கல் மலர் – 3
சுநீல் கிருஷ்ணன்

by olaichuvadi

1

த்திய சோதனை’க்கு உரையுடன் கூடிய செம்பதிப்பு சென்ற ஆண்டு வெளிவந்தது. த்ரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு பல  திருத்தங்களை செய்திருக்கிறார். பழைய பதிப்பையும் புதிய பதிப்பையும் இணையாக வாசிக்க வழிவகை செய்திருக்கிறார். அடிக்குறிப்புகளில் நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய சுவாரசியமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. உரையுடன் கூடிய செம்பதிப்பை  மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த நூலின் முன்னுரையில் சத்தியசோதனையை காந்தி எழுதிய பின்புலத்தை வனைந்து காட்டுகிறார் த்ரிதீப் சுஹ்ருத். சத்தியசோதனை ஒரு தொடராக குஜராத்தியில் வெளிவர தொடங்கியது. மகாதேவ் தேசாய் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். காந்தியின் மேற்பார்வையில் அந்த மொழியாக்கம் நிகழ்ந்தது. சில அத்தியாயங்கள் மட்டும் பியாரிலால் செய்தவை. காந்தி இந்த காலகட்டத்தில் ஆசிரமத்தில் வசித்தார். அவருடைய வாழ்நாளிலேயே தொடர்ச்சியாக நெடுங்காலம் ஆசிரமத்தில் வசித்த காலகட்டமும் இதுதான். ஆசிரமத்தில் சில இளைஞர்கள் ஒழுக்கத்தை மீறிய செய்தி அறிந்து காந்தி வருந்துகிறார். அதற்காக ஒருவாரம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இது ஆசிரமவாசிகள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்கள் குற்றங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்களை ஆசிரம பொதுவில் அளிக்கத் தொடங்கினர். அவை உள்ளத் தூய்மையை அவர்களிடத்தே கொணர்கிறது என எண்ணினார். இதே காலகட்டத்தில் காந்திக்கு கீதையின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. கீதை குறித்தும் புதிய ஏற்பாடு குறித்தும் தொடர் உரைகளை ஆசிரமத்திலும் கல்லூரி மாணவர்களின்  மத்தியிலும்  நிகழ்த்தினார்.

 காந்தி தனக்குள் ஒலிக்கும் சன்னமான ஆனால் தீர்க்கமான  குரலை கேட்டு அதன் ஆணைக்கு உட்பட்டே எழுதினார் என்பதை திரிதீப் சுஹ்ருத் விரிவாக காந்தியின் வாழ்விலிருந்து சான்றுகளோடு நிறுவுகிறார். காந்தியின் ஆன்மீக வாழ்வை நெருங்கி புரிந்துகொள்ள மிக முக்கியமான தரவு என கூறலாம். சத்திய சோதனை எத்தகைய நூல் என்பது குறித்து காந்திக்கு தெளிவிருந்தது. “எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரங்களாவதற்கு ஏற்றவையல்ல என்பதை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதை இன்று அதிகத் தெளிவாக அறிகிறேன். எனக்கு நினைவிருப்பவை எல்லாவற்றையும் இக்கதையில் நான் கூறவில்லை. உண்மையின் முக்கியத்தை முன்னிட்டு நான் எவ்வளவு கூறலாம், எவ்வளவு கூறாமல் விடலாம் என்பதை யார் கூறமுடியும்? என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும் ஒரு தலைப் பட்சமானதுமான சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின் முன்பு என்ன மதிப்பு இருக்கும்? நான் இது வரையில் எழுதியிருக்கும் அத்தியாயங்களின் பேரில், குறும்புத்தனமானவர் யாரெனும் குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தால், அவைகளைக் குறித்து மற்றும் பல விவரங்கள் வெளியாகலாம். இது விரோத உணர்ச்சியுடன் குறை கூறுபவரின் குறுக்கு விசாரணையாக இருந்தால், என்னுடைய பாசாங்குகளில் பலவற்றை வெளிப்படுத்திவிட்டதாக அவர் பெருமையடித்துக் கொள்ளலாம்,” என அவரே சொல்லி செல்கிறார். 

காந்தி ‘ஜீவன் விருத்தாந்தம்’ (வாழ்க்கை சரிதை) ஆத்ம கதை’ (ஆன்மாவின் கதை) என இரு வடிவங்களைப் பற்றி குஜராத்தியில் குறிப்பிட்டு  இவை இரண்டும் வேறு வேறு என வாதிடுகிறார். தான் ஆத்ம கதையையே எழுத விரும்புவதாகவும், ஆகவே இதை வரலாறென கொள்ள முடியுமா எனும் ஐயம் காந்திக்கும் மகாதேவ் தேசாய்க்கும் இருந்தது. வாழ்க்கை சரிதை தகவல் பிழைக்கு இடம் அளிக்காதது. ஆனால் காந்திக்கு அது ஒரு பொருட்டாக இல்லை. திரிதீப் சுஹ்ருத் அக்காலகட்டங்களில் காந்தியின் தன்வரலாற்றில் வரும் பாத்திரங்கள் காந்தியுடன் ஊடாடிய சில கடிதங்களை அளிக்கிறார். ராஜ்கோட்டில் சந்தித்த கிறிஸ்தவ போதகர் இந்துக்களையும் இந்து மதத்தையும் அவதூறு செய்ததாக காந்தி சத்திய சோதனையில் பதிவு செய்திருந்தார். அந்த காலகட்டத்தில் அங்கு போதகராக இருந்த பாதிரியார் தான் ஒருபோதும் அப்படி செய்ததில்லை. இது அவதூறு என காந்திக்கு மறுப்பு எழுதுகிறார். அந்த கடிதத்தை பதிப்பிக்கும் காந்தி, அது யாரென நினைவில்லை ஆனால் கல்விக்கூட வாயில்களில் அவர் செய்த பிரச்சாரம் என் மனதில் உள்ளது என பதில் அளித்து அப்பகுதியை திருத்த மறுக்கிறார். போலாக் அவருடைய மனைவி மிலி போலாக் பற்றி காந்தி சரியான சித்திரத்தை அளிக்கவில்லை எனும் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் காந்தியின் செயலராக இருந்த சோன்யா செல்சின் பற்றி மிகுந்த மதிப்புடன் உயர்வாக குறிப்பிடும் காந்தி தற்போது அவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார் என எழுதுகிறார். சோன்யா செல்சின் இதற்கு தான் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே தலைமை ஆசிரியர் எல்லாம் இல்லை, அது காந்தியின் பகல்கனவு என காட்டமாகவே மறுப்பு எழுதுகிறார். (இத்தனை காட்டமாக மறுக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என தெரியவில்லை). காந்தி சோன்யா செல்சினின் மறுப்பை மட்டுமே பொருட்படுத்தி திருத்தத்தை ஏற்கிறார். புறவயமான தகவல்களை காட்டிலும் அவருடைய மனப்பதிவு என்னவோ அதை நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும் எனும் விழைவே அவரை இயக்கியது. ஒருவகையில் இதை உண்மைக்கும் சத்தியத்திற்குமான வேறுபாடாக கொள்ளலாம் என தோன்றுகிறது. காந்தியின் சத்தியம் புறவயமான, அரசியல் சரித்தன்மை கொண்ட, இறுகிய உண்மை அல்ல. முன்னுரையில் எழுதுகிறார் ‘என் மனநிலை ஒவ்வொன்றையும் சோதித்து அலசிப் பார்த்திருக்கிறேன். என்றாலும் நான் கண்ட முடிவுகள் குறையற்றவை, முடிவானவை என்று சொல்லிக்கொள்ளும் நிலைக்கு நான் வந்துவிடவில்லை. ஒன்று மாத்திரம் சொல்லிக் கொள்கிறேன், அதாவது அந்த முடிவுகள் முற்றும் சரியானவையாகவே எனக்கு தோன்றுகின்றன; இப்போதைக்கு முடிவானவை என்றும் தோன்றுகின்றன.’ 

