ஆனந்த் குமார் கவிதைகள்

by olaichuvadi

திருத்தம்

ஒரேயொரு விதிமுறை மட்டும்
முதலிலேயே தவறிவிட்டது
மூன்றுபேருக்கு மூன்று நாற்காலிகளென
துவங்கிவிட்டது விளையாட்டு

இப்போது
காலி நாற்காலிகளையல்ல
அவர்கள் பார்ப்பது
முடியும் இசையையல்ல
அவர்கள் கேட்பது

சுழன்றோடும் அவர்களின்
உடலெங்கும் பொருந்திவிட்டது
இசையின் ஒளி
ஓடுதலின் களிப்பு
அமர்தலின் இயல்பு

வானின் கீழ்

நல்ல நட்சத்திர இரவில்
இவனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது
வானம் பார்க்கக் கிடைத்த படுக்கையில்
இவன் அசையாமல் கிடக்கிறான்

நட்சத்திரங்கள் எண்ணுகின்றன
இவனுடலில் காய்ச்சலை
எண்ண எண்ண
மின்னி மறைகிறது
உடலெங்கும் வெப்பம்
இடையில் ஒரு மேகம்வந்து
எல்லவற்றையும் குழப்ப
முதலிலிருந்து துவங்கும்படியானது

குளிரேறத் தெளிவாகிறது
மழைக்கான நிமித்தங்கள்
இவன் உதடுகள் முனுமுனுக்கின்றன
சிரித்தபடி எதையோ

கொத்திக் கொத்தி
தின்று முடிக்குமா
விடிவதற்குள் இவனை
வானம்?

கணக்கு

துள்ளிக்கொண்டிருக்கும் சிறுமிக்கு
பூமி தன்னை
விடுவித்துவிடுவதைப் பற்றிய
ஆச்சரியங்கள் எதுவுமில்லை
மேலிருக்கும் நேரத்தில்
அவளெதையும் குறிப்பாக
கவனித்துவிடவுமில்லை

இன்னும் வேகமாக
இன்னும் உயரமாக
அவள் குதிக்கிறாள்
ஒரு பேருக்கு
தரையை வந்து
தொட்டுவிட்டுப் போகிறாள்.

மொத்தமாகப் பார்த்தால்
அவள்
தரையில் நின்ற
நேரத்தைவிட
வானில் நின்ற
நேரம்தான் அதிகம்.

பிற படைப்புகள்

Leave a Comment