பிணந்தின்னிக் கழுகுகள் – மதிப்பீடும் அழிவும்
சு.பாரதிதாசன்

by olaichuvadi

நமக்கு யாரேனும் நன்மையோ உதவியோ செய்தால் அவர்களைப் பாராட்டுவோம்தானே. ஆனால் இறந்துபோன விலங்கைத் தின்று நோய்நொடிகள் பரவாமல் நம்மையும் காட்டிலுள்ள விலங்குகளையும் காக்கும் பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகளை அசிங்கமாகவும் அருவருப்பாகவும் முகம் சுளித்தும் நோக்குகிறோம். அது மட்டுமா? அதை இழிவும் படுத்துகிறோம். அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவைகள் நம்மை எதிர்த்துக் கேள்வி கேட்கப்போவதில்லை என்பதாலா?.பார்ப்பதற்கு வண்ணமயமாக இல்லாமல் கருப்பாக இருப்பதாலா? அல்லது உழைப்பாளிகளையும் மாட்டுக்கறியை உண்பவர்களையும் கருப்பினத்தவரையும் இழிவாகப் பார்க்கும் மனநிலை காரணமா? இதில் எதைச் சொல்லுவது?. இது மட்டுமல்லாமல் எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது ஒருவரைப் பார்த்து நீங்கள் சைவமா அசைவமா என்று கேட்டால் அவர் சைவம் என்று சொல்லிப் பெருமைப் படுவதை விட நான் மாட்டுக்கறி உண்ண மாட்டேன் என்று கூறிப் பெருமைப்படுவதைப் பார்க்கலாம்  இதுவும் கூட இப்பறவை இழிவாகச் சித்தரிப்பதற்குக் காரணமாய் இருக்கலாமோ?.

இதோ! இந்தப் பறவை குறித்து வந்த சித்தரிப்புகளைச் சற்றே உற்று நோக்குங்கள் பிரபல நாளிதழில் வந்த கார்ட்டூன் ஒன்று.

இந்தியப்பிரதமர் 500 உரூபாய் 1000 உரூபாயை செல்லாது எனத் தடாலடியாக அறிவித்ததால் ஏற்பட்ட எதிர்வினையை  அந்த கார்டூன் சித்தரிக்கிறது. (அதில் மகாபாரதக்கதையில் வரும் பாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வில்வித்தை ஆசிரியரான துரோனாச்சாரியார் தனது மாணாக்கர்களிடம் மரத்திலுள்ள பறவையைச் சுட்டிக்காட்டி உனக்கு என்ன தெரிகிறது என்று கேட்பார். அதற்கு ஒவ்வொருவரும் வேறு வேறு பதில் சொல்ல அர்ச்சுனன் மட்டும் எனக்கு அந்தப் பறவையின் கண்கள் மட்டும்தான் தெரிகிறது என்பார்.). அதனடிப்படையில் மோடியை துரோனாச்சாரியாகவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை அர்ச்சுனனாகவும் பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகை முறைகேடான பணத்திற்கு உவமையாகவும் எய்த அம்பு அந்தப் பறவையைத் தாக்காமல் அப்பாவி மனிதனைத் தாக்குவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

இதே போல் ஒரு பிரபல வார இதழில் காசுமீர் சிக்கல் குறித்து வெளிவந்த கார்ட்டூனில் பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகு சமாதானப் புறாவை வேட்டையாடுவதைப்போல உருவகப்படுத்தப்பட்டுள்ளது. கழுகை ஒரு தீவிரவாதி போலவும் சமாதானத்துக்கு எதிரி போலவும் சித்தரிக்கிறது.

