ஜீவன் பென்னி கவிதைகள்

by olaichuvadi

சிறு துண்டு இனிப்பு

1

இத்தனை பிரார்த்தனைகளிலும் முழுமையடைந்திடாத
ஒரு சிறிய அன்பின் கடைசித் தருணத்தை
எல்லோரும் வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அது சட்டென மலர்ந்து
சில இதழ்களை நெருக்கமாகக் காண்பிக்கிறது.
நமக்கென எதுவுமேயில்லையென்ற காலத்தில்,
அப்பெரும் வலியை ஒன்றுமற்றதாக
மாற்றிவிடுகிறதது.
வாழ்வென்பது,
சற்று நீண்டு கிடக்கும் இச்சமவெளியில்
ஒரு புல்லைப் போலச்
சுதந்திரமாகக் காயத்துவங்குவதுதான்.
வாழ்வின் சிறுசிறு துண்டுகளின் மீது படியத்துவங்கும்
இந்த இனிப்புகளுக்காகத்தான்
ஒராயிரம் உயிர்கள் பிறந்து பிறந்து
வந்து கொண்டிருக்கின்றன.

2

சிறிய விரல்களின் பிடிகளுக்குள்ளிருந்திடும்
வளர்ந்த விரல்கள்,
ஒவ்வொரு திருப்பத்திலும்
வாழ்வின் மிகப்பெரிய ஒன்றைக் காண்பிக்க முயல்கின்றன.
சிறிய கைகளின்
சிறிய விரல்களோ,
அவற்றைச் சிறியவையென்றே எப்போதும் சொல்லி முடிக்கின்றன.
சன்னல்கள் காண்பிக்கும் சிறிய வானம்
எப்போதும் சன்னல்களின் அளவிலேயேயிருக்கின்றன.

3

மின்விசிறியில் அடிபட்டுச் சாகும் அந்தப் பூச்சியின்
சிறிய சுதந்திரத்தைக் கேட்டுத்தான்
எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்,
ஒரு சூத்திரத்தை முன்னும் பின்னும் நகர்த்தி
இம்முடிச்சின் இறுக்கத்தை இன்னும் கொஞ்சம்
நெருக்கமாக்கிக் கொள்கிறேன்.
வழிதவறி நுழைந்து விட்ட நிலவினொளி,
என் மீதிருந்து,
ஏன்?
மறையவே மாட்டேனென்கிறது.

4

இறுகி விரைத்திருக்கும் என்னுள்ளங்கைகளினுள்
படிந்திருக்கும் அமைதியை
நீங்கள் பிரித்துப் பார்க்கும் போது,
ஒரு சொல்லிருந்தத் தடமும்
ஒரு அவசரமும்
ஒரு அலைச்சலும்
ஒரு கலங்கிய நதியும்,
அதனுள் மூழ்கிக்கொண்டிருந்த சிறு கற்களும்
என்னைப் பற்றிச் சொல்வதற்கென
ஏதேனும் வைத்திருக்கும்.

5

சுவிசேஷக் கையேடுகளை விநியோகித்துக் கொண்டிருக்கும்
கைகள்
வெய்யிலில் சருகாகின்றன.
ஒரு துளியில் கடவுளாகும் தருணத்தையும்
அது காய்ந்துத் தடமாகிக் கொள்ளும் வெறுமையையும்
அவை தான் திரும்பத் திரும்பச்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.

கசப்பின் சிறு துண்டு 

1

பிடிவாதமாக இறுக்கும் உன் அன்பைச்
சற்றுத் தளர்த்து
நானுன் வருகைக்கு முன்பே காலியாகத்
துவங்கிவிட்டேன்.
என்னிடமிருந்த பழைய அடையாளமொன்றை
நீ எப்போதேனும் பார்க்க நேர்ந்தால்
கைகுலுக்கி விட்டுச் சென்று விடு.
இப்பாதைகள்,
சட்டென முடிந்து போகக்கூடியவை.

2

நீ பறப்பதை நிறுத்தப் போகிறாயா?
உனது சிறிய இறகுகளுக்கு வேறென்ன தெரியும்?
நானதை ஒவ்வொன்றாக உதிர்ப்பேன்.
என்னை நான் அவ்வளவு நிரந்தரமாக,
ரகசியமேதுமில்லாமல் வெளிக்காட்டப் போகிறேன்.
மிக உயரமான ஓரிடத்திலிருந்து விழுந்து!

3

இவ்வளவு பிரியங்களையும் கடந்து செல்லும் உடலுக்குள்
இருந்திடும் ஒருவனை
தற்செயலாகப் பார்க்க நேர்ந்த போது,
அவனது இதயமோ குருதியோ
வழிந்து கொண்டிருந்தது.
நானதை முதலில் தொட்டுப் பார்த்தேன்
அதில் கவிச்சியேதுமில்லை.
அது அவனது சிறிய ஆன்மாவின் 
திரவ வடிவம் போன்றிருந்தது.

4

கடைசி குரலில் எந்தப் புகாருமில்லை,
அது தன்னை நிரூபிப்பதற்கும் முயலவில்லை.
சிறிது தூரம் வரை அசைந்து மறைந்த தது.
அங்கேயே நின்றிருக்கும்
அக்கடைசி அசைவைப் பார்த்தபடியே யிருக்கிறேன்.,
ஞாபகமொன்று கலைந்திடும் பிசுபிசுப்பிலிருக்கிற தது.
மேலும்
எனக்கான சிறிய நிம்மதியில் எப்போதுமிருந்திடுமது.

5

இலையுதிர் காலத்தில் இலைகளைச் சேகரிப்பவன்,
இறந்தவர்களைப் புதைக்கும் குழிமேடுகளில்
சில மரங்களை உருவாக்குகிறான்.
அழிவற்றச் சந்தர்ப்பத்தின் வாசல்களை
அவனே திறந்து விடுகிறான்.
அது ஒரு நிழலினடியில்
உலகைப் படுக்கவைத்திருப்பதைப் போலிருக்கிறது.

பிற படைப்புகள்

Leave a Comment