அலை படகு
லாவண்யா சுந்தர்ராஜன்

by olaichuvadi


தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தது. கார் மேகங்கள் மங்களூரில் புலரியை ஒத்தி வைத்திருந்தது. தொடர்ந்து பொழிந்திருந்த மழையால் மரங்களும், செடி கொடிகளும் பசும் ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன. கவிந்திந்திருந்த சாம்பல் நிறக் காலை வெளிச்சத்திற்கு உயிரொளியூட்டுவது போல டோங்கர்கிரி வெங்கட்ரமணா கோவிலின் மெலிந்த வெண்மை நிற கோபுரம் நின்று கொண்டிருந்தது. உள்ளே உதய கால பூஜைக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. ஏ எஸ் ஆர் பைய்யி சாலையிலிருந்து திரும்பும் தெருக்குத்தில் அமைந்திருக்கும் அந்த கோவிலில் தீபாராதனை, நீலிமா குடியிருக்கும் வீட்டு வாசலுக்கு வந்தாலே தெரியும். எப்போதும் காலை உணவுக்குச் செல்லும் வழியில் அவசர கதிக்கு வெளியிலிருந்தே கும்பிட்டுக் கொண்டு செல்வது போல இன்றும் கும்பிடும் நொடி நேரத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்துக்குப் பயந்து ஸ்டியரிங்கை கெட்டியாகப் பிடித்தாள் நீலிமா. முகமூடியணிந்த அந்த இருசக்கர வாகனக்காரன் முகத்தில் கலவரமான கண்கள் மட்டுமே தெரிந்தது. அது பார்க்க ரஞ்சன் சார் கண்களைப் போலவே இருந்தது. அம்மா சொல்வது போல அவளுக்கு எந்நேரமும் ரஞ்சன் சாரின் நினைவுகள்தானோ? மங்களூர் சாலைகள் ஏடாகூடமானவை. டோங்கர்கிரி வெங்கடரமணா ஆலயத்தைக் கடந்து வலதுபுறம் திரும்பியவளுக்கு அலுவலக விருந்தினர் மாளிகைக்குச் செல்ல திரும்ப வேண்டிய சிறிய சந்து வந்ததும், நிதானித்து உள்ளே நுழைய நினைத்தாள். எதிரே 50 அடி தொலைவில் ஒலிப்பானை ஓயாது எழுப்பியபடி இன்னொரு வண்டி எதிரில் வந்ததும். பயத்தில் வியர்க்கத் தொடங்கியது. நேரமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் வண்டியைக் கொண்டு போய் வீட்டில் நிறுத்தி விட்டு இன்று ஆரம்பமே சரியில்லையே என்று விருந்தினர் மாளிகைக்கு நடக்கத் தொடங்கினாள்.

இரவு பகலென்று மாறி மாறி வரும் பணி நேரங்கள் கொடுக்கும் அலுப்புக்கு, விருந்தினர் மாளிகையில் சாப்பாடு கிடைத்து விடுவது கொஞ்சம் நிம்மதி. “இப்ப இப்படி பழகிட்டா நாளைக்கு குடும்பம்ன்னு ஆகும் போது கஷ்டம்” என்ற அம்மாவின் குரல் அடிக்கடி கேட்டு அவளைத் தொந்தரவு செய்தது. தற்சமயம் வெளியில் உணவு வாங்க அலுவலகமே தடை செய்திருந்தது. மேலும் இந்தக் காலகட்டத்தில் உணவினை அலுவலகத்திலோ அல்லது விருந்தினர் மாளிகையிலோ உண்ணச் சொல்லிப் பரிந்துரைத்திருந்தது. காய்கறிகள் பிற உணவுப் பொருட்கள் வாங்குமிடத்திலிருந்து தொற்று ஒருவருக்குப் பரவினாலும் மொத்த முனையமும் மூடிவிட வாய்ப்புகள் அதிகம் என்று மிகக் கடுமையான விதிமுறைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் திருமணமாகாத பணியாளர்களுக்கு அது கிட்டத்தட்ட உத்தரவு போல என்பதால், அம்மாவின் கவலையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று நீலிமா விருந்தினர் மாளிகையிலேயே சாப்பிட்டாள். ஆனால் சமீபமாகவே அந்த மாளிகைக்குச் செல்வதில் கொஞ்சம் ஒவ்வாமை அவளுக்கு இருந்தது. ரஞ்சன் சார் மாற்றலாகி வந்ததிலிருந்து அங்கே செல்வதற்குப் பிடிக்கவில்லை.

மழையில் ஊறிப் பசுமை படர்ந்திருக்கும் சுவர்களைப் பார்த்துக் கொண்டே மெல்ல விசிலடித்தபடி நடந்தாள். விருந்தினர் மாளிகை போகும் வழி முழுவதும் கையில் குடை மட்டுமிருந்தால் போதும் மழையால் பூரித்துக் கிடக்கும் விதவிதமான மரங்களையும், மலர்களையும் ஒருசேர ரசித்துக் கொண்டே நடக்கலாம். ஆனால் கார் வாங்கிய பின்னர் அந்த மகிழ்ச்சி போய்விட்டது. வண்டி வாங்கும் முன்னர் ஓட்டுநர் உரிமம் எடுக்கப் படித்திருந்தது எதுவுமே இந்த குறுகலான சாலைக்குள் வண்டியை ஓட்டி எடுக்கப் போதுமானதாக இல்லை. இந்தக் குறுக்கு சாலையை விட்டால் கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு வரவேண்டும். பாதி வழிதான் நடந்திருப்பாள், அதற்குள் மழை பிடித்துக் கொண்டது. வண்டியை விட்டுவிட்டு வந்த அவசரத்தில் குடையை மறந்திருந்தாள். ஒரு நிமிடம் தயங்கி எக்ஸ்போர்ட் பி யூ கல்லூரி முன்னர் மழைக்கு ஒதுங்கி நிற்கலாம் என்று நினைத்து நின்றாள். நனைவதைப் பொருட்படுத்த நேரம் அனுமதிக்காததால் மழையிலேயே ஓடினாள். திருச்சியில் இந்த அளவுக்கு தொடர் மழையை அவள் ஒருபோதும் பார்த்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களாக பருவ காலத்துத் தொடர் மழையைப் பார்த்ததால், அன்றாடத்தைக் குழைக்கும் இம்மழை மீது கோபமும் வந்தது.

