மாமிச வாடை
சித்துராஜ் பொன்ராஜ்

by olaichuvadi

 

 

வசுமதி நான்கு முட்டைகளை உடைத்து அவற்றிலிருந்த வெள்ளைக் கருவையும் மஞ்சள் கருவையும் வாய் அகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டினாள். கண்ணாடிப் பாத்திரத்தின் அருகில் கவிழ்த்து வைத்திருந்த முட்டை ஓடுகளின் உட்புறங்கள் சமையலறை விளக்குகளின் வெளிச்சத்தில் பளபளத்தன. வசுமதி சமையலறை மேடையின் அடியிலிருந்த இழுப்பறையைத் திறந்து அங்கு கிடந்த கரண்டிகள், கத்திகள் என்ற பல்வேறு உபகரணங்களை விரல்களால் அலசி ஒரு முள்கரண்டியைத் தேர்ந்தெடுத்தாள்.

விளக்குகளின் வெளிச்சத்தில் சமையல் உபகரணங்களின் வெள்ளி நிறம் கண்ணைப் பறித்தது.

முள்கரண்டியைக் கழுவி விட்டுத்தான் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றினாலும் வசுமதி அப்படிச் செய்யவில்லை. அதை ஓரிரு முறைகள் காற்றில் பலமாய் உதறிவிட்டு முட்டைகளின் மஞ்சள் கருக்களை வெள்ளைக் கருக்களோடு கலக்காமல் பாதுகாக்கும் சலாஜா என்னும் மெல் இழைமத்தை முள்கரண்டியால் குத்தி உடைத்துவிட்டு மஞ்சள் கருக்களையும் வெள்ளைக் கருக்களையும் அடித்துக் கலக்க ஆரம்பித்தாள்.

குளிர்பெட்டியிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்துப் பாத்திரத்துக்குள் கொஞ்சம் பாலைக் கவிழ்த்தாள். முட்டைக் கலவையோடு பால்சேரக் கலவை நுரைத்துப் பூரித்ததில் சமையலறை முழுவதும் முட்டை வாசனை நிறைத்துக் கொண்டது. ஆனால் மூச்சைக் கொஞ்சம் வேகமாய் இழுத்து விட்டுக் கொண்டு காலை நேரத்தில் மூக்கை அடைத்திருந்த சளியை அகற்றியததைத் தவிர வசுமதியின் முகத்தில் வேறெந்த சலனமும் இல்லை.

முட்டைக் கலவையை கலக்கியபடியே தோள்களிலிருந்து அசிங்கமாய் நழுவிப் போகும் அபாயத்திலிருந்த சாயம்போன நைட்டியை அவ்வப்போது வசுமதி இழுத்துவிட்டுக் கொண்டாள். முட்டைக் கலவையை அடித்துக் கலக்கும்போது கட்டுக்கடங்காமல் ஆடிக் கொண்டிருந்த முன்னங்கையின் வெண்மையான சதைப் பகுதியையும் மணிக்கட்டுக்கு நழுவிப் போயிருந்த மிக மெல்லிய தங்க வளையலையும் பார்க்கும்போது மட்டும் அவள் முகத்தில் எரிச்சலும் அலுப்பும் தோன்றி மறைந்தன.

கட்டுவிட்டுப் போயிருக்கும் இந்தக் கரத்துக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற தோரணையில் தன் உடம்பிலிருந்து முட்டை நெடி அடிக்கும் கண்ணாடிப் பாத்திரத்தையும், முள்கரண்டியையும் தள்ளி வைத்திருப்பது போலவே சதை பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கரத்தையும் வசுமதி தன்னிடமிருந்து தள்ளி வைத்துக் கொண்டாள்.

சமையலறைச் சன்னல் கம்பிகளின் வழியாக எட்டரை மணி வெயில் சமையலறை மேடையின் பிளாஸ்டிக் வழவழப்பின்மீது வழிந்தது. ஏதோ ஒரு நினைவில் வசுமதி தனது கையைச் சமையல் மேடை மீதிருந்த அழுக்குத் துணியில் அழுத்தித் துடைத்துக் கொண்டாள். சமைலறை வாசலைத் தாண்டிச் சின்னஞ் சிறிய வரவேற்பறைக்கு அப்பால் வலது பக்கத்திலிருந்து வாசுதேவன் சிறுநீர் கழிக்கும் சத்தம் மிகப் பிரம்மாண்டமாகக் கேட்டது. பின்பு டாய்லெட்டின் மீதிருந்த பிளாஸ்டிக் மூடியை வாசுதேவன் அடித்து மூடும் சத்தம்.

