சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
பு.மா.சரவணன்

by olaichuvadi

 

இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental Impact Assessment 2020) வரைவு அறிக்கை, ஒரு புறம் கடும் எதிர்ப்புகளையும், மறுபுறம் ஆதரவுகளையும் பெற்று பெரும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. இந்த வரைவைப் பற்றிப் பேசுவதற்கு முன், இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தான சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான காரணிகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 தேதி நள்ளிரவில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இயங்கி வந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட  விஷவாயுக் கசிவினைப்பற்றி அறிவோம். அப்பெருவிபத்தில் சுமார் 3.5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் எனவும், உறுப்புகளை இழந்தோர் மற்றும் படுகாயமுற்றோரது எண்ணிக்கை சுமார் ஐந்தரை லட்சத்துக்கும் அதிகம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது கள ரீதியிலும், சட்ட ரீதியிலுமான போராட்டம் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக இவ்விபத்து கருதப்படுகிறது.

இப்பெரு விபத்தே சுற்றுச்சூழலுக்கென தனியே சட்டம் இயற்றப்பட வேண்டிய முகாந்திரத்தை அமைத்துக் கொடுத்தது. அதன்படி இந்தியாவில் 1986ம் ஆண்டு நவம்பர்  19ஆம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.  அதற்கு முன்னரே பல நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென சட்டங்கள் இயற்றப்பட்டு பின்பற்றப்பட்டிருந்தாலும் இந்தியாவில் 1986ல் தான் கொண்டுவரப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கும் தொழிற்துறையின் பொருட்டு நிறுவப்படும் தொழிற்சாலைகளால் சூழலுக்கும், மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையான நோக்கம்.

ஜனவரி 27, 1994 அன்று, அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 இன் கீழ், சுற்றுச்சூழல் அனுமதி (environmental clearance) பெறுவதற்கான, முன்அனுமதி பெறவேண்டிய சட்ட வரைவாக,   சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு வரைவு { Environmental impact assessment (EIA)} அறிவிப்பை வெளியிட்டது.  அதனால் எந்தவொரு நடவடிக்கையையும், விரிவாக்கல் அல்லது நவீனமயமாக்கல் அல்லது புதிய திட்டங்களை அமைப்பதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி (EC) கட்டாயமாக்குதல் நடைமுறைக்கு வந்தது. அதில் நதி, நீர்நிலைகளின் பள்ளத்தாக்குகளையும்  கணக்கில் கொள்ளப்பட்டது முக்கியமானது.

பின்னர் 2006 ஆம் ஆண்டு சில திருத்தங்கள்,  சூழல் தாக்க வரைவில் கொண்டுவரப்பட்டன. காடுகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள், மலைகள் அனைத்தையும் மாநில அரசுகளும் கண்காணித்து ஒப்புகை கொடுக்கும் வகையில், மத்திய அரசு அதிகாரப்பகிர்வு அளித்தது.  இதனால் இயற்கை வளங்கள் உள்ள பகுதிகளில் தொழில்கள் தொடங்க வேண்டுமென்றால், மத்திய குழு, மாநிலக் குழு ஆகியவற்றின் அனுமதி பெற்றே தொழில் தொடங்க வேண்டும் என்று 2006 சட்டத் திருத்தம் வலியுறுத்தியது. (இப்போதைய சட்ட வரைவு , எந்த அனுமதியுமின்றி யாரும், எங்கும் தொழில் தொடங்க வழிவகை செய்கிறது.)

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்தான் என்ன?

ஒரு நிறுவனம் உருவாக்கப்படும் போது,  மனிதனுடைய சூழல் சார்ந்த உடல்நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் (தீவிர, நாட்பட்ட நோய்களையும், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளையும்), அதனால் வாழ்க்கை சூழலில் ஏற்படும் தாக்கம்(இடம் பெயர்தல், நிலங்கள் வீடுகளை இழத்தல்), மற்றும் இயற்கையின் வளங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் (காடுகள் அழிதல், பல்லுயிர் அழிதல், மலை வளங்கள், காற்று மற்றும் நீர் நிலைகளில் ஏற்படும் மாசுக்கள்) ஆகியவற்றில், ஒரு குறிப்பிட்ட திட்டம் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகும்.

திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்குமுன், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதற்கு, இந்த சூழலியல் மதிப்பாய்வு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், விதிகளையும் அறிவுறுத்துகிறது.  மண் மாசடைதல் பற்றிய தாக்கங்கள், காற்று மாசடைதல் பற்றிய தாக்கங்கள், ஒலி மாசினால் ஏற்படக்கூடிய உடல்நலத் தாக்கங்கள்,
வாழ்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் தொடர்பான மதிப்பாய்வு, நிலவியல் ஆபத்துக்கள் பற்றிய மதிப்பாய்வு, நீர் மாசடைதல் தாக்கங்கள்  போன்றவைகளையும் ஒருசேரக் கருத்தில் கொண்டுதான் நிறுவனங்கள் தொடங்கப் படவேண்டும் என்ற விதிகள் வரையறைகள் உள்ளன.

எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒரு கனரகத் தொழிற்சாலை தொடங்க, முதலில் அப்பகுதி சார்ந்த பொதுமக்களிடமும், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அவை சூழலியல் தாக்க மதிப்பு ஆய்வாகக் (EIA) கொள்ளப்பட்டு, அறிக்கையாக நிபுணர் குழுவிடம் அளிக்கப்படும். நிபுணர் குழு அந்த அறிக்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காகப் பரிந்துரைக்கும். அதன் பின்னரே தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும்.

ஆனால், கொரனா பெரும் தொற்றினால் அறிவிக்கப்பட்ட, பொது முடக்கக் காலமான ஏப்ரல் 11, 2020இல், திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை (EIA 2020) வெளியிடப்பட்டு , பொதுமக்களின் கருத்து கேட்பதற்காக 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது ஜூன் 10-ஆம் தேதி வரை.  அந்த வரைவு திருத்தங்கள் பற்றிப் பரவலாக தெரியாமல் இருந்தது. இந்த தாக்க அறிக்கை பற்றி ஒருவாறு அறிந்த சமூக ஆர்வலர்கள், சில அதிகாரிகள் பொதுமுடக்க காலத்தில், இந்தச் சூழல் தாக்க வரையறையை நடைமுறைப்படுத்த வேண்டாமென்று வேண்டுகோள்கள் விடுத்ததை சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புறம் தள்ளி விட்டார். பின்னர் சமூக ஆர்வலர்களால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் காரணமாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இச்சூழல் வரைவு குறித்த  கருத்துக்களை பொதுமக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGO), பல்வேறு தரப்பு சார்ந்த ஆர்வலர்கள் தெரிவிக்கலாம் என நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏன் EIA 2020 பெரும் விவாதப் பொருளாக மாறியது என்றால், அதில் முந்தைய EIA 2006 இல் உள்ள சில விதிகளின் திருத்தங்கள்,  இந்தியாவின் சூழலியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாவும், உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தின் உள்நோக்கம் பற்றியதாகவும் இருக்கின்றது.

இந்த விவாதப் பொருளுக்கு உள்ளே செல்லும் முன்,  சில நிகழ்ச்சிகளை நினைவில் இருத்திக் கொண்டு, EIA 2020 பற்றிய சந்தேகங்களை ஆராயலாம்.

கடந்த மே மாதம் ஏழாம் தேதி ஊரடங்கு சமயத்தில் ஆந்திராவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு வெளியேறியதில், சுமார் ஒன்றரை கிலோமீட்டர் வரை அதிக பாதிப்பும், மூணு கிலோ மீட்டர் வரை வாயுவின் வீச்சமும் இருந்தது.  அதில் 11 பேர் இறந்ததும், பலர் கடுமையான சுவாசக் கோளாறுகளால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியும் வந்தது.
விபத்துக்கான ஆய்வு நடந்த போதுதான், அந்தத் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிக்கையைச்  சமர்ப்பிக்கவில்லை,  அத்துடன் தொழிற்சாலை தரம் பற்றிய எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது .

தற்போதைய கோவா  அரசு, அப்பட்டமாக ஒரு சுற்றுச் சூழல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.  சுற்றுச்சூழல் செழிப்புள்ள மோபா பீடபூமிக்கு அருகிலுள்ள இடத்தை, ஒரு விமான நிலையம் கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்காக, கோவா அரசு தவறான அறிக்கையை சமர்ப்பித்தது, இது அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்ற ஒன்றாகும்.  இதற்குப் பிறகும், அனுமதியைப் பெறுவதற்கு தவறான தகவல்களை வழங்கியதற்காக அரசாங்க அதிகாரிகளையோ அல்லது ஆலோசகர்களையோ கண்டிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, MOEF & CC இன் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்றமும் ஜனவரி 16, 2020 இல் தடையை நீக்கியது.

