குறுமணற் சந்தில் ஒரு காதல்
செம்பேன் உஸ்மான், ஆங்கிலம் வழி தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ்

by olaichuvadi

 

அந்தத் தெருவுக்குப் பெயர் இல்லை. குறுமணற் சந்து என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். அப்படியொன்றும் நீளமானதில்லை, 200 கஜத்திற்கு மேல் இருக்காது. ‘மரியம் பா’ என்றழைக்கப்பட்ட அந்த காரைவீட்டில் தொடங்கும் சந்து அந்த ஊரின் குறுக்காகச் செல்லும் பெரிய தெருவில் முடிகிறது.

இந்தச் சந்தின் பெயருக்குப் பின்னால் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. குறுமணற் சந்தின் நுழைவாயிலுக்கு எதிரே ‘மரியம் பா’ கம்பீரமாக நிற்கிறது, சுவர்களில் நீலத்திலும் மஞ்சளிலுமாக வண்ணங்கள் தீற்றப்பட்டிருக்கிறது, சுற்றிலும் செல்லரித்துப் போய்க்கிடந்த குச்சில்களுக்கு இடையே அது தனித்து தெரிந்தது. சாம்பல்நிற சன்னல்களின் வழியே மூன்று அறைகளைப் பார்க்கமுடியும், ஒவ்வொன்றும் தரையிலிருந்து மேற்கூரை வரை எண்ணற்ற புகைப்படங்களால் நிறைந்திருக்கும் சுவர்களைக் கொண்டவை, அவற்றில் சில படங்கள் கண்ணாடி சட்டங்கள் போடப்பட்டவை. மஃரிப் தொழுகை முடிந்ததும் ‘அல் ஹஜ் மார்’(வீட்டின் எஜமானன்) தட்டட்டியில் வந்து நிற்பது வழக்கம். அதற்கு கீழே, நாணல் கொண்டு வேயப்பட்ட குடிசைகள் ஒன்றோடன்று ஒட்டியும் ஊடுறுவியபடியும் பரவி நின்றன, சிலவற்றின் மேற்கூரை தட்டையாகவும், சில கூம்பு வடிவத்திலும் இருந்தன. பெரிய வீடு(மரியம் பா) அங்கே இருப்பது சந்துக்காரர்களுக்கு பெருமையான விசயமாய் மேல் தோற்றத்திற்கு தெரிந்தாலும், காலனிய நாட்களில் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒத்தாசையாக இருந்த அவன்(அல் ஹஜ் மார்) மீது ஒரு விதமான வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கவும் செய்தார்கள், அவனும் எப்போதும் மேற் கையாக நடந்துகொண்டு இவர்களின் எல்லா விசயங்களிலும் தலையிடவே செய்வான்.

சந்தின் வலதுபுறத்திலிருந்து முதல் வீடாக இருந்தது போரனேயினுடையது, தரையில் நன்கு பதிந்து நிற்கும் மூன்று தூண்களோடு கொஞ்சம் வெளியே நீண்டுகொண்டிருக்கும் தாழ்வாரத்தைக் கொண்டது. பலகைகள் கொண்டு போடப்பட்டிருந்த தளம் ஆங்காங்கே உடைந்துபோய், (துத்த)நாகம் பூசிய இரும்பு தகடுகளைக் கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. சிவப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த வெளிச்சுவர் வெளிறிப்போய் கிடந்தது.

