சமகால சிறுகதைகளின் பரிணாமம்
சுநீல் கிருஷ்ணன்

by olaichuvadi
புதுமைப்பித்தன்

கட்டுரைக்கு முன்

2018 ஆம் ஆண்டு இறுதியில், ‘யாவரும்’ பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில், சமகால சிறுகதைகளின் சவால்கள்,’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையை இந்தக் கட்டுரையின் முதல் விதை என சொல்லலாம். அதேயாண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலும் காரைக்குடி அருகே கண்டனூரிலும் ‘ஐந்திணை’ அமைப்பின் இரண்டு கூடுகைகள் சமகால சிறுகதைகள் குறித்து விவாதித்தன. அநேகமாக மொத்தம் இருபது சிறுகதை தொகுப்புக்கள் குறித்து கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. பிறகு கடந்த ஆண்டு மலேசிய பயணத்தின்போது சமகால சிறுகதைகள் குறித்து ஒரு அரங்கை ம. நவீன் ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக மேலும் சில தொகுதிகளை வாசித்து விரிவாக்கி எழுதத் தொடங்கிய கட்டுரை பின்னர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ஈரோடு சிறுகதை முகாமில் சமகால சிறுகதைகள் பற்றிய அமர்வுக்காக மேலும் விரிவடைந்தது.. எனினும் இந்தக் கட்டுரையை அப்போது முடித்து பதிப்பிக்காமல் வைத்திருந்தேன்.

காரணம் சில முக்கியமான சிறுகதை தொகுப்புக்கள் எனக்கு வாசிக்க கிடைக்கவில்லை. அவை விடுபட்டுவிடக் கூடாது என எண்ணினேன். இதற்கிடையே கடந்த ஆண்டு மேலும் இருபது எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புக்கள் வெளியாகிவிட்டன. இந்த பத்தாண்டுகளில் வெளியான அனைத்து தொகுப்புக்களையும் வாசித்து முடித்துவிட முடியாது எனும் உண்மையை உணர்ந்தாலும், வாசிக்காத தொகுப்புக்கள் நோக்கியே மனம் குவிந்தது. வாசிக்க தவறுவதால் நாம் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரத்தை மறுக்கிறோம் எனும் உணர்வு இப்போதுவரை மேலிடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த கட்டுரையை முடிக்கவோ வெளியிடவோ வேண்டாம் எனத் தோன்றி வரைவு பிரதியாக சேமித்து அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கினேன்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விமர்சகர் ந. முருகேசபாண்டியன் அந்திமழையில் இருபதாண்டு கால தமிழ் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியதை வாசித்தபோது முக்கியமான எழுத்தாளர்கள் என நான் நம்பும் பலரும் அதில் இடம்பெறவில்லை என்பதை கவனித்தேன். அச்சிதழில் பக்க வரையறைக்குள் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் கட்டுரை விரிவான பார்வையை அளிப்பது. இக்கட்டுரை பலவகையில் அவருடைய கட்டுரையுடன் ஒத்துபோகிறது. ஏறத்தாழ அதே கோணங்களை விரிவாக்குகிறது. இணைய இதழ் என்பதால் பக்க வரையறைகள் சிக்கலில்லை.

ஒரு சிறுகதை தற்காலத்தில் உரையாடல் தளத்தில் எதிர்கொள்ளப்படுகிறது என்றால் ஏதோ ஒரு வகையில் சமகாலத்து பொதுவான பண்புகளுடனும், பொதுவான பேசுபொருள்களுடனும், பொதுவான அக்கறைகளுடனும் தொடர்பு கொண்டதாக இருக்கக்கூடும். ப.சிங்காரமும், எம்.எஸ் கல்யாண சுந்தரமும் அப்படி சமகால பொருத்தப்பாடு இல்லாதவர்கள்தான். பிற்காலத்தில் அவர்கள் கண்டடையப்படுகிறார்கள். வெகு சமீபத்தில் ந. சிதம்பர சுப்பிரமணியத்தின் ‘மண்ணில் தெரியுது வானம்’ சாரு நிவேதிதாவின் பழுப்புநிற பக்கங்கள் கட்டுரையால் மீள் கண்டுபிடிப்பு செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது. எந்த ஒரு விமர்சனத்திற்கும் இந்த சாத்தியமும் எல்லையும் உண்டு என்பதை மனதில் கொண்டே உரையாடலை தொடங்கவேண்டும். முக்கியமான அல்லது முக்கியமற்ற சிறுகதை தொகுப்புக்களை வாசிக்காமல் வரையறை செய்ய இயலாது. மேலும் சமகால கதைகளை மட்டுமே தொடர்ந்து வாசிப்பது என்னுள் இருக்கும் வாசகனுக்கு அயர்ச்சியை அளிப்பதாகவும் இருந்தது. இன்னும் வாசித்தாக வேண்டிய முக்கியமான தமிழ்/ இந்திய/ உலக இலக்கிய கிளாசிக்குகள் இத்தனை உள்ளபோது இந்த தேன்கூட்டை கலைக்கும் வேலையை செய்யத்தான் வேண்டுமா எனும் கேள்வி நியாயமானதே. விமர்சகன் ஒரு தேடல் ஆய்வாளர் (explorer) அவர் தனது வசதி வட்டத்திலிருந்து வெளியேறி அரிதான, புதிய ஏதோ ஒன்றை கண்டடையும் முனைப்புடன் விருப்பு வெறுப்பின்றி முனைய வேண்டும். ஆய்வின் பெரும்பான்மை நேரம் வழமையானவற்றைதான் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயங்களில் ஆய்வுகள் எதையுமே கண்டடையாமல் கூட முற்று பெறலாம். ஆனால் அப்போதும் அது தேடுதலின் ஒரு பகுதிதான். அரிதான ஒன்றை கண்டுகொள்ளும்போது கிட்டும் லாகிரிக்காக பிற அனைத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்.

தோராயமான ஒரு கணக்கெடுப்பில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் சுமார் 120 சிறுகதை எழுத்தாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை பெரும் திகைப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்கிறது. இவர்களிலிருந்து குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்கள் என வரையறை செய்தால் கூட நாற்பது எழுத்தாளர்களாவது இருக்கக் கூடும்.. இந்த கட்டுரை முழுமையான ஒன்றோ இறுதியான ஒன்றோ அல்ல. இது ஒரு பட்டியலும் அல்ல. இந்த கட்டுரைக்காக மொத்தம் அறுபது சிறுகதை தொகுப்புகள் வாசித்திருக்கிறேன். வாசிப்பில் விடுப்பட்ட முக்கியமான எழுத்தாளர்கள் என ஒரு பத்து பேரையாவது சொல்ல முடியும். இவர்களைத் தவிர்த்து இன்னமும் தொகுப்பு வெளியிடாத முக்கியமான தமிழ் எழுத்தாளர்களும் கணிசமாக இருக்கிறார்கள். குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நூறு கதைகளாவது தமிழில் வெளியாயின. ஆகவே இந்த எல்லைகளை கணக்கில் கொண்டே இக்கட்டுரையை எழுத முற்படுகிறேன். இக்கட்டுரையில் சுட்டப்படும் கதைகள் எல்லா சமயங்களிலும் அத்தொகுதியின் அல்லது எழுத்தாளரின் சிறந்த கதைகளாக இருக்க வேண்டியதில்லை. பேசுபொருளின் பொதுத்தன்மை மற்றும் தொடர்ச்சியின் காரணமாகவும் அவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் கதைகள் பற்றி முன்னர் எழுதிய கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளை ஆங்காங்கு பயன்படுத்தியிருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சிறுகதைகளை பற்றிய ஒரு பறவை கோணத்தை, அவற்றின் சில பொது போக்குகளை கோடிட்டுக் காட்டி, அவற்றின் செல்திசையை அனுமானிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையில் பேசப்படும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் முதல் சிறுகதை தொகுப்புக்களை கடந்த பத்தாண்டுகளுக்குள் வெளியிட்டவர்கள்தான். எனினும் கே.என்.செந்தில், லக்ஷ்மி சரவணகுமார், சிவகுமார் முத்தையா, குமாரநந்தன் போன்றோர் சில விதிவிலக்குகள். இவர்கள் இரண்டாயிரங்களுக்கு மத்தியிலிருந்தே எழுதி தொகுப்பு வெளியிட்டவர்கள். அதே காலக்கட்டத்தில் அறிமுகமான வேறுபல முக்கிய எழுத்தாளர்களை கட்டுரைக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கறாராக எந்த காரணங்களும் இல்லை.

ஒரு காலக்கட்டத்தில் வெளிவந்த சிறுகதைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு திசை இருக்க முடியுமா? இருக்கும் என்றால் எழுத்தாளர் காலத்தின், வரலாற்றின் ஊடகம் மட்டும்தானா? என்னவிதமான விதிகள் மீறப்பட்டுள்ளன? எவ்விதத்தில் முந்தைய படைப்புகளுடன் நீட்சி கொள்கின்றன? எம்மாதிரியான சவால்களை இன்றைய சிறுகதைகள் எதிர்கொள்கின்றன? இவையே நான் விவாதிக்க விரும்பும் கேள்விகள்.

1

‘அரேபிய இரவுகள்’ ‘ஈசாப் நீதி கதைகள்’ ‘பஞ்ச தந்திர கதைகள்’ ‘நாடோடி கதைகள்’ என சிறிய வடிவிலான கதைகள் நம் மரபில் நெடுங்காலமாக புழங்கி வருபவைதான். நவீன இலக்கியம் வரையறுக்கும் ‘சிறுகதை’ ஒரு வகையில் அதன் முந்தைய கதை வடிவங்களின் நீட்சியாகவும், மற்றொரு வகையில் அதனிடமிருந்து விலகியதாகவும் தன்னை நிறுவிக் கொள்கிறது. துவக்க கால சிறுகதைகள் முடிவின் திருப்பத்தை நம்பி செயல்பட்டன. நவீன சிறுகதை அமெரிக்க ஐரோப்பிய தாக்கம் வழியாக தமிழிற்கு வந்து சேர்ந்தது. ஜாக் லண்டன், ஒ ஹென்றி, மாப்பசான், செகாவ், ஹெமிங்க்வே ஆகியோர் ஆரம்பகால தமிழ் புனைவுலகில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தினர். சிறுகதை வடிவம் சார்ந்த புரிதலை தமிழ் புனைவுலகு இவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தனக்கென உள்ள தனித்துவமான கருப்பொருட்களை சிறுகதைக்குள் கொணர்ந்தது. புதுமைப்பித்தனின் ‘அந்த இரவு’ காலகட்டத்திலேயே அவை மீறப்பட்டன.

சிறுகதை இலக்கணம் என்பது ஒரு தோராயமான வரையறை மட்டுமே. மீறல்கள் வழியாக புதிய சாத்தியங்கள் அடையப்படும்தோறும் சிறுகதையின் எல்லைகள் விரிந்தபடி உள்ளன. சிறுகதை இலக்கணம் என்பது துல்லியமான, இறுக்கமான, பின்பற்றியே ஆக வேண்டிய விதியல்ல. படைப்பூக்கம் மிகுந்த மனம் இலக்கணங்களை மீறியே செயல்படும். எனினும் விதிமுறைகளை அறிந்து அவற்றை சுயவிருப்பின் பேரில் மீறுவதற்கும், விதிமுறைகள் பிடிபடாமல் தான்தோன்றித்தனமாக எழுதுவதற்கும் இடையிலான வேறுபாடு வாசிப்பின் வழி உணரப்படும்.

தமிழின் முதல் சிறுகதை என கொண்டாடப்படும் ‘குளத்தங்கரை அரசமரம்’ வ.வே.சு ஐயர் எழுதியது. முந்தைய தேவதை கதைகளின் நீட்சியை கொண்டிருந்தது. ஒரு அரச மரம்தான் கதைசொல்லி. ஆனால் தேவதை கதைகள் சொல்வதுபோல் ஒரு அரசகுமாரியின் கதையை சொல்லவில்லை. வரதட்சிணை கொடுமையில் இறந்துபோன, தான் பார்த்து வளர்ந்த பெண்ணைப் பற்றிய கதையை சொல்கிறது. நவீன இலக்கியம் முந்தைய கதை மரபுகளில் இருந்து எங்கே வேறுபடுகிறது என்றால், அதன் உள்ளீடாக ஏதோ ஓர் அளவில், ஒரு தரத்தில் சமூக விமர்சனத்தை படைப்பின் நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதில்தான். ஒரு சன்னமான முனகலாகவாவது வாழ்க்கையின் மீதான விமர்சனத்தை பதிவு செய்கிறது. இந்த ஒரு இயல்பையே நவீன இலக்கியத்தின் ஒற்றை பொது வரையறை எனக் கொள்ளலாம்.

ஜெயகாந்தனின் ஹென்றியை அல்லது வண்ணதாசனின் கதைமாந்தர்களை எப்படி இந்த வரையறையில் பொருத்துவது? முழுக்க நேர்மறைத்தன்மை கொண்ட, லட்சிய கதை மாந்தர்கள்கூட நடைமுறை வாழ்வின் மீதான விமர்சனத்திலிருந்து எழுபவர்கள்தான். அவர்கள் கதைகள் வழியாக செல்திசையை சுட்டிக்காட்ட முயல்கிறார்கள். மனிதன் உழன்று கொண்டிருக்கும் சேற்றிலிருந்து தலை உயர்த்தி அவனுக்கு சில உன்னதங்களை காட்டுகிறார்கள். ஒளியை நோக்கி நீளும் விரல்கள் சுற்றிப் படர்ந்த இருளின் சாட்சிகள். கதைகள் வழியாக படைப்பாளி சமூக நெறிகளுடன் மோதிக் கொண்டே இருக்கிறார். அதன் வரையறைகளை கேள்விக்குள்ளாக்குகிறார். நொடிக்கொருமுறை கலகம் என பறைசாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இல்லை என்றாலும் எழுத்து என்பதோர் கலகச் செயல்பாடுதான்.

சிறுகதையின் வடிவமும் பேசு பொருளும் காலந்தோறும் மாறி வருகிறது. தமிழை பொறுத்தவரை புதுமைப்பித்தன் நவீனத்துவ எழுத்தின் முதன்மை முகம். தொன்ம மீட்டுருவாக்கம், பாலியல் சிக்கல், சமூக விமர்சனம், மிகுபுனைவு, உளவியல் கதைகள், மாயக் கதைகள் என இப்படி இன்று எழுதப்படும் எந்த வடிவத்திலான சிறுகதையை எடுத்துக் கொண்டாலும் அதன் வேர்களை நாம் புதுமைப்பித்தனிடம் கண்டுகொள்ளலாம். பொதுவாகவே விமர்சகர்கள் முன்வைப்பது போல் தமிழின் சிறுகதை மரபு வலுவானது. வாசகனுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளிப்பதை நோக்கமாக கொண்டிருந்த முதல் நிலையில் இருந்து, ஒரு நிகழ்வை காட்சிப்படுத்தி அதன் விளைவுகளை வாசகனின் கற்பனைக்கு விடுவது, கதையற்ற கதை, நிகழ்வுக் கோவை, சிதறிய நிகழ்வுகளின் சித்தரிப்புத் தொகை என காலப்போக்கில் சிறுகதை பரிணாமம் கொண்டபடி இருக்கிறது.

