521
அலறித் துடிக்கும் பிரதிகள்
எழுதுவதில்
என்ன இருக்கிறது
சிலுவையில் ஒன்றை
அறைந்து வைப்பதுதானே அது
உயிர்ப்பிக்கும் அற்புதம்
வாசிப்பில் இருக்கிறது
வாசிப்பு என்பது
மறுபடைப்பு என்று
சொன்னாலும் சொன்னார்கள்
கை நிறைய
ஆணிகளோடு வந்து
எற்கனவே சிலுவையில் தொங்குபவரின்
கேந்திர ஸ்தானங்களில்
ஆழ இறக்கிப் போகிறார்கள்
அற்புதம் அற்புதம் என்னும்
சிலுவை ராஜனின் குரலோ
பரலோகத்தை எட்டுகிறது.
பிரதி என்னும் வரிக்குதிரை
வரிக்குதிரையொன்றின்
வரிகளுக்கு
வேறு வேறு அனுபவங்கள்
அதன் இணை
அவ்வரிகளை நெருங்கும் போது
அர்த்த கனத்தில்
இரட்டிப்பாகின்றன வரிகள்
ஒரு புலி அதனை
எதிர்கொள்ளும் போது
கூரிய நகங்களில்
சிவப்பு அடிக்கோடிட்டு
வரிகளைத் திருத்தத் துவங்குகிறது
முன்னதை வாசகனும்
பின்னதை விமர்சகனும்
ஆனமட்டும் நிகழ்த்திக் கொள்ள
அகட்டி நிற்பதே
பிரதிக்குதிரையின் லட்சணம்.