தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும் விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது. இனி எப்போதைக்கும் அந்தக்குண்டான் தன் வயிற்றைப்போலவே காலிப்பாத்திரமாய்த்தான் கிடக்குமென்ற உண்மையை அது உணருகையில் பதுங்கு குழியினுள்ளிருந்து எழமுடியாத தடுமாற்றத்தை கண்டிருந்தது.
டைகர் குட்டியாயிருக்கையில் காவல் காக்கும் வீட்டின் காம்பெளண்டு சுவற்றை தாண்டக்கூடாதென்கிற ஏட்டில் எழுதிவைக்கப்படாத சட்ட திட்டத்தை தாய்க்கிழவி அடித்தொண்டையில் கத்திக் கூறியிருந்தாள். சாலைக்கு வாலையாட்டியபடி ஓடிப்போய், ஏதோவொரு வாகனத்தின் சுழல் சக்கரத்தில் சிக்கி சீக்கிரமாய் இந்த உப்பிலிபாளைய கிராமத்திலிருந்தும், தன்னிடமிருந்தும் விடைபெற்று போய்விடக்கூடாதென்கிற தாய்க்கிழவியின் நினைப்பை வெறுக்கத்துவங்கிய போது டைகருக்கு ஒருவருடகாலம் ஆகியிருந்தது ஜனித்து.
புங்கைமரத்தில் ஒருவருடகாலம் வரை, தான் கட்டப்பட்டிருந்த இரும்புச் செயினும் இப்போது கவனிப்பாரறுத்தான் கிடந்தது. எப்போதும் மாலைவேளையில் பழைய கூப்பன் அரிச்சிச்சாதமும், துவரம்பருப்புக்குழம்பும், ரசமும் கலந்து நிரம்பிக்கிடக்கும் சோற்றுக்குண்டான் சமீப காலமாக புழுதிபடிந்து வெறுமனே கிடப்பதற்கான காரணத்தை டைகரால் அறிந்துகொள்ள முடியவில்லை.
முன்னங்கால் கூர்நகங்களால் புங்கைமரத்தடியில் அவ்வப்போது மண்ணைப் பறைத்துப் பறைத்து குழியாக்கி அதனுள் படுத்துக்கிடப்பதில்தான் டைகருக்கு அப்படியொரு சுகம். தனக்கு உணவிட வீட்டினுள்ளிருந்து வரும் தாய்க்கிழவி தன் பெருத்த சரீரத்தை ஒரு பாம்பின் சீற்றத்தோடு நகர்த்தி வந்து சில்வர் குண்டானுக்குள் உணவிடுகையில்தான், பதுங்குகுழியிலிருந்து தலையுயர்த்தி டைகர் பார்க்கும். இன்னைக்கும் அதே கூப்பன் அரிசி பழையசோறும் புளிரசமும்தானா?
தாய்க்கிழவிக்கு வாலை ஆட்டி டைகர் எப்போதும் பாசத்தைக்கொட்டத் தேவையில்லை. எலும்புத்துண்டுகளும், மீந்துபோன கோழிச்சாறும் எப்போவாவது குண்டானுக்கு வருகையில் மட்டும் அன்பை தாய்க்கிழவிக்கு வாலாட்டிக் காட்டினால் போதுமானதென்ற சோம்பேறித்தனத்துக்கு வந்திருந்தது டைகர். எல்லாமும் நல்லபடியாகத்தான் நான்கு வருடங்கள் ஓடியது. எப்போதுமே திருடன் என்றொருவன் திருடவே வராத வெற்று வீட்டுக்கு காவலாளியான டைகர் தனக்கு வள் வள்ளென குரைப்பதற்கு குரல் இருப்பதை மறந்தும் ஒரு வருடகாலம் ஓடிப்போய்விட்டது.