நவீனத் தமிழ் இலக்கியம் காலந்தோறும் சிற்றிதழ் யுகங்களாகவே வரையறை செய்யப்படுவது வழக்கம். ‘மணிக்கொடி’ யுகம், ‘கசடதபற’ யுகம், ‘மீட்சி’ யுகம், ‘நிறப்பிரிகை’ யுகம் என தொண்ணூறுகள் வரை வரையறை செய்ய இயலும். இவை சிற்றிதழ் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட வகைமாதிரியான எழுத்துக்கள், மெய்யியல் சார்பை வெளிப்படுத்தின. எண்பதுகளில் ‘கணையாழியில்’ எம்மாதிரியான கதை வெளிவரும், ‘மீட்சியில்’ எம்மாதிரியான கதைகள் வெளிவரும் எனும் புரிதல் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இருந்தது. 2000 க்கு பின்பான காலகட்டத்தை சிற்றிதழ் தலைமையை விடுத்து இணைய யுகம் என பொதுவாக அடையாளப்படுத்தலாம்.

ஊடகத்திற்கும் படைப்புகளுக்கும் தொடர்புண்டா? வரலாறு முழுவதும் படைப்பிற்கும் அதன் வெளிப்பாட்டு ஊடகத்திற்கும் தொடர்பு உண்டு. ஓலைச்சுவடிகள் பாடல்களுக்கு உகந்தவை. அச்சு தொழில்நுட்பம் பரவலானதும் உரைநடையின் வீச்சு கூடியது. கணினித் தட்டச்சு சாத்தியமானதற்கும் தமிழில் பெருநாவல்கள் உருவான காலக்கட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த எழுத்தாளர் எண்ணிக்கை வருவதற்கு இணையமும், 2000களில் முனைப்புடன் செயல்பட்ட வலைத்தளங்களும் முக்கிய காரணம். அச்சு ஊடகங்கள் என்பது குறுகிய பாதையாக, வெகு சிலருக்கே சாத்தியமான ஒன்றாக இருந்து வந்த சூழலில் வலைத்தளம் நமக்கான கதைகளை, நமக்கான நிகழ்வுகளை எழுதுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. அச்சு ஊடகத்தில் ஒரு படைப்பு வெளியாக அந்த இதழ் முன்வைக்கும் ரசனை வட்டத்திற்குள் பொருந்தி வரவேண்டும். எவரும் வாசிக்கக்கூடிய, அணுகக்கூடிய, பணம் செலவு செய்யவேண்டிய தேவையற்ற, ஊடகமாக இணையம் வாயிலை அகலத் திறந்துவிட்டது. வெவ்வேறு வாழ்க்கைப் பின்புலத்தை சேர்ந்தவர்கள் எழுத வந்தபோது உண்மையில் இது ஒரு எழுத்துப் புரட்சி என்றே நம்பினேன். வலைதளங்களில் எழுதப்பட்ட கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் அப்படியே தொகுப்பாகி புத்தகங்கள் ஆகின. புத்தகம் பதிப்பிப்பது எளிதானது. ஓரளவு நேர்த்தியாக எழுதத் தெரிந்திருந்தால் பதிப்பகங்கள் தேடி வந்து பிரசுரித்தன. இணைய எழுத்தாளர் என அறியப்பட்டாலும் புத்தகம் வெளியிடுவதின் மீதான மதிப்பு குறையவில்லை. ஒருவகையில் அது இந்த உலகிற்கு தானொரு எழுத்தாளர் என தனது தகுதியை அறிவித்து கொள்வதற்கான சடங்காக உருமாறியது. இணைய எழுத்துக்களை பதிப்பிக்க முதன்மை நவீன இலக்கிய பதிப்பகங்கள் தொடக்கத்தில் தயங்கின. இணைய எழுத்து தனக்கான புதிய பதிப்பாளர்களை உருவாக்கியது. இந்த இருபது ஆண்டுகளில் மட்டும் எத்தனை பதிப்பகங்கள் வந்துள்ளன என்பதை கவனித்துப் பார்க்கலாம்.

வலைதளத்தில் எழுதுபவர்களும் தங்களை எழுத்தாளர்களாகவே முன்வைத்தார்கள். தமிழின் முக்கிய எழுத்தாளர்களும் நேரடியாக வலைதளங்களில் எழுதத் தொடங்கினார்கள். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் என மூவரும் தமிழ் இலக்கியத்தின் மூன்று முன்னணி எழுத்தாளர்களாக அறியப்பட்டதற்கு அவர்கள் இணையத்தை பயன்படுத்திக் கொண்டது மிக முக்கியமான காரணம். சிற்றிதழ் வாசக பரப்பிலிருந்து எண்ணிக்கை ரீதியாக பெரும் தாவலை நிகழ்த்தினார்கள். ஆயிரக்கணக்கான வாசகர்களையும் பல எழுத்தாளர்களையும் உருவாக்கியதில் இவர்களுடைய இணைய இருப்பு மிக முக்கிய பங்காற்றியுள்ளது.

ஆறேழு ஆண்டுகள் நீடித்த வலைத்தள யுகத்தின் இயல்பான நீட்சி இரு தளங்களில் நிகழ்ந்தது. இணைய வெளியில் ஒத்த ரசனையுடைய நண்பர்களை கண்டுகொண்டவர்கள் கூகுள் குழுமங்களாக இயங்கினர். ‘மரத்தடி’ ‘பண்புடன்’ போன்றவற்றையும் பிற்காலத்தில் ‘சொல்புதிது’ போன்றவற்றையும் அப்படியாக அடையாளப்படுத்தலாம். இணைய குழுமங்கள் இணைய இதழ்களாக பரிணாமம் அடைந்தன. ‘திண்ணை’ ஒரு உதாரணம். ‘திண்ணை’ ‘சொல்வனம்’ ஆகியவை நவீன தமிழ் இலக்கியத்திற்கான முதல் இணைய இதழ்கள். சொல்வனம், பதாகை, வல்லினம், கபாடபுரம், ஆம்னிபஸ், இன்மை, யாவரும், கனலி, வாசகசாலை, மின் தமிழ், ஓலைச்சுவடி, அரூ என தொடர்ச்சியாக இலக்கிய இணைய இதழ்கள் தோன்றி ஆரோக்கியமாக பெருகி வருகின்றன. குவிந்து கிடக்கும் இணைய எழுத்துக்களிலிருந்து நல்லவற்றை தனித்து காட்ட ஒரு வடிகட்டி வேண்டியதாக இருந்தது என்பதே இணைய இதழ்கள் உருவாவதற்கான காரணம். இணைய இதழ்கள் சிற்றிதழ்களுடன் சில ஒற்றுமையை கொண்டிருந்தன. பெரும்பாலும் தனிமனிதரின் அல்லது சிறிய குழுவின் ஆர்வத்தில் இயங்குபவையாக இருந்தன. ஆனால் சிற்றிதழ்களில் மிக முக்கியமான வேறுபாடு என்பது தனித்துவமின்மை என சொல்லலாம். இன்று எவரும் எந்த இணைய இதழிலும் எழுதலாம். அல்லது சில பெயர்களை நாம் அனைத்து இணைய இதழ்களிலும் காண முடியும்.

வலைப்பூக்களின் யுகம் ஃபேஸ்புக் வரவுடன் முடிவுக்கு வந்துவிட்டது. சிறுபான்மை வலைப்பூ எழுத்தாளர்கள் இணைய இதழ்களில் புகலிடம் தேடிக்கொண்டார்கள் என்றால் பெரும்பான்மையினர் சமூக ஊடகங்களை நோக்கி சென்றார்கள். இப்போது தமிழ் மணம், தமிழ் வெளி, வலைச்சரம், டோண்டு ராகவன், வால்பையன், இட்லி வடை எல்லாம் ஏதோ சென்ற காலத்தில் ‘அப்பல்லாம் எப்பிடி இருந்துச்சு தெரியுமா’ என நினைவேக்கத்துடன் எண்ணி பார்க்கத்தக்க சேகரங்களாக மாறிவிட்டது. வலைத்தள எழுத்தாளர்கள் பலரும் ஃபேஸ்புக்கில் கால் பதித்தார்கள். அவர்களின் தொடக்ககால பதிவுகள் வலைத்தள பாணியில் நீளநீளமாக இருந்தன. பின்பு எதுவாக இருந்தாலும் மூன்று பத்திகளுக்குள் எழுத வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி உருவானது. அதை மீறி எழுதினால் வாசிப்பதில்லை எனக் கருதி வாசகர்களை கருத்தில் கொண்டு சுருக்கமாக எழுதத் தொடங்கினர். பின்னர் அதைவிடவும் குறுகிய 143 சொற்கள் என எண்ணிக்கை தளைகொண்ட வெளிப்பாட்டு முறைக்கான ஊடகமாக ட்விட்டர் வந்தது. வலைத்தள நட்சத்திரங்கள் ஃபேஸ்புக்கில் பிரபலங்கள் இல்லை. முற்றிலும் வேறுசிலர் உருவாகி வந்தார்கள். ட்விட்டரில் உருவானவர்கள் இன்னும் வேறு. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அமேசான் கிண்டில் ஒரு வாசக பரப்பை தமிழில் உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஐந்து லட்சரூபாய் பரிசு தொகை கொண்ட ‘பென் டு பப்ளிஷ்’ முயற்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நூல்களை பொதுவெளிக்கு கொண்டு வந்தது. எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் நவீன தமிழ் இலக்கியத்திற்கான ஒரு வெளியை கிண்டிலில் ஏற்படுத்தினார். வேறு பல மூத்த எழுத்தாளர்களின் அச்சில் இல்லாத புத்தகங்களை, பழைய சிற்றிதழ்களை கிண்டிலுக்கு கொணர்ந்தார். பிரம்மராஜன், சி. மோகன் விக்கிரமாதித்தியன் என பலரும் கிண்டிலில் வாசிக்க கிடைக்கிறார்கள். மாமல்லன் அளவிற்கே கிண்டிலை பயன்படுத்திக்கொண்ட மற்றொரு முக்கியமான எழுத்தாளர் பா. ராகவன். இன்று கிண்டில் வாசிப்பு கணிசமாக தமிழில் பெருகியுள்ளது.

நவீன இலக்கியத்தில் வழமையாக சிற்றிதழ் வழியாகவே எழுத்தாளர்கள் அறிமுகம் ஆகி வந்தார்கள். குணா கந்தசாமி, கே.என்.செந்தில், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், லக்ஷ்மி சரவணகுமார், சாம்ராஜ், அபிலாஷ் ஆகியோர் இணைய யுகத்திலும் சிற்றிதழ் வழி அறிமுகம் ஆனவர்களே. இவர்களில் கே. என்.செந்தில், லக்ஷ்மி சரவணகுமார், அபிலாஷ் போன்றோர் சமூக ஊடகத்தை இன்று நன்றாக பயன்படுத்தி வருகிறார்கள். வலைப்பூ யுகத்தில் உருவாகி வந்த எழுத்தாளர்கள் என போகன், கார்த்திகைப் பாண்டியன், ரா. கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன், பாலகுமார் விஜயராமன், நேசமித்திரன், கார்த்திகை பாண்டியன், ஹரன் பிரசன்னா ஆகியோரை உதாரணங்களாக குறிப்பிடலாம். ஃபேஸ்புக் யுகத்தில் இருந்து உருவானவர்களில் சரவண கார்த்திகேயனையும், சரவணன் சந்திரனையும், அராத்துவையும் உதாரணங்களாக சொல்லலாம். ட்விட்டர் நமக்கு பேயோனைத் தந்தது. என். சொக்கன், பா. ராகவன் போன்றோரும் ட்விட்டரை நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.

இணையம் வழி வந்தவர்களுக்குள்ள முக்கியமான பொதுக்கூறு என்பது பகடி எனத் தோன்றுகிறது. திருவுருக்களை ஐயப்படும், கேலி செய்யும், காலம். இந்த போக்கு தொன்றுதொட்டு தமிழ் சமூகத்தில் உண்டென்றாலும் இணையம் இந்த போக்கை பரவலாக்கியது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இணைய உலகம் எத்தனை மீம்களை உருவாக்கியுள்ளது என்பதை கவனித்தால் தெரியும். தனி வாழ்வு தொடங்கி அரசியல் வரை எல்லாமும் இங்கே மீம்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அசலான படைப்பூக்கம் தெறிக்கும் மீம்கள் வெகு அரிது என்றாலும் கூட படைப்பூக்கம் மிகுந்த முனைப்புடன் இயங்கும் தளம் என இதையே சொல்ல முடியும். அவ்வகையில் இந்த காலக்கட்டத்திற்கான முதன்மை இலக்கிய வெளிப்பாட்டு முறை என குறுங்கதைகளை சுட்டிக் காட்டலாம். குறுங்கதைகளின் சாத்தியத்தைப் பற்றி உணர்வதற்கு பேயோனின் ஒரு கதையை சுட்டலாம். ‘சொந்த ஜென் கதைகள்’ என ஒரு வரிசை குறுங்கதைகளை அவர் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ‘திடீர்ப் பழம்’ எனும் கதையை எடுத்துக் கொள்ளலாம்.

“ஒரு பயணி வயல்களின் வழியே பயணித்துக் கொண்டிருந்தபோது புலி ஒன்று எதிரில் வந்தது. அவன் தப்பியோட, புலி துரத்தியது. ஓர் உயர்ந்த பாறையின் உச்சிக்கு வந்த பயணி, அதன் விளிம்பிலிருந்து தாவி எதிரே இருந்த காட்டுக்கொடியைப் பிடித்துக்கொண்டு தொங்கினான். அவன் தலைக்கு மேலே புலி நின்று உறுமியது. அவனுக்குக் கீழே இன்னொரு புலி அவனைச் சாப்பிடக் காத்திருந்தது. அந்தக் கொடி மட்டுமே அவனைத் தாங்கியது. இரு சுண்டெலிகள் அந்தக் கொடியை மெல்லக் கடித்துத் தின்னத் தொடங்கின. அப்போது தன் கையருகே ஒரு ஸ்ட்ராபெரிப் பழம் தொங்கிக் கொண்டிருந்ததை அவன் பார்த்தான். கொடியை ஒரு கையால் பிடித்துத் தொங்கியபடி இன்னொரு கையால் ஸ்ட்ராபெரியைப் பறித்துத் தின்றான். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!”

நாமறிந்த வழமையான கதைதான் ஆனால் எத்தனை நுண்மையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதை அபாரமான கதையாக ஆக்குகிறது. வாழ்வு என்பதொரு இனிமை, வாழ்விச்சையை குறிக்க சொல்லப்படும் கதை இங்கே அதை நிராகரிக்கும் கதையாக உருமாற்றம் கொள்கிறது. போகனின் போகப் புத்தகம்’ பகடியும் கூர்மையும் நிறைந்த குறுங்கதைகளின் தொகுப்பு. பெருந்தேவியின் குறுங்கதை தொகுப்பான ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ குறுங்கதையின் வடிவத்தையும் சடதியத்தையும் நன்கு பயன்படுத்தி எழுதப்பட்ட தொகுப்பு. பேயோன், பெருந்தேவி, போகன் மூவருமே கவிஞர்கள் என்பதையும் செறிவான வாசிப்பு உடையவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மரபான சிறுகதை அளிக்கும் ஒன்றை அதைவிட செறிவாக மிகக் குறைவான சொற்களில் குறுங்கதைகள் அளித்துவிட முடியும். சிவசங்கர் எஸ்.ஜே-யின் ‘சர்ப்பங்கள் அவளை வஞ்சிப்பதில்லை’ அப்படி சில குறுங்கதைகளை கொண்டுள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘பின்னணி பாடகர்’ குறுங்கதை தொகுப்பு வெளியாகி உள்ளது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ச்சியாக குறுங்கதைகள் எழுதி வருகிறார். கே.என்.செந்தில், இளங்கோ கிருஷ்ணன், த. அரவிந்தன், அராத்து, தயாஜி ஆகியோரும் குறுங்கதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். குறுங்கதைகள் ஈட்டியை போன்றவை. அதன் கூர்மை இலக்கை அடைந்தால் மட்டுமே உணரப்படும். அதன் சிக்கலே அது எல்லா சமயங்களிலும் இலக்கைத் தைப்பதில்லை என்பதுதான்.

