ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 5இதழ்கள்கட்டுரை

ஸ்டீபன் ஹாக்கிங் – சம காலத்தின் முன்னோடி
ஜெகதீசன் சைவராஜ்

by olaichuvadi November 15, 2021
November 15, 2021

 

 

We are just an advanced breed of monkeys on a small planet orbiting average star. But we can understand the universe and that makes us very special.-Stephen Hawking

நம் சமகாலத்தில் வாழ்ந்த அறிவிற்சிறந்த விஞ்ஞானிகளை வரிசைப்படுத்துவோமெனில் அதில் தவிர்க்க முடியாத இடத்தையும், ஏன் வரிசையின் முதல் இடத்தையும் பெற அத்தனை தகுதிகளும் கொண்டவர் மறைந்த பிரிட்டிஸ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். நுண்ணறிவாற்றலில் ஐன்ஸ்டீன், கலிலியோ, நியூட்டன் ஆகியோருக்கு இணையாக கருதப்பட்ட சமகாலத்து விஞ்ஞானி. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே கோட்பாட்டு இயற்பியலுக்கு அர்ப்பணித்தவர். அதன் விளைவாக பிரபஞ்ச உருவாக்கம், காலப்பயணம் ஆகியவற்றுக்கான விளக்கங்களையும், கருந்துளை, ஒருமைப்புள்ளி ஆகியவற்றின் இயல்புகளை தீர்க்கமான கருத்துகளைக் கொண்டு முன்மொழிந்தார். இக்கருத்துகள் ஆரம்பத்தில் மறுக்கப்பட்டாலும் பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாறியது.

வாழ்க்கை வரலாறு

கலிலியோ இறந்து துல்லியமாக 300 ஆண்டுகள் கழித்து 1942 ஆம் ஆண்டு  ஜனவரி எட்டாம் நாள்,தேசிய மருத்துவக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வந்த பிராங்க் ஹாக்கிங்-இஸபெல் ஹாக்கிங் இணையருக்கு மூத்த மகனாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப்போர் துவங்கிய சமயம் நாஜிக்களினால் பிரிட்டனின் ஒருபகுதி சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்க எவ்வித சலனமுமின்றி ஹைகேட் ஆரம்பப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் படித்துமுடித்தார். பின்பு புனித அல்போன்ஸ் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து உயர்கல்வியில் இயற்பியலிலும்,கணிதத்திலும் சிறந்து விளங்கினார். உயர்கல்விக்குப் பின் தந்தை மருத்துவம் படிக்க வற்புறுத்திய போதும் இயற்பியல் பிரிவில் சேர்ந்து 1962-ல் இளநிலை பட்டம் பெற்றார். பின்பு பேரண்டவியலின் மீதான ஆர்வத்தின் காரணமாக கேம்பிரிட்ஜின் பயன்பாட்டு கணிதம் மற்றும் கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மாணவனாக சேர்ந்தார். இவ்வாராய்ச்சிகளில் அக்காலகட்டத்தில் யாரும் ஈடுபடாததால் புதியவரான ஹாக்கிங்கிற்கு அது மிகப்பெரிய சவாலாய் அமைந்தது. இருப்பினும் ஆராய்ச்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் போது அதைவிட பெரிய சவால் ஒன்று காத்துக்கொண்டிருந்தது.

