கதிர்பாரதி கவிதைகள்

by olaichuvadi

 

தூது

வானத் தூதர்
அவன் கனவில் வந்தார்…

“நீ
இன்னும் ஏழே நாளில்
இறந்துவிடுவாய்.”

தவறுதலாக
முதல்நாளிலேயே
ஏழாம் நாள் வர
குழம்பிவிட்டது
மரணம்.

கடைசியாக வந்த
முதல் நாளில்
மீண்டும் கனவில் வந்தார் தூதுவர்…

“நீ
இன்னும் ஏழு நாள் மட்டும்
உயிரோடு இருப்பாய்.”

உண்டு களித்து
மென்று மிதந்து
காத்திருந்தான்.

அதன்பின்
அவனுக்குக் கனவு வரவில்லை.

ஈரம்

நதி குறித்து
தக்கையிடம் கேட்டறிவது
பிழை.

கரைகளிடம் கேட்பதும்
பிழையோ பிழை.

புனல் ஓடி கழிந்த பிறகு
ஊற்று மணல் சொல்லும்
நீரரவம்
வாழ்ந்த கதை.

கரையில் உடைவது
ஈமக் கலயம்.

நீரில் மிதக்கும்
மணமாலை.

அம்மா சிறுமி

மகளுக்கு
காத்திருக்கும் வேளை.

பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
அம்மா.

முன்னேறும்போது
சிறுமி
பின்னேறும்போது
அம்மா.

முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகள் கண்டதும்
பின்னேறி வந்து
பூமியில் நின்றுகொண்டாள்.

பழயதைப் புதிதாய் பெறுதல்

விதை
தலைக்குப்புற வீழ்ந்தது
ஆம்
தலைக்குப்புற.

மூச்சு திணறிவிடாமல் இருக்க
தண்ணீர் ஊட்டினேன்.

முண்டி முளைத்து உயிர் கட்டியது.

காற்றாக வீசினேன்
வெயில் ஈந்தேன்.

இலை காட்டி கிளை காட்டி
தலையாட்டியது.

மேனியெங்கும் பச்சைய வெளிச்சம்.

காலை எழுந்து காதலி முகத்தில் விழித்து
காதுக்குள் பேசி
அடடா
இதுவும் ஒரு காதல்தான்.

‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’ என்ற
தேய்வழக்கைப் பொலிவுறச் செய்தது செடி.

செடி கன்றாக
கன்று மரமாக
மரமெங்கும் தித்திக்க கனிகள் வந்தன.

ஒரு
கனி பிளந்த மையத்தில்
பழங்காதலே
உனை
புதிதாய்ப் பெற்றுக்கொண்டேன்
போதுமா?!

பழுதற்றக் கன்னி

நான்
மாபெரும் செல்வந்தன்.

என் நிலம் எல்லாம்
பொன் கொழிக்கும் பூமி.

அங்கே
ஒரு மடங்கு விதைகள்
ஈராயிரம் மடங்காய்ப் பெருகும்.

அதனாலே
ஆண்டுக்கு இருமுறை
சேமிப்புக் கிடங்குகளை இடித்து
அகலக் கட்டுகிறேன்.

அதன் விட்டத்தில்
ஊஞ்சலாடுகிறது வசந்தம்.

நானதன் தலைமுடிகளைச்
சிலுப்பி விளையாடுகிறேன்.

என் வழியாக ஓடி
என் வழியாக நுரைத்து
எனக்குள்ளேயே கலக்கும் நதியை
கடவுள் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

என்
ஒரு துளி வியர்வைக்கு ஈடாகாது
இச்சிறு பூமி.

பெருமூச்சு என்பதே
எனக்குக் கிடையாது.

என்
கை நீளும் திசையில்
அத்திசை நீளும்.

கை குறுகினால் திசையும் குறுகும்.

நான்
உலகின் முதலும் கடைசியுமான
சந்தோஷ மனிதன்.

ஆம்
அப்படித்தான் சொல்வேன்.

அது
எனக்குத் தகும்.

பழுதற்ற கன்னியே
ராக்கினியே
உன் பொருட்டு இவை எல்லாவற்றையும்
சிதறடிப்பேன்.

வெறுமையாவேன்
எனவே
முழுமையாவேன்.

சிறகு

பறவை
வானத்தில்தான்
கட்ட நினைக்கிறது
கூடு.

அதற்கெனவே
மரத்தில் ஒத்திகை பார்க்கிறது.

வானில் மட்டுமே நீரருந்தும்
சக்கரவாகத்துக்கு
அதன்
சிறகுகளே கூடானது
இப்படித்தான்.

பிற படைப்புகள்

Leave a Comment