பழியழித்தல்
தீரப்பறவையே
இரைதேடி மீளுகையில்
ஈயக்குண்டுகளுக்கு இரையான உன் குஞ்சுகளை
எங்கேபொறுக்கிப்புதைத்தாய்
உன் அலகில் துடித்த முதற்குஞ்சின்
தலையறுந்த உடலை எங்கே வைத்தாய்?
“மே”யில் வங்கக்கடலை கடந்தாயல்லவா
இப்போது எங்கேயிருக்கிறாய்?
இளம்பிராயத்தின் கால்களுக்கு
அவலத்திலிருந்து திரும்புவோம்
பனைகளை மோதி சத்தமிடும் காற்றில்
நித்திரை கொள்வதற்காகவேனும்
சொந்தமான முற்றங்களுக்கு திரும்புவோம்
ஈரநிலத்தின் மீது பூக்கும் காந்தள்களை
கல்லறைகளுக்குச் சாத்தி
கண்ணீரால் வெடிக்க தாயகம் திரும்புவோம்
பறவையே
உன்பறத்தலின் தீர்க்கதரிசனமே கூடடைதலல்லவா
திரும்புவோம் வா
குண்டுகளின் வெற்றுக் கோதுகளில்
எனக்கொரு வீடு
கொல்லப்பட்ட எங்கள் குழைந்தைகளின் எலும்புகளில்
உனக்கொரு கூடு
முள்ளிவாய்க்காலுக்கு திரும்புவோம்
வா அங்கிருந்தே வாழத்தொடங்குவோம்
புலிகளுக்கொரு குயில் வாழ்வுவேண்டாம்.
நான் சுதந்திரத்திற்கான அடிமை
சவரக்கத்தியின் கூர்விளிம்பில் நடுங்கும் குரல்வளை
புலம்பெயர்வு
சுருண்ட இலையினுள்ளே தங்கும் இருளைப் போல
பாழ்கிணற்றின் படிகளில் அசையும் பாம்புகளா
என் ஜீவிதம்
பேரண்டத்தின் மீதெளும்பும் அவமானத்தின்
ஒரு துகளில் விடுதலையற்ற நான்
நீங்கள் என்னை அகதியென அழைக்கவேண்டும்
அடையாள அட்டை
அகதி அட்டை
கண்ணீர்
வெடிகுண்டு
இவற்றில் ஒரு தெரிவெனில்
வெடிகுண்டு
இன்னொன்றுஎனில் கண்ணீர்
நீங்கள் என்னை அகதியென அழைக்கவேண்டும்
எங்கள்கல்லறை, நடுகல், தாயகம்
எல்லாம் மீள்கிறபொழுது
இசைத்திடும் விடுதலையின் கீதத்திற்கிடையே
நான் உங்களை நோக்கி சகோதரர்களே
நந்திக்கடல்பக்கம் தலைகளைத்திருப்புங்கள் என்பேன்
இப்போது என்னை அகதியென்றுஅழையுங்கள்
லட்சியங்கள் நிரம்பிக்கிடக்கின்றன
நாடற்ற எல்லா அகரமுதல்வன்களிடமும்
அழைக்கவேண்டியவர்களே!
நீங்கள் சுதந்திரமான அடிமைகள்
நான் சுதந்திரத்திற்கான அடிமை
இனியொரு பொழுதும் உங்களிடம் கெஞ்சிடேன்
என்னை அகதியென்றுஅழையுங்கள்
உங்கள் அழைப்பிலிருக்கும்பகிடித்தொனியி
ல் இந்தப் பிரபஞ்சம் எரியட்டும்
உருகும் அதன் ஊனத்தில்
எழுதுகிறேன்
ஒரு வெடிகுண்டின் பாடலை
அந்தப்பாடலும் என்னை அகதியே என்றழைக்கும்.
571
முந்தைய படைப்பு