ஆம், ஒருநாள் உடல்நிலை நலிவடைந்ததன் காரணமாக மருத்துவரிடம் அணுகிய போது இரண்டு வார சோதனைக்குப் பின்னான செய்தி ஹாக்கிங்கை சற்று தளர்வாக்கியது. ALS(Amyotrophic Lateral Disease) என்றழைக்கப்படும் ஒரு வித நரம்பு தசை நோய் தாக்கியிருந்தது. லே கேரிக் என்று பரவலாக அறியப்படும் இந்நோய் மூளை மற்றும் முதுகுத்தண்டை கண்காணிக்கும் நரம்பு செல்களை சிதைத்துவிடும். ஆனால் மூளையின் அறிவாற்றலுக்கு எப்பாதிப்பும் ஏற்படுத்தாது. நோய் தீவிரம் அடையும் பட்சத்தில் சுவாசத்தசைகள் நலிவடைந்து நிமோனியா தாக்கி மரணம் ஏற்படக்கூடும் என்று விளக்கி, அதிகபட்சம் இரண்டு வாரமென நாள் குறித்தனர் மருத்துவர்கள். ஆனால் ஹாக்கிங்கோ இதிலிருந்து மீண்டு சக்கர நாற்காலியில் தஞ்சம் புகுந்து 1965 ஆம் ஆண்டு விரிவடையும் பிரபஞ்சத்தின் பண்புகள் எனும்  தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அதே ஆண்டு தனது காதலி ஜேன் ஒயில்டை கரம் பிடித்தார். அதிக நாள் வாழமாட்டார் என்ற கூற்றையும் மீறி ஹாக்கிங்கை ஜேன் கரம் பிடித்தது, அவரை இன்னும் உயிர்ப்புடன் வைத்தது. பின் 1974 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ராயல் சொசைட்டியின் ஓர் அங்கமானர். 1979 ஆம் ஆண்டில் இதற்கு முன் ஐசக் நியூட்டனால் வகிக்கப்பெற்ற லூக்காசியன் கணித பேராசிரியர் பதவி ஹாக்கிங்கிற்கு அளிக்கப்பட்டது.

ஸ்டீபன் ஹாக்கிங் இப்பிரபஞ்ச இயக்கவியலுக்கான அடிப்படை விதிகளை ஒன்றிணைப்பதிலே பெரும் காலத்தை செலவிட்டார். எதிரெதிர் துருவங்களாய் இருக்கும் குவாண்டம் தியரியையும், பொது சார்பியல் தத்துவத்தையும் இணைத்து Unified Grand Theory எனும் பொது விதியை உருவாக்கி நிறுவ வேண்டுமென்பது அவரது கனவு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் இதற்காகத்தான் அரும்பாடுபட்டார். அவரது கால் தடங்களை பின் தொடர்ந்த ஹாக்கிங் கண்டடைந்தது என்னவோ ஹோலோகிராமைத்தான். 1985 ல் A brief History of Time எனும் நூலின் எழுத்துருவாக்கம் முடிந்திருந்த தருணம், ஆராய்ச்சி நிமித்தமாக ஜெனிவாவிலுள்ள செர்ன் ஆய்வு நிலையத்தில் ஆய்வின் போது மயக்கமடைந்து விழுந்தவரை நிமோனியா தாக்கியிருந்தது. மரணத்தின் விளிம்புக்கே சென்றவரை குரலை மட்டும் பிடுங்கிக்கொண்டு உயிரோடு விட்டது. முகத்தசைகளைத் தாண்டி வேறெந்த உடல் தசையும் செயல்படவில்லை. இச்சூழலில் ஹாக்கிங்கின் மாணவரான பிரையன் ஒயிட் என்பவர் முகத்தசைகளின் அசைவுகளை கொண்டு வார்த்தைகளை கோர்த்து கணிணிக்குரல் வாயிலாக பேசும் ஒரு கணிப்பொறியை டேவிட் மேசன் என்பவரின் துணையுடன் அவரது சக்கர நாற்காலியில் இணைத்துக் கொடுத்தார்.அதனோடு நில்லாமல்  A brief History of Time நூலையும் முழுமைப்படுத்தி வெளியிட துணைபுரிந்தார். பின்னாளில் அந்நூல் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.

ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் பேரண்டத்தைப் போல் விரிவானது அவற்றுள் முக்கியமான சில ஆராய்ச்சிகள்…

