கல்மலர் – 1
சுநீல் கிருஷ்ணன்

by olaichuvadi

(26.9.19- சாகித்ய அகாதெமி காந்திகிராமம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடத்திய ‘காந்தியும் தமிழ் இலக்கியமும்’ என்கிற அமர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை. பேசுபொருள்: சத்திய சோதனையும் பிற புத்தகங்களும்)

1

இந்தக் கட்டுரையை ஒரு ஒப்புதல் வாக்குமூலத்துடனேயே தொடங்க வேண்டும். காந்தியின் வேறு வேறு வாழ்க்கை சரிதைகளை, அவரைப் பற்றிய வெவ்வேறு நூல்களை, கட்டுரைகளை நிறையவே வாசித்திருக்கிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகளில் ‘சத்திய சோதனையை’ ஒருமுறை கூட முழுவதுமாக வாசித்து முடித்ததில்லை. நம்மில் பலபேர் மலிவு விலையில் கிடைக்கும் காரணத்திலோ அல்லது ஏதோ ஒரு உந்துதலின் பேரிலோ அல்லது இதுவும் பகவத் கீதை, குர்ரான், விவிலியம் போன்று வீட்டில் இருக்க வேண்டிய புனித நூல் வரிசையில் ஒன்று என்பதால் வாங்கிவைத்தால் போதும் வாசிக்க வேண்டியதில்லை எனும் உணர்வினாலோ அல்லது எப்போது வேண்டுமானாலும் வாசித்துக்கொள்ளலாம் எனும் இளக்காரத்தினாலோ ‘சத்திய சோதனையை’ வாங்குவதோடு நிறுத்திக்கொண்டு வாசிப்பதை தவிர்த்து வருவோம். மேற்சொன்ன காரணங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவை எனக்கும் பொருந்தும். இந்தக் கருத்தரங்கின் பொருட்டே நான் காந்தியின் மூன்று நூல்களையும் முழுமையாகவும் முதன்முறையாகவும் வாசித்து முடித்தேன். இத்தனை ஆண்டுகள் காந்தி குறித்து வாசித்த/மொழிபெயர்த்த அத்தனையும் பின்னுக்குச் சென்றன. இவற்றை வாசிக்காமல் விட்டது மாபெரும் பிழை என உணர்ந்தேன். ஒருவேளை சத்திய சோதனையை வாசித்து முடிக்காமல் இருந்திருந்தால் இப்படியான ஒப்புதல் வாக்குமூலத்துடன் இந்தக் கட்டுரையை தொடங்குவதற்கான மனத்திண்மை இல்லாமலேயே போயிருக்கவும் கூடும்.

காந்தி எழுதிய புத்தகங்கள் என்று எவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளலாம் என சிந்திக்கையில், ‘இந்திய சுயராஜ்ஜியம்’ ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ மற்றும் ‘சத்திய சோதனை’ ஆகிய நூல்களை மட்டும் இக்கட்டுரைக்காக கணக்கில் கொள்ளலாம் எனும் முடிவுக்கு வந்தேன். இவற்றைத் தவிர்த்து அவர் வாழ்ந்த காலத்திலேயே ‘ஆரோக்கியத்தின் திறவுகோல்’ உட்பட அவருடைய வேறுபல எழுத்துக்கள் நூலாக தொகுக்கப்பட்டன. அவருடைய மரணத்திற்கு பின்னர் இன்றுவரை  அவருடைய எழுத்துக்கள் வெவ்வேறு தலைப்புக்களின் கீழ் தொகுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இம்மூன்று நூல்களையே காந்தி நூலாக எழுத திட்டமிட்டு எழுதியவை என கூற முடியும். ராமச்சந்திர குகாவும் அவருடைய வாழ்க்கை வரலாறு நூலில் இதையே குறிப்பிடுகிறார். இவைத்தவிரவும் இம்மூன்று நூல்களுக்கும் இடையில் ஒர்மையுள்ள உறவு இருப்பதை கண்டுகொள்ள முடிகிறது. ‘சத்திய சோதனை’ மற்றும் ‘இந்திய சுயராஜ்ஜியம்’ ஆகிய இரு நூல்களையும் நவஜீவன் வெளியிட்ட, ரா. வெங்கடராஜுலுவின் மொழியாக்க பதிப்பையே இக்கட்டுரைக்கான மூலநூலாக கொண்டிருக்கிறேன். ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ பி.ஆர். மகாதேவன் மொழியாக்கத்தில் கிழக்கு பிரசுரம் வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பையே இந்த கட்டுரைக்காக தேர்ந்திருக்கிறேன்.  

