உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை
சுரேஷ் ப்ரதீப்

by olaichuvadi

 

                                      (எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து)

1

தொன்னூறுகளுக்குப் பிறகான தமிழ் நாவல்களின் வடிவத்தைத் தீர்மானித்ததில் இரண்டு நூல்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஒன்று சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ என்ற நாவல். மற்றொன்று ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்ற தொன்னூறுகள் வரை தமிழில் எழுதப்பட்ட நாவல்களின் பெறுமானத்தை ஆய்வு செய்யும் திறனாய்வு நூல். தமிழ் இலக்கியச் சூழலில் ஜே ஜே சில குறிப்புகள் பரவலாக விவாதிக்கப்பட்ட இன்றும் வாசிக்கப்படுகிற ஒரு நாவலாக நிலைபெறுகிறது. நாவல் கோட்பாடு தமிழ் நாவல்கள் அடைய வேண்டிய விரிவு குறித்த ஒரு எதிர்பார்ப்பினை முன்வைக்கிறது. இந்த நூல்களும் இதை ஒட்டி நடந்த விவாதங்களும் தமிழ் நாவலின் வடிவத்தில் செலுத்தியிருக்கும் பாதிப்பினை காலவரிசைப்படி தமிழ் நாவல்களை வாசிக்கும் யாருமே உணர்ந்து கொள்ள முடியும். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த நூல்கள் வெளிவந்தகாலம். நவீனத்துவத்தின் எல்லைகள் தட்டுப்படத் தொடங்கிய காலகட்டம் அது. இயல்பாகவே நாவல் என்பது கிளைவிரித்து பரவ வேண்டிய வடிவம் என்பதும் அப்படி விரிந்து பரவுவதற்கான மூலப்பொருட்கள் அறிவுலகிலும் சொல்முறைகள் இலக்கியத்திலும் பரவலாக்கம் பெறத் தொடங்கின.

தனி மனித அக விசாரணைகள், மாறிவரும் வாழ்க்கைச் சூழல் மனித உறவுகளில் ஏற்படுத்தும் முரண்கள் என்று சுற்றிக் கொண்டிருந்த நாவல் அறியப்படாத வாழ்க்கைச் சூழல், பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு ஒருபோதும் வந்திராத பிரச்சினைகள் (பொதுச்சமூகம் என்ற சொல்லை சற்று தயக்கத்துடன்தான் பயன்படுத்துகிறேன். மேம்போக்காக பெரும் நுகர்வுகளில் ஒன்றாக ஈடுபடும் ஒரேமாதிரியான வாழ்க்கை முறை கொண்ட சமூகம் என்று வரையறுத்துக் கொள்ளலாம்) என்று நாவலின் கருப்பொருள்கள் மாறத் தொடங்கின. முன்னரே இத்தகைய முயற்சிகள் நிகழ்ந்திருந்தாலும் ஆர்வத்தின் காரணமாக இல்லாமல் அசலான படைப்புந்துதலோடு பெரிய முயற்சிகள் நிகழத் தொடங்கியது தொன்னூறுகளுக்குப் பிறகுதான். புதிய கருப்பொருள்கள் இயல்பாகவே புதிய சொல்முறைகளையும் உள்ளே கொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான படைப்புகள் இயல்புவாதம் மற்றும் யதார்த்தவாதம் என்ற தளத்திற்குள்ளேயே நின்றுவிட்டன. இன்றும் தமிழில் எழுதப்படும் தரமான படைப்புகளில் பலவும் இவ்விரு தளங்களில் இயங்கக்கூடியவையே. மாய யதார்த்தம், அறிவியல் புனைவு போன்ற வகைமைகளில் மிகக்குறைவான படைப்புகளே வெளிவருகின்றன. அப்படி வெளிவருகிறவற்றிலும் பெருமளவு எந்தவிதமான படைப்பூக்கமும் இல்லாமல் வெறுமனே தகவல்களையும் மொழித் திருகல்களையும் வைத்து ஜோடனை செய்யப்பட்ட ஆக்கங்களாகவே இருப்பதால் தமிழ் வாசகப்பரப்பில் இந்த வகைமையே மாற்றுக் குறைவானதாக கருதப்படுகிறது. மாற்று வடிவங்களில் செவ்வியல் தன்மையை அடைய முடியும் என்ற நம்பிக்கையே தமிழ் வாசகப்பரப்பில் இல்லையோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு “தர்க்கப்பூர்வமான” படைப்புகளே தமிழில் அதிகமும் வெளிவருகின்றன.

வாஸ்தவத்தில் மாயத்தன்மையும் புதிய சொல்முறைகளும் கொண்ட படைப்புகளே பிற்கால நூல்களுக்கு வழி அமைத்துக் கொடுப்பவையாக பெரும்பாலும் திகழ்கின்றன. அவ்வகையில் தமிழில் மாற்றுச் சொல்முறைக்கான மிகச் சீரான ஒரு தனிப்பாதையை யுவன் சந்திரசேகர் தன்னுடைய நாவல்கள் வழி உருவாக்குகிறார்.  

2

“நடைமுறை வாழ்வின் வெளித்தெரியாத பரிமாணமொன்றைக் கீறிக் காட்டுவதுடன் ஓர் இலக்கியப் படைப்பின் வேலை முடிந்து விடுகிறது. மற்றபடி, அது ஒரு மைல்கல்லோ, வழிகாட்டிப் பலகையோ அல்ல. நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் விதைப்பது அல்ல அதன் உத்தேசம்.”(யுவன் சந்திரசேகர் – வெளியேற்றம் நாவலின் பின்னுரை)