பெருவெடிப்புக்கொள்கை

இப்பிரஞ்சம் எவ்வாறு உருவானது, எத்தனை பெரியது, எவ்வாறு இயங்குகிறது போன்ற கேள்விகளுக்கு பதிலாக இக்கொள்கை விளக்கப்படுகிறது. தோராயமாக 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் இப்பிரஞ்சத்தின் மொத்த பொருண்மையும் ஓர் புள்ளியில் செறிந்திருந்ததாகவும், அப்புள்ளி முடிவிலா அடர்த்தி மற்றும் ஈர்ப்பை கொண்டிருந்ததாகவும், அதீத வெப்பம் செறிந்த ஒரு பந்து போல் காணப்பட்ட அப்புள்ளி ஒருமைப்புள்ளி (Singularity) எனவும் அறியப்படுகிறது. குவாண்டம் அளவில் ஏற்பட்ட வெளிப்புற விசையொன்றின் தூண்டுதல் மற்றும் அதீத திணிவினால் அப்புள்ளி வெடித்து சிதறியதன் விளைவாக இப்பிரபஞ்சம் உருவாகியது என இயற்பியலாளர்கள் கருதுகின்றனர். மேலும் வெடிப்பின் போது வெளிப்பட்ட விசை இருக்கும் வரை விரிவடைந்து கொண்டே சென்று அவ்விசை குறையும் போது ஈர்ப்பு விசை செயல்பட்டு சுருங்க தொடங்கும் என்று நம்பினர். இது பற்றிய ஆராய்ச்சியில் ஹாக்கிங் இப்பிரபஞ்சம் முடிவிலாதது, குவாண்டம் மாற்றங்கள் காரணமாக இப்பிரபஞ்சம் கால வரையறையின்றி விரிவடைந்து கொண்டேதான்  இருக்கும். மேலும் பெருவெடிப்பிற்கு முன் பிரபஞ்சத்தில் ஏதுமிருந்திருக்க வாய்ப்பில்லை  என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார். ஆனால் ஹாக்கிங் இறப்பதற்கு முன்னர் The Journal for High Energy Physics என்னும் ஓர் இதழில் அவரது சகாவான தாமஸ் ஹெர்டாக் என்பவருடன் சேர்ந்து தனது கடைசி ஆய்வறிக்கையை சமர்பித்தார். அதில் இப்பிரபஞ்ச விரிவடைதல் ஓர் வரம்பிற்குட்பட்டது எனவும், இப்பிரபஞ்சம் நாம் உணர்ந்த வரை பெரிது என்றாலும் அதற்கும் எல்லை உண்டு என String Theory-ஐ  மேற்கோள் காட்டி தனது கோட்பாட்டை திருத்திக்கொண்டார்.

கருந்துளை

ஒரு நட்சத்திரம் அதன் அணுக்கரு இணைவுக்குத் தேவையான எரிபொருள் தீர்ந்தவுடன், சூப்பர்நோவா என்னும் வெடிப்புக்குள்ளாகும். அவ்வாறு வெடிப்பிற்குள்ளான நட்சத்திர உட்கருவின் எடை சூரியனின் எடையைப்போல் மூன்று மடங்குக்கு மேல்(சந்திரசேகர் எல்லை) இருந்தால் அது கருந்துளையாக மாறிவிடும். இக்கருந்துளைகளின் ஈர்ப்பு முடிவிலி, ஆகையால் அருகில் இருக்கும் அனைத்தையும் தன்னகத்தே ஈர்த்துக்கொள்ளும். இது பற்றிய தொடக்கநிலை கோட்பாடுகளை ஐன்ஸ்டீன் கொடுத்திருந்தாலும் கருந்துளையை குவாண்டம் இயற்பியலுடன் சேர்த்து  ஹாக்கிங் கதிர்வீச்சு என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதன்படி கருந்துளையின் விளிம்பான நிகழ்வெல்லையில் ஒரு துகளும் அதன் எதிர்த்துகளும் இணைந்து அழியும் முன் ஒரு துகள் கருந்துளையினுள்ளும், மற்றொரு துகள் கதிர்வீச்சாகவும் வெளியேறிவிடும் எனவும், இது கருந்துளையின் திணிவைக் குறைக்கும் எனவும் கணித சமன்பாடுகளை கொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டார். கருந்துளைகள் மீச்சிறு அளவில்(Sub atomic Level) உருவாகி இவ்வகையான கதிர்வீச்சை வெளியிட்டு நிலைத்தன்மை இழந்து மறைந்துவிடுவதாகவும் நம்பினார். இதனைத்தான் ‘ஹாக்கிங் ரேடியேசன்’ என்று அழைக்கிறோம். இவற்றைத் தாண்டி கருந்துளையும் அதன் நிகழ்வெல்லையும் அதன் நிலையிலிருந்து குறையாது என்னும் கருந்துளை இயங்கியலுக்கான இரண்டாம் விதியை தருவித்துள்ளார். கருந்துளையப்பற்றி நெடும் ஆராய்ச்சி செய்த இவர், அதனை புகைப்படமெடுக்கும் ஆராய்ச்சி முழுமையடைந்து ஓர் புகைப்படமாக உலகம் கண்டபோது, அவரின் இருப்பு இல்லாதது அறிவியளாலர்களுக்கு சற்று வருத்தமான விசயமாக இருந்தது.