கெவின் கார்ட்டர் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த குழந்தையின் புகைப்படம் உலகப்புகழ்பெற்றது. இந்தப் படம் சூடான் நாட்டில் நிலவிய உள்நாட்டுக் கலவரத்தை வெளியுலகுக்கு காட்டியது. இந்தப் படத்தில் காணும் அந்த சவலக் குழந்தை, அருகில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டு வந்த உணவு வழங்கும் மையத்தை நோக்கித் தவழ்ந்து செல்ல முயல்கிறது. அந்தக் குழந்தையை எந்த நேரமும் உணவாக்க பிணந்தின்னிக் கழுகு ஒன்று காத்து இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஒரே நாளில் உலகப்புகழ்பெற்றார். (உணவு வழங்கும் மையத்தை அடையுமுன்பே அந்தக் குழந்தை இறந்தும் விடுகிறது. இந்தப் புகைப்படத்தை எடுத்த நேரத்தில் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாமே என்ற எதிர்கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இறுதியில் அந்தப் புகைப்படக் கலைஞர் தற்கொலை செய்துகொள்கிறார் என்பது தனி செய்தி).

இந்தப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு கழுகுதான் வில்லனாகத் தோன்றும். ஆனால் உண்மையான வில்லன்கள் அந்த நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடி மக்களை வறுமையில் தள்ளிய நபர்கள்தான் என்பது நம் கவனத்துக்கு வருவதில்லை.

கார்ட்டூனிஸ்டுகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை எனச் சினிமா இயக்குநர்களும் இந்தப் பறவையை விட்டுவைக்கவில்லை. சினிமாக்களில் வில்லத்தனமான காட்சிகளிலும் திகிலூட்டும் காட்சிகளிலும் ஏன் கற்பழிப்பு காட்சிகளிலும் கூட இந்தப் பறவைதான் காட்சிப்படிமம். இது போன்ற காரணங்களால் பறவை ஆர்வலர்களும் புகைப்படம் எடுப்பவர்களும் கூட இந்தப் பறவையைக் கைவிட்டு விட்டனர். அவர்களும் வண்ணமயமான பறவைகளை முகநூலில் பதிவிட்டு லைக்ஸ் பெறுகிறார்களே தவிர இந்த பறவைகளை பெறும்பாலும் ஏரெடுத்துப் பார்ப்பதில்லை. முகநூலிலும் பகிரப்படுவதில்லை.

இப்பறவையின் ஆங்கிலப் பெயரான ’வல்சர்’என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் எனும் அகராதி கொள்ளைக்காரன் என்றும் சூறையாடுபவன் என்றும் பொருள் தருகிறது. இந்தப் பொருளின் அடிப்படையில்தான் பெரும்பாலான கார்ட்டூன்கள் இந்தப் பறவையை ஊழல் அரசியல்வாதிகளோடும் அதிகாரிகளோடும் ஒப்பிடுகின்றன.

உயிரினத் தோற்ற வரலாற்று ஆசான் சார்லஸ் டார்வின் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. அவர் இந்த பறவையைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? அழுகிய பிணங்களில் களியாட்டம் போடும் ஒரு வெறுக்கத்தக்க பறவை எனக் குறிப்பிடுகிறார். (இதை வாசிக்கும்போதே நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது).

ஆங்கிலத்தில்தான் இப்படி என்று நினைத்து விடாதீர்கள். தமிழிலும் கழுகின் ஒரு வகையை கள்ளப்பருந்து என்றும் பறைப்பருந்து என்றும் ஆகாயத் தோட்டி என்றும் இழிவாகவே அழைக்கப்படுகின்றன.

அமெரிக்க ஏகாதியபத்தை எதிர்க்கும் இடது சாரிகளுக்கும் அந்த நாட்டின் தேசியப் பறவையான மொட்டைத்தலைக் கழுகுகள்தான் குறியீடு.

இப்படி உலகம் முழுக்கவே பல எழுத்தாளர்கள், கார்டூனிஸ்டுகள், கவிஞர்கள், சினிமா இயக்குநர்கள் எனப் பெரும்பாலோனோர் கழுகுகளை அதிலும் பிணந்தின்னிக் கழுகுகளை எதிர்மறையாகவே காட்சிப்படுத்தி வருகின்றனர். அதை எதற்கு இப்போது குறிப்பிடுகிறேன் என்று கேட்கிறீர்களா?.

