வெட்டுக்கிளிகளின் மென் தாக்குதல்
டோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்

by olaichuvadi

 

அந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக எந்த ஒரு கருத்தோ புரிதலோ இருப்பதில்லை, ஏனெனில் பருவநிலை போன்ற சின்ன விசயங்களை அறிந்து வைத்திருப்பதற்குக் கூட பட்டறிவு தேவைப்படுகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்து வளர்ந்திருந்த மார்க்ரெட்டுக்கு போதிய அனுபவம் இருக்கவில்லை. அவளது கணவர் ரிச்சர்டும் நெடுங்கால உழவனான அவனது வயது முதிர்ந்த தகப்பனார் ஸ்டீபனும்தான் மேற்குறிப்பிடப்பட்ட ஆண்கள், அவர்கள் இருவரும் பல மணி நேரங்களாக இந்த மழை அழிவைத் தரவல்லதா அல்லது கடும் எரிச்சலை மட்டும் தந்துவிட்டு நின்று போகக் கூடியவையா என்று பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. மார்க்ரெட் வயலில் உழைக்கத் துவங்கி மூன்றாண்டு காலம் ஆகிவிட்டது.

அவள் வீட்டு ஆண்கள் ஒவ்வொரு முறையும் பருவநிலை, மண், அரசாங்கம் என அனைத்தைக் குறித்தும் நம்பிக்கையற்ற வார்த்தைகளாகவே சொல்லிக் கொண்டிருக்கும் போதும் இன்னும் எப்படி குடும்பம் நொடிந்துவிடாமல் இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவளுக்கு மொழி பிடிபடத் தொடங்கிவிட்டது, உழவின் மொழி. இத்தனை புகார்கள் ரிச்சர்டிடமிருந்தும் ஸ்டிபனிடமிருந்தும் வந்து கொண்டிருந்த பின்னரும் தமது வாழ்வாதாரம் நசியாதிருப்பதை அவள் கவனித்தாள். பெரிய வளம் அடைந்துவிடவில்லை என்றபோதும் அவர்கள் செளகரியமாகத்தான் நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் விதைத்திருந்தது சோளம். உயர்ந்து உலர்ந்திருந்த காற்றுவீசும் பகுதியான சாம்பேசி செங்குத்துச்சரிவுகளின் வன்னெல்லைகள் வரை நீண்டு செல்லும் நிலத்தில் மூவாயிரம் ஏக்கர் அளவிற்குப் பரவி இருந்தது வயல்கள். கூதலில் குளிர்ந்தும் மூட்டமாகவும் இருக்கும் நிலம் இப்போது ஈரப்பதமான காலத்தில் மைல் கணக்கில் பசுமை போர்த்தியிருக்கும் ஈரத்தின் மீதிருந்து வெப்பம் ஆவியாகிப் பரவுவதாக இருந்தது. இத்தகைய எழில்மிகு நாட்களில் நீல விசும்பில் அற்புதமாய் காற்று வீசும். கீழே நாட்டுப்புறத்தில் விரிந்திருக்கும் வன்பசுமை மடிப்புகளும் பள்ளங்களும் நதிகளைக் கடந்து இருபது மைல்கள் வரை நீண்ட நிலத்தில் வான் கிழிக்கும் கூர்மையுடன் மிடுக்காக நிற்கும் நெடுவரைகளும் இருக்கும். வானம் அவள் விழிகளில் கடுத்தது, அவளுக்கு திறந்தவானின் ஒளிர்வு அத்தனை பழக்கமில்லை. நகரத்தில் இருக்கும் ஒருவர் அதிகமாக வானத்தைப் பார்ப்பதற்கில்லை. அன்று மாலை, ‘வடக்கின் பிரதேசங்களில் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் வெட்டுக்கிளிகள் இங்கு வந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறது’ என்று ரிச்சர்ட் சொன்ன போது மரத்தின் மேல் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு அணிச்சையாகத் தோன்றியது. பூச்சிகள், திரள் திரளாக – கொடுமை! ஆனால் ரிச்சர்டும் பெரியவரும் தங்களது புருவங்களை உயர்த்தி அருகிலிருந்த மலையுச்சியைப் பார்த்தனர். ‘ஏழு ஆண்டுகளாக இந்த வெட்டுக்கிளிகள் இல்லாமல் இருந்தது’ என்று ஒருவர் சொல்ல, மற்றொருவர், ‘அவை சுழற்சி முறையில் தான் வரும்’ என்றார். ’இந்த ஆண்டு நமது விளைச்சல் எல்லாம் நாசம்தான்.’

ஆயினும் வழமை போலவே அவர்கள் வயலில் உழவு மேற்கொண்டனர். ஒரு தினம், மதிய இடைவெளிக்காக இல்லம் நோக்கி சாலையில் நடந்து வந்த போது பெரியவர் ஸ்டீபன் நின்று விரலுயர்த்திச் சுட்டி, ‘அங்கே பார், அங்கே பார்’ என்று கத்தினார். ‘அவை வந்துவிட்டன!’
அதைக் கேட்ட மார்க்ரெட் மலையுச்சியைப் பார்ப்பதற்காக அவர்களிடம் ஓடிச்சேர்ந்தாள். சமையலறையிலிருந்து பணியாட்கள் வெளிவந்தனர். அனைவரும் நின்று வெறித்துப் பார்த்தனர். மலைகளின் பாறையுச்சிகளில் இருந்து துரு நிறத்தில் காற்று வீசியது போலிருந்தது. வெட்டுக்கிளிகள். அவை வந்துவிட்டன.

