தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 1
சு. வேணுகோபால்

by olaichuvadi

 

1

நவீன தமிழிலக்கியத் தளத்தில் போர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற வகையினத்தை ஈழத்து அரசியல் சூழல் உருவாக்கியது. ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என்கிற சொல்லாடல் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப்பித்தன் அந்த வகையினத்திற்குரிய பிரச்சனைப்பாடுகள் செறிந்த புலம்பெயர்தலின் அவலம் கொதிக்கும் ‘துன்பக்கேணி’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அந்தக் கதை நிகழும் இடமோ இலங்கை மலைப்பகுதியில். இது ஒரு வரலாற்று வேடிக்கைதான்.

கணவன்பட்ட கடனை அடைக்கவும் திருட்டுத்தனத்தால் சிறைக்குச் சென்ற பறையன் வெள்ளையனை மீட்கவும் மருதி தன் தாயுடன் திருநெல்வேலியிலிருந்து கொழும்பு தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்குச் செல்கிறாள். அங்கு ஸ்டோர் மேனேஜர் மருதியைக் கெடுக்கிறான். வயிற்றில் வெள்ளையனுக்கு உண்டான இருமாத சிசு அப்போது. தேயிலை கிள்ளும் மற்ற பெண்கள் இதனை இயல்பாக எடுத்துச் சிரிக்கின்றனர். அந்த எஸ்டேட்டில் தொழிலாளர்கள் குடியிருக்கும் இடம் நாற்றம்மிக்கது. மருதியின் தாய் மலைக்காய்ச்சல் கண்டு இறக்கிறாள். ஸ்டோர் மேனேஜர் மருதியை எஸ்டேட் முதலாளி பார்ரிக்ஸன் ஸ்மித்திற்கு கூட்டித்தருகிறான். அந்தத் தொடர்பு நீடிக்கிறது. குழந்தை பிறக்கிறது. மருதிக்குப் பறங்கிப்புண் உடம்பெல்லாம் தோன்றி மலைக்காய்ச்சலால் சுருள்கிறாள்.

சிறையிலிருந்து விடுதலையான வெள்ளையன் மருதியைக் கொல்ல கொழும்பு வருகிறான். நோய்வாய்க்கப்பட்டு கிடக்கும் மருதியைக் கண்டு மனம் இறங்குகிறான். மகள் வெள்ளச்சியையும் 200 ரூபாய் பணமும் பெற்று திருநெல்வேலி ஜில்லா வாசவன்பட்டிக்குத் திரும்புகிறான்.
மருதிக்கு நோய் முற்ற முற்ற கூன் விழுகிறது. இளம்வயதிலேயே உடம்பை ஒடுக்குகிறது நோய். தன் மகள் வெள்ளச்சியைக் காணும் தீரா ஆவல் தோன்ற வாசவன்பட்டிக்குச் செல்ல விரும்புகிறாள். கொழுந்துகிள்ள செல்வதற்குத் தாமதமானால் கங்காணி சுப்பன் அடிப்பான். அதற்குப் பயந்து தேயிலைத்தோட்டத்திற்கு ஓடுகிறாள். சுப்பனும் – பேச்சியும் (மருதி தோழி) உல்லாசத்தில் இருப்பதைக் காண்கிறாள். மருதி வெளியில் சொல்லிவிடுவாளோ என்று சுதாரித்து மருதியைப் போட்டு அடிஅடி என்று அடித்து நொருக்குகிறான்.
குத்திருமலும் உதை நோவும் மருதியை முடக்குகிறது. நோய் உற்றவர்களைப் புதிதாக வந்த துரை நீக்குகிறான். உழைத்தப்பணத்தைக் பெற்றுக்கொண்டு ஊர் வருகிறாள் மருதி. வெள்ளையனுக்கு இரண்டாம் திருமணம் நடக்கிறது. அவனிடமிருந்து விலகி பாளையங் கோட்டைக்கு வந்து புல்லறுத்து ஜீவிக்கிறாள்.

தாமிரபரணி தண்ணீரும் புதிய காற்றும் மெல்ல அவளின் நோயை விடுவிக்கின்றன. மறுபடி மகளைப்பார்க்க வருகிறாள். சித்தியின் கொடுமையில் துடித்த மகளைத் தூக்கிக்கொண்டு வருகிறாள். ரயிலடியில் கங்காணி சுப்பனைச் சந்திக்க மறுபடியும் கொழும்பு தேயிலைத்தோட்டத்திற்குச் செல்கிறாள். சுப்பன் மருதியை வைத்துக் கொள்கிறான்.

அங்கு வளர்ந்த மருதியின் மகளை ஐம்பது வயது தாண்டிய ஸ்டோர் மேனேஜர் கெடுக்கிறான். மருதியைக் கெடுத்து வெள்ளையர்களுக்குக் கூட்டிக்கொடுத்தவனே மகளையும் கெடுக்கிறான். மருதி ஆத்திரத்தில் மேனேஜரைக் கல்லெறிந்து தாக்குகிறாள். கணவன்பட்ட கடனை அடைத்து சுகமான வாழ்க்கையை வாழ கொழும்பிற்குப் புலம்பெயர்ந்து வந்த மருதி வெள்ளையர்களாலும், கங்காணியாலும், ஸ்டோர் மேனேஜராலும் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு நோயால் முடங்கி மீண்டெழுந்து, வந்தபோது மகள் வெள்ளச்சியின் வாழ்க்கையும் சீரழிகிறது. இப்படியான வாழ்க்கையைப் புதுமைப்பித்தன்  1935 வாக்கிலே எழுதியிருக்கிறார்;. மலையகத் தேயிலைத்தோட்டங்களில் வேலைசெய்யும் பல பெண்களின் வாழ்க்கை மருதியைப் போலவே நாசமுறுகிறது. முழுதும் ஆண்களின் அடிமையாக வாழ நேர்ந்த துயரத்தை ‘துன்பக்கேணி’ சொல்கிறது.