சிறுநீர் கழித்தபின் மூடியை நிச்சயம் இறக்கி வைக்க வேண்டும் என்று வசுமதி வாசுதேவனிடம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தாள். அது பல நேரங்களில் அவர்களுக்கு இடையில் கடுமையான வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. இப்போது வாசுதேவன் தொண்டையைப் பலமாகச் செறுமி வாஷ் பேசினுக்குள் காறித் துப்பிக் கொண்டிருந்தான். பன்னிரண்டு வருடங்களாய்ப் பரிச்சயமான குரல் திடீரென்று அந்நியமாய் ஒலிப்பதை எண்ணி வசுமதி ஒரு கணம் வியந்து போய் நின்றாள். வாசுதேவனின் குரலை எப்போது கடைசியாகக் கேட்டோம் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். ஆனால் எப்போது என்று சரியாகச் சொல்ல முடியாமல் அவள் சிந்தனையோட்டத்தைக் குழப்பம் மறைத்துக் கொண்டது.

அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த சட்டியின் வெப்பம் புறங்கையைத் தாக்கியது. வாசுதேவன் வாஷ் பேசின்மீது வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு பாட்டில்களையும் டப்பிகளியும் புறங்கையால் தள்ளியும் தட்டியும் ஏற்படுத்திய சிறு அமளியின் முடிவில் குளியலறைக்கு வெளியே வந்து குளியலறை விளக்கு ஸ்விட்சைத் தட்டுவதும், கதவைச் சாத்துவதும் தெளிவாகக் கேட்டது. சட்டியிலிருந்த முட்டையைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தவள் நைட்டியை மீண்டும் சரி செய்தபடியே குளிக்கப் போவதற்கு முன்னால் குளியலறையைக் கழுவி விட வேண்டும் என்று தனக்குத்தானே அலுப்போடு சொல்லிக் கொண்டாள்.

இந்த மூன்று வாரங்களில் காலை நேரங்களில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும்கூட குளியலறையின் தரையில் மஞ்சள் நிறச் சிறுநீர் திட்டுத் திட்டாய்த் தேங்கிக் கிடக்க ஆரம்பித்திருந்தது. எவ்வளவு சொல்லியும் வாசுதேவனின் இந்த ஒரு பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை. குளியலறைக்குள் போகும் போதெல்லாம் வசுமதி கால்களை மிகக் கவனமாகப் பூனைபோல் எடுத்து வைக்க வேண்டியதாக இருந்தது. அவர்கள் இருவரும் குடியிருந்த வீட்டைப் போலவே மிகச் சிறிய குளியலறை.

சமையலறைக்கு வெளியே போடப்பட்டிருந்த சதுர வடிவத்திலான மடக்குச் சாப்பாட்டு மேசையில் வாசுதேவன் மேசையைச் சுற்றிப் போட்டிருந்த முக்காலி ஒன்றின் இரும்புக் கால்கள் தரையில் கீச் என்று தேய அமர்ந்தான். நான்கு ஆள் அமரக்கூடிய மேசை என்றாலும் வீட்டில் இடம் பற்றாததால் மேசையின் ஒரு பக்கத்தை சுவரோடு தள்ளி வைத்திருந்தார்கள். அந்தப் பக்கம் ஒன்றும் இந்தப் பக்கம் இரண்டுமாக மொத்தம் மூன்று முக்காலிகள். வீட்டில் வாசுதேவனும் வசுமதியும் என்று இருவர் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதாலும் வீடடங்கு காலத்துக்கு முன்னால் இருவரும் வேலைக்கு அதிகாலையிலேயே வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு திசைகளில் போய்விடுவதாலும் ஒரே நேரத்தில் அந்த மேசையில் அமர்ந்து சாப்பிட வாய்ப்புக்கள் அதிகம் அமைந்ததில்லை.

இப்போது மூன்று வேளையும் ஒன்றாய் அமர்ந்து உண்ணும்போது மேசை சின்னதாகத் தெரிகிறது.

சட்டியில் வெந்து கொண்டிருந்த முட்டைகள் சட்டியோடு ஒட்டாமல் இருக்க அவற்றின் ஓரங்களைத் தோசைக் கரண்டியால் நிமிண்டிவிட்டபடியே வசுமதி சமையலறையிலிருந்து தலையை நீட்டிச் சாப்பாட்டு மேசையைப் பார்த்தாள். வாசுதேவன் மேலாடை எதுவும் இல்லாமல் சன்னல் வெயிலில் பளபளக்கும் கறுத்த கனமான உடம்போடும், தூக்கம் போதாமல் பூரித்து நிற்கும் உருண்டைக் கண்களோடும் தீப்பற்றியதுபோல் கலைந்து கிடக்கும் பாதி நரை விழுந்த தலைமயிரோடும் நெஞ்சு நிறைய காடாய் வளர்ந்திருக்கும் கனத்த மார்பு மயிரோடும் தொடைவரை நீண்டிருக்கும் தொளதொளப்பான உள்ளாடை மட்டும் அணிந்தபடி கைத்தொலைப்பேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்தான்.

