மனவேலை தணிந்தது
உரித்த பிறகே
ஒன்றுமில்லை என்று புரிகிறது.
நினைவே இன்பம் என்கிறார்கள்
எனில்
வாழ்ந்துபார்க்காமல்
நினைவைப்பெறுவது எப்படி?
அனுபவம் படுத்துவிட்டது
ஆரவாரம் இறந்துவிட்டது
அலையெனத் திமிறி
உணர்வுகள் எழுவதில்லை.
மனவேலை தணிந்ததும்
மகத்துவம் நடக்குமென்றார்கள்
எனக்கு நானே சதா
சிரித்துக்கொண்டிருப்பதுதான்
அந்த மகத்துவமா?
கல்நிழல்
மோனநீட்சியில்
சொல் அறும்.
ஒலி இறந்து
தொனி பிறக்கும்.
உள்ளுறை நாதம்
வெளி நிறையும்.
ஒழுகுநீர் ஆரலைக்
கவ்விப் பறக்கும் கழுகு
மோனம் விரிந்த
அகலிரு விசும்பிடை.
மோனம் என்பது
சென்று சேரும் பாதத்தடம்.
சொற்கள்
கல்லையே நீங்காத
கல்லின் நிழல்.
பாவனை நடனம்
பிறைநிலவை
முழுநிலவாக்கும் பாடலைப் பாடுகிறாள்
சடங்குப்பாடகி.
ஆரோகணித்துப் பறந்த குரலின் பறவை
பிறையில் ஒளிமணியை வைத்துவிட்டுத் திரும்புகிறது.
ஒவ்வொரு மணியாக வைத்து
பிறையை முழுநிலவாக்கினாள்.
உந்தியில் பிறந்து
புந்தியைத் தூய்மை செய்த
குரலின் அதிர்வில்
நுண்மையில் அசைந்தன அவளின் முலைகள்.
அதிர்வு கனிந்து
உடலின் தாளமானது.
தாளத்தில் மயங்கி
காமம் சுழன்றது.
காமத்தைக் கண்டுணர்ந்த
வேலனின் வெறியாட்டில்
முருகனும் சொக்கி நின்றான்.
காமத்தில் கனிந்த காமம்
காமமல்லாத நிலையில்
காமத்தைக் கண்டுகளித்தது.
காமத்தின் நடனத்தை
காமமே கண்டுகளிக்கும்
காமத்தின் வெளியில்
கலவிக்கு வேலையில்லை
புலவிக்கும் வேலையில்லை.
2 comments
மிகச் சிறந்த படைப்புகளை கொண்ட இதழ்
இரண்டாவது கவிதையில் வருகிற “சகோரப் பறவை” எதனைக் குறிக்கிறது கவிஞரே?