விருந்தினர் மாளிகைக்கு அருகே சுவர் மேலே வளர்ந்திருந்த வெள்ளைப் பூசணிக் கொடியில் ஆடும் பூக்கள் தன்னைப் பார்த்துத் தலையாட்டிச் சிரிப்பதாக அவளுக்குத் தோன்றியது. மழையில் நனைந்து வசீகரமாய்த் தெரிந்த அந்தப் பூக்களைப் பார்த்த பின்னர் நீலிமாவுக்கு அதுவரையிருந்த படபடப்பு குறைந்து கொஞ்சம் ஆசுவாசம் வந்தது. ஏற்கனவே பீரிதம், ராஜேஷ் எல்லோரும் வந்திருந்தனர். “என்ன நீலிமா காரெடுத்துட்டு வர்ல, நனைசிட்டீங்க போல” என்று கேட்ட கேள்விக்கு தலையாட்டிக் கொண்டே நடந்தாள். பீரிதம், ஹரீஸ், கோவிந்த் மூவருமே நீலிமா இருக்கும் வீட்டருகே அலுவலகமே வாடகைக்கு எடுத்து கொடுத்திருக்கும் அடுக்ககத்தில் இருந்தார்கள். அலுவலகம் கொடுக்கும் வீடு வேண்டுமா, வெளியில் வீடு எடுத்துக் கொள்கின்றார்களா என்று அலுவலகம் வந்து சேர்ந்த நாளில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் நீலிமா தெளிவாக வெளியில் என்று படிவத்தை நிரப்பிக் கொடுத்திருந்தாள். தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்தில் பணியிடம் என்ற பணிநியமன உத்தரவு வந்த உடனேயே அப்பாடா என்று பெருமூச்செரிந்தபடி சமயபுரம் மாரியம்மனுக்கு பூப்பாவாடை சாத்தி நேர்த்திக்கடனை செலுத்தினாள்.

முதல் நாள் அலுவலகத்துக்கு மூன்று சக்கர வாகனத்தில் வந்த போது நிறுவன நுழைவாயிலுக்கு மேல் அனுமதிக்கப்படாததால் மிச்ச தூரத்தை நடத்து அலுவலகப் பகுதியை அடைவதற்குள் பாதி உடல் எடை குறைந்து விட்டது போல் சோர்வாக உணர்ந்தாள். ஆகவே அலுவகத்துக்குப் போக வர உதவியாக இருக்குமென்று உடன் பணிபுரிந்த பீரிதம் வசித்த அடுக்கத்துக்கு அருகிலேயே வீடு பார்த்திருந்தாள். பீரிதம், ராஜேஷ், வசந்த், கோவிந்த் எல்லோருமே வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள். வேறு மொழி பேசுபவர்கள். கோவிந்த் மட்டும் தமிழ் பேசுவான். பாண்டிச்சேரியைச் சார்ந்தவன். இவர்கள் யாருக்கும் திருச்சியின் வாசனை கூட தெரியாது. ஆனால் ரஞ்சன் சார் கிராமம் திருச்சியிலிருந்து பத்தே கிலோ மீட்டர் தொலைவுதான். மூவரும் பேசாமல் சாப்பிடக் காத்திருந்தார்கள். மூவருக்கும் சத்யா பரிமாறிக் கொண்டிருந்தான். தினகரன் வழக்கம் போல ரஞ்சன் சார் அறையை சுத்தம் செய்து முடித்து விட்டுப் பிற இடங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

சாப்பாட்டு மேசையின் மேல் இருந்த கண்ணாடி வசீகரமான கருப்பு நிறத்திலிருந்தது. அதன் கால்கள் தேக்கு மரத்தில் செய்து பளபளப்பைக் கூட்ட வார்னிஷ் அடித்திருந்தார்கள். அந்தக் கண்ணாடியின் விளிம்புகள் அலங்காரமாய் சிறு சிறு மலரிதழ்கள் போல வளைந்திருந்தன. கருப்புக் கண்ணாடியில் வெண்மையான அவள் முகம் பளீரெனத் தெரிந்தது. மேசை மேல் வைக்கப்பட்டிருந்த கிண்ணங்கள் தலைகீழாகத் தெரிந்தது. அதன் ஊடாக இடையிடையே அசைந்த தென்னங்கீற்றுகளை ஆழ்ந்து பார்த்தால் இரவில் குளத்தில் நிலா வெளிச்சத்தில் தெரியும் தென்னைமரப் பிம்பங்கள் போலிருந்தது. உணவு மேசையருகே திறந்திருந்த ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று முகத்தை மெல்ல வருடியது. “என்ன நீலிமா ஊருக்கு போயிருந்தீங்களா சொல்லியிருந்தா நான் அம்மாவுக்கு இங்கிருந்து எதுநா குடுத்து விட்டுருப்பேனே” என்று சொல்லியபடி வந்து அவர்களுடன் இணைந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார் ரஞ்சன் சார். திடுக்கிட்டுத் திரும்பியதில் அவளுக்குக் கொஞ்சம் புரையேறியது, அருகிலிருந்த தண்ணீரை எடுத்தாள் நீலிமா. தட்டிலிருந்த அடையின் துண்டமும் அவியலும் கீழே சிந்தியது “தினகரன் அடை கீழே விழுந்துடுச்சி பாருங்க இங்கே கொஞ்சம் சுத்தம் பண்ணிடறீங்களா” என்றாள். அவசர அவசரமாய் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து விரைந்து நகர்ந்தாள். “சார் நான் போய் காரெடுத்துட்டு ஆபிஸ் வரனும், நேரமாச்சு கிளம்பறேன், ஆபீஸ்ல உங்கள வந்து பார்க்கறேன். பை பீரிதம், ராஜேஷ்” என்று வேகமாய் கிளம்பினாள். வீட்டுக்கு வந்து வண்டியை எடுத்துக் கொண்டு சென்ற போதே இன்று எதோ விபரீதம் நடக்க இருக்கிறதென்று தோன்றியது. ‘என்றெல்லாம் ரஞ்சன் சார் வாயில் விழுகிறேனோ அன்று நாள் முழுவதும் ஏடாகூடமாகிறது’, என்று நினைத்தாள்.