ஈழத்தமிழர் தெறித்தோடி உலகநாடுகளில் அடைக்கலம் புகுந்த இடங்களிலிருந்து எழுதிய இலக்கியம் ‘புலம் பெயர் இலக்கியமாக’ எண்பதுகளுக்குப் பின் அடையாளம் காணப்பட்டது. ஆனால் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம் நிலைபெற்ற நாளிலிருந்து தமிழர்களைக் கட்டயமாகப் புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கினர். இலங்கை, தென்னாப்பிரிக்கா, பர்மா, மலேசியா, அந்தமான் என்று அடிமைகளாகக்கொண்டு சென்று வதைத்தனர். 1786-ல் பினாங்கு தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்ததும் தமிழர்களைப் பெருமளவு இந்த நாடுகளுக்கு வேலையாட்களாக் கொண்டு சென்றனர். கரும்புத்தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும், பொதுப்பணித்துறை கட்டமைப்பதற்கும் கூலிகளாகக்கொண்டு சென்றனர்.

வறுமையில் இருப்பவர்களுக்கு நல்ல வளமான வாழ்க்கை அங்கு இருப்பதாக கங்காணிகள் வழி கூறி ஏமாற்றி நாகப்பட்டினம் துறைமுகத்தின் வழி காலனி நாடுகளுக்குக் கொண்டுவந்தனர். 1802-ம் ஆண்டுக்குப்பின் தமிழகப் போர்க் கைதிகளையும் குற்றவாளிகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து பினாங்கு தீவை வளப்படுத்தும் பணியில் இறக்கினர் வெள்ளையர்கள். 1921-ல் நடந்த கணக்கெடுப்பின்படி தமிழர்கள் மட்டும் 3,87,509 பேர்.

சயாம், மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் அடிமைகளாகக் குடியேறத் தொடங்கிய 1786லிருந்தே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தோன்றி இருக்கவேண்டும். இயல் எழுத்தாக அவை அமையவில்லை. நாட்டார் பாடல்களாக மட்டும் வெளிப்பட்டன. ஏனெனில் அவர்கள் படிக்காத பாமரர்கள். இவர்களைக் கண்காணித்த கங்காணிகளும், கிராணிகளும் ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள்தான். அவர்கள் யாரும் இவர்களின் அவலத்தை எழுதவில்லை. இந்த அடிமைகளின் மூன்றாம் நான்காம் தலைமுறையினரே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உருவாகின்றனர். 200 ஆண்டுகால அடிமை வாழ்வை கிழக்காசிய நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்திருந்தும் எழுத்திலக்கியத்தில் அவர்கள் குறித்த பதிவு பெறமாலே போயிருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் 1940களுக்குப் பின்னர்தான் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்களின் வாழ்வு இலக்கியமாகத் தொடங்கியிருக்கிறது.

ரப்பர் தோட்டங்களில், துறைமுகங்களில், சயாம் ரயில்பாதை அமைப்பதில், சுரங்கங்களில், காடுகளில், பொதுப்பணித்துறைகளில் தமிழர்கள் கூலிகளாக அமர்த்தப்பட்டு அவர்கள் பட்ட அவமானங்களை, சிதைவுகளை, அகதிகளாக, ஏதிலிகளாக நின்றதைப் பல கதைகள் முன்வைக்கின்றன. சி.கமலநாதனின் ‘கஞ்சிக்கூலி’, சங்கு சண்முகத்தின் ‘இரைதேடும் பறவைகள்’, சி.வடிவேலின் ‘முத்துச்சாமிக்கிழவன்’, ப.கு.சண்முகத்தின் ‘ஐந்தடியில் ஒர் உலகம்’, சீ.முத்துச்சாமியின் ‘இரைகள்’, மா.சண்முகசிவாவின் ‘வீடும் விழுதுகளும்’, நா.கோவிந்தனின் ‘மதிப்பீடுகள்’, இந்திரஜித்தின் ‘வீட்டுக்கு வந்தார்’ என பல கதைகளில் மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த (சிங்கப்பூரும் அடக்கம்) தமிழர்களின் துயரவாழ்வு விவரிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் சொகுசான வாழ்க்கை இருப்பதாகவும் கூலிவேலை செய்தால் சில வருடங்களில் லட்சாதிபதியாகி விடலாம் என்றும், தமிழகத்திற்குச் செல்வச்செழிப்புடன் திரும்பலாம் என்றும் ஆசைகாட்டி மதுராந்தகம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் ஐந்துகாசு சம்பளத்திற்குத் தாண்டவாளம் அமைக்கவும், கட்டடங்கள் கட்டவும், மரம் வெட்டவும், ரப்பர்பால் எடுக்கவும், பிரித்து அனுப்புகின்றனர். கங்காணிகள் ‘தலைகாசு’ போனசிற்காக இவர்களை மீளமுடியாத அடிமைகளாகத் தள்ளுகின்றனர்.

தோட்டம் என்ற பெயரில் அடர்ந்த காட்டில் வேலை செய்பவர்களைக் கொசுக்கள், அட்டைகள் பிடுங்கி எடுக்கின்றன. மலேரியா, காய்ச்சல்கட்டி, காலரா கண்டு வியாதிகளோடு போராடுகின்றனர். சிலர் இறக்கின்றனர். வீடுகள் என்ற பெயரில் கோழிகுடாப்பு போன்ற குடிசைகளில் கட்டியதுணிக்கு மாற்றுத்துணி இல்லாமல் பாடுபடுகின்றனர். வீதிகளிலும், தோட்டங்களிலும் எலும்பும்தோலுமாக அலைகின்றனர். இரண்டாம் உலகம்போர் மூண்டதும் உறவுகளிடமிருந்து பிரித்து சயாம் ரயில்பாதை அமைக்க ஏற்றிச்செல்கின்றனர். கங்காணிகள் வலுகட்டாயமாகப் பிடித்துத் தருகின்றனர். அங்கு தகப்பன், மகள், தம்பி, மைத்துனர் என்று வெவ்வேறு இடங்களுக்குப் பிரித்து அனுப்புகின்றனர். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் செத்து மடிகின்றனர். உயிர்பிழைத்தவர்கள் கௌபீனத்துடன் சிரங்குபற்றி ரணமான உடம்போடு திரும்பி வந்து தோட்டக்கூலிகளாகச் செல்கின்றனர். இந்த அவலத்தைப் பல மலேசியாக்கதைகள் சொல்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் சில வெள்ளைக்காரர்கள் தோட்டங்களை விற்க முன்வந்தபோது சீன முதலாளிகள் நிலங்களைக் கைப்பற்றி தமிழர்களைத் துரத்துகின்றனர். வேலை இல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர் தெருக்களில் பிச்சைக்காரர்களாக அலைகின்றனர். நகரகடை படிகளில், தெருதிண்ணைகளில், நடைபாதைகளில் இரவு நேரங்களில்; முடங்கி உயிர் வாழ்கின்றனர். (கஞ்சிக்கூலி). ‘முத்துசாமிக்கிழவன்’ கதையும் இந்தச்சிக்கலைப் பேசுவதுதான்.