வாசக இடைவெளி அல்லது வாசகப் பங்கேற்பு என்ற கருத்து கடந்த சில பத்தாண்டுகளாக அதிகம் பேசப்பட்டாலும் நவீன இலக்கியம் என்ற பிரக்ஞை நிலை தொடங்கியதில் இருந்தே மறைமுகமாக வாசகப் பங்கேற்பு செயல்பட்டு வந்திருப்பதை செவ்வியல் ஆக்கங்களை வாசிக்கும்போது உய்த்துணர முடிகிறது. வாசகன் தன் கற்பனையின் வழியாக நிரப்பிக்கொள்ளக் கூடிய (கறாரான தர்க்கத்தின் வழியாக மண்டையை உடைத்துக் கொண்டு கண்டடையப்படும் புதிர் அல்ல) ஒரு மௌனம் அல்லது மர்மம் படைப்பில் கூடி வருவதை வாசக இடைவெளி என்று உத்தேசமாகச் சொல்லலாம். நீண்ட காலமாக புனைவிலக்கியம் எழுதும் ஒரு ஆசிரியர் அதிலும் நாவல் போன்ற நீளமான இலக்கிய வடிவத்தில் செயல்படும் ஒரு ஆசிரியர் தன் ஒவ்வொரு படைப்பிலும் வாசகப் பங்கேற்பினை சாத்தியப்படுத்துவது தன்னுடைய பிரத்யேகமான வாழ்க்கை நோக்கின் வழியாகவே. ஒரு வெற்றிகரமான புனைவெழுத்தாளனின் அரசியல் பார்வை அழகியல் நோக்கு வாழ்வு குறித்த தரிசனம் வாழ்வனுபவங்கள் எல்லாமும் வாசகன் கண்டுணர இயலாதபடி புனைவின் உடலில் பிணைந்தே இருக்கும். இந்த ஒட்டுமொத்தத்தின் சாரம் பிரதிபலிக்காத படைப்புகளையே நாம் எழுத்தாளரின் அகம் வெளிப்படாத படைப்பு வெறும் கோட்பாட்டு ஜோடனைகளால் எழுதப்பட்ட படைப்பு என நிராகரிக்கிறோம். அதாவது வாசகன் தன் வாழ்க்கையைக் கொண்டு படைப்பில் நுழைய முயல்கிறான். அப்படி நுழைகிறவனை வாழ்வின் ஆழ்தளங்களுக்கு கூட்டிச் செல்லும் படைப்புகளையே வெற்றிபெற்ற ஆக்கங்கள் என்று சொல்கிறோம். சுருக்கமாக எந்த அளவு வாசகனை படைப்புகள் பங்கேற்க அனுமதிக்கின்றனவோ அந்த அளவுக்கு அவை இலக்கியரீதியாக வெற்றிபெற்ற ஆக்கங்கள்.

சிறுகதை என்ற வடிவத்தில் இந்த வாசக பங்கேற்பினை சாத்தியப்படுத்துவது நாவலுடன் ஒப்பிட சற்று எளிமையானது. ஏனெனில் சிறுகதை ஒரு திருப்பத்தைத்தான் உத்தேசிக்கிறது. சிறுகதையின் உடலை கட்டமைத்த தர்க்கம் எதுவோ அது இறுதியில் சிதறடிக்கப்படுகிறது. பொதுவாக சமூக மனம் மேல்தளத்தில் ஒத்துக்கொண்ட ஒன்றின் மேல் இலக்கிய நோக்கு சற்று ஆழமாகச் சென்று ஒரு விமர்சனத்தை வைப்பதையே பெரும்பாலும் சிறுகதைகள் செய்கின்றன. (செவ்வியல் தன்மை கொண்ட கதைகள் கூட சில சமயம் இந்த பண்புக்கு விதிவிலக்காவதில்லை.) புதுமைப்பித்தனின் பொன்னகரம் ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் போன்ற கதைகள் எழுதப்பட்ட காலத்தில் அவற்றின் சீண்டும் தன்மையாலேயே வாசகனுடன் உரையாடின. ஆனால் நாவல் வடிவம் அத்தகைய சீண்டல்களை அளிப்பதன் வழியே வாசகனுடன் உரையாட இயலாது. மாறாக நாவல் என்ற கலைவடிவம் நிரந்தரமான சிக்கல்களின் ஒரு பரிமாணத்தை காட்டுவதன் வழியாக பிற பரிமாணங்களை கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது. உதாரணமாக மண்ணும் மனிதரும் நாவலில் வரும் ஒரு சித்தரிப்பைச் சொல்லலாம். ராம ஐதாளரின் முதல் மனைவி பார்வதிக்கு குழந்தைகள் இல்லை. அவர் இரண்டாவதாக ஒரு மணம் புரிந்து கொள்ள முடிவு செய்கிறார். முதல் மனைவியின் ஒப்புதலையெல்லாம் ஐதாளர் எதிர்பார்ப்பதில்லை. பார்வதியின் மேல் அக்கறை கொண்ட ஐதாளரின் தங்கை சரஸ்வதிக்கும் பார்வதியிடம் நகைகள் குறைவாக இருப்பதே குறையாகப்படுகிறது. பார்வதி என்ற பெண்ணின் உளநிலை குறித்து எந்த விவரிப்பையும் எழுதாமல் விடுவதன் வழியாக காரந்த் நம்மை அன்றைய சூழலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார். நாவல் நடைபெறும் காலம் இன்றிலிருந்து ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்!

இதுபோன்ற சித்தரிப்பு இடைவெளிகள் இறுக்கமான கதைசொல்லல் நேரடியான எளிய சொற்களில் எழுதுதல் பகடி தொனிக்க எழுதுதல் என்று ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இந்த தனித்தன்மைகளை தொகுத்தால் அது அக்காலகட்டத்தில் திரண்டுவந்த வாழ்க்கை நோக்கின் ஒரு பகுதியாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். செவ்வியல் காலம் நவீனத்துவ காலம் பின் நவீனத்துவ காலம் என்று நாம் சொல்வது எழுத்தின் வழியாகத் திரண்ட வாழ்க்கை நோக்கின் அடிப்படையில்தான்.

அந்த வகையில் யுவன் சந்திரசேகர் பின்நவீனத்துவ காலத்தில் எழுத வருகிறார். பின் நவீனத்துவத்தை மையத்தில் திரளும் அதிகாரத்துக்கு எதிரான சிந்தனைப் போக்கு என்று வரையறுக்கலாம். நவீனத்துவம் அனைத்தையும் அறிவியலின் அடிப்படையிலும் தர்க்கத்தின் அடிப்படையிலும் தொகுக்க முனைந்தது என்றால் பின்நவீனத்துவம் அறிவியல் நோக்கின் பலகீனங்களையும் தர்க்கத்தின் உள்ளார்ந்த எளிமைப்படுத்தும் தன்மையையும் விமர்சித்து சிதறடிக்கும் வேலையை செய்தது. ஒரு உண்மைக்கு இணையாக மற்றொரு உண்மையை நிறுத்துவது தீவிரத்தன்மைக்கு எதிராக விளையாட்டாக வடிவங்களை சிதைப்பது என பின் நவீனத்துவம் நவீனத்துவத்துக்கு எதிரான ஒரு போக்காக வளர்ச்சி பெற்றது.