இணையம் மற்றும் தொழில்நுட்பம் இந்த இருபது ஆண்டுகளில் காட்சியூடக பெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தலைமுறையின் எழுத்துக்களுக்கு நிகழாத ஒன்று என்று இதை சொல்லலாம். ஒன்றின் தனித்தன்மையே அதன் எல்லையாகவும் ஆகிவிடுவது. முந்தைய காலத்து இயல்புவாத எழுத்துக்களில் விரிவான காட்சி சித்தரிப்புகளை வாசிக்க முடியும். அவை வாழ்விலிருந்து எடுத்தாளப்பட்டவை. இன்றைய கதைகளின் சிக்கல் அதன் காட்சி விவரணைகள் காட்சி ஊடக பாதிப்பில் நிகழ்பவையாக தோற்றம் கொள்கின்றன. புற உலகில் கவனமற்ற இரு தலைமுறைகள் உருவாகியுள்ளன. அதிகமும் அகச்சிக்கல்கள் பேசுபொருளாக அமைவதற்கு மனம் வெளியுலகை நோக்கி குவியாததும் ஒரு முக்கியமான காரணம் என்றே தோன்றுகிறது. இன்றைய நவீன எழுத்தாளரின் மிகப் பெரிய சவால் என்பது அவர் மீது கவியும் காட்சி ஊடக அலையிலிருந்து எப்படி தப்பித்து அசலாக எழுதுவது? அல்லது குறைந்தபட்சம் அந்த பாதிப்பை படைப்பூக்கத்தோடு பயன்படுத்திக்கொள்ள முடிகிறதா?

பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் கதைகள் நிலமின்மையை சாதகமான கதைக்கூறாக பயன்படுத்திக் கொள்கின்றன. உலகையே சந்தையாக காணும் கண்ணோட்டத்தின் வழி அது சாத்தியமாகிறது. இன்று ஒருவர் தான் சென்றேயிராத நேரில் பார்த்தேயிராத நிலத்தையும் சூழலையும் கதைக்குள் கொண்டுவந்துவிட முடியும். இது தவறு/ பிழை என சொல்லிவிட முடியாது. இது பல புதிய சாத்தியங்களை உருவாக்கி அளிக்கிறது. ஒரு படைப்பிற்கு அனுபவமா? கற்பனையா? எது ஆதார ஆற்றல்? இதுவும் எக்காலத்திலும் விவாதிக்கப்படும் அறுதி முடிவற்ற கேள்வி. என் நோக்கில் கற்பனை முதன்மையானது. அனுபவமின்றி எழுத்தாளர் எழுதிவிட முடியும் கற்பனையின்றி முடியாது. மேலும் அனுபவம் பலருக்கும் வாய்ப்பது, கற்பனை படைப்பாளிக்கு மட்டுமே திகைவது. கற்பனை ஆற்றலுக்கு மேலதிகமாக அனுபவம் உதவும். சாதனாவின் கதைகள் ரஷ்ய பனிப்பொழிவில், கிராமங்களில் நிகழும்போது அது எவ்வித தடையுமின்றி வாசிக்க முடிகிறது.

முற்காலத்திலும் வாசிப்பின் வழியாக அடையப்படும் நிலக்காட்சிகளை படைப்புக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதைவிட நுண்மையாக காட்சி ஊடகத்தின் பாதிப்பு படைப்பாளியின் மனதில் நிகழ்கிறது. அவரை அறியாமலேயே கதையில் வெளிப்படவும் செய்கிறது. கதையில், நாவலில் சில இடங்கள் தழுவி எழுதப்பட்டதாக வாசகர்கள் சொல்லும்போது பல சமயங்களில் எழுத்தாளருக்கே அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். மேலும் கதைப் போக்கையும் காட்சியூடகம் பாதிக்கிறது. கதையை ‘ஷாட்களாக’ துண்டாக்கி எழுதும் வழக்கமும் உள்ளது. அசோகமித்திரன் இதை ‘ஜம்ப் கட்’ உத்தி என சொல்கிறார். இந்த உத்தி நம் கவனத்தை கதையில் ஓரிடத்தில் குவிய விடாமல் பார்த்துக் கொள்வதை நோக்கமாக கொண்டது. சிதறிய வடிவத்தை பயன்படுத்துவது. போகன் ‘திகிரி’ தொகுப்பில் பல கதைகளை இவ்வண்ணம் எழுதியுள்ளார். கே. என் செந்திலின் ‘அகாலம்’ தொகுப்பின் கதைகள் யதார்த்த கதைகள் என்றாலும் கூறுமுறையில் வெட்டி வெட்டி துண்டுகளாக சொல்லப்படுகின்றன. எஸ்.ஜே.வயலட்டின் ‘ஊதா நிற ஸ்கர்ட்’ கதைகளிலும் கதை துண்டு துண்டாக சொல்லப்படுகிறது. எனினும் அவை ஒரு மையத்தில் கட்டுண்டு போகாத கதைகள். அய்யனார் விஸ்வநாத்தின் ‘தில்லி 06’ கதையும் இத்தகைய தன்மை கொண்டதே. கதையின் சிதறிய வடிவம் எழுதுதிறனின் போதாமையா அல்லது பிரக்ஞைபூர்வ முடிவா? எழுத்தாளரின் ஆளுமை சார்ந்தே இது குறித்து முடிவுக்கு வருகிறோமோ என ஐயமுறுகிறேன். சிதறிய கதை வடிவத்தில் கதை மனதில் காலூன்றி விரிய வலுவான படிமங்கள் வேண்டி இருக்கிறது. அப்படியில்லாத பட்சத்தில் அவற்றை வெறுமே கடந்து சென்றுவிடுகிறோம். அவ்வகையில் அய்யனார் விஸ்வநாத்தின் ‘சமவெளி மான்’ அதன் விந்தையான படிமத்தன்மை காரணமாக மனதில் நிற்கிறது.

இணையத் தொடர்கள், உலக சினிமாக்கள் போன்றவை முற்கால எழுத்தாளர்களுக்கு வாய்த்ததைவிட எளிதாக தற்காலத்தில் வாய்க்கின்றன. ஆனால் இதிலுள்ள சிக்கல் படைப்பாளியின் படைப்பு விழைவை இது சமன்படுத்திவிடுகிறதோ என அஞ்சுகிறேன். எழுதுவதைக் காட்டிலும் அவரை வெறும் நுகர்வோராக ஆக்கிவிடுகிறதோ என்றொரு ஐயம் எனக்குண்டு. கலை வேட்கையை கலைப்படைப்பு கலைஞனுள் தூண்ட வேண்டும். கலையம்சத்தை தொட்டுக்கொண்டு படைக்கப்படும் வணிக படைப்புகள் இதை செய்வதில்லை. தொழில்நுட்பம் வழி காட்சி ஊடகம் பெரும் தாவலை நிகழ்த்தியுள்ளது. இவை அறிவுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக கருதப்படும்போது மேலும் சில சிக்கல்களை இது கொண்டு வருகிறது. ஏனெனில் முழுக்க கேளிக்கை எனும் பிரக்ஞையுடன் வணிக திரைப்படங்களையோ நிகழ்ச்சிகளையோ அணுகும்போது அது படைப்பாளியின்மீது பெரிய தாக்கத்தை செலுத்துவதில்லை. அவர் அதன் எல்லையை/ தேவையை அறிவார்.

இணையமும் காட்சி ஊடகமும் அளிக்கும் சவால்களை நவீன படைப்பாளிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? சிறுகதையின் மரபான வடிவம் மாறுகிறது. அது நாவல் தன்மை கொள்கிறது அல்லது கவிதைக்கு நெருக்கமான மொழியில் புனையப்படுகிறது. குணா கந்தசாமியினுடைய சிறுகதைகள் நாவல் தன்மை கொண்டவை. காட்சி ஊடக பாதிப்பைத் தவிர்ப்பதற்கு எழுத்தாளர்கள் வலுவான அகச்சித்தரிப்பை கைக்கொள்கிறார்கள். குணா கந்தசாமியின் ‘கற்றாழைப் பச்சை’ வலுவான யதார்த்த கதைகளை கொண்ட தொகுப்பு. கொங்கு வட்டார கிராம வாழ்வை பின்புலமாக கொண்டு அவர் எழுதி இருக்கும் கதைகள் ஒரு பக்கமும் நகரப் பின்புலத்தில், நவீன வாழ்வை தொட்டு எழுதிய கதைகள் மறுபக்கமும் அவருடைய கதை புலத்தை ஆழமாக்குகின்றன. அவர் எழுதிய “சுக்கிலம்” கதையை எடுத்துக் கொள்ளலாம் பிள்ளைப்பேறு இந்திய சமூகத்தின் மிக ஆதாரமான இடத்தை வகிப்பது. புராணக் கதைகளில் இருந்தே பிள்ளை வரம் வேண்டும் தம்பதிகளை நாம் காண முடியும். ஆனால் அந்தக் கதைகள் யாவும் வெகு நுட்பமாக பிள்ளைப் பேறு என்பதை பெண் தொடர்பானதாக மட்டும் குறுக்கிவிடும். அவப்பெயர்களை சமூகமும் பெண்ணிற்கே அளித்துவருவது வழக்கம். நவீன காலத்தில்தான் ஆணின் குறைகளும் அவனுடைய சிக்கல்களும் பொதுத்தளத்தில் பேசுபொருள் ஆயின. இக்கதை நவீன வாழ்க்கை சூழலில் வாழும் மரபான ஆண் மனம் கொள்ளும் படபடப்பையும் ஆசுவாசத்தையும் நுட்பமாக சொல்கிறது. அத்தனை நவீனமான பின்னும் அவனுள் மரபான ஆண் மனம் இருப்பதை கண்டுகொள்கிறது. அவனுக்கு குழந்தையின்மை முதன்மை சிக்கல் இல்லை, அந்த குழந்தையின்மைக்கு அவன் காரணமா என்பதே அவன் மனதை வதைப்பது. ஆணின் இயலாமைப் பற்றி சு. வேணுகோபாலின் கூந்தப்பனை பேசுகிறது. ஆனால் இயலாமை என்பதும் குழந்தைப் பேறின்மை என்பதும் வேறு. இங்கே இயலாமை அல்ல அவனுடைய சிக்கல்.

குணா கந்தசாமியின் இந்தக் கதை மிகுந்த சமகால பொருத்தப்பாடு கொண்டது. எழுத்தாளர் சமகாலத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என திரும்பத் திரும்ப சொல்லப்படும் ஒன்று. ஆனால் சமகாலத்தை ஆவணப்படுத்துவதற்கு செய்தி அறிக்கைகளும் கட்டுரைகளும் போதும். ஆவணப்படுத்துவதும் அவசியம்தான் ஆனால் இலக்கியத்தின் முதன்மை பணி சமகாலத்தை அல்லது எதையும் ஆவணப்படுத்துவது அல்ல. மாறாக அதை விசாரணைக்கு உட்படுத்துவது. விமர்சகர்கள் contemporary vs present என இரண்டுக்கும் இடையிலான வேற்றுமையை சுட்டுகிறார்கள். இன்று எழுதப்படும் கதையைவிட மகாபார கர்ணனும் சகுனியும் இன்றைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். செவ்வியல் ஆக்கம் என்பது எப்போதும் ‘இன்றை’ துலங்கச் செய்வது. (present forever). நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் தாஸ்தாவெஸ்கி இன்றைக்கும் பொருத்தப்பாட்டுடன் உள்ளார். சமகால நிகழ்வை அல்லது வழக்கத்தை கதைக்குள் சொல்கிறார் என்பதால் மட்டும் அது முக்கியமான கதையாக ஆகிவிடாது. சமகால நிகழ்வை சொல்வது ஒரு கதையை மதிப்பிட முதன்மை இலக்கிய கருவியாக இருக்க முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன் யவனிகா ஸ்ரீராம் ஒரு நேர்காணலில் எழுத்தாளருக்கு காலத்தை கடக்கும் விழைவு தேவையில்லை, அவர் தன் சமகாலத்தில் நின்று நிகழ்வுகளை எதிர்கொண்டு எதிர்வினை ஆற்றினாலே போதும், என்று கூறியிருந்தார். இது எனக்கு மிகப்பெரிய திறப்பை அளித்தது. எழுத்தாளருக்கு காலாதீத வேட்கை தேவையில்லை, அவர் சமூக நடப்பிற்கு எதிரிவினையாற்றுபவராக இருந்தால் போதும், எனும் நிலைப்பாட்டை இணைய யுகத்தின் எழுத்துப் பிரகடனம் என கொள்ளலாம். காலாதீத விழைவை துறத்தல் படைப்பாளியின் மீதான பெரும் சுமையை அகற்றி இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான படைப்பாளிகளும் படைப்புகளும் உருவாக இந்த அழுத்தமற்ற விடுதலை உணர்வு மிக முக்கியமான காரணம். கேமரா ஃபிலிமில் இருந்து டிஜிட்டல் கேமராவிற்கு மாறியது போல். ஃபிலிம் கேமராவில் ஒரு சுருளைக்கூட விரயமாக்கிவிடக் கூடாது எனும் தன்னுணர்வு வழிநடத்தும். உரிய தயாரிப்புகள் செய்துகொண்டு, சரியான ஒளி அமைப்பை கவனித்து முனைப்புடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். டிஜிட்டல் கேமிரா இத்தகைய தளையை அறுத்தது. எடுத்துத் தள்ளலாம். ஆனால் வெகு சில புகைப்படங்களே அரிதாக சரியாக அமையும். எழுத்திலும் இதே சிக்கல் நிகழ்வதை உணர முடிகிறது. எனக்குள் இது பல கேள்விகளை எழுப்பியது. படைப்பாளி வெளிப்படையாக பறைசாற்றிக் கொள்ளாவிட்டாலும் அவருடைய ஆழுள்ளத்தில் மரணத்தை வெல்லும் விழைவு இருக்கும். அதுவே அவரை படைப்பாளியாக இயக்குவது.

