மர்ம மலர்
தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.
விடாது தொடுத்த 11 வது அழைப்பால்
தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.
அவன் ” ம்” கொட்டுகிறான்.
உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறை
தலைவி தன் தலை கொண்டு மோதி
அதையும் உடைக்கிறாள்.
கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று ஒரு தனி மதுரமுண்டு.
தலைவன் அதை முன்பறியா பாலகன்.
அம்மதுரம்
ஊடலின் கழுத்தைத் திருகி
குப்பை மேட்டில் எறிகிறது.
விட்ட கதைகளை பேசித் தீர்த்தபின்
அவன் தன் உள்ளாடையில்
ஒரு சின்ன ஈரத்தை உணர்ந்தான்.
அது கண்டு திகைத்தான்.
குழம்பினான்.
வருந்தினான்.
பிறகு
வெற்றுத் தரையில்
நிலவின் கீழ் மல்லாந்த படி
தன் முதல் பாடலைக் கட்டினான்.
“உலகின் அழகான விந்துக்கறையே!”
ஒழிக நின் கொற்றம் !
என் பொறாமை
எனக்கு வணக்கம் தெரிவித்தது.
நான் தூரத்து மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோள்தொட்டுத் திருப்பி
திரும்பவும் சொன்னது.
முகந்திரிந்து யார் என்பது போல் நோக்கினேன்.
பேர் சொன்னது
ஊர் சொன்னது
ஒன்றாகப் படித்த பள்ளியைச் சொன்னது.
இருவருக்கும் பொதுவான நண்பர்களைச் சொன்னது.
எந்தெந்த மரத்திலேறி
எந்தெந்த ஆற்றில் குதித்தோம்
என்று சொன்னது.
அடிவயிற்றில் உதைபட்டு
கும்மிருட்டில் கிடந்து விசும்பிய நாளை
நினைவு படுத்தியது.
பழங்கதைகள் இப்படி பலபல பேசியது.
கடைசியில்
ஒரு ஒடுங்கிய அலுமினியப் பாத்திரத்தை
தலையிலேற்றி
குரங்கைப் போல் குட்டிக்கரணம் அடித்துக் காட்டியது.
“தெரியவே தெரியாது” என்று
உறுதியாக மறுத்துவிட்டேன்.
பேசிக் மாடலுக்குத் திரும்புதல்
தன் ஆண்ட்ராய்டை தரையில் அடித்து
உடைத்து விட்டு
பேசிக் மாடலுக்குத் திரும்புகிறான் ஒருவன்.
பேசிக் மாடலுக்குத் திரும்புவதென்பது
மாட்டு வண்டிக்குத் திரும்புவது
நிலா சோற்றுக்குத் திரும்புவது
அணிலாடும் முன்றிலுக்குத் திரும்புவது
P.b. ஸ்ரீனிவாஸிற்குத் திரும்புவது
மீதியை வெண்திரையில் காண்க என்கிற
பாட்டுப் புத்தகத்திற்குத் திரும்புவது
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு
சூர்யா டி.விக்குத் திரும்புவது
“I love you” என்கிற ஆகப் பெரும் குழப்பத்திலிருந்து
“நான் உன்னைப் புணர விரும்புகிறேன்” என்கிற
தெள்ளத் தெளிவிற்குத் திரும்புவது.
ஜென்னி
இந்தக் கிழட்டு மூதேவி வாழ்வை
நீ
ஒரு நாளின் இளமைக்குச் செதுக்கிவிட்டாய்.
ஒரு மணியின் அளவுக்குச் சுருக்கி விட்டாய்.
ஒரு நொடியின் செறிவிற்குள்
அடைத்துவிட்டாய்.
கடைசியில் பார்த்தால்
ஜென் கூட இதைத்தான் சொல்கிறதாம்?
அவ்வளவு
நீ ஏன்
அவ்வளவு தூரத்திலிருக்கிறாய்?
சென்று
காணுமளவுக்கு.