வாழ்வு முழுவதும் சத்திய வடிவிலான கடவுளை காணும் வேட்கை அவரை இயக்கியது. இந்நூலும் அதன் ஒரு வெளிப்பாடே. “ஆனால் கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவே இல்லை. ஆயினும் அவரை தேடிக்கொண்டே இருக்கிறேன். … சுத்த சத்தியமான  கடவுளின் மங்கலான தோற்றங்களை நான் அடிக்கடி காண்கிறேன்” காந்திக்கு மங்கலாக புலப்பட்ட சத்தியம் எனும் கடவுளை நெருங்கவும் மேலும் துலங்க செய்யவும், அவரை அயராது  பின்தொடரவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றே இந்த தன்வரலாற்று நூலான சத்திய சோதனை.   

மொத்தம் 166 அத்தியாயங்களும் ஐந்து பகுதிகளும் கொண்டது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டு பின்னர் ஒரே தொகுதியாக வெளியானது. தன்வரலாறு எழுத்தில் ஒரு செவ்வியல் ஆக்கம் என சத்திய சோதனையை சொல்லலாம். ஒரு இலக்கிய வாசகனாக உலகின் எந்த சிறந்த யதார்த்த நாவல் அளிக்கும் வாசிப்பிற்கு இணையான அமைதியையும் அமைதியின்மையும் சத்திய சோதனை வாசகருக்கு கடத்துகிறது. அபாரமான  புனைவுத் தருணங்களால் நிரம்பியது. காந்தியிலிருந்து காந்தியம் உருவாகும் தருணங்களையே இக்கட்டுரையில் கோர்த்து எடுக்க முயல்கிறேன். குறிப்பாக அவரை நெருங்கி புரிந்துகொள்ளும் நோக்கிலுள்ள நிகழ்வுகளை ஒரு புனைவு எழுத்தாளரின் கோணத்திலிருந்து காண முயல்கிறேன். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட அற கேள்விகள், ஆன்மீக தத்தளிப்புகள், அவற்றை அவர் எதிர்கொண்டு கடந்த விதங்கள் இன்றும் நம்  வாழ்க்கையின் நெருக்கடிகளில் நமக்கு ஒளி பாய்ச்சக்கூடிய தருணங்கள்  

சத்திய சோதனையை ஒரு நாவல் என கொண்டோம் என்றால் இதன் மையக் கேள்வி என்ன? இரண்டு கேள்விகள் காந்தியை இயக்கின என கூறலாம். பாலசுந்தரம் பற்றிய அத்தியாயத்தின் இறுதியில் காந்தி இப்படியொரு கேள்வியை எழுப்புகிறார். ‘மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப்படுத்துவதன் மூலம் தாங்கள் கவுரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.’ சுயமரியாதை எனும் சொல் தமிழக சூழலில் திராவிட இயக்கத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. ஆனால் காந்தியின் அடிப்படை செயல்பாடுகளில் மிக முக்கியமானது என்று இந்த சுய மரியாதையை கட்டியெழுப்புவதற்கான முயற்சியையே சொல்லலாம். வாழ்நாள் முழுவதும் இதற்காக முயன்றார். 

 இரண்டாவது கேள்வி அடிப்படையில் ஒரு இருத்தலியல் கேள்வி. சத்தியசோதனையில் இவ்வரிகள் உள்ளன ‘மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ள கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது?’ காந்தியை இளமையில் இந்த இருத்தலியல் கேள்வி வெகுவாக அலைக்கழிக்கிறது. இந்த கேள்வியை சத்திய சோதனை பின்தொடர்கிறது. காந்தி தன்னுடைய பதின்ம வயதின் ஒரு கட்டத்தில் எதையுமே பெரியவர்களின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என தோன்றியதால் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். கேதார்ஜி கோவிலுக்கு சென்று நெய் வார்த்து இறைவனை வணங்கி ஒரு மூலையில் அமர்ந்து மூன்று ஊமத்தை விதைகளை அவரும் அவருடைய நண்பர் ஒருவரும் விழுங்குகிறார்கள். ஆனால் அதற்கு மேல் அதை உண்ணுவதற்கு  துணிவில்லை. ஒருவேளை சட்டென உயிர் பிரியவில்லை என்றால் என்னாகும் என அஞ்சி பின்வாங்குகிறார்கள். ‘சுதந்திரமின்மையை ஏன் சகித்துக்கொள்ள கூடாது?’ என காந்தி ஒரு சமாதானத்தை கண்டுகொள்கிறார்.

1918-19 களில் உலகம் முழுக்க பரவி பலரையும் பலிவாங்கிய ஸ்பானிய  ஃப்ளூ காந்தியையும் தாக்கியது. ஹரிலாலின் மனைவி சஞ்சல் மற்றும் அவருடைய மகனை இந்த காய்ச்சலுக்கு பறிகொடுத்தார்கள். காந்தியும் ஏறத்தாழ மரணத்தின் விளிம்பை தொட்டுவிட்டார். சத்திய சோதனையில் ஐந்தாம் பகுதியில் ‘மரணத்தின் வாயிலில்’ என தலைப்பிட்ட அத்தியாயத்தில் அவரே இதை பதிவு செய்கிறார். கடும் வயிற்று போக்கும் காய்ச்சலும் ஏற்படுகிறது. மருத்துவர் நாடி நோக்கி ஆபத்து ஏதுமில்லை என சொல்கிறார். ஆனால் காந்திக்கு நம்பிக்கை இல்லை. இரவெல்லாம் உறங்காமல் மரணத்தின் வாயிலில் இருப்பதாகவே உணர்கிறார். ஆசிரமவாசிகளை கீதையை வாசிக்க சொல்கிறார். வாழும் இச்சையையே துறந்துவிட்டார். அன்றிரவு எப்படியோ கடந்தது. பிரம்ம சமாஜத்தை சேர்ந்தவரான கேல்கர் என்பவரை அவருக்கு சிகிச்சை அளிக்க அனுப்பி வைக்கிறார்கள். அவர் மருத்துவம் பயின்றவர் என்றாலும் விசித்திரமான வழிமுறைகளை கையாள்வதில் பேர் பெற்றவர். காந்தி அவரை பார்த்தவுடனே  ‘அவரும் தன்னைப் போன்றே ஒரு பைத்தியம்’  என கண்டுகொண்டு அவருடைய பனிக்கட்டி சிகிச்சை முறைக்கு ஒப்புக்கொடுக்கிறார். ஜெயமோகனின் ‘நீரும் நெருப்பும்’ சிறுகதை இந்நிகழ்வை தழுவி எழுதப்பட்டது. கேல்கர் அக்கதையில் ஒரு பைராகியாக உருமாற்றம் கொண்டிருப்பார். காந்தி எப்படியோ தன்னை மீட்டுக்கொண்டு வாழும் இச்சையை பெருக்கிகொண்டு அதன் பின்னர் முப்பதாண்டு காலம் வாழ்ந்தார். காந்தி தன் வாழ்வில் தன்னுடைய திட்டங்களுக்கு பெரிய பெறுமதி ஏதுமில்லை. கடவுள் தனக்கான திட்டத்தை வகுத்தளிக்கிறார் என்பதை ஒரு சமாதானமாக அல்ல ஒரு கண்டடைதலாக சத்திய சோதனையில் முன்வைக்கிறார். பல்வேறு தருணங்களில் வெவ்வேறு சொற்களில் இதை குறிப்பிடுகிறார்.

சத்திய சோதனையில் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த சிறிய உரையாடலின் பகுதியை காந்தி பதிவு செய்கிறார்.

“நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள். இவர்கள் பசப்புப் பேச்சினால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும் போது சத்தியாக்கிரகம் செய்யும்படி எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள் துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் துன்பப்பட நேரும்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

 “நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்டபிறகு துன்பத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்? சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’ என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா?” என்றேன்.

 சோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார். “அப்படியானால் சரி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் சத்தியாக்கிரகத்திலேயே மரணமடைவீர்கள். அப்பொழுது எங்களைப்போன்ற அப்பாவிகளையும் உங்களுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டு போவீர்கள்” என்றார்.

