செம்புலம் (சிறுகதை)
கமலதேவி

by olaichuvadi

வேட்டுகளின் அடுத்தடுத்த ஒலிகள் அந்த கருக்கல் நேரத்தை அதிர உசுப்பியது. மரங்களில், வயல்வெளிகளில் உறங்கிய பறவைகள் விலங்குகள் சட்டென்று கலைந்து சத்தமிடத் தொடங்கின. ’ம்மா’ என்ற பசுக்களின் கார்வையான அடிக்குரல் அழைப்புகளால், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகளில் விளக்கொளிகள் ஒவ்வொன்றாக ஔிர்ந்தன. பரவும் புகைப்போல சுற்றிலும் மெல்லிய குளுமை பரவியிருந்தது.

என் கண்களுக்கு முன் இருள் கலங்காமல் அழுந்தி நின்றது. தலைக்கு மேல் இருளில் ஆலிலைகள் அசையாமல் செறிந்திருந்தன. வேட்டுகளின் அதிர்வுகளால் நெஞ்சு படபடத்து அடங்கும் வரை படுத்திருந்துவிட்டு எழுந்து அமர்ந்தேன். எதிரே சாலையில் நாய் ஒன்று காதுகளை செங்குத்தாக விடைத்தபடி கண்களை இடுக்கிக்கொண்டு நான்குபுறமும் பார்த்துவிட்டு படுத்துக்கொண்டது.

எங்கிருக்கிறேன் என்று இன்னும் நினைவுக்கு எட்டவில்லை. சட்டென்று காயத்தில் வெயில் படர்வதைப்போல உடலில் ஒரு எரிச்சல். இப்பொழுதெல்லாம் அவ்வப்போது இப்படித்தான் உடல் எரிச்சல் வருவதும் மறைவதுமாக இருக்கிறது. மீண்டும் கருங்கல் தரையில் உடல் பட படுத்துக் கொண்டால் தேவலை. உடல் தானாக சரிந்தது. பாட்டாசு புகை பட்டதைப்போல கண்கள் தானாகவே இறுக சுருங்கின. கைலியை கணுக்கால் வரை இழுத்து விட்டுக்கொண்டேன்.

இது மாராடி ஊர் எல்லை ஆலமரத்திண்டு. வியர்வை மாறி உடல் மெல்லத் தணிந்ததும் நிமிர்ந்துப் படுத்து கைகளை கட்டிக்கொண்டேன். இன்று ஊரில் பெரியமாரியம்மனுக்கு தேர். அதனால்தான் நாலறை மணி பூசைக்காக வேட்டுகள் வெடிக்கிறார்கள். கால்மணி நேர நடையில் இங்கிருந்து ஊருக்கு சென்றுவிடலாம்.

நேற்று பச்சைமலை அடிவாரத்து கோவிந்தாபுரத்தில் இருந்து கிளம்பி இங்கு வந்தேன். இங்கு வந்த போது இந்த மரத்தடிப் பிள்ளையாருக்கு பூசை நடந்து கொண்டிருந்தது. இரண்டு பிள்ளைகளோடு நான்கைந்து ஆட்கள் இருந்தார்கள். ஒல்லியான ஒரு அம்மா வாழை இலையில் கொண்டைக் கடலைகளையும், சர்க்கரைப்பொங்கலையும் சிரித்தமுகத்துடன் கொடுத்தாள். தின்றுவிட்டு அப்படியே படுத்துக்கொண்டேன். இதே பாதையில் ஒரு இருள்வேளையில் என் ஊரை விட்டு வெளியேறி மூன்று ஆண்டுகள் இருக்கும்.

கோவிந்தாபுரம் செபாஸ்ட்டீன் தேவாலயத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக இருக்கிறேன். அது மலையடிவாரத்தின் தேவாலயம். சுற்றிலும் ஏகபோகமான இடம். நாள் முழுவதும் கோவில் வேலைகளை செய்துவிட்டு கோவில் தரையில் அல்லது வெளியே மணிக்கூண்டு மண்டபத்தில் என்று எங்காவது படுத்துக்கொள்வேன்.

சுற்றிலும் கண்களுக்கு எட்டும்வரை செம்மண் நிலம் விரிந்து கிடக்கும். வெளியே தனியாக மணிக்கூண்டு இருக்கும். வேலையில்லாத நேரத்தில் தினமும் அங்குதான் மழையை வெயிலைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன்.