அடுத்ததாக சந்துக்காரர்களால் கைவிடப்பட்டுக் கிடந்த பொதுக்கிணறு – அரசாங்கத்தை எதிர்த்த போராட்டத்தின் பகுதியாக அவர்கள் இந்தக் கிணற்றை புறக்கணித்தனர், 1958ம் ஆண்டில் நடந்த பொது வாக்கெடுப்பில் பெரிய வீட்டுக்காரனைத் தவிர அனைவரும் அரசின் முடிவிற்கு எதிராக வாக்களித்தனர், தண்ணீருக்காக எங்கும் அலைந்து திரிய தயாராக இருந்தார்களேயொழிய தமது வீம்பையும் போர்க்குணத்தையும் விடவில்லை. அடுத்த வீடு மூங்கில் தட்டி கொண்டு வேலியிடப்பட்ட யாயே ஹாதியினுடையது, சந்துக்காரனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பின்புறத் தெருப்பக்கமாக இருந்த மற்றொரு வாசலை அடைத்து விட்டவன் இவன். இவனுக்கு அடுத்து எம்பார் நியாங்கின் வீடு. நியாங்கின் வீட்டார் பாரம்பரியமான பொற்கொல்லர்கள். சந்துக்காரர்களின் பெருமைகளுள் இவர்களின் வேலைப்பாடுகளுக்கு முக்கியப் பங்குண்டு. மூத்த நியாங்க் பருத்த புட்டங்களோடு, முதிர்ந்த வயதுக்கே உண்டான புருவ மயிர்கள் உதிர்ந்து போய் விட்ட சிவந்த கண்களை உடையவன். எப்போதும் சிரித்த முகமாய், பட்டறையில் உட்கார்ந்து கொண்டு சந்துக்குள் வருவோர் போவோருக்கெல்லாம் சளைக்காமல் சலாம் சொல்லிக்கொண்டே இருப்பான், பெரிய வீட்டுக்காரனைத் தவிர.

அதற்கு அடுத்து இருந்தது சலீஃபின் தச்சுப் பட்டறை. நன்கு கறுத்த ஒடிசலான உடம்புக்காரன், மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களின் எல்லோரையும் சிரித்துக்கொண்டே இருக்க வைப்பவன். சளைக்காமல் பாடுபவனும் கூட. இவன் அமைதியாக இருந்தால் சந்துக்காரர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். இதனாலேயே சலீஃபின் சத்தம் அங்கே இல்லையென்றால் சந்துக்குள் ஏதோ சிக்கல் என்ற பேச்சும் அங்கே இருந்தது. காரைவீடு ‘மரியம் பா’ வை ஒட்டியிருந்த பெரிய குச்சில், கிழவன் மைசாவுடையது, அவன் இறையச்சம் மிக்கவன் மிஸ்பா(செபமாலை) கையில் இல்லாமல் அவன் வெளியே வரவே மாட்டான்.

சந்தின் இடது பக்கத்தை எடுத்துக்கொண்டால் முதல் வீடு மூதாட்டி அய்தாவினுடையது. கற்கள் பாவிய முன்றில் பெயர்ந்து போய்க் கிடந்தது, கற்கள் விலகிவிட்ட இந்த இடைவெளிகளில் கோழிகளும், வாத்துகளும் மறைந்து கிடக்கும். சற்று வளைந்து போயிருந்த மூன்று நீளமான அட்டிகள் தூக்கணாங்குருவிகளுக்கு அடைக்கலம் தந்திருந்தன. “ க்றீயோ . . . . க்றீயோ. . . .” என்று அவை எழுப்பும் சத்தம் காற்றை நிறைக்கும். இருளில் ஊசலாடும் கருப்பு பந்துகள் போல அவற்றின் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அடுத்து இருந்தது மாவ்தோவின் காலி மனை, அவன் மரக்கரி வியாபாரி. அந்த காலி மனையில் கருப்புக் குடிசை கட்டியது போல கரித்துண்டங்கள் கூம்பாய் குவிந்து கிடக்கும். அடுத்து இருப்பது ‘ வாலிபர் சங்கம்’ கதவுகளில் ஐ.நா மாளிகை என்று எழுதப்பட்டிருக்கும் சிறிய சாவடி. ஐந்தாறு டஜன் இளவட்டங்களின் சந்திப்பிடம், அங்கே வருபவர்களில் நிறைய பேருக்கு வேலை வெட்டி கிடையாது. அதுவும் முழுக்க அவர்கள் தவறும் இல்லை. கதவு வழியாக பார்த்தாலே அடுக்கடுக்காய் கிடக்கும் பழைய இதழ்களின் குவியல் தெரியும். பல்வேறு நாடுகளின் இலட்சிணைகள், தவிர உலகளாவிய நாடுகளின் அதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்களும் குவிந்து கிடக்கும். விவாதித்து விவாதித்து சோர்வடைகிற நேரங்களில் தங்களது அரசியல் ஆர்வங்களை மூரிஷ்(மொராக்கோ நாட்டு) தேநீரில் மூழ்கடித்து விடுவார்கள். கடைசியாக பெரிய வீட்டிற்கு நேரே இல்லாமல் சற்று மூலைவாட்டில் ஒரு காலத்தில் போலிஸ் காவலுக்காக கட்டப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட அறை ஒன்று இருக்கிறது. அங்கே இப்போதும் சிதறிக் கிடக்கும் செங்கற்கள்தான் குழந்தைகளின் மாலைநேர பொழுதுபோக்கு. உலகம் முழுக்க இந்தப் பழக்கம் இயல்பானதாகவே இருந்தது.