ஜப்பானியர்களால் இழுத்துவரப்பட்ட தமிழர்கள் சயாமில் கொசுக்கடியும் சேற்றின் நாற்றமும் உள்ள பகுதியில் தங்கவைக்கப்படுகின்றனர். மூங்கிலைப் பிளந்து செய்த படுக்கை, வாட்டியெடுக்கும் குளிர், சுண்ணாம்பு அரிசி அல்லது மரவள்ளிக்கிழங்கு உணவு, கொசுக்கடியோடு போராடுகின்றனர். ஒவ்வாமையினால் உண்ணப்படாத உணவு சேற்றில் கொட்டப்பட்டு நாறுகிறது. வேலை செய்யும் இடங்களுக்கு அட்டைக்கடியால் சீழ்வடியும் கைகளோடு இசுலாமிய ஏழைப்பெண்கள் தின்பண்டங்கள் விற்கின்றனர். அவர்களின் கைகளில் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் மொய்கின்றன. சரியாக வேகாத கல்லும் மண்ணும் கலந்த உணவையும் மிளகாய்த்தூளைக் கொட்டி குழம்பு என்ற பெயரில் ஜப்பானியர் தரும் உணவை உண்டு வயிற்றுப்போக்கால் அவதியுறுகின்றனர். ஜப்பானியர்களின் அடிஉதை வேறு. தனிமை, நம்பிக்கையின்மை, என பயம் கவ்வ மெலிந்த உடலோடு கடினமான வேலைகளைச் செய்கின்றனர். ஜப்பானிய அதிகாரிகளுக்கு வளைந்து குனிந்து வணக்கம் வைக்க மறந்தால் உதை விழுகிறது. உழைக்க முடியாதவர்களை லாரிகளில் அள்ளிப்போட்டு கொண்டுவந்து ரப்பர் தோட்டங்களில் மறுபடியும் தள்ளுகின்றனர். வேலை செய்யும் இடத்திலும், திரும்பிவரும் வழிகளிலும் இறந்தவர்களை அங்கங்கே குழிவெட்டி புதைத்துவிட்டு வருகின்றனர். சில சமயம் ஓரே குழியில் இரண்டு மூன்று பிணங்களைப் போட்டு மூடுகின்றனர். கோலாலம்பூரில் நொண்டிகளையும், முகம்வீங்கி சோகை பிடித்தவர்களையும் காசநோய்க்கு குத்திருமல் பிடித்தவர்களையும் ஜப்பானிய ராணுவத்தினர் லாரிகளில் கொண்டுவந்து இறக்கிவிடுகின்றனர். நான்கே ஆண்டுகளில் நடுவயதுக்காரர்கள் கூனிக்குறுகி கிழவர்களாக வீடுதிரும்புகின்றனர். பலர் விதவைகளாகின்றனர். பலர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர்: சயாம் போன கணவன் வரமாட்டான் என வேறு ஆடவர்களுடன் சிலர் சேர்ந்து கொள்கின்றனர். ஜப்பானியரின் ஆட்சிக்காலத்தில் திருடு ஏதேனும் நடந்தால் திருடனின் பெண்டுபிள்ளைகளைக் குடிசையில் பூட்டி நெருப்பிட்டு கொளுத்துகின்றனர். (முத்துச்சாமிக்கிழவன்)

‘சீனிக்காய் விரட்டும் வேலை’ என வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட தமிழர்கள் காடுகளில் சிறுத்தை, புலிகளுக்கு சிலர் இரையாகின்றனர். வெள்ளையர்கள் தமிழ் விதவைகளைப் பாலியலுக்கு மிரட்டி இழுத்துக்கொள்கின்றனர். ஜப்பானியர்களும் சரி, வெள்ளைக்காரர்களும் சரி தமிழர்களை அடித்து மிதித்து வேலைவாங்குகின்றனர். போர் முடிந்தபின் இந்தியப் பெண்களை நிராதரவாக விட்டுச்செல்கின்றனர் வெள்ளையர்கள். தமிழர்களில் பலர் குடியில் சீரழிகின்றனர். இவ்விதமாக வாழ்ந்த வாழ்க்கையை ‘இரைதேடும் பறவைகள்’ கதை சொல்கிறது.

தமிழர்கள் அக்காலத்தில் தங்கள் பாதுகாப்பு குறித்து கவனமில்லாமல் இருந்ததால் சந்திக்க நேர்ந்த கொடுமைகளை ‘இரைகள்’ கதை சொல்கிறது. தோட்டம் தோட்டமாக வந்து இந்த நாட்டிலேயே பிரஜா உரிமைபெற விருப்பமுள்ளவர்கள் கைகளைத் தூக்கச் சொன்ன போது பெரும்பாலான தமிழர்கள் கைதூக்கவில்லை. என்றைக்கிருந்தாலும் தமிழகம் செல்லத்தானே போகிறோம் என்று பெயர் தராமல் விட்டவர்களின் குடும்பங்களுக்குப் பின்னாளில் பெரிய ஆபத்துவருகிறது. மூன்றுமாதம், ஆறுமாதம் மட்டுமே மலேசியாவில் இருக்கலாம் என்று சிவப்பு அட்டை தரப்படுகிறது. இக்காலக் கெடு முடிய இவர்களை எஸ்டேட்டுகளை விட்டு சீன முதலாளிகள், இசுலாமிய முதலாளிகள் விரட்டுகின்றனர். இவர்கள் சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களை நோக்கி ஓடுகின்றனர். பல முதிர்கன்னிகள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். பிரஜா உரிமை கார்டு பெற பல பெண்கள் கங்காணி, கிராணி, தோட்டமுதலாளி என பலருக்கு தங்கள் உடலைத் தரவேண்டியவர்களாகின்றனர்.