உடனடியாக ரிச்சர்ட் சமையல்காரனிடம் கத்தினான். பெரியவர் வீட்டு பராமரிப்பவனை நோக்கிச் சத்தமிட்டார். சமையல்கார பையன் மரக்கிளையில் ஏறி அடிப்பதற்காக துருபிடித்த கலப்பையினை எடுக்கச் சென்றான். அவ்வாறுதான் ஆபத்து சமயங்களில் பணியாளர்களுக்கு அழைப்பு விடப்படும். வீடு பராமரிக்கும் பையன் தகர டப்பாக்களை அல்லது எந்த பழைய உலோகங்கள் கிடைத்தாலும் சரியென்று எடுத்து வருவதற்காக கடைக்கு ஓடினான். பண்ணை முழுவதுமே மணியொலியின் ஆர்ப்பரிப்பு ரீங்கரித்தது. பணியாட்கள் சுற்றுச் சுவர்களிலிருந்து திபுதிபுவென வெளியேறி வந்து மலையைச் சுட்டிக் காட்டி கிளர்ந்து ஒலியெழுப்பினர். விரைவிலேயே அவர்கள் அனைவரும் இல்லத்தருகே வந்து சேர்ந்ததும் ரிச்சர்டும் ஸ்டீபனும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கத் தொடங்கினர் : ‘சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம்.’
இரு வெள்ளைக்காரர்களும் பணியாளர்களும் அங்கிருந்து ஓடிச் சென்ற சில நிமிடங்களில் பண்ணை நிலமெங்கிருந்தும் தீயிலிருந்து புகையெழுவதை மார்க்ரெட்டால் காண முடிந்தது. அரச எச்சரிக்கை வந்திருந்த போது ஒவ்வொரு விளைநிலங்களிலும் விறகுகளும் புற்களும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. ஏழு பாத்திகளில் விளைச்சல் மண் இருக்க, அவற்றில் எல்லாம் புதிய சோளக்கருதுகள் முளைவிட்ட நிலையில் இருந்தன. அது அடர் செந்நிலத்தின் மீது ஒரு இன்பசும் அடுக்காக தோற்றமளித்தது.

அந்த ஒவ்வொரு பாத்தியைச் சுற்றிலும் தடிமனான புகைமேகங்கள் எழுந்தன. புகை இன்னும் செறிவாகவும் கருமையாகவும் இருக்கும் பொருட்டு ஆட்கள் தீயில் உலர்ந்த இலைகளைக் கொட்டினர். மார்க்ரெட் மலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு நெடிய, துரு நிறத்துத் தாழ்மேகம் வீங்கியபடி முன்னகர்ந்து வந்து கொண்டிருந்தது. இதோ இதோ வெட்டுக்கிளிகள் வந்து சேர்ந்து விட்டன என்பதை அறிவிப்பதற்காக தொலைபேசி மணியடித்துக் கொண்டிருந்தது. ஸ்மித் என்ற கிழவனது நிலத்தின் விளைபொருட்கள் ஏற்கனவே உண்ணப்பட்டு தரைமட்டமாகி விட்டிருந்தது. சீக்கிரம், நெருப்பைக் கொளுத்துங்கள்! இயல்பாகவே ஒவ்வொரு விவசாயியும் தத்தம் விளைச்சல்களை விட்டுவிட்டு தாண்டிச் சென்று வேறு விவசாயியின் நிலத்தினை வெட்டுக்கிளிகள் தாக்கினால் பரவாயில்லை என்ற எண்ணம் உதிப்பது இயல்புதான் என்றபோதும், பிறருக்கு எச்சரிக்கை விடுப்பது என்பதுதான் நியாயம், ஒருவர் அறத்துடன் இருந்தாக வேண்டும்.

நாட்டுப்புறமெங்கும் ஐம்பது மைல்கள் வரையிலும் தீத்தொகுப்புகளில் இருந்து புகை எழுந்த வண்ணமிருந்தது. மார்க்ரெட் தொலைபேசி அழைப்புகளுக்கு விடையளித்துக் கொண்டே இடையிடையே வெட்டுக்கிளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். காற்று இன்னுமின்னும் கருமை கொண்டபடியே இருந்தது, ஒரு விசித்திரமான இருண்மையில் வெய்யோன் தகித்துக் கொண்டிருந்தான். காற்று புகையால் நசுங்கி கெட்டிப்பட்டிருக்கையில் கதிரொளி ஊடாக புகுந்து பலவாறாய் சிதறுண்டிருந்தது, அது தடித்துக் கொதிக்கும் ஆரஞ்சுப் பழம் போல கருமான் உருவாக்கும் பிழம்பு போல இருந்தது. அது புயலின் கணத்துடன் நசுக்கக் கூடியதாகவும் இருந்தது. வெட்டுக்கிளிகள் விரைவுடன் வந்து கொண்டிருந்தன. அரைவானம் இருண்டிருந்தது. சிகப்பு முக்காடிருக்க அதற்குப் பின்னே ஒரு பூச்சித்திரள் முன்னேறி வந்தபடி இருக்க, முதன்மையான பூச்சித்திரளானது இன்னும் மேலே மேலே கரித்துச் செறிந்த மேகங்களில், ஏறத்தாழ சூரியனையே தொட்டுவிடும் உயரத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தது.