இந்த வகைப் பறவைகள் மளமளவென எண்ணிக்கையில் குறைந்து விட்டன. அதைக் கருத்தில் கொண்டு இதைப் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக பறவை ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்தனர். அப்போது நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஒரு அதிகாரி ‘’இந்த பறவையை எல்லாம் எதற்கு பாதுகாக்கப்படவேண்டிய பட்டியலில் சேர்க்கவேண்டும். இது அழகில்லாத அருவருப்பான பறவையாச்சே! செத்துப்போனதை சாப்பிடுமே அதானே’’ என்று வினவியிருக்கிறார். இத்தகைய சிந்தனைகள் தோன்றுவதற்குக் காரணமே இப்பறவையைப் பற்றிய சித்தரிப்புதான் என்பதை நாம் புறந்தள்ளி விடக்கூடாது.

கழுகுகள் அன்றும் இன்றும்

பாறு எனப் பழங்குடி மக்களாலும் சங்க இலக்கியங்களிலும் அழைக்கப்படும் இப்பறவைகளை அண்மையில் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கிறதா?  இப்பறவைகளை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? இந்தக் கேள்வியை முப்பது ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால், இது என்ன கேள்வி? எல்லா இடத்திலும்தான் இருக்கிறதே என்று எதிர்கேள்வி கேட்டிருப்பீர்கள். ஆம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பறவைகள் ஊர்ப்புறத்திலும் வான் வெளியிலும் கூட்டமாக பறந்த காட்சி நம் கண்களில் படாமல் தப்பியிருக்க முடியாது.

அன்னாந்து பார்த்தால் கழுகுகள் தென்படும் அறிகுறியே இருக்காது. வெறிச்சோடி இருக்கும். ஆனால் சற்று நேரத்திற்குள் மளமளவெனக் கூட்டமாக வந்து இறங்கிவிடும். இறந்த விலங்கைக் கண்டால் எங்கிருந்து வருமோ தெரியாது. (கழுகுக்கு மூக்கு வியர்தார்போல் வந்துவிட்டார் என்ற பழமொழி இதை வைத்துதான் உருவாகியிருக்கக்கூடும்). வந்து சில மணிநேரத்துக்குள் சடலம் இருந்த அடையாளமே இல்லாமல் தின்று தூய்மைப்படுத்திவிட்டுச் சென்றுவிடும். புலி, சிறுத்தை போன்ற ஊணுண்ணிகள் கொன்ற விலங்குகளைக் கண்டாலும் விட்டுவைக்காது. அவற்றோடு போட்டி போட்டு உண்ணும். புலிக்கும் சிறுத்தைக்கும் ஒரு பழக்கம் உண்டு. புலி தான் கொன்ற இரையை பிற விலங்குகளும் பறவைகளும் அபகரிக்காமல் இருக்க புதருக்கு இழுத்துச்செல்லும். சிறுத்தையோ மரத்தின் கிளைக்கிடையே வைத்து உண்ணும் என்று கேட்டும் பார்த்தும் இருக்கிறோம். ஆனால் ஒரு முறை தானியங்கிக் கேமிரா பதிவில் பார்க்க நேர்ந்த அந்தக் காட்சி வேறு விதமாய் இருந்தது. கடமானை வேட்டையாடி உண்ட களைப்பில் சற்றுத் தொலைவில் புலி படுத்திருக்க, மீதமிருந்த இரையை பாறு கழுகுக் கூட்டம் பங்குபோட்டுக் கொண்டிருந்தன. கொட்டாவி விட்டபடியே அவைகள் உண்பதைப் புலி பார்த்துக்கொண்டிருந்தது. அந்தப் பார்வை, ’எனக்கு பசியாறி விட்டது நீங்களும் தாராளமாக வந்து சாப்பிடுங்கள் என்பது போல் இரசிக்கும்படி இருந்தது. விலங்குகளுக்குள்தான் எவ்வளவு ஒத்திசைவு. நீயெல்லாம் மனிதனா இல்லை மிருகமா என்று வசைச்சொல்லை மாற்றவேண்டும்போல் தோன்றுகிறது இல்லையா?