ஏசுவின் உடலில் இருக்கும் ஆறாத பசும் ரணம் போல அந்த நிலம் மழை பெய்யும் நாட்களில் குழையும். அப்போதெல்லாம் மணிவடத்தை இறுகப்பற்றிக் கொள்வேன். எதையாவது பற்றிக்கொள்ளா விட்டால் அந்த நேரங்களை கடக்கமுடியாமல் என்னை நானே காயப்படுத்திக் கொள்வேன். பலமுறை பற்றுதலுக்காகப் பிடித்த வடக்கயிற்றாலேயே தோல் கண்ணிப்போய் எரிச்சலும் வலியுமாக இருக்கும்.

ஃபாதர் என் கைகளுக்கு அடியில் அவர் கையை வைத்துப்பிடித்துக் கொண்டு, “ஒருமாதிரி இருந்தா என்கிட்ட வான்னு எத்தனை தடவை சொல்றது,” என்று சொல்லியபடி கும்பைமேனி இலையை சேர்த்து காய்ச்சிய எண்ணெய்யை ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை தடவிவிடுவார். அடுத்தநாளே காயம் காயத்தொடங்கிவிடும். இரண்டு மூன்று முறை இப்படியானதும் அவரே என்னைத் தேடி வந்து அழைத்து சென்று அவர் தங்கியிருக்கும் கோவில் வீட்டில் படுக்க வைத்துக்கொள்ளத் தொடங்கினார்.

இப்படி செய்யக்கூடாது. கர்த்தர் சொல்வதைப்போல இந்த உடல் அவருடையது. அவரை உணவாக்கி வளர்ந்தது. அவரைக் குடித்து தாகம் தணிவது. இதை காயப்படுவது என்பது அவரைக் காயப்படுவது தான். என்றெல்லாம் நினைத்துக் கொண்டாலும் மீண்டும் அதையே செய்வேன்.

இரண்டுஆண்டுகளாக பலஊர்களின் தெருக்களில், பேருந்து நிலையங்களில் அலைந்து திரிந்து விட்டு இந்த மலையடிவாரத்திற்கு வந்தேன். ஏன் இப்படி இங்கே வந்து பிறகு எங்கும் செல்லாமல் இருக்கிறேன் என்று புரியவில்லை. இந்த இடம் மீண்டும் மீண்டும் தன் சிவந்த நிறத்தால் என்னை இம்சிப்பதை பொறுத்துக்கொண்டு ஏன் இங்கே இருக்கிறேன்? என்பதும் ஆண்டவருக்கே சித்தம். சிலநாட்கள் ஃபாதரிடமிருந்து தப்பித்து கோவிலைவிட்டு தள்ளி நடந்து மலையடிவாரத்திற்கு சென்றுவிடுவேன். நல்ல வெயிலில் வெட்டவெளியில் சிவந்த மண்ணில் படுத்துக்கொள்வேன். அவர் தேடி வந்து அழைத்து செல்வார்.

சுபத்ராவின் எரிந்து உரிந்த உடல் இந்த நிலத்தை போல, அந்த பச்சை நிற இரும்புக்கட்டிலில் கிடந்தது. அன்றிலிருந்து தான் என்னால் எங்கும் இருக்க முடியவில்லை. எத்தனை சிரமங்களுக்குப் பிறகும் இங்கு தான் என்னால் படுத்து உறங்க முடிகிறது என்பது தான் இங்கு இருப்பதற்கான காரணமாக இருக்கலாம்.

நேற்று சாயுங்கால பூசைக்கு மணி அடித்துவிட்டு வடத்தை இழுத்து கட்டியபோது ஃபாதர் மணிக்கூண்டை பார்த்தபடி தேவாலயத்தின் இடதுபுற வாசலில் வந்து நின்றார். வடத்தை கொக்கியில் மாட்டிவிட்டு அவரிடம் சென்றேன்.

“சைமன்… நாளைக்கு கோட்டப்பாளையம் மாரியம்மன் திருவிழாவுல பெரியத் தேராம். நீ போகனுமாமே. உங்க ஊர் ஃபாதர் பீட்டர் கால் பண்ணி சொன்னார்,”

நான் ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டேன்.