தான் பறைத்த குழியினுள்ளிருந்து வெளிவர.. உடலிலிருந்த சக்தியனைத்தையும் ஒன்று கூட்டி கால்களுக்கு கொடுக்க டைகருக்கு அதிக நேரம்பிடித்தது. உடலானது ஒரு பக்கமாக முதுகிலிருந்து சாய்ந்த வாக்கில் இருந்தது அதற்கே தெரியவில்லை. நான்கு வருடகாலமாய் வீடே கதியென்று கிடந்த டைகர் இனி அப்படிக் கிடக்கமுடியாதென்ற உண்மையை முதலாக உணரவில்லை.
உப்பிலிபாளையம் சுடுகாடாய் மாறிக்கொண்டிருக்கும் உண்மையையும் அது உணரவில்லை. கைவிடப்பட்ட ஊராக அந்த கிராம மக்கள் சிலர் சொந்த வீட்டிலிருந்து ஜாமான்களை மூட்டைகட்டி நகரத்துவங்கிய விசயமெல்லாம் பதுங்குகுழியினுள் காலிக்குண்டானை அவ்வப்போது தலையையை மட்டும் தூக்கிப் பார்த்துக் கொண்டு படுத்திருந்த டைகருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
டைகர் நடக்க மாட்டாமல் நின்றிருந்தது. கால்களை எட்டிவைத்தால் சாய்ந்துவிடுவோமென அஞ்சியது. வீட்டினெதிர்க்கே சாலையில் ஒருவார காலமாக எந்த வாகனச்சப்தமும் அதற்குக் கேட்கவில்லை செவிகளில். ராக்காலங்களில் செவியைக்கூர்த்தீட்டிக்கொண்டு கேட்கையில் உப்பிலிபாளைய கிராம மக்களின் அன்றாட புலம்பல் குரல்கள் கேட்கும்தான். சிலசமயம் பட்டாசு ஒலிகளும் டமடமவென தூரத்தில் கேட்கும். பசியால் செவியானது அடைத்துப் போயிருக்கலாம். இப்படியே நின்றிருக்கவும் முடியாதுதான்.
நான்கைந்து எட்டுக்களை வைத்து முன்னால் சென்ற டைகர் தன் உடல் ஒருபக்கமாக இழுத்துக் கொண்டு சாய்த்துவிட முயற்சிப்பதைப்பற்றி வெறுப்பாய் நின்று சாலைப்பக்கமாக பார்வையை ஓட்டியது. அப்போதுதான் அதற்கு அந்தப்பீதியுணர்வு தோன்றியது. பயத்தில் ஊளையிடமுயற்சித்து தோற்றுப்போய் முனகியது. அதற்கு பார்வைக்கோளாறு வந்து விட்டதோவெனவும் அஞ்சியது.
அதற்கு பார்க்குமிடமெல்லாம் நீலவர்ணமாக தெரியத்துவங்கியிருந்தது. கொஞ்சம் நேரமாகவே நிற மாற்றத்தை டைகர் கவனித்திருக்கவில்லை. அதன் நெஞ்சுக்கூட்டுக்குள் கிடந்த இருதயமானது இயக்கத்தை இப்போது துரிதப்படுத்தியிருந்தது.
சாலையைத்தாண்டி வேறு வீதிக்குள்ளும் சென்றே அறியாத கால்களையும், ஊருக்குள் தன்னையொத்த விலங்கினங்கள் பலவுள்ளன என்பதை பார்த்தறியாத கண்களையும் கொண்ட டைகருக்கு பீதியானது வேறேதேனும் வடிவமெடுத்து தன்னை கொன்றுவிடுமோவென அஞ்சி தாய்க்கிழவியின் வீட்டு வாசல்ப்படி நோக்கி தள்ளாடிச் சென்றது. இப்போதைக்கி தன்னைக்காப்பாற்ற தாய்க்கிழவியால் மட்டுமே முடியுமென்ற நம்பிக்கையை அது தன் மண்டைக்குள் கிடக்கும் வெண்ணிற மூளைக்குள் வைத்திருந்தது.