காலப்பயணம்

காலப்பயணத்தை பொருத்த வரை, ஆரம்பத்திலிருந்தே தீர்க்கமான முடிவை எட்ட முடியாவிட்டாலும் தனது கடைசி புத்தகத்தில் ( Brief Answers to Big Questions) காலப்பயணம் சாத்தியமா என ஆராய விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படுமென பதிலளித்துள்ளார். இருப்பினும் இது அதிமுக்கிய கேள்வி எனக் குறிப்பிட்டுள்ளார். காலப்பயணத்தில் இருக்கும் பிரச்சனை ஒளியின் வேகத்தை மிஞ்ச எதனாலும் முடியாது. ஒருவேளை ஒளியின் வேகத்தை விட அதிகமாக செல்ல முடிந்தால் அது நிச்சயம் நம்மை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லும்.அந்த வேகத்தில் செல்லுமளவிற்கு ஆற்றல் மிக்க விண்வெளி கலன்கள் நம்மிடம் தற்போது இல்லை. ஆனால் String Theory படி இப்பிரபஞ்சம் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்டிருந்தால், மேற்பரிமாணத்தில் இருக்கும் ஓர் உயிர் அல்லது பொருளுக்கு காலம் ஓர் உணரக்கூடிய பரிமாணமாக இருக்கும்பட்சத்தில் காலப் பயணத்தை மேற்கொள்ள இயலும். ஆனால் அப்பரிமாணத்தை உணர முடியாத வரை அதனை  நம்மால் உணர இயலாது.

கடவுள் மற்றும் வேற்றுகிரகவாசிகள்

இப்பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன் எதுவும் இருந்திருக்காத போது, அதை உருவாக்க கடவுள் மட்டும் எவ்வாறு இருந்திருப்பார் என்ற கேள்வி வாயிலாக கடவுளின் இருப்பை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வந்துள்ளார். இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனித்து இருக்கிறோம் என்பதை தீர்க்கமாக கூற இயலாது எனவும் ஒரு வேளை வேற்றுகிரகவாசிகள் நம்மை விட தேர்ந்த அறிவு பெற்றிருந்து நம்மைக் காண வந்தால் கொலம்பஸ் அமெரிக்காவின் பூர்வகுடிக்கு விளைவித்த அதே தீங்கு நமக்கு நிகழ வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நம்மால் உணர முடிந்த பிரபஞ்ச எல்லை வரை நாம் மட்டும்தான் வளர்ந்த பரிணாமம் அடைந்த உயிரினம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இவைகளைத் தாண்டி ஸ்டீபன் ஹாக்கிங், யூரி மில்னர் மற்றும் மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோர் இணைந்து ஒளியின் வேகத்தில் 25 சதவிகித வேகத்தில் செல்லக்கூடிய சிறிய ரக செயற்கைக்கோள் திட்ட வரையறையை வெளியிட்டிருந்தனர். ஸ்டார் சார்ட் எனும் அந்த திட்டப்படி நானோ அளவில் கருவி பொருத்தப்பட்ட ஒரு மிகச்சிறிய ஏட்டை லேசர் ஒளிக்கற்றைகள் தூக்கிச் செல்லுமாறு வடிவமைத்து ஆல்பா சென்டாரி நோக்கி செலுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் முன்னரே அவர் கடந்த ஆண்டு (2018) மார்ச் 14-ல் இப்பிரபஞ்சத்தோடு கலந்தார். ஹாக்கிங் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி Theory of Everything என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