சமீபத்தில், எப்ரல் 11 ந்தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள ரிலையன்ஸ் மின் நிலையத்தில் நடந்த வெடிவிபத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் சாம்பல் கழிவுகள் பரவியது, நதியை மாசுபடுத்தியது மட்டுமல்லாமல், குழந்தைகள் உட்பட பலரின் உயிரையும் பறித்தது.

கடந்த மாதம் மே 27ஆம் தேதி அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் வயலில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா உயிரின பாதுகாப்புப் பூங்கா தேயிலைத் தோட்டங்கள் வயல்வெளிகள் மற்றும் மனிதர் வாழ்விடங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. சுமார் 6000 மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்து பற்றிய ஆய்வில் 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என்றும், தரம் பற்றிய மதிப்பீடுகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் தெரியவந்தது.

உலகெங்கிலுமுள்ள 180 நாடுகளில் சுற்றுச்சூழல் எவ்வாறு இருக்கின்றது என்ற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அட்டவணையில், இந்தியா 167 வது இடத்தில் உள்ளது. மேலும்
centre for science and environment (CSE), என்ற இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் காற்று மாசினால் ஏற்படும் மரணங்கள், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு லட்சத்திற்கும் அதிகம் என்கிறது. அதிக காற்று மாசு உள்ள நகரங்களில் இந்தியாவில் 21 நகரங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக, world’s most polluted cities 2019 அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் சாயக் கழிவுகள் காரணமாக, இன்றுவரை நொய்யல் ஆறு நுரைத்து ஓடுவதும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விட்டதும், நிலத்தடி நீர், குடிநீர் , திருப்பூர் பகுதிகளில் உள்ள காற்று மண்டலம் ஆகியன பலத்த மாசடைந்து உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சாயக்கழிவுகளாலும், ரசாயனக் கழிவுகளாலும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், வழக்குகள் போன்றவையால் பல சாயப்பட்டறைகள்,  ஒன்று மூடப்பட வேண்டும் அல்லது முறையான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்த பின்பு செயல்பட வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவும் நீதிமன்றம் பிறப்பித்தது நினைவிலிருக்கும்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையினால்,   நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவை மாசுபட்டு பெரும் கேடினை ஏற்படுத்துகிறது என, ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மக்கள் போராடியதும், அதில் பலர் உயிர் நீத்ததும் , அதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் எழுந்ததும் அனைவரும் அறிந்ததே.  போராட்டத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், 15 டிசம்பர் 2018 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ஏதுமில்லை என உத்தரவு பிறப்பித்ததையும் கருத்தில் கொள்க.

இந்தியாவில் 2015-ம் ஆண்டு சுமார் 25.2 லட்சம் பேர் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அகால மரணமடைந்துள்ளனர். இதில், 18.1 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினாலும், 6.4 லட்சம் பேர் நீர் மாசுபாட்டினாலும் மரணமடைந்துள்ளனர். கிரீன் பீஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி காற்று மாசு படுவதனால் மட்டும், நம் நாட்டின் 2015-ம் ஆண்டின் மொத்த வருவாயில் 3 சதவீதம், அதாவது ரூ. 4.57 லட்சம் கோடி, இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2019 வரை போதுமான சட்டங்கள் அமலில் இருந்தபோதும், அந்தச் சட்டங்களின் போதாமையால்தான் நல்ல சுற்றுச்சூழலைத் தக்க வைக்கவும், உருவாக்கவும்  இயலாமல் போனதற்கான உதாரணங்களாக மேற்கூறியன சிலவற்றை அறிந்தோம். முன்னர் நடந்த சூழலியல் சீர்குழைவுகளைக் கணக்கில் கொண்டால்,  மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த வரையறைகளை கடுமையாக்க  வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். ஆனால், ‌தற்போதைய மத்திய அரசின் சூழலியல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் பல தளர்வுகளுடன் கொண்டுவரப்பட்டுள்ள EIA 2020 பல்வேறு விவாதங்களை நாடெங்கிலும் எழுப்பியுள்ளது. ஏனென்றால் சூழலியல் சார்ந்த சட்டங்கள், வலுவாக உள்ள போதே ஏராளமான இழப்புகளும் அழிவுகளும் நேரும் பொழுது, தளர்வுகள் கற்பனைக்கு அப்பாற்பட்ட பேரழிவை தரும் என்பது அனுமானிக்க கூடியதே.

அவைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில தளர்வுகளை மட்டும் அலசுவோம். மேலும் விவாதிக்கப்பட வேண்டிய கீழ்கண்ட சில விதிகளை குறிப்பிடுகின்றேன் .