“உன்னோட விரும்பம் தான். ஆனா பரம்பரையா மாதாக்கோயில சேர்ந்த நாலுகுடும்பம் தான் சன்னக்கட்டை போடற சேவை செய்யறீங்களாமே…”

“ஆமா ஃபாதர். எங்கக்குடும்பத்துல இருக்கிற கடைசிப் பிள்ளை செய்யனும். அண்ணனுங்க பக்கத்துல துணைக்கு வருவாங்க,”

“மாதா தேருன்னா அவங்க வருவாங்கன்னு ஃபாதர் சொன்னாரு,”

“ஆமா ஃபாதர்..மாதாத்தேருக்கு திருமுடி ஆசாரின்னு ஒருத்தரோட பங்காளி குடும்பத்து ஆட்கள் வருவாங்க..தேரோட ஒவ்வொரு சக்கரத்துக்கு ஒரு குடும்பம். நாங்க வலது முன்சக்கரத்துக்கு போடனும்,”

“அப்படின்னா நீ போகனும் சைமன்…நம்ம செய்ய வேண்டியதை செய்யனும் இல்லையா,”

காற்றின் ஒரு அலை சுருண்டு செம்மண்ணை பறந்தடிக்க வைத்தது. இருவரும் அனிச்சையாக கண்களை மூடிக்கொண்டோம். நான் கண்களை திறந்து முகத்தை சுருக்கியபடி “எனக்கு எதையும் சரியா செய்ய முடியல ஃபாதர்…” என்றேன்.

“உன்னால முடியும்,”

“உங்களுக்கு என்னத் தெரியும்..பேச்சுக்கு முடியும்ன்னு சொல்லிட்டா போதுமா?”

அவர் ஒன்றும் சொல்லாமல் நின்றார்.

நான் குரலை தணித்து,“அது மூணுஅடுக்குள்ள பெரிய தேரு ஃபாதர். ஊருக்குள்ள நாலு எடத்துல தேரு நின்னு போகும். ஏத்து முடக்கு,திரும்பு முடக்குன்னு தேரு பின்னாடி நகரும். அந்த எடங்கள்ல்ல பின்னால நகரவிடாம கட்டை போடறதுதான் கைவித்தை. அதுக்குன்னு ஒரு தெம்பும் சஞ்சமில்லாத மனசும் வேணும் ஃபாதர்,” என்றேன்.

அவர் என்னை உற்றுப் பார்த்துவிட்டு தேவாலயத்திற்குள் நுழைந்தார். உள்ளே அவர் தலைக்கு மேல் சிலுவையில் அறையப்பட்ட கர்த்தர். பிதாவே என்று மனம் சொல்வதற்குள் என் கால்கள் மண்டியிட்டன.

ஃபாதர் திரும்பி வந்து தலையில் கைவைத்து, “நீ ஒரு தப்பும் பண்ணல சைமன். தேவையில்லாத குற்ற உணர்ச்சிய வளத்துக்கறது உனக்கு நீயே பண்ற பாவம்…அதுக்கு ஆண்டவர்க்கிட்ட மன்னிப்பே கிடையாது. நீ திரும்பிப் போ,”என்றபடி கையை தலையிலிருந்து எடுத்து என் முதுகு பக்கமாக வைத்து அணைத்துக் கொண்டார்.

“நீ நிறைய படிச்சவன்…உனக்கான வேலைய செய்தாகனும்,”

மண்டியிட்டிருந்த கால்களை மடித்து கீழே அமர்ந்துகொண்டேன். அவர் நான் எழுந்திருக்கும் வரை தலையிலிருந்து கையை எடுக்கவில்லை.

ஃபாதர் கொடுத்த பணம் சட்டைப்பையில் இருந்தது. பேருந்தில் ஏறாமல் தேவாலயத்திற்கு இடதுபுறமிருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து கிருஷ்ணாபுரத்து வயல்வரப்புகளில் ஏறினேன். வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மேற்கே கொல்லிமலையில் சூரியன் இறங்கி மறையும் போது ஒக்கரையில் ஒரு சிற்பக்கூடத்தின் முன்னாலிருந்த வேப்பமரத்தின் அடியில் கிடந்த சிதைந்த கருங்கல்லில் அமர்ந்தேன். வரிசையாக பத்துக்குமேற்பட்ட ஒலைவேய்ந்த சிற்பக்கூடங்கள். மின்உளிகளின் டர்ர் என்ற சத்தம் காதுகளுக்குள் குத்திச்சென்றது. சிதைந்த சிற்பங்கள் அங்கங்கே கிடந்தன. மண்ணில் சாய்ந்து புதைந்திருந்தன. சில சிற்பங்களின் கீழே செம்பருத்தி,அரளிப் பூக்கள் காய்ந்து கிடந்தன.

