வரலாற்றை மீள எழுப்புதல்
வறீதையா கான்ஸ்தந்தின்

by olaichuvadi

 

ஆர். பாலகிருஷ்ணன் (நத்தம், 1958) இந்திய ஆட்சிப்பணி (1984) அலுவலர், திராவிடவியல் ஆய்வாளர், எழுத்தாளர். ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி ஓய்விற்குப் பிறகு அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளார். பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை போன்ற பல அரசுப் பணிகளில் இந்தியா முழுவதும் பணியாற்றியுள்ளார். சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அன்புள்ள அம்மா (1991), சிறகுக்குள் வானம் (2012), சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (2016), நாட்டுக்குறள் (2016), பன்மாயக் கள்வன் (2018), Journey of civilization Indus to Vaigai (2019) (பண்பாட்டின் பயணம்- சிந்துவெளி முதல் வைகை வரை) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அவர் ’இமிழ் பனிக் கடல்’ என்னும் தலைப்பில் 2020 ஜூலை 3- ல் நிகழ்த்திய இணையவழி உரை நிகழ்வில் இணையும் வாய்ப்புப் பெற்றேன். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் திருச்சி ‘களம்’ அமைப்பும் ஒருங்கிணைக்கும் ‘சங்கச்சுரங்கம்’ என்னும் R.பாலகிருஷ்ணன் அவர்களின் இணையப் பத்து உரைத் தொடரின் எட்டாம் நிகழ்வு இது.

அறிவுத் தடகள வீரனாக சங்க இலக்கியத்தினுள்ளே பயணிக்கும் உரையாளரின் விரிவும் ஆழமும் கொண்ட உரைவீச்சு சங்க இலக்கியம் பதிந்துள்ள கடலை மையமிட்ட ஒன்று. எனினும், உரையின் பொருண்மையும் அவதானிப்பும் உலகத்தமிழ்ச் சமூகத்தைத் தொல்தமிழ்ப் பண்பாட்டின்பால் ஆற்றுப்படுத்துவதாய் அமைகிறது. ‘சங்க இலக்கியத்தில் கடல்’ குறித்த சமகால மீள்வாசிப்பின் தேவையை வலியுறுத்துகிறது. அவ்வாசிப்பைக் கடல் குறித்த உலகளாவிய, நிகழ்காலப் பார்வையோடு இணைத்து அவர் முன்வைத்திருந்தமை அதன் தனிச்சிறப்பு.

பேரா. வேதசகாயகுமாரின் நெய்தல் குறித்த சங்க இலக்கிய அவதானிப்புகளிலும் ஆய்வறிஞர் முத்து. கண்ணப்பனாரின் ‘சங்க இலக்கியத்தில் நெய்தல்’ (1972) என்னும் ஆய்வு நூல் வாசிப்பிலும் கிடைத்த அனுபவங்களை மீள்பார்வையிடும் தருணமாக இவ்வுரை அமைந்திருந்தது. ‘கடலில்லாத தமிழையும் தமிழில்லாத கடலையும் கற்பனை செய்து பாருங்கள்’ என்னும் குறிப்போடு தொடங்கும் பாலகிருஷ்ணன் அவர்களின் உரைவீச்சு, பெருங்கடல் சார்ந்து வாழும் சிறுகுடிப் பரதவர்களின் எளிய வாழ்க்கை
(பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை- நற்றிணை 45) மீதான அவதானிப்புகளையும் உள்ளடக்கியது. ‘பெருங்கடல் போர்த்திய இக்கோளத்தைப் பூமி என்றழைப்பது எத்தனை பொருந்தாமை? பெருங்கடல் என்றல்லவா அழைக்கவேண்டும்?’ என ஆர்தர் கிளார்க் என்னும் மேலைநாட்டு அறிஞன் வினவியது அரை நூற்றண்டுக்கு முன்னர்தான்; ஏறத்தாழ அதே காலத்தில் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தை’ எனப் பாடினார். ஆனால் 21 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ‘நீரின்று அமையாது உலகு’ என்று வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்’ என்கிறார் பாலகிருஷ்ணன். சங்ககாலத்தில் வெளிப்படும் கடல் குறித்த நுணுகிய பார்வையும் நேர்மையான அக்கறையும் பக்தி இலக்கியக் காலத்தில் தேய்ந்துபடுகின்றன.