தாய்க்கிழவி வீட்டினுள்ளிருந்து ஜாமான்களை கொண்டு வந்து போட்டு கழுவும் ஜலதாரை அருகே ஈயப்பக்கெட் வெய்யிலில் காய்ந்து கிடந்தது. அதனருகே சென்ற டைகர் நீல வர்ண பக்கெட்டினுள் எட்டிப் பார்த்து கொஞ்சமாய் கிடந்த நீலவர்ணத் தண்ணீரைப்பார்த்து தெம்பானது. முதலாக அது நீலவர்ண தண்ணீரை தன் நாவால் சலப்பிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தது.
ஒருகட்டத்தில் தண்ணீர் தீர்ந்து பக்கெட்டையே அது நக்கித்துடைக்க ஆரம்பித்து விட்டது. பின்பாக தலையுயர்த்தி தன் மூக்கால் பக்கெட்டை பலம் கொண்ட மட்டும் முட்டி ஜலதாரைக்குள் சாய்த்துவிட்டு வீட்டின் முன்னிருந்த இரண்டு படிகளைப் பார்த்தது. சற்ரு உருவத்தில் கனமான நீலவர்ண கட்டெறும்புக் கூட்டம் ஏழெட்டு வரிசை போட்டபடி வீட்டினுள் படிகள் வழியே சென்று கொண்டிருப்பது கொஞ்சமாய் அதற்குத் தெரிந்தது. இவைகளெல்லாம் எங்கிருந்து வருகின்றன? எதற்காக தாய்க்கிழவியின் வீட்டினுள் வரிசைகட்டிப்போகின்றன?
தண்ணீர் வயிற்றுக்குள் இறங்கியதில் கொஞ்சம் தெம்படைந்திருந்த டைகர் காதுகளை உயர்த்திக் கொண்டு கட்டெறும்பு வரிசைக்கருகில் குனிந்து நுகர்ந்து பார்த்து தும்மலிட்டது. அதன் மூக்கின்மீது அவசரமாய் ஏறியிருந்த இரண்டு கட்டெறும்புகள் நறுக்கென பலமான கடியை வைத்து விட முன்னங்காலை உயர்த்தி அவற்றை தட்டி விட முயற்சித்தது.
முகத்தைக் குனிந்து காலை உயர்த்த முடியாமல் நிலத்திலேயே மூக்கைத் தேய்த்து மண்தரையில் இரண்டையும் நசுக்கியது. கட்டெறும்புக் கூட்டத்தினுள் இப்போது சலசலப்பு நடந்தது. ஒரு வரிசை டைகர் இருக்கும் திசைப்பக்கமாகத் திரும்பியது திடீரென. நீலவர்ணத்துக்கு பழக்கப்படாத கண்களை வைத்திருந்த டைகர் அதை சட்டை செய்யாமல் படிகளில் ஏறி ஒந்திரிந்து சாத்தப்பட்டிருந்த கதவை மூக்காலேயே உள்புறமாக தள்ளிற்று.
கதவு நீக்கப்பட்டதும் புழு ஒன்றை தன் கூட்டினுள் வைப்பதற்காக தூக்கிப்பறந்து வந்த செங்குழவி ஒன்று பாதை தடுமாறி வாசலுக்கு பறந்து சென்று ஒரு சுற்று சுற்றிமுடித்து வீட்டினுள் நுழைந்து, வழக்கமான பாதையில் பயணித்து தாய்க்கிழவி கிடந்த இரும்புக் கட்டிலின் அடிப்புறத்திற்குள் நுழைந்து மறைந்தது. கட்டிலின் மெத்தையில் கிடந்த தாய்க்கிழவி மூச்சை உள்வாங்க மறந்து இரண்டு நாட்களாகியிருந்தது.
வீட்டினுள் வந்திருந்த கட்டெறும்புகளின் வரிசை கட்டில்கால்களின் வழியே படுக்கைமீதேறி கிழவியின் உடலில் முடிந்திருந்தன. கிழவியை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துதெடுத்துக் கொண்டு அவைகள் வீட்டின் பின் கதவு வழியே வெளியேறிய வண்ணமிருந்தன! முன்னெப்போதும் நுழைந்திராத வீட்டினுள் உணவுக்கான நம்பிக்கையோடு நுழைந்திருந்த டைகர் கட்டிலில் கட்டெறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும் தாய்க்கிழவியின் உடலை பார்த்து நின்றே விட்டது.