அப்படித்தான் அன்று நீலிமா வண்டி வாங்கிய இரண்டாம் நாள் “என்னப்பா சொல்லாம கொள்ளாம கார் எல்லாம் வாங்கிட்டீங்க பராவாயில்ல ஆனா ஒரே ஊர்க்காரர்ன்னு ஒரு மரியாதைக்காவது ட்ரீட்டுக்கு கூப்பிட்டிருக்கலாமே? க்ரூப்பா ட்ரீட்டுக்கு போனீங்க தானே… எனக்கு தகவல் வந்துடுச்சி” என்று சொன்னார். அன்று சாயங்காலமே வண்டியைத் திரும்பக் கூடாத இடத்தில் திருப்பி முதல் கோடு விழுந்தது. அன்றிரவு முழுக்க அவளுக்கு தூக்கமே வரவில்லை. கடந்த வாரம் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள் “திருச்சின்னா எங்க ஶ்ரீரங்கமா திருவானைக்காவலா?” என்று கேட்ட அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மறுநாள் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தூங்காமல் அலுவலகம் போனால் சரி வராது என்று அன்றைக்கும் சேர்த்து விடுப்பு எடுத்து விட்டு மாலையில் மங்களூர் சென்ட்ரலிலிருந்து திருச்சிக்கு கிளம்பிப் போகும் வரை ‘திருச்சியில் எங்கே’, என்று ரஞ்சன் கேட்டதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். ஒரே ஊர்க்காரர் ஒரே ஊர்க்காரர் என்று அடிக்கடி சொல்லிக் காட்டுவது அவளுக்குச் சகிக்க முடியாமல் இருந்தது. எப்படியாவது விருந்தினர் மாளிகைக்குப் போய் உணவுண்பதைத் தவிர்க்க வேண்டும். அதை அவளே தவிர்த்தால் சரிவருமா? இது நாள் வரை இந்த பசங்களோடேயே போய் சாப்பிட்டு இருந்தவள் திடீரென என்ன காரணம் சொல்லி அங்கே சாப்பிடப் போவதைத் தவிர்ப்பது? மேலும் இப்போது இருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் அங்கே போகாமல் எப்படி சமாளிப்பது? குழப்பம் தீராமல் வீடடைந்தவள் வண்டியை மெல்லக் கிளப்பி நவபாரத சர்கிள் வழியாக கே.எஸ்.ஆர் சாலையை அடைந்ததும் வாகன நெரிசலில் ரஞ்சன் சார் சொன்னது மறந்து போனது.

நேத்தராவதி ஆறு சேறு கலந்த இளங்காவி நிறத்தில் கடலடையும் ஆவேசத்தோடு ஓடிக் கொண்டிருந்தது. கருடன் ஒன்று வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து கன்னத்திலிட்டுக் கொண்டாள். வல்லூறுகள் ஆங்காங்கேயிருந்த பாதாம் மரக்கிளைகளில் அமர்ந்திருந்தன, அதிலொன்று மீனைக் கொத்தி உண்டு கொண்டிருந்ததை முகம் சுளித்துப் பார்த்தபடி வண்டியின் கண்ணாடியை உயர்த்தினாள். நேத்தராவதியை மீன் வாடையின்றி என்றுமே கடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டே நேத்தராவதி பாலத்தைக் கடந்து அலுவலகம் அடைந்ததும் அடர் சிவப்பாய் பூத்திருந்த கல்வாழையும், பிற அலங்காரச் செடிகளும் அவளை வழக்கம் போல வரவேற்றன. விசிறி போல விரிந்திருந்த ஈரப்பலா மரத்தின் இலைகள் அப்போது பொழிந்திருந்த மழையைத் தம் உடலிலிருந்து உகுத்துக் கொண்டிருந்தன.

அலுவலக அறையை அடைந்து மடல்களைத் திறந்து பார்த்ததும் இரவிலிருந்து பதினாறு மடல்கள் அவளுக்கு அனுப்பப்பட்டிருந்தது தெரிந்தது. வீட்டுக்கு நேற்று சீக்கிரம் போய் விட்டதும் அதன் பிறகு மடல்கள் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்க்காததும் நினைவுக்கு வந்தது. ஹரீஸ் பரபரப்பாக வந்தான். “நேற்றே சொன்னேன் அல்லவா என்ன பார்த்தீங்க, ஆட்டோமேசன் ஸ்கிரிப்ட்ல ஏதோ பிரச்சனை, டிவைஸ் பை பாஸ் பண்ணி ஃபூயல் பம்ப் செய்ய வேண்டியிருந்தது. நான் இதற்காக நைட் அனுப்பிய கன்ட்டினியூட்டி, மெயிலாவது பார்த்திருக்கலாமில்லயா? இப்படி இனி ஒரு டைம் அசட்டையா இருந்துட வேண்டாம்” என்ற உடன் அவளுக்குப் பதற்றம் ஏற்பட்டது. நேற்று கிளம்பும் முன் எல்லாம் சரியாகத் தானே இருந்தது. எல்லா விளக்கும் பச்சையாய் தானே இருந்தது. குழாய்கள் சீராக இயங்கிக் கொண்டு தானே இருந்தது. எல்லா நிலைத்தகவல்களும் சரியாக ஆரோக்கியமாகத் தானே இருந்தன. “நான் பார்த்துட்டுத் தான் கிளம்பினேன், எல்லா ஸ்டேட்டஸும் ஹெல்தியாத் தான் இருந்ததுன” என்று நீலிமா சொன்னதைக் கேட்கும் மனநிலையில் ஹரீஸ் இல்லை. ‘இன்று காலையில கிளம்பும் போதே நினைச்சேன் கூட இந்த ரஞ்சன் சார் வேற’, என்று இன்னுமும் அவளுக்கு ரஞ்சன் மேல் அதிகம் கோபம் வந்தது.