1909 ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும் வழியில் கப்பல் பயணத்தின் ஊடே ஒரே மூச்சில் சுமார் பத்து நாட்களில் 271 பக்க அளவு கொண்ட ‘இந்திய சுயராஜ்ஜியத்தின்’ வரைவு  கைப்பிரதியை காந்தி எழுதி முடித்தார். ஐம்பது பக்கங்களாவது இடக்கையில் எழுதி இருக்கிறார். எழுதும்போதே ஒரு நூலாக எழுதிய புத்தகமும் இதுவே. ஆஷிஷ் நந்தி ஒரு கட்டுரையில் காந்தியினுடைய மிக முக்கியமான பங்களிப்பு என்பது நவீன நாகரிகத்தின் மீதான அவருடைய விமர்சனமே என்கிறார். காந்தியின் அத்தனை முரண்பாடுகளுக்கு அப்பாலும் அவர் காலந்தோறும் குறைந்தபட்சம் இந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது நினைவுக்கூரப்படுவார் என்பதே அவருடைய வாதம். இந்த புத்தகம் மொத்தமும் பத்திரிக்கை ஆசிரியருக்கும் வாசகருக்கும் இடையிலான உரையாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மரபிலும் சரி மேற்கிலும் சரி மெய்யியல் விவாதங்களுக்கான நூல் உரையாடல் வழியிலேயே அமைந்துள்ளன. ஆயுர்வேத மெய்யியல் பகுதிகளை விளக்கும் நூல், தாந்த்ரீக நூல்கள் ஈசனுக்கும் பார்வதிக்கும் இடையிலான உரையாடல் வடிவத்தை கொண்டவையே, மேற்கில் பிளாட்டோவின் நூலை உதாரணமாக சுட்டலாம். இதுவும் காந்தியின் மெய்யியல் நூல் என வரையறை செய்யலாம். காந்தியின் சிந்தனைகளின் வரைவு என்றும் கூறலாம். இந்த நூலை அவர் எழுதும்போது தென்னாபிரிக்காவில் மிகுந்த செல்வாக்குடைய இந்தியர் என்ற அளவிலேயே இருந்தார். முதல் சத்தியாகிரகம் முடிந்து ஸ்மட்ஸ் இழைத்த நம்பிக்கை துரோகத்தினால் இயக்கம் சற்றே வலுவிழந்து, தென்னாபிரிக்காவில் விமர்சனங்களும் பெருகியிருந்த சூழல். ஆனால் அவருக்கு பெரும் கனவுகள் இருந்தன. அவருடைய கனவுகள், செயல்திட்டங்கள் சார்ந்து அவர் அதுவரையிலான அனுபவங்களின் வழியாக அடைந்த புரிதல்களின் தொகைநூலே ‘இந்திய சுயராஜ்ஜியம்’. காந்தி இந்த வடிவத்தை முன்னரே முயன்று பார்த்துள்ளார். இந்தியர்கள் தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்யக்கூடாது என பிரச்சாரம் செய்து பின்னர் தன்னிச்சையாக அப்படி செய்துகொள்ளலாம் எனும் சமரசத்தை அடைகிறபோது கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்கிறது. அப்போது “அந்த சமரசம் பற்றி ஒரு கற்பனை உரையாடலை ‘இந்தியன் ஒப்பினியனில்’ எழுதினேன். அதில் ஒப்பந்தத்தைப் பற்றிய சாதக பாதகங்களை நுட்பமாக அலசி விளக்கி இருந்தேன். அது நல்ல பயனைத் தந்தது.” (தெ.ஆ.ச. அத்தியாயம் 24) என எழுதுகிறார். ‘இந்திய சுயராஜ்ஜியம்’ ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. சற்றே தாராளவாத சிந்தனை கொண்ட ஐரோப்பியர்கள் கூட அந்த நூலின் வாதத்தை எதிர்த்தார்கள். காந்தியின் நெருங்கிய சகாவான போலக் கூட ஆங்கிலேய பாராளுமன்றத்தை விலைமாதர் என்றும் மலடி என்றும் குறிப்பிட்டது தவிர்க்கப்படவேண்டியது என்றே கருதினார். காந்தி தன்னுடைய அரசியல் ஆசானாக கருதும் கோகலே ‘இந்திய சுயராஜ்ஜியத்தை’ ஒரு முட்டாளின் சிருஷ்டி என புறந்தள்ளினார். காந்தி ஓர் ஆண்டு இந்தியா முழுக்க பயணித்தால் போதும் இந்து நூலின் கருத்துக்கள் மாறிவிடும் என கருதினார். ஆனால் காந்தி இதிலிருக்கும் எந்த கருத்திலிருந்தும் பின்வாங்கவில்லை என பல ஆண்டுகளுக்கு பின் இந்நூல் மீண்டும் பதிப்பிக்கபட்டபோது எழுதினார். இந்த நூல் எழுதப்பட்ட வரலாற்று பின்புலம் முக்கியத்துவம் வாய்ந்தது. காந்தி இங்கிலாந்துக்குப் பயணம் சென்ற 1909 ஆம் ஆண்டுதான் ‘இந்தியா ஹவுசில்’ இருந்த மதன்லால் திங்க்ரா செய்த கொலை பெரும் புயலைக் கிளப்பியது. இந்தியா ஹவுசில் காந்தி உரையாற்ற அழைக்கப்பட்டபோது சாவர்க்காரும் அங்கே இருந்தார். டாக்டர். தி.செ. சௌ ராஜன், வ.வே.சு ஐயர் உட்பட பல ஆளுமைகள் இந்தியா ஹவுசில் வசித்தவர்களே. காந்தியின் வருகைக்கு பின்னர் பலரும் தங்கள் சிந்தனைப் போக்கை மாற்றிக்கொண்டார்கள். ஆனால் காந்திக்கு இந்த ஆயுத புரட்சி நம்பிக்கையாளர்களின் சித்தாந்தம் குறித்து நேரடியான பரிச்சயமும் அவர்களுடைய சிந்தனைப் போக்கும் நன்கு அறிமுகம் ஆனது அப்போதுதான். இதழ் ஆசிரியர் – வாசகர் உரையாடலில் இதழ் ஆசிரியர் காந்திதான் என்றும் வாசகர் குரல் காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டாக்டர். பிரனஜீவன் மேத்தாவினுடையது என்றும் குகா அவருடைய நூலில் ஒரு ஊகத்தை முன் வைக்கிறார். குகா அவருடைய வாழ்க்கை சரிதை நூலில் இந்து சுயராஜ்ஜியம் சார்ந்த அத்தியாயத்துக்கு ‘நாகரிகங்களுக்கிடையே போட்டி’ என்று மிகப் பொருத்தமாக தலைப்பிட்டிருக்கிறார். ஆனால் இது நாகரிகங்களுக்கு இடையிலான போட்டி எனும் கருத்தை காந்தியை வந்தடைந்த விதம் சுவாரசியமானது. ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ நூலில் போயர் போருக்கு பின்பான காலகட்டத்தில் இந்தியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் போனபோது ஜெனரல் ஸ்மட்ஸ் அதற்காக முன்வைத்த தன் தரப்பு வாதத்தை சுருக்கமாக அளித்திருக்கிறார். “தென்னாப்பிரிக்கா மேற்கத்திய நாகரிகத்தின் பிரதிநிதி, இந்தியாவோ கீழைத்தேய நாகரிகத்தின் பிரதிநிதி. மேற்கத்திய கலாச்சாரம் நல்லதோ கெட்டதோ மேற்கத்தியர்கள் அதையே பின்பற்றுவார்கள். அந்தக் கலாச்சாரத்தை காப்பாற்ற மிகப்பெரிய அளவில் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். இன்று அந்தப்பாதையில் இருந்து விலகி வேறு வழியில் செல்ல முடியாது. எனவே இந்த இந்திய சிக்கலை வெறும் வர்த்தக போட்டியாகவோ இன வெறியாகவோ மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. இந்தக் கோணத்தில் பார்த்தால் ஒருவர் தன்னுடைய கலாச்சாரத்தை காப்பாற்றும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும்”. காந்தி ஸ்மட்சின் வாதத்தை எப்படி தனக்கு சாதகமாக ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு பின் உருமாற்றிக் கொள்கிறார் என்பதை எண்ணி பிரமிப்பாக உள்ளது.