கோட்பாட்டு இயற்பியலில் அவரது பங்களிப்பு அளப்பறியது. ஏனெனில், பொதுவாக அறிவியல் தளத்தில் இயங்கும் ஒருவர் தனது அறிவாற்றலால் பல்வேறு கோட்பாடுகளை முன்மொழிவது இயல்பான ஒன்றே. ஆனால் அவற்றை பலதரபட்ட புள்ளியியல் மற்றும் சமன்பாடுகள் வாயினூடாக கருத்தியல்களாக வெளிப்படுத்தி, பிறிதொரு நாளில் வேறொரு ஆராய்ச்சியாளனால் பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின் சரியென நிரூபிப்பது அரிதினும் அரிதான ஒன்றே. இதற்கு முன்பு அவ்வாறான ஒரு அறிவியலாளராக இவ்வுலகம் ஐன்ஸ்டீனை அடையாளம் கண்டது. அவருக்குப் பின் கோட்பாட்டு இயற்பியலில் அவ்விடம் தற்போது ஹாக்கிங்குக்கு கிடைத்துள்ளது. இதற்கு பின் இவ்விடம் என்றேனும் ஒரு நாள் வேறொரு ஆராய்ச்சியாளனால் கைப்பற்றப்படும், ஆயினும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் இடம் என்றும் தனித்துவம் வாய்ந்ததே! இதற்குக் காரணம் ஹாக்கிங் தன்னை கனவில் திளைத்திருக்கும் ஓர் வினைஞராகவே கருதினார். அந்த வகையில் “நாம் எங்கு இருக்கிறோம்? எப்படி இங்கு வந்தோம்?” போன்ற கடந்த கால கேள்விகளைத் தாண்டி, நாம் என்னவாக இருக்கப்போகிறோம் என்கிற எதிர்காலத்துப் பார்வை அவரிடம் இருந்தது.

உதாரணமாக, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவை நம்பி நம்மை நாம் ஒப்படைக்கும்பட்சத்தில் என்றேனும் ஒருநாள் நுண்ணறிவினால் ஆபத்து விளையும் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். பல்வேறு விஞ்ஞானிகள் பேசத் தயங்கிய இடமும் இதுதான். இனியும் பேசுவார்களா என்றும் தெரியவில்லை. மேலும் அணு ஆயுதங்களைக் கையாளும் அளவிற்கு நாம் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவத்தை கண்டு அஞ்சாமல் மக்களிடம் எடுத்துரைத்தார். தற்கால அறிவியலின் சாதகங்களைத் தாண்டி, அதன் பாதகங்களையும் உலகுக்குச் சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் வெகு சிலரே, அதில் ஹாக்கிங்கும் ஒருவர். பிரபஞ்சம் பற்றிய புரிதலை அறிவியல் பின்புலம் இல்லாத ஒருவரிடம் கொண்டுசேர்ப்பதைக் காட்டிலும் கடினமான செயல் ஒன்று இராது. பெருவெடிப்புக்கொள்கையாக இருக்கட்டும்,கருந்துளை மற்றும் காலம் பற்றிய புரிதல்களாக இருக்கட்டும் அதை வெறும் கோட்பாட்டளவில் மட்டுமே அணுகும் போது அவ்வொருவருக்கு இவற்றின் மீதான நம்பிக்கை அல்லது நம்புமளவுக்கான சூழலை உருவாக்குவது எந்தளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லை. ஆனால் சரியான தரவுகளின் வழி கருத்தியல்களை முன் வைக்கும் பொழுது அவற்றை நம்புவதற்கான சூழல் வசப்படுகிறது. ஐன்ஸ்டீன் வெளியிட்ட சார்பியல் தத்துவம் அனைவருக்கும் புரிகிற ஒன்றா என்றால் நிச்சயம் இல்லை, ஆனால் மக்கள் ஐன்ஸ்டீனை கொண்டாடுகிறார்கள். காரணம் மேற்ச்சொன்ன சூழல். அதனை ஹாக்கிங்கும் மக்களிடையே உருவாக்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும்.