காப்பிய இலக்கியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காட்சிப்படும் நெய்தல் நிலம் ஏறத்தாழ ஒரு திரைச்சீலையாகவே நிற்கிறது. ‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்’ எனப்பாடும் சிலப்பதிகாரம், மாக்கடல் போற்ற முனையவில்லை. கவிஞரின் பார்வை நிலத்தோடு முற்றுப்பெற்று விடுகிறது. கடல் குறித்துப் பேசாதவரை இயற்கை குறித்த புரிதல் முழுமை பெறாது. கடலை நாம் அறியத்தரும் அறிவுக் கிடங்காக சங்கப் பாடல்கள் அமைந்துள்ளன. நெய்தல் குறித்த பாடல்கள் கடலின் போக்குகளை, கடற்கரையில் மணல்மேடுகள் உருவாகும் முறைகளை, கடற்கரையை ஒட்டிய நன்னீர்நிலைகளை, கடலோர வனங்களை, கடலின் பல்லுயிரியத்தை நுணுகி விவரிக்கின்றன. பாலகிருஷ்ணன் சுட்டுவது போல, (மன்னர்களைப் பாடுவதைவிட) ‘நெய்தல் பாடல்கள் திணைமாந்தரின் வாழ்வியலைப்பாடுபவை’. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கிய பயணத்தில் கடலோரம் நெடுக ஏராளம் ஏரி, குளங்களைத் தாம் கண்ணுற்றதாக உரையாளர் தன் உரையில் குறிப்பிடுகிறார்.

மேற்குக் கடற்கரையில் மட்டுமின்றி, கிழக்குக்கடற்கரை நெடுக, தமிழ்நிலத்தில் நன்னீர் நிலைகளும் வனங்களும் மிகுந்திருந்தன என்பதை உப்புநீர் முதலைகள், வரையாடுகள் உள்ளிட்ட பற்பல குறிப்புகளிலிருந்து நாம் பெறலாம். வடுகர் வருகை, காலனியர் வருகை, இரயில்பாதை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளால் தமிழகம் ஏராளம் கடலோர வனங்களை இழந்துவிட்டதாகப் பேராசிரியர் வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார் (நூல்: எக்கர்- வேதசகாயகுமாரின் நெய்தல் உரைகள் (தொ.ஆர்: வறீதையா கான்ஸ்தந்தின்), உயிர் எழுத்து -நெய்தல்வெளி, 2013). கடலோர நீராதாரங்களின், வனங்களின் சிதைவு நெய்தல் வாழ்வாதார வீழ்ச்சியின் ஆரம்ப அடையாளமாகிறது. நிற்க. தொல்காப்பியம் முன்வைக்கும் திணைக் கோட்பாடு இயற்கை குறித்த நம் முன்னோர்களின் புரிதலின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பெருநிலச் சூழலியல் கட்டமைவு (Landscape ecology), வேளாண்- பருவ மண்டலம் (Agro-climatic zone) என்பதாக இன்று மேலைத் தேய அறிவியலார் முன்வைக்கும் கோட்பாடுகள் தமிழரின் திணைக் கோட்பாட்டின் பிழிவே ஆகும். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பவை அறிவியல் வழி நிற்பவை. நிலத்தின் பண்பு மண்ணின் தன்மையாலும் நீர்ப்பெறுமதியாலும் விளங்குவது. அங்கு விளையும் பயிர்களும் ஏனை உயிர்களும் நிலம் சார்ந்து அமைவன. இனக்குழு மக்களின் வாழ்வாதாரம், உணவு முறை, பண்பாடு, வழக்காறுகள் அனைத்தும் இக்குணக்கூறுகளைத் தழுவி அமைபவை. அவ்வாறு, ஒரு திணைநிலத்தின் பண்புகள் அந்நிலத்தைச் சார்ந்து வாழும் மாந்தர்மீதும் படிகின்றன. சான்றாகக் கடலின் கணிப்பிற்கடங்காத் தன்மை, சமத்துவம் பேணும் போக்கு, தாய்மை அக்கறை, அன்றாடத் தன்மை நெய்தல் மக்களிடம் பிரதிபலிப்பதைக் காணலாம்.