சுபத்ராவின் அப்பாவின் கால்கள் நினைவிற்கு வந்தன. இடது கையை அமர்ந்திருந்த கருங்கல்லில் நன்றாக ஊன்றிக் கொண்டேன். சாய்ந்து புதைந்த முழுமையாகாத அம்மன்,பாதிப்பிள்ளையார், துதிக்கை இல்லாத யானை,கால் உடைந்த குதிரைக்கு அடுத்து கோணக்கொண்டை போட்டு நிற்கும் பெண் சிற்பம் நின்றது. அது இங்கிருந்து பார்க்க முழுசிலையாக தான் இருந்தது. சிற்பிக்கு மட்டும் தெரியும் தவறு ஏதோ ஒன்று இருக்கும். கண்களை திருப்பிக்கொண்டேன். இது என்.ஹெச் சாலையின் ஓரம். சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. மீண்டும் திரும்பி அந்த சிலையைப் பார்த்தேன். சுபத்ரா கண்முன் வந்து புன்னகைத்தாள்.

அஞ்சலக சேமிப்பு முகவரான அவளின் அப்பாவிற்காக சேமிப்பு பணத்தை ஆட்களிடமிருந்து வாங்கிச்செல்ல மாதம் இருமுறை வருவாள். எங்கள் ஊர் தேவாலயத்தின் தெற்கு மூலையில் இருக்கும் மக்தலேனால் சிலைக்கு அருகில் சாயுங்கால வழிபாட்டு நேரம் முடியும் வரை அமர்ந்திருப்பாள் . நானும் அவளும் இதே தேவாலயப் பள்ளியில் எல்.கே.ஜியில் இருந்து ஒன்றாக பயின்றோம். பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பண்கள் குறைவு என்று மீண்டும் தேர்வு எழுதியதிலிருந்து எங்களுக்குள் தொடர்ந்த நட்பு இருந்தது. பின் அவள் அஞ்சல் வழியில் இளங்கலை மூன்றாண்டுகள் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் படித்தாள். நான் படித்த பிஷப் ஹீபர் கல்லூரியில் சனி ஞாயிறுகளில் அவளுக்கு வகுப்புகள் நடக்கும். மதியம் கல்லூரி உணவகத்தில் அவளுக்கு எதாவது வாங்கித் தந்துவிட்டு அவள் கொண்டுவரும் உணவை நான் வாங்கிக்கொள்வேன். மீண்டும் வேலைக்கான தேர்வுகளுக்கு ஒன்றாக விண்ணப்பிப்பது ,படிப்பது என்று தொடர்ந்து பார்க்க பேச முடிந்தது.

அன்று மக்தலேனால் சிலைக்குக் கீழே அமர்ந்து பணத்தை எண்ணி பர்ஸில் வைத்துக்கொண்டிருந்தாள்.

“கலெக்சன் முடிச்சாச்சா,” என்றபடி ட்ராக் பாண்ட்டை இழுத்துவிட்டபடி அவளருகில் அமர்ந்தேன். சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். எப்பொழுதுமே இப்படிதான். யார் அருகில் அமர்ந்தாலும் சட்டென்று அனிச்சையாக தள்ளி அமர்வாள்.

“இன்னும் மூணுநாலு பேரு தரனும்…அதான் ப்ரேயர் முடியட்டுன்னு ஒக்காந்திருக்கேன்..நீ ப்ரேயருக்கு போகலையா,”

“நாள்முழுக்க இங்க ஒக்காந்துதான் படிக்கிறேன்…எத்தனை தடவை ப்ரேயர்..”

“சைமன் குழு பத்தி டக்குன்னு சொல்லு பாப்போம்,”

நான் புன்னகைத்தபடி, “ரிலாக்ஸ் பண்றதுக்காக நடக்கலான்னு வந்தேன்..நீ வேற,” என்றேன்.

“அப்படி இருந்தாதான் க்ளியர் பண்ண முடியும்…”

“அப்பா எப்பிடி இருக்கார். அவர பாக்கவே முடியல,”

“நல்லாருக்காரு,”

“உன்னோட மேரேஜ் ப்ரோபோசல் என்னாச்சு?”

“ஊர் ஆளுங்க விடுவாங்களா..அப்பாக்கு லெப்ரசி இருந்துச்சுன்னு சொல்லிட்டாங்க. அவங்கக்கிட்டருந்து பதிலே இல்ல..”