யுவன் சந்திரசேகரின் முதல் மூன்று நாவல்களும் மேற்சொன்ன மேற்கோளினை பின்பற்றி நடைமுறை வாழ்வின் வெளித்தெரியாத பரிணாமமொன்றை கீறிக்காட்டுவதாக உள்ளன. அதாவது நவீன இலக்கியத்தின் பொதுப்பண்பான புதுமையை முன்னிறுத்துவதாக உள்ளன. குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம், கானல்நதி என்ற இந்த இன்று மூன்று நாவல்களும் மூன்று வெவ்வேறு அலகுகளில் இயங்கக்கூடியவை. மூன்றிலுமே மரபான சொல்முறைகளை மீறிச்செல்லும் அசலான எத்தனமும் வாசகன் இதுவரை அறிந்திராத ஆழ்பரப்புகளில் அவனை பயணிக்க வைக்கும் தன்மையும் மிளிர்கின்றன.

குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலாசிரியர்  மாற்றுமெய்மை என்கிற தளத்தில் இயங்குகுவதாக நாவலாசிரியர் சொல்கிறார். இந்த நாவலில் யுவன் வெவ்வேறு வகையான கூறுமுறைகளை கையாள்கிறார். பின் நவீனத்துவம் முன்னிறுத்தும் பல்வேறு கூறுமுறைகளின் கலவையாக நாவல் நிகழ்கிறது. குழந்தைப்பேறில்லாத பழனியப்பன் சிகப்பி தம்பதியரின் கதையே நாவலின் மையப்புள்ளி. அதுதான் நாவலின் “நிகழ்காலமும்” கூட. ஆனால் பழனியப்பன் படிக்க நேரும் குள்ளச்சித்தன் சரித்திரம் என்ற நூலின் வழியாக ஹாலாஸ்யமும் அவர் எழுதிய “குள்ளச்சித்தன் சரித்திரம்” என்ற நூலின் பகுதிகளும் நமக்கு படிக்கக் கிடைக்கின்றன. பழனியப்பன் அவருடைய தந்தை அவர் நூலகத்தில் வேலைக்குச் சேர்ந்த விதம் என அவர் வாழ்க்கை சரடு ஒரு புறமாகவும் ஹாலாஸ்யத்தின் ஞான ஆசிரியராக விளங்கும் முத்துச்சாமியின் வழியாக குள்ளச்சித்தனின் அமானுஷ்யமான பிரயாணங்களும் விவரிக்கப்படுகின்றன. ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நாவலில் நேரடியாக இழையோடுகின்றன. முகலாயர் காலத்தில் இந்தியா வந்த ஒரு வணிகனின் கதையாக நாவல் நான்கு நூற்றாண்டுகளைத் தாண்டியும் முன்செல்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சமகாலம் குள்ளச்சித்தனினின் காலம் முத்துச்சாமியின் காலம் என்று வெவ்வேறு அலகுகளில் நகர்கின்றன. யுவன் சந்திரசேகர் நாவல்களின் பொதுப்பண்பாக இதனை கூற முடியும். ஆனால் வெறுமனே காலக்குழப்பதை விளைப்பது இந்த நேர்கோடற்ற தன்மையின் நோக்கம் அல்ல. வெவ்வேறு கால அலகுகளில் வாழும் மனிதர்களின் நினைவுகளை அடுத்தடுத்ததாக வைக்கும் போது வாசக மனம் கொள்ளும் விந்தையான பிரம்மிப்பு நாவல்களின் இலக்காகிறது. நாவலை வாசித்து முடிக்கையில் தர்க்கவாதியான பழனியப்பன் அடையும் நம்பிக்கையை வாசகனும் பெறுகிறான். இந்த நம்பிக்கையை வெவ்வேறு கால அலகுகளில் நிகழும் கதைகள் வழியாக இந்த நாவலில் யுவன் நிகழ்த்துகிறார்.

அவருடைய இரண்டாவது நாவலான பகடையாட்டத்திலும் வெவ்வேறு வகையான மனிதர்கள் சந்திக்கும்போது நிகழும் அனுபவம் முக்கியத்துவம் பெறுகிறது. குள்ளச்சித்தன் சரித்திரத்தை போலவே பகடையாட்டமும் பல சொல்முறைகளை கொண்டுள்ளது. ஸோமிட்ஸியா என்ற இந்திய-சீன-திபெத் எல்லைகளுக்கு நடுவே இருக்கும் ஒரு சிறுநாட்டில் இந்தியாவில் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தருவாயில் நாவல் நடைபெறுகிறது. க்ருஷ் என்ற ஒரு இந்திய ராணவ அதிகாரியை ஸோமிட்ஸியாவில் இருந்து சிலர் சந்திக்க வருவது நாவலின் முதன்மையான கதைச் சந்தர்ப்பம். ஆனால் அதற்குள் நாவல் பல்வேறு விஷயங்களை விவாதித்து விடுகிறது. ஒரு தேசத்தின் அதிகார கட்டுமானம்,மறைந்து வாழும் ஒரு முன்னாள் நாஜியின் பதற்றம், தன்போக்கில் புறப்பட்டுச் செல்லும் ஒரு ஆப்பிரிக்கனின் அமைதியான பயணம், ஸோமிட்ஸியாவின் தலைமை குருவாக அமர விதிக்கப்பட்ட சிறுவன், ஸோமிட்ஸியாவின் நிர்வாக தலைவராக ஈனோங் என பல்வேறு பாத்திரங்களின் நெருக்கடிகள் வழியாக நாவல் நகர்கிறது.

நாவலின் முதன்மையான பேசுபொருள் அதிகாரம் தான். சரியாகச் சொல்வதானால் அதிகாரத்தை இழப்பதன் பதற்றமும் சுமப்பதன் பெருமையும் கவலையும் எனலாம்.

“அதிகாரத்தை இழந்த மறுகணமே, உங்கள் காலடியில் சாஸ்வதம் போலத் தங்கிய தரை கொழகொழத்துவிடும். உங்கள் புலன்கள் அசாத்திய கூர்மையுற்று,உங்கள் சிந்தனையின், நம்பிக்கையின் கதி முழுக்க முழுக்க மாறி விடுகிறது”

