்பதை இயல்’ பற்றிய கட்டுரை, ‘வடக்கு மலபாரில் நன்னன் நினைவுகள்’ போன்ற கட்டுரைகளை படித்துவிட்டு, ரஷ்ய தமிழ் அறிஞர்களான ரூடில், டுரீப்னிகோவா போன்றவர்கள் நா.வானமாமலை வழியே பாராட்டியுள்ளனர். ஐராவதம் மகாதேவன், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டுப் பறவைகளுக்கான முதல் கையேட்டை உருவாக்கிய க.ரத்னம் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்கள் இவருடைய பன்முக ஆற்றலை பாராட்டியுள்ளனர். இவருடைய இளமைக் காலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாராட்டைப் பெற்றிருந்தார். பி.எல்.சாமியின் தமிழ் மொழியின் மீதான பற்று, அறிவியல் பார்வை, உயிரினங்கள் மீதான ஆர்வத்தை கண்ட தமிழறிஞர்கள் ‘புதுவைச் சித்தர்’, ‘செந்தமிழ்ச் செல்வர்’, ‘தமிழ்ச் செல்வர்’ என பல்வேறு சிறப்புப் பெயர்களால் பாராட்டியுள்ளனர்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதுச்சேரிக் கிளை, ‘சங்க நூல் பேரறிஞர்’ என்கிற பட்டத்தைப் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் தலைமையில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறளார் முனிசாமி போன்றோர் முன்னிலையில் தந்து சிறப்பித்தது.

‘வேளாங்கண்ணி குரலொலி’ இதழில் பி.எல்.சாமியின் பேட்டி வெளிவந்துள்ளது. ‘தேம்பாவணித் தீபம்‘ (நவம்பர், 1978) என்ற இதழ் பி.எல்.சாமி குறித்த சிறப்பிதழை வெளியிட்டிருந்தது. அதில் திரு.சக்தி வசந்தன் எடுத்த பேட்டியும் இடம்பெற்றுள்ளது.

தொடக்கத்தில் சிறிது காலம் ஆசிரியப் பணி பின், புதுவை மாநில அரசில் கிராம வளர்ச்சித் திட்ட உயர் அதிகாரியாகவும் ஆரம்ப காலங்களில் பணியாற்றியவர். புதுவை மாநிலத்தின் ஐ.ஏ.எஸ். பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ‘சிண்டிகேட்’ உறுப்பினர் மற்றும் புதுவை மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மட்டுமின்றி புதுவை வரலாற்றுச் சங்க முதல்வராகவும் இருந்து அனைத்துப் பொறுப்புக்களையும் திறம்பட நிர்வகித்துள்ளார்.

இதைத் தவிர, புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநரின் செயலராகவும், அரசுச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய இளமைக் காலத்தில் நாட்டுச் சுதந்திரத்திற்காக போராடியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுவை திராவிட மொழியியல் பண்பாட்டு நிறுவனம் முன்வந்து கொடுத்த ஓர் ஆராய்ச்சித் திட்டத்திற்காக சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட உயிரினங்கள் குறித்த ஆய்வுகளை முன்னெடுத்து, முழுமைப்படுத்தினார். அந்தவகையில், சுமார் சூழலியல் மற்றும் உயிரினங்கள் குறித்த சுமார் பதிமூன்று நூல்களை வெளியிட்டார். கடந்த ஐந்து உலகத் தமிழ் மாநாட்டில் பி.எல்.சாமியின் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றதுள்ளது. அறிவியல் தமிழை முன்னெடுத்தவர்களில் பி.எல்.சாமியும் முக்கியமானவர். அவருடைய கூர்மையான அறிவியல் பார்வைக்கு…

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்’

என்ற குறள் வரிக்கு,

‘கவரிமா என்பது தன் உடம்பிலிருந்து ஒரு முடி நீங்கினும் தன் மானத்துக்கு இழுக்கு எனக் கருதி உயிர்வாழாது’ என உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், ‘கவரிமா என்பது இமயமலை போன்ற குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் ‘யாக்‘ எனப்படும் எருது போன்றதொரு விலங்கே’ என்றும், ‘கடுங்குளிரைத் தாங்க அதன் மயிர்க்கற்றைகள் போர்வையாக உதவுகின்றன’ என்றும், ‘அவற்றை இழந்தால் அதனால் உயிர் வாழ முடியாமல் போய்விடும்‘ என்ற கருத்தின் அடிப்படையிலேயே அக்குறள் உருவானதாக அரியதொரு அறிவியல் பார்வையை பி.எல்.சாமி முன்வைத்தார்.