எடுத்துக்காட்டாக, வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்களா என்கிற கேள்விக்கு தர்க்கரீதியாக இலைமறை காய்மறையாக இல்லை என்று சொன்னாலும், நீர் இருக்கும் இடத்தில் எல்லாம் உயிர்கள் உருவாகி வாழ்ந்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக முன் நம்பினார். பிரபஞ்சத்தில் பல கோள்கள், சிறுகோள்கள் எல்லாம் நீரை உறைநிலையிலோ அல்லது வேறொரு வடிவிலோ பெற்றிருக்கின்றன என்பது மறுக்க முடியா உண்மை. எனவே, மற்ற ஆராய்ச்சியாளர்களால் பார்க்க முடியாத ஒரு பரிமாணத்தின் வழி நோக்கி, அதனை கணித சமன்பாடுகளை அடிப்படையாக கொண்ட கோட்பாடுகளாக தருவதற்கு நம்மிடம் ஹாக்கிங் மட்டுமே இருந்தார்.

உணரக்கூடிய பிரபஞ்ச அளவைத்தாண்டி, அதன் இயக்கவியல்களை ஆராய்ந்து சாமானியனுக்கும் புரியுமாறு விளக்கிச் சொன்ன ஹாக்கிங் விட்டுச் சென்ற இடம் எத்தகையது என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன். மேலும் சக்கர நாற்காலியில் உலகையே வலம் வந்து கணிணிக்குரலில் அவர் ஆற்றிய உரைகள் அறிவியலின்பால் அவர் வைத்திருந்த காதலையே காட்டுகிறது. கன்னத்தசைகளை தவிர எதுவுமே இயங்காத உடலை Zero-Gravity Corporation என்னும் நிறுவனம் குறைந்த ஈர்ப்பு விசையில் ஹாக்கிங்கை நடக்க வைத்து அழகு பார்த்தது. இதன் வாயிலாக வான்வெளியில் குறைவீர்ப்பில் இயங்க வேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறியது. அறிவியல் உலகில் இவர் விட்டுச் சென்ற இடம் குறித்த கேள்விக்கான பதிலை கண்டடைவதோடு நில்லாமல், இவரது கோட்பாடுகளை ஆராய்ந்து சரியென நிரூபித்து அதை மனிதகுலத்தின் அடுத்தகட்ட நகர்வுக்குப் பயன்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் ஆகப்பெரும் மரியாதையாகும். ஹாக்கிங் முழுமைப்படுத்தாது விட்டுச்சென்ற Unified Grand theory or Theory of everything ஐ மேலும் ஆராய்ந்து அடிப்படை விசைகளை குவாண்டம் உலகோடு ஒன்றிணைத்து இப்பிரபஞ்ச ஆக்கத்தின் புதிர்களை அவிழ்க்கும் ஆராய்ச்சிகளை நோக்கி நகர்வோம்.

 

          
 
         
A brief history of timetheory of everythingகாலப்பயணம்குவாண்டம்ஜெகதீசன் சைவராஜ்பெருவெடிப்புக் கொள்கைஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
0 comment
1
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
குறுமணற் சந்தில் ஒரு காதல்
அடுத்த படைப்பு
கல்மலர் – 1

பிற படைப்புகள்

காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் நாராயணி சுப்ரமணியன்

January 1, 2022

தேவதேவன் கவிதைகள்

November 15, 2021

சுகுமாரன் கவிதைகள்

November 15, 2021

க.மோகனரங்கன் கவிதைகள் க.மோகனரங்கன்

November 15, 2021

உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்

November 15, 2021

எம்.யுவன் கவிதைகள்

November 15, 2021

லக்‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் லக்‌ஷ்மி மணிவண்ணன்

November 15, 2021

ஸ்ரீ வள்ளி கவிதைகள்

November 15, 2021

கதிர்பாரதி கவிதைகள்

November 15, 2021

கார்த்திக் நேத்தா கவிதைகள் கார்த்திக் நேத்தா

November 15, 2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • சடம்
  • கார்த்திக் நேத்தா கவிதைகள்
  • தொற்று
  • ஜீவன் பென்னி கவிதைகள்
  • காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 10
  • இதழ் 11
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • இதழ்கள்
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top