காந்தியை ஒரு தாராளவாத கொள்கையின் முகமாக புரிந்துகொண்டு இந்நூலை வாசிக்க வரும் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருக்கிறது. இன்று இந்நூலை வாசிக்கும்போது வாசகர் வெகுவாக சீண்டப்படுவார். ‘கடுமையாக முரண்படவும் மனவிலக்கம் நேரவும் கூட வாய்ப்புண்டு. காங்கிரசின் மீதான விமர்சனங்களுக்கு பதில்சொல்லும் விதமாக முதல் சில அத்தியாயங்கள் தொடங்குகிறது. இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என காங்கிரசின் வளர்ச்சிக்கு பங்களிப்பு ஆற்றியவர்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றி அவர்களுக்கு நன்றியும் வந்தனங்களும் தெரிவித்துவிட்டே அடுத்தடுத்து பயணிக்கிறது. மூத்தோரை மதித்து அங்கீகரித்த பின்னர் அவர்களின் மீதான விமர்சனங்களும் வருகின்றன. வன்முறை போக்கு, மனுக்களை அளிப்பது என அதுவரை காங்கிரசில் நிலவிவந்த இரண்டு போக்குகளின் மீதான விமர்சனங்களை வலுவாக வைக்கிறார். வெறும் மனுக்கள் எதையும் சாதித்துவிட முடியாது அதற்கு பின்னால் ஒரு ஆற்றல் இருக்க வேண்டும் என்பது அவருடைய தரப்பு. காந்தியின் இந்த மூத்தோர் வழிபாடு மிக முக்கியமான வழிமுறை. முதலில் தனது மரியாதையும் அன்பையும் பதிவு செய்தபிறகு விமர்சிப்பதற்கும் நிராகரிப்பதற்குமான உரிமையை பெறுகிறார். அவருடைய சுய சரிதையில் நாம் அனைவரும் நன்கறிந்த நிகழ்வு அவருடைய ஆசிரியர், ஆய்வாளர் வருகையின்போது காப்பியடிக்கத் தூண்டுகிறார். அவர் மறுக்கிறார். ஆசிரியரின் அறமின்மையை சுட்டிக்காட்டிவிட்டு  “என்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது  சுபாவம்… பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.” என எழுதுகிறார். சத்தியாகிரகத்தின் உள்ளார்ந்த  அடிப்படை வலு என காந்தியினுடைய இந்த இயல்பையே சொல்லலாம்.