ரஞ்சன் சார் மாற்றலாகி வரும் முன்னரே கோவிந்த் “நம்ம டிரன்சிட்டுக்கு உங்க ஊர்க்காரர் வராராம்” என்று சொன்ன தினமே கொஞ்சம் திகிலாக இருந்தது. அதுவும் மண்ணச்சநல்லூர்க்காரர் என்று கேள்விப்பட்டதுமே கையைப் பிசையத் தொடங்கினாள். தினம் அம்மாவிடம் பலவற்றைப் புலம்புவது போல இதையும் புலம்பிய போது “நீ எதுக்கெடுத்தாலும் பயந்து சாகாத. நம்ம ஊர்க்காரங்கன்னா என்ன ஆயிடும், ஊர்க்காரங்க உடனே விசாரிச்சி வீட்டுக்கா வரப் போறாங்க. ஒன்னும் கவலப்படாத” என்று நீலிமாவின் அம்மா சொல்லியும் நீலிமாவால் நிதானமாக இருக்க முடியவில்லை. கோவிந்த் கூட, இன்னொரு தமிழ்க்காரர் வந்துவிட்ட சந்தோஷத்திலிருந்தான். ரஞ்சன் வந்த அன்று நீலிமா சாப்பிடப் போகவில்லை. அலுவலகத்திலிருந்து கொஞ்சம் வேலை நேரம் முடியும் முன்னரே வந்தவள், சந்திரகாந்திடம் மறுநாளிலிருந்து சாப்பாடு பீரிதமிடம் கொடுத்துவிடும்படி சொல்லிவிட்டுப் போனாள்.

நான்கு நாள் கழித்து அவள் பணியிடத்துக்கே கோவிந்த், ரஞ்சன் சாரை கூட்டிக் கொண்டு வந்தான். “சார் உங்க ஊர்க்காரர் தான், நான் தான் வாங்க உங்க ஊர்க்காரப் பொண்ணே இருக்காங்கன்னு கூட்டிட்டு வந்தேன்” என்றான். வேறுவழியில்லாமல் சிரித்து வைத்தாள். சரியாக முகம் கொடுத்துப் பேசாமல் வேலையில் மூழ்கியிருப்பது போலப் பாவனை செய்து கொண்டிருந்தாள். ரஞ்சன் சாருக்கு அது என்னவோ போலிருந்திருக்க வேண்டும். கோவிந்த் மிகவும் அவரோடு ஈஷிக் கொண்டிருந்ததோடு மட்டுமில்லாமல் “என்ன நீலிமா இந்த பசங்க கிட்ட வாய் நிறைய தமிழ்ல பேச முடியுதான்னு வருத்தப்படுவீங்க. உங்க ஊர்க்காரரே வந்திருக்கார் ஒன்னும் பேச மாட்டேன்கிறீங்க” என்றான். ‘என்னடா இது வம்பாம்பா போச்சு’, என்று நினைத்தவள், மறுபடியும் ஏதோ பரபரப்பாக வேலையைப் பார்ப்பது போல “பீரிதம் கப்பலுக்கு இப்பத் தான் கிளம்பினான், பம்ப்பிங் ஸ்டேட்டஸ் எல்லாம் அப் பண்ணனும். அதான்” என்றாள். ஆனால் அதெல்லாம் செய்ய இன்னும் இரண்டு மணி நேரம் தாராளமாக இருந்தது.

ரஞ்சன் சாரோடு கோவிந்த் நுழையும் முதல் நொடிவரை இணையத்தில் செயற்கைக் காதணி வாங்க இணைய அங்காடிகளை மேய்ந்து கொண்டிருந்த பக்கத்தை மூட மறந்திருந்தாள். அதையே உற்று நோக்கிய ரஞ்சனின் கண்கள் கொஞ்சம் சுருங்கியது. முகத்தில் கடுமை கூடியது. “கோவிந்த் நாம சாயுங்காலம் டியூட்டி முடிஞ்சி வந்திருக்கனும்” என்று சொல்லியபடி நகர்ந்தார். அன்றிலிருந்தே அவர் நீலிமாவை ஏதாவது வம்புக்கு இழுப்பது போலவே இருந்தது அவளுக்கு. எதையெடுத்தாலும் நோட்டம் பார்ப்பது போல குதர்க்கமாகப் பேசுவது போலவே இருந்தது.

அப்படித்தான் ஒருமுறை புதிதாக வந்திருந்த விருந்தாளி ஒருவர் சாப்பிடும் போது முட்டைப் பொரியல் கேட்டார். சந்திரகாந்த் விறுவிறுவென்று சென்று முட்டையை அடித்துக் கலக்கத் தொடங்கியது அதனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே மென்று முழுங்கிக் கொண்டிருந்த அவளையும், அவள் அமர்ந்திருந்த விதத்தையும், கைகள் தோசையைப் பிட்டுக் கொண்டிருந்த போக்கையும் கண்ட ரஞ்சன் “நீங்க என்ன வெஜிடேரியனா?” என்று கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல் மையமாய் தலையாட்டி வைத்தாள். அதை ஆழ்ந்து பார்த்த ரஞ்சன் முகத்தில் தெரிந்த ஆழமான சிந்தனை அவளுக்குள் கலவரத்தைக் கூட்டியது. எதையும் காட்டிக் கொள்ளாமல் சாந்தமாக இருப்பது போல முகத்தை வைத்துக் கொண்டாள். “சந்திரகாந்த் இனிமே நீலிமா மேடம் வரும் போது முட்டை உடச்சி ஊத்தாதீங்க” என்றார். அந்த அறையில் ஆழ்ந்த அமைதி உண்டானது. தொலைவில் கேட்ட இருட்டுப்பூச்சிகளில் சத்தம் துல்லியமாகக் கேட்டது. அங்கே அவளால் அதற்கும் மேலே ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. வெளியில் வந்ததும் பீரிதம் “என்ன நீலிமா ஆழ்ந்த சிந்தனை” என்று ஆங்கிலத்தில் கேட்டான் அதற்கு ‘ஒன்றுமில்லை’, என்று தான் பதில் சொன்னாள். கொட்ரோலி பகவதி கோவிலிருந்து டோங்கர்கிரி பகுதிக்குச் செல்லும் குறுகிய பாதையில் இரவின் இருளில் வண்டியில் ஒளிவெள்ளம் பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்த சுவரில் மழைக்கு வளர்ந்திருந்த பாசியும் பசும்புல்லும் பார்க்க இப்போது பயங்கரமாக இருந்தன.

