294
தீயில் யானை
யானை வடிவில்
ஒரு விறகுக் கட்டை
அச்சு அசல் விறகு யானை
நிறம் மட்டும் பழுப்பு
சிறிது தீயில் காட்டி எடுக்க
நிறம் ஆனது கருப்பு
அச்சு அசல் யானை
காட்சி அதிசயம்
விரலை
ஒரு வளையம் போலாக்கி
உலகை
அதற்குள் பார்க்கிறேன்
என் உடற்பாகம் கொண்டு
செய்த சன்னல்
காணும் யாவும்
ரகசியங்கள்
இதுநாள் வரை
கையிலேயே
வைத்துக்கொண்டு
தேடியிருக்கிறேனே
கண்ணை
வாழ்வுக்கும் மரணத்துக்கும்
சிறுவயதில்
வியந்ததுண்டு
எப்படி வழியே கேட்காமல்
வேறொரு ஊருக்குச் செல்கிறார்களென்று
வளர்ந்த பிறகுதான் தெரிந்தது
பெரும்பாலான வேற்றூர்களுக்கு
சாலை ஒன்றேயென்று
வளர்ந்த பிறகு
கவலையுற்றதுண்டு
வாழ்வின் இடுக்குகளை
சிக்கலான முடிச்சுகளை
இறந்தபிறகுதான் தெரிகிறது
வாழ்வு வானில் நகரும் நிலவின் பாதையென்று
நான் வாழ்ந்த விதமோ
முடுக்குகளில் நிலவைத் திருப்பிய சிறுவனை ஒத்து
சந்திப்புப் புள்ளி
மூன்றும்
மூன்றை
துரத்துகின்றன
தூரத்தை நாய்
ஆழத்தை மீன்
வானத்தை பறவை
துரத்தும் மூன்றும்
சந்தித்துக்கொள்கின்றன
துரத்துகிற மூன்றின்
சந்திப்புப் புள்ளியில்
அடுக்குத் தும்மல்
ஒரு தும்மலில்
பறிபோனது
என் கவிதையின்
ஒரு வார்த்தை
ஒரு தும்மலுக்கடுத்து
அடுத்த தும்மல்
அடுக்குத் தும்மல்
அறிந்த முதல் வார்த்தை
முதல் தும்மலில்
அறியாத வார்த்தைகள் அத்தனையும்
அடுக்குத் தும்மலில்
மந்தை
வாகனம் ஊடறுத்துச்
சென்ற கணம்
மந்தை பிளந்தது
பிரிந்த மந்தையின்
முதல் ஆட்டுக்குட்டிக்கு
தலைமை தாங்கிப் பழக்கமில்லை
அது வெற்றுவெளியை
வெறித்துப் பார்க்கிறது
தளபதி ஆடுகள்
தள்ளி நகர்த்துகின்றன
மந்தை நகர்கிறது
மந்தை நகர்கிறது
எப்போதும் போல