இந்தச் சொற்கள், ஒத்துழையாமையைக் குறித்துக் குமாரி எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை என் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. “சத்தியத்திற்காக என்றாவது ஒரு நாள் நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கடவுள் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிப் பாதுகாப்பாராக” என்று அவர் எழுதினார்.

உரையாடல் நிகழ்ந்த காலகட்டம், அதை காந்தி நினைவுகூர்ந்து எழதும் காலகட்டம் என இரண்டையும் கணக்கில் கொண்டால் ஒருவகையில் இது அச்சமூட்டத்தக்க ஒரு முன்னறிவிப்பு. அல்லது காந்தி விரும்பிய திசையில் வாழ்நாள் முழுக்க பயணித்து துர்மரணம் எனும் இலக்கை எய்தினார். இப்படியான மற்றொரு முன்னறிவிப்பு இந்நூலில் உள்ளது ‘இந்து-முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேரும் என்பதை எனது தென்னாப்பிரிக்கா அனுபவம் எனக்கு தெளிவாக காட்டியிருந்தது.’ என கிலாபத் பற்றிய அத்தியாயத்தில் காந்தி எழுதுகிறார். காந்தி பிரிவினை கலவரத்தின்போது மரணத்தை ஏற்க தயார்கிவிட்டார் அல்லது ஒருவகையில் மரணத்தை வரவேற்றார் என சொல்லிவிடமுடியும்.

2

காந்தி நடைமுறை லட்சியவாதி என சொல்லும்போதே அவர் பெரும் வாசிப்பு ஏதும் இல்லாதவர் என்பதாக ஒரு சித்திரம் இங்கே உண்டு. நேரு, அம்பேத்கர், சாவர்க்கர் போன்றோருக்கு இருந்த அளவிற்கு வரலாறு, தத்துவம் மற்றும் இலக்கிய வாசிப்பு காந்திக்கு கிடையாது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர அவரை வாசிப்பு பழக்கமற்ற பாமரர் என கருதுவது அபத்தம். உண்மையில் காந்தியின் இளமைக் காலத்தில் கணிசமாக வாசித்திருக்கிறார் என்பதற்கு சத்திய சோதனையில் அவர் சுட்டும் நூல்களே சாட்சி. பிற்காலங்களிலும் சிறை வாசத்தின்போது அவருடைய வாசிப்பு தொடர்ந்தது. அவருடைய ஆன்மீக வேட்கைக்கு உகந்த நூல்களை, அவை வெவ்வேறு மதத்தை சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றை தேடித்தேடி வாசித்திருக்கிறார். சட்டங்களையும் ஆவணங்களையும் வாசித்து அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் திறனை அவருடைய பாரிஸ்டர் கல்வி அவருக்கு அளித்திருந்தது.

காந்தி தால்ஸ்தாயை தனது ஆசிரியர்களுள் ஒருவர் என கருதினாலும் அவருடைய நாவல்களையோ கதைகளையோ அதிகம் வாசித்ததாக தெரியவில்லை. ஆனால் அவருடைய புனைவற்ற நூல்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறார். சத்திய சோதனையில் ஆலிவ் ஸ்ரைனர் எனும் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் பற்றியும் அவருடைய நாவலான ‘ட்ரீம்ஸ்’ பற்றியும் குறிப்பிடுகிறார். காந்தி ஒரு புனைவை அடிக்கொடிட்டு எழுதியது என ஒரேயொரு இடத்தை மட்டும் சத்திய சோதனையில் குறிப்பிடலாம். ‘தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன் குருஸோக்கலாக இருந்திருப்பார்களாயின், அவர்கள் கதை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், ராபின்ஸன் குருஸோக்களாகக் குடியேறிய நாடு ஒன்றேனும் உலகில் இருப்பதாக நாம் அறியோம்.’ காந்தியின் மொழியில் புனைவுகளின் தாக்கம் என்பது இல்லை. பொதுவாக அவருக்கு புனைவுகளின் மீது மதிப்போ ஈடுபாடோ இருந்ததாக தெரியவில்லை. ஆனால் காந்திக்கு தொன்மங்கள் மீது பெரும் ஈடுபாடு உண்டு. சிரவணன், மற்றும் ஹரிச்சந்திரன் கதைகள் பால்ய காலத்தில் காந்தியை வெகுவாக பாதித்தன. இவை சத்தியத்தின் பொருட்டும் பக்தியின் பொருட்டும் துன்பத்தை ஏற்று அனுபவிக்கும் காவிய சாயல் கொண்ட பாத்திரங்கள். காந்தியின் லட்சியமும் இவையே.

காந்திக்கு புனைவுகள் மீது ஆர்வமில்லாமல் இருந்ததற்கு கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்கும் ஒரு காரணம் என சொல்லலாம். ‘மனித உள்ளத்திலிருக்கும் நல்ல தன்மையை எழுப்பிவிட வல்லவனே கவி’ என விளைவு அல்லது பயன்பாட்டு நோக்கில் கவிதையும் கவிஞரும் என்ன அளிப்பார் எனும் தளத்தில் வரையறை செய்கிறார். .பாரீசுக்கு செல்லும் காந்தி அங்கு நோத்ரதாம் தேவாலயத்தை ரசிக்கிறார் ‘அதன் அற்புதமான அமைப்பும் உள்ளே செய்யப்பட்டிருக்கும் விமரிசையான சித்திர வேலைகளும் அழகான சிலைகளும் என்றும் மறக்க முடியாதவை. இத்தகைய தெய்வீகமான கோவில்களை கோடிக்கணக்கில் செலவிட்டு கட்டியவர்களின் உள்ளங்களில் நிச்சயமாக கடவுள் பக்தி இருந்திருக்கவே வேண்டும் என்று எண்ணினேன்.’ என எழுதுகிறார். இதே காந்தி ஈஃபில் கோபுரத்தை காணும் போது அதில் கலைத்திறன் என எதுவும் இல்லை என கூறி ‘ஈஃபில் கோபுரம் மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு சின்னமே அன்றி அவனுடைய அறிவுக்கு சின்னம் அல்ல’ என தால்ஸ்தாயை மேற்கோள் காட்டுகிறார். பகட்டும் அகங்காரமும் கலைக்கான இயக்குவிசையாக இருப்பதை காந்தி நிராகரிக்கிறார். மெய்யான அன்பும் ஈடுபாடும் எளிமையும் இயக்குவதையே கலையாக மதிப்பிடுகிறார். ஒருவகையில் இது யதார்த்தவாத அழகியல் என கூறலாம். கணேஷ் தேவி காந்திக்கு வாழ்வை பற்றிய சிறு சிறு அசல் அவதானிப்புகள், தகவல்கள் மீதிருந்த ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறார். 