முதல் நாள் இரவு நடந்த குளறுபடிக்கு ஏதேனும் செய்து சரி கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தவளின் கவனம் வேலையிலும் நேற்று நடந்த விஷயங்களுக்கு விளக்கம் கொடுப்பதிலுமே பகலின் பாதி பொழுது கழிந்து விட்டது. மதியச் சாப்பாடு முடிந்து, சிறிய நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றார்கள் நீலிமாவும் பீரிதமும். அந்த நடைபாதை முழுவதுமே பல வித மரங்கள் நிறைந்து காணப்படும். பெரிய பெரிய பன்னீர் புஷ்பங்கள் உதிர்ந்து கிடந்தன. அதன் வாசனையை வைத்து மட்டுமே அந்தப் பூக்களைப் பன்னீர் புஷ்பங்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு பெரிய மலர்கள். இங்கே மழைக்காலத்தில் மலரும் பூக்கள் எல்லாமே வழக்கத்துக்கு அதிகமான பொலிவோடும் புஷ்டியோடுமிருந்தன. அவர்கள் நடக்கக் காத்திருந்தது போலவே ஒவ்வொரு மரமும் பூக்களையும் தேக்கி வைத்திருந்த மழைத்துளிகளையும் தங்களிடமிருந்து இறக்கி விட்டுக் கொண்டிருந்தன. பொன் கொன்றை மரத்தருகே சென்றவள் “மழை பெய்யலைன்னாலும் நாம குடை எடுத்துட்டு வரனும் போல” என்று ஆங்கிலத்தில் சொன்னாள். பீரிதம் சிரித்துக் கொண்டான். தூரத்தில் கோவிந்த், ரஞ்சன் வருவது போலத் தெரிந்த உடனே “பீரிதம் வா நாம் போகலாம், மழை வந்துவிடும் போலிருக்கிறது” என்று அவசரமாய் தனது அலுவல் பகுதிக்கு விரைந்து செல்லத் தொடங்கினாள் நீலிமா. “வழக்கமா நடக்கும் அளவுக்கு இன்று நடக்கவில்லையே” என்று சொன்னதைக் காதில் வாங்காதவள் போல வேகமாய் தனது அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ரஞ்சன் சார் கண்டிப்பாக அவரைப் பார்த்த உடன் தான் அவள் வேகமாய் சென்று விட்டாள் என்பதைக் கண்டுபிடித்துவிடுவார். அதையும் பிறர் அறியச் சொல்லியும் விடுவார். இப்படித் தான் அவர் குடும்பம் வர இருப்பதால் தங்க அறை வேண்டுமென்று கேட்ட மறுநாள் நீலிமா தன் அப்பாவை வர சொன்னதைக் கூட “எங்க அம்மா வந்தா தங்கறதுக்கு விடக்கூடாதுன்னு உங்க அப்பாவை வர சொல்லிட்டீங்களான்னு” சிரித்துக் கொண்டே விளையாட்டாய் கேட்டுவிட்டார். அதையே அன்று அவள் தன் அப்பாவிடம் சொன்ன போது அவர் ‘விளையாட்டுக்குச் சொல்லியிருப்பார் … நீ ஏன் எல்லா விஷயங்களையும் சந்தேகத்தோடு பார்த்து மனதை அலட்டிக் கொள்கிறாய்’, என்றார். ஒருவேளை அம்மாவும் அப்பாவும் சொல்வது போலச் சாதாரணமாய் விளையாட்டாய் தான் சொல்கிறாரே அவர் தான் தான் அதிகமாய் பயப்படுகிறேனோ என்று நினைத்தாள் நீலிமா. ஆனால் அவள் உள் உணர்வு இவர் ஏதோ ஆராய்கிறார் என்றே சொல்லியது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் முதல் நாள் தவறவிட்டு விட்டப் பணி சார்ந்த பல விளக்கங்கள் மற்றும் அழைப்புகளை நீலிமாவால் தவிர்க்க முடியவில்லை. காலையில் எதிரே வந்த ஸ்கூட்டர்க்காரனை மறுபடி நினைத்துப் பார்த்தாள். அவன் மட்டும் வராமல் இருந்திருந்தால், காலையில் இன்னும் விரைவிலேயே சென்று உணவருந்தி வந்திருக்கலாம். அறை சுத்தமாகும் வரை ரஞ்சன் சார் உணவு மேசையருகே வரமாட்டார். அதற்குள் தினமும் சாப்பிட்டுக் கிளம்பிவிடுவதை போலக் கிளம்பியிருக்கலாம். ரஞ்சன் சார் வாயில் விழாமல் இருந்திருக்கலாம். மறுபடி மறுபடி இதே நினைவு தான் வந்து வந்து போனது. எண்ணெய் சேமிப்புக் கலன் ஒன்றில் ஏறி அதன் வால்வுகளின் நிலை சார்ந்த அறிக்கையெடுக்கத் தனது அறையை விட்டு வெளியே வந்தாள். ராட்சச எண்ணெய் சேமிப்புக் கலனில் சுழன்று ஏறிய மெல்லிய படிக்கட்டுகளில் மெல்ல ஏறினாள். சூரியனின் ஒளி கண்களைக் கலங்கடித்தது. கருப்புக் கண்ணாடியை மறந்துவிட்டு வந்திருந்ததால் கண்களில் நீர் வழிந்தது. மழைக்காலம் என்பதால் கொஞ்சம் பரவாயில்லை, வெப்ப நாட்களில் இந்த கலன்களில் ஏறி இறங்குவதற்குள் மூச்சடைத்துப் போகும். அங்கிருந்து பார்க்கப் பெருங்கடல் வெளிர் நீலமாய் நீண்டிருந்தது. செயற்கையாக ஆழப்படுத்தப்பட்ட பகுதியில் அலைகளின் பரபரப்பு எதுவுமில்லை. ஆனால் நீரில் கப்பல்கள் அவள் மனதைப் போலத் ததும்பிக் கிடந்தன. மிதக்கும் கப்பலை என்றுமே ஆற்றுப்படுத்த முடிவதில்லை என்று நினைத்துக் கொண்டாள்.