மார்க்ரெட் தான் எவ்விதம் உதவி செய்ய முடியும் என்று தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் புரியவில்லை. நிலத்திலிருந்து கிழவன் ஸ்டீபன் வீட்டிற்குத் திரும்பியிருந்தார். ‘நம் கதை முடிந்தது மார்க்ரெட், நம் கதை முடிந்தது’ என்று சொன்னார். ‘நம் வயலில் இருக்கும் அனைத்து இலைகளையும் இன்னும் அரைமணி நேரத்திற்குள் அந்த சனியன்கள் தின்று தீர்த்துவிடும்! ஆனால் இப்போது முற்பகல்தான் ஆகி இருக்கிறது. போதுமான புகையைப் போட்டால், சூரியன் மறையும் வரை போதுமான கூச்சல்களை எழுப்பினால் போதும் அவை வேறு எங்கேனும் போய் அடையும்’ என்று சொல்லிவிட்டு, ‘பான பாத்திரத்தைக் கொதிக்கவைத்தபடி இரு, இந்த வேலை கடும் தாகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.’

மார்க்ரெட் சமையலறைக்குச் சென்று அடுப்பை மேலேற்றி நீரைக் கொதிக்க வைத்தாள். அப்போது தகரக் கூரையில் வெட்டுக்கிளிகள் தொப் தொப்பென்று விழுவதால் ஏற்படும் பேரொலியும் கூரையின் சரிவில் சரித்துக் கொண்டு வரும் வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தும் கீறலொலியும் ஒலியும் கேட்டது. அவைகள் முதன்மை கூட்டத்தைச் சார்ந்தவைதான். மருதங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெட்ரோல் டப்பாக்களிலும் மற்றும் இதர உலோகங்களிலும் இடித்தும் அடித்தும் மோதியும் எழுப்பும் ஒலிகள் வந்தபடி இருந்தன. மார்க்ரெட் , கொதிக்கின்ற ஆரஞ்சு நிறத்து இன்சுவை தேனீரை ஒரு காலி பெட்ரோல் டப்பாவிலும் நீரை மற்றொன்றிலும் நிறைப்பதைப் பொறுமையற்று காத்திருந்தார், ஸ்டீபன். அதற்கிடையில் இருபதாண்டுகளுக்கு முன்பு தான் எப்படி இந்த வெட்டுக்கிளிகளால் நொடிந்து போனேன், அவை எப்படி தனது உழவு நிலத்தை மொட்டையடித்தன என்பதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து கரத்திற்கு கையில் ஒன்றாக இரண்டு கணமான டப்பாக்களையும் அதன் மேல் முனையில் வடிவமைக்கப்பட்டிருந்த மர பிடிமானத்தைப் பற்றி ஏந்திக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவாறே, தாகத்துடன் வேலை செய்து கொண்டிருப்பவர்களை நோக்கி மெல்லோட்டம் எடுத்தார்.

இந்த நேரத்தில் சமையலறையின் கூரை மீது வெட்டுக்கிளிகள் கடுமையாக ஆலங்கட்டி மழையெனப் பொழிந்து கொண்டிருந்தன. அது கடும் புயல் போல ஒலித்தது. மார்க்ரெட் வெளியே கருங்காற்றினூடே குறுக்கும் மறுக்குமாக பறந்து கொண்டிருந்த வெட்டுக்கிளிகளை எட்டிப்பார்த்தாள். மனதைத் திடப்படுத்திக் கொண்டு அதற்குள் ஓடிச் சேர்ந்தாள். ஆண்களால் செய்ய முடிந்தவற்றை அவளாலும் செய்ய இயலக்கூடும். தலைக்கு மேல் வளி கணத்திருந்தது, எங்கும் வெட்டுக்கிளிகள். அவள் மீது வெட்டுக்கிளிகள் உரசின, அவள் அதைத் தள்ளி வழித்துவிட்டபடி நடந்தாள். பழுப்பு நிறத்தில் பெரியதாக இருந்த அவை தன் மணிவிழிகளால் அவளைப் பார்த்தபடியும் தனது கோட்டுப்பிளவுகள் கொண்டிருந்த கால்களால் தொற்றியபடியும் இருந்தன. அவள் தனது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அருவெறுப்புடன் மீண்டும் வீட்டிற்கு ஓடி உட்புகுந்து கொண்டாள். அங்கு முன்பை விட இன்னும் பெரிய புயலின் அடியில் இருப்பது போலிருந்தது. இரும்புக் கூரை அதிர்ந்து கொண்டிருந்தது. நிலங்களிலிருந்து வரும் இரும்படியின் இரைச்சல் இடிபோல ஆகியிருந்தது. அவள் வெளியே பார்க்கையில் பூச்சித் திட்டுக்களால் சூழப்பட்ட மரங்கள் நிலைத்தும் விசித்திரமாகவும் தோற்றமளித்தன. அவற்றின் கிளைகள் எடையினால் நிலன்நோக்கி குனிந்தன.