   எழுத்தாளர் காந்தியினுடைய மொழி நேரடியானது. எளிமையானது. ஜோடனைகள் ஏதுமற்றது. அவர் அடிப்படையில் ஒரு இதழாசிரியர். தென்னாப்பிரிக்க சிக்கலின் பின்புலத்தை விவரிக்கும் போது அவருடைய மொழியில் உள்ள தெளிவு நமக்கு பிடிபடும். காந்தி உவமைகளை பயன்படுத்த தவறவில்லை. அவர் பயன்படுத்தும் உவமைகள் வாழ்விலிருந்தும், மக்கள் நன்கறிந்த உருவகங்களில் இருந்தும், பேச்சு மொழியில் புழங்கும் சொலவடைகளில் இருந்தும் உருக்கொள்பவை. நவீன நாகரீகத்தின் அழிவைச் சொல்லும்போது “சுண்டெலி அரிக்கும் சப்தம் நம் காதுக்கு இனிமையாயிருந்தாலும் அது செய்வது நாசமே” என்கிறார். மற்றொரு இடத்தில் ‘மீன் நீரை விரும்புவது போல நாம் கோர்ட்டையும் சச்சரவுகளையும் விரும்புகிறோம்.’ என எழுதுகிறார். ‘விஷப்பூண்டை நட்டுவிட்டு அதிலிருந்து ரோஜா மலரை அடையலாம் என்பதைப் போன்றது’ என விளைவுக்கும் வழிமுறைக்கும் இடையிலான உறவைப் பற்றி கூறுகிறார். ‘பானை  உடைய அதன் மீது கல்லெறிய வேண்டியதில்லை ஒன்றுடன் ஒன்று சற்று பலமாக மோதிக்கொண்டாலே போதும்’ இது காந்தி இந்திய சுயராஜ்ஜியத்தில் இந்து இஸ்லாமிய உறவு குறித்து பயன்படுத்தும் உருவகம். தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தில் ஆங்கிலேயருக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையிலான உறவை சொல்லும்போது ‘ஒரே சூளையில் உருவான பானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளத்தானே செய்யும்?’ என எழுதுகிறார். சத்திய சோதனையில் ‘நெருஞ்சி செடியிலிருந்து அத்திப்பழம் எடுக்கலாம் என எண்ணிவிட்டேன்.’ என ஷேக் மேத்தாப்பின் நடத்தையின் மீது விமர்சனமாக சொல்கிறார். இந்தியாவிற்கும் ஆங்கிலேய அரசிற்கும் இடையிலான உறவையும் இந்தியாவின் சுயாட்சியின் நியாயத்தை பற்றி ‘யானைக்கு எறும்பினிடம் நல்லெண்ணமே இருக்கலாம் ஆனால் எறும்பின் தேவையையும் சௌகரியத்தையும் கொண்டு சிந்திக்கும் சக்தி எவ்வாறு யானைக்கு இல்லையோ அதேபோல இந்தியருக்கு சௌகரியமான வகையில் சிந்திக்கவோ சட்டம் செய்யவோ ஆங்கிலேயருக்கு சக்தியில்லை.’ என எழுதுகிறார்.

இந்த இணை வைப்பின் சாத்தியங்களை யோசித்தால் பிரமிப்பே எஞ்சுகிறது. யானை ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்பை காப்பதற்காக என எண்ணிக்கொண்டு துதிக்கையில் பிடித்தால் அது செத்துவிட கூடும். தூய நோக்கம் இருக்கலாம் ஆனால் புரிதல் வேண்டுமே. பாரிஸ்டர் கல்வி முடித்த காந்தி தொழிலின் நடைமுறையை கற்கவில்லை. ஒருவித மன சோர்வுடன் இந்தியா திரும்புகிறார். அந்த அத்தியாயம் இப்படி முடிகிறது. ‘இவ்விதமான மனச்சோர்வுடன் அற்ப சொற்பமான நம்பிக்கையுடனும் எஸ் எஸ் அஸ்ஸாம் என்ற கப்பலில் நான் பம்பாய் வந்து இறங்கினேன். துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது. ஒரு நீராவி படகு மூலமே கப்பலிலிருந்து கரை சேர்ந்தேன்.’ அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இப்படி ஒரு வரி எழுதுகிறார் ‘வெளிப்புயல் என் அகப்புயலுக்கு ஒரு சின்னமாகவே இருந்தது.’ காந்தியால் அகத்தையும் புறத்தையும் ஒன்று மற்றொன்றின் பிரதிபலிப்பாக காட்ட முடிந்தது.    

சத்திய சோதனை பல அபாரமான புனைவு தருணங்களால் நிரம்பியது. நாராயண ஹேமசந்திரர் பற்றிய ஒரு அத்தியாயம் நுண்ணிய கதைமாந்தர் சித்திரம் என்றே சொல்லலாம். காந்தியின் எழுத்துக்களில் எவருக்கு எல்லாம் தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று நோக்கினால் காந்தியின் ஆளுமை குறித்து புரிந்து கொள்ள இயலும். சத்திய சோதனையில் நாராயண ஹேமசந்திரர், ராய்சந்த் மற்றும் கோகலேவிற்கு மட்டுமே அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவருமே ஏதோ ஒருவகையில் அவருடைய ஆசிரியர்கள். நாராயண ஹேமசந்திரர் காந்திக்கு முன்னர் சுயசரிதை எழுதிய குஜராத்திகளில்  ஒருவர். இவர்களுக்கு இணையாக காந்தி ஒப்பந்த கூலிகளை பற்றிய அத்தியாயத்திற்கு ‘பாலசுந்தரம்’ என பெயரிட்டுள்ளார். பால சுந்தரம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒப்பந்த கூலி. அவருடைய எஜமானர் அவரை தாக்குகிறார். அதற்கு நியாயம் பெற்றுத்தர காந்தி போராடுகிறார். ஒப்பந்த கூலிகளின் உலகத்திற்குள் காந்தி நுழைவதற்கு வழியமைத்து கொடுத்த நிகழ்விது.

காந்திக்கும் கஸ்தூரி பாவிற்கும் இடையிலான உறவு ஒரு தனி சரடாக இந்நூலிலிருந்து கோர்க்க முடியும். லட்சிய கிறுக்கர்களின் மனைவிகளின் பாடு வரலாறு முழுக்க கடுமையானதாகவே இருந்து வருகிறது. காந்தியின் பிரம்மச்சரியம் கடும் சோதனைக்கு உட்பட்டிருக்கிறது. வாழ்வில் நான்குமுறை அது உடையும் விளிம்பு வரை சென்று மீண்டதாக காந்தி சத்திய சோதனையில் பதிவு செய்கிறார். முதல்முறை நண்பர் திருமண வாழ்விற்கு காந்தியை தயாரிக்க அழைத்து செல்கிறார், இங்கிலாந்தில் சைவ உணவாளர் சந்திப்பின்போது உடன் வந்த நண்பர், ‘உன்னில் இந்த பிசாசு எங்கிருந்து வந்து புகுந்தது? சீக்கிரம் எழுந்து போய்விடு,’ என்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு கப்பலில் செல்லும் வழியில் ஜான்சிபாரில் கரையிறங்கி, நட்பாக இருந்த கப்பல் கேப்டன் காந்தியை அழைத்துக்கொண்டு ஒரு விலைமாதரிடம் செல்கிறார். அறைக்குள் சென்றவர் வெட்கத்தால் நிலைகுலைந்து சிலைந்து நின்றுவிடுகிறார். கேப்டன் அழைத்ததும் சென்ற விதத்திலேயே திரும்புகிறார். ‘அறைக்குள் போக மறுக்கும் துணிச்சல் எனக்கு இல்லாதது குறித்து எனக்கு நானே பரிதாபப்பட்டுக்கொண்டேன்.’ என எழுதுகிறார். காந்தியை இத்தகைய ஒழுக்க ஊசலாட்ட தருணங்களிலேயே நாம் மிகவும் நெருக்கமாக உணர முடியும் என தோன்றும்.

சத்திய சோதனையில் இங்கிலாந்து வாசத்தின்போது அவருக்கு ஏற்பட்ட பெண் நட்புகள் பற்றி ஒரு அத்தியாயத்தில் எழுதி இருப்பார். முதல் நிகழ்வு இங்கிலாந்தின் நாகரீக பழக்கத்தின் விளைவாக ஏற்பட்டது. மெல்லிய எள்ளலுடன் நினைவு கூர்ந்திருப்பார். அப்பகுதியை அப்படியே தருவது அவருடைய தொனியை கடத்தும். கதையாக்கத்தக்க தருணம் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே திரிதீப் சுஹ்ருத் அடிக்குறிப்பில் கெய்த் ஹெல்லர் 2004 ஆம் ஆண்டு  ”The Woman who knew Gandhi,”  என்றொரு நாவலை இந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறார். 

