இன்னும் சில கவிதைகள்

by olaichuvadi

நகர உதிரிகளின் பாடல்கள்

நாங்கள் முன்பு
கால்நடை மேய்ப்பர்களாகவும் மரத்தச்சர்களாகவும்
இருந்தோம்.

பிறகு
சில உடல்களுக்கெனச் சிலுவைகளையும்
பிரேதங்களுக்கான சரியளவில் சவப்பெட்டிகளையும்
செய்பவர்களானோம்.

நாங்கள் முன்பு
தையல்காரர்களாகவும் குடை மற்றும்
பூட்டு ரிப்பேர்களைச் சரி செய்பவர்களாகவும்
இருந்தோம்.
பிறகு,
கல்லறைக்கற்களின் மீது தூய வாசகங்கள்
எழுதிடுபவர்களானோம்.

நாங்கள் முன்பு
உழவும் நெசவும் செய்பவர்களாகவும்
தானிய மூட்டைகளை கொள்முதல் செய்பவர்களாகவும்
இருந்தோம்.

பிறகு,
நகரில் மிகஉயரமான கட்டடத்தின் சுவர்களுக்கான
செங்கல்களைச் சுமப்பவர்களானோம்.

நாங்கள் முன்பு
தரகர்களாகவும் குதிரையோட்டிகளாகவும்
சிறு ஆயுதங்களுக்குச் சாணம் பிடிப்பவர்களாகவும்
இருந்தோம்.

பிறகு
கைவிடப்பட்ட உடல்களுக்கெனச் சவக்குழிகள்
தோண்டுபவர்களானோம்.

நாங்கள் முன்பு
பாணர்களாகவும் இரும்பை உருக்கி அச்சில்
வார்ப்பவர்களாகவும் இருந்தோம்.
பிறகு
புறநகர் மின்சார ரயில் வண்டிகளில்
சில்லரைகளுக்கென கையேந்துபவர்களானோம்.

நாங்கள் முன்பு
ஒரு நிலத்தின் மீது உரிமையுள்ளவர்களாக
இருந்தோம்.
பிறகு
உதிரி நாடோடிகளின் பாடல்களுக்கான
தீர்ந்திடாத மொழியானோம்.

 

~ ஜீவன் பென்னி

ஞானம்

இவ்-அடவி தொல் பழதாய் இருக்கிறது.
அதன் பச்சையை செமிக்கும் நிலமாய் பூமி இருக்கிறாள்.
சடசடக்கும் ஒலிகளுக்குள்
துறவு இருக்க குழியாய்
அவளது தொப்புள்
புலி விழ, மான் விழ, முயல் விழ, மந்தி விழ, மழை விழ, இலை விழ, பெருங்களிறு விழ, நானும் விழ
யோனி திறக்க
விழுந்த அருவியில்
வழிந்து மிதந்தன
செத்தைகள்,
எலும்புகள்,
பிளிறல்,
உறுமல்,
முனகல்,
மற்றும்
ஒரேயொரு
பதப்படுத்தப்பட்ட
ஞானம்.

கவனக்கோருகை

எல்லாரும் என்னை கவனிக்க வேண்டும்
எல்லாருடைய நற்மதிப்பையே
பெற விரும்புகிறேன்
என் பெயரை சொன்னதும்
அவர்களுக்குத் தெரிய வேண்டும்
மத்தியில் வித்தியாசமாய் காட்சிப்பட வேண்டும்
என் சூசகத்தைக் கண்டுபிடித்து விடுபவர்களிடம் நான்
நெருங்கிப் பழகிவிடுவேன்

இப்போலியை எத்தனை நாள் தூக்கிக்கொண்டு அலைய
குளிருக்கு பிறகான வேனல் வரை
காத்திருக்க எண்ணமில்லை
சட்டையை
இப்போதே கழட்டிவிட வேண்டும்

“கசகச”வென்றிருக்கிறது
இந்நிகழ்த்துக்கலை.