இந்தியாவின் பிரதமர் இறந்திருக்கும் காலகட்டம். சீனா திபெத்தை நெருக்கிக் கொண்டிருக்கிறது. ஸோமிட்ஸியாவின் அதிகார பீடம் ஆட்டம் காணத் தொடங்குகிறது. அதிகாரத்தை சுமையென எண்ணும் சிறுவனும் அதிகாரத்தின் வழியாகவே தன் இருப்பை தக்கவைக்க நினைக்கும் ஈனோங் கிழவனும் இந்திய எல்லையில் மேஜர் க்ருஷை சந்திக்க வருகின்றனர். ஆப்பிரிக்காவின் மீதான வெள்ளை மேலாதிக்கத்தால் தாக்குண்ட ஜூலியஸ் லுமும்பா ஏற்கனவே கொல்லப்பட்டிருக்கிறான்.  முன்னாள் நாஜியான வெய்ஸ்முல்லர் தன்னுடைய பழைய அதிகார பீடம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறான். மேஜர் க்ருஷ் அவர்களை காக்கும் பொறுப்பு உடையவராக இருக்கிறார். ஆனால் அவர்களுடன் பேச்சு கொடுக்க கொடுக்க க்ருஷுக்கு தான் அமர்ந்திருக்கும் அதிகார பீடம் புலப்படத் தொடங்குகிறது. ஆனால் அவர்களை சந்தித்த மறுநாள் க்ருஷின் வாழ்க்கை உட்பட மொத்தமும் தலைகீழாக மாறிவிடுகிறது. மதுரையில் ஒரு பிராமண குடும்பத்தில் இருந்து தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தி ராணுவத்தில் இணைந்து பல்வேறு உயர்பதவிகளை வகித்தவர் மீண்டும் கீழிறங்கி சொந்த ஊரில் வந்து அமர்வதில் நாவல் முடிகிறது. இந்த ஒட்டுமொத்த வலைப்பின்னல் விளையாட்டினை ஆடிமுடிக்கும்போது ஒரு மனிதரின் வாழ்க்கை இன்னொருவரின் வாழ்க்கையை பாதிக்கும் விதம் குறித்த பிரம்மிப்பை அடைகிறோம்.

யுவனின் மூன்றாவது நாவல் கானல்நதி. யுவன் எழுதிய நாவல்களிலேயே ஓரளவு நேர்க்கோட்டு தன்மை கொண்ட நாவல் என்று இதனைச் சொல்லலாம். கானல்நதியை யுவன் ஒரு மொழிபெயர்ப்பு நாவலின் சாயலில் கட்டமைக்கிறார். தனஞ்செய் முகர்ஜி என்ற வங்காளி இசைக்கலைஞனின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவன் இசைவெளிக்குள் நுழையும் சந்தர்ப்பமும் வெற்றிபெற்ற கலைஞனாக மலர்வதற்கு முன்பே அவன் வாழ்வு சீர்கெட்டு குலைவதும் நாவலில் சொல்லப்படுகிறது. கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் இரண்டுமே ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் குறித்த நாவல்களே. நாவலின் உள்ளடக்கம் சார்ந்த பரிச்சயமின்மையால் இவற்றின் வடிவம் குறித்து மட்டுமே என்னால் ஏதும் கூற இயல்கிறது. கானல்நதி தனஞ்செய் முகர்ஜி இறந்த பிறகு அவரைப்பற்றி எழுதப்படும் ஒரு வாழ்க்கை வரலாற்று தன்மை கொண்ட வங்காளி மொழியில் எழுதப்படும் நாவல். மூல நூல் முன்னுரை மொழிபெயர்ப்பாளர் முன்னுரை என்று தொடங்கும் நாவல் தனஞ்செய் வாழ்வில் மெல்ல மெல்ல கூட்டிச்சென்று அவரது மனவெழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் டைரிக்குறிப்புகள் எண்ண ஓட்டங்கள் என தொடர்ச்சியாக பதிவு செய்து முடிகிறது.

இப்பகுதியின் தொடக்கத்தில் பேசியது போல உத்திகள் புதுமையான கூறுமுறை போன்றவற்றின் வழியாக யுவன் தன்னுடைய முதல் மூன்று நாவல்கள் வழியாக நம்மைத் தொடர்பு கொள்கிறார். ஆனால் ஆசிரியருடைய தரிசன ரீதியான தொடர்பு அவரது நான்காவது நாவலான வெளியேற்றத்தில் இருந்தே நமக்கு அறியக்கிடைக்கிறது. முதல் மூன்று நாவல்களிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாற்றுமெய்மை, அதிகாரம், இசை என்று மூன்று வகையான பேசுபொருள்கள் கையாளப்படுகின்றன. அடுத்தடுத்த நான்கு  நாவல்களிலும் பேசுபொருள் வெவ்வேறானவையாக இருந்தாலும் இந்த நாவலுக்கு இடையே ஆசிரியரின் ஒட்டுமொத்த புனைவுலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தனித்த வாழ்க்கை நோக்கு திரண்டு வருகிறது. அந்த நோக்கின் உச்சமாக நான் செய்திருக்கும் பிரிவினையில் முதலாவதாக வரக்கூடிய வெளியேற்றம் நாவலே திகழ்கிறது.

3

“என் எதிரில் இருக்கும் மனிதனுக்கும் எனக்கும் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த காலவெளி அனுபவம் ஒன்றேயானதோ, சமமானதோ அல்ல என்பது சுவாரசியமான விஷயமாக இருக்கிறது” – பின்னுரை குள்ளச்சித்தன் சரித்திரம்

“நீங்கள் நின்று அனுபவித்த புள்ளியில் இருந்து நீங்கள் மட்டுமே அனுபவம் கொண்டிருக்கிறீர்கள். ‘பக்கத்திலே நின்று அனுபவித்தேன் என்று இன்னொருவர் கூறினாலும் அது பக்கத்து புள்ளிதான். நீங்கள் நின்றது அல்ல” – வெளியேற்றம் நாவலில் இருந்து.

யுவனின் எல்லா நாவல்களும் அவரே கூறுவது போல வாழ்வின் வெளித்தெரியாத பரிமாணமொன்றை கீறிக்காட்டுவதில் வெற்றி பெற்றவையே. ஆனால் யுவனின் முதல் மூன்று நாவல்களிலும் ஆங்காங்கே தென்பட்ட அனுபவப் பகிர்வு என்ற உத்தி அவரது அடுத்தடுத்த நாவல்களை ஒரு தரிசனமாக நடத்திச் செல்கிறது எனலாம். அனுபவப் பகிர்வின் எல்லா சுதந்திரங்களையும் சாத்தியங்களையும் இந்த நாவல்கள் எடுத்துக் கொள்வதால் சிக்கலான பூடகமான எழுத்து முறைகளுக்குள் நுழையாமல் பகிர்தலில் இருக்கும் சுவாரஸ்யம் காரணமாகவே மாயத்தன்மையை பூண்டுவிடுகின்றன.