சரி. கழுகுக்கு வருவோம். கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்புவரை இந்தப் பறவைகள் இந்தியாவில் இலட்சக்கணக்கில் இருந்தன என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உலகிலேயே அதிக கால்நடைகளைக் கொண்ட இந்தியாவில் இப்பறவையின் எண்ணிக்கையும் அதிகமாய் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. அதைவிட முக்கியமாக இன்னொரு காரணமும் உண்டு. சமண மதத்தின் தாக்கத்தினால் உருவான சைவ உணவுப் பழக்கமும் அசைவம் உண்பவர்கள் கூட மாட்டுக்கறி உண்ணாதிருப்பதாலும் இப்பறவைக்கான இரை எளிமையாகக் கிடைக்க ஒரு வாய்ப்பாய் அமைந்தது. (விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு மாடுகள் பெரிதும் உதவியதாலும் மாட்டுப்பால் குடித்து வளர்ந்ததாலோ என்னவோ மாட்டுக்கறியை பெரும்பாலானோர் குறிப்பாக வேளாண்குடிகள் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன்). எது எப்படியோ பாறு கழுகுகளின் உணவுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது.

மேலும், எங்கெல்லாம் முற்றிலும் வணிக மயமாகாத கால்நடை வளர்ப்பும் விவசாயமும் இருந்ததோ அங்கெல்லாம் இந்தப்பறவையின் எண்ணிக்கையும் அதிகமாய் இருந்தன. குறிப்பாக பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ் போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இதன் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தன.

தென் இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் இப்பறவைகள் அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் சென்னைவரை பெரும்பாலான இடங்களிலும் நீக்கமறக் காணப்பட்டதை பல்வேறு செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பை நான் மேற்கொண்டபோது பல்வேறு சுவாரசியமான செய்திகள் கிடைத்தன. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரிப்பகுதியில் நரிக்குறவர் ஒருவர் இந்தக் கழுகுக்கு மூக்கனாங்கயிறு போட்டு வீதியில் அழைத்து வந்து வசூல் வேட்டை நடத்தியது பற்றி அன்பிற்குரிய நண்பர் திரு லியோ அவர்கள் பகிர்ந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. தஞ்சாவூரில் எலும்புத்தூள் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் கொட்டும் கழிவை உண்ண இந்த வகைப்பறவைகள் கூட்டமாக வந்ததை தமிழ்நாட்டுப் பறவைகள் நூல் ஆசிரியர் க.ரத்னம் குறிப்பிட்டுள்ளார். பின்னர், அந்த எலும்புத்தூள் ஆலையால் சுகாதாரக்கேடு நேர்கிறது என்று தி இந்து ஆங்கில நாளிழில் செய்தி வெளியிட்டதால் அந்த தொழிற்சாலை அப்புறப்படுத்தப்பட்ட பின் அவையும் இடம்பெயர்ந்து விட்டன என்ற செய்தியையும் குறிப்பிட்டார்.

இப்பறவைகள் தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்ததால் காய் பறிப்பதற்குச் சிரமமாய் இருந்தது என்றும் மரம் பட்டுப்போகிறது என்றும் அதன் கூட்டை கலைத்து விட்டதை திருநெல்வேலி களக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பகிர்ந்து கொண்டார். இவைகள் கூடு கட்டினால் ஆகாது என்று கூறி கூட்டை களைத்துப்போட்டதை ஊத்துக்குளியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்தார். கோயமுத்தூரில் காந்திபுரம் மற்றும் உக்கடம் அருகே இருந்த இறைச்சிக் கூடத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் சாதாரணமாகத் தென்பட்டதை நண்பரின் தகப்பனார் பெரியசாமி என்பவர் பகிர்ந்து கொண்டார்.