எங்கும் வெட்டுக்கிளிகள் ஊர்ந்து செல்லவே, பூமியே நகர்வதைப் போன்ற உளமயக்கு எழுந்தது. அவளால் நிலத்தையே பார்க்க முடியாத அளவிற்குப் பூச்சித்திரள் நிறைந்திருந்தது. மலைப்புறமாகப் பார்த்தால் அத்திரளே மழையை உருவாக்கி ஓட்டி வருவது போல இருந்தது. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆதவன் மீது புதிய வெட்டுக்கிளிக் கூட்டங்கள் கறைகளை ஏற்படுத்தத் துவங்கி இருந்தன. அது ஒரு அரையிரவு, கொடுங்கருமை. பிறகு ஒரு புதரிலிருந்து ஒரு கூரிய உடைவொலி எழுந்தது, ஒரு கிளை முறிந்திருந்தது. பிறகு இன்னொன்று. சரிவுநிலத்தில் ஊன்றியிருந்த மரம் மெல்ல சாய்ந்து தரையில் படுத்துக் கொண்டது. பூச்சிகளின் ஆலங்கட்டி மழையின் ஊடாக ஒருவன் ஓடி வந்துகொண்டிருந்தான். இன்னும் நிறைய தேனீர், நிறைய தண்ணீர் தேவைப்பட்டது. மார்க்ரெட் அவற்றைத் தந்து அனுப்பினாள். அவள் அடுப்பினை மூட்டி, டப்பாக்களைத் திரவங்களால் நிறைத்துக் கொண்டிருந்தபடியே இருந்தாள். அப்போது பிற்பகல் நான்கு மணி ஆகிவிட்டிருக்க இன்னும் இரண்டு மணி நேரங்களுக்குத் தலைக்கு மேல் வெட்டுக்கிளிகள் ஊற்றிக் கொண்டிருந்தபடியே இருந்தன.

பெரியவர் ஸ்டீபன் ஒவ்வொரு அடிவைக்கும் போதும் தன் பாதத்தின் கீழ் கரக் முரக் என்று வெட்டுக்கிளிகளை நசுக்கியபடி தன் உடல் முழுவதும்  வெட்டுக்கிளிகள் ஒட்டியபடி இருக்க, தனது பழைய தொப்பியைக் காற்றில் அலைத்தசைத்தபடி திட்டிக் கொண்டும் சபித்துக் கொண்டும் நடந்து வந்தார். நிலைப்படியில், கொஞ்சம் நின்றார். பரபரவென வெட்டுக்கிளிகளை வழித்து இழுத்து கீழெறிந்துவிட்டு, வெட்டுக்கிளிகள் அற்ற வாழ்வறைக்குள் நுழைந்தார்.

’அத்தனை விளைச்சலும் போயிற்று, எதுவும் மிஞ்சவில்லை,’ என்றார்.

ஆனால் முரசுகள் இன்னும் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது, ஆட்கள் இன்னும் கத்திக் கொண்டிருந்தனர். ‘பிறகு ஏன் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று வினவினாள் மார்க்ரெட்.

’முதன்மைத் திரள் இன்னும் அடங்கியபாடில்லை. அவை மிகுந்த எண்ணிக்கையில் முட்டைகளைக் கொண்டுள்ளன. அவை தன் முட்டைகளை இடுவதற்கும் தங்குவதற்கும் இடம் தேடிக் கொண்டிருக்கின்றன. நமது வயலில் அந்த முதன்மைத் திரளைத் தங்கவிடாது செய்ய இயன்றால், அதுவே போதும். அவற்றிற்கு முட்டையிட மட்டும் இடம் கிடைத்துவிட்டால், அதற்குப் பிறகு நம்முடைய அனைத்து விளைச்சலும் தின்னப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு விடும், பிறகு பிஞ்சு வெட்டுக்கிளிகள் வேறு வரும்.’அவர் சட்டையில் எப்படியோ ஒட்டிக் கொண்டிருந்த ஒற்றை வெட்டுக்கிளியை பிடித்து எடுத்து தனது கட்டைவிரல் நகத்தினால் பிதுக்கி இரண்டாகப் பிளந்தார்; அதற்குள் முட்டைகள் பெருகிக் கிடந்தன. ‘இது இலட்சோப இலட்சமாகப் பெருகுவதை கற்பனை செய்து பாரேன். எப்போதாவது இளம் வெட்டுக்கிளிகள் திரள்வதைப் பார்த்திருக்கிறாயா? இல்லையா? ம், நீ அதிர்ஷ்டக்காரிதான்.’

இதைக் கேட்டதும், மார்க்ரெட் வளர்ந்த வெட்டுக்கிளித்திரளே போதுமான அளவு கொடூரமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். வெளியே இப்போது புவிமீதான வெளிச்சம் மெலிந்து வெளிர் மஞ்சளாக இருந்தது, நகரும் நிழலால் அது கருத்துக் கொண்டிருந்தது; மேகங்கள் ஏற்கனவே மழைச்சாரதி போல் பறந்து கொண்டிருக்கும் பூச்சிகளால் தடித்தும் மெலிந்தும் மாறி மாறி உருக்கொண்டபடி இருந்தது. கிழட்டு ஸ்டீபன் சொன்னார் : ‘அவை காற்றைப் பின்னுக்குத் தள்ளி முந்திக்கொண்டிருக்கின்றன, பெரிய விசயம்தான்.’