நான் தயங்கியபடி மெல்ல அவள் வலது கையைப் பற்றினேன். அவள் விடுவித்துக் கொள்ளப்பார்த்தாள். இறுக்கிப்பிடித்தபடி புன்னகைத்தேன். இவள் நல்ல உயரம். அடர்ந்த முடியை சரியாக பின்னாமல் கலைந்து கிடந்தது. சந்தன நிறத்திற்கு கொஞ்சம் குறைச்சலான நிறம். அவர்கள் வீட்டு முறைப்படி நெற்றியில் பொட்டுக்கூட வைப்பதில்லை. தலையை உயர்த்தி மக்தலேனாலைப் பார்த்தேன். அவள் பாதங்களில் மஞ்சள் கிழங்கை கயிற்றில் கட்டி சுற்றியிருந்தார்கள்.

அதிலிருந்து கண்களை எடுத்து சுபத்ராவை உற்றுப்பார்த்தேன்.

“நீ எதும் யோசிக்காத சுபத்ரா..நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உங்கப்பாக்கிட்ட அண்ணன பேச சொல்றேன்,”

“அவர் சரின்னுதான் சொல்லுவாரு,”

அவள் பக்கமாக திரும்பி கால்மடித்து அமர்ந்தேன். அவள் தன் கையை எடுத்துக்கொண்டு தள்ளி அமர்ந்தாள்.

“யாரோ ஒருத்தர் என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா கஸ்ட்டம்ன்னு நினைக்கிறார். உனக்கு அந்த கஸ்ட்டத்த கொடுத்தா நான் ஒரு செல்ஃபிஸ்,”

“லூசு மாதிரி பேசாத…இதென்ன ஜெனிட்டிக்கலா வர நோயா,”

“மைக்கோ பாக்ட்டீரியம் லெப்ரே இன்பெக்சியஸ்ன்னு நீதானே சொல்லுவ. அப்பாவுக்கே இப்பதான் கட்டுபட்டிருக்கு. அப்பாக்கூடவே இருக்கேன். நான் ஹோல்டர்… கேரியர்…இன்பெக்சியஸ் தான்,” என்று வேகமாக சொன்னாள். அந்தி சூரியனின் ஔி விழுந்த அவள் முகம் வியர்வை ஈரத்தில் களைப்பாக மாறியது. முகத்தை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டாள்.

“இருந்தாலும் பரவாயில்ல..”

“அதவிடு சைமன்..எக்ஸாம்ல கவனமா இரு,”

அவள் குரலில் அதட்டல் தெரிந்தது.

“நான் சொல்றத கேளு. எங்களோட பண்ணையில பத்து ஆடு, நிறைய ஆட்டுக்குட்டிங்க,மூணு மாடுங்க,நாய் பூனை எல்லாம் இருக்கு..அங்க இருந்தா நீ இவ்வளவு டல்லா ஃபீல் பண்ணமாட்ட,”

“நீ என்ன குழந்தையா…நாய் பூனைன்னு பேசிக்கிட்டு இருக்க. வாழ்க்கை எவ்வளவு சிக்கலாகுன்னு யோசிக்க மாட்டியா,”

“யேசு என்ன சொல்றாருன்னா…”

“எதுக்கெடுத்தாலும் அவரையே இழுத்து பேசாத. அது உன்னைய இன்னும் சைல்டிஸ்சா காட்டுது. அவரு யேசு..அவரால முடியும்..”

“இங்கப்பாரு..டைம் பாஸ்க்கு உங்கூட பேசறேன்னு நினைக்கிறியா?”

“நானும் பிடிவாதத்துக்கு சொல்றேன்னு தோணுதா..நீ இதப்பாரு,” என்று முன்கையில் இருந்த வெண்தேமலைக் காட்டினாள். நான் கைகளைப் பிடித்ததும் இழுத்து கொண்டாள்.

“காட்டு சுபத்ரா,” என்று நீண்ட என் உள்ளங்கைகள் சட்டென வியர்த்தன.

“இந்த தேமலை ஊக்கால குத்திப் பாக்கலாம். இவ்வளவு பேசறியே நீயே குத்து பாக்கலாம்,” என்று அவளுடைய துப்பட்டாவிலிருந்த ஊக்கை கழட்டி என் கைகளில் கொடுத்தாள்.

ஊக்கின் முனையை பிடிக்க கை நடுங்கியது. இருந்தாலும் இறுக்கிப்பிடித்து அந்த இடத்தை குத்தினேன். அவள் கையை விலக்காமல் என்னையே பார்த்தாள்.