பறவையியல் அறிஞர் சாலிம் அலி அவர்கள் இந்த வகைப் பறவைகளை வெகு சாதாரணமாக அனைத்துப் பகுதிகளிலும் பார்க்கலாம் எனக்குறிப்பிடுகிறார். ‘Common Birds Of India’ என்ற நூல்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது என்பதிலிருந்தே இப்பறவைகள் அனைத்து இடங்களிலும் இருந்ததைத் தெரிந்து கொள்ளலாம். ’கேரளத்தின்ட பட்சிகள்’ என்ற புகழ்மிக்க நூலை எழுதிய நீலகண்டன் அவர்களின் குறிப்பு 1950 களில் சென்னையிலுள்ள குரோம்பேட்டை தோல்தொழிற்சாலை பகுதியில் காகங்களின் எண்ணிக்கையை விட பிணந்தின்னிக் கழுகுகள் அதிகமிருந்தன என்று தெரிவிக்கிறது. பறவை குறித்து வெளிவந்து பழைய நூல்களைப் புரட்டிப்பார்த்தால் அதில் செந்தலைக் கழுகை பாண்டிச்சேரி வல்சர் (Pondichery Vulture) எனவும் மஞ்சள் முகக் கழுகை நெப்ரான் செஞ்சிவிட்டிஸ் (Neophron chenjivities) என்ற அறிவியல் பெயராலும் குறிப்பிடுகிறது. இதன்மூலம் அவை பாண்டிச்சேரியிலும் செஞ்சிப் பகுதியிலும் காணப்பட்டதை அறியலாம்.

கோயமுத்தூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாடம் செய்து வைக்கப்பட்டிருக்கும் வெண்முதுகு பாறு கழுகு கோயமுத்தூருக்கருகே பிடிபட்டதைத் தெரிவிக்கிறது. அதேபோல சென்னை அருங்காட்சியகத்தில் பாடம் செய்து வைக்கப்பட்டிருக்கும் கழுகும் காஞ்சிபுரத்தில் இருந்து சேகரிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இது தவிர இவைகள் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோயமுத்தூர், ஆகிய பகுதிகளில் காணப்பட்டதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் வயதில் இளையவராய் இருந்தால் உங்கள் பெற்றோரிடமோ தாத்தா பாட்டியிடமோ கேட்டுப் பாருங்கள். இவைகள் குறித்து தகவல் கிடைக்கலாம். (வாசகர்கள் உங்கள் ஊரில் பார்த்த குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம்). அதற்குமுன் நான் இப்பறவைகளைப் பார்த்ததையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். எனக்குப் பத்து வயதாக இருக்கும்போது நடந்த சம்பவம். நாங்கள் வளர்த்த எருமை இறந்துவிட்டதால் அதை ஆற்றோரத்தில் கொண்டுபோய் போட்டோம். அதன் தோலை ஒருவர் கிழித்து எடுத்துக்கொண்டிருந்தார். அதைப்பார்த்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக வந்தமர்ந்த பறவைகளைப் பார்த்து பயந்துவிட்டேன். என் உயரத்திற்கு அவை இருந்தன. உடனே வீட்டுக்கு ஒடிவந்து விட்டேன். அவை பிணந்தின்னிக் கழுகு என என் அப்பா எனக்குச் சொன்னார். இப்படித்தான் இந்தப்பெயர் எனக்கு அறிமுகமானது. அதன் பின் பறவை பார்த்தலில் ஆர்வம் வந்தபோது 1991 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகளைச் சுற்றிலும் 1994ல் மதுரைக்கருகிலுள்ள திருபுவனத்திலும் பார்த்திருக்கிறேன்.