 

~ தமிழ்மணி

எதிர்

வேறு வழியற்று
நிலைமையைத்தூங்குவதாக
பாவித்துக்கொண்டேன்
தேவையில்லாத அக்கவலை
புறமுதுகிட்டு
புரண்டுபடுத்துக்கொண்டது

இப்போது பிரச்சனை என்னவென்றால்
என்மீது அதுவோ
அதன்மீது நானோ
விடியும் வரை
கால்போடாமல் இருக்கவேண்டும்

 

ஜன்னல்

பயணத்தின் ஜன்னல்
ஓடாதவைகளை முந்துகிறது.

சில நேரம் மரங்கள்
சிலகணம் வானம்
ஜன்னலுக்கு சாலையாக தெரிகிறது.

ஆம்
ஜன்னல் ஒரு வாகனம் !

பயணத்தின் ஜன்னல்
இருக்கும் இருப்பிலேயே இருக்கிறது.

எதிர் திசையில் வாகனங்களாக
பாயும்போது
ஜன்னல் ஒருசாலையாக தெரிகிறது.
ஆம்
ஜன்னல் ஒரு சாலை !

மனிதர்கள் மனக்குழந்தையை
வேடிக்கைப்பார்க்கவிட்டு
ஜன்னலில்தான் அதிகம்
பயணிக்கிறார்கள்

அவர்களோடு அவர்களாய்
ஜன்னலும் ஒருகாலம்போல பயணிக்கிறது
பயணிக்காதவைகளுடன்

பயணிக்காதவைகள்
அதனுடன்போல.

ஆம்
ஜன்னல் ஒரு காலம் !

 

~ ச.அர்ஜுன் ராச்

 

கலைகள்

கைவினைஞனொருவனின் கலைக்கூடத்திற்கு
செல்ல வாய்த்தது நல்லதொரு மழைநாளில்…

கைக்கு எட்டி கண்ணுக்கெட்டாமல்
மாயங்காட்டிக்கொண்டிருந்தது
வடிவுகள் சில.

கடந்து வந்த சிலைகள் சிலவற்றில்
நான் இழந்தது எதுவென அறியவொட்டாமல்
திகைத்தது பிரக்ஞை.

மூலத்தை நெருங்கவிடாது எஞ்சிக் காத்தது
பிரம்மம்.

வடிவ விளிம்புகளை தொட்டறியும்
நொடியில் நீரில் நிழலென
வடிவிலியாக மாறும்
நிலையறுதல்களின் தொடர்ச்சி
கலைகளின் நீட்சி.

அலையடித்தலும் மங்கலுமாய்
கோட்டோவியங்கள் கோணலான செதுக்கல்களில்.
சொல்லவிந்து சூன்யங்களை நிறுத்தி
சத்தமின்றி பரவும் இருளைப்
பற்றிக்கொள்கையில்
பிரம்மம் கையில் வந்தமரும் நொடிகளில்,
கரை நீங்கிய அலைகள் விட்டெறிந்த
சிப்பிகளாய் கலைகள் புரியத் தொடங்கிற்று.

 

திகம்பரம்

திகம்பர திகழ்தல் கனவுகள்
எப்போதும் எழுவதுண்டு எனக்கு.

அதுவும், மக்கள் கூடும்
பொது வெளியிலோ
அல்லது கல்லூரி வகுப்புகளிளோவென்று.
ஆனால் ஆடைகளின்றி
கூனிக்குறுகி நிற்கையில் எவராலும்
பொருட்படுத்தப்படுவதில்லை என்பதோர்
இனிய நெருடல்.

கனவுக்குள் கனவாய்
நனவுகளின் தொடர்ச்சியென
யதார்த்ததை நிகழ்விப்பதாய் கூடுதல்
ஆதாரங்களையும் சமைத்துக் கொள்கிறேன்.
விடுபடமுடியா
கண்ணியொன்றில்
சிக்கியிருக்குமெனக்கு
சித்தபிறழ்வென நீங்கள் எண்ணக்கூடும்.
போர்வைகளை ஒன்றுக்கு இரண்டாய்
அள்ளிப்போர்த்திக்கொள்கிறேன்
ஒவ்வொருமுறை உறங்கச்செல்லும்போதும்…!

 

~ அனலோன்

பிற படைப்புகள்

Leave a Comment