போரும் வாழ்வும் நாவலில் டால்ஸ்டாய் ராணுவ வீரர்களின் குணமாக ஒன்றை சுட்டி இருப்பார். ஒரு தினத்தின் போர் முடியும் போது அந்த தினத்தில் உண்மையிலேயே சிலர் தீரம் நிறைந்த சில செயல்களை புரிந்திருப்பார்கள். அவர்கள் அதை விவரிக்கும்போது அன்றைய போரில் பெரிதாக ஒன்றும் செய்துவிடாதவர்கள்கூட தாங்களும் பலவற்றை சாதித்ததாக சொல்லத் தொடங்குவார்கள். போர் முடிந்து நாடு திரும்பிய பிறகும் கூட குடும்பத்தில் உறவினர்களிடத்தில் அன்று கற்பனை செய்த கதையையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் அந்த கற்பனையை அவர்கள் மனம் உண்மை என்று நம்பிவிடும். பௌதீக ரீதியாக நடைபெறாத ஒரு சம்பவம் ஒரு அனுபவமாக நினைவுத் தொகுப்பில் தங்கிவிடுகிறது!

யுவன் சந்திரசேகர் தன்னுடைய நாவல்களில் அனுபவ விவரிப்பை ஒரு முக்கியமான உத்தியாக கையாள்கிறார் என்று குறிப்பிட்டேன். இந்த அனுபவ விவரிப்பு ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட உண்மைகளை அப்படியே சொல்வதற்காக விரித்து எழுதப்படுவது அல்ல. வாழ்க்கையை ஒவ்வொருவரும் அனுபவங்கொள்ளும் புள்ளியின் வழியாக விரித்து எழுதும் நோக்கிலானது. வரையறுத்தல், ஒவ்வொன்றிலும் உறைந்திருக்கும் பௌதீக ரீதியான உண்மையை கண்டு சொல்ல மெனக்கெடுதல் என நவீனத்துவமும், யதார்த்தவாதமும் எங்கெல்லாம் இறுகினவோ பின்நவீனத்துவம் அங்கெல்லாம் நெகிழ்ந்து மாற்றுப் பார்வைக்கு வழிவகுக்கிறது. நவீனத்துவம் உண்மையைத் தேடிச் சென்றது என்றால் பின் நவீனத்துவம் ஒரேசமயத்தில் இணையாக இயங்கக்கூடிய வெவ்வேறு வகையான உண்மைகளை எடுத்துக் காட்டியது. யுவனின் நாவல்களிலேயே பகடையாட்டத்தில் ஒரே காலத்தில் இயங்கும் இந்த வெவ்வேறு வகையான உண்மைகளை நாம் தரிசிக்கிறோம். வெளியேற்றம் நாவலில் தொடங்கி யுவன் இன்னும் சற்று மேலே போய் உண்மை என்பதையே மறுக்கத் தொடங்குகிறார். 

பொதுவாக நாம் “உண்மை” என்று வகுப்பது அனைவராலும் ஒரு அனுபவங்கொள்ளக்கூடிய ஒரு பௌதீக உண்மையைத்தான். பௌதீக உண்மைகள் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானவையாக இருக்கின்றன. குடும்பம், அலுவலகம், சாலை என எங்கும் நாம் பொதுவாக பகிர்ந்து கொள்ளும் உண்மைகள் வழியாகவே நம்முடைய அன்றாடம் நகர்கிறது. ஆனால் கலை விசேஷ உண்மைகளுக்கான தளம். இலக்கியம் கற்பனையை தன் அறிதல் முறையாகக் கொண்டுள்ள கலை. ஆகவே அது  பௌதீக தளத்தை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. தங்களுடைய நுண்ணுணர்வாலும் வாழ்க்கை நோக்காலும் ஒரு மாற்று உண்மையை கட்டமைப்பதன் வழியாக கலைஞன் இந்த பௌதீக உண்மைகளை அவை வகுக்கும் எல்லைகளை தாண்டிச் சென்று தனக்கான பிரத்யேக உலகை கட்டமைத்துக் கொள்கிறான். ஆனால் அவ்வுலகம் பெரும்பாலும் வேறோரு தர்க்கத்துக்கு உட்பட்டே இயங்குகிறது. அங்கிருந்தும் நம்மால் ஒரு “உண்மையை” பெற முடிகிறது. யுவன் தன் நாவல்களில் இந்த உண்மையை மறுத்து விடுகிறார். தன்னுடைய நாவல்களில் பாத்திரங்களை நேரடியாக பேச வைப்பதன் வழியாக அவர்களுடைய கற்பனையில் விளைகிற புதுமைகளுக்கு இடம் கொடுப்பதன் வழியாக இங்கு சொல்லி நிறுவப்பட்டிருக்கும் பௌதீக உலகின் இருப்பை நிராகரிக்கிறார்.

குள்ளச்சித்தன் சரித்திரம் தொடங்கி சமீபத்திய நாவலான ஊர்சுற்றி வரை நடைமுறை உலகத்தின் தர்க்கத்துக்கு உட்பட்டு இயங்கும் ஒருவன் கதை கேட்கிறார். (பழனியப்பன், சந்தானம், ஆஷா வைத்தியனாதன், கமலக்கண்ணன்) இவர்களிடம் சொல்லப்படும் அல்லது இவர்கள் அறியநேரும் கதைகளையே நாம் நாவலாக வாசிக்கிறோம்.  நம்மிடம் சொல்லப்படுவது ஒரு கதைதான் என்ற பாவனையை யுவன் நமக்கு பல்வேறு உத்திகள் வழியாக முன்னரே சொல்லிவிடுகிறார்.  முதல் நாவலான குள்ளச்சித்தன் சரித்திரத்தில் அப்பெயரிலேயே எழுதப்பட்ட ஒரு படைப்பு நாவலுக்குள் உள்ளது. பகடையாட்டத்தில் ஸோமிட்ஸியாவின் பூர்வகிரந்தம் என்ற மதநூல் வழியாகவே ஸோமிட்ஸிய சாம்ராஜ்ய வரலாறு விவரிக்கப்படுகிறது. பயணக்கதை மூன்று நண்பர்கள் சொல்லிக்கொள்ளும் கதைகளே என்ற முன்னுரையுடன்தான் தொடங்கவே செய்கிறது. மேலும் பல உதாரணங்களை கண்டடைய முடியும். நம்மிடம் சொல்லப்படுவது ஒரு கதை அல்லது எழுத்தின் ஒரு பாவனை (மொழிபெயர்ப்பு,பேட்டி) என்று சொல்வதன் வழியாக உண்மையின் சந்நிதியில் வாசகன் நின்றிருக்க வேண்டிய கட்டாயத்தை இப்புனைவுகள் தவிர்த்து விடுகின்றன. முழுக்கவே வாசகன் கற்பனையின் வழியாக கண்டறிந்து நிரப்பிக்கொள்ள வேண்டிய இடைவெளியை நாவல்கள் உருவாக்கி விடுகின்றன.