கப்பல்களை இணைக்கும் தரைதளங்கள் போலிருந்த பகுதியும் மிதவையாய் திரிந்து கொண்டிருந்தது. அதன் வழியே நிறுவனத்துக்கு வந்து சேரும் பெரிய பெரிய குழாய்களில் தடதடவென ஓடிவரும் எண்ணெய், கடல் இசைக்கும் ரம்மியமான ராகத்தை இடையறுத்துக் கொண்டிருந்தது. வெளியில் பார்த்த போது கடற்கரையில் தளும்பி நின்ற படகொன்றில் மயில்கள் அமர்ந்திருந்தது தெரிந்தது. படகு நுனியில் அமர்ந்திருந்த அந்த மயிலின் தோகை பரவிக் கடல் வரை மிதந்து கொண்டிருந்தது. இன்னொரு மயில் படகிலிருந்து தரைதள மிதவைகளில் மேலிருந்த குழாய் அமைப்புக்கும் செல்ல எட்டிப்பார்ப்பதும் அங்கே அந்தக் குழாய் ஏற்படுத்தும் ஒவ்வொரு ஓசைக்கும் பயந்து படகின் அடுத்த முனைவரை நடப்பதுமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அந்தச் சத்தம் நின்று விடாதா என்று பார்ப்பதும் ஏமாற்றமடைந்து திரும்புவதுமாக இருந்தது. எண்ணெய் ஓடும் வேகத்திற்கு ஏற்ப அந்த எண்ணெய் குழாய்கள் சிறு அலைகள் போல எழும்பி எழும்பி விழுந்தன. மிதவையும் அதே வேகத்தில் அதிர்ந்தது. அசையும் நகரும் நிலை மாறும் மிதவையையும், எண்ணெய் குழாயையும் பதற்றமாக அந்த மயில் உணர்வதை அவள் பார்த்தாள். பீரிதம் சில சமயம் மயில்களுக்கு ஏதேனும் தானியம் எடுத்து கொண்டு போய் போடுவான். அந்தக் குழாய்களே மலைப்பாம்புகள் போன்ற வடிவம் கொண்டவை. அந்த மயில்கள் குழாய்களையோ அதன் மேலுள்ள சுருள் வளைவுகளைப் பாம்புகள் போல் எண்ணிக் கொத்திப் பார்க்கக் காத்திருக்கின்றனவோ என்று சொல்வான் பீரிதம். பாம்புகளைத் தேடி மயில்கள் திரியுமிடம் நிலத்திலிருந்து கடலுக்கு எப்போது மாறியது என்று நீலிமா கிண்டல் செய்வாள். ஆனால் தற்சமயம் அந்த மயில்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. உணவின் பொருட்டு இடம் மாறும் ஒவ்வொரு உயிருக்கும் எத்தனையோ பயங்கள். எண்ணெய் சேமிப்பு கலன்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொண்டு இறங்கி வரும் போது கிட்டதட்ட மாலை தேநீர் நேரம் நெருங்கியிருந்தது. தேநீர் குடிக்க நிறுவனத்துக்குள் நடத்தப்படும் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்லாமல், இருக்கைக்கே தருவித்து அதனை மெல்ல உறிஞ்சிக் கொண்டே எல்லா தகவல்களையும் அனுப்ப வேண்டிய அறிக்கை வடிவத்தில் தகவல்களை மாற்றிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் வேறு விவாதங்களில் விரயமானதால் தினப்படி பதிவு செய்யவேண்டிய விஷயங்கள் சாயங்காலம் வேலை நேரம் தாண்டியும் நீடித்தது.

இரவு உணவுக்கு நேராக விருந்தினர் மாளிகை வரும் போது கொடியபெல் பகவதி கோவிலின் இரவு பூசைக்கான மணி ஒலித்தது. மங்கல ஆரத்தி எத்தனை முறை தரிசித்தாலும் மறுபடி மறுபடி ஈர்க்கும், மறுநாள் வரலட்சுமி பூஜை வேறு ஆகவே கூட்டம் அலைமோதியது. இந்தத் தொற்று காலத்திலும் மக்களுக்குத் தெய்வபக்தி மட்டும் குறையவே இல்லை என்று நினைத்துக் கொண்டாள். அம்மா ஊரிலிருந்து வரலட்சுமி நோன்பு சரடு கொடுத்திருந்தாள். சிறு சிறு செண்டுகளாகக் கட்டப்பட்ட சம்பங்கி, வாடாமல்லி இலைகள், வாடாமல்லி பூ கொண்ட மலர் கொத்தினைத் தலையில் சூடிக் கொண்டாள் நீலிமா. மங்களூரில் வரலஷ்மி நோன்பு மிக விசேஷம், வரலட்சுமி விரதம் மட்டுமல்ல எல்லா திருவிழாக்களும் இங்கே திருமண நிகழ்வு போல விமரிசையாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும். துரத்தப்பட்டவர்களின் அடையாளம் வீறுகொண்டு எழுந்த இடம் மங்களூர், ஆனந்த் சார் அதைப் பற்றி அடிக்கடி சொல்வார். கோவாவில் போர்ச்சுகீஸ் வந்திறங்கி தனது காலணியைத் தொடங்கிய போது அங்கிருந்த பிராமணர்கள் மதம் மாற வேண்டிய வற்புறுத்தல்களிலிருந்து தப்பிக்க ஓடி வந்து அடைக்கலமான இடம் மங்களூர். இங்கிருக்கும் மலையாளிகள் பலர் அசல் மலையாளிகள் இல்லை கொங்கனிகள் என்பார் அவர். ஆனந்த் சார் கதை சொல்ல ஆரம்பித்தால் ஒருமணி நேரத்துக்குக் குறையாமல் சொல்வார். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சரித்திரம் இன்றைய வாழ்க்கையிலும் ஊடுபிரதியாகப் பாவுவதை யோசிக்க ஆச்சரியமாக இருக்கும். ஒருவிதத்தில் அந்நியப்பட்டவர்களின் நிலம் மங்களூர். ‘தானும் தன் அடையாளம் தொலைத்து வந்ததால் இந்த இடம் தனக்கும் அடைக்கலம் கொடுத்திருக்கிறதோ’, என யோசிப்பாள் நீலிமா. கோவிலில் வயதான ஒருவர் கண்கலங்கி நின்று கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள்.

அம்மாவுக்கு எல்லா வழிபாடும் வருடம் தவறாமல் நடைபெற வேண்டும், விட்டால் ஒரு வருஷம் காத்திருக்கனும் அதுவரை அய்யோ முறைப்படி அன்னிக்கி பூஜை செய்யாம விட்டமே அது தான் இப்படி ஏடாகூடமாகுதோன்னு ஒவ்வொன்னுக்கும் தோணும் என்பாள். அதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தவள் எல்லா பூஜைகளையும் வீட்டோடு செய்து விடுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக நீலிமாவை உன்னிப்பாகக் கவனிப்பதில் யாருக்கும் அக்கரையில்லை. ஆனால் சமீபமாக ஒரு நாள் ரஞ்சன் சார் “உங்க அப்பா அம்மா லவ் மேரேஜா” என்று கேட்டார். திடுக்கிட்டு இல்லை என்று பதிலளித்தற்குப் பதிலாக ஆமாம் என்று சொல்லியிருக்க வேண்டும் எனப் பிறகு யோசித்தாள். சில சமயம் சமயோசித புத்தி வேலை செய்வதில்லை. அம்மா அதைத் தான் நிதானம் பிரதானமென்று அடிக்கடி சொல்கிறாள். அவருக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது. அலுவலக கோப்புகளை ஏதுவும் பார்த்தாரா? அப்படியிருக்க வாய்ப்பில்லையே நிறுவனம் அனுமதிக்காதே. அதிகம் யோசித்தால் குழப்பமும் தலைவலியுமே வரும்.