“பயந்த மாதிரியே வந்துருச்சுன்னு நினைக்கிறேன்..இந்தஎடத்துல சுத்தமா உணர்ச்சியே இல்ல சைமன்,”

குத்திய இடத்தில் லேசாக ரத்தம் கசிந்தது. சட்டென்று கையை இழுத்து துப்பட்டாவால் மறைத்துக் கொண்டாள்.

“அப்பாவுக்கு சரியாயிடுச்சுல்ல. உனக்கு வெரி இனிஷியல் ஸ்டேஜ்,”

“எனக்கு இதெல்லாம் பிடிக்கல. அப்பா மாதிரி என்னால சானிட்டோரியத்துல போய் ஒக்காந்திருக்க முடியாது,”

“சகிப்பு தன்மை நமக்குள்ள இருக்கிற ஆண்டவரோட குணம். நாம சகிப்புத்தன்மையோட இருக்கனும்,”

“வருஷ கணக்கா சகிச்சு எனக்கு இப்பெல்லாம் கோபமா வருது சைமன்,” என்று நெற்றியை சுருக்கினாள். அவள் கண்களில் ஈரம் கலங்கி சிவப்பாக மாறிக்கொண்டிருந்தது. வெறும் பேச்சு பேசுவது எளிதுதான் என்று தோன்றியதும் எதுவும் பேசாமல் திரும்பி அமர்ந்தேன்.

வழிபாடு முடிந்து ஆட்கள் வெளியே வரத் தொடங்கினார்கள். சுபத்ரா வசூல் முடித்துவிட்டு என்னிடம் வந்தாள்.

“தர்மராசு வயல்ல பணம் வாங்கிட்டு வரப்புல ஏறி நடந்தா ஊர் வந்துரும்..நீ படிக்கிற வேலையப்பாரு. நான் அப்பாவோட போய் டாக்டர பாக்கறேன்..சரியா,” என்று சொல்லிவிட்டு தேவாலயத்திற்கு பின்னால் இருந்த வரப்பில் இறங்கினாள். பசும் பயிர்களுக்கு இடையில் சிவந்த சுடிதாரில் அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

என் அலைபேசி ஒலித்தது.

“நாளைக்கு வந்துடுவியா சைமன்,”

“அடுத்தவாரம் வரேன் மாமா,”

“கோச்சிங் ஃப்ரீயா கிடைக்கறப்பவே பயன்படுத்திக்கனும்,” என்று வைத்துவிட்டார்.

சுபத்ராவிடம் அடுத்தநாள் மாமாவீட்டிற்கு செல்வதை சொல்ல மறந்துவிட்டது. அவளிடம் தனியாக அலைபேசி இல்லை. திரும்பி வந்து சொல்லிக் கொள்ளலாம் என்று மாமாவீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டேன்.

ஒரு மாதம் கழித்து அவள் தனக்கு தீ வைத்துக்கொண்டாள் என்று அண்ணன் அலைபேசியில் அழைத்து சொன்னான்.

நான் செல்லும் போது சுபத்ரா ஊதா போர்வை ஒன்றை போர்த்திப் படுத்திருந்தாள். சணல்சாக்கை போட்டு அவளை உருட்டியிருப்பார்கள் போல சணல் பிசிர்கள் கைகளில் ஒட்டியிருந்தன. தன்னிச்சையாக சணல் பிசிர்களை எடுப்பதற்காக அவளை நோக்கி நீண்ட என் கைகளை சுபத்ராவின் அப்பா பிடித்துக் கொண்டார்.

“நீயாச்சும் பாப்பாக்கிட்ட புரியறமாதிரி பேசியிருக்கலால்ல…” என்ற அவர் தளர்ந்து அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

தீ வைத்துக்கொண்டதால் பச்சைமட்டையில் தான் பாடை கட்டவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் அப்பா அவரின் வேட்டிகளை என் கையில் கொடுத்து பாடை கட்டும் இடத்திற்கு போகச்சொன்னார். தென்னம் மட்டைகள் இரண்டை சேர்த்து கட்டி வைக்கோல் பரப்பி அதன் மேல் ஒரு வெள்ளை வேட்டியை விரித்தார்கள். அழுங்காமல் மிக மெதுவாக அவளை அதில் தூக்கிக் கிடத்தி இன்னொரு வெள்ளை வேட்டியால் போர்த்தினார்கள். சுபத்ராவின் சொந்தக்காரர்கள் நான்கு பேர் பாடையை பிடித்துத் தூக்கினார்கள்.