பயணக்கதை என்ற நாவல் யுவனின் சிறுகதைகளில் பிரதான புனைவுப்பாத்திரங்களான கிருஷ்ணன், இஸ்மாயில்,சுகவனம் ஆகியோர் சொல்லும் மூன்று கதைகள் வழியாக நகர்கிறது. கிருஷ்ணன் சொல்லும் கதை ஒரு பத்திரிக்கையாளன் எழுதும் தொடராக அமைகிறது. இஸ்மாயில் சொல்லும் கதை சடகோபன் என்ற எழுத்தாளன் தன்னை கண்டடையும் பயணத்தில் இருக்கும் காலகட்டத்தில் நிகழ்கிறது. சுகவனம் சொல்லும் கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகாரம் இழக்கத் தொடங்கும் ஒரு கற்பனையான ஆசிரமத்தில் நடக்கும் கதையாக ஒழுங்குடன் விரிகிறது. இந்த மூன்று கதைகளிலும் பல விரிவான அடிக்குறிப்புகள் வருகின்றன. மொத்த நாவலுமே திருத்தம் செய்யப்படுவதற்காக கிருஷ்ணனால் மறுவாசிப்பு செய்யப்படுவதாகத்தான் நம்மிடம் சொல்லப்படுகிறது. இந்த மூன்று கதைகளின் வழியாக கிருஷ்ணன், இஸ்மாயில், சுகவனம் என்ற நபர்களின் ஆளுமை புனைவில் எப்படி வளைகிறது என்பதை நம்மால் காண முடிகிறது. இவைமூன்றும் தனித்தனி குறுநாவல்கள் என்றும் நம்மிடம் சொல்லப்படுகிறது. இவ்வளவு விஷயங்களும் உணர்த்தப்பட்ட பிறகு வாசகன் கற்பனையின் வழியாக நுழைந்து பார்க்க நாவலுக்குள் பல கதவுகள் திறக்கின்றன.

நினைவுதிர்காலம் நேர்காணல் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் நாவல். ஹரிசங்கர் தீட்சித் என்ற வயலின் இசைக்கலைஞரை ஆஷா வைத்தியனாதன் என்ற பத்திரிக்கையாளர் நேர்காணல் செய்கிறார். ஹரிசங்கர் தீட்சித் வழியாக அவரது வாழ்வும் குடும்பமும் நமக்குத் தெரிய வருகிறது. ஹரிசங்கர் தீட்சித் இந்த நாவலில் தன் சகோதரர் சிவசங்கர் தீட்சித்துடனான உறவை விவரிக்கும் இடங்கள் மிக நுண்மையானவை. ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு சிவசங்கர் தீட்சித்துக்கு ஏற்படுகிறது. தம்பியை சிஷ்யனாகவும் மகனாகவுமே சிவசங்கர் பாவிக்கிறார். தம்பியின் வளர்ச்சியை தடை செய்கிறார். ஆனால் ஹரிசங்கரால் அவரை வெறுக்க முடிவதில்லை. இந்த தத்தளிப்பு அவர் வாழ்க்கை முழுவதுமே தொடர்கிறது. ஆனால் இதில் வெளிப்படாத சிவசங்கர் தீட்சித்தின் கோணம் வாசக கற்பனைக்கே முழுமையாக விடப்படுகிறது.

ஊர்சுற்றி சீதாபதி என்ற எண்பது வயது கிழவரிடம் கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் கமலக்கண்ணன் என்ற உதவி இயக்குநர் கதை கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ஊர்சுற்றி மற்றும் வெளியேற்றம் இரண்டு நாவல்களுக்கும் இடையே ஒரு அடிப்படை ஒற்றுமை உள்ளது.

/வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பிறர் சொல்பவையெல்லாம், பிறவியின் வழியாக அவர்கள் உள்ளே வந்த கதைகள். இவர்கள் சொல்வது தாங்கள் பாத்திரமாக இருந்த ஒரு கதையிலிருந்து இவர்கள் வெளியேறிய விதங்கள். தற்போது இருக்கும் சுழல்மையத்தின் அழுத்தத்தில் வருடக்கணக்காகச் சிக்கிச் சோர்ந்திருக்கும், அதன் விலங்குப் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என்று உள் ஆழத்தில் துடித்துக்கொண்டிருக்கும், என்னுடைய நாடிக்கு இதமாக இருப்பவை. அவர்களுடைய கதைகள் ஆரம்பிக்கும்போதே, நான் அவர்களாகி விடுகிறேன், பெரும் ஆறுதல் என்மீது கவிகிறது/ – வெளியேற்றம் நாவலில் இருந்து

நாம் வகுத்து வைத்திருக்கும் அன்றாட வாழ்வு என்பது பல்வேறு கொக்கிகளும் திருகாணிகளும் கொண்டது. இந்த அன்றாட வாழ்வுக்குள் மனிதர்களின் அகத்தில் ஏற்படும் சலனங்கள் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் அனைத்தும் அன்றாடத் தளத்திலேயே உள்ளன. அன்றாடத்தின் சிக்கல்களைக் கடந்து சற்று ஆழமானவற்றை நோக்கி மனதை செலுத்தும்போது நாம் சிதறிப் போகவே வாய்ப்பு மிகுதி. ஏனெனில் ஏற்கெனவே ‘பழக்கி’ எடுக்கப்பட்ட தீர்வுகள் அந்த தளத்தில் நமக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் நாம் தனித்து விடப்படுகிறோம். இதுவரை நாம் அறிந்த வாழ்வு ஒரு தோற்ற மயக்கம் மட்டுமே என்ற உண்மையை உணர நேர்கிறது. ஆனால் இத்தகைய சாகசங்களை செய்து பார்க்கும்படியான வாழ்க்கைச் சூழல் இன்று இல்லை. அன்றாடத்துடன் மனிதனை பிணைத்துக்கட்டும் கொக்கிகள் கூடிக்கொண்டே இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையை வாழ்வில் ஏற்படும் ஒரு சிக்கலினால் அதற்கான தீர்வு அன்றாடத்தின் தளத்தில் இல்லையென்பதால் கைவிட நேர்ந்தவர்கள் குறித்த கதைகளாக வெளியேற்றம் மற்றும் ஊர்சுற்றி என்ற இரு நாவல்களையும் வகுக்கலாம்.

