வட்டார வழக்கின் முன்னோடி
பி.என்.எஸ்.பாண்டியன்

by olaichuvadi

எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் நூற்றாண்டு (1917 – 2017 )

ஒரு சொட்டு நீர் என்பது ஒரு ஏரியின் சிறுவடிவம். அதுபோல், பெருநிலத்தின் சிறுவெளியே வட்டாரம். இந்த வட்டாரத்தின் வாழ்வியலை அம்மக்களின் மொழியில் வடிக்கப்படும், புனைவு அல்லது அபுனைவு இலக்கியத்தையே வட்டாரவியல் இலக்கியம் என்கிறோம். அவ்வாறாக கொங்கு வட்டார மொழியில் கதைகளை புனைந்து, புதினங்களை உருவாக்கி தமிழ் எழுத்துலகின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் ஆர். சண்முகசுந்தரம். அவர் பிறப்பின் நூற்றாண்டு இது.

தமிழகத்தின் கொங்கு மண்டலமான காங்கேயத்தின் அருகே உள்ள கீரனூரில் 1917ம் ஆண்டு பிறந்தவர் ஆர். சண்முகசுந்தரம். இவரது சகோதரர் ஆர். திருஞான சம்மந்தம். இவர்கள் இருவரும் சிறுவயதிலேயே தாயை இழந்தனர். பாட்டியின் அரவணைப்பில், கதைக்களஞ்சியத்தில் மூழ்கியதால் இருவரையும் பிற்காலத்தில் வாசிப்பு ஈர்த்திருக்கிறது.

சண்முகசுந்தரம், கம்பராமாயணம், மகாபாரதக்கதைகளை வாசித்தார். விக்கிரமாதித்தியன் கதைகளில் லயித்தார். கல்கியும், பாரதியும் அவரை வசீகரித்தனர். பாட்டி சொன்ன தேச பக்தி கதைகளின் விளைவாக, டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய “காந்தி” பத்திரிகையை தொடர்ந்து படித்தார். காந்தியவாதியாக உயர்ந்தார்.

இந்த சூழலில் மணிக்கொடி இதழ் இலக்கிய உலகில் பிரவேசித்தது. கோவைக்கு சைக்கிளில் சென்று மணிக்கொடியை வாங்கி வந்து படித்தார் சண்முகசுந்தரம். வாசிப்பின் விளைவாக கதை எழுதும் ஆர்வம் அவருக்குள் உருவானது. ஒரு சிறுகதை எழுதினார். தன் வட்டார மொழியில் அந்த கதை அமைந்தது. அதன் பெயர் ‘பாறையருகில்’. மணிக்கொடி ஆசிரியராக பி.எஸ்.ராமையா இருந்த நேரம் அது. கதையை மணிக்கொடிக்கு அனுப்பினார். அது பிரசுரமானது. ஆர்.சண்முகசுந்தரம் என்ற எழுத்தாளன் உலகுக்கு அறிமுகமானான். அவர் மணிக்கொடி எழுத்தாளராக ஆனார்.

‘நந்தா விளக்கு’ என்ற மற்றொரு கதையும் மணிக்கொடியில் பிரசுரமானது. இதனைத்தொடர்ந்து மணிக்கொடியில் படைப்புகள் வர ஆரம்பித்தன. கு.ப.ரா.,வுடன் நட்பு ஏற்பட்டது. உங்கள் மொழிநடையில் ஒரு நாவல் எழுதுங்கள் என்று அவர் ஆர். சண்முகசுந்தரத்திடம் கூறினார். விளைவு ‘நாகம்மாள்’ என்ற அற்புதமான நாவல் 1942ல் படைக்கப்பட்டது .