“எனது வீட்டு உடைமையாள பெண்மணியின் மகள் வெண்ட்னரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள அழகிய குன்றுகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் மெதுவாக நடப்பவன் அல்ல ஆனால் மொத்த நேரமும் அரட்டையடித்தபடி என்னை இழுத்துச்சென்ற எனது சகி என்னைவிட வேகமாக நடப்பவர். அவருடைய அரட்டைக்கு சில நேரங்களில் தாழ்குரலில்  ‘ஆம்’ அல்லது  ‘இல்லை’ அல்லது அதிகபட்சமாக ‘ஆம், எத்தனை அழகானது!’ என எதிர்வினையாற்றினேன். அவர் ஒரு பறவையை போல் பறந்து கொண்டிருந்தபோது நான் எப்போது வீடு திரும்புவது என யோசித்துக் கொண்டிருந்தேன். இப்படியாக நாங்கள் ஒரு குன்றின் உச்சியை அடைந்தோம். எப்படி இறங்குவது என்பதுதான் அப்போது என் கேள்வியாக இருந்தது. அவருடைய உயரமான குதியணியை மீறி இந்த இருபத்தி ஐந்து வயது சுறுசுறுப்பான பெண் ஒரு மின்னலைப் போல பாய்ந்து இறங்கினார். நான் இன்னமும் எப்படி கீழே இறங்குவது என கூச்சத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் அடிவாரத்தில் சிரித்துக் கொண்டும் என்னை உற்சாகப்படுத்தியும், என்னை இழுத்து வரட்டுமா என கேட்டபடியும் நின்றிருந்தார். நான் எப்படி இப்படியொரு கோழையாக இருக்க முடியும்? மிகுந்த சிரமத்திற்கு இடையே அவ்வப்போது ஊர்ந்து எப்படியோ போராடி கீழே வந்து சேர்ந்தேன். அவர் உரக்கச் சிரித்து, ‘சபாஷ்,’ என்றார். அவரால் எவ்வளவு இயலுமோ அந்த அளவிற்கு என்னை கிண்டல் செய்துவிட்டார்.”

காந்திக்கு மற்றொரு இளம் பெண்ணுடன் ஏற்படும் ஈர்ப்பு பற்றி அதே அத்தியாயத்தில் பதிவு செய்கிறார். குற்ற உணர்வில் தொடங்கி அவல நகைச்சுவையை சென்றடைகிறது. இங்கிலாந்தில் இளம் பெண்களுடன் பழகுவதற்காக திருமணம் முடித்த இந்திய இளைஞர்கள் தங்களது திருமணத்தை மறைப்பது வழக்கம். காந்திக்கு ஒரு முதிய பெண்மணியுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவர்களுடன் நட்புகொள்கிறார். அவருடைய வீட்டிற்கு விருந்துண்ண செல்கிறார். அந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் பழகுகிறார். காந்திக்கு அது கிளர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் அந்த பெண்ணுடன் உரையாட வேண்டும் எனும் ஆவல் கூடிக்கொண்டிருந்தது. முதிய பெண்மணிக்கு இந்த பெண்ணுக்கும் காந்திக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றொரு யோசனை தோன்றியிருக்கிறது என்பதை காந்தி உணர்ந்து கொள்கிறார். சட்டென காந்தி விழித்துக்கொண்டு அவருக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதுகிறார்.

‘நான் உங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தபோதே எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை நான் உங்களுக்கு சொல்லியிருக்க வேண்டும்.  இங்கிலாந்தில் இருக்கும் இந்திய மாணவர்கள் தங்களுக்கு மணம் ஆகிவிட்டது என்ற உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நானும் அப்படியே செய்தேன். அப்படி நான் செய்திருக்கவே கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். இன்னும் ஒன்றையும் நான் கூறவேண்டும். சிறு பையனாக இருக்கும்போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. ஒரு பையனுக்கு நான் தந்தை. இவ்வளவுகாலமும் இதையெல்லாம் உங்களுக்கு தெரியாமல் வைத்திருந்து விட்டதற்காக நான் நோகிறேன். ஆனால் உண்மையை சொல்லிவிடும் தைரியத்தை எனக்கு கடவுள் இப்பொழுதாவது அளித்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னை நீங்கள் மன்னிப்பீர்களா? நீங்கள் அன்போடு எனக்கு அறிமுகம் செய்து வைத்த இளம் பெண்ணிடம் எந்தவிதமான தகாத வழியிலும் நான் நடந்து கொண்டதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நான் எவ்வளவு தூரம் போகலாம் என்பதை அறிவேன். நீங்களோ, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை அறியாமல் எங்களுக்குள் விவாகம் நிச்சயம் ஆகவேண்டும் என இயற்கையாகவே விரும்பினீர்கள். இப்பொழுதுள்ள கட்டத்திற்கு மேல் விஷயங்கள்  போய்விடாமல் இருப்பதற்காக நான் உங்களிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும்.”

இறுதியில் “இக்கடித்ததிற்கு பிறகும் என்னை நீங்கள் நிராகரித்து விடாமல் உங்களுடைய அன்பான வீட்டிற்கு வர தகுதியுடையவனாக என்னை கருதினீர்கள் என்றால் அதற்கு உரியவனாவதற்கு பாடுபட நான் தவறமாட்டேன். இயற்கையாகவே மகிழ்ச்சியடைவேன். அதை உங்கள் அன்பின் மற்றோர் அறிகுறியாகவும் கொள்வேன்.” என முடிக்கிறார். இப்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்திற்கு வந்த பதில் இதைவிடவும்  சுவாரசியமானது.

 “எதையும் ஒளிக்காமல் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நாங்கள் இருவருமே மகிழ்ச்சியோடைந்ததோடு சந்தோஷத்துடன் சிரித்தும் விட்டோம். நீங்கள் செய்துவிட்ட உண்மையை மறைத்தது குற்றம் என்று நீங்கள் கூறும் செயல் மன்னிக்கத்தக்கது. ஆனால் உண்மை நிலைமையை எங்களுக்கு தெரிவித்துவிட்டது நல்லதே. என் அழைப்பு இன்னும் இருந்து வருகிறது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை நிச்சயமாக எதிர்ப்பார்க்கிறோம். அதோடு உங்கள் குழந்தைத் திருமணத்தை பற்றிய விவரங்களை எல்லாம் அறிந்து உங்கள் சங்கடத்தில் நாங்கள் சிரித்து இன்புருவதையும் எதிர்நோக்குகிறோம். இச்சம்பவத்தினால் நமது நட்பு ஒரு சிறிதேனும் பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதி கூறவும் வேண்டுமா?”

 காந்தியின் நுண்ணிய நகைச்சுவை உணர்வு பல தருணங்களில் வெளிப்படுகிறது. காந்தியின் நகைச்சுவையில் பிறரை இழிவுபடுத்தும் தொனி இருக்காது. அதிகமும் சுய எள்ளல் தான். பாரிஸ்டராவதற்காக இங்கிலாந்து சென்றபோது காந்தியை விருந்திற்கு அழைத்து செல்ல எப்போதும் பெரும் கிராக்கி இருந்ததாக கிண்டலாக சொல்கிறார். காரணம் அவர் மது அருந்தாதவர் என்பதால் அவர் பங்கையும் சேர்த்து அருந்திவிட முடியும். பம்பாயில் காந்தி உயர்நீதிமன்றத்திற்கு தினமும் செல்வார். ஆனால் நீதிமன்ற வழமைகள் சுவாரசியமற்றதாக இருக்கும். தூங்கிவிடுவார். இது சார்ந்து அவருக்கு தொடக்கத்தில் குற்ற உணர்வு இருந்தாலும் கூட காலப்போக்கில் அங்கு உறங்குவதே நாகரீகம் எனும் முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். இதே போன்று தென்னாப்பிரிக்காவில் நண்பரின் அழைப்பின் பேரில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் உறங்கிவிடும் வழக்கமும் காந்திக்கு இருந்தது.

காந்தியின் பிடிவாதம் புகழ்பெற்றது. காந்தி இங்கிலாந்திற்கு புறப்படுவதற்கு முன் அவருக்கு ஒரு வழியனுப்புதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உரையாற்ற எழுந்து நின்ற காந்தி பேச அஞ்சி அங்கேயே மயங்கி விழுகிறார். ஆனால் அதே காந்தி தான் மோத் பனியாக்கள் அவருடைய பயணத்தை தடை செய்து அவரை சாதி நீக்கம் செய்தபோது தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் உறுதியாக நின்றார். காந்தியின் பிடிவாதத்திற்கு சான்றாக மற்றொரு வேடிக்கையான நிகழ்வை சத்திய சோதனையிலிருந்து சுட்ட முடியும்.  நேட்டால் இந்திய காங்கிரசுக்கு உறுப்பினர்களை சேர்க்க காந்தியும் சகாக்களும் ஊர் ஊராக நேட்டால் மாகாணம் முழுக்க அலைந்தார்கள். காந்தி ஒரு சுவாரசியமான சம்பவத்தை சொல்கிறார்.