’அது என்ன அத்தனை மோசமா?’ என்று மார்க்ரெட் அச்சத்துடன் கேட்க, கிழவன் ஆர்வத்துடன், ‘நம் கதை முடிந்துவிட்டது, இந்த திரள் கடந்து கூட போகலாம், ஆனால் ஒன்றன் பின் ஒன்றாக வடக்கிலிருந்து அவை பெருகி வந்தபடியே இருக்கும். அதற்குப் பிறகு படும் வெட்டுக்கிளிகள். ஒரு முன்று நான்கு ஆண்டுகளுக்கு இந்த கூத்து தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மார்க்ரெட் செய்வதறியாது அமர்ந்து யோசித்தாள், சரி, இதுதான் முடிவு என்றால், வேறென்ன செய்யக்கூடும். இப்போது என்ன செய்வது?நாங்கள் மூவரும் நகரத்திற்குச் செல்ல வேண்டி இருக்கும். ஆனால் உடன் திரும்பி ஸ்டீபனைப் பார்த்தவுடன், இந்த வயதானவர் ஏற்கனவே தனது நாற்பதாண்டு சீரிய உழவு வாழ்க்கையில் இரு முறை முற்றிலும் நொடித்துப் போய்விட்டும் கூட, நகரத்திற்குக் குடிபெயர்ந்து ஒரு எழுத்தர் பணியில் சேரவில்லை என்பதால்  இப்போதும் அது இயல்வதல்ல, என்பது புலப்பட்டது. அவருக்காக அவள் இதயம் வலித்தது. அவர் நாசியிலிருந்து வாய் வரை ஆழ்ந்த கவலை ரேகைகள் ஓட, கடுமையான களைப்பில் இருப்பதாகத் தோன்றினார். பாவப்பட்ட கிழட்டு ஜன்மம். எப்படியோ தனது ஜோப்பிற்குள் நுழைவிட்டிருந்திருந்த ஒரு வெட்டுக்கிளியை அதன் ஒற்றைக் காலைப் பிடித்துக் காற்றில் தொங்கவிட்டார். ‘இந்த காலில் தான் நீங்கள் இரும்புச் சுருள்வில்லினுடைய ஆற்றலைக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று நகைச்சுவை உணர்வுடன் அந்த வெட்டுக்கிளியிடம் சொன்னார். கடந்த மூன்று மணி நேரங்களாக அவர் வெட்டுக்கிளிகளோடு சண்டையிட்டுக் கொண்டும், அவற்றை நசுக்கியும், அவற்றைக் கண்டு வெறியுடன் கத்திச் சண்டையிட்டும், அவற்றை மேடுகளாகக் கூட்டிக் குவித்து கொளுத்தியும் வந்தபோதும், இந்த வெட்டுக்கிளியின் தலைமயிரைக் கூடக் கிள்ளாமல் அப்படியே கவனமாக எடுத்துச் சென்று கதவைத் திறந்து அதன் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளட்டும் என்பது போல விட்டுவிட்டார். இது மார்க்ரெட்டிற்கு அமைதியளித்தது, காரணமே இன்றி மகிழ்சிக்குள்ளாக்கியது. கடந்து மூன்று வருடங்களில் வீட்டு ஆண்கள் தங்களது இறுதியான திரும்பி மீளமுடியாத அழிவு குறித்து இப்போதுதான் புதிதாக பேசுகிறார்கள் என்றில்லை, என்பது அவள் நினைவில் எழுந்தது.
‘செல்லச் சிறுமியே, எனக்கு குடிப்பதற்கு எதேனும் தயார் செய்கிறாயா?’ என்று ஸ்டீபன் சொன்னதும், அவருக்கு ஒரு போத்தல் விஸ்கியை எடுத்து வைத்தாள்.

இடையில், தனது கொழுநன் வெளியே வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கும் பூச்சிப் புயலின் இடையே, கலப்பைமணிகளை அடித்துக் கொண்டும், இலைகளைத் தீக்குத் தின்னத் தந்தபடியும் இருக்க அவனது உடலெங்கும் வெட்டுக்கிளிகள் ஒட்டிக் கொண்டிருப்பதை எண்ணிப் பார்த்தாள். மேனி சிலிர்த்தது. ‘அவை உங்களைத் தொடுவதை எப்படித்தான் உங்களால் அனுமதிக்க முடிகிறதோ?’ என்று ஸ்டீபனைக் கேட்டாள். அவர் அவளை ஒவ்வாமையுடன் பார்த்தார். அவள் பணிவைச் சூடிக் கொண்டாள். ரிச்சர்ட் அவளை மணமுடித்த புதிதில், அவளது தலைமுடி பொன்னிறத்தில் அலையடித்துக் கொண்டும் கூர் நகங்கள் செஞ்சாயமேற்றும்  நவநாகரீக தோற்றத்தில்  இருக்க அவளை கண்ணாற ஸ்டீபன் பார்த்த போது இருந்த அதே கூச்சத்தைப் போன்ற பணிவு. ஆனால், இப்போதோ அவள், கணமான பாவாடையும், சரியான பதத்தில் இருக்கும் காலுறையும் அணிந்திருக்கும் ஒரு உதாரணமான உழவனின் மனைவி, இன்னும் காலம் போனால் அவள் தன் மீது வெட்டுக்கிளிகள் அமர்வதைக் கூட ஏற்றுக் கொள்ளக்கூடும்.

இரண்டு மிடறுகள் விஸ்கியை உள்நுழைத்த பிறகு மீண்டும் போருக்குப் புறப்பட்டு , பளபளக்கும் வெட்டுக்கிளிகளின் பழுப்பு நிற அலையின் ஊடே மெல்ல மறைந்தபடி சென்றார் பெரியவர் ஸ்டீபன்.

மணி ஐந்து, ஆதவன் இன்னும் சற்று நேரத்தில் அந்தம் கொள்வான். அதன் பின் இந்த திரளும் அடங்கும். தலைக்கு மேலே இதுவரை இருந்ததிலேயே அதிகத் தடிமனுடன் அவை பறந்தன. மின்னும் பழுப்பு நிறத்தில் மரங்கள் கந்தலாகிக் காட்சி தந்தன.