பின்பாக தலையை உயர்த்தி வீட்டின் கூரையைப் பார்த்து, தாய்க்கிழவியின் சாவை நம்பிக்கையான மனிதனிடம் தெரிவிக்கும் நோக்கோடு ஊளையிட முயற்சித்து மீண்டும் தோல்வியுற்றது. டைகர் வீட்டின் தரையை நுகர்ந்தவாறு சமையலறைக்குள் சென்றது. துவரம்பருப்புக்குழம்பின் வாசனையெதையும் நுகரமுடியாமல் பெரும் நோய் பீடித்திருந்த அந்த வீட்டினுள்ளிருந்து டைகர் சீக்கிரமாய் எதையெனும் கவ்விக்கொண்டு வெளியேறி விடவே நினைத்தது.
தலைக்கும் காலுக்கும் தலையணை வைத்து புருசன் தன்னை புதிதாக மணம்முடித்து உப்பிலிபாளையத்திற்கு கூட்டு வண்டியில் கூட்டி வந்த நிகழ்வைப்பற்றியான கனவில் தாய்க்கிழவி இருக்கையில் மரணமானது சப்தமெதுவும் எழுப்பாமல் திறந்திருந்த பின்வாசல் கதவு வழியே நுழைந்து வந்து அவளை பீடித்திருக்க வேண்டும். அது அப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.
எது எப்படியாயினும் அவள் தன் முழு உடலையும் கட்டெறும்புகளுக்கு தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளலாகவும் இருந்தாள். கிழவியின் உடலிலிருந்து துர்நாற்றம் எதுவுமில்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அவள் தினமும் பூஜையறையில் பற்றவைக்கும் சாம்பிராணி வில்லைகளும் சைக்கிள் அகர்பத்திகளுமாக இருக்கலாம். பதிலாக இன்னமும் வீட்டிலிருந்து விடைபெற்றுப் போகாமல் வீட்டைத்தாங்கி நின்றிருந்த தூண்களில் ஒன்றை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டிருக்கும் மரணமானது, வீட்டினுள் கட்டெறும்புகளை அவ்வப்போது கொத்தி உண்டு விட்டு பரணில் பறந்தபடி ஏறிப்படுத்துறங்கும் சேவலையும் வெடையையும் பார்த்துக் கொண்டே அவையிரண்டின் பிரகாசிக்கும் அழகில் சொக்கி நின்றுவிட்டது சிலைபோல.
தாய்க்கிழவி கணவனோடு வாழ்ந்த காலம் ரொம்பவுமே குறைச்சல்தான். எந்த நேரமும் கொட்டாவி விடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தவன் வானில் நட்சத்திரங்கள் ஒன்று கூட இல்லாத இரவொன்றில் கண்ட கனவில், முள்ளுப்பாதையில் காலில் செருப்பில்லாமல் சென்று செத்துப் போனதாய் ஊராருக்கு தாய்க்கிழவி சொல்லிக் கொண்டிருந்தாள்.
சாவு என்றால் நீருள்ள கிணற்றில் கல்லை உடலில் கட்டிக் கொண்டு விழுந்த சாவுதான் சாவுகளிலேயே மேன்மையானதென்றே பேசும் ஊராருக்கு தாய்க்கிழவியின் கணவனது சாவு பிடிக்கவில்லை. சுடுகாட்டில் பிணத்தின் அரைஞாண் கயிற்றை அறுக்காமல் புதைக்கும் வழக்கமுடைய உப்பிலிபாளைய கிராமத்தார்கள், அவர்களது பெரிய வருத்தத்தை ஒரு பாடையிலும், அவளது கணவனை ஒரு பாடையிலும் சுடுகாடு தூக்கிப் போனவர்கள் ஒரே குழியில் அவனது பழைய துணிமணிகளோடு சேர்த்து அவர்களது வருத்தத்தையும் சேர்த்துப்புதைத்தார்கள்.