ஒருவேளை இமயமலை சென்று அவ்வுயிரினத்தை கண்டு பாடியிருப்பார் அல்லது செவிவழிச் செய்தியாக கேட்டு எழுதியிருக்கலாம் என்ற கூற்றையும் முன்வைத்தார். தமிழ் உணர்வினாலும், ஆர்வத்தின் அடிப்படையிலும் வெளியாகி இருந்த உரையாசிரியர்களின் விளக்கங்களை, தனது கூர்மையான அறிவியல் பார்வையில் மாற்றியமைத்தார். அதுவரை தமிழிலக்கியங்கள் குறித்து இருந்த கரடுதட்டிப் போன பார்வையையும் மாற்றினார். கடந்த 1967-இல் இருந்து தொடர்ச்சியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளுமை 1999-இல் தனது எழுத்தை நிறுத்திக் கொண்டாலும், என்றென்றும் தமிழ் பசுமை இலக்கியத்தில் ‘சுடர்விடும் நட்சத்திரமாய்’ இருக்கிறார். பல தலைமுறைக்கான பதிவுகளை விட்டுச் சென்றுள்ள பி.எல்.சாமி நினைவில் நிறுத்த மட்டும் அல்ல, கொண்டாடவும் வேண்டிய சூழலியல் ஆளுமைகளில் முதன்மையானவர் எனில் அது மிகையல்ல.

பி.எல்.சாமியின் சூழலியல் நூல்கள்

சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் – பி.எல்.சாமி – திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்., – மே 1976

பிணம் தின்னிக் கழுகு, ஆந்தை, வானம்பாடி, நாரை, சின்ன, பெரிய, நடுத்தர கொக்கு, பூநாரை, கடற்காகம் என 50-க்கும் மேற்பட்ட பறவைகளின் சங்க இலக்கியப் பாடல் வரிகளின் விரிவான விளக்கத்துடன், இன்றைய அறிவியல் பார்வையின் பொருத்தப்பாட்டை விரிவாக எடுத்துரைக்கிறார். முதுக்குறை குருவி (தூக்கணாங்குருவி), மனையுறைக் குருவி (சிட்டுக்குருவி), கூகை (வெண்ணாந்தை), ஊமன் (கொம்பன் ஆந்தை), குருகு ( கூழைக்கடா), நத்து நாரை (நத்தைக் குத்தி நாரை) என தமிழிலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள பெயர்களை, இன்றைய இளையதலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகிறார். வலசைப் பறவைகள், வாழ்விடப் பறவைகள் மட்டுமின்றி பறவைகளின் காப்பிடங்கள் குறித்தான சங்க இலக்கியப் பாடல் வரிகளில் அரியதொரு ஆய்வை முன்னெடுத்து, அவை இன்றைய அறிவியலோடு ஒத்திசைந்துப் போவதை நுட்பமாக பதிவு செய்துள்ளார். நூலின் இறுதியில் பறவைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

சங்க நூல்களில் விந்தைப் பூச்சி – பி.எல்.சாமி – சேகர் பதிப்பகம், – மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு, – முதற்பதிப்பு 23.12.1981

சுமார் 65 பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலில், கருஞ்சிவப்பு நிற விந்தைப் பூச்சி (வெல்வெட் பூச்சி), வெட்டுக்கிளி போன்ற பூச்சியினங்கள் தவிர்த்து மற்ற சில உயிரினங்கள் குறித்தும் சங்க இலக்கிய பாடல் வரிகளில் ஆய்வு செய்துள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘மூதாய்’ என்றழைக்கப்பட்ட பூச்சி குறித்து விரிவானதொரு ஆய்வை முன்னெடுத்திருக்கிறார்.