பெரு நகரங்களின் ஓடை ஓரம் சேர்ந்த பணத்திற்குச் சிறுகுடிசைகளை வாடகைக்கோ, விலைக்கோ வாங்குகின்றனர். இதற்கு இடைத்தரகர்களாக இருப்பவர்கள் தமிழர்கள். சீன அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பான குடிசைகள் என்று புல்டோசரைக் கொண்டு வீழ்த்துகின்றனர். அவ்விடங்களில் சீனர்களுக்கும் மலேசியர்களுக்கும் தகர வீடுகள் அமைத்துத்தருகின்றனர். தமிழர்கள் தமிழர்களாலும் அதிகாரிகளாலும் ஏமாற்றப்படுகின்றனர். குழந்தைகளை வளர்க்க பிச்சைக்காரர்களாக, விபச்சாரிகளாக மாறுகின்றனர். ஆதரவற்றவர்கள் குடிகாரர்களாகின்றனர்.

எஸ்டேட்டில் சிவப்புகார்டு பெற்றவர்கள் வீடுகளைக் காலிசெய்ய தாமதித்தால் அடித்துத் துரத்துகின்றனர். மின்சாரத்தை, குடிநீரைத் துண்டிக்கின்றனர். வேறு வழியில்லாமல் வெளியேறியவர்கள் நகரங்களில் தெருக்கூட்ட, கக்கூஸ் சுத்தம் செய்ய செல்கின்றனர். பெண்கள் லாரி ஓட்டுநர்களையோ, பொருள் ஏற்ற வந்தவர்களையோ நம்பி ஏமாறுகின்றனர். பெருநகரமான குலாலம்பூர் ஐந்தடித்தெருவில் பிச்சைக்காரர்களாக தமிழர்கள் வாழ்ந்ததை ‘ஐந்தடியில் ஓர் உலகம்’ கதை சொல்கிறது. சீனக்கடைகளில் வெங்காயம், உருளைக்கிழங்கு, ஊடன், நெத்திலி சுத்தம் செய்கிற வேலைகளுக்குக் கூலியாக செல்பவர்களுக்கு அதே பொருட்களில் சிறிதளவு தருகின்றனர். அதனை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர். இவர்களுக்கு வீடு என்ற ஒன்று கிடையாது. நடைபாதைகளிலேயே குடும்பமாக வாழ்கின்றனர். கடைத்திண்ணைகளில், சந்துக்களில், படிக்கட்டுகளில் முடங்கிக்கொள்கின்றனர். சண்டை பிடிக்கிறார்கள். எம். ஜி. ஆர். படத்தை விரும்பிபார்க்கிறார்கள் இளைஞர்கள். பிச்சை எடுத்து குழந்தைகளுக்குப் பசியாற்றுகிறார்கள். கிழிந்த சீலைகள், அழுக்குஏறிய வேட்டிகள் இவர்களின் உடைகள். தலைநகர குடிசை ஒழிப்பினாலும், சிவப்பு பாஸ்போட்டு சட்டத்தினாலும் வீடிழந்து இந்த இடத்தில் ஐக்கியமாகிறார்கள். பேப்பர் அட்டைகளைப் போர்வையாக போத்திக்கொள்கின்றனர். நகரமே தூங்கும்போது ஐந்தடித்தெருவில் தூங்காமல் சண்டையிடுகின்றனர். போலீஸ் வந்தால் வாயை அடக்கிக்கொள்கின்றனர். நொண்டிகளும், நோயாளிகளும், பிச்சைக்காரர்களும், பரத்தையர்களும் கூடி வாழ்கிற தமிழர் உலகமாக இருப்பதை ‘ஐந்தடியில் ஓர் உலகம்’ விவரிக்கின்றது.

இது ஒரு புறம் இறக்க கங்காணிகளாக, கிராணிகளாக வெள்ளைக்காரனுக்கும் ஜப்பானிய இராணுவத்திற்கும் கைக்கூலிகளாக இருந்த தமிழர்கள் வீடுவாசல் என்று முன்னேறிய விதத்தை இக்கதைகள் மெல்லிதாக தொட்டுக்காட்டுகின்றன. இடைத்தரகர்களாக ஏமாற்றுக்காரர்களாக இருந்து நிலங்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்து முன்னேறியவர்களையும் இக்கதைகளில் காணமுடிகிறது. கோவிந்தசாமியின் ‘உடல் மட்டும் நனைகிறது’ இந்திரஜித்தின் ‘வீட்டுக்கு வந்தார்’ போன்ற கதைகள் சற்று வெளிப்படையாகவே விவரிக்கின்றன. உறவுகள் இல்லாது இறந்தவர்களை  நல்லடக்கம் செய்ய முன்வரும் சாமிக்கண்ணு பொதுப்பணத்தைச் சுருட்டுவதை இங்கு உதராணமாகச் சொல்லலாம்.

2

கிழக்காசிய நாடுகளில் குடியேறியவர்களின் கதைகளில் பூர்வீக பூமியில் போய் (தமிழகம்) வாழவேண்டும் என்ற ஏக்கம் நான்காம் தலைமுறையினரிடம் மட்டுப்பட்டதாக வெளிப்படுகிறது. அதற்குக் காரணம் 200ஆண்டுகள் கழித்துதான் இவர்களின் வாரிசுகள் படைப்பிலக்கியத்துக்குள் வருகின்றனர். தமிழகம் என்பது தங்களின் பூர்வீக நாடு என்ற வரலாற்றுத் தொடர்ச்சியால் மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது. முன்னோர்களின் ஏக்கத்தை இவர்கள் சொல்லிப்பார்க்கின்றனர். அதில் அவர்களின் வேதனை உக்கிரமாக வெளிப்படவில்லை. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடம் ஈழம் என்ற மண் பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. காரணம் முழுக்க நிகழ்கால அரசியல் பிரச்சனைகளோடு பிணைந்த ஒன்றாக இருக்கிறது.