பின்பாக பிணக்குழிமேட்டில் பட்டைக்கள்ளியும், திருகுகள்ளியும் வெட்டிவைத்து, பிணமானது இரவில் குழியிலிருந்து எழுந்து ஊருக்குள் வந்து விடாதவாறு பெரும் பெரும் கற்களையும் அதன் மீது அழுத்தி வைத்து விட்டு வீடு திரும்பினார்கள்.
பின்னாளில் கணவனுக்கென்று தாய்க்கிழவி தன் வயிற்றிலிருந்து பெற்றெடுத்த அம்மிக்கல்லின் அழகைக் காணாமலேயே அவன் செத்துப் போனது அவளுக்கு வருத்தம்தான். அவனே தான் கட்டி வந்த நாளிலிருந்து, “அம்மிக்கல்லொன்றை உன் வயிற்றில் வளர்த்து எப்போது ஈன்றெடுப்பாய்?” என கேட்டு கொட்டாவி விட்டபடியே நச்சரித்துக் கொண்டேயிருந்தான். அந்த அம்மிக்கல்லையும் தாய்க்கிழவி பயன்படுத்தாமலேயே வீட்டின் பின்புறம் வேப்பைமரத்தின் நிழலில் கிடத்திவிட்டாள்.
காலம்முழுதும் பல்துலக்காதவளும், கம்மஞ்சோற்று உருண்டையையே உருட்டியும் கரைத்தும் சாப்பிட்டவளுமான இவளது மாமியார் இன்பவள்ளி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளின் இரவில் ஈன்றெடுத்த குழவிக்கல் கிடந்த இடத்திற்கு அருகிலேயேதான் அம்மிக்கல்லை குப்புறக்கிடத்தி தூங்கச் செய்திருந்தாள் தாய்க்கிழவி.
அன்றிலிருந்து வானம் வருடம் தவறாது சென்னிமலையில் பெய்து கொண்டிருந்த இருபது உழவு மழையில் எட்டு உழவைக் குறைத்துக்கொண்டதை இன்னமும் மலைப்படிக்கட்டில் அமர்ந்திருக்கும் சாத்தான் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
டைகர் தூணைக்கட்டியபடி நின்றிருக்கும் நீலவர்ண மரணத்தை உற்றுப்பார்த்தது. மரணத்தின் பார்வை காணாததைக் கண்ட ஆவலுடன் மினுங்குவைதைக் கண்ட டைகர் அதன் பார்வை சென்ற திக்கைப் பார்த்தது.
பரணில் ஜோடியாய் சத்தமின்றி கண்களை மூடியபடி படுத்திருந்தவைகளைப் பார்த்ததும் அதன் வயிற்றிலிருந்து பசியின் வேகம் திரவ உருவெடுத்து நாக்கிற்கு வந்து விட்டது. ‘உர்ர்ர்ர்’ என்ற முனகலுடன் நடுக்கூடத்தில் கிடந்த டேபிளுக்குத் தாவி நின்றதும் சேவல் பயத்தில் கத்த ஆரம்பித்து, துணையையும் தப்பிச்செல்லத் தூண்டியது.
டைகரின் நாக்கிலிருந்த பசியானது அதன் பற்களுக்குத் தாவியிருந்தது அந்தக்கணத்தில். அடுத்த குதியில் வெடை இதன் வாய்க்கு அகப்படாமல் வீட்டினுள் ‘கொக்கோ கொக்கொக்கொக்’ என்றலறியவாறு பறந்தது. இரையை நழுவிச்செல்ல விட்டுவிடும் நிலையில் டைகர் இல்லை. வெடையின் கழுத்தைக்கவ்வியபடி டைகர் வீட்டிலிருந்து வெளியேறிய சமயம், அதே பார்வையை மரணம் சேவலின் மீது வைத்தபடி தூணைக் கட்டிக் கொண்டே நின்றிருந்தது.