‘செடி நூற் செய்திகளைப் பெருக்குவித்துப் படிப்பவர்களைத் துன்புறுத்தாமல் இனிமையாக ஆசிரியர் தமது கருத்தை விளக்கும் திறன் பாராட்டுக்குரியது. இந்நூலாசிரியர் தந்துள்ள விளக்கங்களால் செடி, கொடிகளுக்கும் சங்கப் புலவர்கள் பெய்துள்ள அடைகள் பெரும் செறிவு பெறுகின்றன. சங்க நூல் மாணவர்கள் சாமியின் நூலால் பெறும் பயன் சிறிதன்று. பழம் பாடல்களுக்கும் பொருள் விளக்கம் தேட நினைக்கிறவர்களுக்கும், உரையாசிரியரின் ஆற்றல்களை அறுதியிட நினைக்கின்றவர்களுக்கும், செடிச் செய்தியினை வரலாற்று முறையில் எழுத நினைக்கின்றவர்களுக்கும் இந்நூலால் கிடைக்கும் பயன் பெரிது’…

என 1967-இல் வெளிவந்த ‘சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம்‘ என்ற நூலுக்கு பேராசிரியர் வி.ஐ.சுப்ரமணியம் எழுதியுள்ள பாராட்டுரையும் நூலில் இடம் பெற்றுள்ளது.

விந்தைப் பூச்சி, பட்டுப் பூச்சி, வெல்வெட் பூச்சி, உயிர்த்தெழும் பூச்சி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அலவாங்கு என்பது மண்ணைத் தோண்டும் கடப்பாறையை குறிக்கிறது. மண்ணைத் தோண்டி எறும்புகளை உண்ணும் அலங்கின் முக அமைப்பும், கடப்பாறையை ஒத்திருப்பதால், இக்காரணப் பெயர் ஏற்பட்டிருப்பதை விரிவாக பேசுகிறார். தமிழகத்தின் சில பகுதிகளில் நலங்கு, நலுங்கு என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. ஆசிரியரின் பிறநூல்கள் குறித்த செய்தியும் நூலில் உள்ளது.

சங்க நூல்களில் சில உயிரினங்கள் – பி.எல்.சாமி – சேகர் பதிப்பகம் – டிசம்பர் 1993.

முதலை, உடும்பு, ஓந்தி, ஆமை, பாம்பு, கோம்பி, தவளை, நத்தை, சங்குகள், சிப்பி, தேனீ, மின்மினி, பேன் உள்ளிட்ட சுமார் 30 வகையான உயிரினங்கள் குறித்து சங்க இலக்கியங்களில் பாடப்பட்டுள்ள வரிகளோடு, இன்றைய அறிவியலையும் ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளது. சிறுபஞ்சமூலத்தில் பேசப்பட்டுள்ள ஐந்து வகையான பூச்சிகள் குறித்த கட்டுரையும் நூலில் இடம்பெற்றுள்ளது. நூலாசிரியர் பி.எல்.சாமியின் நீண்டதொரு முகவுரையும் உள்ளது.

சங்க நூல்களில் மரங்கள் – பி.எல்.சாமி – திருக்குறள் பதிப்பகம் – டிசம்பர் 1992.

நூலிற்கான பதிப்புரை கவிதை வடிவில் அமைந்துள்ளது. அத்தி, ஆசினி, ஆலம், இலஞ்சி, இலுப்பை, உழிஞ்சில், கண்டல், சந்தன மரம், தேக்கு, தில்லை, வேம்பு, வேங்கை வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட மரங்கள் குறித்த கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. என்.சி.பி.எச்- பதிப்பகம் அக்கால கட்டத்தில் வளம் தரும் மரங்கள் உள்ளிட்ட நான்கு நூல்களை வெளியிட்டுள்ள செய்தியை நூலாசிரியர் முகவுரையில் பேசியுள்ளார்.