கடந்த இரண்டு வாரங்களாகக் கைத்தொலைபேசியிலேயே வேலை தேடுவதும், செய்திகள் படித்துச் சலித்துக் கொள்வதும், பாட்டுக் கேட்பதும், படங்கள் பார்ப்பதும் வாசுதேவனின் பழக்கமாகி இருந்தது. வசுமதியின் வேலையிடத்தில் வீடடங்கு தொடங்கியபோதே எல்லா ஊழியர்களுக்கும் மடிக்கணினி கொடுத்திருந்தார்கள். காலை ஒன்பதரை மணி தொடங்கி மாலை ஆறு மணிவரை உணவு நேரம் நீங்கலாக வசுமதி அதில் அலுவலக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.

சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த வாசுதேவனைப் பார்த்துவிட்டுத் தலையைச் சமையலறைக்குள் இழுத்துக் கொண்ட வசுமதிக்கு லேசாய்த் தலைச் சுற்றியது.

சமையலறையில் நிறைந்திருக்கும் முட்டை வாசனையும் சட்டியிலிருந்து எழுந்த லேசாய்க் கருகும் வாசனையும்தான் வாசுதேவனோடு உடலறவு வைத்துக் கொள்ளும் நேரத்தில் அவர்கள் இருவரின் உடல்களிலிருந்தும் எழும் வாசனை என்ற எண்ணம் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் சர்வ நிச்சயமாக அவள் மண்டைக்குள் அறிவிப்பே இல்லாமல் எழுந்திருந்தது.

வசுமதி எவ்வளவு முயன்றும் வாசுதேவனோடு உடலுறவு வைத்துக் கொள்ளும் சமயத்தில் அவர்கள் இருவரின் உடம்பிலிருந்தும் எழும் வாசனை ஏதென்று சரியாகச் சொல்ல முடியாமல் தவித்தாள். வாசுதேவன் தன்னோடு இருந்த நேரங்களைக் கற்பனை செய்து பார்த்தாலாவது அவர்கள் வைத்துக் கொண்ட உடலுறவின் துல்லியமான மணம் தனது நினைவுக்கு வரும் என்று வசுமதி எண்ணினாள்.

வாசுதேவன் தன்னருகில் படுத்திருப்பதைப் போலவும் அவன் கைகள் அவள்மீது வெட்கமே இன்றி அலைவது போலவும், அவனது தடித்த ஈரப்பதமே இல்லாத உதடுகள் அவளுக்கு முத்தங்கள் தருவது போலவும் அவள்மீது அவன் சினந்த காளை மாடாக ஏறிப் படர்வது போலவும் கற்பனை செய்து பார்த்தாள். ஆனால் அவள் கண் முன்னால் அவளை முன்பொரு காலத்தில் காதலித்த ஆண்களின், அவளால் காதலிக்கப்பட்ட ஆண்களின், அவள் பார்த்துக் காம வயப்பட்ட ஆண்களின் முகங்களும் உடல் பாகங்களும் தோன்றினவே அன்றி இதுதான் வாசுதேவன் என்று சொல்லும்படி எதுவும் துல்லியமாகத் தோன்றவில்லை.

சட்டியில் பொரிந்து கொண்டிருந்த முட்டைகளைத் தோசைக் கரண்டியால் எடுத்து தட்டில் மடித்து வைத்த கணத்தில் தனது மனதிலிருந்து தனது பன்னிரண்டு வருடக்காலக் கணவனின் உடம்பும், முகமும், வாசனையும் சுத்தமாய்த் துடைத்துவிடப் பட்டிருந்ததை உணர்ந்த வசுமதி பீதியால் பீடிக்கப்பட்டவளானாள்.

அவள் ஒழுக்கங் கெட்டவள் என்று அவளுக்குள் மிகக் கொடூரமான எண்ணம் ஒன்று தோன்றிய அதே நேரத்தில் தனக்கு உண்மையிலேயே திருமணம் ஆகிவிட்டதா என்ற சந்தேகமும் அவளுக்குள் தோன்றி வசுமதியை வதைத்தது.

வசுமதி தனது வெறும் கழுத்தைத் தடவியபடியே படுக்கையறைக் கதவின் பின்னால் தொங்கவிடப்பட்டிருந்த தனது மஞ்சள் நிறத் தாலியை எண்ணிக் கொண்டாள். கொக்கியில் தொங்கிக் கொண்டே காலத்தை நிர்ணயிர்க்கும் கனமான பெண்டுலம்போல் அது மெல்ல ஊசலாடிக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

“என்னடி ஒரு முட்டை பொரிக்க இத்தனை நேரமா?”

சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டிருந்த கனமான உருவத்தையுடையவன் மூக்கினால் பேசுவதுபோல் குரல் கொடுத்தான். அவன் குரலில் எரிச்சலேறி இருந்ததை வசுமதியால் ஊகிக்க முடிந்தது. அவன் குரல் கேட்ட மாத்திரத்தில் அடுப்பை அணைக்கவும், பொரித்த முட்டைகளை வைத்திருந்த தட்டுகளைச் சமையல் மேடையில் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமாக மாற்றி வைக்கவும், சமையல் மேடைமீது வைக்கப்பட்டிருந்த அழுக்குத் துணியை எடுத்து இரண்டு முறை உதறி மீண்டும் மேடைமீது சுருட்டி வைக்கவும் அவள் கரங்கள் பரபரத்தன, இத்தனை தெளிவாகக் குரல் உயர்த்திப் பேசுகிறவன் ஏதேனும் உரிமை இல்லாமல் அப்படிப் பேசமாட்டான் என்று அவளுக்கு யாராலோ எப்போதோ மிகத் தெளிவாகச் சொல்லித் தரப்பட்டிருந்தது. அப்படிப் பேசுகிறவனின் கட்டளைகளை நிறைவேற்ற வசுமதி பரபரத்தாள்.

“என்னடி?”

“இதோ வந்துட்டேன்.”

ஆனால் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தவனுக்கும் அவளுக்கும் என்ன உறவு என்று சரியாகத் தெரியாமல் தோள்களிலிருந்து நழுவிப் போகும் நைட்டியோடு அவன் முன்னால் போய் நிற்க அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதிலும் உள்ளாடை ஏதும் அணியாமல் நெஞ்சின் இருபுறமாகவும் புரண்டிருக்கும் கனமான மார்புகள் மெல்லிசான நைட்டித் துணியிலிருந்து துருத்திக் கொண்டிருந்த நிலையில் மேசையில் அரை நிர்வாணமாய் அமர்ந்திருக்கும் அந்நிய மனிதனுக்கு முன்னால் வெட்கங்கெட்டத்தனமாய் எப்படிப் போய் நிற்பது என்று வசுமதி தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். நினைவுகளைத் திருப்பிப் பார்த்தாவது இவன் யார் என்று உறுதி படுத்திக் கொள்ளலாம் என்றாலோ பல ஆண்களின் முகமும் உடம்பும் கண்களுக்கு முன்னால் வந்து நின்றன.

என்ன கண்றாவியோ தெரியவில்லை.

வசுமதி வாசுதேவன் யார் என்று அறிந்து கொள்வதற்குக் கடைசி முயற்சியாக அவனைப் பற்றித் தான் அறிந்ததை எல்லாம் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள். அவன் சத்தமாகச் சிறுநீர் கழிக்கிறவன். சரி. அவன் சிறுநீர்க் கழித்துவிட்டு வந்தால் குளியலறைத் தரையில் மஞ்சள் குமிழ்களாய்ச் சிறுநீர் சிதறி இருக்கும். அவன் உள்ளே போய்வந்த பிறகு அவள் குளியலறைக்குள் போக நினைத்தால் அவள் மிகக் கவனமாய் கால் வைக்க வேண்டியதாக இருக்கும். சரி. அவன் உடம்பு கறுப்பாய்க் கனமாய் இருக்கிறத. இடுப்பில் மாட்டியிருக்கும் மெல்லிசான அண்டிராயரைத் தாண்டி சின்னக் குடம்போல் தொந்தி வழிந்து கொண்டிருக்கிறது. சரி. அவன் மார்பு முழுவதும் சுருள் சுருளாய் முடி வளர்ந்திருக்கிறது. தலையில் முடி நரைக்க ஆரம்பித்திருக்கிறது. முன்தலையில் சொட்டை விழ ஆரம்பித்திருக்கிறது. கொஞ்ச நாளில் அங்கிருக்கும் முடி முழுவதும் கொட்டி விடலாம். சரி. மூக்கு வழியாக அதிர்வதுபோல் பேசுகிறான். கொஞ்ச நேரத்தில் முட்டையைக் கொண்டு போய் வைக்கவில்லை என்றால் கோபமாவான். சரி.

இத்தனை விவரங்களையும் மனதிற்குள் ஜெபம்போல் உருட்டிப் பார்த்த பிறகும் வசுமதிக்குச் சாப்பாட்டு மேசையில் உள்ள ஆள் யாரென்று விளங்கவில்லை. இன்னமும் தாமதித்தால் அவன் கத்துவான் என்று உள்ளுணர்வு சொன்னதாலும் அதை அவள் தவிர்க்க எண்ணியதாலும் சமையல் மேடையின்மீது சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய துணியை எடுத்து மார்புக்குக் குறுக்காகப் போட்டபடி அவன் முன்னால் பொரித்த முட்டைகளையும் கோப்பை நிறைய காபித் தண்ணியையும் கொண்டு போய் வைத்தாள்.