கொங்கு மண்டலத்தின் சிற்றூர் சிவியார்பாளையம். இதில் சாதாரண விவசாயி சின்னப்பன், இவன் மனைவி ராமாயி, சின்னப்பனின் அண்ணி நாகம்மாள் மற்றும அவளது மகள். சின்னப்பனின் அண்ணன் இறந்ததும், ஊரின் வஸ்தாது கெட்டியப்பனுக்கும், நாகம்மாளுக்கும் அற்பாற்பட்ட உறவு துளிர்க்கிறது. கெட்டியப்பன் சொத்துக்களை பிரித்து வரும்படி தூபம் போடுகிறான். மயங்கும் நாகம்மாள், சுகபோக வாழ்வுக்காக குடும்பத்தில் போர்க்கொடி உயர்த்துகிறாள். உச்சக்கட்ட சண்டையில் தன் கண்முன்னே கொழுந்தன் சின்னப்பன் கொல்லப்படும்போது ஊமையாய் நிற்கிறாள். இதுதான் நாகம்மாளின் சரித்திரம்.
இந்த நாவல் வெளிவந்ததும், கொங்குத் தமிழின் வாசம் வாசகர்களிடம் வேகமாக பரவுகிறது. இந்நாவல் பற்றி தி.க.சி., இவ்வாறு கூறுகிறார். ‘இந்த நாவலை நான் ஒரு இதிகாசமாகவே கருதுகிறேன். கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ் நாவல்களில் ஒரு தலைசிறந்த படைப்பாக மதிக்கிறேன்’ என்கிறார்.

‘தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்றுக் கொண்ட இந்த நாவலின் தரம், அதன் ஆசிரியர் பெற்ற அனுபவத்தின் விளைவு’ என்று சுந்தர ராமசாமி கூறுகிறார்.

‘நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் இந்தியாவைத் துண்டாடும் பிரச்சினை, இந்தியாவை இரண்டு தேசங்களாக்கும் பிரச்சனை விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது என்பதை இன்றைய நாகம்மாள் வாசகர்களுக்கு நினைவிருக்க நியாயமில்லை. சொத்துக்களைப் பிரிப்பது போல தேசத்தைப் பிரிக்கவேண்டும் என்று பிரிட்டிஷார் தீர்மானித்தது, ஜனங்களில் பெரும்பான்மையோருக்குப் பிடிக்காவிட்டாலும் அவசியமாகிப் போய்விட்டது. பிற்காலத்துச் சரித்திராசிரியர்கள், அரசியல்வாதிகள் இந்தியாவைத் துண்டாடும் காரியத்தில் மிக முனைப்பாக நின்று காரியத்தை சாதித்தது, லேடி மவுண்ட் பேட்டன்தான் என்று அரசல், பொருசலாகச் சரித்திரத்தை எழுதி இருந்தார்கள். நாகம்மாளுக்கும், லேடி மவுண்ட் பேட்டனுக்கும் வெகுதூரம் இருப்பது போல் தோன்றினாலும், துண்டாடுகிற தீர்மானத்தில் இருவரும் ஒன்றுதான்’ என்று இந்நாவலின் இரண்டாம் பதிப்பின் (1987) முன்னுரையில் க.நா.சு இவ்வாறு கூறுகிறார்.

க.நா.சு.,வின் கூற்றுப்படி, தமிழின் முதல் வட்டார புதினத்தை எழுதிய ஆர்.சண்முகசுந்தரம் தனது புதினங்களின் களமாக தேர்வு செய்தது கீரனூர் வட்டாரத்தையே. கீரனூர், ஒரத்தப்பாளையம், சிவியார் பாளையம், வெங்கமேடு, தளாபாளையம், சாவடிப்பாளையம், ராசிபாளையம், சுள்ளி வலசு போன்ற குக்கிராமங்கள் வழியாக அவரது கதைகள் பயணிக்கின்றன. பஞ்சம் தாக்கும் இப்பகுதி மக்களின் வாழ்வியலை தனது படைப்பாக தேர்ந்தெடுத்தது ஆர்.சண்முகசுந்தரத்தின் சிறப்பு. இதனாலேயே அவரது படைப்புகள் உயிர்துடிப்பு மிக்கவையாக இருந்தன.

இதுகுறித்து 1962 மே மாத ‘எழுத்து’ இதழில் ஆர்.சண்முகசுந்தரம் இவ்வாறு கூறுகிறார்.

‘என்னுடைய நாவல்களுக்கு நான் நேரில் கண்ட மனிதர்கள்தான் அடிப்படை. அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து கதைக்கு ஏற்றவாறு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன். பின்னர் மனதில் அசை போட்டுப் போட்டு வடிவம் கொடுத்த பிறகு எழுதுகிறேன். இது என் வெற்றியின் ரகசியம்’ என்கிறார்.