இந்திய சுயராஜ்ஜியம் மேலும் பலவற்றை தொட்டுச் செல்கிறது. அன்றைய காங்கிரசின் போக்குகள், வங்காள பிரிவினை உண்டாக்கிய அரசியல் எழுச்சியின் விளைவு, பாராளுமன்றத்தின் மீதான விமர்சனம், மேலை நாகரிகத்தின் கூறுகள் – உடலின்பத்தை பெருக்குவது,  உள்ளார்ந்த அறம் இல்லாதது, ஆங்கிலேயர்கள் இந்த நாடை ஆளவில்லை நாமே அவர்களை அழைத்திருக்கிறோம், ஆள அனுமதிக்கிறோம், இந்திய நாகரிகத்தில் உள்ளார்ந்த வன்முறையற்ற தன்மை, நவீன நாகரிகத்தின் நோய்கூறுகள், இந்து- இஸ்லாமியர் ஒற்றுமை பற்றும் பசு பாதுகாப்பு- இந்துக்கள் விட்டுக்கொடுக்கவேண்டும் எனும் வாதம், இந்துமய தேசத்தை நிராகரித்தல், நவீன நாகரிகத்தின் வன்முறை அரசியல், லட்சியத்துக்கும் வழிமுறைக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவம், இயந்திரமயமாதலின் சிக்கல்கள், என இந்த வரிசையில் சிந்தனைத் தொடர்ச்சியை பின்பற்றி எழுதப்பட்ட நூல்.      

ஆங்கிலேய ஆட்சியின் கொடை என நீதியமைப்புகள், நவீன மருத்துவம் மற்றும் ரயில்வேக்களை சொல்வார்கள். இவை நவீன நாகரிகத்தின் குறியீடுகளும் கூட. காந்தி இம்மூன்றையும் கடுமையாக விமர்சித்து நிராகரிக்கிறார். உலகையே தங்களுக்கான விற்பனை சந்தையாக ஆங்கிலேயர்கள் காண்கிறார்கள் என்றொரு விமர்சனத்தை அன்றே வைக்கிறார். அந்த சந்தையின் ஒரு பகுதியாகவே ஆங்கிலேயர்களின் கல்வி, ரயில்வே, மருத்துவம், நீதியமைப்பு என எல்லாவற்றையும் பார்த்தார். பல சாத்திரங்களையும் கற்றுக்கொள்ளுவதான பாசாங்கை நாம் விட்டுவிட வேண்டும்’ என எழுதிய வரியை கல்வியின் அதீத வணிகமயமாக்கல் மற்றும் நுகர்வு பண்டமாக சந்தைப்படுத்துதல் சார்ந்தே புரிந்துகொள்ள முடியும். அது சார்ந்த தாழ்வுணர்ச்சி சமூகத்தில் கட்டமைக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் நோவா மற்றும் அவருடைய பிள்ளைகளின் கதையை காலனியாதிக்கத்திற்கான நியாயமாக சொல்லிக்கொண்டிருந்த சூழலில், ‘நவீன நாகரிகம் கிறிஸ்தவ தர்மத்துக்கே முரணானது. ஆகையால் அதை கைவிடுவதுதான் உண்மையான பரிகாரம் என்பது என் தாழ்மையான கருத்து.’ என எழுதுகிறார். ரயில்களே பஞ்சத்தையும் ப்ளேகையும் பரப்புகின்றன என்கிறார். தேசிய உணர்வைக் கட்டமைக்க ரயில்வே உதவுகிறது எனும் வாதத்தையும் ஏற்க மறுக்கிறார். வேறுபாடுகளை அழித்து ஒற்றைப்படையாக்கத்தை செய்கிறது எனும் குற்றச்சாட்டை வைக்கிறார். ‘மனிதனிடம் இருக்கும் கெட்ட சுபாவத்தை ரயில்வேக்கள் கிளறிவிடுகின்றன.’  நல்லவை தீமை இருமையை சொல்லும்போது நல்லவை எப்போதும் நத்தையைப் போன்று மெதுவாகத்தான் வரும் என்றும் தீமைக்கு இறக்கை உண்டு என்றும் சொல்கிறார். நல்லவை மெதுவாகத்தான் வரும் எனும் நம்பிக்கை காந்தியின் ஆதார விசைகளில் ஒன்று. அவருடைய செயல்திட்டங்கள் அனைத்தும் நிதானமான ஆழமான மாற்றங்களை கோருபவையே. வன்முறை புரட்சிகளையும் கூட அவர் வேகத்துடன் இணைத்தே புரிந்துகொள்கிறார். ஆகவே அவை தீமையையே அளிக்கும் என ஆழமாக நம்புகிறார்.

வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதான விமர்சனம் இன்றும் பொருந்தக்கூடியவையே. தொழில் மற்றும் அதை புரிபவர்கள் மீதான விமர்சனம் என்பதைக் காட்டிலும் அதன் பின்புள்ள தத்துவத்தையே காந்தி கேள்விக்கு உள்ளாக்குகிறார். வழக்கறிஞர்கள் ‘மனிதர்களுக்குள் தகராறு ஏற்படும்போது மகிழ்கிறார்கள்’ ‘தம் தொழில் மிகவும் கௌரவமானது என்று வக்கீல்கள் தாங்களே கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’ என எழுதும் போது அதில் ஒருவகையான எள்ளல் தொனி வெளிப்படுவதை காண முடிகிறது. ‘தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நீதிமன்றங்கள் மூலம் அதை செய்து வருகின்றனர்.’ என நீதியமைப்பை அன்றாடத்தில் தலையிடுவதின் வழியாக அதிகாரத்தை தக்கவைப்பதற்கான ஒரு அமைப்பாகவே கண்டார். காந்தியுடைய சரிதையில் வெளிப்படும் அனுபவங்களுடன் சேர்த்து வாசிக்கத்தக்கது இவ்வரி. காந்தி தென்னாபிரிக்காவுக்கு தாதா அப்துல்லாவின் சார்பாக வழக்கில் உதவுவதற்காக அழைக்கப்பட்டார். நெடுநாட்களாக இழுத்தடித்த வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் வழி தீர்த்து வைத்தார். அவரே சொல்வதுபோல் பெரும்பாலான வழக்குகளை அவர் சமரசம் வழியே முடிவுக்கு கொண்டுவரவே முயன்றார்.

நவீன மருத்துவத்தையும் ‘நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு ஆங்கிலேயர்கள் வைத்திய தொழிலைச் சரியானபடி உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.’ என குற்றம் சாடுகிறார். கட்டுப்பாட்டை மீறிய ஒரு செயலினால் விளையும் நோயை குணப்படுத்துவதன் வழியாக நவீன மருத்துவம் மனிதர்களை பலவீனப்படுத்துகிறது என்றொரு வாதத்தை வைக்கிறார். ‘பாபங்களை பரப்பும் ஸ்தாபனங்களே ஆஸ்பத்திரிகள்’ என குற்றம் சுமத்துகிறார்.

காந்தி என் எழுத்துக்களே என் செய்தி என சொன்னவரில்லை. ‘என் வாழ்வே என் செய்தி’ என்றவர். காந்தி தனக்கு நெருக்கமாக உள்ளவர்களிடத்திலும், தானுள்ள இடத்திலும் தன்னால் நடந்து செல்லக்கூடிய அந்த மிகக் குறுகிய வட்டத்திலும் தன்னால் நிகழ்த்தக்கூடிய ஆக்கப்பூர்வமான தாக்கமே தனக்கு நிறைவளிப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஒரு வாசகர் காந்தியின் இந்தக் கருத்துக்கும், அவரது ரயில் பயணங்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்று கேலி செய்து ஒரு கடிதம் எழுதினார். அதற்கு காந்தி இவ்வாறு பதிலளித்தார் -,

“என்னுடைய லட்சியத்துக்கும் எனக்கும் உள்ள இடைவெளியை வாசகர் உணரவேண்டும் என்பதற்காகவே அது குறித்து எழுதினேன். என் இலட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதையில் நான் எதிர்கொள்ளும் தோல்விகளையும் பலவீனங்களையும் உலகறிய வெளிப்படுத்திக் கொள்கிறேன். இதன்மூலம் போலித்தனங்களிலிருந்து நான் என்னைக் காப்பாற்றிக் கொள்கிறேன். அதுமட்டுமில்லை, தோல்வியால் ஏற்படும் அவமானம் கருதியாவது இலட்சியத்தை அடைய நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.’