ஒரு கற்பனையான வருங்கால சமூகத்தை கண் முன் உருவகித்து அவர்களை நோக்கி தனியே தன் மனதில் அமைந்த மேடையில் பேசிக் கொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்கள் என்பதே என் நம்பிக்கை. காலாதீத விழைவு படைப்பாளியை நெறிப்படுத்தும் விசையாக, அவர் படைப்புகளை செம்மைப்படுத்தும் ஆற்றலாக திகழ்கிறது என்பதே என் நம்பிக்கையாக இருந்தது. கண்ணுக்கு புலப்படாத, அல்லது தான் வாழ்ந்து காண முடியாத காலத்திடம் படைப்பின் பெறுமதியை விட்டுவிடுவதைக் காட்டிலும் இன்றைய நாளுக்கான வாசகனை நோக்கி இன்றைய சிக்கலை பேசுவது மேல் எனும் தேர்வை இன்றொரு படைப்பாளி மேற்கொள்ள முடியும். காலத்தின் மதிப்பீடு நிச்சயமற்று இருக்கும்போது குறைந்தபட்சம் இன்றைக்காவது வாசிக்கப்படுவது முக்கியம் எனும் நிலைப்பாட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

செவ்வியல் நாட்டம் கொண்ட எழுத்தாளர்கள் ஒருபோதும் காலாதீத விழைவை கைவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஒரு கதைக்கரு தன்னியல்பாக வளர்ந்து உருவடைந்து உரிய காலத்தில் முதிர்ந்து வெளிவருவதற்கு மாறாக எதிர்வினை விழைவு உந்தித்தள்ள உடனடியாக வெளியாகி மறைகிறது. சிறந்த கதைக்கருக்கள் பலவும் எழுதி வீணடிக்கப்பட்டன என்பதை வாசிப்பின் ஊடாக கண்கூடாக கண்டுகொள்ள முடிகிறது. செவ்வியல் நாட்டம் கொண்ட எழுத்தாளருக்கு காலாதீத விழைவு ஒரு கதையை இப்படி குறையாக பிரசவிக்க அனுமதிக்காது. கதையை மனதில் வளரவிட்டு உரிய நேரம் வரும்வரை காத்திருந்து வெளிப்பட அனுமதிக்கும். எனினும் அப்படி நிதானமாக வளர்ந்து எழுதப்பட்ட கதைகள் நல்ல கதைகளாக இல்லாமல் ஆனதும் உண்டு. அசலான தெறிப்புகளை கொண்ட சமகால கதைகளும் உண்டு. காலம் தன்னை கொண்டாடும் எனும் நம்பிக்கையுடன் மண் மறைத்து படைப்புகளும் புதையுண்டு போன வரலாறும் உண்டு. தொடர்ச்சியாக சிறந்த கதைகளை எழுதுவது ஒரு எல்லை தொடர்ச்சியாக மோசமான கதைகளை எழுதுவது மற்றொரு எல்லை.

தொடர்ச்சியாக ஒருவர் நல்ல கதைகளை எழுதுகிறார் என்றால் அவர் தனது வசதி வட்டத்திற்குள் உழல்கிறார் என்பதே பொருள். அவருக்கு எது வருமோ அதை மட்டும் எழுதுவது. சாகசத்தன்மையை அறவே இழப்பது. அவ்வப்போது சுமாரான கதைகளை எழுதுபவர் ஏதோ ஒரு வகையில் சாகசத்தன்மைக்கு முனைபவர். அவரால் நிச்சயம் அசல் தெறிப்புகளுடன் கொண்ட சிறந்த கதைகளை எழுத முடியும் என்பதை அவதானித்திருக்கிறேன். உண்மையில் இங்கே பல எழுத்தாளர்களும் புறவயமான குறுகியகால நிர்ப்பந்தம் இல்லையென்றால் கதைகளை எழுத மாட்டார்கள். வண்ணநிலவன் தன்னுடைய நேர்காணலில் பத்திரிக்கைகளின் அழுத்தம் தன்னை எழுதத் தூண்டியதாக சொல்கிறார். ஒரு கதைக் கருக்கொள்ள அனுமதிப்பது என்பது ஒரு கதையை நெடுங்காலம் ஊறவைத்து நிறமிழக்க செய்து எழுதுவது அல்ல. செவ்வியல் மனப்பாங்கு, அதை மறுக்கும் மனப்போக்கு, என இவ்விரு போக்குகளும் மோதி சமரசம் அடையும் புள்ளியை கண்டடைவதே நம் முன் இருக்கும் சவால். இவ்விரண்டு போக்குகளும் முற்றிலும் சரியானவை அல்லது முற்றிலும் பிழையானவை என துருவப்படுத்தி புரிந்துகொள்ள முடியாது.

எழுத்தாளர் உண்மையில் கால்தூக்கி உலகளக்கும் திருவிக்கிரமன் அல்லது அந்தரத்தில் கால் வைத்து ஆடும் ஆடலரசன் என சொல்லலாம். எழுத்தாளரின் ஒருகால் நிலத்தில், தன்னுடைய சமகாலத்தில் ஊன்றியிருக்க மற்றொரு கால் காலாதீதத்தில், காலத்தை அளந்து, அந்தரத்தில் இருக்க வேண்டும். இரண்டு கால்களுக்கும் இடையிலான சமநிலையே நடனம், படைப்பு, ஆக்கம். இரண்டு கால்களும் அந்தரத்தில் இருந்தால் நிலமற்று விழுந்து விடுவோம். இரண்டு கால்களும் சமதரையில் இருந்தால் அது எவருக்கும் இயல்வதாகி தனியாக நம் கவனத்தை கோராத ஒன்றாக ஆகிவிடும். உடனடி கவனம் பெற நான்கு எளிய உத்திகளை நாம் கையாண்டு வருகிறோம். அரசியல் மற்றும் இலக்கியச் சரிநிலை, மெல்லுணர்வு, மிகையான வன்முறைச் சித்தரிப்பு, மிகையான பாலியல் சித்தரிப்பு. ஆகவே ஒரு சமகால நிகழ்வை கதையாக்க இவற்றை வெவ்வேறு விகித அளவில் கலந்தால் போதும். புதிய அறிதலோ, அல்லது கண்டடைதலோ நிகழ்வதில்லை. சிறுகதைகளை காட்டிலும் கவிதையில் இந்த பாதிப்பு அதிகம் என தோன்றுகிறது.

குணா கந்தசாமி ‘சுக்கிலம்’ கதையில் சமகால சிக்கல் ஒன்றை கையாண்டு அதை ஆண்மை எனும் காலாதீத கருதுகோள் நோக்கி நகர்த்துகிறார் என்பதே அக்கதையை முக்கியமானதாக ஆக்குகிறது. கே.என்.செந்திலின் பெரும்பாலான கதைகள் நாவல் தன்மை கொண்டவையே. ‘நெடுங்கதை’ என சொல்லலாம். லக்ஷ்மி சரவணகுமாரின் “மயான காண்டம்” அவ்வகையில் நாவல் தன்மை கொண்ட கதைகளில் மிக முக்கியமானது. அரிச்சந்திரன் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகனின் மொத்த வாழ்வையும், அவனுடைய கலை எழுச்சியையும், துறவையும், அலைக்கழிப்பையும் ஒரு சிறுகதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். நாவல்தன்மை என்றால் என்ன? பல்வேறு காலங்களில் அல்லது ஒருவரின் மொத்த வாழ்நாளையும், பல்வேறு பாத்திரங்கள் வழியாக, வெவ்வேறு நிலப்பரப்புகளில், வெவ்வேறு படிமங்களின் துணையுடன் நிகழ்வதாக சொல்லப்படும் கதையை நாவல் தன்மை கொண்ட கதைகள் என சொல்லலாம். குணா அடிப்படையில் ஒரு கவிஞர். ஆனால் கவித்துவ மொழியில் சிறுகதையை எழுதவில்லை. முற்றிலும் நிதானமான மொழியில் அவருடைய சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. திருச்செந்தாழை, சாம்ராஜ், நரன், போகன், அணுகிரகா, லாவண்யா சுந்தர்ராஜன் என பல கவிஞர்கள் சிறுகதை ஆசிரியர்களாகவும் திகழ்கிறார்கள். சாம்ராஜ் மற்றும் லாவண்யாவின் உரைநடை குணாவினதைப் போன்றே கவிதை மொழியில் இருந்து விலகியது. திருச்செந்தாழை, போகன், நரன், அணுகிரகா ஆகியோரின் கவிதை மொழியும் கதை மொழியும் ஒன்று மற்றொன்றின் நீட்சியாகவே திகழ்கிறது.

2

இந்தக் கட்டுரை இதுவரையில் இணைய யுகத்தின் சில பொதுத் தன்மைகளை வரையறை செய்தது. ஊடகம் எழுத்தாளரை வடிவமைக்குமா என்றால் ஓரளவிற்கு அதன் பங்களிப்பு உண்டு. பெரும் படைப்பாளிகள் ஊடகத்தைப் பயன்படுத்துபவர்களே. ஒரு சமூகத்தில், ஒரு காலகட்டத்தில் எழுதப்படும் நல்ல கதைக்கான காரணங்களை புற நிகழ்வுகளைக் கொண்டு மட்டும் சுட்டிவிட முடியாது. எழுத்தாளர் தான் ஒரு ஊடகம் என உணர்ந்து தன் வழியாக படைப்பு உருவாகி வர அனுமதிக்கும்போது நல்ல கதைகளை எழுத முடியும். ஆனால் அதற்காக சோம்பி அமர்பவரும் அல்ல. வாழ்நாள் முழுவதும் வாசிப்பின் வழியாக அறிந்து முன் செல்பவர். ஒரே நேரத்தில் பேரறிஞனாகவும், பேதையாகவும் இருக்க முடியும்போது சிறந்த படைப்புகள் உருவாகின்றன. கற்றவை ஒருபோதும் எழுத்தாளரை வந்தடைபவற்றுக்கு தடையாக இருக்கக்கூடாது. தர்க்கமும் கற்பனையும், வரலாறும் நிகழ்வும், காலமும் காலமின்மையும், அறிதலும் அர்ப்பணிப்பும் என பல எதிரெதிர் விசைகளின் நடனப்பாவைதான் படைப்பு. அரிதாக சமநிலை கூடி வரக்கூடும்.

இந்த பத்தாண்டுகளில் எழுத வந்த முக்கியமான எழுத்தாளர்களில் மற்றொருவர் என பாலசுப்பிரமணியன் பொன்ராஜை கருதுகிறேன். குணா, கே. என். செந்தில் ஆகியோர் நிலம் சார்ந்த பிணைப்பு கொண்டவர்கள். குணாவினால் நகர வாழ்வை எழுதும் அளவிற்கே நாட்டுப்புற வாழ்வை எழுத முடியும் என்பது கூடுதல் பலம். பாலாவின் கதைகளில் நிலம் என்பதே இல்லை. அவருடைய கதைகள் பெருநகரங்களில் நிகழ்பவை. உலகின் எல்லா பெருநகரங்களும் ஒன்றுபோலவே உள்ளன. ஏறத்தாழ ஒரு நிறுவனமயமான உலகம். அத்தகைய நவீன உலகின் அபத்தங்களைதான் பாலா கதையாக்குகிறார். குணா, செந்திலின் கதைகள் நாவல் தன்மை கொண்டவை என்றால் பாலாவின் கதைகள் கவிதைக்கு நெருக்கமான மொழியை கைக்கொண்டவை. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் மிகுந்த கவனத்துடன் எழுதப்படுபவை.

பாலாவின் கதைகளை செய்நேர்த்தி இல்லாதவை என நாம் கருதக்கூடும். ஆனால் அவர் மொழி வழியாகவும் கதை வழியாகவும் தொடர்ந்து புதிய எல்லைகளை அடைய முயல்கிறார். என் நோக்கில் கதையின் செய்நேர்த்தியைக் காட்டிலும், உள்ளார்ந்த ஒருமையைக் காட்டிலும் அசலான தெறிப்புகள் முக்கியமானவை என நம்புகிறேன். அசலான தெறிப்பும் உடைவும் கதை நிகழ்த்தும் பட்சத்தில் செயநேர்த்தியின்மை மன்னிக்கத்தக்க குறைதான். அப்படியான தெறிப்புகள், அவை வெகு அரிதானவை, அவை இல்லாதபோது செய்நேர்த்தியும் ஒருமையும் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் செய்நேர்த்திமிக்க கதைகள் எழுத்தாளரை தனது வசதி வட்டத்தில் கட்டுண்டு போகச் செய்துவிடக்கூடும். அந்த எல்லையை கடந்து முன்நகர வேண்டும் என்றால் அதற்கு சில ஒழுங்கின்மைகள் உதவவும் கூடும். ஒரு கதை அரசியல் சரிநிலைகள் மற்றும் பாவனைகளை பேணாமல் இருத்தலே மிக முக்கியமான இயல்பு என கருதுகிறேன். பாலாவின் சிறந்த கதைகள் என நான் ‘பனிரெண்டு மரணங்களின் துயர் மிகுந்த தொகுப்பேடு’ மற்றும் ‘வலை’ ஆகிய கதைகளையே கருதுகிறேன். ‘ஜங்க்’ கதையை கொஞ்சம் விரிவாக காணலாம்.

பாலாவின் உலகம் ஒரு ஹைப்பர் மால் போன்றது. சிங்கப்பூர் முஸ்தபா சென்றிருக்கையில் முதலில் அந்த பொருள் குவியலை காணும்போது ஒரு பிரமிப்பு, திகைப்பு பின்னர் ஒருவிதமான மயக்கம் ஏற்பட்டது. ஹைப்பர் மால்களும் கேசினோக்களும் ஒன்று போலவே அமைக்கப்பட்டவை. காலாதீதத்தன்மை vs சமக்காலத்தன்மை விவாதத்தில் இக்கதை முழுக்க முழுக்க சமகாலத்தன்மையை கொண்டது. ஆனால் நுட்பமாக சமகாலத்தன்மையின் நிலையின்மையை விமர்சிக்கிறது. செகுவேராவும் யேசுவும் எந்த அமைப்பிற்கு எதிரான கலகக் குரலாக இருந்தார்களோ அதே அமைப்பிற்குள் பண்டமாக விற்கப்படுகிறார்கள். கொர்தாசர், இசை, அனுபவம், எல்லாமே பண்டமாகக் கிடைக்கும் ஒரு பேரங்காடிக்குள் இருப்பதான உணர்வை கதை அளிக்கிறது. வெறும் பொருட்களால் ஆன உலகம், மொத்த உலகமும், வாழ்வும் பெரும் குப்பைத் தொட்டியாக நம் கட்டற்ற நுகர்வால் ஆக்கி வைத்திருக்கிறோம் என்பதே இந்த கதையின் பார்வை. கட்டற்ற நுகர்வு கலாசாரம் எல்லாவித உன்னதங்களையும் மறுப்பது. பாப் இசைக் கலைஞனின் இடத்தில் கொர்தசாரின் பாத்திரம் ஒட்டப்படுகிறது. இந்த வணிகமயமாக்கல் செய்திருக்கும் ஜனநாயகப்படுத்துதலை ஏளனம் செய்கிறது கதை. சமகாலத்தன்மைக்கான உதாரணமாக சுட்டிக்காட்டப்படும் கதை அதன் அபத்தத்தை சுட்டுவதன் வழியாக காலதீதத்தின் மீதான ஏக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

முதல் தொகுதியை இருபதுகளில் மற்றும் முப்பதுகளின் தொடக்கத்தில் வெளியிடுவார்கள் என்பது பரவலான நம்பிக்கை. ஆனால் எஸ்.சுரேஷ், சிவா கிருஷ்ணமூர்த்தி, போகன், எம்.கே.மணி, கா. சிவா, ஆகியோர் தங்கள் முதல் சிறுகதை தொகுப்புக்களை நாற்பத்தி ஐந்து வயதிற்கு மேல்தான் வெளியிட்டார்கள். இளம் எழுத்தாளர் (Young writer) மூத்த எழுத்தாளர் (Senior writer) எனும் வரையறையைக் காட்டிலும் வளர்ந்துவரும் எழுத்தாளர் (Emerging) நிலைப்பெற்ற எழுத்தாளர் (Established) எனும் வரையறையே துல்லியமாக இருக்கும்.