தற்போதைய நிலவரப்படி அவை தமிழ்நாட்டில் முதுமலை, சத்தியமங்கலம், மாயாறு சமவெளிகளில் மட்டும் காணப்படுகின்றன. அங்கும் கூட மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன.

இவைகள் அங்கு இருக்கின்றன என்பதை நண்பர் சந்திரசேகர் சொல்லி இருந்தார். பறவையியல் அறிஞர்களும் இந்தப் பறவை தமிழ்நாட்டில் முற்றாக அற்றுப்போய்விட்டது என்று முடிவு செய்திருந்தார்கள். மேற்குத்தொடர்ச்சி மலை முழுக்க இப்பறவை குறித்து கணக்கெடுப்பு நடந்த போதும் இப்பறவை முதுமலை மாயாறு ஒட்டிய பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததைப் பதிவு செய்திருந்தனர்.

இதை எல்லாம் புரட்டிப் போட்டது நான் மேற்கொண்ட ஒரு பயணம்.

கிழக்குத் தொடர் மலையும் மேற்குத்தொடர் மலையும் சந்திக்கும் மலை அடிவாரத்தில் கெத்தைப்பட்டியில் 2010 ஆம் ஆண்டின் பின்பனிக்காலத்தில் முகாமிட்டிருந்தோம். புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதில் பேருந்தைப்பிடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். சிலுசிலுவென ஒடிக்கொண்டிருந்த மாயாற்றில் முகம் கழுவியபோது ஆனந்தமாய் இருந்தது. அப்படியே இறங்கி குளிக்கவேண்டும் போல இருந்தது. ஆனால் ஆவலை அடக்கிக்கொண்டேன். காரணம் இந்தப் பேருந்தைத் தவற விட்டால் இன்னும் எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றால்தான் பேருந்தைப் பிடிக்க முடியும்.வழியில் கண்ணில் பட்ட பறவையினங்களையெல்லாம் ஆற அமரப் பார்த்துக்கொண்டே சென்றதில் பேருந்தைப் பிடிக்க முடியவில்லை. ஒரு டெம்போ கிளம்பும் அதில் சென்று விடலாம் என்று எதிர்த்திசையில் நடந்தோம். அதுவும் கிளம்பி விட்டது. சரி இன்னும் மதியம் 3 மணிக்குத்தான் அடுத்த பேருந்து எனவே ஆற அமர அமர்ந்து பறவையினங்களைப் பார்க்கலாம் என்று ஒரு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தோம். அப்போது வானில் புள்ளியாக ஒன்று கிழக்குத்திசையிலிருந்து பறந்து வந்தது, தொலைநோக்கியைத் திருகி உற்று நோக்கியபோது புருவம் உயர்ந்தது. ஆம் வெண்முதுகு பாறு கழுகுதான் தலைக்குமேலே மேற்குத் திசை நோக்கிப்பறந்து சென்றது. சற்று நேரத்திற்கெல்லாம் மாயாறு மலை இடுக்கிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்து வந்த வண்ணம் இருந்தன. அதை எண்ணிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் அதன் எண்ணிக்கை 105 ஐ தொட்டது. ஆச்சரியத்தால் வாய் பிளந்தேன். இது குறித்து பறவை அன்பர்களிடம் பகிர்ந்து கொண்டபோது யாரும் நம்பத்தயாரில்லை. ஏதோ ஐந்து அல்லது பத்து பறவை வேண்டுமானால் பார்த்திருக்கலாம். இவ்வளவு எண்ணிக்கை இருக்க வாய்ப்பில்லை. பரமார்த்த குருவின் சீடர்களுக்கு எதிர்பதமாக நீ பார்த்த பறவையையே திரும்ப எண்ணியிருக்கலாம் என்று கேளி பேசினர். என்னிடம் இருந்த நிழற்படக்கருவியில் அவைகளின் கூட்டத்தை ஒரு சேர எடுக்க முடியாததால் அவர்களிடம் வம்பளக்க விரும்பவில்லை.