கடலின் பண்புகள் கடல்சார் மக்களிடம் தென்படுவதில் வியப்பொன்றுமில்லை. வனம் போலன்றி, கடலோடிகளது வேட்டைக்களம் சலித்துக் கொண்டிருக்கும் விரிநீர்ப் பரப்பு என்பது கூடுதல் அபாயமானது. வேட்டைக்களத்தில் தன்னைத் தற்காத்துக்கொண்டு, சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் பத்திரமாய்க் கரை திரும்பினால் ஆயிற்று (வேட்டைப் பொருளாதாரம்). பிழைத்திருத்தலின் பொருட்டு அன்றாடம் மரணத்தை எதிர்கொள்ளும் வாழ்க்கை அது. அதன் பொருட்டே ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்’ நெய்தல் நிலத்தின் உரிப்பொருளானது. வேட்டைச் சமூகத்தின் குணக்கூறுகள் சங்க இலக்கியத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. ‘கடல்சார் மக்கள் இரந்து வாழ்வதில்லை, அவர்கள் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்’ என்னும் உரையாளரின் புரிதல் சங்க இலக்கிய வாசிப்பிலிருந்து பெறப்படுவது. ‘கடல் வேட்டைப் பொருளாதாரம் கூட்டுறவுப் பொருளாதாரம்’ என்னும் அவர் கூற்று அதனை மெய்ப்பிக்கின்றது. காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பாவின் சொற்களில், பழங்குடிப் பொருளாதாரம் ‘தாய்மைப் பொருளாதாரம்’, ‘தோழமைப் பொருளாதாரம்’. கடல் பொதுச்சொத்து வளம் எனினும் கடல் புகுதலுக்கான மரபறிவு இனக்குழு சார்ந்தது, உள்ளூர்த் தன்மை கொண்டது. குழுக்களாகவே அங்கு இயங்க முடியும். மூலதனமும் உழைப்பும் பெறுமதியும் அவர்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன (தோழமை/ கூட்டுறவுப் பொருளாதாரம்). இயலாதவர்க்குச் சமூகம் தாயாகிறது. பகிர்தல் சார்ந்த வாழ்வு எப்போதும் தன்னிறைவும் மகிழ்ச்சியும் ததும்பி நிற்பது. ‘சிறுவலைப் பரதவர் மகிழ்ச்சியும்’, உரையாளர் மேற்கோள் காட்டும் ‘பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை’ போன்ற வரிகள் சங்ககாலப் பரதவர் வாழ்வின் துல்லியமான சித்திரிப்பு.

தமிழகக் கடற்கரைச் சிறுகுடிகள் வெறுமையும் விரக்தியும் நிறைந்து கிடப்பதை என் கடலோரப் பயணங்களில் பார்க்க நேர்ந்தது. சங்க இலக்கியம் காட்டும் ’சிறுவலைப் பரதவர் மகிழ்ச்சி’யை இன்றைய நெய்தல் சமூகம் இழக்கும்படியானது ஏன்?’ என்னும் கேள்வியை நம் சிந்தனையில் எழுப்புகிறது இவ்வுரை.