மேலும்  ‘நான் ஒரு நடைமுறைவாதியாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறேன். ஆனால் முழுக்க முழுக்க நான் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற முட்டாள்தனமான வெளித்தோற்றத்திற்காக ரயில் பயணத்தையோ மோட்டார் பயணத்தையோ தவிர்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றும் பதிலளித்தார். நவீன மருத்துவத்தின் மீதான விமர்சனங்கள் இருந்தாலும் குடல்வால் அழற்சி ஏற்பட்டபோது அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தென்னாபிரிக்காவில் இருந்தவரை சட்டம் சார்ந்து பல தளங்களில் செயல்பட்டபடியேதான் இருந்தார். இந்த முரண்பாடுகளே காந்தியை நமக்கு நெருக்கமாக்குகின்றன. இந்திய சுயராஜ்ஜியத்தின் சில பகுதிகளை மட்டும் கொண்டு ஒரு அடிப்படைவாத ராணுவ காந்தியை கட்டமைக்க முடியும் ஆனால் காந்தியுடைய வாழ்வுடன் சேர்த்து வாசிக்கும்போதே அப்படி நிகழாமல் ஆகும். காந்தியை ஒருபோதும் அடிப்படைவாதிகள் கைகொள்ள முடியாததற்கு அவர் ஒரு நடைமுறை லட்சியவாதி என்பதே முக்கியமான காரணமும் கூட. ‘பிறரிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை.’ என சொன்ன அவரேதான் இந்திய மக்களின் குடிமை பண்பு மற்றும் சுகாதாரமின்மை குறித்து வருந்துகிறார். மலஜலம் கழிப்பது, நீர், தெரு ஆகியவற்றின் தூய்மை குறித்து ஐரோப்பியர்களுக்கு மிகுந்த கவனம் உண்டு, அதை இந்தியர்களும் கைக்கொள்ள வேண்டும் என்கிறார். எழுத்தறிவுதான் கல்வி எனும் பார்வையையும் மேலை கல்வியையும் மறுக்கிறார். கல்விக்கண் வழியாக அதிருப்தியை தவிர வேறு எதை காண முடியும் என கேட்கிறார். காந்தியும் அந்த கண்ணின் வழியாகவே உலகை காண்கிறார் என்பதை நினைவில் கொள்ளத்தான் வேண்டும்.     

காந்தியின் முக்கியமான வழிமுறை இந்நூலில் புலப்படுகிறது. அவர் ஆங்கிலேயரை அந்நியராக அல்லது எதிரியாக நிறுத்தாமல் அவர்கள் பிரதிநிதப்படுத்தும் நவீன நாகரிகத்தையே குற்றவாளியாகக் காட்டுகிறார். ‘அவர்கள் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பை அவர்களுடைய நாகரிகத்தின் மீது மாற்ற வேண்டும்.’ என எழுதுகிறார். ‘நாகரிகம் போக்கமுடியாத ஒரு நோய் அல்ல. ஆனால் ஆங்கில மக்களுக்கு இப்பொழுது அந்நோய் பீடித்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.’ என்கிறார். நவீன நாகரிகம் எனும் நோய் ஆங்கிலேய ஆட்சியின் வழியாக இந்தியாவுக்குப் பரவுகிறது என்பதே அவருடைய கவலையாக இருக்கிறது. ‘பிரிட்டிஷ் காலின் கீழல்ல. ஆனால் நவநாகரிகத்தின் கீழ் இந்தியா நசுக்கப்பட்டுக்கிடக்கிறது என்பதே என்னுடைய திடமான கருத்து’ எனத் தெளிவாக சொல்கிறார். காந்தியின் தீர்வு இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் ஆங்கிலேயர்களுக்கும் உரியதாகவே உள்ளது. அவர்களையும் நவீன நாகரிகத்தை கைவிட்டுவிடும்படி சொல்கிறார்.