தமிழ்நாடு முழுவதும் அழிந்த பறவை இங்கு மட்டும் இருப்பதன் காரணம் என்ன. தமிழ்நாட்டில் சரணாலயங்கள் பல இருக்கின்றனவே அங்கெல்லாம் இல்லாமல் இங்கு மட்டும் எப்படி என்று யோசித்தபோது என் அறிவுக்கு சில விடைகள் கிட்டின.

கால்நடைகளுக்கு வலிக்கொல்லியாக போடப்படும் டைக்ளோபினாக் அதன் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. அவை இறந்த பின் அவற்றைச் சாப்பிடும் பினந்திண்ணிக் கழுகுகளின் சிறுநீரகத்தை அது தாக்கி இறக்கச் செய்கிறது. இதன் காரணமாக இந்திய அளவில் டைக்ளோபினாக் வலிக்கொல்லி தடை செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் தடையை மீறியும் அதன் பயன்பாடு இருக்கவே செய்கிறது. பிணந்தின்னிக் கழுகுகளின் பேரழிவுக்குக் காரணமான டைக்ளோபினாக் மருந்து இப்பகுதியில் புழக்கத்தில் இல்லை.

இங்குள்ள மலைக்கிராமங்களில் மாடுகள் சாணிக்காகவே வளர்க்கப்படுகின்றன, அந்த மாடுகளும் அவர்கள் வளர்த்த மாடுகளிலிருந்து கன்று போட்டு உருவானவை. எனவே மாட்டுக்கு நோய் வந்தால் மருத்துவரை அழைப்பதில்லை. பெரும்பாலும் நாட்டு வைத்தியம். சிலர் மட்டும் மருந்தை அவர்களை வாங்கிவந்து ஊசி போடுகின்றனர். டாக்டரை அழைத்தால் மருந்துக்கு கட்டணத்தை விட அவரை கூட்டிவருவதற்கு அதிக செலவு பிடிக்கும். போகவர 34 கிலோமீட்டர் தூரத்துக்கு ஜீப் வாடகையே பெரும் தொகை எனவே இம்மருந்து அந்தப்பகுதியில் அண்டாமல் தப்பித்தது. வீரப்பன் நடமாட்டம் இருந்த காலகட்டம் வரை வெளியாட்கள் நடமாட்டம் அறவே இல்லை.

யானைத் தந்தத்தை வேட்டையாடிவிட்டு சடலத்தை வீசியதால் அதற்கு உணவு கிடைத்திருக்கலாம். மேலும் அந்தப்பகுதியில் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகம். இறந்து போன கால்நடைகளை பெரும்பாலும் புதைக்காமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. இதனால் அதற்கு உணவு கிடைத்தது. மேலும் புலி தாக்கிய மான் போன்றவற்றின் மீதத்தையும் புலியோடு போராடி கவர்ந்து செல்லும். இவை தத்தி தத்திச்சென்று புலி அடித்த இரையில் பங்கு போட்டுக்கொள்ளும், இது போன்ற பல்வேறு காரணங்களால் அதற்கு உணவு ஒரளவு கிடைத்து வந்தது.

கோடை காலங்களில் கால்நடைகள் இறப்பும் இப்பகுதியில் அதிகம். அந்தப் பகுதி மக்கள் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் என்பதாலும் உணவு தங்கு தடையின்றி கிடைத்து வந்தது. மேலும் இந்தப் பறவை வேட்டையாடப்படுவதும் குறைவு. அதனாலும் எஞ்சிப் பிழைத்திருக்கலாம்,

ஆனாலும் எண்ணிக்கை சற்றேறக்குறைய 300 பறவைகள் இருக்கலாம். அதிலும் செம்முகப் பாறு கழுகும் கருங்கழுத்து பாறு கழுகும் வெறும் 20க்கும் கீழ்தான் என்பது அதிர்ச்சியான செய்தி. ஒரு சிறு தவறு கூட இவைகளை முற்றாக அழித்துவிடும் ஆபத்து உண்டு.