தன் எழுத்து குறித்த பின்புலத்தை அவர் ஒருபோதும் மாற்றியது இல்லை. ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற இலக்கிய வட்ட கருத்தரங்கில் அவர், ‘நான் பிறந்த வளர்ந்த கொங்கு நாட்டு கிராமத்தையும், அங்கு நான் பழகிய கிராம மக்களையும் உள்ளது உள்ளபடி எழுத்தில் சித்தரிப்பது என்ற பேரார்வம் எனக்குள் துளிர்த்தது. அந்த ஜனங்களின் விருப்பங்கள், துயர்கள், வேடிக்கை விமற்சைகளை வனப்புடன் தீட்டிவிடத் திட்டமிட்டேன். ஒவ்வொரு சிறிய காரியத்தையும் நுட்பமாகக் கவனித்தேன். கவனிப்பது என்ன? என் இதயத்தில் வீற்றிருந்த வடிவுகளுக்கு உயிர் கொடுத்தேன்’ என்கிறார்.

புதினம் மட்டுமல்லாமல் சிறுகதை,நாடகம்,கவிதை,மொழியெர்ப்பு தளங்களிலும் ஆர். சண்முகசுந்தரம் பெரும் பங்காற்றியுள்ளார். அவர் எழுதிய 18 நாவல்களில் நாகம்மாள், பூவும் பிஞ்சும், தனிவழி, சட்டிசுட்டது, அறுவடை ஆகியவை வாசகர்களை கவர்ந்தவை.

ஒரு எழுத்தாளனுக்கு பிறமொழியறிவு அவசியம் என்பதை உணர்ந்தவர் அவர். அதன்காரணமாக இந்தி கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பார்சி, உருது மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இதன் வழியாக, சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க புதின ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆனந்த விகடனில் இவர் மொழிபெயர்த்த “சந்திரநாத்” என்ற சரத் சந்திரரின் புதினம் தொடராக வெளிவந்தது. பிரசித்தி பெற்ற ‘பதேர் பாஞ்சாலி’ இவரது மொழிபெயர்ப்பில்தான் தமிழை வந்தடைந்தது.

கோவையில் ‘வசந்தம்’ என்ற வார இதழையும் சண்முகசுந்தரம் நடத்தினார். இந்த இதழுக்கு பெரும் உதவி புரிந்தவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். இவர்தான் அந்த பத்திரிகையின் கவுரவ ஆசிரியர். அவரது சிறுகதைகளும் வசந்தத்தில் வெளிவந்தன. சண்முகம் செட்டியாரின் நூலகத்தில்தான் ஆங்கில, தமிழ் இலக்கியங்களை தீவிரமாக கற்றுத் தேர்ந்தார் ஆர்.சண்முகசுந்தரம். டால்ஸ்டாயின் நாவல்களை விரும்பிப் படித்தார்.

இவரது தம்பி ஆர்.திருஞான சம்பந்தமும் ஒரு எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், பதிப்பாளராகவும் ஜொலித்தவர். இவரது புதுமலர் பதிப்பகத்தில் தான் ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகாரம்- புகார் காண்டத்துக்கு தெளிவுரை வெளியிடப்பட்டது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர்கள் ஆர். சண்முக சுந்தரமும், அவரது சகோதரர் ஆர். திருஞானசம்பந்தம் ஆகியோர் தாம்.எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்துள்ள சிறந்த 10 நாவல்கள் வரிசையில் ஆர்.சண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு இரண்டாம் இடத்தை அளித்துள்ளார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தான் தொகுத்த சிறந்த நூறு தமிழ்நாவல்கள் வரிசையில் நாகம்மாள் நாவலுக்கு நான்காவது இடத்தை அளித்துள்ளார்.