வெளிப்பார்வைக்கு சந்துக்காரர்களின் சங்கதிகள் இவ்வளவுதான். வீடுகளைப் பற்றி மேலே சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் இங்கு வாழ்ந்த மக்கள் அந்நகரத்தின் இந்த சிறு பகுதிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த வேறுபட்ட செழுமைகளைக் கொண்டிருந்தனர்.

வாரத்தில் ஒருநாள் பெண்கள் எல்லோரும் ஒருசேர சந்தை சுத்தம் செய்வர். காலை எழுந்தவுடன் வாசலில், அதாவது சந்தின் இரு புறங்களிலும் கையில் விளக்குமாறோடு நிற்பர், பிறகு குனிந்து நடனமாடுவதைப் போல் பெருக்கிக் கொண்டே வர, இரு வரிசையும் சந்தின் நடுவே சந்திக்கும். இசையின் லயத்திற்கு நடனமாடுவதைப் போல சிறு குழுக்களாய்ப் பிரிந்து ஒன்றன் பின் ஒன்றாய் வரும் அலை போல பெருக்கிக் கொண்டே தெருமுனை வரை செல்வர். இறுதியாக ஒரு சிறுகுழியை வெட்டி குப்பைகளை இட்டு மூடுவர். நடக்கும்போது உள்ளங்கால்களில் ஒட்டாத புழுதியற்ற மெல்லிய மணலால் நிறைந்தது அந்த சந்து. இறைநம்பிக்கை உள்ள சந்துக்காரர்கள் மிலாது நபியைக் கொண்டாடி மகிழ்வர், அப்போது இதன் பேர் போன ஒழுங்குக்கும் தூய்மைக்காகவுமே அண்டையில் வசிக்கும் (டிரம்) இசைக் கலைஞர்கள் அழைத்தவுடன் வந்து கச்சேரிகளை நிகழ்த்துவர்.

சந்தில் அப்படியொரு இணக்கமான உறவு இருந்தது. பல்வேறுபட்ட குணநலன்கள் கொண்ட மனிதர்கள் ஆனால் ஒன்றாக எப்போதும் சேர்ந்துவாழும் அந்த ஊரின் ஒரே இடமாக இந்த சந்துதான் இருந்தது. இப்படியெல்லாம் இருந்தும், ஒரு சாதாராண நிகழ்வு, தற்காலத்திலிருந்து பார்க்கும்போது மிகச் சாதாரண நிகழ்வு, சந்துக்காரர்களின் சமாதான வாழ்வை முடித்து வைத்தது. சந்துக்காரர்கள் அப்படியொன்றும் புறம் பேசுபவர்கள் இல்லை – இந்த பிரச்சினைக்கு அதுதான் காரணமாக இருந்தது – இருந்தாலும் ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கையற்றுப் போயினர்.

பெரிய வீட்டுக்காரன் அல் ஹஜ் மாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் கின்யே. ஊரைச் சுற்றிலும் அவளின் அழகுதான் பேச்சாக இருக்கும். ஐ.நா மாளிகை இளவட்டங்களின் பாடுபொருளும் இவளது அழகுதான். லேசாய் தலையைச் சாய்த்து சுமந்து வரும் கலாபாஸ் (அகன்ற அடிப்பாகத்தைக் கொண்ட சுரைக்குடுக்கை), நளினமான வளைகழுத்து, கொஞ்சம் அகலமான கழுத்துப்பட்டை கொண்ட அங்கியில் வெளித்தெரியும் வெல்வெட் போல மினுங்கும் தோள்கள், அலுங்காத நடைபோட்டு அவள் சந்தையிலிருந்து வரும்போது இந்த இளவட்டங்கள் கிண்டல் செய்ய வழக்கமாய் தனது முத்துப்பற்கள் தெரிய ஒரு குறுஞ்சிரிப்போடு கடந்து போவாள்.