ஈழத்தில் இனமோதல் போர் காரணமாக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளன, எழுதப்பட்டுள்ளன. உள்நாட்டிலேயே சொந்த ஊரைவிட்டு வேறு புலத்திற்கு நகர்ந்ததும் பல்வேறு துன்பத்திற்கு உள்ளானதைப் பொதுவெளியில் அதிகமாகப் பேசப்படவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் ஈழத்துச் சிறுகதைகள் அதுகுறித்துப் பேசியுள்ளன. அவ்விதம் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தவர்களுக்கு நேர்ந்த புதிய சிக்கல்களையும், மன அழுத்தங்களையும் தாமரைச்செல்வியின் ‘அழுவதற்கு நேரமில்லை’ ‘பாதை’ ‘ஓட்டம்’ போன்ற கதைகளில் காணமுடிகிறது. மனிதர்கள் உறவுகளிலிருந்து அந்நியப்பட்டுப் போகின்றனர். புதிய இடத்து வேலைகள் சிக்கலை உண்டாக்குகிறது.

சிங்கள ராணுவத்தால் வீசப்படும் குண்டுகளுக்குத் தப்பி ஸ்கந்தபுரத்திலிருந்து வருகிறது குமரன் குடும்பம். வாய்க்கால் கரையில் சின்ன குடிசை போட்டு மழையிலும் குளிரிலும் அல்லற்பட நேர்கிறது. குழந்தை பெற்ற தாய்க்கு நல்ல உணவு தரமுடியாமல் அலையவேண்டியிருக்கிறது. நோய் முற்றும்போது மனைவியை ‘அக்கராயன் ஆஸ்பத்திரி’க்குத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டியிருக்கிறது. ஒரு பனடோல் பத்துரூபாய்க்கு வாங்கமுடியாமல் முழிக்கவேண்டியிருக்கிறது. மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் வராந்தையில் போட்டிருக்க வேண்டியிருக்கிறது. ஐந்து ரூபாய் இளநீர் முப்பத்தைந்து ரூபாய் விற்கிறது. இருபது ரூபாய் குளுக்கோஸ் நூற்றி இருபது ரூபாய் என பொருட்களின் விலையோ ஊட்டியை ஒடிக்கிறது. மூக்குத்தியையோ வளையலையோ விற்றாலும் ஒருநாள் செலவீனங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல்போகிறது. பணம் இல்லாமல் மருத்துவமனையில் வைத்திருக்க முடியாது. நிரந்தர வேலை எதுவும் கிட்டுவதில்லை. புதிய ஊரில் உறவுகள் இல்லாததால் அந்நியத்தன்மை கொல்கிறது. தாழ்காட்டிற்குப் போய் விறகு கொண்டுவந்தால் வாங்குபவர்கள் தரும் கூலியைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐந்துரூபாய் கூடுதலாகக் கேட்டால் வாங்காமலே போய்விடுகின்றனர். காடுகளில் கிடைக்கும் காய்ந்த கீரைகளை, மோசமான அரிசியை உணவாக உண்ணவேண்டியிருக்கிறது. நல்ல ஆகாரம் தரமுடியாமல் நோயாளிகளின் உயிரை நோய் சீக்கிரமே பறிக்கிறது. வீட்டில் பிணத்தைப் போட்டுவிட்டு சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று இழவு வீட்டாரே இழவு சொல்லப் போக வேண்டியிருக்கிறது. அங்கும் ராணுவம் நெருங்குகிறது. சில நெருங்கிய உறவினர்களுக்குச் சொல்லாமலே விடவேண்டியிருக்கிறது. குண்டுமழை பொழிகிறது. தஞ்சம் அடைந்த அந்த ஊரையும் விட்டு மற்றொரு ஊருக்கு நடுஇரவில் வீறிட்டு அலறும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். நோயுற்ற தாய்தந்தையர்களை தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். 20ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவியின் துக்கத்தைக்கூட அனுசரிக்க முடியாமல் போர்ச்சூழல் துரத்தி அடிக்கிறது. தொடர்ந்து எந்த ஊரிலும் இருக்கமுடியாமல் உள்நாட்டில் புலம்பெயர்ந்தபடியே இருக்கின்றனர். இந்த நிர்க்கதியை தாமரைச்செல்வியின் ‘அழுவதற்கு நேரமில்லை’ கதை சொல்கிறது. சொந்தபந்தகளோடு கூடி ஒரு துக்கத்தை நல்லமுறையில் நடத்த முடியாமல் போகிற பண்பாட்டுச் சிதைவை இக்கதை சொல்கிறது. தமிழ்ப்பெண்ணின் இயல்பான பண்பாட்டு வாழ்க்கையை புலம்பெயர் நிலை தலைகீழாகக் கவிழ்க்கிறதை ‘பாதை’ கதை முன்நிறுத்துகிறது. ராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக பரந்தனிலிருந்து–உருத்திரபுரத்திற்கும், பின் அங்கிருந்து ஸ்கந்தபுரத்திற்கும் உயிர்தப்பி வருகிறாள் பவானி. பெற்றோர்களைக் கவனிக்காமல் சகோதரன் மனைவியின் ஊரில் இருந்துக்கொள்கிறான். ஒவ்வொரு தாக்குதலிருந்து தப்பித்துப் பெற்றோர்களைப் பாதுகாத்தபடி ஊர் ஊருக்கு நகர்கிறாள். உறவுகள் இல்லாததால் பவானியின் திருமணம் தள்ளிப்போகிறது. வந்தேறிய ஊர்களில் காணிக்குரிய உரிமையாளர்களிடம் இவளே கேட்டு குடிசைபோடுகிறாள். கிடுகுகளுக்கும், தடிகளுக்கும், தட்டிகளுக்கும் சைக்கிளில் இவளே சந்தைக்குச் செல்கிறாள்.
உருப்படியான மணவாழ்க்கை அமையாத பவானிக்கு 35வயதில் 41 வயது மணமகன் வருகிறான். ஒரு லட்சம் சீதனம் கொடுப்பதாக முடிவாகிறது. கல்யாண செலவிற்கு பவானியே சைக்கிளை எடுத்துக்கொண்டு பணம் திரட்ட சொந்தபந்தங்கள் இருக்கும் ஊர்களுக்குச் செல்கிறாள். இந்தப் பெண்ணிற்கு இந்த வயதிலேனும் திருமணம் நடக்கட்டும் என்று உதவ முன்வருகின்றனர். சிலர் குறிப்பிட்ட கடைக்குப் பணம் அளிப்பதாக உறிதியளிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பில் இருக்கும் அக்கா திருமணக்காரியத்தை முன்னிட்டு உதவிக்கு வராமல் இருக்கிறாள். பொறுப்பற்ற கணவனால் அடிஉதை வாங்கிக்கொண்டு வறுமையில் குழந்தைகளை வளர்ப்பவள் அவள். அண்ணன் பவானி பணம் ஏதும் கேட்பாளோ என்று விலகியிருக்கிறான். பெற்றோர்களைப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வவுனியாவிற்குப் பணத்திற்கு ஓடுகிறாள். மணவறை தகரபந்தலுக்கு, சமையல்காரருக்கு என்று சைக்கிளில் மணியங்குளத்திற்கும் அக்கரையான் சந்திக்கும் ஓடுகிறாள். காஞ்சிபுரம் பட்டுச்சீலை எடுக்க ஸ்கந்தபுரத்திற்கு மதியவெயிலில் போகிறாள். நடுவயதைத் தொடும் பவானி, உறவுகள் அற்ற புதிய ஊரில் இருந்துகொண்டு தன் திருமணகாரியத்திற்கு அவளே அலையவேண்டிய அவலம் நேர்கிறது. ஆண் முன்நின்று செய்துவந்த காரியத்தை அவளே நடத்தவேண்டிய சூழல். போர் வழக்காறுகளை கலைத்து எறிகிறது. இவளுக்காக முன்நின்ற நாகேந்திரமாமாவை பட்டுச்சேலை எடுத்துவரும் பவானி வீட்டில் காண்கிறாள். பெண் ஊர் ஊருக்கு சைக்கிளில் ஆண்போல அலைவதை கேள்விப்பட்ட மணமகன் இந்த மணஉறவு எனக்கு ஒத்துவராது என்று முறித்துக்கொண்டு போனதைச் சொல்கிறார். பவானிக்கு அது துக்கம்தான் என்றாலும் மணப்பந்தல்காரனுக்கும், சமையல்காரனுக்கும் திருமணம் தடைபட்டதைச் சொல்லி நிறுத்த மறுபடியும் ஓட வேண்டியிருக்கிறது. பட்டுச்சீலையை மறுபடி கடையில் மாற்ற வேண்டியிருக்கிறது. இந்த அவமானங்களைச் சுமந்துகொண்டு சைக்கிளை எடுக்கிறாள். உள்நாட்டில் புலம்பெயர்ந்த ஒரு பெண்ணின் இப்படியான துயரம் ஒருபக்கம் என்றால் போர்ச்சூழலிலும் பெண்களின் தனித்துவத்தை, துணிச்சலை, ஆற்றலை, உழைப்பைப் போற்றாமல் கேவலமாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பார்வையை குரல் உயர்த்தாமல் தொட்டுக்காட்டுகிறது இக்கதை.