“தூரம் நடக்கனுல்ல… இன்னும் ரெண்டு வயசு பசங்க வாங்க,” என்று யாரோ ஒருவர் சொன்னார். நான் ஓடிப்போய் பின்பக்கம் நின்றவருக்கு ஒத்தாசையாகப் பிடித்துக் கொண்டேன். நடக்க நடக்க ஊன் நாற்றம் மூக்கில் ஏறி தலையை கனக்க வைத்தது.

எங்கள் ஊர் தேவாலத்திலிருந்து காலை ஐந்து மணிக்கான மணியோசை அமைதியை துளைத்துக்கொண்டு பரவியது. பிள்ளையார் கோவில் மேடையிலிருந்து எழுந்தேன்.

தரையில் கால்களை ஊன்றி நின்றேன். இடதுகால் இல்லாததைப் போல வலதுகால் தடுமாறியது. மெல்ல ஆலமரத்தை சுற்றி வந்தேன். அந்தப்புறம் ஒரு கருப்பு நிற ப்ளாஸ்டிக் நீர் தேக்கத்தொட்டி இருந்தது. குழாயை திறந்துவிட்டு அதன் அடியில் அமர்ந்து கொண்டேன். இப்படியே இருந்துவிடலாம். கண்களை மூடி பின்னால் இருந்த திண்டில் சாய்ந்து கொண்டேன். தண்ணிர் தலையிலிருந்து உடலில் வழிந்து செல்வது ஆசுவாசமாக இருந்தது.

ஒருகை தோளை தொட்டு உசுப்பியது.

“எந்திரி தம்பி..”என்று அதட்டி அழைத்தது. பிளாஸ்டிக் குடங்களை கீழே வைத்துவிட்டு அந்தப் பெண் இருகைகளாலும் என் கைகளை பிடித்து தூக்கினாள்.

“எவ்வளவு நேரமா இப்பிடி ஒக்காந்திருக்க…”என்றபடி தலைசுருமாட்டிற்காக தோளில் கிடந்த துண்டை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

“வேணாக்கா..”

“தலைய துவட்டுடான்னா..உங்களுக்கல்லாம் என்ன கஸ்ட்ன்னு இப்படி குடிச்சுட்டு அலையறீங்களோ..உங்க வீட்ட நெனக்க மாட்டிக்கிறீங்களே…” என்று சொல்லிவிட்டு குடங்களில் தண்ணீர் பிடித்து வைத்தாள்.

எதுவும் சொல்லாமல் துவட்டிக்கொண்டு துண்டை அவளிடம் நீட்டினேன். துண்டை சுருமாடாக சுற்றி தலையில் வைத்துக் கொண்டாள். குடங்களைத் தூக்கி அவள் தலைக்கு ஒன்றும், இடுப்பிற்கு ஒன்றுமாகக் கொடுத்தேன்.

“வூட்டுக்குப் போ…” என்று சொல்லிவிட்டு திரும்பினாள்.

“தெருவுல வந்து கெடக்குறானுங்க. அங்க வூட்ல எவளோ ஒருத்தி பிள்ளையக்காணும்.. புருசனக்காணும்ன்னு தூங்காம கெடப்பா,” என்ற அவளின் குரல் முடக்கில் மறைந்தது.

ஆலமரத் திண்டிலிருந்த பையிலிருந்து ஃபாதர் கொடுத்த சட்டை வேட்டியை அணிந்து கொண்டு ஊர் நோக்கிய பாதையில் நடந்தேன். காற்று வீசியது. காலை வெளிச்சத்தில் வயல்களின் பச்சை நிறம் கண்களுக்கு தெளிந்துவந்தது. உடல் நடுக்கம் கொள்ளத் தொடங்கியதும் கால்களை கவனமாக எடுத்து வைத்து நடந்தேன். இந்தக் கைகளால் சன்னக்கட்டையை பிடிக்கமுடியுமா என்று மூடித் திறந்து விரித்துப் பார்த்தேன். உள்ளங்கை நீரில் ஊறி சுருங்கியிருந்தது. உடலின் தடதடப்பை மீறி எதுவோ என்னை ஊர் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தது. முன்னால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் மனம் பின்னால் போகலாம் என்று தயங்கியது.

ஊர் எல்லையில் மாவிலை, புங்கை இலை கொத்துக்களால் கட்டப்பட்ட தோரணங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. தயங்கி நின்றேன். யாரும் பார்ப்பதற்குள் இப்படியே திரும்பி விடலாம். இதில் சிறிய தவறு நடந்தாலும் எத்தனை உயிர் போகும். வேண்டாம் என்று திரும்பினேன். இங்கு வந்ததே பையித்தியக்காரத்தனம்.