சந்துக்காரர்களிடம் எப்போதும் எந்த ரகசியமும் இல்லையென்றாலும், இதைப் பற்றி யாரும் பேசிக்கொண்டதே இல்லை. எல்லோருக்கும் தெரியும் மரக்கரிக்காரன் மகன் யோரோவுக்காகவே கின்யேவின் இதயம் துடித்துக் கொண்டிருப்பது. யோரோ கொஞ்சம் கூச்ச சுபாவக்காரன். நன்றாக கோரா( சிறு வீணை போன்ற மேற்கு ஆப்ரிக்க இசைக்கருவி) மீட்டுபவன். சில நேரங்களில் ஐ.நா மாளிகையை விட்டு விலகி, தனது மொத்த தைரியத்தையும் திரட்டிக் கொண்டு பெரிய வீட்டின் சன்னல்களுக்கு கீழே நின்று தனது கோராவை மீட்டிக் கொண்டிருப்பான். யோரோவும் கின்யேவும் ஒருவருக்கொருவர் முகத்துக்கு நேராகவோ, கண்ணோடு கண்ணாகவோ பார்க்க நேரும்போது உணர்வுப் பெருக்கும், வெம்மையும், இனிமையும் கொண்ட புது ரத்தம் இருவருக்குள்ளும் பொங்கி பிரவகிக்கும். அந்த ஓட்டத்தில் உள்ளங்காலில் தொடங்கி எல்லா நாளங்களிலும் பரவி அவர்களுக்குள் எழும் அன்பின் கதகதப்பு, எதற்கும் இணையில்லாத கதகதப்பு.

ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாத எளிய மக்களான அவர்கள் இந்த இளசுகளை மிகவும் நேசித்தார்கள். அவரவர் சொந்த வாழ்வனுபவங்களை நினைவூட்டுவதாக அவர்களுக்கு இந்தக் காதல் இருந்தது. இது குறித்து அதிகம் பேசிக்கொள்ளாது அமைதியாக இருப்பதன் வழி இந்தக் காதலை வாழ்த்தினார்கள். மனமொத்து ஒருவரையொருவர் விரும்புபவர்களின் வழியில் எதுவும் குறுக்கிட முடியாது என எளிமையாக நம்பினர்.

எப்போதும் வாய்ச் சாமர்த்தியம் காட்டும் வழக்கம் சந்துக்காரர்களிடம் இல்லை. காதலர்களின் திருமணத்தை விமரிசயாக நடத்த சரியான நேரத்தை எதிர்பார்த்து கமுக்கமாக இருந்தனர். கின்யே கடந்துபோகும் போதெல்லாம ஆணும் பெண்ணும் ‘என்ன யோரோ நலமா’ என்று கேட்பதும், யோரோவிடம் ‘ கின்யே எப்படி இருக்கிறாள்’ என்று கேட்பதும் அங்கே வழக்கமாகிப் போனது.

யோரோ மாலை ஆறு மணிக்கும் சிலவேளைகளில் மதியமும் வேலையிலிருந்து வந்தவுடன் போரனேயின் கடையின் முன் பெரியவீட்டை பார்த்தவாறு நின்றுகொள்வான். மெதுவாக எல்லா சன்னல்களையும் ஒரு நோட்டம் விடுவான். கின்யேவுக்குத் தெரியும் அது அவன் வந்து நிற்கும் நேரம் என்று, அவளும் ஏதாவது ஒரு சன்னல் ஓரம் வந்து நின்றுகொள்வாள். இப்படியாக இவர்கள் பார்த்துக்கொள்வதும் சாடையாக பேசிக்கொள்வதும் சந்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தெரிந்தாகி விட்டது. ஆக, இப்போதெல்லாம யோரோ சந்துக்குள் நுழைந்தாலே எல்லோர் கண்களும் பெரியவீட்டின் சன்னல்களை நோக்கித் திரும்புவது வாடிக்கையாகி விட்டிருந்தது. சந்துக்காரர்கள் ரெம்பவும் விழிப்பானவர்கள் ஆயிற்றே!

ஒருவழியாக இரண்டு புறாக்களும் சைகைவழி பரிமாற்றங்களைத் தாண்டிவிட்டிருந்தன. கடைசித் தொழுகை முடிந்து, இருள் விரிக்கும் விண்மீன்களின் திரைச்சீலைக்குக் கீழே எல்லோரும் உட்காரத் தொடங்குவர். இருளின் மறைவில் எங்கேனும் அமர்ந்து தனது கோராவை மீட்டத் தொடங்குவான் யோரோ. பெரியவீட்டின் திண்ணையில் தனது பெற்றோரோடு அமர்ந்திருக்கும் கின்யே தனது மனவோட்டங்களை அந்த மீட்டலில் மிதக்கவிடுவாள்.