சங்க நூல்களில் செடி கொடிகள் – பி.எல்.சாமி – திருமுடி பதிப்பகம் – டிசம்பர் 1991. இரண்டாம் பதிப்பு மே 1998. முதல் பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

கரந்தை, கள்ளி, சூரல், கூதளம், வெட்சி, பயறு, உழுந்து போன்ற செடி வகைகளும், அவரை, யானை உண்ட அதிரல், உழிஞை, குன்றி, வள்ளை போன்ற கொடி வகைகளும், அறுகு, பெரும்பனை, நெல், வரகு போன்ற புல் வகைகள் குறித்தான கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளது. 38 வகையான செடி, கொடி மற்றும் புல் வகைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

சங்க நூல்களில் மீன்கள், – பி.எல்.சாமி,- சேகர் பதிப்பகம், -முதல் பதிப்பு மே 1978. இரண்டாம் பதிப்பு 1990.

‘தமிழ்நாட்டில் மீன்களின் பெயர்கள் இடத்திற்கு இடம் மாறுவதுண்டு. தமிழ்நாட்டில் பல இடங்களில் சுதும்பு என்றழைக்கப்படும் மீனைத் திருநெல்வேலி, நாஞ்சில் நாட்டுப் பகுதிகளில் ‘குதிப்பு’ என்று அழைக்கின்றனர். மழைக்காலத்தில் இந்த மீன் நீரிலிருந்து குதித்து விடுவதால் குதிப்பு என்று பெயர் வந்தது. இந்த மீனைப் பள்ளு நூல்கள் குறிப்பிட்டுள்ளன’ என்று மீன் குறித்த பல அரிய செய்திகள் நூலில் இடம்பெற்றுள்ளது. அயிலை, அயிரை, ஆரல், கெண்டை, குழல் மீன், மலங்கு, வரால், சுறா, பெரு மீன் உள்ளிட்ட பதினெட்டு வகையான மீன்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. நூலாசிரியர் குறித்து பதிப்பகம் எழுதியுள்ள குறிப்பும் நூலில் இடம் பெற்றுள்ளது.

சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை – சங்க நூலறிஞர் பி.எல்.சாமி, – சேகர் பதிப்பகம், – முதல் பதிப்பு டிசம்பர் 1991.

நூலிற்கான முகவுரை, தொடர்ந்து பதிப்புரையும் இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை என்ற கட்டுரைக்கு அடுத்து தொல்காப்பியத்தில் பேசப்பட்டுள்ள பிடா (குட்டிப் பிடவம்), புளி, உதி, மா, சே, ஆயிரை, பனை, ஆர், ஆல் போன்ற செடி கொடி, மரப்பெயர்களை தற்காலப் பெயர்களோடு ஒப்பிட்டு நூலாசிரியர் பேசியுள்ளார். குறிஞ்சிப்பாட்டில் வரும் காந்தள், குவளை, ஆம்பல், தேமா, வெட்சி, கூவிளம், செருவிளை, நெய்தல் உள்ளிட்ட 99 வகையான செடி, கொடி, மரங்கள் குறித்து பேசியுள்ளார். அதுபோலவே, 99 செடி, கொடி, மரங்களின் தமிழ்ப் பெயர், அறிவியல் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கியத்தில் தாவர நூலின் நுட்பங்கள் என்ற தலைப்பிலான கட்டுரை நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. தாவர வகைகளின் சொல்லடைவு அகரவரிசையில் இடம் பெற்றுள்ளது.

சங்க நூல்களில் மணிகள் – பி.எல்.சாமி – சேகர் பதிப்பகம் – முதல் பதிப்பு 1980.

நூல் குறித்தான சிறு அறிமுகம் (Biblography)  முதலில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து, முன்னுரை, பதிப்புரை அமைந்துள்ளது. உலக வரைபடம், கி.பி.2-ஆம் நூற்றாண்டு வணிக கப்பல், மார்க்கோபோலோ காலத்தில் முத்து எடுக்கப் பயன்படுத்திய (13-14-ஆம் நூற்றாண்டு) கப்பல், குறும்பா அல்லது பல்லவர் நாணயத்தில் காணப்படும் கப்பலின் தோற்றம், ஆந்திராவில் கிடைத்த நாணயம் ஒன்றில் காணப்படும் கப்பலின் தோற்றம் போன்ற ஒவியங்கள் நூலில் உள்ளன.