‘ஓட்டம்’ கதை உள்நாட்டில் புலம்பெயர்ந்த ஒரு விவசாயியின் அவலத்தைச் சொல்கிறது. ரசித்து ரசித்து விவசாயம் செய்து வாழ்ந்த குடும்பம் புலம்பெயர்கிறது. வந்த இடத்தில் வேறு வேலை கிடைக்காததால் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறான். மனைவியின் நகைகளை  அடகு வைத்து விவசாய செலவு செய்கிறான். அந்த பூமியும் சில ஆண்டுகள் போரின் காரணமாக விவசாயம் செய்யாமல் களையேறிகிடந்த பூமிதான். தினமும் பத்து மைல் தூரம் சைக்கிளில் சென்று நீர் பாய்ச்ச வேண்டும். உரம் போடவேண்டும். யூரியா, ரி.டி.எம், அமோனியா உரங்களை உரிய காலத்தில் போடமுடியாமல் தட்டழிகிறான். மருந்தும் கிடைப்பதில்லை. விலையும் பன்மடங்கு அதிகம். மருந்து அடிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. பல்வேறு நெருக்கடிகளில் செய்த விவசாயம் விளைச்சலைப் பாதிக்கிறது. பாதி விளைச்சலை மழையிலிருந்து காப்பாற்ற போராடுகிறான். அரைகுறையாக நெல்லைக் காப்பாற்றி சங்கத்திற்குக் கொண்டு சென்றால் வியாபார முடக்கத்தால் நெல்லை வாங்க மறுக்கிறான். தனியார் மில்லுக்கு ஓடினால் எழுநூறு ரூபாய்க்குச் செல்லும் மூட்டையை 400 ரூபாய்க்குக் கேட்கிறான். மில்காரர்கள் மூன்று மடங்கு நான்கு மடங்கு விலையில் மண்ணெண்னை வாங்கி ஓட்ட வேண்டியிருக்கிறது. அப்படியும் அரவை செய்து வைத்தாலும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு நெல்லை லாரியில் கொண்டுசெல்ல முடியாத நிலைமை முற்றுகிறது. விவசாயம் செய்த நெல்லை பல காரணங்களால் உரிய விலைக்கு விற்க முடியாமல் மழைவாடை அடித்ததால் பாதுகாத்து வைக்கவும் முடியாது, நகைக்கடனை மீட்டவும் முடியாது, சிக்கித் திணறுகின்றனர்.  மழை விழுந்ததும் மறுபடியும் விவசாயம் செய்ய முயல்கின்றனர். உள்நாட்டுப் போர் விவசாயிகளின் வாழ்வையும் விவசாயத்தையும் நாசமுற வைப்பதை ‘ஓட்டம்’ கதை பேசுகிறது.