மார்க்ரெட் அழத்தொடங்கினாள், அங்கு நடப்பவை யாவுமே மிகுந்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக இருந்தது. மோசமான பருவநிலை இல்லையென்றால் வெட்டுக்கிளிகள், வெட்டுக்கிளிகள் இல்லையென்றால் படைப்புழுக்கள் அல்லது காட்டுத்தீ. எப்போதும் ஏதேனும் கேடு வந்தபடியே இருக்கிறது. வெட்டுக்கிளி படையின் சலம்பல்கள் பெரிய வனத்தில் பொழியும் பெருமழை போல் இருந்தது. தரை முழுவதும் வீங்கிப் பெருகியபடி இருக்கும் பழுப்பு நிற அலைகளால் மறைந்து போயிற்று, அது பார்ப்பதற்கு வெட்டுக்கிளிகளால் மூழ்கடிக்கப்படுவதைப் போல, அருவெறுக்கத்தக்க பழுப்புக் குருதியில் கரைவதைப் போல இருந்தது. அவற்றின் எடையினால் கூரை மூழ்கிவிடுவது போலவும், கதவு தன் பிடிகளைத் தாங்க முடியாமல் உடைந்து அவற்றினால் அறை முழுவதும் நிரம்பி விடுவதுபோலவும் தோன்றியது. அப்போது இரவு செறிவு பெற்றுக் கொண்டிருந்தது. சாளரத்தின் வழியே வானை நோக்கினாள். மெலிந்திருந்த காற்று தென்பட்டது, அசையும் கரிய மேகங்களிடையே நீலம் துண்டுத் துண்டாகத் தெரிந்தது. நீல இடைவெளிகள் குளிர்ந்தும் திண்மையுடனும் இருந்தன, சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கி விட்டிருப்பதாக தெரிந்தது. பூச்சிமூட்டத்திலிருந்து வடிவங்கள் வெளிவருவது தென்படத் தொடங்கியது. முதலில் துணிவுடன் கிழவனார் ஸ்டீபன் நடந்து வர, அவரைத் தொடர்ந்து கடுமையான வேலையினால் களைப்புற்று தொய்வுடன் ரிச்சர்ட் நடந்து வந்தான். அவனைத் தொடர்ந்து அவர்களது வேலைக்காரர்கள். அனைவர் மீதும் பூச்சிகள் இழைந்து கொண்டிருந்தன. மணியோசை நின்றிருந்தன. எண்ணற்ற இறக்கைகளின் சலசலப்புச் சத்தத்தைத் தவிர வேறெதையும் மார்க்ரெட்டால் செவியுணர முடியவில்லை.

இரண்டு ஆண்களும் பூச்சிகளை அடித்து உதறித் தள்ளிவிட்டு வீட்டிற்குள் வந்தனர்.
‘ம், அற்புதம்’ என்று சொல்லியபடியே அவளது கன்னங்களில் முத்தமிட்டுவிட்டு, ‘முதன்மைத் திரள் கடந்து விட்டது’ என்றான் ரிச்சர்ட்.

இன்னும் பாதி அழுகையில் இருந்தபடியே, ‘கடவுளே என்ன கொடுமை’ என்றவள், ‘இங்கு நடந்து கொண்டிருப்பதே, போதுமான அளவு தீமைதான் இல்லையா?’ என்றாள். மாலை நேரத்து வளி தடிமனும் கருமையும் குன்றி தற்போது தெளிந்தும் நீலமாகவும் ஆகிவிட்டிருந்த போதும் அதன் குறுக்கே இவ்வாறு முரண்டுகொண்டிருந்த பூச்சிகளின் ரீங்கரிப்பு லயம், வளியை மட்டுமின்றி, மரங்கள், கட்டிடங்கள், புதர்கள் மற்றும் புவி என அனைத்தையும் குறுக்கிட்டுக் கொண்டிருந்தது. அவை அசைவுறும் பழுப்பு நிற கூட்டத்திற்குள் சென்று சேர்ந்தது.

’மழை பொழிந்து அவற்றை இங்கேயே தங்கவைக்காமல் மட்டும் இருந்தால்’ என்று கொஞ்சம் இடைவெளி விட்ட ஸ்டீபன், ‘மழை பெய்து, அவை நீரால் எடை கொள்ளாமல் மட்டும் இருந்தால், அவை சூரிய எழுச்சியின் போது இங்கிருந்து கிளம்பிவிட்டிருக்கும்.’

’நாம் சமாளிப்பதற்காக கொஞ்சம் பிஞ்சு வெட்டுக்கிளிகள் இருக்கும்’ என்றான் ரிச்சர்ட். ‘ஆனால், எப்படியும் அவை முதன்மை திரளைப் போல அழிவை உருவாக்குபவை அல்ல, அவை செய்யும் நாசமே வேறு.’

மார்க்ரெட் எழுந்து, விழிநீரைத் துடைத்துக் கொண்டு, தான் அழவில்லை என்பது போன்ற பாவனையை அடைந்து அவர்களுக்காக கொஞ்சம் இரவுணவு தயாரித்து எடுத்து வந்தாள், பணியாளர்களோ நகரவே முடியாத அளவிற்குக் களைப்புற்றிருந்தனர். அவள் அவர்களை சுற்றுச்சுவர் கடந்து சென்று ஓய்வெடுக்க வேண்டி அனுப்பிவிட்டிருந்தாள்.