உணவின்றி பல நாட்களைக் கழித்திருந்த டைகரால் உருப்படியாய் ரசித்து வெடையை உண்ணமுடியவில்லை. வாழ்நாளில் முதலாக பச்சைக்கறியை அது நாவில் சுவைத்த போது இனி எக்காலத்திற்கும் தீயில் வெந்த உப்பு,காரமிட்ட, மசாலா சேர்த்த கறியை உண்ணக்கூடாதென்ற முடிவுக்கு வந்திருந்தது. அப்போது வானம் இருண்டு கொண்டு வந்தது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் சென்னிமலைக்குள் மழை வந்துவிடுமென்றே இருந்தது. வடக்கிலிருந்து நனைந்த மண்ணின் மணம் சென்னிமலை நகரெங்கும் வீசிற்று.
மீதமிருந்த வெடைக்கோழியின் கறியை வாயில் கவ்விக் கொண்டு நீலவர்ண சாலைக்கு வந்து சேர்ந்தது டைகர். சாலை நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. இதற்கும் முன்பு எங்கும் சென்று பழகியிராத டைகர் நடப்பதற்கு அவட்டையின்றி தள்ளாடிக் கொண்டே மேற்கே சென்றது. காலியாகிப்போன வீடுகளில் எதுவுமே இருக்கவில்லை. உப்பிலிபாளையம் கிராமத்திலிருந்து கடைசியாய் வெளியேறும் ஒரே ஜீவனாய் டைகர் இருந்திருக்க வேண்டும்.
இதுவெல்லாம் ஆரம்பித்தது ஊருக்குள் கட்டெறும்புக்கூட்டம் இருவாரகாலத்திற்கும் முன்பாக நுழைய ஆரம்பித்ததிலிருந்துதான். எங்கிருந்துதான் அவைகள் இப்படி கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தன என்று யாருக்கும் தெரியவில்லை. தெற்கே போகும் கீழ்பவானி வாய்க்கால் வழியாக வந்துசேர்ந்திருக்கலாமென ஒருசாரர் கூறினார்கள். மணிமலைக்கரட்டில் பாறைகளின் இடுக்குகளிலிருந்து ஈசல் போல புறப்பட்டு வந்திருக்கலாமென ஒருசாரர் பேசினர்.
கிராமவாசிகள் கட்டெறும்புகளை விரட்ட எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். முனிசிபாலிட்டியிலிருந்து டிரேக்டர் வந்து மருந்துகலந்த தண்ணீரை ஊரெங்கிலும் பீய்ச்சியடித்துச் சென்றது. சும்மாதானே ஊர்கின்றன என்று நினைக்கையில் மருந்துகளை பீய்ச்சிய மறுநாளில் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை கூட்டமாய்க் கடிக்கத்துவங்கி விட்டன.
கட்டெறும்புகளின் கண்கள் நீலநிறத்திலிருப்பதாய் பாப்பா ஒன்று தன் அப்பாவிடம் கூறிய போது ஊருக்குள் முதல்சாவு விழுந்திருந்தது. அரிசிச் சிப்பங்களும் மூட்டைகளும் ஒரே இரவில் காலியாகின. இறக்கை முளைத்த கட்டெறும்புகள் பல ஊருக்குள் பறந்து திரிந்தன. அவைகள் ஒருசேரப் பறக்கும் ஒலி ஊராரின் காதுகளை செவிடாக்கிவிடும் அச்சத்தை உண்டாக்கின.
முன்பாகவே யூகித்திருந்த விலங்கினங்களெல்லாம் இவர்களுக்கும் முன்பாகவே ஊரை விட்டு பீதியில் ஓடியிருந்தன. திடீரென உப்பிலிபாளையம் நீல வர்ணத்திற்கு உருமாறியிருந்தது. மதியமாக ஊரார், ஊரை வாழத்தகுதியில்லாத ஊராக முடிவெடுத்து காறித்துப்பிவிட்டு காலி செய்து கிளம்புகையில் ஐந்தாறு சாவுகள் அரங்கேறிவிட்டன.