கைத்தொலைப்பேசியை நோண்டுவதை நிறுத்திவிட்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தவனின் உதட்டோரங்கள் பரிகாசத்தில் வளைந்தன.

“பெப்பரும் சால்ட்டும், யாரு உங்க அப்பனா எடுத்துகிட்டு வருவான்?”

அவன் பரிச்சயமில்லாத அந்நிய புருஷனாய் அவளுக்குத் தோன்றினாலும்கூட வாசுதேவனைக் கைகளில் அள்ளியெடுத்து அவன் வாயில் முத்தம் பதிக்கும் அளவுக்கு வசுமதிக்கு அந்த நிமிடத்தில் குதூகலம் ஏற்பட்டது. அப்பா, அப்பா என்று ஜெபித்தபடியே மிளகையும் உப்பையும் எடுக்கச் சமையலறைக்கு இரண்டு எட்டில் தாண்டிப் போனாள். அப்பாவைப் பற்றித் தெரிந்து கொண்டால் இவனைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மிளகும் உப்பும் அடைத்த குடுவைகளை அவனுக்கு முன்னால் வைத்தவளுக்கு முகம் பூரித்துப் போய் லேசாய் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனைச் சுற்றியும் முட்டை வாசம் வீசிக் கொண்டிருந்ததை உணர்ந்தவளின் குரலில் மீண்டும் திகில் சூழ்ந்து கொண்டது.

“அப்பா….” என்று வசுமதி இழுத்தாள்.

வசுமதி சொன்னதை வாசுதேவன் கேட்கவில்லை. முள்கரண்டியால் பொரித்த முட்டையைத் தட்டின் விளிம்புக்கு இழுத்துத் தலையை நன்றாக முன்னால் குனிந்து வாயால் பொரித்த முட்டையைக் கடித்துப் பிய்த்துக் கொண்டிருந்தான். அப்படிச் செய்யும்போதெல்லாம் அவன் பின்தலை ஏதோ அடக்க முடியாத உணர்ச்சி வேகத்தில் அசைந்தது. அவனுடைய அகலமான தோள்பட்டையின்மீது சுருண்ட மயிர்கள் வெயிலில் அமர்ந்ததால் பொங்கியிருந்த சிறு வியர்வையின் பளபளப்பில் சிலிர்த்து நின்றன.

“இந்தத் தொற்றுநோய் பரவலாலயும் வீடடங்கு உத்தரவாலயும் வியாபாரம் படுத்துத்தான் போச்சு. மூணு வாரமா டூர் நடக்கல. பள்ளிக்கூடங்களும் மூடியிருக்கிறதால வழக்கமா மாணவர்களுக்காக நடத்துற கல்வி சம்பந்தப்பட்ட புறப்பாட நடவடிக்கைகளையும்கூட நடத்த முடியல. சரிதான். ஆனா என்னை மாதிரி டூர் கைடுங்களுக்குக் குடும்பம், குழந்தை, குட்டிங்க, வயிறு எதுவுமே இல்லையா?”

குழந்தை, குட்டிங்க என்று சொன்னபோது வாசுதேவனின் குரல் கமறியது. அந்த இடத்தில் மட்டும் வசுமதியின் முகத்தில் பதித்திருந்த கண்களைத் தாழ்த்திக் கொண்டு பின் மீண்டும் தொடர்ந்தான்.

“எப்பவும் வர வருமானத்துல ஒரு பாதியாவது தரதுதான முறை. அதுக்காகத்தான அரசாங்கம் என்னென்னமோ உதவித் தொகைய எல்லாம் முதலாளிகளுக்குக் கொடுக்குது. நான் இதைச் சும்மா விடப் போறதில்ல. மனிதவள அமைச்சுக்கு இன்னைக்கு மின்னஞ்சல் அனுப்பிட்டுத்தான் மறுவேலை. இந்தக் கேடுகெட்ட வீடடங்கும் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போகுதுனே தெரியல. இதை வச்சும் மாரடிக்க வேண்டியதா இருக்கு.”

அதிகம் பரிச்சயமில்லாத மனிதர்களின் கோபம் – அது நியாயமே என்ற போதும்கூட – மனதிற்குள் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியது. தனக்கு முன்னால் கடுமையான முகபாவத்தோடு அமர்ந்திருந்த அந்த கறுத்த கனமான ஆண்பிள்ளையின் உணர்ச்சி வேகத்தையும் கோபத்தையும் உணர்ந்து கொண்ட வசுமதியின் கைகள் லேசாய் நடுங்க ஆரம்பித்திருந்தன.

