சிறு கூடத்துச் சுவரையொட்டி
தாளைத் தரையில் வைத்து பிள்ளைகள்
வட்டமாய் அமர்ந்திருக்கின்றனர்.
மையத்திலே குவிக்கப்பட்டன வண்ணக்குச்சிகள்.
வரைதல் தொடங்கிற்று.
ஒரே சமயத்தில் பலர் வட்டம் விட்டோடி வந்து
வண்ணங்களைத் தேர்கின்றனர் மையத்திலிருந்து.
எங்கிருந்தோ வரும் பறவைகள்
ஒரு மரத்தை ஒரே நேரத்தில் மொய்த்து
கனிகளெடுத்துச் செல்வது அது.
ஓரிடத்தில் கூடும் மனிதரெல்லாம்
கைகுலுக்கிப் பிரியும் கொண்டாட்டமும் அது.
கடலின் அலை விளையாட்டும்
கானகம் தலையாட்டுவதும் அதுதான்.
இறுதியில் எழும்பியது அங்கே
குவிந்து குவிந்து விரியும் மலர்
இதழ்களுக்குள் நிறங்கள் கும்மாளக் கூச்சலுடன்
நகர்ந்தபடி இருக்கும் அற்புத மலர்
ஒன்றின் மேலொன்றாய் அடுக்கடுக்காக
இதழ்கள் முளைத்து வளர்ந்து கொண்டேயிருக்கும் மலர்.
நீ ஆணாயிருந்தாலும் நண்பனே
அம்மலரின் மணம் உன் மார்புகளில்
பால் துளிர்க்கச் செய்து விடும்.
நீ பெண்ணாயிருந்தாலும் தோழியே
அம்மலரின் ஒளிசூடி
தெய்வமெனத் தோற்றம் தருவாய்.