சொந்தபந்தங்களின் வீடுகளுக்கும், சென்னிமலைக்குள் காலியான வீடுகளுக்கு முன்தொகை கொடுத்தும் ஊரார் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றிருந்தாலும் அவர்களால் உப்பிலிபாளையத்து கட்டெறும்புகளை மறக்க முடியவில்லை. ராக்காலங்களில் காணும் கனவுகளில் தங்களை ஒரு கூட்டமே கடித்து தெருவில் இழுத்துப் போவதாய் கனவு கண்டு இரவில் அலறிப்புடைத்துக்கொண்டு எழுந்து உப்புத்தண்ணீர் குடித்தார்கள்.
உடலில் கட்டெறும்புக்கடிபட்டவர்களின் கண்கள் எதைப்பார்த்தாலும் நீல வர்ணத்தில் தெரிவதாக மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவர்கள் சாப்பிடும் நீலவர்ணச்சாப்பாடு சரியாய் செரிமானமாவதில்லையென புகார் சொன்னார்கள். சொட்டு மருந்துகள் கண்களைப்பாதுக்காக்கும் என நம்பி தாங்களாகவே கைகளில் வைத்துக் கொண்டு கண்களில் சொட்டுகள் விட்டுக் கொண்டார்கள். ஒருவாரம் கழிந்து திரும்பவும் கண்கள் வழக்கமான பார்வைக்கு வந்துவிட பெருமூச்சுகளை புதிய வாடகை வீட்டினுள் விட்டார்கள்.
***
சென்னிமலை செல்லும்பாதையில் வாய்க்கால் அருகே நின்றிருந்த பெரிய ஆலமரத்தினடியில் கையில் குச்சியை வைத்து எதிர்க்கே ஆளே இல்லாமல் கொங்கு மண்ணின் விடுதலைக்காக கத்திச் சண்டை போட்டுக்கொண்டிருந்த சாத்தான் பர்முடாஸும், முழுக்கை பனியனும் அணிந்திருந்தான். வாள்கள் உரசும் ஓசையை வாயிலேயே ‘சலிங் சலிங்’கென கொடுத்துக் கொண்ட சாத்தான் அவ்வப்போது சண்டைக்கிடையில் வாள்வீச்சை நிறுத்தி விட்டு தன் தாடிக்குள் சுற்றும் பேன்களை இடது கைவிரல்களை விட்டு இழுத்து சாலையில் தூவினான்.
வாளை சாலையின் ஓரத்தில் பத்திரமாய் வைத்து விட்டு எதிரி நாட்டு வீரனைப்பார்த்து, `உனக்கு ஒன்னுக்கு வந்தா அப்படி ஓரமா நின்னு அடிச்சுடு! எனக்கு ஒன்னுக்கு வருது ஊத்தி முடிச்சுட்டு போரை மறுபடியும் பொழுது வரைக்கும் நடத்துவோம்!’ என்றவன் தன் பெர்முடாசை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டு தன் குறியை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே சுற்றிலும் திரும்பி பீய்ச்சினான். டிவிஎஸ்சில் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து சாலையில் வந்தவர் இவனுக்காய் ஒதுங்கிச் சென்றார். இவன் அவரைப்பார்த்து ‘உலகம் உருண்டையானது! அதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை!’ என்றான்.
அப்போது சாலையில் பெரும் பெரும் மழைத்துளிகள் விழ ஆரம்பித்தது. சாத்தானுக்கு கொண்டாட்டமாகி விட்டது. தாளச்சப்தம் இல்லாமலேயே சாலையில் ஆட ஆரம்பித்திருந்தான். ‘சாத்தான் இன்னிக்கின்னு பார்த்து மகிழ்ச்சியாய் இருக்கிறான்! பாரத் மாதா கீ ஜே!” என்று மழைத்துளி சப்தத்திற்கு இணையாக பெருங்குரலெடுத்துக் கத்தினான்.