 இந்த சுற்றுப் பிரயாணத்தின் போது ஒரு சமயம் நிலைமை சங்கடமானதாகிவிட்டது. நாங்கள் யாருடைய விருந்தினராகச் சென்றிருந்தோமோ, அவர் ஆறு பவுன் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ மூன்று பவுனுக்கு மேல் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார். அவரிடமிருந்து அத்தொகையை வாங்கிக் கொண்டோமாயின் மற்றவர்களும் அது மாதிரியே கொடுப்பார்கள். எங்கள் வசூல் கெட்டுவிடும். அன்று இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கோ பசி. ஆனால், அவரிடம் வாங்கியே தீருவது என்று நாங்கள் முடிவு கட்டிக்கொண்ட தொகையை அவரிடம் வாங்காமல் அவர் வீட்டில் நாங்கள் எப்படிச் சாப்பிடுவது? என்ன சொல்லிப் பார்த்தும் பயனில்லை. அவரோ பிடிவாதமாக இருந்தார். அவ்வூரின் மற்ற வர்த்தகர்களும் அவருக்குச் சொல்லிப் பார்த்தார்கள். இரவெல்லாம் அப்படியே எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். அவரும் பிடிவாதமாக இருந்தார். நாங்களும் பிடிவாதமாக இருந்தோம். என் சக ஊழியர்களில் பலருக்குக் கோபம் பொங்கிற்று. ஆனால், அடக்கிக் கொண்டார்கள். கடைசியாகப் பொழுதும் விடிந்து விட்ட பிறகு அவர் இணங்கி வந்தார். ஆறு பவுன் கொடுத்து, எங்களுக்கு விருந்துச் சாப்பாடும் போட்டார். இது தோங்காத் என்ற ஊரில் நடந்தது. ஆனால் இச் சம்பவத்தின் அதிர்ச்சி, வடக்கில் கடலோரம் இருக்கும் ஸ்டான்கர் வரையிலும் மத்தியப் பகுதியில் இருக்கும் சார்லஸ் டவுன் வரையிலும் பரவி விட்டது. அது எங்கள் வசூல் வேலை துரிதமாக முடியும்படியும் செய்தது.

தென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் லாமு துறைமுகத்தில் காந்தி இறங்கி சுற்றி பார்த்துவிட்டு வருகிறார். கப்பல் பயணிகள் மீண்டும் கப்பலுக்கு செல்ல ஒரு சிறிய ஓடத்தை பயன்படுத்துகிறார்கள். கடல் கொந்தளிக்கிறது. கப்பலின் கேப்டன் கொம்போலி எழுப்பிவிட்டார். மேலிருந்து தத்தளிக்கும் படகை பார்த்தபடி இருக்கிறார். பயணத்தின் ஊடே காந்தியுடன் நல்ல நட்பை வளர்த்து கொண்டிருந்தார். அவரை மட்டும் இன்னொரு படகில் ஏற்றி மேலே இழுத்துக் கொண்டதும் கப்பல் மிச்சமிருப்பவர்களை விட்டுவிட்டு புறப்படுகிறது. இதை காட்சிகளாக நம்மால் காந்தியின் சொற்களில் காண முடிகிறது. கப்பலேற வேண்டும் எனும் பதற்றம், உடன் வந்தவர்களை விட்டுவிட்டு தனக்கு அளிக்கப்பட முன்னுரிமையை பற்றிக்கொண்டு மேலேறி வருதல் சார்ந்த குற்ற உணர்வு என இரண்டையும் நம்மால் உணர முடிகிறது. காந்தி முன்னுரிமையை எப்போதும் எடுத்துகொள்ள தயங்கியதில்லை.   இந்தியா முழுக்க ரயிலில் பயணிக்கிறார். எவருக்கும் தன்னை தெரியாதபோது சாமானியர்களின் எல்லா துயரையும் அவரும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மறுபக்கம் அவரை அறிந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளும் போது ‘அவர்களுடைய தரிசன பித்துக்கு பலியாக வேண்டியவனாக இருக்கிறேன்.’ என எழுதுகிறார். கும்பமேளாவிற்கு செல்லும் காந்தி அங்கு ஐந்து கால்கள் உள்ள பசுவை  காண மக்கள் அலைமோதுவதை  அறிந்து காந்தியும் அதை காண செல்கிறார். வேறொரு கன்றின் காலை ஐந்தாவதாக பொருத்தியிருக்கிறார்கள் என அறியும்போது அவருக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே எஞ்சுகிறது.. ஆனால் மக்கள் இதை அசாதாரணம் என எண்ணி அதை காண்பதற்காக கூட்டம் கூடுகிறார்கள். காந்தி மீதான தரிசனப் பித்தைக்கூட அவர் ஒரு அரிய உயிரினம் எனும் வகையில் தான் விளக்கி கொள்ள இயலும். அவர் மீதான நமது கசப்புகளும் ஏமாற்றங்களும் கூட அவருக்கு ஐந்தாவது கால் இல்லை என்பதால் இருக்கலாம். காந்தி தனக்கு ஐந்தாவது கால் இருப்பதாக என்றும் நம்பியதில்லை.

 

3

காந்தி உருவாகி வந்த கணங்களை சத்திய சோதனையிலிருந்து அடையாளம் காண முடியும். சைவ உணவாளர் சங்கத்தில் ஒரு நிகழ்வை பற்றி குறிப்பிடுகிறார் காந்தி. அல்லின்சன் என்பவரை நீக்குவதற்காக திரு ஹில்ஸ் கூட்டிய கூட்டத்தில் காந்திக்கு ஹில்ஸின் மீது மதிப்பிருந்தாலும் கூட ‘ஒழுக்க கொள்கைகளும் சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என ஒப்புக் கொள்ள ஒருவர் மறுக்கிறார் என்பதற்காக அவரை அச்சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதென்பது சரியானதல்ல என்றும் நான் எண்ணினேன்,’ என எழுதுகிறார். காந்தியின் அரவணைக்கும் அரசியலுக்கு  மிக முக்கியமான உதாரணம் என இதை சொல்லலாம். இதைவிடவும் வலுவான சுவாரசியமான நிகழ்வு ஒன்று உண்டு. காந்தி சகோதரரின் நண்பருடனான நட்பை பற்றி சொல்கிறார். ‘அவரை சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்பு கொண்டேன்,’ என எழுதுகிறார். இந்த நண்பரின் பெயர் ஷேக் மேதாப் என திரிதீப் சுஹ்ருத்தின் அடிக்குறிப்பு சொல்கிறது. மேதாப் ஒரு சுவாரசியமான நபர். குகாவின் தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலிலும் மேதாப் பற்றிய குறிப்புகள் உண்டு. காந்திக்கு அசைவ உணவை பரிச்சயம் செய்யும் இதே மேதாப் தான் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் கொஞ்ச காலம் வீட்டை பகிர்ந்து கொள்கிறார். காந்தி இல்லாத போது விலைமாதரை வீட்டிற்கு அழைத்து வந்த விவரம் தெரிந்து காந்தி அவரை வெளியேற்றுகிறார். நட்பின் வழி சீர்திருத்தம் சாத்தியமில்லை, நெருங்கி பழக கூடாது நன்மையை விட தீமை எளிதில் தோற்றி கொள்வது என உணர்கிறார். ஆனால் பின்னரும் மேதாப் தென்னாப்பிரிக்க போராட்டங்கள் குறித்து கவிதைகள் எழுதி அவை இந்தியன் ஒபினியனில். வெளியாயின. மேதாபும் அவருடைய மனைவி ஃபாத்திமாவும் போராட்டங்களில் பங்கு கொண்டார்கள். போராட்டத்தில் பங்கு கொண்டதும் கவிதைகள் எழுதியதும் இந்நிகழ்விற்கு பிறகு தான். காந்தியின் மனிதர்களின் மீதான முடிவற்ற நேர்மறை நம்பிக்கை உண்மையில் வியப்பை அளிக்கிறது. அவர் தொடர்ந்து குற்றங்களை மன்னித்து, மற்றொரு வாய்ப்பு, மற்றொரு வாய்ப்பு, என வழங்கியபடி முன்னகர்கிறார். அவரால் தன்னுடன் முரண்பட்ட நம்பிக்கை மற்றும் கொள்கை உடையவர்களுடன் இணைந்து பயணிக்க முடிந்தது. எதிர்த்தரப்பையும் கூட காந்தி அரவணைக்க முயல்கிறார். ‘மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை நற்செயலை பாராட்ட வேண்டும். தீய செயலை கண்டிக்க வேண்டும்.,’ என எழுதுகிறார். இதுவே அவருடைய அரவணைக்கும் அரசியலின் அடிப்படை என கூறலாம். சத்திய சோதனையில் இப்படியொரு வரி வருகிறது- ‘எதிர்கட்சிக்கு நியாயம் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது,’ காந்திக்கு ஆங்கிலேய அரசியல் முறைகள் மீது பெரும் விசுவாசம் இருந்தது. தன்னளவிற்கு வேறு எவருக்கும் விசுவாசம் இருந்ததில்லை என நம்பினார். ஆங்கிலேய ஆட்சி ஏற்கத்தக்கது, ஆளப்படுவோருக்கு நன்மையளிப்பது என நம்பினார். இங்கிலாந்திற்கு செல்லும்போது அதுவே அவரை ஆங்கிலேய கனவானாக ஆகும் முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபட வைத்தது. வயலின், நடனம், ஃபிரெஞ்சு என எல்லாவற்றையும் கற்க முயல்கிறார். இறுதியில் அவையெல்லாம் ஒருவித அவல நகைச்சுவையாகி விடுகிறது. காந்தி ஆங்கிலேயராக முயன்று படிப்படியாக மீண்டும் இந்தியராகிறார் என தோன்றியது.  