வெளிநாட்டில் வாழும் மகளோ மகனோ இலங்கைக்கு வரும்போது அவர்களைப் பார்க்க பெற்றோர்கள் அவதியுற வேண்டியிருக்கிறது. ராணுவ சோதனைகளைப் பொருட்படுத்தாது படகிலோ, சேற்று வழியிலோ கடந்து போய் புழுக் கொடியலும் பினாட்டும் கொடுக்க தவிக்கிறது.  வவுனியாவிலிருந்து கொழும்பிற்குச் செல்வது பெரும் சவாலாக இருக்கிறது.  ராணுவத்தினரின் பல்வேறு சோதனைகளைத் தாண்டி சந்திக்கவும் செய்கின்றனர். (அக்காவிற்கு அன்பளிப்பு – செ. கணேசலிங்கம்).

தமிழர்களாக இருந்தும் மதம் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. போர்ச்சூழல் இணைந்து செயலாற்ற வேண்டியவர்களைப் பிரிக்கிறது. போராளி குழுவிற்கும் இசுலாமியருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு என்ன என்பது பற்றி குமார்மூர்த்தியின் ‘பயணம்’ கதை வெளிப்படையாகப் பேசவில்லை. ஊகத்திற்கு விட்டுவிடுகிறார். இசுலாமியர் மீது போராளி குழுக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை அவர்கள் சிங்களவர்களுக்குச் சாதகமாக இருப்பதாக எண்ணம் தோன்றியிருக்கலாம்.  அல்லது போராளி குழுவின் கை ஓங்கி இருந்த காலத்தில் நடந்த (தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற மனப்பான்மை) ஒரு வரலாற்றுப் பிழையாகவும் இருக்கலாம். சொந்த மண்ணிற்காகவும் மொழிக்காவும் மக்களுக்காகவும் சிறுபான்மையினர் (இசுலாம்) எவ்வளவு உழைப்பை நல்கியிருந்தாலும் அதிகார அரசியல் (போராளி குழு) பொருட்படுத்துவதில்லை. அங்கும் இனவாதம் தலைதூக்குகிறது.  சிறு பொடியன் துவக்கை தோளில் போட்டுக்கொண்டுவந்து பெரிய முசல்மானை ‘இன்னும் இடத்தை காலி செய்யவில்லையா’ என்று துரத்தமுடிகிறது. போராளி குழுவிற்குத் தன் தோப்பில் இடம் தந்து இயக்க வெளிப்பாடுகளுக்கு உதவிய இசுலாம் மார்க்கத்துப் பெரியவர் புலம் பெயர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாவதை ‘பயணம்’ கதை எடுத்துரைக்கிறது. உலகம் முழுக்க நிகழும் அதிகார அரசியலும் இம்மாதிரியானதுதான்.

1990-ல் காவிரி நதிநீர் பிரச்சனை ஏற்பட்டபோது கர்நாடகத்தில் வாழ்ந்த தமிழர்களை ‘தண்ணீரா கேட்கிற ஓடு தமிழ்நாட்டிற்கு’ என்று துரத்தியடித்த நிகழ்வை பேசுகிறது  சுப்ரபாரதிமணியனின் ‘எதிர்ப்பதியம்’ கதை. நீர் ஆதாரம் பிரச்சனைக்கு உள்ளாகும்போது மக்களிடம் பிரிவினை தலைதூக்குகிறது.  கர்நாடகத்திற்கு அறுபதாண்டுகளுக்கு முன் விவசாயக் கூலியாகச் சென்ற தமிழர்கள் உழைத்து முன்னேறி சிறிதளவு நிலம் வாங்கி காலூன்றுகின்றனர்.  முப்பது நாற்பதாண்டுகள் நிலத்தோடு வாழ்ந்த தமிழ் விவசாயக் குடும்பங்கள் உழைத்துப் பெற்ற நிலங்களையும் அவர்கள் கட்டிய கோயில்களையும் இழந்து தப்பியோடி வரநேர்கிறது. நெல் வயல்களைத் தீயிடுவதும், வீடுகளை சூறையாடுவதும், தமிழர்களை விரட்டியடிப்பதும் காவிரி பிரச்சனையை முன்வைத்து கர்நாடகத்தினர் செய்கின்றனர். உயிர்தப்பி தமிழகம் வந்த தமிழர்களை ‘அகதி’ என்று அழைக்கின்றனர். கர்நாடகத் தமிழ்விவசாயி தமிழ்நாட்டிலும் அந்நியனாக உணரப்படுவதை இக்கதை சொல்கிறது.

3

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்த பெண்கள் நிறவாதத்தாலும் ஆணாதிக்கத்தாலும் பாதிப்பிற்குள்ளாவதை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘நாலாம் உலகம்’ ‘றோஸா லஷ்சம்பர் வீதி’ கதைகள் முன்வைக்கின்றன.

ஊர்கூடி, உறவுகள் கூடி நடந்த திருமணங்கள் மறைகின்றன. மணப்பெண்ணை இங்கிருந்தே நிச்சயித்து அனுப்பி வைக்கின்றனர். தனியாக வந்த மணப்பெண்ணைப் பதிவுதிருமணம் செய்து பத்துப்பதினைந்து நண்பர்களுக்கு ஓட்டல் ஒன்றில் தேநீர் விருந்தளிப்பதாக முடிந்துவிடுகிறது. கிட்டத்தட்ட பெண் ஒரு நுகர்பொருளாக அனுப்பி வைக்கப்படுகிறாள். ரயிலில் பேருந்துகளில் வெள்ளையர்கள்போல கால்மேல் கால்போட்டோ வேறு வெளிப்பாடுகளிலோ அமராமல் அடக்கமாக அமர்வதிலே அகதிகளிடம் ஒரு தாழ்வுமனப்பான்மை வெளிப்படுதை இக்கதைகள் சுட்டுகின்றன. லண்டன் பெண்களிடம் காணப்படும் சுறுசுறுப்பு தமிழ்ப்பெண்களிடம் வெளிப்படுவதில்லை.