கோமேதகம், வைடூரியம், நீலம், மாணிக்கம், வைரம், சானைக்கல், கட்டளைக் கல், பளிங்குக் கல், பவளம், முத்து போன்ற கற்கள் குறித்து சங்க இலக்கியப் பாடல் வரிகளுடன் இன்றைய பொருத்தப்பாடுகளுடன் நூலாசிரியர் பேசியுள்ளார். மார்க்கோபோலோ தமிழகத்தில் இருந்து கொண்டு சென்ற விலையுயர்ந்த மணிகளைக் காட்டி விளக்கும் ஒவியம், மார்க்கோபோலோவின் முதுமையான தோற்றத்தைக் காட்டும் ஒவியமும் நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் அவர்களின் நூல்கள் குறித்த அட்டவணையும், மணிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்ட நிலை குறித்த அட்டவணையும் நூலின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளது.

இலக்கியத்தில் அறிவியல் – பி.எல்.சாமி – சேகர் பதிப்பகம் – முதல் பதிப்பு 11.05.1981 – இரண்டாம் பதிப்பு மே 1982 

உருவாக்கியோர் என்ற தலைப்பில் நூல் உருவாக்கத்திற்கு துணை நின்ற ஆசிரியர், ஒவியர், உருவச்சு செய்தவர், நூல் அச்சிட்டோர், அச்சுக் கோர்ப்பு செய்தவர், கட்டமைப்பு, பிழை திருத்தம், உருவாக்கப்பணி, பதிப்பாளர் பெயர் என அனைத்தும் அழகுத் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் சிறிய முன்னுரையும், பதிப்புரையும் இடம் பெற்றுள்ளது. செந்தமிழ்ச் செல்வி, தினமணிச்சுடர், ஆராய்ச்சி இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

தாவரவியல், உயிரினம், பொதுவானது என மூன்று தலைப்பில் பல்வேறு கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளது. செடி, மரம், பெயர், செடிகளின் நோய்கள் உள்ளிட்ட ஒன்பது கட்டுரைகள் தாவரவியல் பகுதியிலும், கவரிமா – மானா மாவா?, மகண்மா, கரிக்குருவி, வேலன் – ஒரு விலங்கு, கவையன் உள்ளிட்ட ஒன்பது கட்டுரைகள் உயிரியல் பகுதியிலும், புசைக்கொடி, நரிவிருத்தம், நீர் வழிபாடு, மரியதாஸ் பிள்ளை உள்ளிட்ட ஒன்பது கட்டுரைகள் பொது என்ற தலைப்பிலும் இடம் பெற்றுள்ளது.

சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் – பி.எல்.சாமி, – திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் ,- 1 ஆகஸ்ட் 1970

நூலில் பதிப்புரையும், அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சராக இருந்த திரு.இரா.நெடுஞ்செழியனின் அணிந்துரையும், நூலாசிரியரின் முன்னுரையும் இடம் பெற்றுள்ளது.

‘பண்டைத் தமிழ் மக்களும், சங்க காலத்துச் சான்றோரும், பல்துறைப், பற்றிய அறிவு நூல்களைக் கற்றிருந்தனர் என்பதற்கும், அத்தகைய அறிவுத் துறை நூல்கள் பல அந்த காலத்தில் மிகவும் பெருகியிருந்தன என்பதற்கும் இந்நூல் சிறந்த சான்றாகும்‘ என இரா.நெடுஞ்செழியன் நூல் குறித்து பதிவு செயதுள்ளார்.

1970-ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலுடன் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை சுமார் 1400-க்கும் மேற்பட்டது என்கிற கூடுதல் தகவலையும் திரு.இரா.நெடுஞ்செழியன் அணிந்துரையில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கிய நூல்களில் பாடப்பட்டுள்ள சுமார் 35 விலங்குகள் குறித்து, இன்றைய அறிவியலின் பொருத்தப்பாடோடு ஒப்பிட்டு அழகிய நடையில் நூலாசியர் எழுதியுள்ளது இன்றைய இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.