காந்தி ஆங்கிலேய அதிகார வர்க்கத்தால் அவமதிக்கப்பட்ட முதல் நிகழ்வு என தென்னாப்பிரிக்காவில் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட நிகழ்வை சொல்வது வழக்கம். அனால் அதற்கெல்லாம் வெகு முன்னரே தன் மூத்த சகோதரரின் பொருட்டு இங்கிலாந்தில் பரிச்சயமான, அப்போது போர்பந்தரில் அரசியல் பிரதிநிதியாக இருந்த ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க செல்கிறார். சகோதரரின் தரப்பை எடுத்துரைக்கும் முன்னரே சிப்பந்தி மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார். கடுமையாக புண்பட்ட காந்தி அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என முடிவு செய்கிறார். அப்போது பம்பாயில் மூத்த வழக்கறிஞராக இருந்த பெரோஸ் ஷா மேத்தா, “அனேக வக்கீல்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் இது சாதாரண அனுபவம் என்று காந்தியிடம் கூறுங்கள். அவர் இப்பொழுதுதான் இங்கிலாந்திலிருந்து வந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு ரோஷம் அதிகமாக இருக்கிறது ஆங்கிலேய அதிகாரிகளை குறித்து அவருக்கு இன்னும் தெரியவில்லை. அவர் இங்கே ஏதோ கொஞ்சம் சம்பாதித்து சௌக்கியமாக வாழ விரும்பினால் அக்குறிப்பை கிழித்தெறிந்துவிட்டு அவமானத்தை சகித்துக் கொள்ளட்டும்.” என காந்திக்கு அறிவுரை வழங்குகிறார்.

காந்தி இந்நிகழ்விற்கு பிறகு ஒரு முடிவிற்கு வருகிறார். ‘இனி ஒருபோதும் இத்தகைய சங்கடமான நிலைக்கு என்னை உட்படுத்திக் கொள்ளமாட்டேன், நட்பை இவ்விதம் பயன்படுத்திக் கொள்ளவும் முயல மாட்டேன்.’ குறிப்பாக நட்பை பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதில் காந்திக்கு ஒரு திடமான முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என தோன்றியது. இங்கிருந்தே லார்ட் இர்விங் மற்றும் இன்ன பிற வைஸ்ராய்களுடன் அவருக்கு இருந்த உறவை.புரிந்துகொள்ள முடியும் என தோன்றுகிறது. 

தென்னாபிரிக்காவிற்கு வந்த புதிதில் மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றம் காந்தியின் தலைப்பாகையை அகற்ற சொனனது. காந்தி மறுத்து கோபம் கொண்டு வெளியேறுகிறார். ஆனால் அதே காந்தி பாரிஸ்டராக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து கொள்ளும்போது நீதிபதி தலைப்பாகையை அகற்ற சொன்னதும் ஒப்புக்கொண்டு அகற்றுகிறார். ‘;இந்த உத்தரவை நான் எதிர்த்திருந்தால் அந்த எதிர்ப்பு நியாயமாக இருந்திருக்காது என்பதல்ல. ஆனால் என் பலத்தை பெரிய விஷயங்களில் போராடுவதற்காக சேமித்து வைக்க நான் விரும்பினேன். தலைப்பாகையை வைத்துக்கொண்டுதான் இருப்பேன் என்பதை வலியுறுத்துவதில் என்னுடைய ஆற்றலை எல்லாம் நான் செலவிட்டுவிடக் கூடாது,’ என எழுதுகிறார். இந்த அத்தியாயத்தின் இறுதியில், “ஆனால் என் வாழ்க்கை முழுவதும் எதிர்ப்பு என்பது எப்போதும் விட்டுக் கொடுப்பதுடன் சேர்ந்தே வந்திருக்கிறது. பிற்கால வாழ்வில் இந்த உணர்வு சத்தியாகிரகத்தின் இன்றியமையாத பகுதி என்பதை கண்டேன். விளைவாக அடிக்கடி என் உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ளவும், நண்பர்களின் வருத்தத்திற்கு ஆளாகவும் நேர்ந்திருக்கிறது. ஆனால், சத்தியமானது கல் போல இறுக்கமானது அதேயளவு தாமரை போல மென்மையானதும்கூட.” கல்மலர் என்பதே இக்கட்டுரை தலைப்பு இங்கிருந்து உருவானதே.

காந்தியின் நடைமுறைகள் அறிவியல் தன்மையுடையவை என பொதுவாக சொல்லப்படுவதுண்டு. தொடர்ந்து சோதனைகள் வழியாக நிரூபிக்கவும் மறு பரிசீலனை செய்யவும் முயன்றிருக்கிறார். ஆனால் காந்தி எப்போதும்  தர்க்கரீதியாக செயல்பட்டவரா என்றால், இல்லை. புலால் உண்ண சொல்வதற்காக அவருடன் தர்க்கங்களை அடுக்கி வாதிட்டபோது அந்த வாதங்களுக்கு அவர் செவி சாய்க்கவில்லை. மாறாக அது நன்மையா இல்லையா எனும் விவாதத்தை தவிர்த்து தனது நோன்பை இறுக பற்றி கொள்கிறார். மற்றொரு உதாரண நிகழ்வு என்றால் தென்னாப்பிரிக்காவில் அவருடைய நண்பர்களிலொருவரான திரு. கோட்ஸ் காந்தியின் கழுத்தில் உள்ள துளசிமணி மாலையை கழட்ட சொல்கிறார். இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என அவரிடம் கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் காந்தி, “இம்மாலையில் இருக்கும் தெய்வீக ரகசியம் இன்னது என்பது எனக்கு தெரியாது. இதை நான் அணியாவிட்டால் எனக்கு தீமை உண்டாகிவிடும் என்று நான் நினைக்கவும் இல்லை. அன்பினாலும், இது என்னுடைய சுகத்திற்கு உதவியாக இருக்கும் என்ற திடநம்பிக்கையுடனும் தாயார் இதை என் கழுத்தில் அணிவித்தார். ஆகையால் தக்க காரணமின்றி இதை நான் எறிந்துவிட முடியாது. நாளாவட்டத்தில் இது இற்றுப்போய் தானாகவே அறுந்து விடுமானால் புதிதாக ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்காது. ஆனால் இந்த மாலையை அறுத்துவிட முடியாது என்றேன்,’ என்றேன் என எழுதுகிறார். காந்தியின் இவ்விதமான கூறுகளே அவரை வெகுமக்களுக்கு நெருக்கமாக்குகிறது என தோன்றியது. வரட்டுத்தனமான பகுத்தறிவு விவாதம் அல்ல அவருடைய வழி.