மதங்களுக்கு இடையேயான மோதல் பல உயிர்களை வரலாற்றில் காவுவாங்கிய சூழலில் நாகரிகம் அதிக வன்முறையை நிகழ்த்துவதாக சொல்வது எனும் வாதத்தை வாசகர் வைக்கும்போது இதழாசிரியர் அதை மறுக்கிறார். மதத்தின் பெயரால் செய்யப்பட்டவை என்றாலும் அவை மதத்தினுடையவை அல்ல. இவை அறியாமையின் விளைவு, இவை எப்போதும் இருப்பதுதான் என சொல்லிவிட்டு ‘ஆனால் நாகரிகத்தின் தீயில் மக்கள் நாசமாகிக்கொண்டு வருவதற்கு ஒரு முடிவே கிடையாது. அதன் பயங்கரப் பலன் என்னவெனின், அது நன்மை தரும் என்று நம்பி அதன் சுவாலைக்குள் புகுவதுதான். ‘முந்தைய விதமான வன்முறை மோசமானது என்பதில் எவருக்கும் எந்த குழப்பமும் இல்லை ஆனால் நாகரிகம் அதையே நன்மையின் பேரால் செய்வது ஒருவகையான மோசடி எனும் தொனியே காந்தியிடம் ஒலிக்கிறது. வாசகர் இந்தியாவில் வழிப்பறிகள் மற்றும் கொலைகளை செய்துவந்த ‘பிண்டாரிகள்’ ‘தக்குகள்’ போன்றவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் நம்மைக் காத்தார்கள் எனும் வாதத்தை வைத்தபோது அதற்கு எதிரான இரண்டு வாதங்களை வைக்கிறார்.  “தொடர்ச்சியாக பாதுகாப்பு தேவைப்படுவது நம்மை உண்மையில் பலவீனப்படுத்துவது. ‘பயமின்மையிலேயே பலம் இருக்கிறதேயல்லாமல் நம் உடலின் சதைப் பற்றிலும் எலும்புத் திரட்சியிலும் அல்ல.”அடுத்ததாக காந்தி சுட்டிக்காட்டும் இடம் அவருடைய உள்ளடக்கும் அரசியலுக்கு சான்று. “பிண்டாரிகளும் தக்குகளும் நம் நாட்டினரே. அவர்களுமே சுயாட்சி கேட்கிறார்கள்” என்கிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சியை நிராகரிக்கும் வேளையில் காந்திக்கு இந்திய மன்னராட்சியின் மீது எந்த மயக்கமும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘எனக்குச் சக்தி மாத்திரம் இருக்குமானால், ஆங்கிலேயரின் கொடுமைகளை எப்படி எதிர்ப்பேனோ அதே போலவே இந்திய மன்னர்களின் கொடுமைகளையும் எதிர்ப்பேன். தேசாபிமானம் என்றால் மக்கள் நல்வாழ்வு என்றே நான் கருதுகிறேன்.’ போர்களின், அரசுகளின் வரலாறு குறித்து அவருக்கு ஈடுபாடில்லை. அரசு என்பது ஆள்பவர் அல்ல அதன் குடிகளே எனும் தெளிவு காந்திக்கு உண்டு. யார் ஆள்கிறார்கள் என்பது காந்திக்கொரு முக்கியமான கவலையாக இந்நூலில் வெளிப்படவே இல்லை. ஆங்கிலேயர்களா அல்லது இந்தியர்களா என்பது பொருட்டல்ல. ஆங்கிலமயமான இந்தியர் இந்தியாவை ‘ஆங்கிலஸ்தான்; ஆக்கி ஆள்வதற்கும் ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்திய நாகரிகத்தை ஏற்கும் போது ஆங்கிலேயர்கள் வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை என்பதே அவருடைய கருத்து. காந்தியுடன் நெருங்கிய நண்பர்களாக பழகிய ஐரோப்பியர்களின் வழி இந்தப் புரிதலை அவர் அடைந்திருக்க வேண்டும். ‘நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் சட்டமென்றால் நாம் உட்பட்டேயாக வேண்டும் என்பது ஒரு புதுமையான போக்கு’ என்று சொல்கிறார். இதுவே அவருடைய பிற்கால போராட்டங்களின் ஊற்றுக்கண் என சொல்லலாம். சத்தியாகிரகிக்கும் பிறருக்குமான வேறுபாட்டை சொல்லும்போது சத்தியாகிரகி சட்டத்தைப் பின்பற்றுபவனாகவே இருப்பான், ஆனால் அது தண்டனையின் மீதான அச்சத்தினால் அல்ல மாறாக அதை அவன் பிரக்ஞைப் பூர்வமாக தொடர்வான். அப்படி தொடர்வதே சட்டத்தை மீறுவதற்கான தகுதியையும் அவனுக்கு அளிக்கிறது என தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம் நூலில் எழுதுகிறார்.