தமிழ் புனைவு எழுத்தாளர்களை பொதுவாக இரண்டாக வகுக்கலாம். இலக்கியவாதிகள் மற்றும் கதைசொல்லிகள். இது ஒரு கறாரான வரையறை என சொல்லிவிட முடியாது. எனினும் கூறுமுறை சார்ந்து இரு தன்மைகளை காண முடியும். இலக்கியவாதிகள் அதிகமும் அகம் சார்ந்து எழுதுபவர்கள். நுட்பமாக அகத்தை விவரிப்பவர்கள். அவர்களுடைய கதையில் புறம் என்பது அகத்தின் குறியீடுதான். அகத்தை பிரதிபலிக்கும் புறத்தை மட்டுமே கதைக்குள் அனுமதிப்பர். செறிவான மொழி கொண்டவர்கள். கதைசொல்லிகளின் மொழி நெகிழ்வானது. புற விவரணைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். உரையாடல் அவர்களின் பலம். ஜானகிராமன், கி.ரா, பூமணி, நாஞ்சில்நாடன், யுவன், முத்துலிங்கம் என ஒரு கதைசொல்லி மரபு உள்ளது. தங்கள் மண்ணின் மொழியில் கதையை எழுதுபவர்கள். சுந்தர ராமசாமி, மௌனி, ஆதவன், கோபி கிருஷ்ணன் ஆகியோரை துல்லியமான இலக்கியவாதிகள் என வகைப்படுத்தலாம் கதைசொல்லியையும் இலக்கியவாதியையும் ஒரு கிடைமட்டக் கோட்டின் இரு துருவங்களாக உருவகித்தால் பிற எழுத்தாளர்கள் வெவ்வேறு புள்ளிகளில் வருவார்கள். புதுமைப்பித்தனும், ஜெயமோகனும் ஏறத்தாழ மத்திம புள்ளியை நெருங்குபவர்கள்.

கதைசொல்லிகள் பெரும்பாலும் யதார்த்த தளத்தில் இயங்குபவர்கள். விதிவிலக்கு யுவன், பா.வெங்கடேசன் போன்ற வெகு சிலர். இன்றளவும் தமிழ் இலக்கியத்தின் பெரும்போக்கு யதார்த்த கதைகளே. சூழல் விவரணை, குறிப்பாக நுண்தகவல்கள், பிராந்தியத்திற்கு என்றே இருக்கும் தனித்துவமான வழக்கங்களை, நாட்டாரியல் தரவுகளை தங்கள் மண்ணின் மொழி வழியாக கதையாக்குபவர்கள். இவ்வகை கதைகளின் சிக்கல் தங்கள் மண்ணின் வாழ்வை பதிவாக்க இருக்கும் முனைப்பேகூட கதைக்கு எதிராக திரும்பிவிடும் ஆபத்து என்பதே. கதைக்கு ஆவணத்தன்மை என்பது கூடுதல் தகுதியே தவிர முதன்மை தகுதியல்ல. ஒரு நிலத்தை, வாழ்வை ஆவணப்படுத்துகிறது என்பதாலேயே சிறந்த கதையும் அல்ல.

தஞ்சை வட்டத்தை ஜி. கார்ல் மார்க்ஸ், சிவக்குமார் முத்தையா ஆகியோர் எழுதுகிறார்கள். சிவக்குமார் முத்தையாவின் கதைகளில் டெல்டா பகுதிகளின் சீரழிந்த சமகாலம் ஒரு பொதுச் சித்திரம் என்றே சொல்லலாம். அப்பகுதிக்கே உரிய நாதஸ்வர மரபின் பின்புலத்திலும், நாட்டுப்புற கலை பின்புலத்திலும் இருவரும் கதைகள் எழுதி இருக்கிறார்கள். சிவக்குமார் முத்தையாவின் ‘குறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம்’ அவ்வகையில் இதுவரை பதிவு செய்யப்படாத வாழ்வு ஆவணம். அதேநேரம் அதை கலைத்தன்மை கொண்டதாகவும் ஆக்கியிருக்கிறது. குணா கந்தசாமி, கே.என்.செந்தில் ஆகியோர் கொங்கு மண்டல பின்புலத்தில் வலுவான கதைகளை எழுதியுள்ளார்கள். கார்த்திக் புகழேந்தி நெல்லை வட்டத்தை கதையாக்குகிறார். அவருடைய ‘வெட்டும் பெருமாள்’ ஒரு நாட்டார் தொன்மத்தை கதையாக்கிய நல்ல சிறுகதை.

ராம் தங்கம் நாஞ்சில் நாட்டு கதைகளை எழுதுகிறார். நல்ல அனுபவங்களும், கதைக் களங்களும் ராம் தங்கத்திற்கு வாய்த்திருக்கிறது. அவருடைய முதல் தொகுதி திருக்கார்த்தியல் அவ்வகையில் சில நல்ல கதைக் கருக்களை கொண்டிருக்கிறது ஆனால் மொழியின் வலுவின்மை ஒரு சிக்கலாக உருக்கொள்கிறது. நவீன் மலேசிய கதைகள் எழுதுகிறார். அவருடைய ‘பேச்சி’ மற்றும் ‘நாகம்’ கதைகளை சிறந்த உதாரணமாக சொல்லலாம். ‘பேச்சி’ ஒரு தாத்தா தன் பேரனுக்கு சொல்லும் கதையாக, கதைக்குள் கதை வடிவத்தை கொண்டிருக்கிறது. தாத்தா அவருடைய தாத்தாவைப் பற்றிய கதையை சொல்கிறார். சிறுகதையின் மரபான இலக்கணத்தில் கதைக்காலம் குறுகியதாக இருக்க வேண்டும் எனும் நம்பிக்கை உண்டு.

ஒரு சிறுகதை மூன்று தலைமுறையினரின், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலகட்டத்தை ஊடாடிச் செல்கிறது. பெண்ணெல்லாம் பேச்சி ஆகும் கதை. என இதை சொல்லலாம். ஒரு கதை ஒரு நிலத்தில் நிகழ்வதற்கும். அந்த நிலமே கதையின் இன்றியமையாத பாத்திரமாக மாறி கதையை நகர்த்துவதற்கும் வேறுபாடுண்டு. மண் சார்ந்த கதைகள் என கூறும்போது உத்தேசிப்பது இதையே. நவீனின் ‘போயாக்’ கதையில் அது நிகழும் சரவாக் ஒரு பாத்திரம். தன் பண்பாட்டு கூறுகள் வழியாக கதையை நகர்த்தி செல்கிறது.

கன்னிப்பெண்னுடன் உறவு கொண்டால் நெற்றியில் குறி முளைக்கும் எனும் நம்பிக்கை அந்நிலத்தினுடையது. நவீன் யதார்த்த கதைகளின் எல்லைகளை தொடர்ச்சியாக நகர்த்தி வருகிறார். படிமங்கள் வழி ஒரு கதைக்கு பல தள வாசிப்பை சாத்தியமாக்குகிறார். அவருடைய ‘‘வெள்ளை பாப்பாத்தி’ ஏதோ ஒருவகையில் போயாக்கின் குரூரத்திற்கு முறிமருந்து எனத் தோன்றியது. ம. தவசியின் ‘’அச்சுவெல்ல மண்’ சிறுகதை நகர் நோக்கிய இடப்பெயர்வு பின்புலத்தில் மண்ணின் கதையை சொல்கிறது. கம்மாய் மண் வீடுகட்ட பயன்படுத்தப்படுகிறதும் அச்சுவெல்லம் போல் இனிக்கும் மண். காலப்போக்கில் அதன் இயல்பை இழந்துவிடுகிறது. கா. சிவாவின் ‘அவரவருக்கான இடம்’, ‘கள்ளம் களைதல்’ ஆகியவை செட்டிநாட்டு- பகுதியின் கதைகளை சொல்கின்றன. ஜா. தீபாவின் ‘ஜான்சிராணியை பின்தொடரும் காதல்’ பள்ளிப்பருவத்து பெண்ணின் காதலை நெல்லை மொழியில் இலகுவாக சொல்லும் கதை.

சாம்ராஜின் ‘அனந்தசயனபுரி’ இவ்வகையில் மற்றுமொரு நுட்பமான வாசிப்பனுபவம் அளித்த கதை. கதைமாந்தர்களின் உணர்விற்கும் கதை நிகழும் களத்திற்கும் இடையிலான உறவு வலுவாக பின்னப்பட்டிருக்கிறது. ஒரு நள்ளிரவில் கதைசொல்லி தன்னை விட்டுப் பிரிந்து போன மனைவியையும் குழந்தையையும் சந்திக்க திருவனந்தபுரத்திற்கு வருகிறான். நகரத்தின் விவரணையும் அவனுடைய மனவோட்டமும் ஒன்றையொன்று நிரப்புகிறது. சாம்ராஜின் ‘பட்டாளத்து வீடு’ ‘ஜார் ஒழிக’ ஆகிய தொகுப்புக்கள் அண்மைய காலங்களில் நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தவை. ஒரு முனை உணர்ச்சிகரமானது மறுமுனை பகடியால் நிரம்பியது.

பெரும்பாலான மண் சார்ந்த கதைகள் யதார்த்த கதைகளே. ஆனால் அவை நாட்டார் தன்மை கொள்ளும்போது வேறு தளங்களை அடைகின்றன. ‘பேச்சி’ ஒரு உதாரணம். குணா கந்தசாமியின் ‘தங்காள்’ நவீன பெண்ணின் துயரை நல்லத்தங்காள் தொன்மத்துடன் இணைத்து எழுதுகிறது. அவ்வகையில் ம. தவசியின் ‘நித்ரவார் சுரக்குடுக்கை’ மிக முக்கியமான கதை என சொல்லலாம். தோட்டங்களில் சுரக்காய்களை திருடும் முனியம்மாவின் கதையாக தொடங்குகிறது. கணவன் சீட்டாட்டத்தில் பொழுது போக்குவான் என்றாலும் அவனுடைய உடல் நாட்டம் அவளை பிணைத்திருந்தது. ஓரிரவு சட்டென விட்டுவிட்டு துறவியாகிறான். பின்னர் திரும்பி வந்து அதே ஊரில் துறவியாக இருக்கிறான். முனியம்மா அவனை காண செல்லவே இல்லை. அவனுடைய சுரைக்குடுக்கை மட்டும் கோவிலில் இருக்க அவன் மறைந்து போகிறான். முனியம்மா அந்த சுரக்குடுக்கையை மட்டும் கொண்டு வருகிறாள். கிட்டத்தட்ட போர்ஹேசின் அலெப் போல், குழந்தை கிருஷ்ணனின் உலகுண்ட வாயை போல் அந்த சுரைக்குடுக்கை ஒரு அபூர்வமான வஸ்துவாகிறது. முனியம்மாவிற்கு பிறகு அந்த சுரக் குடுக்கை பூம் பூம் மாட்டுக்காரன், குடுகுடுப்பைக்காரன் என தொடர்ந்து பயணிக்கிறது. மாந்திரீகத்தன்மை கொண்ட பல நாட்டார் கதைகள் ஒரு சரடாக பின்னப்பட்டு நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.

கறுத்தடையான் எழுதிய ‘ஆகாச மாடன் கதையும் நாட்டார்- மாந்திரீக தளத்தில் முக்கியமானது. அவருடைய தொகுப்பில் இருத்தலியல் கேள்விகளும் நாட்டார் கதைகளும் பிணைந்து உருக்கொள்கின்றன. இவை சரியாக நிகழ்ந்த கதை என ‘சுருட்டுக் கலைஞன்’ கதையை சொல்லலாம். கல்லறை வாசகம் எழுதும் ஒருவனைப் பற்றிய கதை. கறுத்தடையான் அடிப்படையில் கவிஞர். அது இந்த கதைக்கு உதவியிருக்கிறது. குமார் அம்பாயிரத்தின் ‘ஈட்டி’ இதே போன்ற மாந்திரீகத்தன்மைக்காக முக்கியமாக பேசப்பட்டது. பழங்குடி வாழ்க்கை பின்புலத்தில் மாந்திரீகத்தை இணைத்து சொல்லும் ‘ஈட்டி’ ஒரு வாசிக்கத்தக்க கதை. பிற கதைகள் வணிகமயமாதல் மற்றும் நுகர்வு வெறியை விந்தையாக சொல்ல முயன்ற கதைகள். ஒப்புநோக்க இம்மூவரில் ம. தவசி மேம்பட்ட, பாவனைகளற்ற எழுத்தாளராக வெளிப்படுகிறார். குமாரநந்தனின் ‘நகரப் பாடகன்’ தொகுதியில் உள்ள ‘சக்தி அழைப்பு’ நிகழ்வுகளுக்கும் கனவிற்கும் இடையிலான வினோத தொடர்வை சொல்லும் நாட்டார் கூறுகள் கொண்ட முக்கியமான கதை. குமாரனநந்தன் மறைஞான தன்மையை (mystery) சுட்டிக்காட்ட கனவுகளை தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார். கதைகள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில் நிகழ்பவை. கா. சிவாவின் ‘கள்ளம் களைதல்’ இதேபோன்ற மறை ஞானத்தன்மை கொண்ட நாட்டார்கூறுகள் உடைய கதை.

புது யுகத்தின் எழுத்தாளர்கள் மீது முன்வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனம் என்பது ‘அரசியலின்மை’. இலக்கியம் சிற்றிதழ் வட்டத்திலிருந்து வெளியானதன் இயல்பான விளைவு என்றே இதை சொல்ல முடியும்.. அகரமுதல்வன் அவ்வகையில் தொடர்ச்சியாக அரசியல் கதைகளை எழுதி வருகிறார். தொடக்கக்கால கதைகள் முழுக்கவே அரசியல் தளத்தில் எழுதப்பட்டன. அவருடைய அண்மைய கதைகள் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறையில்’ உள்ள நெடுங்கதைகள் அழகியல் நோக்கி நகர்ந்து சமன் அடைய முயல்கின்றன. இத்தொகுதியில் உள்ள நெடுங்கதைகள் அனைத்துமே நாவல் தன்மை கொண்டவை. இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்கள் அத்தனை பேரும் வலுவான அரசியல் பின்புலம் கொண்ட கதைகளை எழுதியுள்ளார்கள். போரின் அபத்தத்தை, வாழ்விச்சையின் விசையை எழுதியுள்ளார்கள். ‘துயிலாத ஊழ்’ தொகுதியில் இடம்பெற்றுள்ள சயந்தனின் ‘பூரணம்’ போர்ப் பின்னணியில் கைவிடப்பட்டவர்களின் துயரத்தையும் இக்கட்டான நேரங்களில் நீளும் ஆதரவுக் கரங்களையும் சொல்லும் நெகிழ்ச்சியான கதை. யதார்த்தன் கதைகளில் ஈழ சித்தரிப்பு சிறப்பாக துலங்குகிறது. ‘போரின் இறுதி பகுதியும் பால்யத்தின் இறுதி பகுதியும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கும். தற்போது ஜாப்னாவில் வசிக்கிறார். முகாம்களில் ‘சதோசோ’ (sodexo) பூட் சிட்டி(food city) இருந்ததும் அங்கு வகை வகையாக மக்கள் வாங்கி உண்டார்கள் என்பதும் நாம் ஈழம் குறித்து கொண்டுள்ள பொதுச் சித்திரத்தை குலைப்பவை.