சுமார் 460 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகத்தில் கரடி, சிறுத்தை, புலி, செந்நாய், வெருகு (காட்டுப்பூனை), குரங்கு போன்ற உயிரினங்களின் ஒவியங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு (வருடை – Nilgiri Tahr)  முதல் காட்டு எருது (ஆமான் – Indian Gaur),  மான்கள், இந்தியளவில் அழிவின் விளிம்பிலுள்ள இரலையான வெளிமான் போன்றவை குறித்து சங்க பாடல் வரிகளோடு நூலாசிரியர் பேசியுள்ளார். இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ரண்தம்பூர் காப்பகம் மற்றும் பரத்பூர் பறவைகள் காப்பிடங்களில் காணப்படும் நீலக்காளை (Blue Bull),  சிற்றுயிர்களான அணில், முயல் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார். முள்ளம்பன்றி, வௌவால், எலி, நீர்நாய், கீரி மட்டுமின்றி திமிங்கலம், ஓங்கில் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் குறித்தும் நூலாசிரியர் பேசியுள்ளார். காட்டுயிரினங்கள் மட்டுமின்றி வளர்ப்பு உயிரினங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

இலக்கிய ஆய்வு (அறிவியல்) – பி.எல்.சாமி – சேகர் பதிப்பகம், – முதல் பதிப்பு 23.12.1982

தமிழறிஞர் திருமுடி ந.சேதுராமன் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பதினெட்டு கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் பூச்சிகள் குறித்த ஆறு கட்டுரைகளும், பறவை குறித்தும், பெயர் குறித்த ஆய்வில் மற்ற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. செந்தமிழ்ச்செல்வி, ஆராய்ச்சி, தினமணிச்சுடர் முதலிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

நூலின் இறுதியில் அருஞ்சொல் அடைவு, பிழை திருத்தமும் இடம்பெற்றுள்ளது. பூச்சிகள், விலங்குகளின் ஒவியங்களும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பி.எல்.சாமியின் பிற நூல்கள்

சங்க நூல்களில் முருகன் – சங்க நூலறிஞர் பி.எல்.சாமி, – சேகர் பதிப்பகம், – முதல் பதிப்பு டிசம்பர் 1990

நூலின் துவக்கத்தில் பிழை திருத்தம் இடம்பெற்றுள்ளது. பி.எல்.சாமி அவர்களின் மற்ற நூல்கள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. 24 தலைப்புகளில் முருகன் வழிபாட்டையும், அதன் தோற்றத்தையும், சங்கப் பாடல்களின் வழியே முதன்மையான ஆய்வை நூலாசிரியர் செய்துள்ளார். சொல்லடைவு நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு – பி.எல்.சாமி, – வானதி பதிப்பகம் – முதற்பதிப்பு டிசம்பர் 1983

இந்நூலின் சில கட்டுரைகள் ஆராய்ச்சி, தாமரை, தினமணிச்சுடர் இதழ்களில் வெளிவந்துள்ளது.

கரிக்குருவி, ஆக்காட்டி பறவைகள் தொடர்பான நாட்டுப்புறப் பாடல்கள், மக்கள் வழக்குகளில் உள்ள வாய்மொழி இலக்கியம் என நூலாசிரியர் பேசியுள்ள இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. இவற்றுடன் சேர்த்து மொத்தமாக பத்து கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் மானிடவியல், சமூக இயல் துறை செய்திகளும் காணப்படுவதாக நூலாசிரியர், தனது முகவுரையில் தெரிவிக்கிறார்.

தமிழிலக்கியத்தில் தாய் தெய்வ வழிபாடு – பி.எல்.சாமி, – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தாய் தெய்வ வழிபாடு குறித்த கட்டுரைகள் அடங்கிய நூலாக வெளிவந்துள்ளது.

அறிஞர் பி.எல்.சாமியின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு – தொகுப்பு புலவர் ந.வேங்கடேசன் (வில்லியனூர்) – சேகர் பதிப்பகம் – முதற்பதிப்பு டிசம்பர் 2002

1967 முதல் 2002 வரை பி.எல்.சாமி அவர்களின் எழுத்தில் வெளிவந்துள்ள நூல்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி (மலர் 5, இதழ் 1 மார்ச் 1975) இதழில் நா.வானமாமலை எழுதிய கடிதமும் நூலில் இடம்பெற்றுள்ளது. கரிக்குருவி, மீன்கொத்தி உள்ளிட்ட ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பி.எல்.சாமி அவர்களின் இறப்புக்கு பின், அவர்களது கட்டுரைகளை தொகுத்து புலவர் ந.வேங்கடேசன் தொகுப்பு நூலாக கொண்டு வந்துள்ளார்.