பீரிதம் வருவதற்கு நேரமாகும் என்று சொல்லி விட்டிருந்தான். அவனுக்கு இரவு பணி ஒருவேளையிருக்கலாம். அதனால் வீட்டுக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டுப் போகும் அவகாசம் மட்டுமே இருக்கக் கூடுமென்று அவனுக்கு இரவு உணவை டப்பாவில் கட்டி எடுத்துக் கொண்டு வரச்சொல்லியிருந்தான். ரஞ்சன் சார் அவருடைய மனைவி இரவு வருவதாக இருந்ததால் மனைவியை அழைத்து வர வெளியே போயிருப்பதாக சந்திரகாந்த் சொன்னார். அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது. தோசை சூடா இருக்கு மேடம் என்று அமரச் சொன்னார் சந்திரகாந்த். இவர் எப்போதுமே இப்படித் தான் பெறுமானம் இல்லாத பண்டத்துக்கு செய்யும் விளம்பரம் அதிகம் என்று யோசித்துக் கொண்டே அமர்ந்தாள். இரண்டாம் தோசை உண்ணும் போது வயிறு அடைப்பது போலிருந்தது. வீட்டில் அம்மா ஊத்தி தரும் போது நான்குக்கு குறையாமல் சாப்பிட முடியும். நிலமை சரியாகட்டும் வீட்டிலேயே சமைக்க ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே, அடுத்து எடுத்துவரும் தோசையோடு போதும் என்று சத்தமாகச் சொன்னாள். சந்திரகாந்த் அவசரமாய் கொண்டு வந்த தோசை தட்டைத் தாண்டி மேசையில் விழுந்தது. “சாரி மேடம் பேறே கொடுத்தினி” என்று அவசரமாய் அதை எடுக்கப் போனார். “பரவாயில்லை அதையே போடுங்கள்” என்ற போதும் மிகவும் வருத்தப்படுவது போன்ற பாவனையோடு வேகவேகமாய் மேசை மீது விழுந்த தோசையை எடுத்துக் கொண்டு உள்ளே போனார் சந்திரகாந்த். அதைத் தட்டில் வைத்துவிட்டு, மெல்லத் திரும்பிப் பார்த்தார் நீலிமாவின் கண்கள் அவரை பின் தொடர்வதை அவர் உணர்ந்து விட்டார் என்ற நிமிடம் நீலிமா பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அடுத்த தோசையைக் கொண்டு வந்து போட்ட சந்திரகாந்த் பீரிதமுக்குக் கட்டித் தரத் தோசைகளை வார்க்கத் தொடங்கினார். காதுகளை உன்னிப்பாய் தீட்டிய நீலிமா இரண்டாம் தோசை ஊற்றி முடித்த உடன் தட்டில் முன்னரே வைத்திருந்த மேசை மேல் விழுந்த தோசையையும் எடுத்து வேகமாய் டப்பாவுள் திணித்தார். அப்படிச் செய்யும் முன்னர் நீலிமா சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே செய்ததையும் நீலிமா ஓரக்கண்ணால் கவனித்தாள். இன்னும் ஒரு தோசையையும் ஊற்றி டப்பாவில் அடைத்துக் கொண்டு வந்து நீலிமா அருகில் வைத்து விட்டு அப்பாவி போலச் சுவரில் சாய்ந்து நின்றார் சந்திரகாந்த்.

வீட்டுக்குப் போன போது பீரிதம் இன்னும் வரவில்லை என்று தெரிந்து முகம் கைகால் அலம்பினாள். பீரிதமுக்கு விபரமாகத் தகவல் அனுப்பி அலுவலகத்தில் ஏதேனும் கிடைக்கிறதென்றால் வாங்கிக் கொள் இல்லாவிட்டால் சொல் என் வீட்டு உரிமையாளர் அம்மாவிடம் ஏதாவது செய்து தரச் சொல்கிறேன் என்று தகவல் அனுப்பினாள். இருபது நிமிடம் கழித்து வந்த பீரிதமிடம் “அவர் எனக்கு போட்டிருந்தா கூட பராவாயில்ல” என்று நீலிமா சொன்னதும் பீரிதமுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. அவனால் பேசக் கூட முடியவில்லை. பெரிய அவமானமாக இருந்தது. அவனுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை என்பது போல நின்றான்.

“காசு குடுத்துத் தானே சாப்பிடறோம். அதுவும் இப்படி வைரஸ் பரவிட்டு இருக்க டைம்ல பண்ணக் கூடாதுல்ல” என்றாள் நீலிமா.

“சந்திரகாந்த்க்கு ஒரு பாடம் கத்து கொடுக்கனும்”

“ஏற்கனவே ஹரீஸ் கூட சொன்னார், நைட் மிச்சமான சாப்பாட்டை ப்ரிட்ஜ்ல வைச்சிருந்து மறுநாள் சித்தரன்னம் பண்ணிக் கொடுத்தார்ன்னு” அந்த வார்த்தைகள் அவனுக்கு மேலும் கோபத்தைத் தூண்டி விடுமென்று நினைத்தாள் நீலிமா.

“இனிமே நாம யாரும் அங்க சாப்பிடப் போக வேண்டாம். நான் கோவிந்த், ஹரீஸ் கிட்டயும் சொல்றேன்.”

இந்த வார்த்தைகளைத் தான் கேட்க நினைத்தவள் போல ஆசுவாசமடைந்தாள் நீலிமா. ஆனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலையும் இருந்தது. வெளியே ஹோட்டல்களில் இந்த காலகட்டத்தில் எதுவும் வாங்கவும் முடியாது. நிறுவனமே அந்தத் தடையை விதித்திருக்கிறது. அதையே திரும்பக் கேள்வியாக பீரிதமிடம் கேட்டாள்.