இரவுணவை பரிமாறிவிட்டு கவனித்தபடி அமர்ந்திருந்தாள். ஒரு சோளப் பயிர் கூட எஞ்சவில்லை என்று கேள்வியுற்றாள். ஒன்று கூட இல்லை. வெட்டுக்கிளிகள் வெளியேறும் அடுத்த கணமே அவர்கள் விதைப்பு இயந்திரத்துடன் வந்து நிற்கப் போகிறார்கள். அனைத்தையுமே ஆரம்பத்திலிருந்து அவர்கள் தொடங்கியாக வேண்டும்.

முழுவயலுமே இளம் வெட்டுக்கிளிகளால் நிரம்பப் போகிறது எனில், உழப்பதன் பயன் தான் என்ன என்று மார்க்ரெட் வியப்புடன் சிந்தித்தாள். ஆனால், அவர்கள் அரசாங்கம் வழங்கிய துண்டு பிரசூரங்களில் எப்படி இளம் வெட்டுக்கிளிகளைச் சமாளிப்பது என்ற வழிமுறைகள் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருந்ததை கவனித்தபடி அமர்ந்திருந்தாள். பசுந்தரையில் அவற்றின் அசைவுகளைக் கண்காணிக்கும் விதமாக முழுக்க முழுக்க வெளியில் காவல் இருந்து கொண்டிருக்க வேண்டும். எப்போதெல்லாம், சிறிய, நிமிண்டிக் கொண்டிருக்கும் கருப்பு நிற இளம்வெட்டுக்கிளிக் கூட்டத்தைக் காண்கிறீர்களோ, அப்போதெல்லாம் அவற்றைச் சுற்றி வட்டாகழி போல குழி வெட்டிவிட்டு அவற்றின் அரசாங்கம் வழங்கி இருக்கும் நச்சினைத் தெளிக்க வேண்டும். இந்த பேரிடரைச் சரியாக எதிர்கொள்ளும் பொருட்டு இந்த உலகளாவிய திட்டத்திற்கு அனைத்து உழவர்களும் ஒத்துழைப்புத் தந்தாக வேண்டும் என்பது அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால், வெட்டுக்கிளிகளை அவை உருவாகும் இடத்திலேயே, அதாவது அவை இளம் வெட்டுக்கிளிகளாக இருக்கும் போதே ஒருவர் அழித்தொழிக்க வேண்டும். ஆண்கள் இருவரும் ஏதோ போருக்குத் திட்டம் வகுப்பதைப் போல பேசிக் கொண்டிருப்பதை மார்க்ரெட் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இரவு மெளனித்திருந்தது. அரிதாக கேட்கும் கிளைமுறிவொலி அல்லது மரம் வேரறுந்து வீழும் சத்தம் இவற்றைத் தவிர வெளியே தங்கி இருக்கும் பெரிய இராணுவத்தின் இருப்பிற்குச் சாட்சியாக எந்த குறிப்பொலியும் இருக்கவில்லை.

சடலத்தைப் போல் படுத்துறங்கிக் கொண்டிருந்த ரிச்சர்டின் மஞ்சத்தில் அவன் அருகாமையில் மார்க்ரெட் பயங்கரமாக துயில் கொண்டிருந்தாள். காலையில் அவள் எழுகையில் மஞ்சள் நிற சூரியவிழிப்பைக் காணமுடிந்தது. தெள்ளிய கதிரொளி. அதன் மேல் எப்போதாவது நிழற்தீற்றல் வீழ்ந்துவந்தது. அவள் சாளரத்திற்குச் சென்றாள். கிழவனார் ஸ்டீபன் அவளுக்கு முன்னால் அங்கே நின்று கொண்டிருந்தார். மண்டியிருந்த புதர் வனங்களைத் தாண்டி அவரது விழிகுத்தி அகன்று வியந்திருந்தது. பார்ப்பதற்கு உலகில் இருந்த அத்தனை விருட்சங்களும் அத்தனை புதர்களும் ஏன் ஞாலம் முழுமையுமே கிரணங்களின் ஜுவாலையால் கொழுந்து விட்டது போல் இருந்தன. இரவின் பனித்துளிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு வெட்டுக்கிளிகள் தங்களது இறக்கைகளை விரித்து ஆட்டிக் கொண்டிருந்தன. செம்முலாம் பூசப்பட்ட பொன்னிறத்தில் எங்கெங்கும் தேஜஸ் நிறைந்திருந்தது.
அவள் பெரியவரோடு இணைந்து கொள்வதற்காக பூச்சிகளிடையே கவனமாகக் கால்களை வைத்து நடந்து சென்றாள்.  இருவரும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். தலைக்கு மேல் வானம் பூத்திருந்தது, நீலத் தெளிவு இருந்தது.

‘எத்தனை வடிவு’ என்று பூரித்தார் ஸ்டீபன்.

நாம் நஷ்டமடைந்திருக்கலாம், நம் பயிர்கள் நாசமாகி இருக்கலாம், ஆனால் விடியலில் தன் இறக்கைகளை விரித்து பனியை உதறித்தள்ளும் வெட்டுக்கிளிகளைப் பார்த்தவர்கள் உலகில் கொஞ்சம் பேரே இருப்பர் என்று மார்க்ரெட் நினைத்துக் கொண்டாள்.

தொலைவில் தெரிந்த சரிவுகளில் மெஞ்செந்தீற்றல் வானில் தெரிந்தது. அது தடித்தும் பரவியுமிருந்தது. ’அதோ அவை போகின்றன’ என்றார் பெரியவர் ஸ்டீபன். ‘அதோ, முதன்மை இராணுவத்திரள் தெற்கு நோக்கிப் போகின்றன.’