EIA 2020 சில முரண்கள்

இதற்கு முந்திய சூழலியல் சட்டத்தில்,  மக்களின் கருத்து கேட்பு என்பது 30 நாட்களாக இருந்தது, தற்போது 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. குறைவான நாட்கள் என்பது மக்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதை குறிக்கிறது. பல்வேறு ஆண்டுகளுக்கு சூழலியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிறுவனத்தைப் பற்றிய, பொதுமக்கள், அமைப்புசாரா சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் கூற விழையும் கருத்தினைக் கவனத்தில் கொள்ள 30 நாட்களே போதாது என்பது உண்மையாக இருக்க, அதிலும்  மேலும் 10 நாட்களைக் குறைப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கமுடியும்?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும்போது மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்று தற்போதைய 2020 சூழலியல் தாக்க மதிப்பீட்டு குறிப்பிடுகின்றது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகள், நீர்வழிச் சாலைகள், ராணுவம் தொடர்பானவை, மிகப் பெரிய கட்டிடங்கள்……. போன்றவை. மிக முக்கியமாக, இதற்காக  கையகப்படுத்தப்படும் மக்களின் நிலங்கள், உடைமைகள், பொது நீர்நிலைகள்,  காடுகள், மலைகள் கடற்கரை பகுதிகள் போன்றவற்றுக்கு யாதொரு கருத்து கேட்பும் தேவையில்லை. எந்தவித முன் அனுமதியும் பெறாமல் தொழில்களைத் தொடங்கலாம் என்பது முக்கியமான தளர்வு.. அதாவது, தொழில் தொடங்கியபின்பு அனுமதி கோரி விண்ணப்பித்தால் போதும்.

முந்தைய சூழல் தாக்க மதிப்பாய்வு, சுற்றுச்சூழல் ஒப்புகை அவசியம் பெற்ற பிறகே நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், 2020 தளர்வில் ஒப்புகை வேண்டியதில்லை. நிறுவனங்கள் தொடங்கிய பின்னர்,  சுற்றுச்சூழல் ஒப்புகை பெற்றுக்கொள்ளலாம் என்று வரையறுத்துள்ளனர்.  இதன் விளைவு எவ்வாறானதாக இருக்கக்கூடும்?. சுற்றுச்சூழல் ஒப்புகை பெறாமல் தொடங்கப்பட்ட ஒரு தொழிற்சாலை,  சுற்றுச் சூழலிலும் மனித நலத்திலும் நீர்நிலைகளிலும் அழிவினைக் கொண்டு வந்த பிறகு, அந்த நிறுவனத்தை ஆய்வுக்கு (post facto) உட்படுத்தி, நெறிமுறைகளை வகுப்பதும் அபராதம் வசூலிப்பதும் எவ்வகையில் இழந்தவற்றை மீட்டுத்தரும்?

EIA 2019 வரை, ஒரு நிறுவனம் ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்துகின்ற சூழலியல் வாழ்வியல் பாதிப்புகளைப் பற்றி, பொதுமக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள்- ஊழியர்கள், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முறையிடலாம். ஆனால் EIA 2020 இல், பொதுமக்களோ அரசு சாரா அமைப்புகளோ முறையிட இயலாது. ஒன்று அதிகாரிகள் முறையிடலாம் அல்லது சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத் தலைவர் முறையிடலாம். (எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது).

ஒரு திட்டத்தின் துணையாக அல்லது தொடர்ச்சியாக சார்ந்து இருக்கும் கூறுகள் கண்காணிப்பின் எல்லைக்குள் வராது. அதாவது, பிரிவு A திட்டங்களினால் ஏற்படும் சூழல்சார் தீமைகள் குறித்த ஆய்வு  பகுதி (அதாவது, மிகவும் தீங்கு விளைவிக்கும் திட்டங்கள்) 10 கி.மீ க்குள் மட்டுமாக உள்ளது.  பிரிவு B திட்டங்களுக்கு (அதாவது, குறைவான கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள்) ஐந்து கி.மீ. வரை மட்டுதான். இந்த  இரண்டு திருத்தங்களும் ஆபத்தானவைகள்தாம். ஏனெனில், ஒரு அனல் மின்நிலையத்தின் தாக்கம் சுமார் 300 கிலோமீட்டர் வரைகூட இருக்கும்.பலபத்து கிலோமீட்டர்கள் தாண்டி பயணப்படும்  நிலக்கரிச் சுரங்கங்களுக்கான பொருட்களின் போக்குவரத்து, புற்றுநோய்ச் சூழலை விட்டுச்செல்கிறது என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது.