காற்று சுழன்று ‘உய்ய்ய்….’ என்று ஒலி எழுப்பிக் கொண்டு வீசிற்று. காட்டுவேலிக்காய் காட்டுக்காரன் தன் எல்லையில் வைத்திருந்த நொச்சிமரங்கள் அப்படி அன்னாந்து ஒரு மனிதன் பார்க்கும் விதமாய் உயர்ந்திருந்தன. அவைகள் காற்றின் வேகத்தால் சாய்ந்து நிமிர்கையில் இலைகள் கொத்தாய் கீழே விழுந்தன.
அப்போது சாலையின் கிழக்கே டைகர் தள்ளாடி வந்து மழை கனத்துப் பெய்ததால் காற்றின் சுழற்சிக்கேற்ப அப்படியே சாய்ந்தது. வாயில் கவ்வியிருந்த மீதியான வெடைக்கறி வாயிலிருந்து நழுவி விழுந்தது. மழையில் ஆடிக்கொண்டிருந்த சாத்தான் ஆட்டத்தை நிறுத்தி விட்டு டைகரை நோக்கி ஓடினான்.
“மகாராஜா வந்துட்டீங்களா? உங்க சாபத்துல இருந்து நீங்கி இன்னும் மனுச உருவுக்கு மாறலையா? எனக்காகவா கோழி அடிச்சிக் கொண்டாந்தீங்க? இந்த மழையில நீங்க நனைஞ்சா ஜல்பு பிடிச்சுக்கும் மகாராஜா! வாங்க அப்படி ஆலமரத்துக்கு அடியில போயி ஒண்டிக்குவோம்!” தோளில் கிடந்த பர்முடாசை எடுத்து அணிந்து கொண்டு டைகரைத் தூக்கிக் கொண்டான் சாத்தான். மீதமான கோழிக்கறியையும் வாயில் கவ்வித் தூக்கிக் கொண்டு ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தான்.
ஆலமரத்தடியில் மழை அவ்வளவு வேகமாய் அவர்களை நனைக்கவில்லை என்றாலும் காற்றினால் சாரல் அவர்கள் மீது விழத்தான் செய்தது. கைகளால் தன்னை ஏந்தி வந்தவன் ஈரம் நிறைந்த புற்களின் கூட்டத்தில் கிடத்தியிருக்கிறான் என்றே உணர்ந்தது. டைகர் அவ்வப்போது கண்களைத் திறந்து புதிய மனிதனை விசித்திரமாக பார்த்தது. அவனை முழுதாக நம்பலாமா? கூடாதா? என்றெல்லாம் அதற்கு யோசிக்கக்கூட முடியவில்லை. அவனோ மீதமிருந்த வெடைக்கோழிக்கறியை மழையை ரசித்துக் கொண்டே மென்று கொண்டே டைகரைப்பார்த்து கண்ணடித்தான்.
“மகாராஜா, மழையை ரசித்துக்கொண்டே பொரிகடலை மெல்லுவது தான் சிறந்ததான ஒன்றென இத்தனைவருட காலம் நினைத்திருந்தேன் நான். ஆனால் பாருங்கள் கோழிக்கறி மெல்லுவது கூட சிறப்பானதுதான். இனிமேல் நாம் பிரியவே கூடாது மகாராஜா! எங்கு திரும்பி எந்தச்சந்தில் சென்றாலும் உணவுக்குப்பஞ்சமில்லாத சென்னிமலையை விட்டு நாம் எங்கும் செல்லவேண்டியதேயில்லை. நிலத்தம்பிரானும், பின்நாக்குச்சித்தரும் வாழ்ந்த காலத்துல இருந்து நான் இருக்கேன்! எனக்குத்துணையா நீங்க வந்து சேருறதுக்கு இவ்ளோ காலமாயிருக்கு! இனி நம்மைப்பிரிக்க ஒருத்தராலும் முடியாது மகாராஜா!” என்றான். டைகர் வெறுமனே படுத்திருந்தது!