வெளியேற்றம் சந்தானம் என்ற எல்ஐசி ஊழியர் திருவண்ணாமலையில் எதிர்பாராத விதமாக சந்திக்க நேரும் ஒருவரால் தன் வாழ்வில் அதுவரை கேள்விப்பட்டே இராத ஒன்றை நோக்கிச் செல்லும் பயணமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சந்தானத்தை இன்றைய மத்திய தர வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மனிதர் எனலாம். வறுமையற்ற கௌரவமான ஒரு வாழ்க்கையை வாழும் பெரும்பாலான மனிதர்களுடன் ஒத்துப் போகும் வாழ்க்கையை உடையவர் சந்தானம். அந்த வாழ்க்கைக்கே உரிய சவால்களும் சந்தோஷங்களும் நெருக்கடிகளும் உடையவர். அவர் தன் வாழ்க்கையை விட்டு வெளியேறி வேதமூர்த்தி என்ற ஞானியின் வெளியேற்றத்தை நோக்கிச் செல்வதாக நாவல் அமைந்திருக்கிறது. நாவலின் முதல் பகுதி அன்றாட வாழ்வின் மீதான பிடிப்பினை விடச் செய்யும் ஒரு நிகழ்வினால் ஒவ்வொருவரும் வாழ்க்கையை விட்டு வெளியேறுகின்றனர். ஒருவகையில் அதுவரை அவர்கள் உண்மையானது சாசுவதமானது என்று நம்பிக் கொண்டிருந்த ஒன்று இல்லாமலாகிறது. நாவலின் இரண்டாம் பகுதியில் சந்தானம் அப்படி வெளியேறிய ஒவ்வொருவராக சந்திக்கிறார். சந்தானமுமே அப்போது அன்பான மனைவி இரண்டு பெண் குழந்தைகள் என தனக்கு அமைந்த அன்றாட வாழ்வை விட்டு வெளியேறியவராகவே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

முதல் பகுதியில் வாழ்க்கை அளிக்கும் பிரத்யேகமான சிக்கல்களால் வீழ்த்தப்படும் ஒவ்வொருவரையும் மீட்டு வேதமூர்த்தி கூட்டிச் செல்லும் போதும் அவர்களது வாழ்க்கை ‘தலைகீழாக’ மாறிவிட்டிருக்கும் என்ற கற்பனைக்கே வாசக மனம் செல்லும். ஏனெனில்  ‘அற்புதங்கள்’ தொடர்புடைய கதைகள் அனைத்திலும் அத்தகைய தலைகீழாக்கத்தையே நாம் கண்டிருப்போம். ஆனால் அவர்களது வாழ்வில் வேதமூர்த்தி ஒரு சிறிய மருந்திடலை மட்டுமே செய்கிறார். தங்களுடைய சொந்தத் திறனைத் தாண்டி யாரும் மிகப்பெரிய ஆளாக வந்து விடுவதில்லை. கட்டற்ற பாலுறவினால் பால்வினை நோயால் கடுமையாக அவதிப்படும் ராமலிங்கம் வேதமூர்த்தியால் மீட்கப்படுகிறார். அவரது பிற்காலத்தைய வாழ்க்கை கோவில் வாசலில் பூகட்டுகிறவராகவே அமைகிறது. அதில் அவரால் திருப்தி காணவும் முடிகிறது. மலம் அள்ளும் குடும்பத்தில் பிறந்த ஜெய்ராம், கடுமையான வறுமையால் தறி நெய்யும் தன் குடும்பத்தை விட்டு வெளியேறும் மன்னாதி, தாயைப் போல தன்னை வளர்த்த அண்ணியின் இறப்பை தாங்கிக்கொள்ள இயலாத சிவராமன், எந்நேரமும் வயிற்றில் பசியை உணர்ந்தபடியே இருக்கும் குற்றாலிங்கம் என்று எண்ணற்ற வாழ்க்கைகளில் வேதமூர்த்தி நுழைகிறார். வேதமூர்த்தியை இத்தகைய துறவு வாழ்க்கையில் தள்ளிய சம்பவமும் நாவலில் உண்டு. இவர்கள் யாருமே ‘அன்றாடத்தில்’ வாழ்கிறவர்கள் அல்ல. அதனைக் கடந்து ஒன்றை கண்டுவிட்டவர்கள்.

ஊற்சுற்றி நாவலில் வரும் சீதாபதியையும் வெளியேற்றம் நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களுடனும் இணைத்து வாசிக்கலாம். அல்லது சீதாபதி என்ற ஒரு பாத்திரத்துக்குள்ளேயே நிறைய பாத்திரங்கள் உள்ளன. பதின்பருவத்திலேயே தாயையும் தந்தையையும் இழக்க நேரும் சீதாபதி சொந்த ஊரைவிட்டு புறப்படுகிறார். அவரும் அன்றாட வாழ்வுக்கு வெளியே சென்றுவிட்டவரே. சீதாபதி அறுபது வருடங்களாக இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு மீண்டும் தன் ஊரில் வந்து கிழவராக அமர்கிறார். அவரிடம் இரண்டு வாரங்களில் கமலக்கண்ணன் கேட்கும் கதையே நாவலாக விரிகிறது. சீதாபதியின் எண்ணத் தொகுப்பில் இருந்து கட்டற்று போவதான தோற்றத்தை நாவல் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சீதாபதி சந்திக்கும் நாட்டு வைத்தியர்கள் குறித்து ஒரு அத்தியாயம் பேசுகிறது. மற்றொன்று அவர் சந்திக்கும் சுற்றித் திரியும் சாமியார்கள் பற்றியதாக இருக்கிறது. சீதாபதியின் முதல் காமம் குறித்து ஒரு அத்தியாயம் இடம்பெறுகிறது. அவரது முதலாளிகள் குறித்து ஒரு அத்தியாயம் வருகிறது. சீதாபதியின் வாழ்வில் இந்த அத்தியாயங்கள் ‘அடுத்தடுத்து’ நடைபெறுகிறவை கிடையாது. அவரது நினைவுமீட்டலின்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் நடைபெறுகிறது.

இந்த நாவலை சீராகப் பிரித்தால் நாவலின் உள்ளிருந்தே நூற்றுக்கணக்கான தனித்தனி கதைகளை எடுக்க முடியும். யுவனின் மற்ற புனைவுகளுக்கும் இந்த தன்மை உண்டென்றாலும் ஊர்சுற்றியில் அது உச்சம் பெறுகிறது. யதார்த்தம் என்ற புனைவு உத்திக்கு நேர் எதிர் திசையில் யுவன் நகர்ந்து செல்வதைத்தான் அவருடைய ஒவ்வொரு நாவலும் காட்டுகின்றன. வெளியேற்றம் மாற்றுமெய்மை என்ற தளத்தில் நின்று அன்றாடத்தில் புழங்கும் மனிதர்களால் அனுபவம் கொள்ள முடியாதவற்றை தன்வயப்படுத்துகிறது என்றால் ஊர்சுற்றி யதார்த்த வாழ்வில் இருந்து வெளியேறிய ஒருவன் அனுபவிக்க நேரும் யதார்த்தம் மீறியவற்றை காண்பிக்கிறது.