லண்டனில் இரண்டாவது தலைமுறையாக வாழும் ஒரு இந்திய குடும்பத்து மகனுக்கு இந்தியாவிலிருந்து மணமகளாக வருகிறாள் மீனா. அவனது மோகம் இரண்டு மூன்று மாதங்களில் வடிய அவளோடு வாழப் பிடிக்காமல் பிரிகிறான். அவளின் ஆதரவற்ற நிலைக்கு உதவ வந்த கணவனின் நண்பன் அவளை ஏமாற்றி இன்பம் துய்க்கிறான். அவன் பல நண்பர்களுக்கு இவளை விருந்தாக்குகிறான். கணவனுக்குப் பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு பிழைக்க வழி தெரியமால் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். கணவனுக்கு வேண்டியவர்கள் இவளை விபச்சாரி என அரசிற்கு எழுதுகின்றனர். விசாரணை தொடங்குகிறது. அவள் பெற்ற குழந்தையைப் பிரித்து அரசாங்கம் வளர்க்கவேண்டும் என்கின்றனர் இவர்கள். இந்த விசாரணை குறித்து வாக்குமூலம் பெறவந்த தேசாய் மீனாவை பண்பாட்டைக் கெடுக்க வந்தவள் என்கிறார். ‘உன்னைப்போல பெரிய மனிதர்கள்தாண்டா என்னை இந்த இழிவிற்கு ஆளாக்கியது. உன் கலாச்சாரத்தை பம்பாய், டெல்லி தெருக்களில் பாரு தெரியும்’ என்று திட்டுகிறாள். கணவன், அவனுடைய சுற்றம், விசாரணை செய்பவர்கள், பணக்கார ஆண்கள், எல்லோருக்கும் பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டி நரகத்தில் தள்ளுபவர்களாக இருப்பதை இக்கதை சொல்கிறது. லண்டன், அமெரிக்கா, பாரிஸ் மாப்பிள்ளையை நாடிவந்த இந்தியப் பெண்கள் ஏமாற்றப்பட்டு சீரழியும் உலகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலைநாட்டுக் கணவன் என்ற மோகம் குறைந்தபாடும் இல்லை. ஆண்களின் கைவசமாகிப்போன முதலாளித்துவம் பெண்களை இச்சை தீர்க்கும் வாயில்களாகப் பார்க்கும் பார்வையை இக்கதை திறக்கிறது.

ஜெர்மனியில் குடியேறிய ஈழத்தமிழர்களை ஜெர்மானியர்கள் தங்களுக்கு அடிமை வேலை செய்து பிழைக்க வந்த கூலிகளாகவும் மூளையற்ற மனிதர்களாகவும் நினைக்கின்றனர். உணவகங்களில், விடுதிகளில் சுத்தம் செய்யும் வேலைகளிலும் பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களை வீடுகளுக்கு கொண்டுபோய் போடும் வேலைகளையும் இரவு பகலும் பார்த்து பிழைப்பதற்கு வழிதேடிக்கொள்கின்றனர்.

பெரும்பாலும் இரவு ஒரு மணிக்கு விழித்து குளிரில் தமிழ்ப்பெண்களும் ஆண்களும் சைக்கிளில் வீடு வீடுக்கு செய்தித்தாள் போடும் வேலையைச் செய்கின்றனர். ‘றோஸா லஷ்சம்பர் வீதி’ கதையில் வரும் சுமதி குடிகாரகணவனோடும் மாமியாரின் கொடுமையோடும் வாழ்ந்து கொண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற செய்தித்தாள் போடுகிறாள். ஜெர்மனி மக்கள் நிம்மதியாகத் தூங்கும் நேரத்தில் குளிர்வாட்ட உயிரைப் பணயம் வைத்து தெருத்தெருவாக செய்தித்தாள் போடுகிறாள். அப்படிப் போடும்போது சில குடிகார ஜெர்மனிக்காரர்களும் ஆங்கிலேயர்களும் வழிமறித்து வம்பு செய்வதிலிருந்தும், இச்சையோடு இழுக்க முயற்சிப்பதிலிருந்தும் தப்பித்து இந்தத் தொழிலை இரவில் செய்யவேண்டியிருக்கிறது. அத்தோடு செய்தித்தாள் போடும் தமிழர்கள் கொடுக்கும் இம்சையிலிருந்தும் தப்பிக்கவேண்டியிருக்கிறது. ஜெர்மன்காரர்கள் அகதிகளாக வந்தவர்களை தொற்றுநோய்களையும் களவு கொலைகளையும் பரப்ப வந்தவர்களாக பிரச்சாரம் செய்கின்றனர். அகதிகளைப் பார்த்து துப்புவதையும், மோசமான வார்த்தைகளில் கேலி செய்வதையும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டிய சூழல் நிலவுவதை இக்கதை சொல்கிறது. கிழக்கு ஜெர்மனிகாரர்கள் உழைத்து முன்னேறும் அகதிகளை அடித்து துரத்துவதில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழலில் தமிழ்ப்பெண்கள் கூடுதலான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குடிகாரக்கணவனிடம் இருந்தும் பொய்புரட்டு செய்து திரியும் கணவனிடம் இருந்தும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகளுக்காக உழைக்கின்றனர். பிரிந்து வாழ்வதைச் சாதகமாக எடுத்துக்கொண்டு அகதிகளாக வந்த ஆண்கள் இச்சைக்குத் துரத்துகின்றனர். சிங்களவர்களிடமிருந்து தப்பித்து வெள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு சீரழிகின்றனர் சிலர். பாலியல் தொழிலாளிகளாகவும் மாறுகின்றனர்.

மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் ஈழத்திலிருந்து அக்காள், தங்கை தம்பி, அண்ணன் என அழைத்து வந்த அவர்களுக்கும் சேர்ந்து உழைக்க வேண்டியவர்களாகின்றனர். இதில் பெண்களுக்கு இரட்டைச்சுமை ஏற்படுகிறது. பகைமையையும் தேடிக்கொள்ள வேண்டியதாகிறது. வெள்ளைக்காரானுக்கும் – கணவனுக்கும் – தமிழனுக்கும் ஓடுங்கி வாழ நேர்கிறது. பெண்களும் சரி – ஆண்களும் சரி அகதிகளாக வந்து பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். அவமானங்கள், அநாதரவு நேரும் போதெல்லாம் சொந்த ஊர் சொர்க்கமாகத் தோன்றுகிறது.

  • தொடரும்…

பிற படைப்புகள்

Leave a Comment