ஆர். சண்முகசுந்தரம் படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆர்.சண்முகசுந்தரத்தின் மொழிநடை என்ற தலைப்பில் இ.முத்தையா – மதுரைப்பல்கலைக்கழகத்திலும், ஆர்.சண்முகசுந்தரத்தின் நாவல்கள் ஓர்ஆய்வு என்ற தலைப்பில் மு.ஜான்சிராணி – சென்னைப் பல்கலைக்கழகத்திலும், ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை என்ற தலைப்பில் பெருமாள்முருகன்-சென்னைப்பல்கலைக்கழகத்திலும், கொங்கு வட்டார நாவல்கள் என்ற தலைப்பில் ப.வே.பாலசுப்ரமணியன்-சென்னைப்பல்கலைக்கழகத்திலும், ஆர்.சண்முகசுந்தரத்தின் புதினங்களில் மகளிர் நிலை -ஒரு பெண்ணிய நோக்கு என்ற தலைப்பில் ஜ.பிரேமலதா-அன்னை தெரசாபல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்ட ஆய்வுகளை செய்துள்ளனர்.

காலத்தால் அழியாத நாகம்மாள், சட்டி சுட்டது ஆகிய இரட்டை நாவல்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணை பதிப்பகம் மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறது. சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல் வரிசையில் எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரத்தை சிறந்தமுறையில் ஆவணப்படுத்தியுள்ளார் சிற்பி பாலசுப்பிரமணியம்.

ஒரு எழுத்தாளன் உருவாக வாசிப்பின் தேவை எத்தகையது? என்பதை ஆர். சண்முகசுந்தரம் நன்கு உணர்ந்தவர். அவரது படைப்புக்கான பயிற்சிக்களம் குறித்து தனது நூலில் சிற்பி பாலசுப்பிரமணியம் இவ்வாறு கூறுகிறார், ‘எழுத்துக்கு இன்றியமையாத ஒன்று படிப்பு. கண்ணில் பட்டதையெல்லாம் படித்தார் சண்முகசுந்தரம். இதுகுறித்து அவரே பேசியிருக்கின்றார்.

“புரிந்துகொள்ளும் பருவம் வந்ததும் நானாக அல்லி அரசாணி மாலையிலிருந்து அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவரை படித்தேன். கவிதைகளிலே எனக்கு இயல்பான காதல். சங்க இலக்கியத்திலிருந்து தற்கால வெற்றுச் செய்யுள்கள் வரை ஒரு நோட்டம் விட்டிருக்கிறேன்.”

இக்குறிப்பு மிகவும் முக்கியமானது. நவீன இலக்கியத்தில் பணி செய்யப் புறப்படும் ஒரு படைப்பாளி பெற வேண்டிய பயிற்சிக்களம் எது என்பது இதனால் புலனாகின்றது. குறிப்பாக பாரதியும், கம்பனும், சண்முகசுந்தரத்துக்குள் ஆளுமையை வளர்ப்பதற்கு மூலக்கனலாக விளங்கி இருக்கிறார்கள். எல்லா நாவல்களிலும் இந்த அடையாளத்தை பார்க்க முடியும்’ என்கிறார் சிற்பி.
வட்டார வாழ்வியலை படைப்பிலக்கிய மாக்கிய முன்னோடி ஆர்.சண்முகசுந்தரம் வழியாக தொடங்கிய வரிசை, கரிசல் கி.ரா, ஹெப்சிபா ஜேசுதாசன், நீல.பத்மநாபன், ஆ.மாதவன், நாஞ்சில் நாடன், பொன்னீலன், பூமணி, தி.ஜானகிராமன், சா.கந்தசாமி, கு.சின்னப்ப பாரதி, பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், அப்பணசாமி, கண்மணி குணசேகரன் என நீண்டுக்கொண்டே வளர்ந்து வருகிறது.

“பணத்தை அளவுகோலாக வைத்துக்கொண்டு என்னை மதிப்பவர்களை நான் மதிப்பதில்லை. வறுமையை நான் விரும்பியே ஏற்றுக்கொண்டேன். நான் போய்விட்டாலும், என் எழுத்துகள் நிற்க வேண்டும்’’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் மெய்படுகின்றன. மனிதர்களையும், சமூகத்தையும், மண்ணையும் நேசித்தவை ஆர்.சண்முகசுந்தரத்தின் எழுத்துக்கள். தனது 60 வயதில் 1977 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரது எழுத்துக்கள் தொடர்ந்து பிறப்பெடுத்துக் கொண்டே வருகின்றன. அதுதான் அவர் எழுத்தின் சிறப்பு!.

பிற படைப்புகள்

Leave a Comment