“கம்பெனி கேட்டீன்ல சாப்பிட்டுக்கலாம் அங்கே நைட்க்கு பேக் பண்ணிக்கலாம்”

“அது நல்ல ஐடியா தான். ஆனா சந்திரகாந்த் ப்ளேஸ்ல கொஞ்சம் ஹோம்லியா இருக்குமேன்னு தானே அங்கே போய்ட்டு இருந்தோம்”

“அவர் ஒன்னும் ஹோம்லியா பண்றதில்ல, ரொம்ப வொர்ஸ்ட், எண்ணெய் அதிகம், அப்பறம் மாவு கூட ஒரு மாசத்துக்கு ஆட்டி டீப் ஃபிரிஸ்ல வைச்சிடிரார்”

“ஆனா நமக்கு வேற வழியும் இல்லை” என்றாள் நீலிமா.

“சரி மறுபடி யோசிக்கவே தேவையில்ல இனிமே நாம அங்க போக வேண்டாம். அட்லீஸ்ட் நான் போகப் போறதில்லை” என்றான் பீரிதம்.

மறுநாள் காலையில் எழுந்ததும் சிறிய அளவில் பூஜை செய்து நோன்புச் சரடைக் கட்டிக் கொண்டு புதிய புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு அலுவலகம் கிளம்பிச் சென்றாள். பீரிதம் இரவுப்பணி தொடரச் சென்றிருந்தான். அவனிடம் காலை உணவை வாங்கி அலுவலக மேசையில் வைக்கச் சொல்லி தகவல் அனுப்பியிருந்தாள். என்றைக்குமில்லாத இலகுவான உணர்வு அவளுக்கு இன்று இருந்தது போலிருந்தது. அலுவலகம் சென்று காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு காலை அறிக்கை எடுக்கக் கிளம்பினாள். இன்று மேலே ஏறிப்பார்க்க முடியாது யாரை ஏறிக் குறிப்புகளை எடுத்து வரச் சொல்வது என்று தேடிக் கொண்டிருந்த போது ரஞ்சன் சார் அவருடைய பணியிடத்திலிருந்து வேகமாய் வந்தார்.

“என்ன நீலிமா, பீரிதம் சொன்னான், நேத்து நைட் சந்திரகாந்த் ஏதோ குளறுபடி பண்ணிட்டனாமே? என்ன ஆச்சு. காலைல பசங்க யாருமே வர்ல சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க”

“அது ஒன்னுமில்ல சார். சின்ன விஷயம் தான் ஆனா பீரிதம் தான் கொஞ்சம் சீரியஸ் ஆயிட்டான்”

“என்ன இன்னிக்கி புடவையெல்லாம்,”

“…”

“அட கையில் நோன்பு சரடு, உங்க வீட்டுல கூட வரலஷ்மி நோன்பு எடுப்பாங்கல, என் வைப் அதுக்கு தான் வந்திருக்கா, தெரிஞ்சிருந்தா கூப்பிட்டு வெத்தல பாக்கு கொடுத்திருப்பா”

“இல்ல சார், இல்ல எங்க வீட்டுல எல்லாம் கூப்பிட மாட்டோம்” என்று அவசரமாக மறுத்தாள் நீலிமா.

“…”

“அது எங்க ஹவுஸ் ஓனர் ஆண்டி கன்னிப் பொண்ணு நோன்பு சரடு கட்டனும்ன்னு சொல்லி கட்டிவிட்டாங்க” என்றாள். நம்பிக்கையில்லாமல் ரஞ்சன் யோசிப்பதை உடனடியாக திசை திருப்ப வேண்டுமே என்று யோசித்தவள் “சார் உங்க அசிஸ்டண்ட அனுப்ப முடியுமா மேல ஹெல்த் ரிப்போர்ட் ரீடிங் பார்க்கனும். புடவை காட்டிட்டு ஏறது ரிஸ்க்” என்றாள்.

“சரி நீங்க ஜாயின் பண்ணி இரண்டு வருஷம் முடிஞ்சிடுச்சே. இன்னும் ஏன் கன்பார்ம் ஆகல”

திக்கென்று சரியாக மாட்டிக் கொண்டது போல இருந்தது. ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் “நான் எப்படி சார் கேட்க முடியும்? ஒருவேளை இப்ப கொரோனா டைம் அதனால டிலே ஆகுதோ என்னவோ வெயிட் பண்ணி பார்க்கலாம்ன்னு நினைச்சேன்”

“இல்லை என் பிரண்ட் ஒருத்தன் சர்ட்டிபிகேட் போட்டு வேலைக்கு வந்தவன். கேஸட் வெரிபிசேஷன்ல கர்பன்மேஷன் டிராப் ஆகறாப்புல ஆயிடுச்சி.”

“…”

“நான் யூனியன்ல சொல்லி தான் சால்வ் பண்ணேன். அப்படி ஏதாவது சிக்கல்ன்னா சொல்லுங்க யூனியன்ல பேசலாம்”

இப்படி வெகு சாதாரணமாகச் சொல்லி விட்டு அங்கிருந்து ரஞ்சன் கிளம்பி சென்று விட்டார். நீலிமாவுக்கு கிட்டத்தட்ட நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. இவர் நிஜமாய் உதவிசெய்யக் கேட்கிறாரா அல்லது என்னிடமிருந்து வாயைப் பிடுங்கப் பார்க்கிறாரா? யூனியனில் சொல்லிச் சரி செய்தாராம் சுத்த ஹம்பக், ஒருவேளை அப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டா? இவர் எதற்கு இங்கே மாற்றலாகி வந்தார். அப்படி என்ன தான் அக்கறை என் மேல் இவருக்கு. தினம் ஏதேனும் டென்சன் கொடுக்கிறாரே. அடுத்தமுறை சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாமே என்று உறுதியாக சொல்லி விடலாமா? இவரே பிரச்சனை செய்து விட்டால் என்ன செய்வது கடலில் கொஞ்ச தூரத்தில் தெரிந்த படகு அசைந்து தடுமாறுவது போலிருந்தது. அதன் மீது மழையும் பொழியத் துவங்க படகின் அலைதல் இன்னும் கூடியது. நீலிமா அந்த மழையின் அலைச்சலுக்குத் தப்பிக்க எங்காவது ஒதுங்க வேகமாக நடந்தாள்.

பிற படைப்புகள்

Leave a Comment