சங்க நூலாய்வும்- சாமியும் – தொகுப்பு புலவர் ந.வேங்கடேசன் (வில்லியனூர்), – சேகர் பதிப்பகம் – முதற்பதிப்பு 3.7.1999

பி.எல்.சாமியின் நூலின் அட்டைப்படங்களில் பெரும்பாலானவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பி.எல்.சாமி அவர்களின் எட்டு கட்டுரைகள், அவருடைய நூல் முகவுரைகளை புலவர் ந.வேங்கடேசன் தொகுத்துள்ளார். பி.எல்.சாமி குறித்து தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்த பாராட்டுரைகள், இதழ்கள், நூல்களில் வெளிவந்த செய்திகள் என பெரும்பாலானவை தொகுக்கப்பட்டுள்ளது. வெளிமானின் ஒவியம், தமிழ்நாட்டின் சிந்துசமவெளி எழுத்தோவியம் நூலின் அட்டைப்படமும் இடம்பெற்றுள்ளது. பி.எல்.சாமி அவர்களின் குடும்ப ஒளிப்படங்களும், பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஒளிப்படங்களும் நூலில் இடம்பெற்றுள்ளது.

Common Names and Myths of the Flora and Fauna in Dravidian and Indo-Aryan Languages- P.L.Samy – sekar pathippagam, first edition Dec 1980

திராவிட, இந்திய மொழிக் குடும்ப மக்களிடையே தாவரங்கள், விலங்கினங்கள் குறித்து நிலவி வந்துள்ள வாய்மொழி இலக்கியங்கள் குறித்து பேசியுள்ளார். உயிரினங்களின் பொதுப்பெயர்கள், கற்பனைக் கதைகள் குறித்தும் நூலில் பேசியுள்ளார்.

கிடைக்காத நூல்கள்

கம்பன் காவியத்தில் உயிரினங்கள் – பி.எல்.சாமி , கம்பன் கழகம் – இந்நூலின் பிரதி கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம் – பி.எல்.சாமி – சேகர் பதிப்பகம், – இந்நூலின் பிரதி கிடைக்கவில்லை.

பி.எல்.சாமி அவர்களின் படைப்புகள்

(1967– 1993)

 1. மே,1967 – சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்
 2. ஆகஸ்ட், 1970 – சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்
 3. செப்டம்பர், 1975 – தாய்த் தெய்வ வழிபாடு
 4. மே, 1976 – சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்
 5. மே, 1978 – சங்க நூல்களில் மீன்கள்
 6. டிசம்பர், 1980 – சங்க நூல்களில் மணிகள்
 7. டிசம்பர், 1980 – Common Names and Myths of the Flora and Fauna in Dravidian and Indo-Aryan Languages
 8. மே, 1981 – இலக்கியத்தில் அறிவியல்
 9. டிசம்பர், 1981 – சங்க இலக்கியத்தில் விந்தைப் பூச்சி
 10. டிசம்பர், 1981 – சங்க இலக்கியத்தில் அறிவியற் கலை
 11. டிசம்பர், 1982 – இலக்கிய ஆய்வு
 12. டிசம்பர், 1983 – தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு
 13. டிசம்பர், 1984 – தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்
 14. ஏப்ரல், 1991 – சங்க நூல்களில் முருகன்
 15. டிசம்பர், 1991 – சங்க நூல்களில் செடி கொடிகள்
 16. டிசம்பர், 1992 – சங்க நூல்களில் மரங்கள்
 17. டிசம்பர், 1993 – சங்க நூல்களில் உயிரினங்கள்

பி.எல்.சாமி – குறிப்புகள்:

தந்தையார் பெயர்: ஆ. பெரியநாயக முதலியார்

தாயார் பெயர்: கு.மரிய மதலேன்

துணைவியார் பெயர்: மங்களவதியார்

பிறந்த தேதி; 02.10.1925

இறந்த தேதி; 03.06.1999

பிற படைப்புகள்

Leave a Comment