ஆனாலும் விடாப்பிடியாய் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் கேட்க வந்த கேள்வியை கேட்டுவிடத் தீர்மானித்தாள்.

“இல்லைங்க, வந்து. என் அப்பா?”

மிகச் சுவாரசியமாக உச்ச ஸ்வரங்களை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த பிரபலமான கீர்த்தனை பூரணமான இசை அனுபவத்தைத் தருவதற்கு இன்னும் சில ஸ்வரங்களையே தாவிப் போக வேண்டிய நிலையில் சட்டென்று நிறுத்தப்பட்டதைப்போல் வாசுதேவனின் வாயிலிருந்து தொடர்ச்சியாய் வந்து கொண்டிருந்த வார்த்தைகள் நின்றன. அவன் வசுமதியை சிறிது நேரம் உற்றுப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். உணர்ச்சியில் வீங்கிருந்த அவன் கண்களிலும் கன்ன மேடுகளிலும் பெரும் வியப்பு அப்பியிருந்தது. அவன் வாய் ஓசைகளை எழுப்புவதை நிறுத்தியிருந்தாலும் அவன் உதடுகள் சொற்களை உருவாக்கி அனுப்புவதைப்போல் ஓயாமல் அசைந்து கொண்டிருந்தன.

“என்ன, அப்பாவா? ஏன்…என்ன சொன்னாரு? என்ன. அப்பாவா. உம்.”

வாசுதேவன் பேச முடியாமல் குழறினான்.

வசுமதிக்கும் குழப்பமாக இருந்தது. அவளும் என்ன சொல்வதென்று புரியாதவளாய் மழுப்பலாய்ப் பேசினாள். அவள் மண்டை முழுவதும் பொரித்த முட்டை வாசம் நிறைந்திருந்தது.

“இல்லை – அதுதான் என் அப்பா – “

வாசுதேவனின் முகத்திலிருந்து சற்றே புடைத்திருந்த கண்கள் அவற்றின்மீது தீப்பொறி விழுந்ததைப்போல் பற்றிக் கொண்டன.

“என்னடி அப்பா. பெரிய அப்பா? நாலு வருஷமா இல்லாத அப்பா? கடைசியா உன் கடைசித் தம்பியோட கல்யாணத்துல பார்த்தப்ப அவன் நம்மள எப்படி எளக்காரமா நடத்துனான்னு உனக்கு மறந்து போச்சா? அவன் அரசாங்கத்துல பெரிய ஆபீஸர். மினிஸ்டரை எல்லாம் தெரியும். உங்கம்மா பள்ளிக்கூடத் தலைமையாசிரியர். உன் தம்பி தங்கச்சிகளும் அவங்கள கட்டிகிட்டவங்களும் எல்லாரும் பேங்கு, அரசாங்கம், டாக்டர், லாயர்னு பெரிய வேலையில இருக்காங்க. நான் ஒருத்தன் மட்டும் சாதாரண டீச்சர். அப்படித்தான? அதுகூட அஞ்சு வருஷத்துக்கு முன்னால மடத்தனமா நல்ல பள்ளிக்கூடச் சம்பளத்தை விட்டுட்டுச் சிங்கப்பூர்ச் சரித்திரம் சம்பந்தமான டூர் நடத்துற கம்பெனில சேர்ந்து சொந்தமா முன்னேறுறேன்னு சொல்லி இப்ப ஓட்டாண்டியா நிக்குற மடையன்….”

வாசுதேவன் இரண்டு முஷ்டிகளையும் மேசைமீது ஊன்றி எழுந்ததில் சாப்பாட்டு மேசையும் அதன்மீது இருந்த பாத்திரங்களும் கிணுகிணுவென்று அதிர்ந்து அடங்கின. வாசுதேவன் அவன் முகத்தை வசுமதியின் முகத்துக்குப் பக்கத்தில் கொண்டு வந்தபோது வசுமதி பார்த்தாள். அவன் மேலுதடு மொத்தமும் குண்டு குண்டாய் வியர்வைத் துளிகள் பூத்திருந்தன. அவன் வாய் முழுக்க முட்டை நாறியது.

“அதுக்கெல்லாம் மேல அவங்களுக்குக் குழந்தைங்க இருக்கு. என்னால் உனக்குக் குழந்தை கொடுக்க முடியல. அப்படித்தான? டாக்டர் என்னையும் உன்னையும் பரிசோதனை பண்ணிட்டுக் கொடுத்த ரிப்போர்ட்ட மொத வேலையா அங்கிட்டுத்தான தூக்கிட்டு ஓடுன?”