டோடோவும் பாறு கழுகுகளும்

அழிவுக்கு ஆளாகும் ஒரு உயிரினத்தை ‘டோடோ’பறவை போல’அழிவைச் சந்தித்தது எனக் குறிப்பது உயிரியலாளர் வழக்கம். மொரீசியஸ் தீவில் வாழ்ந்து வந்த இப்பறவைகள் அங்கு குடியேறிய போர்ச்சுக்கீசியர்களாலும், அவர்களது வீட்டு விலங்குகளாலும் வேட்டையாடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது.  ஆனால் ‘டோடோ’பறவை  அழிந்த வேகத்தை விட 20 விழுக்காடு வேகமாக பாறு கழுகுகள் அழிவைச் சந்தித்து விட்டன. இப்பறவைகள் எங்கே போயின? எதனால் அழிவைச் சந்தித்தன? இந்த அழிவு உணர்த்தும் பாடம் என்ன?

பாறு கழுகுகளும் முள்ளிவாய்க்காலும்

பாறு கழுகுகளுக்கு நேர்ந்த கதியை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் அண்மையில் முள்ளி வாய்க்காலில் இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்த கதியோடு ஒப்பிடலாம். உயிரின வரலாற்றில் எந்த ஒரு உயிரினமும் இப்படி ஒரு அழிவை குறுகிய காலத்தில் சந்தித்ததில்லை. ஏறக்குறைய 99 சதம் கழுகுகள் அழிந்து விட்டன. தற்போது அந்தப் பறவை இருந்த அடையாளமே இல்லாமல் வானம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

துப்புரவு செய்து தூய்மைப்படுத்தி வந்த இப்பறவைகள் பெரும்பாலான இடங்களிலிருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டது. எங்கும் பார்க்கமுடிவதில்லை. அது ஒரு செய்தியாகக் கூட நம் கவனத்துக்கு வரவில்லை, வந்தாலும் அது குறித்து நாம் அலட்டிக்கொள்வதில்லை. நமக்கே ஆயிரம் பிரச்சனை. இவைகளுக்கு என்ன நேர்ந்தால் என்ன? நான் அதைத் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. உயிர்ச்சங்கிலியில் எந்த ஒரு உயிரினம் அறுபட்டாலும் அதற்கான விளைவுகளை நாம் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிணந்தின்னிக் கழுகுகள் இயற்கையின் துப்புரவாளர்கள். அவற்றை இழக்கும்போது துப்புரவுப் பணி தடைபடும். அதன் விளைவை நாமும்தான் சந்திக்க நேரிடும்.

நமக்கு வரப்போகும் ஆபத்தை பறவைகள் கண்ணாடி போல் உணர்த்துகின்றன. அதை உணர்ந்தாவது நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம் இல்லையா.

‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்’

என திருவள்ளுவரும் எச்சரிக்கிறார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் விதியும் நம்மை எச்சரிக்கிறது.

“முதலில் அவர்கள் யூதர்களை பிடிக்க வந்தார்கள்

நான் பேசாமல் இருந்தேன் ஏனேனில் நான் யூதனில்லை

அடுத்து அவர்கள் கிறித்துவர்களை பிடிக்க வந்தார்கள் அப்பொழுதும் பேசாமல் இருந்தேன்

ஏனெனில் நான் கிறித்துவனில்லை

பிறகு அவர்கள் மார்க்சியர்களை பிடிக்க வந்தார்கள் அப்பொழுதும் நான் வாளாதிருந்தேன்

ஏனெனில் நான் மார்க்சியனில்லை

இறுதியாக

அவர்கள் என்னை பிடிக்க வந்தார்கள்

இப்போது எனக்காக குரல் கொடுக்க எவருமே இல்லை’’

எனும் கென் சரோ விவாவின் கவிதை வரி இதற்கு பொருத்தமானதாக இருக்கும்.

 

பிற படைப்புகள்

Leave a Comment