நிம்மதியான வாழ்விற்கும் விடுதலைக்கும் இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் மனிதர்கள் நிம்மதியான வாழ்வையே தேர்வார்கள். வாழ்வின் இனிமை அனோஜனின் கதையில் பேரீச்சை என்றால் யதார்த்தன் அதே இனிமையை வொண்டர் கோன் எனும் ஐஸ் கிரிமீல் காண்கிறார். கதை நாயகன் பதினேழு வயது ஜீவநேசன் (அதாவது உயிர்களை நேசிப்பவன்). ஜீவநேசன் வொண்டர் கோன் ஐஸ்க்ரீம்களை திருடியதற்காக பிடிபடுகிறான். அவனை புவனாவும் அவருடைய மகள் மயூரதியும் மீட்கிறார்கள். கதை இறுதியில் புவனாவின் வளத்திற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஜீவநேசனின் வொண்டர் கோன் திருட்டு அவர்களுக்கு முன் சிறுத்து ஒன்றுமில்லாமல் ஆகிறது. உருகி வழியும் வொண்டர் கோனை மூவரும் உண்டு கொண்டிருப்பதோடு கதை முடிகிறது. உணர்வுச் சுரண்டல் ஏதுமின்றி வாழ்விச்சையின் இயல்புகளை யதார்த்தன் இக்கதையில் கையாண்டுள்ளார்.

புவனாவிற்கு கணவர் சார்ந்த தோற்ற மயக்கம் ஆகட்டும், அல்லது அவர்கள் இறந்தவர்களின் மீதிருந்து எடுத்த தாலிக்கொடிகள் ஆகட்டும் வாழ்விச்சையின் வெளிப்பாடே. ஒருவகையில் ஜீவநேசனின் வொண்டர் கோனும் அதுவே. நிறுவனமயமாதல்- அனோஜனின் ‘பலி’ போர் எதிர்க் கதைகளில் முக்கியமானது. ஒரு போரில் நாம் முதன்மையாக எதை, யாருக்காக, பலியிடுகிறோம் எனும் அசவுகரியமான கேள்வியை எழுப்புகிறது. தன் தரப்பு எதிர் தரப்பு எனும் இருமையை கடந்து நோக்கும் பார்வை வெளிப்படுகிறது. சாதனாவின் ‘சிறுமி கத்தலோனா’ கதையும் அவ்வகையில் இந்த இருமைக்கு அப்பால் செல்கிறது. ஒரு சிங்களர் தமிழ் அடையாளத்துடன் சிங்கள ராணுவத்திடம் பிடிபடுவதும் பின்னர் அவருடன் அடைபட்ட சிறுமியை மீட்கமுடியாத குற்ற உணர்வும் ஆழமாக தொந்திரவு செய்கின்றன.

’உலகமயமாதல், நிறுவனமயமாதல், வணிகமயமாதலின் அரசியலை பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் கதைகள் எதிர்கொண்டுள்ளன. குமார் அம்பாயிரத்தின் கதைகளிலும் இவை வெளிப்படுகின்றன. ஜா. தீபாவின் மகாபாரத மீளுருவாக்க கதையான ‘திரை; காந்தாரியின் கதையை பெண்ணிய நோக்கில் சொல்கிறது. பெரிதும் பேசப்பட்ட அவருடைய ‘குரு பீடம்’ ஆசிரியரின் பள்ளிப்பருவத்து பாலியல் அத்துமீறலையும் அது அளித்த மீள முடியாத மனக் காயத்தையும் சொல்கிறது. கலைச்செல்வியும் தொடர்ந்து துணிவுடன் அரசியல் விமர்சனத்தை கதைகளில் கையாள்கிறார். அவருடைய ‘மாய நதி; தொகுப்பில் ‘அவை ஊளையிடுகின்றன’ ஸ்டெர்லைட் ஆலையின் விஷ வாயு கதவை தட்டும் ஓநாயாக உருவகப்படுத்தப்படுகிறது. சுரேஷ் பிரதீப்பின் ‘எஞ்சும் சொற்கள்’ மற்றும் ‘வரையறுத்தல்’ தலித் அடையாளம் சார்ந்த முக்கியமான கேள்விகளை எழுப்பும் கதை. ‘எஞ்சும் சொற்கள்’ ஏதோ ஒரு வகையில் ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகள்’ கதைக்கு எதிர்வினையாற்றுவது எனத் தோன்றியது. உமையாழின் ‘மேய்ப்பர்’ இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் நிலையை சொல்கிறது. பால்யத்தை நினைவுகூரும் யதார்த்த கதைகள் கணிசமாக எழுதப்பட்டுள்ளன.

அசோகமித்திரன் ஒரு நேர்காணலில் எளிய மனிதர்களுக்கான அஞ்சலியாக அவர்களை பாத்திரங்களாக்கி கதை எழுதுவதாக குறிப்பிடுகிறார். கமலதேவியின் ‘சக்யை’ தொகுப்பில் இத்தகைய ஒரு தன்மையை காண முடிகிறது. அவருடைய ‘சொல்பேச்சு கேட்காத கரங்கள்’ கதை தொடுகைக்கான ஏக்கத்தையும் தொடுவதில் உள்ள தயக்கத்தையும் பற்றி பேசுகிறது. ஒருவகையில் இதை அவருடைய கதையுலகின் மைய இழையாக விரித்தெடுக்கலாம். அன்பிற்கான ஏக்கமும் அன்பின் ஆதிக்கம் மீதான அவநம்பிக்கையும் அவரை அலைக்கழிக்கும் கேள்வி. இக்கேள்வியை வெவ்வேறு கதைகளின் ஊடாக, வெவ்வேறு உறவு நிலைகளின் வெளிச்சத்தில் பரிசீலனை செய்து பார்க்கிறார். எதிலும் முழுக்க நனைந்துவிடக் கூடாது எனும் கூரிய சுய பிரக்ஞை கதைகளில் வெளிப்படுகிறது.

ராம் தங்கத்தின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் பசியிலும் வறுமையிலும் வாடும் பதின்ம வயதினர். அவர்களின் நெகிழ்ச்சியும் அவமானமும் கதைகளாகின்றன. ச. அணுகிரகாவின் ‘வீடும் வெளியும்’ கவிதை, சிறுகதைகள், மற்றும் அவரே வரைந்த ஓவியங்களாலான கதம்பத் தொகுப்பு. அவருடைய சிறுகதைகள் ‘ராஜேஷ் கண்ணா’ ‘மேலும் கீழும்’ ‘கனவு’ ஆகிய கதைகள் பால்யத்தை நினைவுகூர்ந்து பிரதி செய்பவை. சிடுக்கற்ற எளிய சித்தரிப்புகள் கவித்துவமான மொழியில் எழுதப்பட்டுள்ளன. ரயில்வே கேட்டில் நின்று கடந்து கொண்டிருக்கும் ரயிலைக் காணும்போது “ரயில் ஊசி நூலைப் போல சாலையின் இரு பகுதிகளையும் தைத்துவிட்டு சென்றிருந்தது.” என எழுதுகிறார். கவிதைக்கு அருகேயான அடங்கிய நிதானமான தொனி கொண்ட எழுத்து. ;அசோகமித்திரன் கதையுலகை சேர்ந்த கதைமாந்தர்கள் உலவுகிறார்கள். லாவண்யா சுந்தர்ராஜனின் ‘யூனிஃபார்ம்’ குழந்தைகளின் பார்வையில் மரணத்தை சித்தரிக்கும் கதை. அசோகமித்திரனின் கதை கூறுமுறையின் இன்றைய நீட்சிகள் என கிருஷ்ணமூர்த்தி, கே.ஜே அசோக் குமார், நாகப்பிரகாஷ் ஆகியோரை குறிப்பிடலாம். உணர்வு நீக்கம் செய்யப்பட்ட விவரணைகள், நிதானமான நடை, கதையுலகு விரிவை காட்டிலும் நுண்மையை நோக்கி பயணிப்பவை. கிருஷ்ணமூர்த்தியின் மொழியில் அசோகமித்திரனின் தாக்கம் இருந்தாலும் கதை உத்திகளில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். சித்துராஜ் பொன்ராஜிடம் அசோகமித்திரன் தாக்கம் உண்டு என்றாலும் மொழி மற்றும் கவித்துவம் காரணமாக வேறொரு தளத்திற்கு நகர்கிறார்.

முதல் பாலியல் அனுபவம், அல்லது மென்சோகம் கலந்த காதல் தோல்வி போன்றவை நினைவேக்க கதைகள் எழுதப்படுகின்றன. இத்தகைய கதைகளின் சிக்கல்கள் என்ன? எழுதுபவருக்கு இக்கதைகள் ஏதோ ஒரு வகையில் உள்ளிருக்கும் சமன்ட்பாடைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன. எவருடைய நினைவுகளையோ போற்ற விழைகிறார் எழுத்தாளர். ஆனால் வாசகருக்கு சில நினைவுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம். இவ்வகை கதைகளுடன் வலுவான படிமம் இணையும்போது கதை அகத்தில் வளர்வதை கவனிக்க முடிகிறது. ‘சுசித்ராவின் ‘ஹைட்ரா’ ஒரு பள்ளிக்கால பதின்ம வயதின் நினைவேக்க கதைதான். ஆனால் அதில் ஆபத்துக்கு உதவ நீளும் ஹைட்ராவின் கரங்கள் ஒரு படிமமாக வளர்கிறது. சுசித்ராவின் ‘ஒளி’ அவ்வகையில் வலுவான படிமங்களை கொண்டது. அவை மனதில் பெருகி வளர்பவையாகவும் உள்ளன. நாகப்பிரகாஷின் ‘எரி’ கதையில் வண்டிகளில் ஊர்வலம் போகும் கடவுளின் உருவங்கள் இப்போதும் துல்லியமாக காட்சிகள் ஆகின்றன. நாகப்பிரகாஷின் ‘புகை சுவருக்கு அப்பால்’ மிகவும் மனமுதிர்ச்சியுடன் எழுதப்பட்ட கதை. ஆன்மீக தளத்தை தொட்டு எழுதக்கூடிய வளரும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என இக்கதை காட்டுகிறது.

விஷால் ராஜாவின் முதல் தொகுப்பிற்கு பிந்தைய கதைகளிலும் ஆன்மீகத்தன்மை வெளிப்படுகின்றன. எனினும் வெளிவந்த தொகுப்புக்களை பற்றி மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால் அவற்றை பற்றி விரிவாக இங்கே எழுத இடமில்லை. சாதனாவின் தொகுப்பில் இயேசு மூன்று கதைகளில் வருகிறார். ஆன்மீக தத்தளிப்பை பேசுபொருளாக ஆக்குகிறார்.

யதார்த்த கதைகளில் மற்றொரு வீச்சு உலகளாவிய கதைகள். அந்நிய நிலத்தில் ஒரு கதை நிகழ்கிறது என்றால் அமெரிக்காவில் நான்கு சுவற்றுக்குள் நிகழும் குடும்பச் சண்டையை எழுதுவதல்ல. அந்த கதை அமெரிக்காவில் ஏன் நிகழ வேண்டும்? அந்த களம் மேலதிகமாக என்னவிதமான பண்பாட்டு துலக்கத்தை அளிக்கிறது? தமிழர்கள் அனைத்து கண்டங்களிலும் இப்போது பணி செய்கிறார்கள். எம்.எஸ். கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி ஆகிய கதைகளுக்குப் பின் உலகளாவிய கதைகள் எழுதியவர் என அ. முத்துலிங்கத்தை சொல்லலாம். நாஞ்சில் நாடன் கணிசமான கதைகளை தமிழகத்திற்கு வெளியே எழுதியுள்ளார். வேறு எந்த தலைமுறை எழுத்தாளருக்கும் கிடைக்காத வாய்ப்பு தகவல் தொழில்நுட்பத்தின் காரணமாக இந்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு வாய்த்திருக்கிறது.

ஜப்பானிய ஆண்களுக்கு இருக்கும் திருமணச் சிக்கல் குறித்து தமிழில் ஒரு கதையை சித்துராஜ் பொன்ராஜ் எழுதி இருக்கிறார் (கடல்). சிவா கிருஷ்ணமூர்த்தி இங்கிலாந்தில் வசிக்கிறார். அவருடைய வெளிச்சமும் வெயிலும் தொகுப்பு முழுவதுமே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வாழ்வை அடிப்படையாக கொண்டவை. ‘மறவோம்’ எனும் அவருடைய கதை இரண்டாம் உலகப்போரில் இறந்து போன வீரர்களை நினைவுகூரும் கதை. நமக்கு எல்லோரும் வெள்ளையர்கள். ஆனால் அவர்களுக்குள் நிலவும் இனப் பாகுபாட்டை, மேட்டிமையை நாம் அறிவதில்லை. ‘வெளிச்சமும் வெயிலும்’ ஸ்கண்டிநேவியர்கள் ஆஸ்திரேலியர்கள் மீது காட்டும் இன முன்முடிவை காட்டுகிறது. கார்த்திக் பாலசுப்பிரமணியனின் ‘இரு கோப்பைகள்’ ஆஸ்திரேலியாவில் நிகழ்கிறது. சிறுநகர இளைஞன் மேற்கத்திய வாழ்வு, அவர்களின் திருமணம், தனிமை ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது ஏற்படும் திகைப்பு கதையாகிறது. அவருடைய ‘லிண்டா தாமஸ்’ ஒரு அமெரிக்க ஐடி நிறுவன ஊழியரைப் பற்றிய கதை. இங்கும் இந்திய விழுமியமான விசுவாசம், நன்றி போன்றவை மேற்கத்திய தொழில்முறை மனிதர்களிடம் பொருளிழந்து போவதை கவனிக்கிறது.

ஸ்ரீதர் நாராயணின் ‘கத்திக்காரன்’ தொகுப்பு அமெரிக்காவில் ஜாக்ஸ்டன்வில்லி எனும் புனைவு நகரத்தில் நிகழ்கிறது. வளரிளம் பருவத்து குழந்தைகளுக்கு பரிச்சயமாகும் போர்ன் பற்றி அவர் எழுதியிருக்கும் வானவில் கதை முக்கியமான பண்பாட்டுச் சிக்கலை காட்டுகிறது. அழகுநிலாவின் ‘விலக்கம்’ சிங்கப்பூர் சூழலில் அங்கே வளரும் பதின்பருவத்து பெண்ணின் பார்வையில் வயதிற்கு வருவது சார்ந்த சடங்கின் மீது இருக்கும் விலக்கத்தை பதிவு செய்கிறது. எஸ். சுரேஷின் ‘கூபோ’ ஜப்பானில் நிகழ்கிறது. அவருடைய ‘பாகேஸ்ரீ’ செகந்திராபாதை களமாக கொண்டது. தமிழும் தெலுங்கும் கலந்த வினோதமான நடையை செகந்திராபாத் கதைகளுக்கு பயன்படுத்துகிறார் சுரேஷ். பாகேஸ்ரீ இந்துஸ்தானி இசை பின்னணியில் குருவுக்கும் சீடனுக்குமான உறவை சொல்லும் கதை. அதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘வன்மம்’ மற்றொரு நல்ல கதை. உமையாழ் இங்கிலாந்தில் வசிக்கிறார். அவருடைய ‘CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை’ கதையும் அத்தொகுதியில் உள்ள வேறு சில கதைகளும் ஐரோப்பா, மற்றும் அரேபிய வளைகுடாவில் நிகழ்பவை.