காந்தி இந்த நூல் வழி என்னவிதமான ஆட்சியை முன்வைக்கிறார்? பாராளுமன்ற ஜனநாயகத்தையும் இந்திய மன்னர்களின் ஆட்சியையும் விமர்சிக்கிறார். கிராமங்களை குடியரசுகளாக காணும் நோக்கை அவர் இந்நூலில் வந்தடையவில்லை. பாராளுமன்றத்தை பொம்மை  கூத்து  என்கிறார், அங்கு வீணாக்கப்படும் நேரத்துக்கு பதிலாக ‘பணத்தையும் நேரத்தையும் சில நல்லவர்களிடம் ஒப்படைத்தால், ஆங்கில நாடு இன்னும் அதிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும்.’ ஒருவகையான குறைந்த நபர்களிடம் குவியும் அதிகார மாதிரியையே (oligarchy) அரசாக கற்பிதம் செய்து கொள்கிறார். மற்றுமொரு இடத்தில் ஆங்கிலேயர்கள் உரிமைகளுக்கு ஏற்றபடி கடமையை நிறைவேற்றவில்லை என்றால் ‘அவர்களுடைய உரிமைகளே அவர்களுக்குச் சுமையாய் இருக்கின்றன’ என குறிப்பிடுகிறார். இதுவும் காந்தியின் மிக முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று. மக்களுடைய இயல்புகளை பற்றி விவாதிக்கும் வேளையில் உரிமைக்காக கூடும்போது உற்சாகமாக பெரும் திரளாக கூடுபவர்கள் கடமையை நிறைவேற்ற அறைகூவல் விடும்போது அத்தனை எளிதாக கூடுவதில்லை என்பதை பதிவு செய்கிறார். கடமை உணர்வு கொண்டவனே உரிமையை பெற தகுதியானவன் என்பது காந்தியின் அசைக்க முடியாத நம்பிக்கை. சத்தியாகிரகத்தின் அடிப்படையில் இதுவும் ஒன்றே. ‘இந்து சுயராஜ்ஜியம்’ காந்தியின் கேள்விகளை தாங்கிச்செல்லும் நூல். அதற்கு பின்பான வாழ்வை இந்நூல் எழுப்பிய கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியாகச் சொல்லலாம். மருந்து மாத்திரைகளை சார்ந்தில்லாமல் இயற்கை வைத்தியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு வழியாக உடலை பேணும் வழிமுறைகளை வளர்த்தெடுக்க முயன்றார். பாராளுமன்றம், சர்வாதிகாரம், மன்னராட்சி போன்றவை இல்லாமல் கிராம தற்சார்பு வழியாக உருவாகிவரும் ஆட்சியை கற்பனை செய்தார். அதை தற்சார்பாக ஆக்குவதற்கு உண்டான முயற்சிகளில் கதரையும் ராட்டினத்தையும் கண்டடைந்தார். ஆங்கிலேயர்களின் சந்தை என்பதை உணர்ந்தவர் நுகர்வை கட்டுபடுத்த புலனடக்கத்தை வளர்த்தார். பிரம்மச்சரியத்தை வந்தடைந்தது அப்படித்தான். ஆயுதமயமாக்கல் மற்றும் வன்முறையை எதிர்கொள்ள ஆன்ம பலத்தையும் தியாகத்தையும் அடிப்படையாக கொண்ட சத்தியாகிரகத்தை கண்டடைந்து செறிவாக்கினார். கல்வியைப் பற்றிய குழப்பங்கள் ஆதார கல்வித்திட்டத்தை பற்றி சிந்திக்க வைத்தது. காந்தி இந்திய நாகரிகத்தைப் போற்றுவது அன்றைய தேசியக் கட்டமைப்பின் நடைமுறை தேவை கருதியே என்று புரிந்துகொள்ள ஒரு இடமுண்டு. இந்திய மக்களின் வெகுளித்தனத்தையே அரசியலில் பலம் வாய்ந்த ஆயுதமாக காந்தியால் மாற்ற முடிந்தது.காந்தி நவீன நாகரிகத்தின் தீமைகள் என எவற்றை எல்லாம் கருதினாரோ அவற்றுக்கு மாற்றுக்களை உருவாக்க முனைந்தார். அவருடைய தீர்வுகளில் நமக்கு விமர்சனங்களும் போதாமைகளும் இருக்கலாம். ஆனால் நவீன நாகரிகத்தின் மயக்கத்திற்கு உட்படாமல் அவர் எழுப்பிய கேள்விகள் இன்னும் முனைமழுங்கா கூர்மையுடன் அப்படியே உள்ளன. பின்காலனிய சிந்தனையாளர்கள் காலனிய தாக்க நீக்கம், அக அளவிலான காலனியம் போன்ற கருத்தாக்கங்களை விரிவாக பேசி வருகிறார்கள். இந்த சிந்தனைகளின் ஆணிவேர் காந்தியிடமிருந்தே தொடங்குகிறது 

தொடரும்…   

பிற படைப்புகள்

Leave a Comment