“சைமன்..” என்று ஒரு குரல் அழைத்தது.

திரும்பி வேகமாக இரண்டடி நடந்துவிட்டேன்.

“சைமன்..”

மீண்டும் அந்தக் குரல். திரும்பிப் பார்த்தேன். ஆளில்லை. காதுகளில் எப்போதாவது கேட்கும் குரல் தான்.

மீண்டும் திரும்பி தோரணத்தைக் கடந்து விறுவிறுவென்று ஊருக்குள் நடந்தேன். மாரியம்மன் கோவில் முன்னால் தேர் வடம்பிடித்தலுக்கான சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. பூசணிக்காய் எலும்மிச்சை பழங்களில் குங்குமம் தடவி உடைத்திருந்தார்கள். தேருக்கு முன் குங்குமம் நீருடன் கலந்து சிவப்பாக பரவியிருந்தது. உடல் நடுங்கத்தொடங்கியது.

“செபாஸ்ட்டீனோட தம்பி வந்துட்டான்,”என்று ஒரு குரல் கேட்டது. தேரை சுற்றி நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

“சரியா வந்துட்டான்…” என்றபடி பூசாரி மருது சிரித்தான். அண்ணன் கூட்டத்தில் புகுந்து ஓடிவந்து என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வலது முன் சக்கரத்தின் பக்கவாட்டில் நிற்க வைத்தான்.

மருது கைக்காட்டி ஒரு பையனை அழைத்தான். அவன் கோவிலுக்குள் ஓடிச்சென்று ஒரு பெரிய சொம்புடன் என்னிடம் வந்தான். நான் பக்கத்திலிருந்த குடத்து நீரால் கைக்கால்களை கழுவிக் கொண்டு இங்கிருந்தே உள்ளே ஊஞ்சலில் இருந்த அம்மனை கும்பிட்டுக் கொண்டேன்.

சொம்பு நிறைய இருந்த கம்பங் கூலைக் குடித்துமுடித்து வாய் கழுவிக்கொண்டு சக்கரத்தின் பக்கம் சென்று நின்றேன்.

“கடைசி தேங்கா நீதான் உடைக்கனும்..வா,” என்று மருது கையில் தேங்காயுடன் அழைத்தான்.

அண்ணன் தேர் முன்னால் சன்னக்கட்டையை வைத்தான். சுற்றி சிவந்து பரவியிருந்த ஈரம் மட்டுமே என் கண்களில் நிலைத்தது. தேரின் அருகில் சென்று கைகளில் தேங்காயை வாங்கினேன்.

நிமிர்ந்து பார்த்தேன். கழுத்து நடுங்கியது. அம்மனின் முகம் பார்க்க தலையை உயர்த்த முடியவில்லை. ஆறு மணிக்கான வேட்டுகளின் சத்தம் கிளம்பி காதுகளை அடைத்தது. இடதுகால் மடக்கி அமர்ந்து வலதுகால் கீழே பீடத்திலிருந்தது. பொன்னாலான சிறிய பாதத்திலிருந்த தங்கக்கொழுசில் என் கண்கள் நிலைத்தது. சூரியஔியில் கண்கள் கூசின. ஒரு கையால் கண்களை கசக்கிக்கொண்டேன். குழந்தையின் பாதத்தைப் போல மிகச்சிறிய பாதம். சலசலப்பு அதிகமாகி கூட்டம் பரபரப்புக் கொள்ளத் துவங்கியது.

“வலது பக்கத்து சக்கரத்துல இருக்கு தேரோட நிதானம். அது நிதானம் தவறக்கூடாது..மனசு முழுக்க அங்கதான் இருக்கனும்,” என்று அண்ணன் காதில் முணுமுணுத்தான். ஒங்கி தேங்காயை சன்னக்கட்டையில் தட்டினேன். இரண்டாக பிளந்து உருண்டது. அண்ணன் சன்னக்கட்டையை எடுத்துக்கொண்டு வேகமாக பக்கவாட்டில் நகர்ந்தான்.

நான் என்னை அறியாது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சட்டென்று தேர்க்கட்டையில் கால்படாமல் தாவி குதித்து, வலதுபக்க சக்கரத்தின் அடியில் இருந்த சன்னக்கட்டையை எடுத்தேன். தேர் நகரத்தொடங்கியது.

பிற படைப்புகள்

Leave a Comment