திடீரென்று தோள்களின்மீது சொல்ல முடியாத பெரும்சுமையைத் தூக்கிப் வைத்ததைப்போல் வாசுதேவன் பலமான பெருமூச்சோடு முக்காலியில் மீண்டும் கனமாகச் சாய்ந்தமர்ந்தான். அவன் பெரிய கைகள் அவனுடைய தலையைத் தாங்கிக் கொண்டிருந்தன.

வீடு முழுவதும் லேசாய் தீய்ந்து போன பொரித்த முட்டை வாசத்தோடு கனமான மௌனமும் அமர்ந்து கொண்டது.

இந்தப் பொரித்த முட்டையின் வாசனை அந்த நாள் முழுக்கத் தனது பின்னால் நல்ல வெளிச்சம் மிகுந்த பாம்பாக வந்து கொண்டே இருப்பதுபோல் வசுமதி உணர்ந்தாள். அந்த தீய்ந்த முட்டை வாசனையாலான பாம்பு அவளுடைய கணுக்கால்களை உரசிப் போனது. அவளுடைய தொடைகள்மீது தாவி ஏறி வசுமதியின் உடம்பைச் சுற்றிப் பின்னியபடி மேலேறி அவளுடைய கனமான மார்புகளையும் ரப்பர் தோட்டாக்களாய்த் திமிறி நிற்கும் மார்புக் காம்புகளையும் வழவழப்பான நாவினால் தடவிக் கொடுத்தது. அவள் கழுத்தில் சுற்றிக் கொண்டு வசுமதியின் காது விளிம்புகளைத் தனது ஒளிமிகுந்த வாய்ப்பகுதியைக் கொண்டு உரசியது.

வாசுதேவன் சொன்ன அனைத்து விஷயங்களும் வசுமதிக்குப் புதியவையாகவும் வியப்பூட்டுபவையாகவுமே தோன்றின. அவள் இன்னமும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. வசுமதியிடம் குரல் உயர்த்திப் பேசியபின் வாசுதேவன் தன் கைகளுக்குள் முகத்தைப் புதைத்தபடி நெடுநேரமாக விக்கி விக்கி அழுதான். பின்பு வரவேற்பறையில் போடப்பட்டிருந்த முதுகுடைந்த சோபாவில் போய்க் கைத்தொலைப்பேசியைப் பார்த்தபடியே வழக்கம்போல் படுத்துக் கொண்டான்.

கைத்தொலைப்பேசி அலுத்தபோது தொலைக்காட்சி பார்த்தான்.

கழுவ வேண்டிய தட்டுகளோடும் பாத்திரங்களோடும் சமையலறைக்குள் போன வசுமதி தனது மார்பின் குறுக்கே மாட்டியிருந்த அழுக்குத் துணியை பாம்பு தன் சட்டையைக் கழற்றுவதைப்போல் உருவிப் போட்டாள். இத்தனை நேரம் தன்னிடம் இவ்வளவு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தவன் யார் என்பது தனக்குத் தெரியாமல் இருப்பதை எண்ணி அவள் ஓயாமல் தன்னை நொந்து கொண்டாள். பரிச்சியமில்லாத அரை நிர்வாணமான ஓர் ஆணோடு இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தது அவளுக்கு மிகப் பெரிய அருவருப்பைத் தந்தது.

தன்னை நொந்தபடியே குளியலறைக்குப் போனவள் குளித்து முடித்தவுடன் கதவுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த தாலியை எடுத்து ஏதோ பெயர் அறியாத உணர்ச்சியால் உந்தப்பட்டவளாக அதைத் தன் கண்களில் ஒத்திக் கொண்டாள். பின்பு அதைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டாள்.

பிறகு அறையை விட்டு வெளியேறப் போனவள் மீண்டும் எதையோ சிந்தித்தவளாய் அறைக்குள் மீண்டும் வந்து அலமாரியில் இருந்த துணிமணிகளையும் நகைகளையும் கொட்டிக் கவிழ்த்து அலமாரியின் அடியாழத்தில் இருந்த தனது திருமணச் சான்றிதழை வெளியில் இழுத்தாள். கனமான காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்த சான்றிதழ் ஓர் அட்டைக் குழாய்க்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

சான்றிதழை வெளியில் எடுத்த வசுமதி அதை படுக்கையின்மிது விரித்து வைத்து அதிலிருந்த பெயர்களை எழுத்துக் கூட்டி பல தடவைகள் வாசித்தாள். அதிலிருந்த பெயர்கள் அனைத்தும் அவளுக்குப் பரிச்சயமானவை போலவும் பரிச்சயமில்லாதவை போலவும் தோன்றின. வசுமதி நாலாவது முறையாகச் சான்றிதழை எழுத்துக் கூட்டிப் படிக்கும்போது வாசுதேவன் சிறுநீர் கழிப்பதற்காக அறைக்குள் வந்தான். தரையில் குவியலாய்க் கொட்டிக் கிடக்கும் ஆடைகளையும் நகைகளையும் பார்த்தோ கட்டிலுக்கு முன்னால் முழங்காலிட்டபடித் திருமணச் சான்றிதழை வாசிக்கும் வசுமதியைப் பார்த்தோ அவன் எதையும் சொல்லவில்லை.