அய்யனார் விஸ்வநாத்தின் ‘கினோகுனியா’ வளைகுடாவை களமாக கொண்டது. வெளிநாட்டு வாழ்க்கைச் சூழல்களை கதையாக்குவதில் குறிப்பிட்டு சொல்லத்தக்க எழுத்தாளர் என ரா. கிரிதரனை சொல்லலாம். அவருடைய ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை’ மற்றும் ‘இருள் முனகும் பாதை’ ஆகியவை மேற்கத்திய இசைமேதைகளின் வாழ்வை பின்புலமாக கொண்டவை. அபாரமான வாசிப்பனுபவத்தை அளித்தவை. குறிப்பாக இருள் முனகும் பாதை நாவல் தன்மை கொண்ட நெடுங்கதை, இவற்றைத் தவிர ;மௌன கோபுரம்; பார்சீக்களின் மரண சடங்கை முன்வைத்து எழுதப்பட்ட கதை. இமய மலையில் உள்ள நந்தா தேவி சிகரத்தின் மலையேற்ற அனுபவத்தை சொல்லும் ‘நந்தா தேவி’ அபாரமான காட்சி அனுபவத்தை அளித்த கதை. சாதனாவின் கதைகள் ரஷ்யாவில் நிகழ்கின்றன. இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் எழுதப்பட்ட ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ஸ்காண்டிநேவிய கடலில் நிகழும், சற்றே ‘கிழவனும் கடலும் கதையை நினைவுறுத்தும், ‘ஓ தாவீது ராஜாவே’ ஆகியவை நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தன. இவ்வகையான கதைகள் இக்காலகட்டத்தின் தனித்தன்மை என்றே சொல்லலாம்.

இருத்தலியல் ஒரு வாழ்க்கைப் பார்வை. ஒரு தத்துவம். வெறுமையே அதன் சாரம். வாழ்க்கையை அபத்தக் களஞ்சியமாக காண்பது. இலக்கியத்தில் நவீனத்துவ காலகட்டத்துடன் இருத்தலியல் பிணைக்கப்பட்டு அதன் காலம் புறவயமாக முடிந்துவிட்டது என்பார்கள். ஆனால் இருத்தலியல் மனநிலை எப்போதைக்கும் உள்ளதே. சாதனாவையும், போகனையும், கார்த்திகை பாண்டியனையும் இருத்தலியல் மனநிலை கொண்ட எழுத்தாளர்கள் என்றே சொல்லலாம். போகனின் “மீட்சி” சற்றே மீயதார்த்த தளத்தில் நிகழும் இருத்தலியல் கேள்விகளை எழுப்பும் சிறந்த கதை. மரணத்தின் வெற்றிடத்தை மரணமின்மையின் ஏக்கம் கொண்டு நிறைக்க முயல்பவர் என சொல்லலாம். சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமும் இந்த உளப் போக்கு நிலவுகிறது.. பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘பனிரெண்டு மரணங்களின் துயர் மிகுந்த தொகுப்பேடு’ சமகாலத்தில் வந்த மிகக் சிறந்த இருத்தலியல் கதைகளில் ஒன்று. அதன் மாறுபட்ட உத்தியின் காரணமாக மட்டுமின்றி, அதன் மொழி மற்றும் பேசுபொருள் காரணமாகவும் கவனம் பெறுகிறது. உண்டிவில் கல்லில் இறக்கும் சிட்டுக்குருவி, கழிவறை நீரில் செத்து மிதக்கும் பல்லி, சாலையில் அடிபட்டு இறக்கும் நாய், நைந்து போன காலணிகள், இரண்டாம் உலகப்போரின் சிப்பாய்க்கு அளிக்கப்பட்ட பதக்கம், இரவு என ஒவ்வொன்றின் மரணத்தையும் சாட்சியாக காண்கிறான் கதைசொல்லி. இந்த பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பை ஒரு துப்பாக்கி குண்டாக கற்பனை செய்கிறார் பாலா. அழிவிலிருந்து தோன்றி அழிவை நோக்கி பயணிக்கிறது வாழ்க்கை.

அக எழுத்தில் அதிகமும் உறவுச் சிக்கல், பாலியல் சார்ந்து உளவியல் தளத்தில் பல கதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. பிறழ்காமமும் வன்முறை உளவியலும் மிக முக்கியமான பேசுபொருள் என்றே சொல்லலாம். காட்சியூடகப் பெருக்கத்திற்கு பின் பாலுறவு சித்தரிப்புகளை எழுத்தில் அப்பட்டமாக்குவது எளிது. பாலியல் சித்தரிப்பு அளிக்கும் கிளர்ச்சி என்பது கடலில் தெரியும் பனிமுனை என்பதாக பரிணாமம் கொள்ளும்போது உள்ளுறையும் ஆழத்தின் சாட்சியாகிறது. பாலியல் கதைகள் ஏதோ ஒரு வகையில் ஆண்-பெண், அல்லது ஆண்-ஆண், பெண்-பெண் உறவுகளின் தேவையை, அகங்கார மோதல்களை, பாவனைகளை பேசுகின்றன. மனிதனுக்கு மிக அருகிலேயே, அவன் கைக்கெட்டும் தொலைவிலேயே அவன் ஒருபோதும் அறியமுடியாத, வரையறை செய்ய முடியாத ஆழம் கொண்ட மற்றொரு உயிர் துணையாக உடன் வருகிறது. ஆண்-பெண் அல்லது துணை சார்ந்து எழுதுவதற்கு எல்லோருக்கும் சில கதைகள் உள்ளன. எல்லோருக்கும் தங்கள் அகங்காரம் எதிர்பாலினத்தால்/ சகபாலினத்தால் உடைபட்ட காயங்களின் வடுக்கள் உள்ளன. ஆகவே இக்கதைகள் அதிகம் எழுதப்படுகின்றன. மேலும் புறம் நோக்கி அகம் குவிவது குறைந்ததால் அகம் நோக்கி குவிவதும், உறவுகளின் பாவனைகளை எழுதுவதும் அதிகரித்திருக்கிறது என தோன்றுகிறது. அல்லது புற வாழ்க்கை இயந்திரமயமாகி நாம் அனைவரும் ஒன்று போலவே வாழ்ந்து வருவதாக தோற்றம் கொள்வதால் அகத்தில் விதவிதமான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க விழைகிறோம்.

கே. என் செந்திலின் ‘சகோதரிகள்’ நெடுங்கதை நாவலுக்கு நெருக்கமான வடிவத்தில் மூன்று சகோதரிகளின் துயர் மிகுந்த வாழ்க்கையை துண்டு துண்டு சித்திரங்களாக சொல்கிறது. நவீன வாழ்வின் அழுத்தங்கள் உறவுச் சிடுக்குகளை சொல்லும் கதைகள் லாவண்யா சுந்தர்ராஜனின் ‘புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை’ தொகுப்பில் உள்ள கதைகளில் காண்கிறோம். குறிப்பாக பணிக்கு செல்லும் பெண்களின் இடர்களை சொல்லும் ‘பயணங்கள்’ ‘சில்லறை’ ‘சப்தபர்ணி மலர்கள்’ ‘புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை’ ஆகியவை முக்கியமானவை. லாவண்யாவின் கதைமாந்தர்கள் மத்திய வயதை நெருங்கும் பணிக்கு செல்லும் குடும்பப் பெண்கள். குடும்பமும் பணியும் ஆற்றலை உறிஞ்சியதால் சோர்வும் சலிப்பும் எரிச்சலும் கொண்டவர்கள். நவீன காலத்தின் உறவு சிக்கல்களையே கவிதைக்காரன் இளங்கோவும் அவருடைய ‘பனி குல்லா’ தொகுப்பில் கதையாக்குகிறார். ஆனால் சலிப்பிற்கு பதிலாக அவருடைய கதைமாந்தர்கள் நட்பும் நன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

‘காம- அகங்கார- செயலூக்க- வன்ம சுழல் தான் பாலியல் கதைகளின் அடிநாதம் என தோன்றுகிறது. குற்ற உணர்ச்சியையும் ஒரு கண்ணியாக சேர்க்கலாம். பாலியல் கதைகள் இந்த எல்லையை கடக்க முடிகிறதா? பெரும்பாலான தொகுதிகளில் குறைந்தது ஒரு பரத்தையர் கதையும், தற்பால் உறவு கதையும் இடம்பெற்றுள்ளன. நம் புனைவு மனம் பரத்தையர் வாழ்வில் ஏதோ ஒரு புதிரை கண்டுகொள்கிறது தன் உடலை விற்பனை பண்டமாக வைப்பவரும், பாலியல் தேவைகளை சுய பாலினத்திலேயே தீர்ப்பவர்களையும் நம் புனைவுகள் வழியாக தர்க்கப்படுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம் என எண்ணுகிறேன்.

பசித்த மானுடம் துவங்கி தூயன் வரை நீளும் தற்பால் ஈர்ப்பு கதைகள். மெல்ல ஒரு சமூக ஏற்பு உருவாகி வருவதை காட்டுகிறது. உமையாழின் ‘நின் கூடுகை’ பெண்களுக்கு இடையிலான தற்பால் உறவை அந்நிய நிலப்பின்புலத்தில் சித்தரிக்கும் கவனத்தில் கொள்ளவேண்டிய நல்ல கதை. ஆனால் இந்த வரையறையை பரத்தையர் கதைகளில் என்னால் பொருத்த முடியவில்லை. பெரும்பாலும் நம் கதைகளில் அவர்கள் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். தனித்துவமும் நம்பகத்தன்மையும் இல்லாததே சிக்கல். பரத்தையர்களும், பதின்ம வயது அக்காக்களும் (மதினிகளுக்கும்கூட)- காலந்தோறும் நம் கதைகளில் பிறப்பெடுக்க என்ன காரணம் என யோசிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை எழுதுவதால் சுவாரசியமற்ற அன்றாட வாழ்விலிருந்து விலகி ஒரு கலகம் நிகழ்த்திவிட்டதாக உணர்கிறோமா? அல்லது தனித்துவமான/ அந்தரங்கமான அனுபவம் என நம்பி எழுதுகிறோமா?

தூயன், நவீன், சித்ரன், மணி எம்.கே. மணி, கார்த்திகை பாண்டியன், அனோஜன், சாதனா, கறுத்தடையான் என பலரும் பாலியல் தளங்களில் கதைகளை எழுதி இருக்கிறார்கள். கார்த்திகை பாண்டியனின் கன்னியாகுமரி காமத்தின் இரு நிலைகளை சொல்லும் நல்ல சிறுகதை. ‘கன்னியாகுமரி’ இரு வேறு காலங்களில் நான்கு வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. நரேந்திரன் தன் தேடலைக் கண்டடைகிறான். கன்னி அன்னையென எழுகிறாள். அன்பைத் தவிர அவளிடம் கேட்பதற்கு வேறொன்றுமில்லை அவனுக்கு. அதே கன்னியாகுமரியில் நிகழ்காலத்தில் உயிருக்கு உயிராய் நேசித்த பதின்ம வயது மகளைத் தொலைத்த தந்தை விரக்தியில் தனியாக சுற்றி அலைகிறார். அனைவரும் இணையோடு வந்திருக்க தான் மட்டும் தனியனாக வந்திருந்தது அவரை அழுத்துகிறது. ஏறத்தாழ தொலைந்த மகளுடைய வயதையொத்த அல்லது அவளினும் இளமையான தனித்த கன்னிப் பெண்ணின் துணையை நாடுகிறார். கன்னிமையை போக்கும் கலவிக்கு பின் அவளுடைய பெயரை பகவதி என்று அறிகிறார். கடலுக்குள் குதித்த நரேந்திரன் கரையை அடைகிறான். கன்னியின் சுடர் தொலைவில் தெரிய அவன் தேவியின் மார்பென இருக்கும் பாறையில் கால்பதித்து முத்தமிட்டு மடியில் அமர்ந்து தன்னையிழக்கிறான், நடுத்தர வயதில் இருக்கும் ராமநாதனுக்கோ பகவதி அன்னையாகவில்லை. கடலில் குதித்தவன் ஏறிக் கால் பதிக்க அன்னையின் மார்பும் அவருக்கில்லை. காமத்தின் இருநிலையை கதை சொல்வதாக புரிந்துகொள்கிறேன். காமம் உன்னதமாகும்போது கன்னி அன்னையாகிறாள். காமம் அப்பட்டமாகும்போது மகளும்கூட வெறும் கன்னியென நுகரப்படுகிறாள்..

கலக எழுத்துக்கு தமிழில் நெடிய பாரம்பரியம் உண்டு.. லக்ஷ்மி சரவணகுமாரின் தற்பால் உறவின் பின்புலத்தில் எழுதப்பட்ட ‘வள்ளி திருமணம்’ இந்த வகை எழுத்திற்கு நல்ல உதாரணம். பொது வாசகருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் அப்பட்டத்தன்மை கொண்டவை. ரமேஷ் ரக்ஷன் மற்றும் மணி எம்.கே மணி ஆகியோர் இன்று இவ்வகை எழுத்தில் தமிழில் புதிய போக்குகளை உருவாக்கியிருக்கிறார்கள். மணி எம்.கே மணியின் கதைகளில் ஒருவித அனுபவ முதிர்வின் நேரடித்தன்மை உள்ளது. ஒருவகையான அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் அவருடைய மொழி அவர் கையாளும் பேசுபொருட்களுக்கு ஆழத்தை அளிப்பதில்லை.

ரமேஷ் ரக்ஷனுடைய ‘பெர்ப்யூம்’ தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘பதினேழு இரவுகள்’ மற்றும் ‘மெர்லின் எனும் அவள்’ முக்கியமான கதைகள். ரமேஷ் பாலியலை எழுதும்போது மிக இயல்பாக, எவ்வித பாவனைகளும் இன்றி, நுணுக்கமாக எழுதுகிறார். உணர்வுரீதியாக ஒன்றாத ஒரு பார்வையாளரைப் போல் காமத்தை கவனித்து அவரால் எழுத முடிகிறது. ‘மெர்லின் எனும் அவள்’ இணையம் வழி ஒரு பெண்ணை தற்கொலைக்கு தூண்டுபவனின் கதை. அவள் மீது காதல் கொள்கிறான், அதே சமயம் அவளை தற்கொலையும் செய்ய வைக்க வேண்டும் என விரும்புகிறான். முன்னர் அவன் தூண்டிய வேறு பெண்களைப் போல் இலகுவாக அவனுடைய வலைக்கு விழவில்லை. நுண்ணிய ஆட்டம் அவர்களுக்குள் நிகழ்கிறது. இந்த கற்பனையும் உரையாடல்களும் வாசிக்கும்போது மெல்லிய மனப் பதற்றத்தை அளித்தது. மனதின் நுண்ணிய அசைவுகளை கைப்பற்ற ரமேஷ் ரக்ஷனால் முடிகிறது. அவருடைய எல்லை என்பது கதைகளை சிந்திக்கிறார் என்பதே. சிந்தனைகளுக்கான புனைவு வடிவத்தை அவர் அளிக்கிறார்.

இந்த வகையில் குறிப்பிடத்தகுந்த மற்றுமொரு எழுத்தாளர் என லைலா எக்சை சொல்லலாம். சாருவையும் ஷோபாவையும் ஆதர்சமாக கொண்ட எழுத்தாளர். ‘பிரதியின் நிர்வாணம்’ கூர்மையான அகமொழியில் எழுதப்பட்ட தொகுப்பு.. ஆண்-பெண் உறவின் பாவனைகளை கருப்பொருளாகக் கொண்டு சுரேஷ் பிரதீப் கணிசமான கதைகளை எழுதி இருக்கிறார். இந்தத் தலைமுறை எழுத்தாளர்களில் மிகக் கூர்மையான அகமொழி வாய்த்த எழுத்தாளர் என அவரை சொல்ல முடியும். சிந்திக்கும் கதைசொல்லி எனும் எல்லையை கடக்கும் ‘பாரம்’ சிறுகதை அவருடைய தொகுதியில் முக்கியமான கதை. தன் சவத்தை இழுத்துச் செல்லும் குழந்தை தவழ்ந்து பரலோகத்தில் கதைசொல்லியின் காலை கடந்து செல்கிறது எனும் ஒரு சித்திரம் பல பக்கங்கள் நீளும் விவாதங்களையும் தர்க்கங்களையும் பின்னுக்குத் தள்ளி மேலே எழும்பி நிற்கிறது.