புலவர்கள் தாம் வாழும் காலத்தின், சமூகத்தின் வாழ்வைப் பிரதிபலிப்பவர்கள். அவர்களின் பதிவுகளில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்புகளைக் குறிப்பிட்ட திணைநிலச் சமூகத்தின் அனுபவ அறிவின் பிரதிபலிப்பாகவும் அணுகலாம். சங்கப் பாடல்கள் திணைமாந்தரின் கண்களினூடாகத் திணைநிலத்தைக் கண்ணோடுகின்றன; அவ்வாறு அவை தமிழர்களின் தொன்மையும் மேன்மையும் மிகுந்த பண்பாட்டு வரலாற்றை அறியத்தருகின்றன. ‘1862 அகப்பாடல்களில் 347 பாடல்கள் நெய்தலைப் பாடுபவை’ என்கிறார் உரையாளர். பெயர் அறியாப் புலவர்கள் ஒழிய, இப்பாடல்களை எழுதிய 14 பேரில் அம்மூவனார், மாமூலனார், உலோச்சனார் உள்ளிட்ட ஐந்தாறு பேர் மட்டுமே நெய்தல் திணையைச் சார்ந்தவர்கள். ‘வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்ப பாட்டம் பொய்யாது பரதவர் பகர’ (நற்றிணை- 38/1-2) என்னும் உலோச்சனாரின் பாடல் மழையைக் கடல் பழங்குடிகளின் பார்வையில் அணுகுகிறது. திணை சார்ந்த படைப்பாளிகளின் பதிவுகள் எப்போதும் தனித்து நிற்பவை. புனைவு இலக்கிய வரலாற்றிலும் இத்தன்மையைக் காணலாம். 50 ஆண்டுகால நெய்தல் புனைவிலக்கிய வரலாற்றில் நெய்தல் நிலத்தவரான ஜோ டி குரூசின் ‘ஆழி சூழ் உலகு’ புதினம் (2004) தனித்து நிற்கிறது. ‘மற்றவர்கள் எல்லோரும் கரையிலிருந்து கடலைப் பார்த்தவர்கள்; ஜோ டி குரூஸ் கடலிலிருந்து கரையைப் பார்த்தார்’ என்கிறார் நாஞ்சில் நாடன்.

‘கடலை அறிதல் என்பது கடலைப் பார்த்துக் கொண்டேயிருப்பது’ என்பார் ஃபெர்டினண்ட் ப்ராடெல் (நூல்:நினைவும் மத்தியதரைக் கடலும்). பரதவர்கள் கடலுக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்கள் எனினும் அவர்களது வாழ்வாதாரம் கடலை மட்டுமே சார்ந்திருக்கவில்லை; கடலோர நீர்நிலைகள் அவர்களின் அன்றாடத் தேவையை நிறைவுசெய்யப் போதுமானதாய் இருந்தது. அவர்களில் சுறாவேட்டம் நிகழ்த்தும் சாகசக் கடல் வீரர்களும் இருந்தனர். கடல் வேட்டம் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்; அவதானிப்பும் உடல் வலிமையும் துணிவும் அதன் அடிப்படைத் தகுதிகள். ‘பரதவன் கடலை அவதானித்துக்கொண்டே இருக்கிறான் (தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி’ – நற்றிணை 4). வேட்டைத்தொழிலில் வெளிப்பட்ட இயற்கை குறித்த அக்கறையும் வளநட்பு பேணும் அணுகுமுறையும் சங்க இலக்கியத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது. மீன் வருகையின் இடமும் காலமும் அறிந்து அதற்கேற்ற கருவிகளைப் பயன்படுத்தி மீனை அறுவடை செய்வர். கழிகளிலும் கடலிலும் அந்தந்தப் பகுதிக்கும் பருவங்களுக்கும் ஏற்றவாறு பல்வகை வலைகள், தூண்டில், ஈட்டி, எறிவுளி, கயிற்றில் பிணைத்த உளி முதலிய கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். வலைகளில் கண்கள், தூண்டில், உளிகளின் தன்மையைப்பற்றிச் சங்கப் பாடல்களில் வரும் குறிப்புகள் மீன்களின் பண்புகளை மீனவர்கள் நுட்பமாக அவதானித்திருந்தனர் என்பதற்குச் சான்றாகும். தேர்ந்தெடுத்த மீன்களுக்கான வேட்டம், கிடைக்கும் மீனைக் கைக்கொள்ளும் வேட்டம் இரண்டும் அக்காலத்தில் நிகழ்த்தப்பட்டன (வடிக்கதிர் திரித்த வல்ஞாண் பெருவலை- நற்றிணை- 74:1; கொள்வினை புரிந்த கூர்வா எறியுளி- குறுந்தொகை 304; கயிறு கடையாத்த கடுநடை எறி உளி – நற்றிணை 388). பரதவர்கள் தேவைக்கு மிகுதியாக அறுவடை செய்வதில்லை. மிகுதியாய்க் கிடைத்துவிட்டால் அதை உணக்கிப் பத்திரப்படுத்தினர். சான்றாக ’மிகுமீன்
உணக்கிய பரதவர்’ குறித்த நற்றிணைப் பாடலை (63) சுட்டுகிறார் உரையாளர்.