எப்போதும் போலவே சத்தமாகச் சிறுநீர் கழித்துவிட்டு அவன் அறையைவிட்டுப் போனான்.

ஆனால் தாலியும் சான்றிதழும் வசுமதிக்குக் கொஞ்ச நேரத்துக்குத்தான் சமாதானத்தைத் தந்தன. மீண்டும் மீண்டும் அவளைச் சுற்றிப் பிணைந்திருந்த முட்டை நாற்றம் வீசும் பாம்பின் உஷ்ண மூச்சு அவள் முகத்தில் பட்டு வசுமதியின் மனதில் மீண்டும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் மண்டச் செய்தது.

தன்னுடன் வீட்டில் இருந்த ஆள் தன் கணவன்தானா என்ற சந்தேகம் வசுமதிக்கு இருந்த போதும் ஆச்சரியமாக அவளுடைய அலுவலக வேலை மட்டும் எந்தவிதமான குழப்பமோ தடையோ இல்லாமல் நிறைவேறிக் கொண்டிருந்தது. அதிகம் அலட்டிக் கொள்ளாமலே தான் செய்ய வேண்டிய அலுவலகக் காரியங்களும் அவற்றைச் செய்ய வேண்டிய முறைகளும் தன் மனதிற்குத் தோன்றிக் கொண்டே இருப்பதை எண்ணி வசுமதி மீண்டும் மீண்டும் வியந்தாள்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் தனது அலுவலக் வேலைதான் தனது உண்மையான அடையாளமாக இருக்குமோ என்றும் தன் வீட்டில் இருக்கும் மனிதனும் அவனுடனான வாழ்க்கையும் கெட்ட கனவாக இருக்குமோ என்றும்கூட வசுமதி எண்ண ஆரம்பித்தாள்.

பிற்பகல் மூன்றரை மணி சுமாருக்கு சாப்பாட்டு மேசையில் அம்ர்ந்தபடி மடிக்கணினியில் மும்முரமாகத் தட்டச்சு செய்து கொண்டிருந்த வசுமதியைப் பின்னாலிருந்து வந்த வாசுதேவன் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான். அவன் கைகள் அவள் உடம்பின் முன்பிறத்தில் வெகு உரிமையோடு அலைந்து திரிந்தன.

“ஒரு குட் நியூஸ். பாதி சம்பளம் கொடுக்க முதலாளி ஒத்துக்கிட்டான். ஒரு போடு போட்டவுடனேயே அரண்டு போயிட்டான் கம்மனாட்டி” என்று அவள் காதில் வாசுதேவன் கூவினான். அப்படிச் சொல்லும்போது அவனுக்கு லேசாய் மூச்சிரைத்தது.

வசுமதி அவசரமான வேலைக்கு இடையே தனது அனுமதி இல்லாமல் தன்னை இறுகக் கட்டிக் கொண்டிருக்கும் வாசுதேவனைத் தள்ளிவிடத்தான் நினைத்தாள். அவன் முகமோ, உருவமோ, குரலோ, செயல்களோ அவன் தொடர்பான எதுவுமோ அவளுக்குப் பரிச்சயமானவையாக இல்லை.

ஆனால் அவன் வாயில் பொரித்த முட்டையின் வாசம் பலமாய் அமர்ந்திருந்தது. அந்தக் கணத்தில் வாசுதேவன் உருவம் களைந்து அவளைச் சதா சர்வ காலமும் பின் தொடரும் முட்டை நாற்றம் வீசும் பாம்பாக மாறியிருந்தான். அந்த நாகம் வசுமதியைத் தனது கட்டுக்குள் வைத்திருந்தது. அந்த ஒரே காரணத்துக்காக வசுமதி ஒரு மெல்லிய பெருமூச்சோடு அவனுடைய அரவணைப்புக்குள் முழுவதும் தன்னை ஒப்புக் கொடுத்தவளாய்ப் பின்னால் சாய்ந்து கொண்டாள்.

எல்லாம் சரியாய்த்தான் நடக்கும் என்று அவள் வாய் ஓயாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அதுதான் இங்கு இதுவரைக்கும் நியதியாய் இருந்து வந்திருக்கிறது.

இனிமேலும் இதுவேதான் இங்கு நியதியாக இருக்கும்.

பிற படைப்புகள்

Leave a Comment