வறண்ட புல்வெளிக் காடுகள், சதுப்பு நிலங்களை தரிசு நிலங்களாக அறிவிக்கலாம் என்ற தளர்வு. இதன் விளைவாக கால்நடைகள் உணவுப் பகுதிகள் மட்டுமல்லாமல், அப்பகுதி சார்ந்த பல்லுயிர் சூழலும் அழிய நேரிடும். மேலும் காடுகள் அழிவதும் சதுப்பு நிலங்கள் இல்லாமல் போவதினால் ஏற்படும் நீர்நிலை மாற்றங்களும் நீண்டகால நோக்கில், பாதிப்பை ஏற்படுத்தும்.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் சதுப்பு நிலங்கள், மிகவும் அரிதான, அழிந்துவரும் இனமான கானமயில்களின் வசிப்பிடமாகவும், நாடோடி மக்களின் மேய்ச்சல் நிலமாகவும் உள்ளது.
தற்போதைய சூழலியல் அறிவிப்பின் கீழ், இதுபோன்ற முக்கியமான உயிர்ச்சூழல் மண்டலங்கள் கார்ப்பரேட் துறைகளால் சூறையாடப் படுவதற்கான வழிவகையை உருவாக்குகிறது.

மிக முக்கியமாக EIA 2020 தளர்வில் குறிப்பிட்டு கவனிக்கவேண்டிய பகுதியாக உள்ள அம்சம், நிறுவனங்களின் விரிவாக்கம் பற்றியது. ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் 50 விழுக்காட்டிற்கு மேல் விரிவாக்கம் செய்தால்தான் புதிய அனுமதி தேவை என்றும், அதற்கு குறைவான அளவு விரிவாக்கம் செய்தால், அனுமதி தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது,  நிறுவனங்கள் 49 சதவீதம் வரை எந்தவித அனுமதியும் இல்லாமல் விரிவாக்கம் செய்து கொள்ள வாய்ப்பை அளிக்கும். அதன் சூழலியல் தாக்கங்கள் எவ்வகையிலும் கவனத்தில் கொள்ளப்படாது என்பது எவ்வளவு கொடுமையான ஒன்று. அந்த நிறுவனம் இவ்வாறு 50 விழுக்காட்டிற்கு கீழாக விரிவாக்கம் செய்து கொண்டே செல்லலாம் யாதொரு அனுமதியும் பெறாமல். அதன் பின்னர் அந்த நிறுவனத்தினால் ஏற்பட்ட சூழலியல் இழப்புகள் பற்றி பொதுமக்களோ, அரசுசாரா தொண்டு நிறுவனங்களோ முறையிட இயலாது என்பதும் எவ்வளவு பெரிய கொடுமையாக அமையக்கூடும்?

ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்பு சூழலியல் சீர்கேட்டினை ஒரு நிறுவனம் செய்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், அபராத தொகையை விதிக்கப்படுவதுடன்,  அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவது மட்டும் என்ன தீர்வாக அமையக்கூடும்?

EIA 2020 தளர்வுகளுக்கு முன்பு, 20,000 சதுர கிலோ மீட்டர் வரை நிலங்களைப் பயன்படுத்த EIA அனுமதி தேவையில்லை என்று இருந்ததை, இப்போதைய வரைவில் 1,50,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள யாதொரு அனுமதியும் தேவையில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் பகாசுர நிறுவனங்கள்,  இவ்வாறான சூழலியல்  தளர்வுகளினால் ஈர்க்கப்பட்டு வெளிநாட்டில் அனுமதிக்க இயலாத, சூழலியல் சீர்கேடு உள்ள நிறுவனங்களை எளிதில் இந்தியாவில் ஆரம்பிக்க முடியும்.  இம்மாதிரியான கொள்கை முடிவுகள், நடுத்தர மற்றும் வறுமை கோட்டில் வாழும், பெரும் மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில் செயற்படுத்த முனைவது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் வாழும் மக்களை கொடூரமாக வஞ்சிப்பதும் ஆகும்.