ஐந்திணை நிலங்கள் தனித் தீவுகளல்ல; அவை ஒவ்வொன்றும் தனக்குள்ளேயும் அண்டைத் திணைநிலங்களோடும் இடைவிடாது உரையாடிக் கொண்டிருப்பது. ‘நீர்தான் திணைநிலங்களின் உரையாடல் மொழி’. நீரால் அனைத்துத் திணைநிலங்களையும் இணைத்து நிற்பது கடலேயாகும். அதனால் ’கடல் மையம், நிலம் அதன் விளிம்பு’ எனக் குறிப்பதே பொருத்தமானது. உரையாளர் குறிப்பிடுவது போல (குணக்கடல் முகந்த கொள்ளை வானம்- அகம் 278), கடல் நிகழ்த்தும் ’நீரியல் சுழற்சி’ குறித்து சங்கப் புலவர்கள் அருமையாகப் பதிந்துள்ளனர். நெய்தல் பாடல்களின் ஆழத்தில் மூழ்கிக்களித்து, அதன் பிழிவில் ஒரு பகுதியை நாம் பருகத் தந்துள்ளார் உரையாளர். கடலை விதந்து நோக்கும் உரையாளரின் இவ்வுரை, கடலின்மீது நம் அக்கறையைக் கோருகிறது; கடலின் சிதைவுக்கு நம்மைக் கூட்டுப் பொறுப்பாக்குகிறது.

சற்று ஆழ்ந்து நோக்கின், இவ்வுரை தமிழர்களின் இயற்கை அறத்தைப் பேசுபொருளாக்குகிறது. தமிழ்ச்சமூகம் இன்று எதை இழந்துவிட்டிருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள வேண்டுமாயின், வரலாற்றில் அது எவ்வெவற்றை உரிமை கொண்டிருந்தது எனத்தெளிந்து நிறுவுதல் தேவை. இப்போது நாம் செய்ய வேண்டுவது, தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றை மீள எழுப்புவதே. தம் உரையினூடே பல்திணை சார்ந்த சங்கப்பதிவுகளின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் உரையாளர், உரிய மேற்கோள்களை நிரல் செய்து, அதன் வழியாகத் திணைநிலங்களின் பண்டைய பிணைப்பை நிறுவுகிறார்; எல்லாவற்றையும் விட முக்கியமாக, ‘பழந்தமிழர் பண்பாட்டின் அற மதிப்பீடு’ என்னும் புள்ளியில் அவற்றை இணைக்கிறார். காலத்திற்கு உகந்த முனைவு இது. தமிழ்ச் சமூகத்தைத் தமிழின அடையாளத்தின்பால் ஆற்றுப்படுத்தும் அரிய பணி. தமிழ்ச் சூழலுக்கு அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் தந்துகொண்டிருக்கும் வாழ்நாள் பங்களிப்புகளில் ஒன்றாக அன்னாரது சங்கச்சுரங்க அகழ்தலைக் கருதுகிறேன்.

“கடல் ஏதோ சொல்லிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அது நம் காதில் விழவில்லை. சுண்டல் சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்கிறோம் இரங்கலையும் இரங்கல் நிமித்தத்தையும்.” என்னும் உரையாளரின் அவதானிப்பின் வெளிச்சத்தில் தமிழ்ச் சமூகம் தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.

பிற படைப்புகள்

1 comment

ஆசைத்தம்பி.பா August 10, 2020 - 6:38 am

கட்டுரை மிக அருமை. “இரங்கலையும் இரங்கல் நிமித்தத்தையும்” நுணா மரத்தின் வாசனையோடு அள்ளிப் பருகிய பெரு மகிழ்ச்சி!! நன்றி.

Reply

Leave a Comment