சத்திய சோதனையை வாசிக்கும்போது காந்தியை நுணுக்கமாக அணுக முடிகிறது. அவருக்கு ‘முன்னுதாரண காம்ப்ளெக்ஸ்’ இருந்தது என சொல்லலாம்  கஸ்தூரி பாவிடம் கடுமையாக நடந்துகொள்ள அன்பே காரணம் என எழுதிவிட்டு, ‘மனைவி என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே விரும்பினேன்,’ என எழுதுகிறார். இந்த முன்னுதாரண மனப்பாங்குதான் ஹரிலாலை அவரிடமிருந்து விலக்கியது. காந்தி தானொரு வணிக புத்திரன் எனும் பிரக்ஞையை விட்டவர் அல்ல. அவருடைய அறங்காவலர் முறைக்கான யோசனை இந்த அறிதலில் இருந்தே வருகிறது. சத்திய சோதனையில் ஓரிரு இடத்தில் அவருடைய வணிக பிரக்ஞை எட்டிபார்க்கிறது. பாலசுந்தரத்திற்கு உதவிய பின்னரும், பிளேக் வந்த பின்னரும் என இரண்டு முறையும் இந்நிகழ்வுகளின் விளைவாக காந்தி தன்னுடைய தொழில் நன்றாக நடந்தது என குறிப்பிடுகிறார்.

காந்தி பொது நிறுவனங்கள் நடத்துவதை பற்றி முன்வைக்கும் பார்வை முக்கியமானது. ‘நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்களை நடத்துவது நல்லதல்ல என்பதே இப்போது என்னுடைய திடமான கருத்தாகிவிட்டது. நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்க சிதைவுக்கான வித்தும் அந்நிதியுடன் ஊன்றப்பட்டு விடுகிறது. பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில் அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லையென்றால் பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை,’ என எழுதுகிறார். தற்கால காந்திய நிறுவனங்களை காந்தி எப்படி பார்த்திருப்பார் என எண்ணிக்கொண்டேன். தற்சார்பு இல்லாமல், செயலற்று கிடக்கும் அமைப்புகளை வெறும் பழம் பெயருக்காக பொது நிதியை கொண்டு நடத்த அவர் ஒப்புகொள்ள மாட்டார் என தோன்றியது. 

காந்திக்கு பாரிஸ்டராவதை விட மருத்துவராக வேண்டும் என்பதில் பெரு விருப்பமிருந்திருக்கிறது. அந்த விருப்பத்தை வெளியிடும்போது, ‘பிணங்களை அறுத்து சோதிப்பது வைஷ்ணவர்களாகிய நமக்கு தகாது,’ என அவருடைய தந்தை கூறிய சொற்கள் தடையாகின்றன. மீண்டும் தென்னாப்பிரிக்காவிலிருந்த காலகட்டத்தில் கல்லேன்பேக்குடன் சேர்ந்து இங்கிலாந்தில் மருத்துவம் பயில செல்லவேண்டும் என திட்டமிட்டார் ஆனால் அது நிறைவேறவில்லை. இந்நூலில் ‘சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால் சேவையையே என்னுடைய மதமாக்கிக் கொண்டேன்,’’ என எழுதுகிறார். காந்தியின் மருத்துவராகும் ஆர்வத்திற்கு பின்னிருந்தது இந்த புரிதல் தான். ஜூலு கலவரத்தின்போது ஆம்புலன்ஸ் சேவையை செய்வதற்கும் இதுவே காரணம். அவருடைய இயற்கை மருத்துவத்தை கொண்டு பல்வேறு முறை பலருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.  

ராய்சந்த் பாய் காந்தியின் ஆன்மீக வழிகாட்டி என சொல்லலாம். அவர் ஒரு வைர வியாபாரி ‘பலமான வர்த்தக பேரங்களை எல்லாம் பேசி முடித்தவுடனேயே ஆன்மாவில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை எழுத ஆரம்பித்துவிடுகிறார் என்றால் அவர் உண்மையில் சத்தியத்தை நாடுபவராக இருக்க வேண்டுமே அல்லாமல் வியாபாரியாக இருக்க முடியாது என்பது தெளிவானது. ஒரு தடவை இரு தடவை அன்று, அநேகமாக எப்பொழுதுமே அவர் வியாபாரத்தின் நடுவில் இருந்துக்கொண்டே கடவுளைத் தேடும் முயற்சியில் இவ்விதம் ஆழ்ந்திருந்ததைக் கண்டேன்.’ என எழுதுகிறார். காந்தியின் செயல்வழி யோகத்திற்கு, அதாவது உலகியல் வாழ்வில் ஈடுபட்டபடியே ஆன்மீக தேடுதலை தொடர்வதற்கு ராய்சந்த் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். காந்தி ராய்ச்சந்திடமிருந்து இன்னும் ஒருபடி முன்னே செல்கிறார். அவருடைய செயல்கள் சொந்த வாழ்க்கையை செறிவாக்க அல்ல. இதை மேலும் புரிந்துகொள்ள சத்திய சோதனையில் உள்ள ஒரு நிகழ்வு உதவக்கூடும். கல்கத்தாவில் காளிக்கு ஆடுகளை பலியளிக்கும் சடங்கை காந்தி காண நேர்கிறது. அவரை அக்காட்சி வெகுவாக பாதிக்கிறது. அங்கு ஒரு சாதுவிடம் உரையாடுகிறார். இந்த பலிக்கு எதிராக நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா என கேட்கிறார். அது எங்கள் வேலையல்ல கடவுளை தொழுவது மட்டுமே எங்கள் வேலை என சாது பதில் சொல்கிறார். ஒருவகையில் காந்தி ஆன்மீகவாதியாக இருந்தாலும் அவர் அதை செயல்தளத்தில் நன்மையை நோக்கி சீர்திருத்தத்தை நோக்கி கொண்டு செல்கிறார். ‘மனிதனுடைய உயிரைவிட ஓர் ஆட்டுக்குட்டியின் உயிர் எந்த வகையிலும் குறைவானதாக எனக்கு தோன்றவில்லை,’ என எழுத அவரால் முடிந்தது. 

காந்தியின் சொற்களில் சொல்வதானால். ‘பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின். மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் விலகி நின்று விட முடியாது. அதனாலேயே, சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி, என்னை ராஜீயத் துறையில் இழுத்து விட்டிருக்கிறது. சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும் எந்த விதமான சம்பந்தமுமே இல்லை என்று கூறுவோர், சமயம் என்பது இன்னதென்பதையே அறியாதவர்களாவர். இதைக் கொஞ்சமேனும் தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன்.’

இந்த இணைப்பை காந்தி வெற்றிகரமாக இந்திய அரசியலில் செயல்படுத்தினார். அவருக்கு பின்னும் அவருக்கு முன்னும் அவரளவிற்கு இந்த ஆன்மீகத்திற்கும் கள செயல்பாட்டிற்கும் இடையிலான சமநிலையையும் செயல் வீச்சையும் வேறு எவரும் அடையவில்லை என்றே தோன்றுகிறது.

நிறைவுற்றது

பிற படைப்புகள்

1 comment

T. DURAIVEL June 27, 2020 - 3:43 am

இன்றைய தமிழில் செறிவாக் காந்தியின் சிந்தனையை வெளிக்காட்டும் சீரிய கட்டுரை. காந்தியை சரியான முறையில் இதுவரை அறியாதவர்களுக்கு ஒரு முன்வாயில். சிறப்பாக இருக்கிறது. நன்றி.

த.துரைவேல்.

Reply

Leave a Comment