இமய மலையை ஒட்டி அமைந்துள்ள அசாம் நாகாலாந்து மணிப்பூர் மேகாலயா அருணாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் காஷ்மீர் இமாச்சல் மற்றும் லடாக் பிரதேசங்களில் இருந்து சூழலியல் திருத்தத்திற்கு எதிராக , 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் சூழலியலாளர்கள் இணைந்து, சூழல் தாக்க மதிப்பாய்வு 2020 க்கு, கடும் கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய சூழல் தாக்க மதிப்பாய்வு வரைவினை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

புதிய EIA 2020 வரைவினை கடுமையாக எதிர்க்கும் டேராடூன் சூழலியலாளர் ரவி சோப்ரா கூறுகையில் “இமயமலைப் பகுதி இன்று பருவநிலை மாற்றங்களால் மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்து வருகிறது.  அதனால் பல்லுயிர் அழிந்துபோதல், மண் அரிப்பு, ஆறுகள் வற்றி போதல், நிலத்தடி நீர் ஆதாரங்கள் அழித்தல், பனிப்பாறைகள் உருகுவது, மலைகள் அழிக்கப்படுதல், திட மற்றும் அபாயகரமான கழிவுகள் தொடர்பான இழப்புகளை சந்தித்து வரும் சூழ்நிலையில், கொஞ்சம்கூட கட்டுப்பாடில்லாத, தளர்க்கமான திருத்தங்கள் இமயமலை மற்றும் அதை ஒட்டியுள்ள மாநிலங்களில் சுற்றுச்சூழல் நெருக்கடியை துரிதப்படுத்தும்” என்று சுட்டிக்காட்டியுள்ளது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்.

எந்த ஒரு சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளும் அனுமதிகளும் தேவையற்றவைகள் என ஆகிவிட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆர்வமுடன் வருவார்கள், வேலைவாய்ப்புகள் பெருகும் என்ற அடிப்படையிலேயே இவ்வாறான தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்ற கருத்துக்கள் பேசுபொருளாக உள்ளன. எல்லா வளங்களும் சூறையாடப்பட்டும், அழிக்கபட்டும் போனபிறகு,  யாருக்கான வாழ்க்கை இந்த நிலத்தில் உள்ளது? சுரண்டலுக்குப் பின் அரசு வசூலிக்கப் போகும் அபராத தொகையால் யாருக்குப் பயன்?.

இத்தகைய சூழ்நிலைகளில், சுற்றுச்சூழல் பின் அனுமதி வழங்குவது அல்லது செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களினால் சூழல் மாசு ஏற்பட்ட பின் அதற்கான சட்ட வரையறையை  கைக்கொள்வது மிகவும் ஆபத்தானது.  உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியன, சூழலியல் சீர்கேட்டிற்கு எதிராக கடந்த காலங்களில் தீர்ப்பளித்துள்ளன. சென்னை உயர்நீதி மன்றம்,
“எந்த வகையிலும் ஒத்துக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளது. சென்னை உயர் நீதி மன்றம், மே 6ம் தேதி 2020 அன்று,  இந்தச் சூழலியல் திருத்தங்கள், ‘மாசுபடுத்தி- தண்டம் செலுத்தும்-கொள்கைக்கு’ ஒப்புதல் அளிக்கிறது என்றதும்,  “மாசுபடுத்துதலுக்கான ஊதியம்” என்ற மோசடிக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றதும் குறிப்பிடத்தக்கது.

எந்த வகையான சட்டங்கள் குறித்தும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் தேவைதான். ஆனால் அந்த மாற்றங்கள், அந்த மண்ணின் வளங்கள் மீதும், மக்களின் வாழ்வாதார இயல்பு நிலையைக் குழைக்கும் விதமாகவும் இருக்கக் கூடாது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

இப்போதைய EIA 2020 குறித்து எழும் வெகுஜன மக்களின் அச்சங்களைப் போக்கும் விதமாக, அதிலுள்ள குறைபாடுகள் நீக்கும் வகையிலும், மேலும் இந்தப் புதிய, சூழலியல் தாக்க மதிப்பாய்வு வரைவில், தேவையான மண் மற்றும் மக்களின் நலன் சார்ந்த மாற்றங்கள் உருவாக்கக்கூடிய திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.  பொதுமக்களின் கருத்து கேட்பும், பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களின் கருத்து கேட்பும் ஒருங்கிணைந்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டவேண்டும். பின்னர் புதிய விதிகளை உருவாக்கிக் கொண்டால், நமக்கு மட்டுமல்லாது, வருங்கால சந்ததியர்களின் நலன்கள் சார்ந்ததாகவும் இருக்கும்.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் . இந்தியாவின் இயற்கை வளங்கள் நமது உயிர்நாடி.

பார்க்கவும்::

பிற படைப்புகள்

Leave a Comment