இந்த நகரத்தின் குறுமணற் சந்து உள்ளூர் கதைப்பாடல்களில் குறிப்பிடப்படும் அளவிற்கு புகழோடு இருந்தது. பெரியவீட்டின் அல் ஹஜ் மார், கொடையாளி!, கதைசொல்லிகளை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைப்பதுண்டு. கின்யே-யோரோவின் காதல் கதை தொட்டுத் தொட்டு எல்லோருக்கும் தெரிய வந்திருந்தது. ஓரப்பார்வைகளையும், கண் சிமிட்டல்களையும், கோராவின் இசைக் குறிப்புகளையும் தாண்டி இந்தக் காதல் இன்னும் போயிருக்கவில்லை.

ஒருநாள் நாட்டின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் சிலர் சந்துக்குள் வந்து போனதை மக்கள் பார்த்தனர். அவர்களில் ஒருசிலர் அமைச்சர்களாகவும், காரியதரிசிகளாகவும் இருந்தனர். சிலநேரங்களில் எல்லோரும் சேர்ந்து நாள் முழுவதுமாக பெரியவீட்டில் குடியும் விருந்துமாக களித்தனர். ஒவ்வொரு வாரமும் வீட்டிற்கு முன் குழிவெட்டி, விறகிட்டு அதன் மீது வைக்கப்பட்ட இரும்புக் கிராதியின் மேல் உரித்த செம்மறிகள் தணலில் வெந்துகொண்டிருக்கும். சந்தின் முனையில் எப்போதும் அரசு வாகனங்களும் ஆடம்பர கார்களும் நின்று கொண்டிருந்தன.

ஐ.நா மாளிகையின் இளவட்டங்கள் அமைதியிழந்து கிடந்தனர், அவர்கள் எல்லோரும் யோரோவின் பக்கம் நின்றனர். சந்தில் இருந்த மற்ற பெரியவர்கள் எல்லோரும் வாய்க்குள்ளேயே வைது கொண்டிருந்தனர். இப்போதெல்லாம மதியமானாலும் மாலை ஆறு மணியானாலும் அவர்களது கண்கள் தரையை வெறித்து பார்த்தபடி இருந்தன. இருள் கவிழ்ந்த நேரங்களில் யோரோவின் கோரா மீட்டல்கள் அங்கே கேட்கவில்லை. ஒரு மாதம் போயிருக்கும், சந்து மொத்தமும் மயான அமைதியே வாடிக்கையாகிப் போனது. யோரோ காணாமல் போயிருந்தான். மூன்று மாதங்களுக்குப் பிறகு கின்யேவையும் யாரும் பார்க்கவில்லை ( இந்த காதலர்கள் இல்லாமல் போன பிறகு அங்கே ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரண்டு மரங்கள் நடப்பட்டதாக எனக்கு சொல்லப்பட்டது).

இதெல்லாம நடந்துபோன பிறகு குறுமணற் சந்து தனது புகழை இழந்து விட்டிருந்தது. குப்பைகள் அங்கே குவிந்து கிடந்தன. பெண்கள் கழனித் தண்ணீரை பெரியவீட்டின் ஓரமாகவே ஊற்றினர். ஒரு சுடுசொல்லைக் கூட பேசியிராத சந்துக்காரர்களின் வாய்களிலிருந்து இப்போதெல்லாம் வசைகளே வந்து விழுந்தன. இளவட்டங்கள் எல்லாம் பிழைப்புத் தேடி எங்கெங்கோ போய்விட்டிருந்தனர். இறை துதிகளை அங்கே கேட்க முடியவில்லை, டிரம் வாத்தியங்கள் முழங்குவது நின்று போனது…

இந்த உலகத்தின் துயர்மிகுந்த இடமாகிப் போனது சந்து, நான் தக்கார் நகரத்தில் நடந்து அலையும்போது ஆச்சரியப்பட்டேன், அந்த சாபக்கேடு ஏன் இந்த நகர் முழுவதையும் பற்றிப் பிடிக்கவில்லையென்று.

பிற படைப்புகள்

Leave a Comment