யதார்த்த தளத்தில் இயங்கும் படைப்புகளுக்கு காலப்பிரக்ஞை மிக மிக அவசியமானது. காலத்தை மீறிய எதுவுமே அவற்றில் இடம்பெற முடியாது.  யுவனும் தன் படைப்புகளை யதார்த்தமானது என்று பாவனை செய்யும் ஒரு வெளியில்தான் நிகழ்த்த தொடங்குகிறார். ஆனால் புனைவு நகரும்போது அவை அந்தக் காலவெளியை உதறிவிடுகின்றன. ஒரு வகையில் எல்லாப் புனைவுகளுமே அனைவருமே உணர்ந்து கொண்டிருக்கும் சலிப்பூட்டக்கூடிய காலப் பிரக்ஞையை தாண்டிச் செல்லவே விழைகின்றன. யுவன் அதனை வரலாற்றினை மிக மிக கவனமாக உதாசீனம் செய்வதன் வழியாக சாதிக்கிறார் என்று சொல்லலாம். யுவனுடைய அனைத்து நாவல்களுமே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தொன்னூறுகள் வரை நீட்சி கொள்கிறவை என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் எழுதப்படும் காலத்தில் இருந்து ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னதாகவே யுவன் நாவலை நிறுத்தி விடுகிறார். உதாரணமாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்படும் குள்ளச்சித்தன் சரித்திரத்தில் இடம்பெறும் நிகழ்காலமான பழனியப்பன் – சிகப்பி தம்பதியரின் காலம் இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகள். சமீபத்திய நாவலான ஊர்சுற்றி 2004 அல்லது 2005 வாக்கில் நடைபெறுகிறது. ஆனால் சீதாபதி சொல்லத்தொடங்கும் கதை சுதந்திரத்துக்கு முன்பு தொடங்குகிறது.   நினைவுமீட்டல் வழியாக நாவல் நகர்வதே இதற்கு காரணம் என்று தோன்றுகிறது. வெளியேற்றம் நாவல் மட்டுமே ‘சமகாலத்தில்’ நிகழ்வது போலவே தொடங்குகிறது. ஆனால் அந்த நாவலில் பாத்திரங்கள் பேசத்தொடங்கும் போது நாவல் இயல்பாகவே முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்று விடுகிறது.

இந்த நினைவுமீட்டல் தன்மை யுவனின் நாவல்களுக்குத் தேவையான மாயத்தன்மையை அளித்து விடுகின்றன.  யுவன் சந்திரசேகர் நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த கதைசொல்லி என்று ஒரு பிரபலமான கூற்று நிலவுகிறது. ஆனால் இக்கூற்றுடன் நான் மாறுபடுகிறேன். அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்ற தமிழின் கதைசொல்லி எழுத்தாளர்களில் இருந்து யுவன் வேறுபடும் ஒரு புள்ளி உள்ளது. மற்ற எழுத்தாளர்களில் முதன்மை கதாப்பாத்திரமோ அல்லது எழுத்தாளரோ நேரடியாக கதை சொல்கின்றனர். அந்தக்கதைகளின் உண்மையின் சாயல் தூக்கலாகத் தெரிகிறது. சொல்லப்படும் கதைக்குப் பின்னே ஆசிரியன் உத்தேசிக்கும் ஒரு புள்ளி உள்ளது. வாசகன் அதை பின்தொடர்ந்து செல்லும் போது ஒரு திறப்பினை அடைகிறான். ஆனால் யுவன் சந்திரசேகரின் நாவல்களில் இடம்பெறக்கூடிய கதாப்பாத்திரங்களே கதை சொல்கின்றன. பல பாத்திரங்கள் கதை சொல்லும் காரணத்தால்  நாவலே நூற்றுக்கணக்கான குறுங்கதைகளின் தொகுப்பாக நமக்குத் தெரிகிறது. ஒவ்வொரு குறுங்கதைக்கும் ஆசிரியருக்கும் இடையே அக்கதையை சொல்லும் பாத்திரம் உள்ளது. அந்த பாத்திரத்துக்கும் அது சொல்லும் கதைக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி உள்ளது. அந்த கால இடைவெளியையும் குறிப்பிட்ட பாத்திரம் சொல்லும் கதையையும் இணைத்துப் புரிந்து கொள்ளும்போது கதை சொல்லும் பாத்திரம் பற்றிய அபிப்ராயத்தை நாம் அடைகிறோம். தன்னுடைய முதல் நாவலில் இருந்து யுவன் சந்திரசேகர் நாவலின் இந்த ‘கதைத்தன்மை’யை மெல்ல அதிகரித்து வந்திருப்பதை அவருடைய நாவல்களை காலவரிசைப்படி வாசிக்கும் வாசகனால் உணர முடியும். குள்ளச்சித்தன் சரித்திரத்தில் பழனியப்பன் – சிகப்பி தம்பதியரின் ‘யதார்த்த’ வாழ்க்கை உள்ளது. ஹாலாஸ்யம் எழுதிய குள்ளச்சித்தன் சரித்திரம் என்ற நூல் நாவலின் மற்றொரு பகுதியாக வருகிறது. ஆனால் சமீபத்திய நாவலான ஊர்சுற்றியில் சீதாபதி சொல்லும் கதைகள் மட்டுமே உள்ளன. அந்த கதைகளுக்குள் சீதாபதியிடம் சொல்லப்படும் கதைகளும் உள்ளன! அதிலும் ஊர்சுற்றி என்ற பெரிய நாவலின் முடிவு ஒட்டுமொத்த நாவலையும் வாசகன் மறுபரிசீலனை செய்யும்படியான ஒரு சிறுகதை திருப்பதைக் கொண்டு முடிகிறது.  இந்தப் பண்பு தான் யுவன் சந்திரசேகரை ஒரு கதைசொல்லி என்று அடையாளப்படுத்துவதில் இருந்து என்னைத் தடுக்கின்றன.

கதையின் மீதான வாசகனின் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துகின்றன. உண்மை என்ற அழுத்தமான பரப்பின் மீது நின்றபடி யுவன் சந்திரசேகரின் நாவல்கள் நகர்வதில்லை. அவை நாவலின் களத்தையே நம்பகத்தன்மையற்றதாக மாற்றி விடுகின்றன. அதன் வழியாக உண்மை என்ற ஒன்றை மறுத்து விடுகின்றன. ஒருவகையில் உண்மையின் அதிகாரத்தில் இருந்து வாசகனை விடுதலை செய்கின்றன.

பிற படைப்புகள்

Leave a Comment