இப்போது மரங்கள், தரை என அவர்களைச் சுற்றி எங்கிருந்தும் தனது இறக்கைகளைத் தட்டிப் படபடக்கின்றன வெட்டுக்கிளிகள். அதைப் பார்க்கையில் தனது சின்னஞ்சிறு வானூர்தியைத் தயார் செய்தபடி, இறக்கைகள் போதுமான அளவிற்கு உலர்ந்துவிட்டனவா என்று அவை ஆய்வு செய்வது போலத் தோன்றியது. அவை கடந்து போகத் தொடங்கின. அடர்புதர்களைத் தாண்டி மைல்கள் தொலைவில் செம்பழுப்புப் புகையெழுந்து உயர்கிறது. வயல்வெளிகளைக் கடந்து, புவியின் முகத்திலிருந்து விலகுவது போல. மீண்டும் சூரிய ஒளி இருள் கொண்டது.

உறைவு கொண்டிருந்த மரக்கிளைகளிலிருந்து அவை எழுந்து சென்றதும், அவை மீதான எடை குறைந்திருந்தது. அதில் வெறும் பட்டைகளும் குச்சிகளும் மட்டுமே மிச்சமிருந்தது, பசுமை இருந்ததற்கான அறிகுறிகள் கூட இல்லை. ரிச்சர்ட் கடைசியில் எழுந்து போகும்வரை காத்திருந்து, பழுப்பு பட்டை மெல்ல மெல்ல மங்கி உடைந்து கரையும் வரை, காலை முழுவதும் மூவரும் இதைப்  பார்த்துக் கொண்டிருந்தனர். அவை முதன்மைத் திரளுடன் சென்று சேரும் பொருட்டு தென்வானில் பழுப்பு தீற்றலாகப் பறந்து கொண்டிருந்தன. முன்பு பசுங்குருத்துகளால் மேலாடை போட்டிருந்த நிலமெங்கும் இப்போது காலியாகவும் நிர்வாணமாகவும் இருந்தன. எங்கும், எதிலும் பசுமையற்ற ஒரு நிலைகுலைந்த நிலக்காட்சி.
நடுப்பகலின் போது செந்நிற மேகம் கடந்து போய் விட்டிருந்தது. அங்கொன்றுமிங்கொன்றுமாக ஓரிரு வெட்டுக்கிளிகள் மட்டுமே தாழப் பறந்து கொண்டிருந்தன. தரையில் காயம்பட்டவைகளும் சடலங்களும் கிடந்தன. ஆப்ரிக்க பணியாளர்கள் மரக்கிளைகளால் அவற்றை ஒருக்கி டப்பாக்களில் அள்ளினர்.
 ‘சூரியனால் சுட்ட வெட்டுக்கிளியை எப்போதாவது உண்டிருக்கிறாயா, மார்க்ரெட்?’ வினவினார் பெரியவர் ஸ்டீபன். ‘முன்பு ஒருமுறை, நான் நொடித்துப் போயிருந்த போது, இருபதாண்டுகளுக்கு முன்பு, நான் சோளக்கருதுகளையும் உலர் வெட்டுக்கிளிகளையும் மட்டுமே மூன்று மாதம் தின்று உயிர்வாழ்ந்தேன். அவை ஒன்றும் மோசமாக இருக்காது, உன்னால் எண்ணிக் கொள்ள முடியும் எனில், வறுத்த மீனைப் போலத்தான் இருக்கும், அவ்வளவுதான்.’

ஆனால் அப்படி நினைத்துப் பார்க்கக் கூட மார்க்ரெட் விரும்பவில்லை.

மதிய உணவிற்குப் பின்னர் இரண்டு ஆண்களும் நிலத்திற்குப் போனார்கள். அனைத்தையுமே மீள்விதைப்பு செய்தாக வேண்டி இருந்தது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் அடுத்த திரள் இந்தப்பக்கமாக பயணம் செய்யாமல் இருக்கக் கூடும். ஆனால் புற்களை வளர்ப்பதற்காக சீக்கிரமாக ஒரு மழை வேண்டுமென அவர்கள் யாசித்துக் கொண்டிருந்தனர், ஏனெனில் அப்போதுதான் கால்நடைகளைப் பசியால் இறக்காமல் காக்க முடியும். வயலில் ஒரு இம்மியளவு கூட பசுந்தழைகள் இல்லை. மார்க்ரெட்டைப் பொறுத்தமட்டில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு வெட்டுக்கிளிகளுடன் மாரடிக்க வேண்டிய எண்ணத்திற்குள் பிணைந்து கொள்ள மனதளவில் முயற்சித்துக் கொண்டிருந்தாள். வெட்டுக்கிளிகள் இனி பருவநிலை போல வரப்போகிறது, நிச்சயமாக. போரில் உயிர்பிழைத்தவளைப் போலத் தன்னை உணர்ந்தாள். இப்படி நசிந்தும் குலைந்தும் இருக்கும் இந்த கிராமப் பகுதியை சிதிலங்கள் என்று சொல்லாவிடில் வேறெதைச் சொல்ல முடியும்?

ஆனால் அந்த வீட்டின் ஆண்கள் இரவுணவை கடும்பசியுணர்வுடன் ஆர்வமாக உண்டனர்.
உண்ணும் போது, ‘இன்னும் கூட மோசமாக இருந்திருக்கக் கூடும்’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘இது இன்னும் கூட மோசமாக இருந்திருக்கக் கூடும்.’

பிற படைப்புகள்

Leave a Comment