உளவியல் தளங்களில் நிகழும் கதைகள் பல சமயங்களில் பாலியல் கதைகளுடன் நெருக்கமானவை. வன்முறை உளவியலை நெருக்கமாக நோக்குபவை. காமத்துடன் அதற்கு இருக்கும் பிணைப்பை அவதானிப்பவை. கே.என். செந்திலின் அரூப நெருப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘மாறாட்டம்’, கார்ல் மார்க்சின் வருவதற்கு முன்பிருந்த வெயிலில் இடம் பெற்றிருக்கும் ‘காட்டாமணக்கு’ தூயனின் ‘முகம்’ சித்ரனின் ‘ஐயனார்புரம்’ சுரேஷ் பிரதீப்பின் ‘ஈர்ப்பு’ சாதனாவின் ‘சிறுமி கத்தலோனா’ என இக்கதைகள் அனைத்துமே வெவ்வேறு வகையில் வன்முறையின் உளவியல் மற்றும் அதன் நிழலாக படரும் காமத்தை பேசுபவை. ‘மாறாட்டம்’ ‘காட்டாமணக்கு’ மற்றும் ‘ஐயனார்புரம்’ ஆகிய கதைகளில் மற்றுமொரு ஒற்றுமை உண்டு. இவர்கள் எவரும் முழுமையான வன்முறையாளர்கள் அல்ல. ஒரு சன்னத தருணத்தில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து வன்முறைக்கு ஆட்படுபவர்கள். மொத்த கதையும் அவர்களின் கட்டுப்பாடு ஏன் உடைந்தது, எங்கே உடைந்தது, எனும் விந்தையை அறிய முற்படுபவை என கூறலாம். அந்த கண நேர உடைவை தர்க்கப்படுத்தும் முயற்சிகளுக்கு அப்பால் அதை புரிந்து கொள்ள இயலாது எனும் முடிவையே இக்கதைகள் வந்தடைகின்றன. அதுவே இக்கதைகளை முக்கியமானதாக ஆக்குகின்றன. மனிதனின் எல்லா செயல்களுக்கும் காரணங்களை கற்பிதம் செய்துவிட முடியாது. ‘மாறாட்டம்’ கதையில் இன்னொருவனுடன் உறவில் இருக்கும் மனைவியை சந்தேகிக்கிறான். பின்னர் கையும் களவுமாக பிடிபடுகிறாள். அவளை மன்னித்து ஏற்கவும் செய்கிறான். ஆனால் மறுநாள் காலை துள்ளலுடன் வரும் அவளை முழு வன்மத்துடன் சுவற்றில் தலை அறைந்து கொல்கிறான். ‘காட்டாமணக்கு’ மிகச் சாதாரணமாக சிகரெட் பிடிக்க வயலுக்கு வரும் இரு நண்பர்களின் உரையாடலுடன் துவங்குகிறது. நள்ளிரவில் நண்பனின் மனைவி யாருக்காகவோ வருவதை கவனித்ததும் இவனுக்கு கிளர்ச்சி ஏற்படுகிறது. அவளை வன்புணர்வு செய்கிறான். அந்த நண்பனின் அக்கறை தொனிக்கும் உரையாடல்கூட அதற்கான காரணமாக இருக்கக்கூடும். அவனுடைய வாழ்வின் அதுவரையிலான அத்தனை தோல்விக்கும் அந்த செயல் ஒரு மருந்து என ஆகிறது. சித்ரனின் ‘ஐயனார்புரம்’ புதுக்கோட்டை பகுதியில் மட்டும் புழங்கும் ‘லாக்’ எனும் விளையாட்டை அடிப்படையாக கொண்டது. விளையாட்டு வன்முறையில் முடியும் சித்திரம். ஒரு தருணத்தில் பலகீனன் பலவானை வெல்கிறான்.

தொன்ம மீட்டுருவாக்க, அறிவியல் புனைவு, டிஸ்டோபிய கதைகளை ஒரு தொகையாக கொண்டோம் எனில், தமிழின் வளரும் நுனி என இந்த தளத்தையே சொல்வேன். சாதனாவின் ‘யூதாஸின் முத்தம்’ அவ்வகையில் மிக முக்கியமான கதை. தொன்மத்தில் ஒரு ஊகப் புனைவு என சொல்லலாம். யூதாஸை எதிர்மறை பாத்திரமாக நாம் அறிந்திருக்கும் சூழலில், நாம் அறிந்த செயலுக்கு பின்னணியாக அறியாத தொன்மத்தை புனைந்து யூதாஸின் தரப்பை பேசுகிறார் சாதனா. ரா. கிரிதரனின் ‘மரணத்தை கடத்தலும் ஆமே’ காந்தியை மையமாக கொண்ட சுவாரசியமான வரலாற்றுப் புனைவு. ஜா. தீபாவின் ‘திரை’ அழகுநிலாவின் ‘வெண்ணிற இரைச்சல்’ ஆகியவை மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்த கதைகள். கமலதேவியின் ‘சக்யை’ தொகுப்பில் இரண்டு கதைகள் தொன்மத்தை மீளுருவாக்கம் செய்கின்றன. மகாபாரதம் போன்ற கதைகளை மறு ஆக்கம் செய்யும்போது அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். புதிய கோணத்தை, புதிய திறப்பை அளிக்க முடிகிறதா? அத்திறப்பு நம் இன்றைய வாழ்க்கையை பொருள் கொள்ள செய்ய உதவுகிறதா? அல்லது மானுட அகத்தை பற்றிய அறிதலை அளிக்கிறதா? இக்கேள்விகள் முக்கியமானவை.

டிஸ்டோபிய கதைகள் சமூக கட்டமைப்பின் உடைவை, அதன் சீரழிவை கற்பனை செய்பவை. ஜீவ கரிகாலனின் கண்ணம்மா தொகுதியில் “அது ஒரு கனவு மட்டுமே” செயற்கைக்கோள் யுத்தத்தை கற்பனை செய்கிறது. “cloud war” என அதை சொல்கிறார். ஒரு தேசத்தின் மீது போர் தொடுக்க அதன் தகவல் மையத்தை தாக்கினால் போதும் எனும் கற்பனை மெல்லிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. விஷால் ராஜாவின் “மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி” நவீன வாழ்வின் வெறுமையை உக்கிரமாக பேசும் கதை. அத்தனை வசதி வாய்ப்புகளுக்கு அப்பால் தன் கரங்களும் கால்களும் நுண்ணிய தளைகளால் ஆட்டுவிக்கப்படுகின்றன என உணரும் ஒரு தலைமுறையின் ஆத்திரத்தின் கலை வடிவம். ஒரு மென்பொருள் நிறுவனம் வெடிகுண்டு மற்றும் கைத்துப்பாக்கி தாக்குதலால் பேரிழப்பை சந்திக்கிறது. உள்ளிருப்பவர்களே மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். வெறுப்பை அறுவடை செய்யும் அமைப்புகள். செய்தி அறிக்கை, பல பாத்திரங்களின் மன உணர்வு ஊடாக கதையை நகர்த்தி இருக்கிறார். வழமையான சிறுகதை இலக்கணத்திலிருந்து பெரிதும் விலகிய வடிவம்.

சுசித்ராவின் ‘தேள்’ துண்டு துண்டாக எழுதப்பட்ட நல்ல டிஸ்டோபிய கதை. ‘சிறகதிர்வு’ மற்றும் ‘யாமத்தும் யானே உளேன்’ ஆகியவை இரண்டும் மிக ஆதாரமான வாழ்க்கை கேள்விகளை எடுத்துக் கொண்டு அறிவியல் பின்புலத்தில் விரிவாக விவாதிக்கின்றன. மரணமின்மை எனும் நிலையை அடைந்தபிறகு மரணத்தை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வை எத்தகையதாக இருக்கும் எனும் கேள்வியை சிறகதிர்வு எழுப்புகிறது. உயிர் என்பதும் பிரக்ஞை என்பதும் என்ன எனும் கேள்வியை யாமத்தும் யானே உளேன் வழியாக எதிர்கொள்கிறார். ரா. கிரிதரனின் ‘பல்கலனும் யாம் அணிவோம்’ சிறுகதையும் இதே கேள்வியை எழுப்பும் மற்றுமொரு முக்கியமான கதை. நகுல்வசனின் ‘கடவுளும் கேண்டியும்’ நரம்பியல்- பிரக்ஞை சார்ந்து செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் நிகழும் கதை. இந்தக் கதையின் படைப்பூக்கம் என்பது புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’ கதையை அடித்தளமாகக் கொண்டு தற்காலத்தில் அதை மீள் நிகழ்த்தி ஒருவித காலாதீதத் தன்மையை அளிப்பது. அறிவியல் புனைவுகளில் இந்தக் கதையில் உள்ள ‘ஸ்மார்ட் மங்கியைப்’ போல அதிசெயல்திறன் கணினிகள் உலவுவது வழக்கம். எல்லாவற்றையும் கணினியால் வகுத்துவிட முடியாது, அப்படி முடிந்தால் மனிதனின் தனித்தன்மைக்கும் இருப்பிற்கும் என்ன பொருள் எனும் தரப்பிற்கும் வகுத்துவிட முடியும் என நம்பும் தரப்பிற்குமான உரையாடலும்கூட. கடவுள் படைத்தான் என்பதற்கும் கடவுளைப் படைத்தான் என்பதற்கும் இடையிலான முரணும்கூட கதையின் பேசுபொருள் ஆகின்றன.

சித்ரனின் ‘விசும்பின் மொழி’ அண்மையில் நான் வாசித்த நல்ல மிகுபுனைவுகளில் ஒன்று. அறிவியலும் மறைஞானமும் கலந்த கதை. மரித்த குழந்தைகள் வவ்வால்களாக மாறுகின்றன. சொல்லிய விதமும், மொழியும், உணர்வுத் தொடர்ச்சியும் இக்கதையை சிறப்பானதாக ஆக்குகிறது. சித்துராஜ் பொன்ராஜின் “மீன் முள் கட்டுமானம்” பூமியின் மேற்பரப்பு அழிந்த பின் அடியில் வாழும் மனிதர்கள் எப்படி பரிணாமம் கொள்கிறார்கள் என விந்தையான கற்பனையை முன்வைக்கிறது. மனிதர்கள் புழுவிற்கு சமமாக சுரங்கங்களில் வாழ்கிறார்கள். கார்த்திகை பாண்டியனின் ‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ லத்தீன் அமெரிக்க கதைகளின் சாயல் கொண்ட ஊகப் புனைவு. உன்னதமான சிலுவையின் சொற்கள் எல்லாம் தலைகீழாக்கப்படுகின்றன. மரித்தவர்கள் எல்லாம் எவனோ ஒரு மயிருக்காக நான் எதற்கு சாக வேண்டும் எனத் திருப்பிக்கேட்டு விழுமியங்களை கவிழ்க்கிறார்கள். தேவகுமாரன் தன்னைக் காட்டிக் கொடுத்தவனை பழி தீர்க்கிறான் அல்லது அதன் மூலம் மன்னிக்கிறான். கர்ணன் போரில் அர்ஜுனனைக் கொல்கிறான், தானும் மரித்து அவன் அன்னையை வதைக்கிறான். இக்கதை மையமற்ற காட்சிக் கோவை. அதன் இருட் சித்தரிப்புகள் காரணமாக வெகுவாக அலைகழிப்பவையும்கூட.

தூயனின் ‘ஒற்றைக்கை துலையன்’ ஒரு தொன்மத்தை சமகாலத்துடன் இணைத்து அதன் உளவியலை நோக்கும் முக்கியமான கதை. இரண்டு சரடுகளை கொண்டது. ‘மஞ்சள் நிற மீனை’ போலவே பள்ளிப் பருவத்து இளைஞன்தான் கதைசொல்லி. சித்தம் சிதறி இருக்கும் அவனுடைய மூத்த சகோதரி ராசாத்திக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்குமான உறவு, அவளுடைய சிக்கல்கள் என்பது ஒரு பகுதி. நேர்ச்சைக்காக அவர்களுடைய குலசாமியான ஒற்றைக்கை துலையனை வணங்கச் செல்கிறார்கள். மற்றொரு பகுதி துலையனின் தொன்மத்தை சொல்கிறது. கட்டற்ற காமமும் வீரமும் கொண்ட துலையன் போரில் கொள்ளும் எழுச்சி, இளுவத்தி மீது கொள்ளும் காமம், அவனுடைய வீழ்ச்சி என அவனுடைய முழுக் கதையையும் விவரிக்கிறது. வட்டார நாட்டார் தொன்மத்தை பதிவு செய்கிறார்.

சமகாலத்தில் எழுதப்படும் சிறுகதைகளின் பல்வேறு வகைகளை இக்கட்டுரை ஓரளவு தொட்டு காட்டியுள்ளது என நம்புகிறேன். சமகால சிறுகதைகளில் மூத்த எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சு. வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், அம்பை, இரா. முருகன், யுவன் சந்திரசேகர், அ. முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார இந்திரஜித், கீரனூர் ஜாகிர் ராஜா, எஸ். செந்தில்குமார், வாமு கோமு, என். ஸ்ரீராம், எம்.கே குமார் என பலரும் முனைப்புடன் இயங்கி வருகிறார்கள். சிறுகதைகளின் போக்குகளை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக தொடர்ந்து திகழ்கிறார்கள். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இத்தனை கதைகள் ஏன் எழுதப்பட்டன என்று யோசித்து பார்த்தேன். நாம் நம் அன்றாடத்தை விட்டு வெளியேறிய பின், வாழ்வு மற்றும் எதிர்காலம் குறித்த அச்சமும் சேர்ந்துகொண்டு சமூகமாக நம்மை நாமே பகுத்து நோக்கிக் கொண்டதின் ஒரு விளைவு என சொல்லலாம். மீண்டும் அன்றாடத்தில் உழலத் தொடங்கியதும் இவையாவும் இயல்படையக்கூடும். எனினும் சிலரேனும் தங்களை படைப்பாளிகளாக கண்டு கொள்வார்கள். வரப்புயர நீருயரும் என்பதைப்போல் வாசக பரப்பு அதிகரிக்க அதிகரிக்க, எழுத்தாளர் பரப்பும் அதிகரிக்கும், எழுத்தாளர் பரப்பு அதிகரிக்கும்போது நல்ல எழுத்துக்களின் எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும்.

இறுதியாக, சிறுகதைகளை எழுத்தாளனாக அல்ல ஒரு வாசகனாகவே வாசிக்க விரும்புகிறேன். முழுமையாக ஒப்புக்கொடுத்து, எழுத்தாளரை நம்பி அவருடைய உலகிற்குள் நுழைவதே நியாயம் செய்வதாக இருக்கும். பிரதியை திறந்த மனதுடன் அணுகுவதே நாம் அதற்கு செய்யும் மரியாதை. இன்றைய சூழல் படைப்பூக்கத்திற்கு பல சாத்தியங்களையும் சவால்களையும் அளித்திருக்கிறது. நமக்கிருக்கும் பெருமை மிக்க சிறுகதை மரபிற்கு நியாயம் செய்யும் தொடர்ச்சிக்கான நம்பிக்கை அளிக்கும் யத்தனங்கள் தென்படுகின்றன என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

பிற படைப்புகள்

Leave a Comment